ஒரு மாதமாகவே முத்துப்பாட்டாருக்குத் தூக்கம் வரவில்லை. நாள் முழுக்கக் காடுகரைகளில் சுற்றித் திரிவதால் எப்போது படுப்போம் என்றிருக்கும். படுத்ததும் மாயம்போலத் தூங்கிவிடுவார். மாடு கன்றுகள் கத்தினாலும் நாய் குரைத்தாலும் கிழவிதான் எழுப்பிவிடுவாள். ‘பொணமாட்டம் தூங்கற. எத்தன சத்தம் கேட்டாலும் மனசனுக்குச் சொரண வர்றதே இல்ல’ என்று பேசுவாள். சிறுவயதிலிருந்தே அவருக்கு இந்தத் தூக்கம் பெரிய சொத்து. அதனாலேயே பட்டி காவலுக்கோ களத்துக் காவலுக்கோ அவரை அனுப்ப மாட்டார்கள். ’போதகாரங்கூடச் சாமத்துல முழிச்சுக்குவான். இவனுக்கு வெடிஞ்சாத்தான் முழிப்பு வரும்’ என்பார்கள். அந்தத் தூக்கத்திற்கு ஒருநாளும் குறை வந்ததில்லை. ‘எதையும் மனசுல போட்டுக் கொழப்பிக்காத மனசனப்பா அவரு. அதான் இப்பிடி ஆனந்தமாத் தூக்கம் வருது’ என்று அவர் வயசு ஆட்கள் பொறாமைப்படுவார்கள்.
அப்பேர்ப்பட்ட தூக்கம் எப்படித் தொலைந்தது என்று அவருக்குப் புரியவே இல்லை. எத்தனை முறை இழுத்து இழுத்துக் கட்டினாலும் குழிந்துவிடும் கட்டிலுக்குள் தன் ஆறடி உருவத்தைக் குறுக்கிக் கொண்டு கிடப்பதைப் பார்த்தால் சிறுகுழந்தை தொட்டிலுக்குள் ஆழ்ந்து தூங்குவதைப் போலிருக்கும். ஒரே கிடைதான். உடலை அப்படி இப்படிப் புரட்டுவதோ கவிழ்ந்து கொள்வதோ ஒன்றும் இல்லை. தூக்கம் வரவில்லை என யாராவது புலம்புவதைக் கேட்கும்போது அப்படியும் இருக்குமா என்று ஆச்சர்யப்படுவார். பகலெல்லாம் திண்ணை தேய்க்கும் படுசோம்பேறிப் பயல்களுக்குத் தூக்கம் போகும். நிற்க நேரமின்றி மாடுகன்றுகளுடன் அலைபவருக்கு எப்படிப் போகும்? ’காலாற நடந்து காடுகரையச் சுத்திப் பாத்துட்டாச்சும் வாங்கப்பா. தூக்கம் வந்திரும்’ என்பார்.
அவரைப் போலவே நாள் முழுக்கப் பாடுபடும் ஆட்களும் தூக்கம் வரவில்லை என்றுதான் சொல்வார்கள். ‘அட ஊட்டுக்குள்ள போவையில செருப்பயும் போட்டுக்கிட்டா போறம்? வெளிவாசல்ல கழட்டி எறிஞ்சுட்டுத்தான போறம். அதுமாதிரிதான். கட்டல்ல ஏர்றதுக்கு முன்னாலயே கவலயெல்லாம் எறக்கி வெச்சரோனுமப்பா’ என்பார் சாதாரணமாக. ‘எங்க எறக்கி வெக்கறது. கவலயெல்லாம் கட்டையோடதான் போவும்’ என்பவர்களை ஏளனமாகப் பார்ப்பார். ஆனால் இப்போது அவர் சித்தாந்தம் பொய்யாயிற்று.
தூக்கம் இல்லாமல் புரண்டு கிடந்த முதல் நாள் ஏதோ வயிற்றுப் பிரச்சினை என்று நினைத்தார். சேராத எதையாவது தின்றுவிட்டால் சில நாட்கள் கால் குடைச்சலும் மேல் வலியும் இருக்கும். அப்படியும் கட்டிலில் படுத்து இரண்டு முறை புரண்டால் தூக்கம் கண்களுக்குள் குடி வந்துவிடும். ஆனால் அன்றைக்குத் துளியும் தூங்கவில்லை. கண்களை எவ்வளவு நேரம் மூடியபடியே கிடந்தும் எதுவும் நடக்கவில்லை. காலையில் கண்கள் கோவைப்பழமாகிப் பிதுங்கித் தெரிந்ததால் எல்லாரும் விசாரித்தார்கள். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அது எப்படித் தூக்கம் வராமல் போகும்? கொஞ்சம் சோம்பலில் அன்றைய இரவுக் குளியலுக்குச் சுடுதண்ணீர் வைக்காமல் பச்சைத் தண்ணீரையே ஊற்றிக் கொண்டார். அதுதான் காரணமாக இருக்கும் என்று தோன்றியது. இந்த உடம்பு என்னென்ன சொகுசுகளைக் கேட்கிறது.
அடுத்த நாள் படுக்கப் போகும் முன்னிரவில் சுடுதண்ணீரை ஆவி பறக்க மேலே ஊற்றிக்கொண்டார். கொதிக்கும் வேனலிலும் சுடுதண்ணீரை மேலுக்கு ஊற்றிக் கொண்டால்தான் அவர் மனசுக்கு ஒப்பும். ‘வெயில்ல பழமாட்டம் வெந்து கெடக்கற ஒடம்புல இப்பிடிக் கொதிக்கக் கொதிக்கச் சுடுதண்ணிய ஊத்தற நிய்யும் மனசந்தானா?’ என்று கிழவி கேட்பாள். அவளுக்கு இந்தச் சுகம் தெரியாது. ‘எருமக்கிச் சேத்துத் தண்ணிச் சொகந்தான் தெரியும்’ என்று சொல்லிச் சிரிப்பார். ‘ஆமாமா. இந்த எரும இல்லீன்னா உம்பொழப்பு தெரியும்’ என்று கிழவியும் பதிலடி தருவாள். சுடுதண்ணீர்க் குளியலுக்குத் தூக்கத்தை வரவழைக்கும் சக்தி எப்போதும் உண்டு. உடம்பைத் துவட்டியதும் ஒரு தூக்கச்சடைவு தோன்றும். அப்படியே இரண்டு கவளம் சோற்றை உள்ளே தள்ளினால் போதும். கை கழுவுவதுகூட நினைவிருக்காது. கட்டிலில் நீட்டிவிடலாம். ஆனால் அன்றைக்கு அனல் போல உடம்பு காந்தியதே தவிரத் தூக்கம் வரவில்லை.
ஓலைக் கொட்டாயின் கீழ் மூலையில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் படுப்பது அவர் வழக்கம். வெயில் மழை காற்று எதுவென்றாலும் அதுதான் அவர் இடம். அவர் குழந்தையாக இருந்தபோது அம்மா கட்டிலைப் போட்டு அவரை அணைத்துப் படுத்திருந்த இடம் அது என்பார். அங்கே படுத்தால் இன்னும் அம்மாவின் அணைப்பில் இருக்கும் பாதுகாப்பு கிடைப்பதாக உணர்வார். அதை வெளியில் சொல்லமாட்டார். வெளியூருக்குப் போய் அவர் ஒருபோதும் தங்கியதில்லை. அப்படிக் கட்டாயமாய்த் தங்க நேர்ந்த ஓரிரு சந்தர்ப்பங்களில் தூங்கவே இல்லை. ஆனால் நினைவு தெரியாத குழந்தையிலிருந்து
பழகிய இடம்கூட அந்நியமாகிப் போகுமா? எதற்கும் இடத்தை மாற்றிப் பார்க்கலாம் என்று தோன்றியது. பிசாசு குடிவந்துவிட்ட இடத்தில் படுத்தால் தூக்கம் வராது. ஆனால் புதிய இடத்திலும் பிசாசு குடியிருந்தது. கண்கள் மூடவேயில்லை. வேறு எங்கோ கோளாறு இருக்கிறது என்று தோன்றியது.
யாராவது செய்வினை வைத்திருப்பார்களா? மாடமாளிகை கட்டி ஆள் அம்புகளுடன் பெரும்பிழைப்பா நடத்துகிறோம், செய்வினை வைக்க? நாற்பது வருசங்களுக்கு மேலாக உடனிருக்கும் பெண்டாட்டிக் கிழவி வைத்தால்தான். முறுக்கமாக இருந்த காலத்துக் கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொண்டவள், காலம் போன கடைசியில் அப்படிச் செய்யமாட்டாள். மாட்டுக் கட்டுத்தரைச் சாணமும் அடுப்புப் புகையும் தவிர அவளுக்கு வேறென்ன தெரியும்? மகன்கள்
தனித்தனியாக ஆளுக்கொரு ஓலைக்கொட்டாயில் குடியிருக்கிறார்கள். அவரால் அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. இறக்கை முளைத்ததும் குஞ்சுகளைத் தனியாக இரை தேட அனுப்பிவிட்டார். தனக்கெனக் கொஞ்சம் நிலத்தை வைத்துக்கொண்டு மற்றதை எல்லாம் அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். நல்லவேளை அவருக்கு இரண்டு மகன்கள்தான். மகள் இல்லை. பாட்டார் போய்ச் சேர்ந்தால் யாருக்காவது கூரையைப் பிய்த்துக் கொட்ட ஒன்றுமில்லை. அரைக்காசு பெறாத நான்கைந்து
பொத்தல் கோவணத்துணிகள் மிஞ்சும். உடனிருக்கும் உறவுகளைத் தாண்டிச் செய்வினை வைக்க எங்கிருந்து கட்டுச்சோறு கட்டிக்கொண்டு ஆள் முளைக்கும்?
வேளைக்கு நான்கு உருண்டைக் கம்மஞ்சோறு என்றிருந்தது, இப்போது இரண்டாகக் குறைந்துவிட்டது. ‘அந்த நாள்ல இருந்து ஆக்கிப் போட்டுத் தீரல. இப்பவாச்சும் கொறஞ்சுதே’ என்று கிழவி சந்தோசப்பட்டாள். பாட்டாரின் வேலையிலும் சுணக்கம்தான். பகலில் தூங்கிப் பழக்கமே இல்லை. இப்போது படுத்துப் பார்த்தால் கண் சிரிக்கிறது. கைக்கெட்டும் தூரத்தில் ஆள் நிற்பது தெரியாத கரும் இருட்டிலேயே மூடாத என்னை, வெயில் எரிக்கும் மொட்டை மத்தியானத்தில் மூட வைக்க முடியுமா என்று அந்தச் சிரிப்புக்கு அர்த்தம். திருநீறு மந்திரித்தும் தாயத்துக் கட்டியும் பாடம் போட்டும் பார்த்துவிட்டார். பாடம் போடும்போது சொங்காப் பாட்டார் ‘என்ன முத்து உனக்கா தூக்கம் வல்ல? வெளியில சொன்னாச் சிரிக்கப் போறாங்கப்பா’ என்று கேலி செய்தார். ரொம்பவும் புலம்பிச் சொன்ன பிறகுதான் அவரே நம்பிப் பாடம் போட்டார். ‘சின்ன வயசுல புடிச்ச தூக்கப்பிசாசு இப்பத்தான் உன்ன உட்டு ஓடியிருக்குது’ என்று அவர் கேலியும் செய்தார். ஆனால் தூக்கம் ஓடியது ஓடியதுதான். பெண்டாட்டி கோபித்துக் கொண்டு போனால் அவள் அம்மா வீட்டில் இருப்பாள். நான்கு நாள் விட்டுப்பிடித்துப் போய்க் கெஞ்சிக் கொஞ்சிக் கூட்டி வந்துவிடலாம். தூக்கம் எங்கே போய்த் தொலைந்தது என்று எப்படிக் கண்டுபிடிப்பது?
மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஏராளமான பண்டிதம் செய்பவர் பாட்டார். அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஏதோ சில நாட்கள் போய் உட்கார்ந்து வந்திருந்தார். அதனால் வாகட ஓலைச் சுவடிகளையும் வைத்தியச் சுவடிகளையும் எழுத்துக் கூட்டிக்கூட்டிப் படிக்கிற பழக்கம் இருந்தது. யாராவது பண்டிதத்திற்கு வந்தால் உடனே சுவடிக்கட்டைப் பிரித்து உட்கார்ந்துவிடுவார். என்ன பிரச்சினை, என்ன தர வேண்டும் என்பதெல்லாம் நன்றாகத் தெரிந்தாலும் சுவடியைப் பார்ப்பது போலப் பாவனை செய்வார். அப்போதுதான் வந்தவருக்கும்
மனம் குளிரும். அப்பேர்ப்பட்டவர் தனக்கு ஒன்று என்றால் கண்டுபிடிக்க மாட்டாரா? இத்தனை நாள் பண்டிதம் பார்த்து என்ன பயன்?
தூக்கமின்மை என்பது தனி நோயாகச் சுவடிகளில் காணோம். வேறு ஏதாவது பிரச்சினையோடு சேர்ந்துதான் தூக்கமின்மையும் இருந்தது. தனக்கு வேறு என்ன பிரச்சினை என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாம் சரியாக இருப்பது போலவே தோன்றியது. வெளியே இருந்து யாரோ வந்து தன் தூக்கத்தைப் பிடுங்கிக் கொண்டிருப்பார்கள் என்னும் எண்ணத்தைத் தூக்கி எறிந்துவிட்டுத் தனக்கு என்ன பிரச்சினை என்று யோசிக்கத் தொடங்கினார். நடக்கும்போதும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவிட்டு மரநிழலில் உட்கார்ந்திருக்கும் போதும் என எப்போதும் தன் பிரச்சினை பற்றியே யோசனையாக இருந்தது. எவ்வளவு யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை.
ஒரு மட்ட மத்தியான நேரத்தில் காட்டுப்பக்கம் இருந்து வந்து கொண்டிருந்தார். யோசனைக்கு ஒன்றும் குறைவில்லை. அப்போது தலைமேல் பெரிய புல்கத்தை இருந்தது. அவர் புல்லுக்குப் போவது எப்போதும் மத்தியான நேரத்தில்தான். காட்டுப்பக்கம் ஒரு காக்காகூட இருக்காது. விரும்பியபடி யார் காட்டில் வேண்டுமானாலும் பிடுங்கிக் கொண்டு வரலாம். குட்டிக்கொடிகள் படர்ந்து காடெங்கும் மூடிக் கிடந்த காத்தான் காட்டில் சும்மா ஒரு அரைப்பாத்தி அளவுக்குச் சுருட்டினார். பெரிய கத்தை சேர்ந்துவிட்டது. யாராவது கேட்டால் ‘எங் காட்டுல இல்லாத பில்லா? நான் எதுக்கு ஒரு மயரான் காட்டுக்குப் போறன்?’ என்று எகத்தாளமாகப் பேசிவிடுவார்.
முகத்திலும் உடம்பிலும் பூச்சிகள் ஊர்ந்தன. புல்லிலிருக்கும் பூச்சிகள் மேலே ஊர்வது வழக்கம்தான். ஆனால் இப்போது ஊர்வது அவரது யோசனையின் மீது. அரிப்பு அதிகமானதால்
சட்டென்று புல்கத்தையைக் கீழே வீசிப் போட்டார்.
“ஏந்தாத்தா, கனமா?”
என்று கேட்டவன் தெரிந்தான். முருகேசன். அவர் காணப் பிறந்த சிறுபயல். அவர் பேரனைவிடக் கொஞ்சம் வயது கூடுதலாக இருக்கும். காட்டு வேலையையும் பார்த்துக் கொண்டு நூல் மில் வேலைக்கும் போகிறான். ஊரிலிருந்து ஐந்தாறு கல் தொலைவில் அந்த நூற்பாலை இருந்தது. அங்கே கவுண்டப் பையன்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைக்கு எடுத்தார்கள். கொஞ்சம் நிலம், ஆடுமாடு என ஏதாவது வைத்துப் பண்ணயம் பார்ப்பவர்களுக்கு நூற்பாலை வேலை கூடுதல் வருமானம். சம்பளம் கூடக்குறைய என்றாலும் பேசாமல் வேலையைச் செய்வார்கள். மற்ற சாதிக்காரர்களை நம்ப முடியாது. எதற்கெடுத்தாலும் கொடி பிடித்துக் கோஷம் போடத் தொடங்கிவிடுவார்கள். அந்தத் திட்டத்தில் முருகேசனுக்கும் வேலை கிடைத்தது. ரொம்பவும் பொறுப்பாக வேலைக்குப் போய் வந்தான். காட்டுவேலை தொலையாதா? எல்லாவற்றையும் அவன் அம்மாவே பார்த்துவிடுவாள்.
ஒருநாள்கூட வீட்டில் இருக்க மாட்டான். கல்யாணம் காட்சி என்று எதற்காவது லீவு போடச் சொன்னால் கோபம் வந்துவிடும். நூற்பாலையில் அவர்களாகப் பார்த்துப் பாவம் பையன் என்று லீவு எடுத்துக்கொள்ளச் சொன்னால்தான். அதேபோலச் சம்பளத்தில் ஒருபைசா செலவு செய்ய மாட்டான். ஐந்து கல் தொலைவில் இருந்த நூற்பாலைக்குச் சைக்கிளிலேயே போய்வந்துவிடுவான். அந்தச் சைக்கிளை அவன் பாங்கு பார்க்கிற விதமே தனி. காலையில் அரைமணி நேரம் அதன் பக்கம் நின்று சுத்தம் செய்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துத்தான் எடுப்பான். நூற்பாலையில் கொடுக்கும் கருப்பட்டியைக்கூட ஊருக்குக் கொண்டுவந்து யாருக்காவது காசுக்கு விற்றுவிடுவான். பஞ்சுத்துகள் காற்றில் கலந்து நெஞ்சுக்குள் போய் ஒட்டி எளப்பு நோயை அழைத்து வந்துவிடும். அதைத் தவிர்க்கத்தான் கருப்பட்டி. வாரம் ஒரு கருப்பட்டியாவது தின்றுவிட வேண்டும். நெஞ்சாங்குலையை அது சுத்தப்படுத்தி வைத்திருக்கும். அதைச் சொன்னால் ‘வரும்போது பாத்துக்கலாம்’ என்று சாதாரணமாகச் சொல்லிவிடுவான். பெருங்கருப்பட்டிச் சில் ஒன்று மூன்று ரூபாய் கொடுத்து வாங்க ஆள் இருக்கிறது. அப்படி அவன் ரொம்பக் கருத்து.
அவன் அப்பனும் அம்மாவும் வைத்தது பொத்தல் குடிசைதான். அதுவும் மழையில் கரைந்து சரியும் மண்சுவர். போதுமான அளவு ஓலை வாங்கி வேயவே அவர்களால் முடியாது. இனிமேல் வீட்டில் இருக்க முடியாது என்னும் நிலை வந்தால்தான் அங்கே இங்கே கடனை உடனை வாங்கி ஒருவழியாக வேய்வார்கள். பத்து வருசத்துக்கு ஒருமுறை திருவிழா போல அந்த வேலை நடக்கும். அதை வருசா வருசம் பாங்கு பார்த்து வைத்துக்கொள்ளக்கூட அவர்களால் ஆகவில்லை. ஆனால் அவன் தலையெடுத்து இப்போது செங்கல் சுவர் வைத்து வீடு கட்டிக்கொண்டிருக்கிறான். வில்லை ஓடு போடப் போகிறானாம். கைஓடு போட்டு இப்போது யார் வேய்கிறார்கள்? எல்லாம் வில்லை ஓடுதான். வேலையும் வெகு சுலபம். ரீப்பர் கட்டையில் ஓடு மாட்டத் தெரிந்தால் போதும். ஒரு ஓடு உடைந்துவிட்டால்கூட யாரும் சுலபமாகக் கழற்றி மாட்டிவிடலாம். வீடு கட்டிவிட்டுத்தான் கல்யாணம் என்கிறான் முருகேசன். வில்லை வீட்டில் படுத்தால்தான் பிள்ளை பிறக்குமா? வில்லை
வீட்டுக்காரனுக்கு நல்ல பசையுள்ள இடத்துப் பெண் கிடைத்துவிடும். அதற்காகத்தானிருக்கும்.
அவனோடு பேசப் பாட்டாருக்குக் கொள்ளை ஆசை. மனதில் எப்படி நினைத்தாலும் வெளியில் அவன் மனம் குளிரும்படி நாலு வார்த்தை சொல்வார். அதனால் அவனும் அவர் மேல் பிரியம் காட்டுவான். அவரிடம் ரொம்பவும் உரிமையோடு யோசனை கேட்பான். வீடு கட்டத் தொடங்கியபோது ‘செவுரு ரண்டாளு ஒயரம் வெச்சாப் போதுமா தாத்தா?’ என்று கேட்டான். ‘அட நிய்யொரு திருவாத்தான். அது எப்பிடிப் பத்தும்? நாம நின்னு கை ஒசத்துனா ஓட்டுல இடிக்குமே. காசப் பாக்கதயப்பா. தாராளமா மூனாளு ஒசரம் வெச்சிரு. காத்து தங்குண்டியா உள்ள போயி வரட்டும்’ என்றார். அவர் யோசனை அவனுக்குப் பிடித்திருந்தது. சொன்ன பேச்சுக் கேட்கிற இப்படி ஒரு பையன் நமக்கு இல்லையே என்றும் நினைப்பார். எது சொன்னாலும் அதற்கு எதிராகப் பேசுவதோ செய்வதோதான் அவர் மகன்களின் வேலை. ஒருகாசுக்கு அவரை மதிப்பதில்லை.
“என்னப்பா ஊட்டு வேல எந்தளவுக்கு நடக்குது?”
என்று முருகேசனை விசாரித்தார். தினமும் அந்தப் பக்கமாகப் பார்க்கும்போதும் போகும்போதும் வீட்டு வளர்ச்சியைத் துல்லியமாக அளவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அவனை விடவும் அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். என்றாலும் பேச்சை இப்படித்தானே தொடங்க வேண்டும்?
வீட்டு வேலை ஏதிர்பார்த்த அளவில் நடக்கவில்லை என்றும் வேலைக்குச் சரியாக ஆட்கள் வருவதில்லை என்றும் வந்தாலும் வேலை செய்யாமல் ஏமாற்றுகிறார்கள் என்றும் கூலி மட்டும் துளி குறைக்காமல் வாங்கிக் கொள்கிறார்கள் என்றும் விலாவாரியாக அவனும் புலம்பினான். அவன் வேலை செய்யும் நூற்பாலை முதலாளி, வாராவாரம் சம்பளம் கொடுக்கும்போது புலம்பும் அதே சொற்கள் அவன் வாயிலிருந்தும் வந்தன. கடைசியாக இப்படி முடித்தான்.
“சின்னதா ஒரு சாதாரண ஓட்டு வீடு கட்டறதுக்கே இந்தப் பாடு பட வேண்டியிருக்குதே. பெரிய பெரிய மாளிகையெல்லாம் கட்டறவங்க என்ன பாடு படுவாங்களோ?”
அவனுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொன்னார்.
“நீ தலையெடுத்து ஓட்டு வீடு கட்டற. நல்லா இரு... நல்லா இரு...”
முருகேசனையே புல்கத்தையைத் தூக்கிவிடச் சொல்லித் தலையில் வைத்துக் கொண்டு நடந்தார். பூச்சிகள் ஊர்வது நிற்கவில்லை. அங்கிருந்து நூறடி தூரத்தில் அவருடைய கொட்டாய். அங்கே போய்ச் சேர்வதற்குள் மனதில் யோசனை ஓடியது. ஐம்பது, அறுபது வருசமாக இந்தக் காடுமேடுகளில் கஷ்டப்பட்டும் ஓலைக் கொட்டாய்தான் நிரந்தரமாக இருக்கிறது. அதுவும் அவருடைய அப்பா காலத்தது. மூன்று நான்கு வருசத்திற்கு ஒருமுறை ஓலையை மாற்றி வேய்வதற்கே முடிவதில்லை. ஒழுகும் பக்கத்தில் ஓலையைச் செருகியும் கூரைமேல் சாக்கைப் போட்டு மூடியும் மழை நாட்களைச் சமாளிக்கப் பார்ப்பார். மழைத்துளி ஊசிச் சரம்போலக் கூரையைத் துளைத்துக் கொண்டிறங்கும். ‘காலம் பூரா இந்த ஓட்டக் கொட்டாயில கெடக்க எனக்கு விதி. அழுவற ஊட்டுல இருந்தாலும் இருக்கலாம், ஒழுவற ஊட்டுல இருக்கக்கூடாதுன்னு செலவாந்தரம் சொல்லறது சும்மாவா? இருந்தென்ன, எனக்கு வாய்ச்ச வரம் இப்பிடி’ எனக் கிழவி ஜாடை பேசுவாள். வேறு வழியில்லாமல் அப்படி இப்படிப் புரட்டி, அங்கே இங்கே வாங்கிக் கூரை வேய்வார்.
இந்தப் பயல் முருகேசன், முளைத்து மூன்று இலைகூட விடவில்லை. அதற்குள் வில்லை ஓட்டு வீடு கட்டுகிறான். ‘மாளிகை கட்டறவங்க என்ன பாடுபடுவாங்க’ என்று பேசுகிறான். மாளிகை கட்டும் திட்டம் அவன் மனதில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? கட்டினாலும் கட்டுவான். இருபத்தைந்து வயதுக்குள் ஓட்டு வீடு கட்டுகிறவனுக்கு ஐம்பது வயதுக்குள் மாளிகை கட்டுவதா பிரமாதம்? புல் கத்தையை வீசிப் போட்டுவிட்டுத் ‘தூத்தெறி’ என்று சொல்லி எச்சிலைக் காறித் துப்பினார். மொத்தையாக அவர் முகத்தின் மீதே அப்பிக் கொண்டதுபோலிருந்தது. முருகேசன் வீட்டுப் பக்கம் கண்ணோட்டினார். இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீடு. செங்கல் சுவர் ஆளுயரத்திற்கு மேல் எழும்பிவிட்டது.
“வயசான காலத்துல முடிஞ்ச வேலயச் செஞ்சமா, அக்கடான்னு வந்து படுத்தமான்னு இருக்கறத உட்டுட்டு மனசனுக்கு அப்பிடி என்ன ஓசன? காலம் போன கடசீல கோட்டயப் புடிக்கப் போறயா? அதான் வவுத்துக்குக் கொட்டிக்கிட்டயே, அப்பறமும் என்ன, பசி பொறுக்காத பாம்பாட்டம் நெளிநெளியின்னு நெளியிற?”
என்று கிழவி எத்தனையோ பேசினாள். கிழவியின் பேச்சு பாட்டாருக்கு வெறும் ஒலியாய் விழுந்தது. அவள் இல்லை என்றாலும் கொட்டாய் முழுக்க அவள் குரல் ஒலித்துக்கொண்டே தானிருக்கும். எந்தச் சமயத்தில் அக்குரல் என்ன சொல்லும் என்பதும் அவருக்குத் தெரியும். குரலை பல்லிச் சத்தத்தோடு இணைத்து அவர் புரிந்துகொள்வார். கொட்டாயின் கிழக்கு மூலையில்
அடுப்பு இருக்கிறது. அங்கிருந்து பல்லிக் குரல் அடிக்கடி ஒலிக்கும். எந்த இடத்திலிருந்து வருகிறது, எந்த நேரத்தில் வருகிறது என்பதைக் கொண்டு அதற்குப் பொருள் பிரிப்பார்.
அக்குரல் ஒன்றுதான் எப்போதும் அவருக்கு ஆறுதல்.
இரவோ பகலோ முருகேசன் வீட்டுப் பக்கம் கண் திரும்பும் போதெல்லாம் அவரை அறியாமல் ஏறிட்டுப் பார்ப்பார். வேலை செய்யும் ஆட்கள் அவ்வப்போது தென்படுவார்கள். அவர்களிடம் பேச்சும் கொடுப்பார். ‘பையன் பாவம் ஒவ்வொரு காசாச் சேத்துக் கட்டறான். துரோகம் பண்ணீராதீங்க’ என்பார். ‘அப்பிடிக் காசுதான் நிக்கப் போவுதா தாத்தா. என்ன ஆயரம் வெருசம் கோட்ட கட்டி ஆள்றமா? ஆளு இருந்தாலும் இல்லைன்னாலும் நம்ம வேல சுத்தமா இருக்கும்’ என்று அந்த மேஸ்திரி சொல்வார். சுவர் நாலாப்புறமும் ஏறிக்கொண்டிருந்தது. காட்டுப்பக்கம் வேலையாய் அவர் போய்த் திரும்பும் ஒருபொழுது நேரத்திற்குள் வீட்டுச் சுவர் முழம் ஏறியிருக்கும். அது அவருக்கு அதிசயம் போலத் தோன்றும். ஒன்றும் இல்லாத வெற்றுவெளியில் திடுமென இப்படிப் புற்றைப் போலச் சுவர் எழும்பிவிடுகிறதே என்று நினைப்பார். முருகேசனின் கொட்டாய் ஊருக்குள் இருக்கிறது. இங்கே காட்டுக்குள் வீட்டைக் கட்டினால் தாராளமாகவும் கட்டலாம். ஆடு குட்டிகள் வைத்துப் பார்க்கவும் வசதி என்பதால் அவன் இந்த இடத்தைத் தேர்வு செய்திருக்கிறான். ’நீங்கெல்லாம் பக்கத்துல இருக்கற தெகிரியத்துலதான் இங்க கட்டிக் குடி வரப்போறன் தாத்தா’ என்பான். ‘சந்தோசமடா சாமி. நல்லா வா. என்னத்த வாரிக்கிட்டுப் போறம். ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசதான’ என வாய் நிறையச் சொல்வார். தன் மகன்களைப் பார்க்கும்போதெல்லாம் கோபம் ஏறிச் சொற்கள் படபடக்கும். கண்டபடி திட்டித் தீர்ப்பார்.
“முருகேசனுந்தான் இருக்கறான். அவந்தான் பையன். நீங்கெல்லாம் எதுக்குடா இருக்கிறீங்க? அப்பங் காலந்தான் ஓலக் கொட்டாயிலயே போயிருச்சு. நாமளாச்சும் கடன ஒடன வாங்கி வில்லயூடு கட்டுவம்னு தோனுச்சா? கையாலாவாத நாய்ங்க.”
இந்தக் கிழவனுக்குத் திடீரென்று என்ன வந்துவிட்டது என மகன்கள் குழம்பினார்கள். ஒருநாளும் அவர் இப்படிப் பேசியதில்லை. ’நாலு பேரு நாக்கு மேல பல்லுப் போட்டுப் பேசாத அளவுக்குப் பொழச்சுக்குங்கடா’ என்பதுதான் அடிக்கடி அவர் சொல்லும் புத்தி.
“கத்த கத்தயா சம்பாரிச்சு மொடாக்குள்ள அடுக்கி வெச்சிருக்கற நீ. நாங்க எடுத்தெடுத்து ஊடு கட்டறம். கடன வாங்கி ஊடு கட்டீட்டு உள்ளதயும் வித்துக் குடுக்கச் சொல்றியா? இருக்கறது நெலச்சாப் போதும் போ”
என்று மகன்கள் பதிலடி கொடுக்கவும் செய்தார்கள். ஒருத்தனாவது ‘சரி கட்டுகிறேன்’ எனப் பேச்சுக்குக்கூடச் சொல்லவில்லை.
முருகேசனிடம் பேசிவிட்டு வந்த பின் என்னென்னவோ மனதில் ஓடிற்று. ஒரு நிலையில் இல்லை. அவனிடம் இரண்டு வார்த்தை பேசினால் இழந்த எதையோ பெற்றது போலிருக்கும். வாலிப முறுக்கு கொடுக்கும் வலு அது என்று நினைப்பார். ஆனால் அன்றைக்கு என்ன பேசியும் சமாதானம் சொல்லிப் பார்த்தும் மனம் ஆறவில்லை. தூக்கம் போனதுதான். இனி இப்படியேதானா? துக்கம் கெட்டுக் கிடந்தால் சீக்கிரம் போய்ச் சேரலாம். கண்களை மூடிக்கொண்டு குலதெய்வம் கரியகாளியை நினைக்க முயன்றார். அவர் நினைத்ததும் ஆங்கார ரூபமாய்க் கண்ணுக்குள் வந்து நின்றுவிடும் கரியகாளியிடம் தன் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிதானமாகச் சொல்வார். ஆனால் எவ்வளவு முயன்றும் கரியகாளியின் முகத்தைத் தன் முன் கொண்டுவர முடியாமல் தோற்றுப் போன அன்றைய இரவில், கிழவியை எழுப்பிவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையோடு மெல்ல வாசலுக்கு வந்தார். கோவணத்தை இறுக்கிக்கொண்டு மூளி முறித்தார். வாய் பியந்துவிடுகிற மாதிரி கொட்டாவி வந்தது. இதற்கு மட்டும் குறைச்சலில்லை என எண்ணமிட்டவாறு முருகேசன் வீட்டுப் பக்கம் எதேச்சையாய்த் திரும்பினார்.
நிலா வெளிச்சத்தில் வீடு வடிவாகத் தெரிந்தது. இரண்டு கைகளையும் சேர்த்துக் கூப்பிக்கொண்டு யாரோ வரவேற்கிற மாதிரி இருந்தது. கோம்பைச் சுவர் இவ்வளவு எழும்பிவிட்டதா என்று நினைத்தார். இனி என்ன, பூச்சும் கூரையும்தான். நிலவு துலக்கிக் காட்டும் வீட்டை அருகே போய்த் தொட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும்? அரவமற்ற நள்ளிரவு. எதுவோ அவரை உந்தித் தள்ளியது. மெல்ல நடந்து அந்த வீட்டுக்கு முன்னால் போய் நின்றார். சுற்றும் பார்த்தார். சுவர்களுக்குள் புகுந்தார். மேற்கூரை இல்லாததால் உள்ளும் நிலவொளி தாராளமாகக் காய்ந்தது. சுவர்களைத் தொட்டுத் தடவிப் பார்த்தார். குழந்தையை ஆசையாய்த் தழுவும் சுகம். கன்னத்தை அதன் மேல் இழைத்தார். உடலெங்கும் குளிர்ச்சி பரவியது. எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருந்தாரோ தெரியவில்லை. எங்கோ கோழி கூவியது.
அன்றைக்குச் சாரம் அமைத்து மேலே கட்டியிருந்த சுவர்ப் பக்கம் வந்தார். ரொம்பவும் முயன்று சாரத்தின்மேல் ஏறினார். மாலையில் முடித்திருந்த கோம்பைச் சுவர் நுனியைக் கையை மடக்கிக் குத்தினார். வாயில் மீதமிருந்த பற்கள் நெரிந்தன. குத்தில் இரண்டு மூன்று செங்கற்கள் உதிர்ந்தன. மீண்டும் ஓங்கிக் குத்தினார். காப்புக் காய்ச்சிய விரல் முட்டிகளை மீறியும் வலித்தது. இரண்டாம் குத்தில் தடதடவெனச் செங்கற்கள் சரிந்தன. அவ்வளவுதான்.
நடுங்கிய கால்களோடு இறங்கி வெளியே வந்தார். மூளியாய்த் தெரிந்த சுவரைப் பார்த்ததும் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. தன் கொட்டாய்க்குப் போகும் வரை அதையே பலமுறை திரும்பித் திரும்பிப் பார்த்தார். பெரிய சுமை இறங்கிவிட்ட மாதிரி தோன்றியது. போய்ப் படுத்தவர் விடிந்து வெகுநேரம் ஆனபின்னும் எழவில்லை. அப்படியொரு தூக்கம். ‘கெழவனுக்கு இன்னக்கித்தான் பித்துத் தெளிஞ்சிருக்குது’ என்று கிழவி தானாகப் பேசிக்கொண்டிருந்தாள்.
---------------
குறிப்பு: 2011 அக்டோபர் ‘உயிரெழுத்து’ இதழில் வெளியான சிறுகதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக