09/08/2012

யக்ஷன் சொன்ன சேதி! - வாஸந்தி

எப்படி நழுவவிட்டோம் என்று அவளுக்குத் திகைப்பாக இருந்தது. எப்படியோ தன்னை மறந்து அசந்த தருணத்தில் அது நிகழ்ந்திருக்கக்கூடும் என்று சொல்வதிற்கில்லை. நிச்சயமாக மூளை வெகு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. ஒரு பதைப்பு இருந்ததென்னவோ உண்மை. ஆனாலும், சங்கிலிப் பின்னலாக அவள் என்ன செய்ய வேண்டும் என்று மூளை கட்டளை இட்டுக்கொண்டு இருந்தது. பாலை ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து மக்கில் ஊற்றி, மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிஷம் சூடாக்கி, சர்க்கரை போட்டுக் கலக்கி, ‘இதோ, இதோ வரேன் என்றபடி விரைந்தபோது, இடையில் எந்த நொடித் துகளிலோ நழுவவிட்டு...

அவளது இயலாமையின் அடையாளமாக அந்த நழுவல் அவளை அச்சுறுத்திற்று. யோசிக்க யோசிக்க, ஒரு அமானுஷ்ய விரல் அவளைக் குற்றம் சாட்டிற்று. நூறாயிரம் கேள்விகள் ஆழ்மனதுக்குள் சுருண்டு சுருண்டு எழுந்து விடையைத் தேடி வெளிக் கிளம்பி, அவளை நிலைகுலையவைத்தன. வழியில் தென்பட்ட சால்ஜாப்புகளைப் பகுத்தறிவு ஒவ்வொன்றாக நிராகரித்தது. ரிஷி மூலத்தையும் நதி மூலத்தையும் தேடுவது, ரமணன் சொல்வதுபோலத் தவறில்லை. அதை ஆராய்வது ஒரு வித்தை. அதற்கு ஓர் அறிவியல் அணுகுமுறை தேவை. விநாடி பிசகாமல் பின்னோக்கிச் சென்று, நழுவிப்போன ஒவ்வொரு இழையையும் தேடிப் பிடித்துக் கோக்க வேண்டும். ஊடுபாவாகச் செல்லும் இழைகளையும் தான். அதற்கு நிறையப் பொறுமை வேண்டும். 

தருமபுத்திரனை யக்ஷன் கேள்வியால் துளைத்தது போல, நம்மை நாமே கேட்டுத் துளைத்துக் கொள்ளத் துணிச்சல் தேவை. ஏனென்றால், அவை தாட்சண்யம் அற்ற கேள்விகள் & சுய சார்பற்ற கேள்விகள். யக்ஷன் கேட்டது விடைக்காக அல்ல; விடையின் மூலம் ஞானத்தை ஏற்படுத்த! நழுவும் இழையைக் கண்டுபிடிக்க! பழைய காலத்து கறுப்பு வெள்ளை சினிமாக்களில் கதாநாயகன் அல்லது கதாநாயகியின் மனசாட்சி நிழல் பிம்பமாய் எதிரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகக் கேள்வி கேட்கும் காட்சிகள் நினைவுக்கு வந்தன. அதன் தாக்கத்தில் கதாநாயகன்/நாயகி தலையைப் பிடித்துக்கொண்டு அலறுவார்கள். முழிபிதுங்க விழிப்பார்கள். அல்லது கதறுவார்கள்.

ரமணனுக்கு இந்தஹிஸ்டரிக்ஸ் பிடிக்காது. சலனமில்லாமல் அசை போடும் பழக்கம் அவருக்கு. சாக்ரட்டீஸ் போல பின்னோக்கிக் கேள்வி கேட்கும் ரகம். பால் கொண்டுவரேன்னு போனியா? எத்தனை அடி எடுத்துவெச்சிருப்பே? ஃப்ரிஜ்ஜுக்கும் மைக்ரோ அவனுக்கும் எவ்வளவு தூரம்? அவனில் பாலை ஒரு நிமிஷம் வெச்சியா? பால் கொண்டு வரேன்னு சொல்ல வேண்டிய அவசியம் என்ன? சொல்றதுக்கு முந்தி என்ன நடந்தது? அதுக்கு முந்தி?

அசை போட வேண்டியதும், பின்னோக்கிச் செல்வதும் அவசியமாகப்பட்டது. சலனப்படாமல் அது சாத்தியமா என்று தெரியாது. ஆனால், விடை கிடைக்கும் வரை நாபியிலிருந்து சுருண்டு எழும் பூதம் அவளைச் சும்மா விடாது.

அவள் எழுந்து பால்கனிக்குச் சென்றாள். காய்ந்த பூந்தொட்டிகள் பரிதாபமாகக் காட்சி அளித்தன. செடிகள் சோர்ந்து மல்லாந்திருந்தன. அவள் இயந்திரகதியில் குளியலறைக்குச் சென்று, பால்கனிக்குச் செல்லக்கூடிய பைப்பைக் குழாயில் பொருத்தி, நீரைத் திறந்து பால்கனிக்கு வந்து ஒவ்வொரு செடியாக நீரை வார்த்தாள். நீரை நிறுத்தி பைப்பைச் சுற்றி வைத்துவிட்டு, மீண்டும் பால்கனிக்கு வந்தபோது மல்லாந்திருந்த சில செடிகள் நன்றியுடன் நிமிர்ந்திருந்தன. அவள் சற்று நேரம் அந்த அதிசயத்தைப் பார்த்தாள். அவள் இப்போது நீர் விட்டிருக்காவிட்டால் நிமிர வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்று அவை சொன்னதாக அவளுக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது.

எல்லாவற்றுக்கும் ரமணன் சொல்படி கால வரம்பு இருந்தது. புற உலகின் சூட்சுமத்துக்கோ வேறு எதற்கோ, அது கட்டுப்பட்டு இருந்தது. அதற்குப் பாத்திரமாவதற்கும் விதிக்கப்பட வேண்டியிருந்தது. இப்போது அவள் பால்கனிக்கு வராமல் இருந்திருந்தால், நீர் ஊற்றும் நினைவே வந்திராது. ஒவ்வொரு விநாடியும் முன்னும் பின்னும் உள்ள விநாடிகளுடன் பிணைக்கப்பட்டிருந்த பிரும்ம முடிச்சாகத் தோன்றிற்று.

கட்டடத்துக் குழந்தைகள் எதிர்த்தாற்போல் இருந்த மைதானத்தில் கால் பந்தாட்டம் ஆடிக்கொண்டு இருந்தார்கள். இது கால் பந்தாட்ட சீஸன். முந்தா நாள் வரையில் கிரிக்கெட் ஆடினார்கள். எதை ஆடினாலும் உலகக் கோப்பைக்கு ஆடுவதுபோல் ஆவேசத்துடன் ஆடுவார்கள். இவர்களுடன் ஆடுவதற்கு ரமணன் சேருவது விந்தை இல்லை. மைதானத்துக்குள் கால் வைத்த மாத்திரத்தில் சடசடவென்று ஐம்பது வருடங்கள் நழுவி, அவரது ஜோடுகளில் மறைந்துகொள்வது ஓர் அற்புதம். மூச்சு வாங்கும்; நெற்றியும் மேலுதடும் வியர்வையில் மின்னும். விக்கெட் விழுந்தால், கோல் போட்டால் ரமணின் குரல் தான் என்று ஒலிக்கும்.

இப்பவும் ஒலித்தது. அவள் திடுக்கிட்டு மைதானத்தைப் பார்த்தாள். கோல் விழுந்திருந்தது. ஜூனியர் குழு வெற்றி அடைந்திருக்க வேண்டும். ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டு இருந்தார்கள். அடுத்த ஆட்டத்துக்கு மற்றவர்கள் தயாராகிக்கொண்டு இருந்தார்கள். இன்று சனிக்கிழமை. இருட்டும் வரை விளையாடிவிட்டு வீடு திரும்பியதும் சுடு நீரில் குளித்து வயிறு முட்ட இரவு சாப்பிட்டுவிட்டு காலையில் நிதானமாக எழுந்திருக்கலாம்.

‘‘எனக்கு எல்லா நாளும் ஒண்ணுதான்’’ என்று ரமணன் சொல்லும்போது அவர்கள் சிரிப்பார்கள். ‘‘ஆமாம், ஜாலி! ஆபீஸ§க்குப் போக வேண்டாம். தினமும் லேட்டா எழுந்திருக்கலாம்.’’

‘‘அதான் இல்லே! தினமும் நாலு மணிக்கு எழுந்துக்கறேனாக்கும்!’’

‘‘நாலு மணிக்குக் காக்கா கூட எழுந்திருக்காது!’’

‘‘உனக்கெப்படித் தெரியும் தூங்குமூஞ்சி? பட்சிகள் எழுந்திருக்கும்போது நானும் எழுந்துக்கறேன், நாலு மணிக்கு!’’

‘‘அத்தனை சீக்கிரம் ஏன்?’’

‘‘போன ஜென்மத்திலே பறவையா இருந்திருப்பேன்!’’

படையாக ஒரு வாண்டுக் கூட்டம் அவருடன் வரும். பிஸ்கட்டும் பெப்சியும் சடுதியில் காலியாகும். தரையெல்லாம் ஆகிப்போன அழுக்கை அவர்கள் சென்ற பிறகு, பினாயிலில் நனைத்த வீடு துடைக்கும் நீள் கழி விசுக் விசுக்கென்று தரை அழுந்தத் துடைக்கும்.

போன ஜென்மத்திலே ஆஸ்பத்திரி வார்ட் பாயா இருந்திருப்பேன்.

எத்தனை ஜென்மங்கள் ஒரு மனிதன் எடுக்க வேண்டும்? இந்த பூலோகத்திலே அக்கறை இருக்கிறவரை, ஈர்ப்பு இருக்கிற வரை எடுத்துண்டே இருக்கணும்... பகவான் கிருஷ்ணர் மாதிரி. சம்பவாமி யுகே யுகே! செய்த பாவங்களைத் தொலைப்பதற்குத்தான் திரும்பத் திரும்பப் பிறக்கிறோம் என்று அவளுடைய பாட்டி சொன்னது நினைவுக்கு வரும். செய்த தவறு நினைவில்லாவிட்டால், கிடைத்த வாய்ப்பினால் பலன் ஏது என்று ரமணன் சொல்வார் என்பதால், அவள் பேசாமல் இருப்பாள்.

நான்கு ஃப்ளாட் தள்ளி ராஜேஷ் தேவிகாவின் பால்கனி தெரிந்தது. அவள் வசிக்கும் மூன்றாவது தளத்தில் இருக்கும் இளம் ஜோடியின் வீடு. ஃப்ளாட்களை இணைக்கப் பாலம் போல் ஓடும் நீண்ட ரேழி உண்டு. பத்து தடவை மேலும் கீழும் நடந்தால் சுலபமாக ஒரு கிலோமீட்டர் நடை. மழைக் காலங்களில் அவளும் ரமணனும் அப்படித்தான் மாலையில் நடை பழகுவது. ராஜேஷ§ம் தேவிகாவும் வீட்டில் இருந்தால், சுவாதீனமாகக் கதவைத் தட்டி தேநீர் கேட்டுப் பருகலாம். கொட்டும் மழையை ஜன்னல் வழியே பார்த்தபடி அக்கப்போர் பேசிக்கொண்டு தேவிகா கொடுக்கும் சூடான தேநீரை ருசிக்கலாம். அப்படிப்பட்ட தருணத்தில்தான், முந்தா நாள்தி டாவின்சி கோட் படம் பார்க்கும் எண்ணம் வந்தது.

பால்கனியில் ராஜேஷ§ம் தேவிகாவும் நின்றிருந்தார்கள். மைதானத்தில் நடக்கும் கால் பந்தாட்டத்தைப் பார்த்தபடி ராஜேஷ் ஏதோ சொல்ல, தேவிகா பெரிதாகச் சிரித்தாள். சிரிப்பது அவர்களது அடையாளம். அவர்கள் கை பிடித்த வேளையோ, சந்தித்த வேளையோ அப்படி ஒரு முகூர்த்த நேரமாக இருந்திருக்க வேண்டும். இருவருக்கும் முப்பதுக்குள்தான் வயதிருக்கும். அவன் தமிழன். அவள் மலையாளி. இருவரும் டெல்லியில் மத்திய வர்க்கக் குடும்பங்களில் பிறந்து, வளர்ந்து, சந்தித்துக் காதலித்துக் கை பிடித்தவர்கள். இருவருக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை, கப்பல் போல கார், சொந்த வீடு, சமையலுக்கு ஆள், வீட்டு வேலைக்கு ஆள் என்ற அனைத்து சௌகர்யங்களும் முப்பது வயதுக்குள்! இவையெல்லாமே அவர்களது சிரிப்புக்குக் காரணமா என்று தெரியவில்லை. சனிக் கிழமை இரவு தவறாமல் மல்டிப்ளெக்ஸில் சினிமா பார்த்தார்கள். நடுநிசியில் லிஃப்டிலிருந்து வெளியேறி தங்கள் ஃப்ளாட்டுக்கு அவர்கள் செல்வதை அவர்களுடைய சிரிப்பிலிருந்தே அவள் தெரிந்துகொள்வாள். அவர்களுக்கு வாழ்க்கை என்பதே கொண்டாட்டம் என்று தோன்றிற்று.

முப்பதுகளில் தான் எப்படி இருந்தோம் என்று அவளுக்குச் சுத்தமாக நினைவில் இல்லை. நினைவில் நிற்கும் படியானதாக இருந்திருக்க முடியாது, நிச்சயம்! இருபதுகளின் மத்தியில் திருமணம் முடியும் வரை படிப்பு கல்லூரி என்று கழிந்தது. காலையில் கல்லூரிக்குப் போனால் நேரம் தவறாமல் வீடு வந்து சேர வேண்டும் என்ற அப்பாவின் எதிர்பார்ப்பை அவள் என்றும் மீறத் துணிந்ததில்லை. கொல்கத்தாவில் வேலை பார்த்த ரமணன் என்ற வரனைக் கண்டுபிடித்து, ஜாதகப் பொருத்தம் பார்த்து, அப்பாவுக்குச் சரி என்று பட்டதால், திருமணம் செய்துகொண்டு கிளம்பிச் சென்றபோது, வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் என்று கண்டிப்பாகத் தோன்றவில்லை. ரமணன் அலுவலகத்து வேலைக்கு அடிமை. பொழுதுபோக்கு என்ற விஷயம் அறியாத அப்பாவியான அடிமை. இது எத்தனை கொடுமையானது என்று உணராத ஞானசூன்யத்தில் அவர்களது இளமை கழிந்தது. காலையில் எட்டு மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பிச் சென்றால், இரவு பத்து மணிக்கு ரமணன் திரும்புவார். சனி, ஞாயிறன்றும் வித்தியாசமில்லாத ஏதோ வேலை. தன்னந் தனியாக வீட்டில் இருக்கப் பிடிக்காமல், அவள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தாள். அதில் அவளும் மூழ்கிப்போக, சரசமாடவோ சிரிக்கவோ நேரம் இருந்ததாக அவளுக்கு நினைவில்லை ராஜேஷையும் தேவிகாவையும் பார்க்கும்போது, அதற்கென்று நேரம் தேட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.

அறுபது வயதில் ரமணன் ஓய்வுபெற்று வீட்டில் அமர நேர்ந்தபோது, இருவருக்கும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல் இருந்தது. ஒரு அந்நியமான, பரிச்சயமற்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டதாகத் தோன்றிற்று. இருபத்துநாலு மணி நேரமும் முகமற்ற ஒரு மனிதருடன் இருப்பது அசாத்தியமானதாகப்பட்டது. குழந்தை இல்லை என்ற ஆதங்கம் இப்போது அதிகமாக வாட்ட, அவள் அருகிலிருந்த பள்ளியில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தாள்.

ரமணன் ஆச்சர்யமாக, ஓய்வு கால வாழ்க்கைக்கும் அதேவிதமான தீவிரத் துடன் பழகிக்கொண்டார். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். காலை நாலு மணிக்கு எழுந்தால் காபி போடுவது, வாக்கிங்கிலிருந்து திரும்பியதும் வாஷிங் மெஷினில் துணி துவைப்பது, செடிகளுக்கு நீர் ஊற்றுவது, சமையலுக்குக் காய் நறுக்குவது இத்யாதி... பில்டிங் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடுவதும் தன் ஓய்வுக் காலக் கடமை என்று அவர் நினைத்ததாகத் தோன்றிற்று.

அவளுக்கு அவருடைய புதிய முகம் ஆச்சர்யங்கள் நிறைந்ததாக இருந்தது. தனது இளமைக் காலத்து ஆதங்கங்களை அவர் இப்பவும் புரிந்துகொள்வாரா என்று அவளுக்கு அடிக்கடி தோன்றுவது அசம்பாவிதமாகக்கூடப் பட்டது. ஆனால், ராஜேஷ் தம்பதியைக் காணும் போதெல்லாம், கொண்டாட்டம் என்பதை உணராமலே தங்களது தாம்பத்யம் கரைந்துவிட்டது என்று வருந்தாமல் இருக்க முடியவில்லை. ஆனால், அவர்கள் வேறுவிதமாக இருந்திருக்க முடியாது. அவளுடைய தலைமுறையைப் பல முந்தைய தலைமுறைகளின் சுமை அழுத்திற்று. கொண்டாட்டம் என்பதை விடலைத்தனமாக ரமணன் நினைத்திருக்கலாம்.

அதனால்தான், முந்தா நாள் ராஜேஷ் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து தேநீர் பருகுகையில், ஓர் இளைஞனின் ஆர்வத்துடன், ‘‘டாவின்சி கோட் படம் பார்க்கப் போலாமா?’’ என்று அவளிடம் ரமணன் கேட்டபோது திக்குமுக்காடிப்போயிற்று. அவரது முகத்தில் இளமை புகுந்திருந்தது. கண்களில் புதிய பிரகாசம் தெரிந்தது. அந்த வீட்டுக் காற்றின் பாதிப்பாக இருக்க வேண்டும் என்று அவளுக்குப் பட்டது.

‘‘நாங்க பார்த்தாச்சு!’’ என்றான் ராஜேஷ். ‘‘நீங்க போயிட்டு வாங்க ஆன்ட்டி, ஜோடியா!’’

‘‘கண்டிப்பா போகணும்’’ என்று சிரித்தாள். ‘‘அதிசயமா இவர் கூப்பிடறாரே!’’

‘‘குட்! நாளை ஈவினிங் ஷோவுக்கு நான் டிக்கெட் வாங்கி அனுப்பறேன்’’ என்றாள் தேவிகா.

கடைசியாக எப்போதுஜோடியாக சினிமா போனோம் என்று படுக்கைக்குச் செல்லும்போது அவள் கேட்டது, ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்த ரமணனுக் குக் கேட்கவில்லை. பழைய முகம் தெரிந்தது.

நேற்று சினிமாவுக்குக் கிளம்பியபோது, அவளுக்கு நூதனமாக இருந்தது. காஷ்மீர் சில்க் புடவை கட்டி காதோரங்களில் சென்ட் பூசிக்கொண்டபோது ஒரே சமயத்தில் தான் கிழவியாகவும், குமரியாகவும் இருப்பதாகத் தோன்றிற்று. மல்டிப்ளெக்ஸ் தளத்தில் வண்டியை நிறுத்தி தியேட்டரின் வளாகத்துக்குச் சென்று ஜீன்ஸ் அணிந்த இளம் உடல்களை முட்டி மோதிக்கொண்டு முன்னேறி, இருண்டுவிட்ட அரங்கத்துள் இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள். சுற்றிலும் இருந்த இளம் மூச்சுக்காற்றுடன் இரண்டறக் கலக்க முடிந்தது. தானும் ரமணனும், ராஜேஷ், தேவிகாவாக மாறிப்போனது போலிருந்தது. இருவரும்டாவின்சி கோட் புத்தகம் படித்திருந்ததால், படத்தின் நிறை குறைகளை இடைஇடையே அலசினார்கள் மெல்லிய குரலில். ரமணன் முகத்தில் புன்னகை குடியிருந்தது. அவள் சின்னப் பெண் போல் சிரித்தாள். தன்னைச் சூழ்ந்திருந்த சென்ட் மணத்தில் கிறங்கினாள்.

இடைவேளையின்போது ரமணன் அவள் புறங்கையைத் தட்டி, ‘‘வா, ஐஸ்கிரீம் சாப்பிட்டு வரலாம்’’ என்று எழுந்தார். இது வழக்கமாக நடக்கும் விஷயம் போல அவளும் எழுந்தாள். மேலிருந்து கீழிறங்கி வெளியே வந்து முடிச்சு முடிச்சாக நின்ற கூட்டத்தை விலக்கி, ரமணன் இரண்டு கோன் ஐஸ்கிரீம் வாங்கி வந்து ஒன்றை அவளிடம் கொடுத்தார். திருமணமான புதிதில்கூட இப்படி ஒரு அனுபவம் ஏற்படவில்லை என்று ரமணனிடம் சொல்ல நினைத்துப் பிறகு சொல்லாமல், ‘‘தேங்க்யூ’’ என்று புன்னகைத்தாள்.

வீட்டுக்குத் திரும்பும்போது பத்து மணி ஆகிவிட்டது. மாலையில் வார்த்துவைத்திருந்த இட்லியைச் சாப்பிட்டுப் படுக்கும்போது, அதுவரை அனுபவித்திராத நிறைவு ஏற்பட்டது. இருட்டில் ரமணன் அவளுக்கு அருகில் நகர்ந்து அணைத்ததும் கூட வழக்கமானதாகத் தோன்றிற்று.

அதிகாலை உலுக்கப்பட்டதுபோல விழிப்பு ஏற்பட்டது. சமையலறையில் பாத்திரம் உருளும் சத்தம். ரமணனைப் படுக்கையில் காணோம். மேஜை விளக்கைப் போட்டு மணி பார்த்தாள். மூன்றரை. உள்ளே எட்டிப் பார்த்து, ‘‘என்ன இத்தனை சீக்கிரம்?’’ என்றாள்.

‘‘தூக்கம் வரலே, ஏதாவது படிக்கலாம்னு எழுந்தேன். நீ போய்ப் படுத்துக்கோ’’ என்றார்.

அவள் படுக்கைக்குச் சென்றாள். தூக்கம் வரவில்லை. இருப்புக்கொள்ளாமல் எழுந்தாள். ரமணன் சாப்பாட்டு மேஜை மேல் முகம் கவிழ்ந்தபடி நாற்காலியில் விநோதமாகச் சரிந்திருந்தார். அவள் திடுக்கிட்டு அருகில் சென்று ‘‘என்னது இப்படி?’’ என்று சிரமப்பட்டு நிமிர்த்தியபோது, அவர் மூச்சுவிடக் கஷ்டப்படுவதும், கண்கள் செருகுவதும் கண்டு பதைபதைத்தாள்.

‘‘§கர் இறங்கியிருக்கா என்ன? இருங்கோ, இதோ ஒரு நொடியில் பால் கொண்டுவரேன், சர்க்கரை போட்டு. குடிச்சா சரியாயிடும். ஒரு நிமிஷம்...’’ என்று நெஞ்சு படபடக்க அரற்றியபடி ஃபிரிஜ்ஜைத் திறந்து மக்கில் பால் ஊற்றுகையில் கை நடுங்க, அது நழுவ, மறுபடி ஊற்றி, மைக்ரோ அவனில் ஒரே நிமிஷம் கலந்து, ‘இதோ வரேன், இதோ வரேன் என்று குரல் கொடுத்தபடி அவரிடம் சென்றபோது ரமணனின் தலை சாய்ந்திருந்தது.

அவள் அவசரத் துடன் அவரது தலையை நிமிர்த்திப் பிடித்து, ‘‘இந்தாங்கோ பால் சாப்பிட்டா சரியாயிடும்’’ என்று குரல் நடுங்க அரற்றியபடி, பாலை வாயில் விட்டதும், பால் உள்ளே செல்லாமல் கடைவாயில் வழிந்தது. அவள் நம்ப முடியாமல் அதை ஒரு விநாடி பார்த்தாள். மார்பு வெகுவேகமாக அடித்துக்கொள்ள, வீட்டைத் திறந்து பித்துப் பிடித்தவள்போல ரேழியில் ஓடி, ராஜேஷ் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள். ராஜேஷ் அழைத்து வந்த டாக்டர் நாடி பார்த்து, விழியைப் பார்த்து, உதட்டைப் பிதுக்கினார்.

அவளுக்கு நம்ப முடியவில்லை. தாங்கவும் இல்லை. அவளால் ஏற்பட்ட தாமதத்தில் ஓர் உயிர் நழுவிப்போனதாகத் தோன்றிற்று. பால் சிந்தியதால், மீண்டும் எடுத்துச் சுட வைத்ததால், சில்லென்ற பாலைக் கொடுக்கத் தோன்றாததால்...

ஓர் அசாதாரண நொடியில் ரமணனின் இதயம் இயங்குவதை நிறுத்திற்று. அதைத் தடுத்து நிறுத்த முடியாத அவளது இயலாமைக்கு அவளே பொறுப்பு என்று கலவரம் ஏற்பட்டது. அதிலிருந்து விடுபடுவது அசாத்தியம் என்று தோன்றிற்று.

சங்கிலிப் பின்னலின் விடுபட்ட இழைகளை அவள் மீண்டும் மீண்டும் கோக்க ஆரம்பித்தாள். ஊடுபாவாகச் சென்ற ஓர் இழை நினைவுக்கு வந்தது.

மழை பெய்த அன்று இரவு தூக்கம் வராமல் அவள் புரண்டு படுக்கையில், பாதித் தூக்கத்தில் ரமணன் விழித்துக்கொண்டு என்னவோ சொன்னார்.

அவள் விருக்கென்று எழுந்து, ‘‘என்ன வேணும்?’’ என்றாள்.

‘‘யக்ஷன் கூப்பிட்ட மாதிரி இருந்தது.’’

‘‘யக்ஷனா?’’

‘‘யுதிஷ்டிரனைக் கேள்வி கேட்டானே, அவன்!’’

அவளுக்குச் சிரிப்பு வந்தது. இரவு அவர் மகாபாரதம் படித்துக்கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது.

‘‘நீங்க என்னமோ சொன்ன மாதிரி இருந்தது.’’

‘‘நாளைக்கு வரேன்னேன். எனக்கு ஒரு ட்யூட்டி இருக்குன்னேன்!’’

‘‘நல்ல கனா’’ என்று அவள் சிரித்தாள். ‘‘நீங்க தருமபுத்திரன்னு நினைப்பா?’’

அது முந்தாநாள். நேற்றும் நேற்றைய போதும் யக்ஷன் கொடுத்த போனஸ்ஸாக இருக்க வேண்டும். அவளுக்குக் கிடைத்த போனஸ்.

நன்றி - விகடன்

கருத்துகள் இல்லை: