11/06/2012

இண்டர்வியூ - ஆதவன்

 சுவாமிநாதன் அப்பாவுடன் கடைத் தெருவில் நடந்து கொண்டிருந்தான்.

எவ்வளவு கடைகள், எவ்வளவு ஜனங்கள், எவ்வளவு காட்சிகள். ஆனால் சுவாமிநாதன் இதொன்றையும் கவனிக்க வில்லை. அப்பாவுடன் நடக்கிறோம். அப்பாவுடன் நடக்கிறோம் என்ற பெருமையில் அவன் மிதந்து கொண்டிருந்தான். திடீரென்று, 'ஐஸ்கிரீம் வேணுமாடா?" என்றார் அப்பா. சுவாமிநாதனுக்கு அப்பாவின் கேள்வி வியப்பாகவும் சற்றே ரோஷமாகவும் இருந்தது. "வேண்டாம்பா. நான் குழந்தையா என்ன?" என்றான். அப்பா சிரித்தார்...

கிணுகிணுவென்ற சத்தம். அப்பா சிரிக்கும் சத்தமா? சாலையில் போகும் ஏதாவது சைக்கிள் மணிச் சத்தமா? அல்லது - சுவாமிநாதன் திடுக்கிட்டுப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். கிணுகிணுவென்று கடிகாரத்தின் அலாரம் இறுதிவரை ஒலித்து ஓய்ந்தது.

! இன்று இன்டர்வியூ.

படுக்கையைச் சுற்றி வைத்தபிறகு, இரவில் அக்காவிட மிருந்து திருட்டுத்தனமாக எடுத்து வந்திருந்த கடிகாரத்துடன் அவன் மெல்ல அடுத்த அறைக்குச் சென்றான். தூங்கிக் கொண்டிருந்த அக்காவருகில் கடிகாரத்தை வைத்தான். அப்போது அலாரம் மீண்டும் இலேசாகக் கிணுகிணுத்தது - அழுது ஓய்ந்து தூங்கிப் போன குழந்தை தூக்கத்தின் நடுவே ஒருமுறை விசும்பிக் கொள்வது போல. நல்லவேளை, சத்தத்தில் அக்கா எழுந்திருக்கவில்லை.

பல்பொடியின் சுறுசுறுப்பான இனிப்பும் மொரமொரப்பும்; அவன் பேட்டியைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான்.- பேட்டி அறைக்குள் நுழையும்போது "குட்மார்னிங்" அல்லது "குட் ஆப்டர்னூன்" (புன்னகையுடன்?) கேள்விகளுக்கெல் லாம் பயப்படாமல் டக்டக்கென்று பதில் - எதற்காகப் பயப்பட வேண்டும்? அவனுக்கு எப்படி வேலை தேவையோ அப்படியே அவர்களுக்கும் ஆள் தேவை. அந்த ஆள் அவனாகவே இருக்கலாம். அதைத்தான் இன்று சோதித்துப் பார்க்கப் போகிறார்கள்.

இப்போதைக்குஅவன் அவர் களுக்காக விண்ணப்பத்தாளில் எழுதப்பட்ட ஒரு வெறும் பெயர், பாஸ்போர்ட் அளவுப் புகைப்படத்தில் சுய உணர்வுக் கூச்சத்துடன் விழித்துக் கொண்டிருக்கும் இளைஞன் ரத்தமும் சதையுமாக அவனை அவர்கள் இனிமேல்தான் சந்திக்க வேண்டும். யார் இந்தச் சுவாமிநாதன்? எப்படிப்பட்டவன்? தைரியசாலியா? கோழையா? புத்திசாலியா, முட்டாளா? சுறுசுறுப்பானவனா, சோம்பேறியா? நாணயமுள்ளவனா, மோசக்காரனா? உபயோகமுள்ளவனா, உதவாக்கரையா? அவனுக்கு என்ன தெரியும், என்ன தெரியாது? இவ்வளவையும் இன்று ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களில் அவர்கள் கண்டுபிடிக்கப் போகிறார்கள். அடேயப்பா! அவனுக்கே இந்த இருபது வருடங்களில் தன்னைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு விட்டதாகச் சொல்ல முடியாது. சில சமயங்களில் தன் மீது இரக்கமும் சில சமயங்களில் கோபமாகவும் இருந்தது. இருபது வருடங்கள், அதாவது ஏழாயிரத்து முன்னூறு நாட்கள் இவற்றுள் ஒரு சில நாட்களில் ஒரு சில கட்டங்களில் மட்டுமாவது அவன் வேறு விதமாக நடந்து கொண்டிருந்தால் - வேறுவிதமான முடிவுகள் செய்து வேறு விதமான பாதைகளில் அடியெடுத்து வைத்திருந்தால்! - இன்று அவன் இன்னொரு விதமான மனிதனாக, இன்னொரு விதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பான்...

திடீரென்று பால்காரன் கூப்பிடும் சத்தம் கேட்டது. அவன் பாலை வாங்கி ஸ்டவ்வில் வைத்தான். அதற்குள் அம்மாவும் எழுந்து கொண்டாள்.

நியூஸ்பேப்பரைப்* படித்து முடிக்கும்போது அம்மா கையில் காப்பியுடன் வந்தாள். "எத்தனை மணிக்குச் சாப்பிடுவாய்?" என்றாள்.

"எட்டு மணிக்கு"

"அவ்வளவு சீக்கிரமாகவா?"

"பஸ் கிடைச்சுப் போக வேண்டாமா? ஈசுவர மாமா வீட்டுக்கு வேறே போகணும்."

"சரி .. கறிகாயை மட்டும் சித்தே நறுக்கிக் கொடுத்தா யானால் தேவலை."

"இம்"

வீட்டுக்குள்ளே சுற்று வேலைகளெல்லாம் அவன்தான் செய்ய வேண்டும். ஜானு சம்பாதிக்கிறாள். அவளை வேலை செய்யச் சொல்ல அம்மாவுக்குத் தைரியமில்லை. அவன் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு?

அவன் கறிகாய் நறுக்கிக் கொண்டிருந்தபோது ஜான வந்தாள். "இன்றைக்கு என்னவோ அலாரம் அடிச்சதே காதிலே விழவில்லை" என்றாள். "நீ ஏதாவது விஷமம் செய்தாயோடா?"

"எனக்கொன்றும் தெரியாது உன் கடிகாரத்தைப் பத்தி." என்றான் சுவாமிநாதன்.

"அவன் என்னடி செய்தான், பாவம்" என்றாள் அம்மா.

அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையே அபாயகரமான அன்னியோன்னியமும் ரகசிய உடன்படிக்கைகளும் நிலவுவ தாக ஜானுவுக்குத் தோன்றியது. "நீ ஒன்றும் அவனுக்காகப் பரிந்து கொண்டு வராதே" என்றாள். "அவன் இப்படித்தான் வேணுமென்றே ஏதாவது செய்வான். ஒருநாள் என் ஹேர் பின்னையெல்லாம் ஒளித்து வைத்திருந்தான்."

"நீ தான் முதலில் என் ஷேவிங் ஸெட்டை ஒளித்து வைத்திருந்தாய்" என்றான் சுவாமிநாதன்.

"தினசரி நான் ஆபீசுக்குப் போகிறெ நேரம் பார்த்து நீ டிரஸ்ஸிங் டேபிளுக்கெதிரில் க்ஷவரம் பண்ணிக் கொள்ள உட்காரத் தொடங்கினாய். அதனால்தான் ஒளித்து வைத்தேன்".

"உனக்கு எப்படி ஆபீஸ் போகிற நேரமாயிருந்ததோ, அப்படியே எனக்கும் காலேஜ் போகிற நேரமாயிருந்தது."

"முகத்திலே ஒரு மயிரு கூட முளைச்சிருக்கவில்லை உனக்கு, அப்போதெல்லாம் - அதுக்குள்ளே ஒரு க்ஷவரம். க்ஷவரம் பண்ணிக் கொள்ளாவிட்டால் காலேஜுக்குள்ளே விடமாட்டார்களா என்ன?"

"பவுடரையும் ஸ்நோவையும் அப்பிக்கொண்டு போகாவிட்டால் உங்க ஆபீசுக்குள்ளே விடமாட்டார்களா என்ன?"

"ஜாஸ்தி பேச வேண்டாம்".

"உன்னைவிடக் குறைச்சலாகத்தான் பேசினேன்".

"நான் ஆபீசுக்குப் போனதினாலேதான் நீ காலேஜுக்குப் போக முடிந்தது - ஞாபகம் வச்சுக்கோ" என்று ஜானு சீறினாள்.

'அப்பா பணத்திலேதான் நான் போனேன்".

"ஆமாம்; தாத்தா பணம். நான் ஒருத்தி சம்பாதிக்காவிட்டால் அப்போ தெரிஞ்சிருக்கும், நாலு காசு சம்பாதிக்கத் துப்புக் கிடையாது; வெக்கமில்லாமல் என்னுடன் சண்டைக்கு வராதே".

சுவாமிநாதனுக்குச் சுருக்கென்றது; மேலே பேச முடியாமல் மௌனமானான். பாணம் தைத்து விட்டதை உணர்ந்த திருப்தியுடன் ஜானுவும் மௌனமானாள். 'நான் சம்பாதிக்கிறேன். நான் மட்டுந்தான் சம்பாதிக்கிறேன்' - இது அவளுடைய பிரம்மாஸ்திரம்.

ஜானுவுக்குக் காப்பி கொடுத்து விட்டு அம்மா சமையலறையிலிருந்து சென்று விட்டிருந்தாள். சுவாமிநாதன் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, காய்கறி முழுவதையும் நறுக்கி முடித்தான். பிறகு வேகமாகப் பாத்ரூமை நோக்கி நடந்தான். ஆசை தீர அழுது தீர்க்கலாமென்று. ஆனால் பாத்ரூமில் அம்மா குளித்துக் கொண்டிருந்தாள். சுவாமிநாதன் ஆத்திரத்துடன் படபடவென்று கதவை இடித்தான். இவளுக்கு என்ன இப்போது அவசரம்?

"யாரு?" என்றாள் அம்மா.

"எனக்கு லேட்டாச்சும்மா".

"இதோ - அஞ்சே நிமிஷம்".

அம்மா வருவதற்கு ஐந்து நிமிடங்குளுக்கு மேலேயே ஆயிற்று. சுவாமிநாதன் பொறுமையிழந்தவனாகக் குறுக்கும் நெடுக்கமாக உலவினான். கடைசியில் ஒரு வழியாக அம்மா வந்தாள். "குழாயிலே ரொம்பக் கொஞ்சமாக ஜலம் விழறதுடா" என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.

சுவாமிநாதன் ரவிக்கையணியாமல் வெறும் புடவையைச் சுற்றிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்க்கக் கூச்சப் பட்டுக் கொண்டு வேறு பக்கம் பார்த்தான். அவர்கள் இரண்டு பெண்கள், அவன் ஒரே ஓர் ஆண். இப்போது அப்பா மட்டும் உயிருடன் இருந்திருந்தால்!

பாத்ரூமில் குழாயைத் திறந்து விட்டுவிட்டுச் சுவாமிநாதன் யோசித்தான். 'முன்பெல்லாம் அப்பா செத்துப் போவதற்கு முன்பெல்லாம் - ஜானுவும் நானும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தோம்! எப்போதும் விளையாட்டு, கூச்சல், சிரிப்பு, அமர்க்களம். "டேய்! சித்தநாழி பேசாமலிருக்கமாட்டீர்கள்?" என்று அப்பாவின் அதட்டல், உடனே சற்று அமைதி. பிறகு மீண்டும் அமளி.

'ஆனால் இப்போது சிநேகிதமும் இல்லை, விளையாட்டும் இல்லை. சதா சண்டைதான்...'

அவன் குளித்துவிட்டு வரும்போது ஜானு சினிமாப் பாட்டொன்றை முனகியவாறு டிரஸ்ஸிங் டேபிளுக்கெதிரில் உட்கார்ந்து தலைமயிரில் எண்ணெய் தடவிக் கோதிக் கொண்டிருந்தாள். என்ன பாட்டு, என்ன ஆனந்தம். அவனுக்கு எரிச்சல் மூட்டுவதில் அவள் தேர்ந்தவள். டிரஸ்ஸிங் டேபிள் டிராயருக்குள் அவனுடைய பனியன் இருந்தது. "டிராயரைத் திறக்கணும்" என்றான். அவள் இடத்திலிருந்து எழுந்திராமல் சற்றே ஒருக்களித்து உட்கார்ந்தாள். சுவாமிநாதன் கூசியவாறே அவளுடைய விலாப்பக்கத்தருகே குனிந்து டிராயரைத் திறந்து தேடிக் கொண்டிருந்தபோது கூந்தலை மேலிருந்து கீழாக சீவிக் கொண்டிருந்தாளாகையால் அவளுடைய முழங்கை அவன் மேல் இரண்டு மூன்று தடவை இடித்தது. அவளுடைய புடவைத் தலைப்பு அவனுடைய வெற்று முதுகின் மேல் உரசியது. கூந்தலை அவள் நீவும்போது உண்டான கலகலவென்ற வளையலோசை; கிளுகிளுப்பான நறுமணம்- சுவாமிநாதனுக்குக் கண நேரத்துக்கு அவள் மேலிருந்த வெறுப்புக் குறைந்து ஒரு பூரிப்பும் இன்பக் கிளர்ச்சியும் உண்டாயிற்று. சில சமயங்களில் அவளைப் பார்க்கும்போது இப்படிப்பட்ட உணர்வுகள்தான் ஏற்படுகின்றன. உடனேயே இதற்காகத் தன் மீது கோபமும் வருகிறது. அலட்சியப்படுத்த முடியாத ஏதோ ஒன்றைப் பெற்றிருக்கும் காரணத்துக்காக அவள் மீது பொறாமை உண்டாகிறது.

அவன் தலைவாரிக் கொள்ளும்போது அவள் குளிப்பதற்காக எழுந்தாள். ஒருகணம் அவன் பின்னால் நின்று கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள். சுவாமிநாதனுக்கு மீண்டும் எரிச்சலாக இருந்தது. தன் முகத்தில் அவனுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை, அதைப் பிறர் முன்னிலையில் பார்க்க அவன் கூசினான்.
நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு அவன் சுவாமியை நமஸ்காரம் செய்தான். சாப்பிட உட்கார்ந்தான். அவன் சாப்பிடத் தொடங்கும்போது திடீரென்று பாத்ரூமிலிருந்து ஜானு கூப்பிட்டாள்: "அம்மா! அம்மா!"

அம்மா பாத்ரூமுக்குச் சென்றாள். சுவாமிநாதன் குழம்புச் சாதத்தைச் சாப்பிட்டு முடித்தான். தட்டில் மிச்சமிருந்த கறியையெல்லாம் தின்றான். கைவிரல்களையெல்லாம் ஒவ் வொன்றாக நக்கிக் கொண்டான். அம்மா வரவேயில்லை. அவனுக்குக் கோபம் வந்தது. அம்மா குளித்து லேட்டாக்கினது போதாதென்று இப்போதும் லேட்டாக்குகிறாள். அம்மாவும் ஜானுவுமாக அவனைத் தாமதப்படுத்திச் சதி செய்கிறார்களோ? " அம்மாவ்!"

அம்மா ஓடி ஓடி வந்தாள். "முதுகைத் தேய்ச்சு விடணுமென்றாள்..." என்றவாறு அவசரமாக அவனுக்குச் சாதம் பரிமாறினாள். "போதும்! போதும்!" என்று ஒரு பிடிச் சாதத்தை அவன் ஒதுக்கினான்.

"சாப்பிடறதேயில்லையே நீ".

"இப்படிச் சாதம் போட மூணு மணி நேரமாக்கு: நிறையச்' சாப்பிடலாம்".

"நீ உட்கார்ந்திருப்பதே மறந்து போச்சு".

"என்னை உனக்கு மறந்து தான் போகும்".

"நன்றாகக் கோபம் வரது உனக்கு, உங்கப்பா மாதிரி" என்ற அம்மா மோர் ஊற்றத் தொடங்கினாள்.

அவசரமாகச் சாப்பிட்டு முடித்தான். சட்டையும், பாண்டும் அணிந்து கொண்டு அவன் ஸாக்ஸ் அணியும்போது ஜானு குளித்து விட்டு வந்தாள். ஸாக்ஸ் நுனியில் ஒரு ஓட்டை. ஜானுவின் புடவைகளும் ரவிக்கைகளும் கைக்குட்டைகளும், செருப்புகளும் வீடெங்கும் இறைகின்றன. அவனுக்கோ ரகத்துக்கு ஒன்றுகூட இருப்பதில்லை. அப்பா இருந்தவரை அவனுக்கு வேண்டியதையெல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கி வருவார்.

"எங்கேடா உனக்கு இன்டர்வியூ" என்று புடவை மடிப்புகளைச் சரி செய்தவாறே ஜானு கேட்டாள். அவன் தான் போகும் கம்பெனியின் பெயரைச் சொன்னான்.

"பைசா ஏதாவது வேணுமா?"

"ஒண்ணும் வேண்டாம்".

அவள் முகத்தில் ஒரு புன்னகை ரேகை. 'சிரி, சிரி. எனக்கு வேலை கிடைத்த பிறகு நானோ அம்மாவோ உன்னிடம் பிச்சை கேட்கவேண்டியிராது' என்று நினைத்தவாறு கர்சீப், பேனா, பர்ஸ், சர்ட்டிபிகேட்டுகள் முதலியவற்றைத் திரட்டிக் கொண்டு அவன் கிளம்பினான். "போயிட்டு வரேம்மா".

"தைரியமாய்ப் போயிட்டு வா, சுவாமியை நினைச்சுக்கோ".

வீட்டிற்கு வெளியே வந்து நெற்றி விபூதியை அழித்துக் கொண்டான். சுவாமியை நினைத்துக் கொள்ளத்தானே வேண்டும்? காலை வெய்யிலில் நடப்பது உற்சாகமாக இருந்தது. சாலையைப் பெருக்கிக் கொண்டிருந்த ஒரு தோட்டி அவனைப் பார்த்து, "மணி என்ன?" என்று கேட்டான். ஒரு கணம் தடுமாறிவிட்டு,"எட்டரை" என்றான் சுவாமிநாதன். சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு ஒரு நல்ல ரிஸ்ட் வாட்ச் வாங்க வேண்டும். பிறகு, எல்லாருக்கும் கரெக்டாக மணி சொல்லலாம்...

ஈசுவர மாமா தன் வீட்டு வராந்தாவிலேயே உட்கார்ந்திருந்தார். அவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். "எத்தனை மணிக்கு இன்டர்வியூ? என்றார்.

"பத்து மணிக்கு".

"இன்று செவ்வாயா? - 'திண்டுக்கல் சத்திரத்திலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டவன் விழுப்புரத்திலே செத்தான் ஞாயிற்றுக் கிழமை' - இன்று மூன்று மணிக்கு ராகு காலம்; கவலையில்லை" என்றார் அவர். பிறகு, "உன் சர்டிபிகேட் ரெடி. கமலி! அந்தப் பையை எடுத்துக் கொண்டு வா" என்றார் தன் பெண்ணிடம்.

நடத்தை சர்டிபிகேட் வேண்டுமென்று அவரிடம் கேட்டிருந்தான் அவன். கமலி பையை எடுத்து வரும்போது அவளுடைய அம்மாவும் வந்தாள். "என்னப்பா சுவாமிநாதா, சௌக்கியமா?" என்றாள்.

"உம்"

"உங்கம்மா இந்தப் பக்கம் வரதேயில்லையே".

"வேலை சரியாயிருக்கு" என்றான் சுவாமிநாதன். 'எனக்கு வேலை கிடைத்து நான் நல்ல நிலைமைக்க வந்த பிறகு எங்கம்மா எல்லோரையும் பார்க்க வருவாள்' என்று நினைத்தான்.

சர்ட்டிபிகேட்டை வாங்கிக் கொண்டு அவன் புறப்படும் போது, "என்கூடவே காரில் வந்து விடேன்" என்றார் ஈசுவரன். புதிய கார், குலுக்கலில்லாத ஓட்டம். மெத்தென்ற ஆசனம். அம்மாவும் ஜானுவும் அவனைத் தாமதப்படுத்த நினைத்தார்கள். ஆனால் அவனுக்குக் காரில் லிஃப்ட் கிடைத்து விட்டது. அப்பாவைப் போலவே அப்பாவின் சிநேகிதர்களும் நல்லவர்கள்.

ஈசுவரன் ஏதோ ராகத்தை முனகிக் கொண்டே கார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்பாவும் இப்படித்தான் ஏதாவது ராகத்தை முனகிக் கொண்டே இருப்பார். ஈசுவரனுக்கு உச்ச நிலையில் சொட்டை விழத் தொடங்கியிருந்தது, அப்பாவைப் போலவே. அவனுக்குத் திடீரென்று அப்பாவுடன் டாக்ஸியில் போன நினைவுகள் எழுந்தன. காலையில் சொப்பனத்தில் பார்த்த அப்பா எவ்வளவு அழகாக இருந்தார்.

பேட்டிக்கு அழைத்திருந்த கம்பெனி வாயிலில் அவனை இறக்கிவிட்டு,'ரைட்டோ - குட்லக்!' என்று ஈசுவரன் காரைச் செலுத்திக் கொண்டு போனார்.

சுவாமிநாதன் எதிரே இருந்த பெரிய கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான் - உயரமான, அழகான கட்டிடம். கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவுடன் கீழே விரிக்கப்பட்டிருந்த அழகிய மாட்டிங்க், கண்ணாடியாலும் பிளாஸ்டிக்கினாலும் பிளைவுட்டினாலும் அமைக்கப் பட்டிருந்த சுவர்களும் தூண்களும், பளபளக்கும் மேஜையருகே அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்த ரிஸப்ஷனிஸ்ட் மங்கை... இவ்வளவையும் பார்த்துத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது.

ரிஸப்ஷனிஸ்ட் மிகவும் அழகாக இருந்தாள். சிவப்புப் புடவைக்கும் கறுப்பு ரவிக்கைக்கும் மூடப்படாமல் தப்பி அவளுடைய வெள்ளை வெளேரென்ற சருமம் இங்குமங்குமாய்த் தென்பட்டுக் கொண்டிருந்தது. சுவாமிநாதன் அவளருகே சென்றவுடன்,"யெஸ் ப்ளீஸ்" என்றாள் அவள் புன்னகையுடன். சுவாமிநாதனுக்கு இதயம் படபடவென்றது.* "இன்டர்வியூவுக்கு வந்தேன்" என்று தடுமாற்றத்துடன் கையிலிருந்த கடிதத்தை அவளிடம் காட்டினான். "ஸெகண்ட் ஃப்ளோர் ப்ளீஸ் - ரூம் நம்பர் டூ நாட் டூ" என்றாள் அவள் அதே புன்னகையுடன்.

இரண்டாவது மாடியில் ஒரு மூலையில் பேசிக் கொண்டிருந்த மூன்று பியூன்களிடம் இருநூற்றிரண்டாம் நம்பர் அறைக்கு வழி கேட்டுக் கொண்டு அவன் மேலே நடந்தான். பின்னால் அவர்கள் சிரிக்கும் சத்தம் கேட்டது; தன் காரணமாகத்தான் சிரிக்கிறார்களோ என்னவோ? இவர் களுக்கு வேலை கிடையாதோ? அவன் இங்கே வந்த பிறகு இவர்களுக்கு நிறைய வேலை கொடுப்பான்.

இருநூற்றிரண்டாம் நம்பர் அறைக்குள் ஏற்கனவே பல இளைஞர்கள் காத்திருந்தார்கள். அவன் உள்ளே நுழைந்ததும் எல்லார் கண்களும் அவனை நோக்கித் திரும்பின. சுவாமிநாதன் கூச்சத்துடன் காலியாக இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். அவனைப் பார்த்துக் கொண் டிருந்தவர்கள் மெல்லப் பார்வையை வேறு திசைகளில் திருப்பினார்கள். இவன் ஒரு பிரமாதமான போட்டியாக வரக் கூடியவனில்லை என்று நினைத்தவர்கள்போல. சுவாமி நாதன் அவர்களை ஒரு நோட்டம் விட்டான். அவர்களில் சிலரையாவது அவனால் தோற்கடிக்க முடியாதா?

திடீரென்று ஒரு நறுக்கு மீசை இளைஞன் "ஹலோ!" என் றான் சுவாமிநாதனைப் பார்த்து. முன்பு எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் சந்தித்திருந்த அந்த இளைஞனை அடையாளம் கண்டு கொண்டு,"ஹலோ" என்றான் சுவாமிநாதனும். எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சில் பொசுக்கும் வெய்யிலில் நீளமான கியூவில் நின்றிருந்தபோது பொதுவான ஒரு எரிச்சலிலும் தவிப்பிலும் முளை விட்டிருந்த அவர்களுடைய நட்பு இப்போது மீண்டும் ஊட்டம் பெற்றது.

"இன்னும் வேலையொன்றும் கிடைக்கவில்லையா?"

"ஒரு இழவுமில்லை."

பரஸ்பர அனுதாபங்கள்; யோசனைகள்.

ஹோஹோவென்ற ஒரு அட்டகாசசவ் சிரிப்பு -எதிரே உட்கார்ந்திருந்த ஒரு பருமனான இளைஞன்தான் அப்படிச் சிரித்தான். தான் சென்றிருந்த பல பேட்டிகளைப் பற்றிய அனுபவங்களை அவன் விவரித்துக் கொண்டிருந்தான்.:

"காலேஜ் பாஸ் பண்ணிவிட்டு இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தாய்?"

"உங்களுடைய விளம்பரத்துக்காகக் காத்துக் கொண்டிருந் தேன்."

"நீ இந்த வேலைக்கு ஏற்றவனென் நினைக்கிறாயா?"

"நிச்சயமாய். ஆனால் இந்த வேலைதான் எனக் அவ்வளவு ஏற்றதில்லை."

"டைப்பிங் தெரியுமா உனக்கு?

"தெரியாதே ஸார்; யார் அவர்?"

"எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறாய்?"

"உங்களுக்கும் எவ்வளவு கட்டுபடியாகும்?"
குண்டு வாலிபனின் ஒவ்வொரு வாக்கியத்தையும் தொடர்ந்து குபீரென்ற சிரிப்பு. மௌனம் பூதாகரமாக வளர்ந்து திகிலையும் தவிப்பையும் எழுப்புவதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் சிரித்தார்கள். தங்களுடைய பயங்களையும் பலவீனங்களையும் மறைப்பதற்காகவும், தங்களைப் பற்றிய உண்மையை மறப்பதற்காகவும் சிரித்தார்கள். பேட்டியில் உண்மை வெளியாகப் போகிறது.. அந்தக் கணம் வரையில் சிரித்துக் கொண்டேயிருக்கலாம்...

திடீரென் ஒரு மூக்குக் கண்ணாடி ஆசாமி கையில் ஒரு பெயர்ப் பட்டியலுடன் அறைக்குள் வந்தான். "ஸைலன்ஸ் ப்ளீஸ்!" என்று கூறினான். "உங்களைப் போன்ற படித்த இளைஞர்கள்.." என்று ஒரு சொற்பொழிவு, அவர்கள் யாரும் பேசவில்லை. கம்பெனியிடம் காரியம் ஆக வேண்டியிருக்கும் போது, கட்டுத்தறியின் உளறலையும் சகித்துக் கொண்டுதானே ஆக வேண்டும்.

மூக்குக் கண்ணாடி ஒவ்வொருவராக அழைத்து அவர்களுடைய சர்டிபிகேட்டுகளைப் பரிசோதித்தான். பிறகு ஒரு தள்ளு கதவைத் திறந்து பக்கத்து அறைக்குள் எட்டிப் பார்த்து ஏதோ கூறிவிட்டு, "ஆல்ரைட்! நான் பெயர் கூப்பிடுபவர்களெல்லாம் ஒவ்வொருவராக எழுந்து இந்த அறைக்குள் செல்லுங்கள் - முதலில், மிஸ்டர் ..." என்று பட்டியலில் இருந்த முதல் பெயரை வாசித்தான். கூப்பிடப்பட்ட இளைஞன் எழுந்து சென்றான்.

முதல் பெயர் தன்னுடையதாக இல்லையே என்று சுவாமிநாதனுக்கு ஆறுதலாக இருந்தது. இயல்பாகவே அவன் முதல் ஆசாமியுமல்ல, கடைசி ஆசாமியுமல்ல. அவன் வேண்டியதெல்லாம் இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு மறைவான இடம். முதலாவதாக இருப்பதற்கும் கூச்சம். கடைசியாக இருப்பதற்ம் வெறுப்பு.

ஒன்று, இரண்டு, மூன்-பெயர் வாசிக்கப்படுபவர்கள் ஒவ்வொருவராக எழுந்து சென்றார்கள். 'எல்லாம் வெறும் வாஷ்' என்றான் குண்டு வாலிபன். "வேலைக்கு வேண்டிய ஆளை ஏற்கனவே தேர்ந்தெடுத்திருப்பார்கள் சிபாரிசு மூலமாய். நம்முடைய சர்ட்டிபிகேட்டுகள் வீண்; நாம் இங்கே வந்தது வீண்.."

குண்டு வாலிபனின் பிரசங்கமாரி, பிரசங்கப் புயல் ஒரு அரசியல் தலைவனாக அவன் வரக்கூடும். ஒரு ஆபீஸ் நாற்காலியில் அமர்ந்து இன்னொருவர் கீழ் வேலை செய்பவனாக அவனைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. பார்க்கப் போனால் தன்னைக்கூட நாள் முழுதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவனாக சுவாமிநாதனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை- எந்த விதமான வேலையோ? 'ஆபீஸ் உதவியாளன்' என்று விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது. யாருக்கு எந்த விதமான உதவி? அவனுக்குக் கீழே அவனுக்கு உதவி செய்யும் யாராவது இருப்பார்களா? வராந்தாவில் இருந்த பியூன்கள் - ! அவர்களை அவன் விரட்டலாம்.. ஒரு பெரிய அறையில் வேறு சில மனிதர்களுடன் அவன் உட்கார்ந்திருப்பான். இதைப் போலவே ஒரு அறை.

சுவாமிநாதன் அறையைச் சுற்றித் தன் பார்வையைச் சுழலவிட்டான். மேலே கூரையில் லொடக்கு லொடக்கு என்று சத்தமிட்டவாறு ஒரு மின் விசிறி சுழன்றது. சுவரில் ஒரு பல்லி உட்கார்ந்திருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியே இருந்த ஒரு மரத்தின் பச்சை இலைகளும், தூரத்தில் நீல வானமும் தெரிந்தன. வெய்யிலின் கிரணங்கள் தரையில் ஜன்னல் வடிவத்தில் ஒரு ஒளிக் கட்டத்தைப் படிய விட்டிருந்தன; ஜன்னல் கண்ணாடியின் மீது 'ஙொய்ங்...' என்ற ரீங்காரத்துடன் ஒரு குளவி தன் தலையை மீண்டும் மீண்டும் மோதிக் கொண்டிருந்தது. அருகில் எங்கிருந்தோ படபடவென்று டைப் அடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

குண்டு வாலிபனும் நறுக்கு மீசையும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்; அறையிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்து பேட்டி அறைக்குள் சென்றார்கள். சுவாமிநாதன் அந்த அறையைப் பற்றியும் தன்னைப் பற்றியும் பேட்டியைப் பற்றியும் மறக்க முயன்றான். வெளியே பளிச்சென்ற வெய்யிலில் நடக்கும் காட்சிகளைக் கற்பனை செய்து பார்த்தான். படபடவென்ற ஸ்கூட்டர் ஒலிகள், வெவ்வேறு ஹாரன் ஒலிகள், டர்ரென்று தரையை அதிர வைத்தவாறு சென்ற லாரிகளும் பஸ்களும்- இப்படிப் பற்பல ஓசைகள் வெளியிலிருந்து அவ்வப்போது மிதந்து வந்தன. பிரகாசமான பகல் வெய்யிலில் உலகம் எப்படியிருக்கு மென்று இனி அவனால் பார்க்க முடியாது. காலையிலும் மாலையிலும்தான் பார்க்க முடியும்.

சுவாமிநாதன் கண்களை இறுக மூடிக் கொண்டான். லொடக்கு லொடக்கு என்ற விசிறிச் சத்தம்; குண்டு வாலிபனின் பேச்சுக் குரல்; டைப்ரைட்டிங் சத்தம்; குளவியின் ரீங்காரம். சுவரில் இருந்த பல்லி திடீரென்று 'கிர், கிர்' என்று கத்தியது. சுவாமிநாதன் கண்களைத் திறந்து பார்த்தான். பரீட்சை ஹாலில் இப்படித்தான் ஒரு பல்லி உட்கார்ந்திருந்தது. தினசரி பாதி நேரத்தில் பேப்பரை முடித்து விட்டு மிச்ச நேரமெல்லாம் அவன் ஆசிரியர் முகத்தையும் சுவர்களையும், ஜன்னல்களையும், பல்லியையும் பேனாவையும் மாறிமாறிப் பார்த்தவாறு வேறு யாராவது முதலில் பேப்பர் கொடுத்துவிட்டுப் போகிறார்களா என்று கவனித்துக் கொண்டிருந்தான். அப்போது எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருந்தது, எல்லாப் பரீட்சைகளையும் மூன்று மணிநேரம் எழுதியிருந்தால் மூன்றாம் வகுப்பில் பாஸ் பண்ணி இன்று இந்த உதவாக்கரைப் பேட்டிக்காகக் காத்திருக்க வேண்டாம்.

இப்போது அம்மாவும் அக்காவும் என்ன செய்து கொண்டிருப்பார்களென்று அவன் யோசித்தான். அம்மா பகல் தூக்கம் தூங்கி எழுந்திருப்பாள். அக்கா ஸ்டெனோ- ஏதாவது டைப் அடித்துக் கொண்டிருப்பாள், அல்லது பென்சிலையோ, நகத்தையோ, கர்ச்சீப்பையோ கடித்துக் கொண்டிருப்பாள். சும்மா உட்கார்ந்திருக்கும் போதெல்லாம் எதையாவது கடித்துக் கொண்டிருப்பது அவள் வழக்கம். அவளுடைய ஆபீசை அவன் பார்த்திருக்கிறான்; சுத்தப் பழங்காலத்துக் கட்டிடம்-அக்காவுடைய ஆபீசை விட அழகியதொரு ஆபீசில் அவனுக்கு வேலை கிடைக்கப் போகிறது. இந்த ஆபீஸில் சில நாட்களில் மிகவும் பிரபலமாகி விடுவான். நிறைய நண்பர்களைப் பெறுவான். அக்காவுடனோ, அம்மாவுடனோ அவன் தெருவில் செல்லும்போது இவர்கள் எதிரே வந்தால் அவனைப் பார்த்துப் புன்னகை செய்வார்கள். சுவாமிநாதன் பெரியவனா அல்லது ஜானு பெரியவளா என்று பிறகு அம்மாவே தீர்மானித்துக் கொள்ளட்டும். பெரிய பெரிய மனிதர்களெல்லாம் அவன் வீடுதேடி வருவார்கள். "சுவாமிநாதன் இருக்கிறானா?" "மிஸ்டர் சுவாமிநாதன் வீடு இதுதானே?", :மே ஸ்பிக் டு சுவாமிநாதன்?" என்று கேட்பார்கள்.

சுவாமிநாதன், சுவாமிநாதன், சுவாமிநாதன்.

"சுவாமிநாதன்!"

திடுக்கிட்டவனாய் அவன் நிமிர்ந்தான். கூப்பிட்டது மூக்குக் கண்ணாடி ஆசாமிதான்-அதற்குள்ளாக அவனுடைய முறை வந்துவிட்டதா?

மூக்குக் கண்ணாடியைத் தாண்டி பேட்டி அறைக்குள் நுழைந்தவுடனேயே இவ்வளவு நேரமாக வரவழைத்துக் கொண்ட தைரியமெல்லாம் போன இடம் தெரியவில்லை. எதிரே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு-நான்கு ஆசாமிகள். நான்கு ஆசாமிகளுக்கு எதிராக அவன் ஒரே ஒருவன், "குட் ஆஃப்டர்னூன்" என்று அவன் கூற விரும்பினான். ஆனால் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டதெல்லாம் உருவமற்ற ஒரு ஒலிச் சேர்க்கை-பயத்தில் வேக வேகமாக வெளிப்பட்ட மூச்சுக் காற்றிலே காதுக்கெட்டாத முணுமுணுப்பாகத் தேய்ந்துவிட்ட வார்த்தைகள்.

"ஸிட்டௌன்".

நாற்காலியில் சாய்ந்து உட்காராமல் முன் புறம் குனிந்து தர்மசங்கடத்துடன் உட்கார்ந்த சுவாமிநாதனை எதிரேயிருந்த நாலு ஜோடிக் கண்கள் கூர்ந்து கவனித்தன. அவனைக் கூசித் தடுமாறச் செய்த நாலு ஜோடிமெர்க்குரி லைட்விழிகள்; அவனை ஊடுருவி ஆராய்ந்த நாலு எக்ஸ்ரே காமிராக்கள்...

"நீர்தான் மிஸ்டர் சுவாமிநாதனா?"

எதிரே பருமனாகக் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தவர் தான் இந்தக் கேள்வியைக் கேட்டவர். "ஆமாம்" என்று அவரைப் பார்த்துக் கூறினான் சுவாமிநாதன்.

"என்ன வயதாகிறது உங்களுக்கு மிஸ்டர் சுவாமிநாதன்?"

"இருபத்தொன்று".

"மிகச் சின்னவனாகத் தோன்றுகிறதே உங்களைப் பார்த்தால்"

"என் தப்பில்லை ஸார்!" என்றான் சுவாமிநாதன். இதற்கு அவர்கள் சிரிப்பார்கள் என்று எதிர்பார்த்தான். ஆனால் யாருமே சிரிக்கவில்லை. அவனுக்குச் சங்கடமாக இருந்தது.

எதிரே இருந்தவருடைய இன்னும் சில கேள்விகளுக்கும் பதிலளித்த பிறகு அவனுக்குச் சற்றே பயம் விலகியது. ஆனால் இந்தச் சமயத்தில் வலது ஓரத்திலிருந்தவர் சட்டென்று ஒரு கேள்வியைக் கேட்டார். எதிரேயிருந்தவரையே கவனித்துக் கொண்டிருந்த சுவாமிநாதன் இந்தப் பக்கவாட்டுத் தாக்குதலால் மீண்டும் தடுமாறிப் போனான். அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது இடது ஓரத்திலிருந்தவர் இன்னொரு கேள்வி கேட்டார். டென்னிஸ் விளையாட்டைப் போல இங்குமங்குமாய் வந்து விழுந்த பல கேள்விப் பந்துகளை அவன் சமாளிக்க வேண்டியிருந்தது. நாலு எதிராளிகள்; எண்ணற்ற பந்துகள். ‘ஸெர்வீஸ்எப்போதும் அவர்கள் கையில்.

அவந்தான் மூத்த பிள்ளையா? பாஸ் பண்ணி விட்டு இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தான்? இன்றைய தினசரியில் தலையங்கம் என்ன? அவன் கடைசியாகப் படித்த புத்தகம் எது? இதுவரை அவன் உட்கார்ந்திருந்த அறையில் எவ்வளவு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன?...

எதிரே உட்கார்ந்திருந்தவர்களின் கேள்விகளுக்குப் பயத்துடனும் தயக்கத்துடனும் பதிலளித்துக் கொண்டிருந்த சுவாமிநாதனுக்குத் திடீரென்று அவர்கள் மேல் கோபமாக வந்தது. மிகவும் புத்திசாலிகளாகவும் பாரபட்சமில்லாதவர் களாகவும் அவர்கள் பாசாங்கு செய்வதாகத் தோன்றியது. அவர்கள் வேலையில் சேர்ந்தபோது இப்படி இன்டர்வியூ மூலமாக வந்திருப்பார்களா, அல்லது வேறு வழிகள் மூலமாகவா? தங்களுடைய தற்போதைய பதவியை அவர்கள் அடைந்திருப்பது நேர் வழிகள் மூலமாகத்தானா? காலியாயிருக்கும் இடத்துக்கு ஏற்கனவே தங்களுடைய ஆளை அமர்த்தியிருப்பார்களா இல்லையா? அவர்களுடைய வரவழைத்துக் கொள்ளப்பட்ட முகபாவங்களையும் பெரிய மனிதத் தோரணையையும் கலைக்க-அவர்கள் திடுக்கிடும்படி பதறும்படி ஏதாவது செய்ய-அவன் ஆசைப்பட்டான். அவர்களுடைய வாழ்க்கையின் கழிந்துபோன அத்தியாயங் கள் அவர்களுடைய முகங்களின் சுருக்கங்களிலும் மேடு பள்ளங்களிலும், அவர்களுடைய நரைத்த அல்லது வழுக்கை விழுந்த தலைகளிலும், அவர்களுடைய உடலின் தடிப்புக்களிலும், மடிப்புக்களிலும் தெளிவாக எழுதப் பட்டிருந்தன. அவர்கள் எதையெல்லாம் சம்பாதித்திருந்தாலும் பெற்றிருந்தாலும் ஒன்றை மட்டும் நிரந்தரமாக இழந்து விட்டிருந்தார்கள். இளமையை, இளமையின் புதுமையை, தூய்மையை, துடிப்பை. அவர்களுடைய பணத்தையும் பதவியையும் அனுபவத்தையும் சுவாமிநாதனாலும் பெற முடியும். ஆனால் அவனுடைய இளமையை-இன்னும் ஒரு அத்தியாயம் கூட எழுதப்படாத அவனுடைய சுத்தமான நிஷ்களங்கமான முகத்தை-அவர்களால் பெறவே முடியாது.

சுவாமிநாதனுக்கு ஒரு அலட்சியமும் கர்வமும் உண்டாயிற்று. அவனுடைய வாழ்க்கை முழுவதுமே முன்னால் விரிந்து கிடந்தது. இந்தப் பேட்டிக்காகவும் இந்த முட்டாள்களுக்காகவும் அவன் ஏன் பயப்பட வேண்டும்? இந்த ஏர்கண்டிஷன் அறைக்கு வெளியே வெய்யில் அடித்துக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கை இருக்கிறது. அவன் தைரியமாகவும் மிதப்பாகவும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தொடங்கினான். ஆனால் அவனுக்குத் தைரியம் வந்த சமயத்தில் பேட்டி முடிந்து விட்டது.

மாலை வெய்யிலிலும் சிலுசிலுவென்ற காற்றிலும் சுவாமிநாதன் பேட்டியைப் பற்றி யோசித்தவாறே நடக்கத் தொடங்கினான். வீதி முனையில் சாலையைக் கடப்பதற்காகச் சற்றே நின்றான். சிவப்பு விளக்கு வருவதையும் வண்டிகள் நிறுத்தப்படுவதையும் எதிர்பார்த்தவாறு நின்று கொண் டிருந்தவன், நிமிர்ந்து எதிர்ச் சாரியை ஒரு கணம் பார்த்தான். ஒருகணம், இரண்டுகணம்.... எதிர்ச்சாரியில் நடந்து சென்று கொண்டிருப்பது யார்? சுவாமிநாதனுக்குத் தலை சுற்றியது.

ஜானு-அவள் கூடவே ஒரு இளைஞன். ஜானு அவனைக் கவனிக்கவில்லை. அவள் சந்தோஷமாக இருந்தாள்; சிரித்துக் கொண்டிருந்தாள். அந்த இளைஞனும் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் வாட்டசாட்டமாக கருப்புக் கண்ணாடியணிந்து சினிமா ஹீரோ போலிருந்தான். சிவப்பு விளக்கு வந்து வண்டிகள் நின்றுவிட்டன. சுவாமிநாதன் எதிர்ச்சாரியைப் பார்த்தவாறு சாலையைக் கடக்காமல் நின்று கொண்டேயிருந்தான். மீண்டும் பச்சை விளக்கு வந்து வண்டிகள் ஓடத் தொடங்கின. சுவாமிநாதன் அந்தச் சாலையிலேயே மெல்ல நடக்கத் தொடங்கினான்.

சற்றுத்தூரம் நடந்ததும் ஒரு சினிமாத் தியேட்டர்; அவனுக்குப் பிடித்த நடிகை நடித்த படம். படத்தின் புகைப்படங்களை அவன் பார்க்கத் தொடங்கினான். அந்த நடிகையின் பலவித போஸ்கள். கம்பெனியில் பார்த்த ரிஸப்ஷனிஸ்ட்டை அவன் நினைத்துக் கொண்டான். அக்காவையும் கருப்புக் கண்ணாடி வாலிபனையும் நினைத்துக் கொண்டான். ஒரு பிரம்மாண்டமான சூன்ய உணர்வும் ஏக்கமும் அவனைப் பிடித்து உலுக்கின. சட்டென்று ஒரு டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் நுழைந்தான்.

சினிமாத் தியேட்டர்கள் அவனுக்குப் பிடித்திருந்தன. அங்கே தான் சுவாமிநாதன் என்பதையும் தன்னுடைய பல்வேறு கவலைகளையும் மறந்து விட முடிகிறது. ஆனால் இன்று மனம் சினிமாவில் லயிக்கவில்லை. பேட்டியைப் பற்றியும், அக்காவைப் பற்றியும், அம்மாவைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தது. அம்மா தனக்காகக் கவலைப் படுகிறாளோ என்னவோ -நாழியாகிறதே என்று. அம்மாவுக்கு நாள் முழுவதும் வீட்டிலே உட்கார்ந்து கவலைப்படுவதுதான் வேலை. திடீரென்று, அம்மா சினிமாப் பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டன என்று அவனுக்குத் தோன்றியது. அப்பா இருந்தபோது எல்லாரையும் அழைத்துச் செல்வார்...

இடைவேளை. சுவாமிநாதன் எழுந்து வெளியே வந்தான். சுற்றிலும் சந்தோஷமான குடும்பங்கள். அப்பா இருந்திருந்தால் அவர்களும் இப்படி சந்தோஷமாக இருந்திருப்பார்கள்; அப்பா வுடன்தான் அவர்களுடைய பொதுவான உலகம் இருந்தது. அப்பா இறந்த பிறகு அவர்கள் தனித்தனியாகத் தங்கள் உலகங்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அம்மா வீட்டின் நான்கு சுவர்களுக்ககிடையில்; ஜானு கருப்புக் கண்ணாடியணிந்த அந்த இளைஞனைப் போன்றவர்களிடம்; சுவாமிநாதன் பேட்டி அறைகளில். பேட்டி அறைகளில், அப்பாவின் பகல் பொழுதுகள் கழிந்த வெளியுலகத்தை அவன் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறான். அந்த உலகத்தின் இரக்கமற்ற கடுமையையும் தாங்கிக் கொள்ளச் சக்தியின்றி, சினிமாத் தியேட்டரின் இருட்டுக்குள்ளே தன்னை ஒளித்துக் கொள்கிறான்.

இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தியேட்டருக்குள் போக அவனுககுப் பிடிக்கவில்லை. பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்.

பஸ் ஸ்டாண்டில் கூட்டமேயில்லை. சுவாமிநாதன் தன் யோசனைகளுடன் தனித்து விடப்பட்டான். அவனுக்கும் ஜானுவுக்கும் வீடு திரும்புவதே பிடிப்பதில்லை. வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் ஆணாயிருந்தும் அப்பாவுடைய பொறுப்பு களை இன்னும் ஏற்றுக் கொள்ளாதது அவன் மனத்தை உறுத்துகிறது. ஒரு செல்லப் பெண்ணின் சலுகைகளை இழந்து வேலை பார்க்க வேண்டியிருப்பது அவளுக்கு எரிச்சல் மூட்டுகிறது. வீட்டுக்குப் போனதும் பேட்டியெல்லாம் நன்றாகபுர் பண்ணினாயா என்று அம்மா கேட்பாள். அவனுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று அவளுக்கு ஆசையாக இருக்கிறது. அப்போது அவனுடைய அப்பாவை மீண்டும் அவனிடத்தில் அவள் காண்பாள். கர்வத்துடன் வெளியே செல்லத் தொடங்குவாள். ஜானுவும் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறாள் - தன்னுடைய விடுதலைக்காக. அவர்களை விட்டு விலகித் தன் சொந்த உலகத்தை அமைப்பதற்காக ஒரு வேலை கிடைத்து விட்டால் பிறகு இந்த ஜானுவின் தயவை எதிர்பார்க்க வேண்டாமே என்று சுவாமிநாதனுக்குத் தோன்றுகிறது.

ஆனால் அவனுக்கு வேலை கிடைத்துவிடக் கூடாதேயென்றும் அவர்கள் பயப்படுகிறார்கள். ஜானுவைப் போல அவனும் தன்னுடைய உலகத்தை விட்டு நழுவி விடுவானோ என்று அம்மா பயப்படுகிறாள். தன் சுயேச்சையும் சர்வாதிகாரமும் பறி போய்விடுமே என்று ஜானு பயப்படுகிறாள். கவலைகளற்ற தன் பகல் பொழுதுகள் இனி வேற்று மனிதர்களுக்குச் சொந்தமாகி விடுமேயென்று சுவாமிநாதன் பயப்படுகிறான்.

இந்தப் பஸ் ஏன் வரவே மாட்டேனென்கிறது? இதுவே சினிமாவாக இருந்தால் அந்த அழகிய ரிஸப்ஷனிஸ்ட் இப்போது ஒரு அழகிய காரில் சட்டென்று தோன்றி அவனை ஏற்றிச் சென்றிருப்பாள். பிறகு அவளுடைய அப்பாதான் கம்பெனி முதலாளி என்பபதையும் அவன் கண்டுபிடிப்பான். சினிமாவாக இருந்தால் இடைவேளைக்குப் பிறகு அவனுடைய அப்பா உயிருடன் திரும்பி வந்து விடுவார். பிறகு அவன் வேலை தேட வேண்டிய அவசியமே இருக்காது. சினிமாவைப் போல வாழ்க்கை இருந்தால் கஷ்டமில்லை.

வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? ஏன்? - சுவாமிநாதன் பஸ் ஸ்டாணடில் நின்றவாறே யோசித்துக் கொண்டேயிருந்தான்.

நன்றி - மதுரைத்திட்டம்

கருத்துகள் இல்லை: