பத்துப்பாட்டின் இறுதிப்பாட்டான கூத்தராற்றுப்படை 583 அடிகளைக் கொண்டு நன்னன் சேய் நன்னனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் கூத்தன் தன் எதிர்ப்பட்ட மற்றோர் கூத்தனைப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் அமைத்துள்ளார்.
பெருங்கௌசிகனார் என்று சிறப்பித்துக் கூறப்படுவதிலிருந்தே புலவர்களுக்கிடையில் இவருக்கிருந்த தனிச் சிறப்பினை நன்குணரலாம்.
பத்துப்பாட்டுப் புலவருள் கபிலரைப் போலவே குறிஞ்சி நில அழகில் தம்மைப் பறிகொடுத்த மற்றொரு புலவர் கௌசிகனார் ஆவார். பாண்டிய நாட்டுப் புலவரானாலும் தொண்டை நாட்டு நவிரமலை இவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தது. கபிலரோ கண்ணுக்குப் புலனாகும் மரம், செடி, கொடி, மலர்கள் ஆகியவற்றில் மனதினைப் பறிகொடுத்தார். இவரோ மலையில் எழும் பலவகை ஒலிகளிலே மயங்கி மனம் ஒன்றிப் போய்விட்டார்.
மலைகளில் வாழும் மக்களும் பறவைகளும் விலங்குகளும் எழுப்புகின்ற பல்வகை ஒலிகளை ஒரே சமயத்தில் உணர்கிறார். தங்கள் உணர்ச்சி கலந்த இன்ப துன்பங்களை இவ்வொலிகளில் எதிரொலித்தன. அவ்வொலிகளை மற்றவர்களும் கேட்க வேண்டும் என்று விரும்பினார். தம் காலத்து மக்களே அன்றி எதிர்கால மக்களும் கேட்டு இன்புற வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருந்திருக்கிறது. தம் விருப்பத்தை மொழியின் துணையோடு தம் பாட்டிலே வடித்து நிறைவேற்றிக் கொண்டார்.
குறிஞ்சிக்குக் கபிலர் எனப் போற்றப்படும் கபிலரே கூட மலையின் கருப்பொருளாம் மலர்களின் பல்வேறு வகைப்பட்ட பூக்களின் பெயர்களைத் தொகுத்துத் தந்திருக்க, பெருங்கௌசிகனாரோ குறிஞ்சியின் கருப்பொருளான மக்கள், விலங்கு, பறவை முதற்கொண்டு உயிரினம், பயிரினம், தொழில், நீர், கருவி, உணவு என்று அனைத்துக் கருப்பொருள்கள் வழி ஏற்படும், ஏற்படுத்தும் பல்வேறு வகைப்பட்ட ஓசைகளையெல்லாம் குறிப்பிடுவதுடன் நவிர மலையில் எதிரொலிக்கும் குறிப்பிட்ட இருபது ஒலிகளை மட்டுமே தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார்.
ஓசைகள் இருபது:-
நெடுந்தொலைவு நடந்த அலுப்புத்தீர பூத்துக் குலுங்கும் மரங்களின் நிழலில் சற்றே தங்கி ஓய்வு எடுங்கள். அப்போது பலவிதமான ஓசைகள் தொடர்ந்து கேட்ட வண்ணமிருக்கும் என்று பரிசில் பெற்ற கூத்தன் ஆற்றுப்படுத்தும் கூத்தனுக்குக் கூறுவதுபோலப் பல்வேறு ஓசைகளைப் பட்டியலிடுகிறார்.
முதலாவதாகப் பலாச்சுளை மணங்கமழும் மலையின் எல்லாப் பக்கங்களிலும் அருவிநீர் பாயும் ஓசை கேட்கும். அந்த அருவியில் விரும்பி நீராடும் வானர மகளிர் தம் கைகளால் நீரைத் தட்டித் தட்டி விளையாடும் ஓசைத் தாளத்துடன் கூடிய இசையின் ஓசையாய் இருக்கும் என்கிறார்.
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் ஒன்று கானவரின் திணைப் புனத்தில் புகுந்து பயிர் மேயும். பரணில் இருந்து காவல் காக்கும் கானவர் அவ்யானையை வளைத்துப் பிடிக்க முயன்று எழுப்பும் ஓசை கேட்கும்.
பன்றியால் தாக்குண்ட கானவரின் அழுகை ஒலி:-
நெடிய குகைகளில் வாழும் முள்ளம் பன்றியை அம்பு எய்து வீழ்த்த எண்ணிச் செயல்பட, குறி தவறியபோது, பன்றி தன் எஃகு போன்ற முள்ளால் தாக்க, புண்பட்ட கானவர் வலியால் அழும் அழுகை ஒலி கேட்கும்.
மகளிரின் புலி புலி ஆரவாரம்:-
புலிபுலி என்று கூறினால் வேங்கை மரக்கிளைகள் வளைந்து கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அதனால் பூக்கொய்வார் இங்ஙனம் கூறுவது மரபாம். வேங்கை மலர் மரத்தின் கிளைதோறும் செந்நிறத்தில் கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும். அதை அணிந்து கொள்ள விரும்பும் குறமகளிர், ''புலிபுலி'' எனக் கூறி ஆரவாரம் செய்யும் ஓசை மற்றொரு புறத்தில் கேட்கும்.
கொடிச்சியர் பாட்டு:-
''கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென''
அதனை ஆற்றுவதற்காக அருகில் இருந்து அறல் போன்ற கூந்தலையுடைய கொடிச்சியர் பாடுகின்ற பாடல் ஒலி கேட்கும். அடுத்துக் கேட்கும் இரண்டு ஓசைகள் துன்பமயமானவை. அவற்றில் ஒன்று ஓர் ஆண்யானையும் அதன் சுற்றமும் இடியோசை போல் கதறும் ஓசை.
பிடியின் பிளிரல்:-
கன்றை வயிற்றில் சுமக்கும் பெண் யானையை ஓரிடத்தில் ஓய்வுக்காகத் தங்கவிட்டு ஆண்யானை உணவு தேடி வர பெண் யானையைப் பிரிந்து செல்லும். அந்த நேரத்திற்காக மறைந்து காத்திருந்த புலி பெண் யானை மீது பாயும். அஞ்சிய பிடியோ இடி போன்ற குரலெடுத்துத் தன் சுற்றத்தையெல்லாம் கூப்பிடுவது போல் அலரும் ஓசையும், அது கண்ட ஆண் யானை தன் சுற்றத்துடன் கலங்கி எழுப்பும் ஓசையும் அம்மலைப் பக்கத்தில் எதிரொலிக்கின்றன.
குரங்குகளின் ஆரவாரம்:-
கரிய விரல்களை உடைய மந்தி தாவுகின்ற பொழுது தன் குட்டியைத் தழுவிப் பிடித்துக் கொள்ள மறந்ததாலும், தாயை இறுகப் பற்றிக்கொள்ளப் பழகாத காரணத்தால் குட்டி தவறி மலை இடுக்கில் கீழே ஆழ்ந்த மலைப் பிளவிலே விழுந்து மாண்டுவிட்டதால் தாய்க்குரங்கு தன் சுற்றத்தோடு கூச்சலிட்டு அழுகின்றது. இத்துன்ப ஒலிகளோடு அவ்வப்போது சில இன்ப ஒலிகளும் கேட்ட வண்ணமிருக்கும்.
தேனெடுக்கும் கானவர் மகிழ்ச்சி ஆரவாரம்:-
மேல் + தாவி மேதாவி என்று குறும்போடு போற்றப்படும் முசுக்கலைகூட ஏற முடியாத மலையுச்சியில் கானவர்கள் கண்ணேணி வழியாக ஏறிச் சென்று தேனீக்கள் திரட்டி வைத்த தேனை எடுத்துக் கொண்டு தேனடைகளை அழித்து மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்யும் கானவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் கேட்கும்.
அடுத்து குறுநில மன்னர்களின் காவல்களை அழித்த கானவர்களின் ஆனந்த களிப்போசையும் கேட்கும்.
குரவைக் கூத்தின் ஆரவாரம்:-
மன்னனுக்குப் பரிசு கொடுக்கப் புதியப் பொருட்கள் பல கிடைத்தன என மகிழ்ச்சியுற்ற குறவர் விடியற்காலையிலேயே கள்ளுண்டு தம் பெண்களுடன் குரவைக் கூத்து ஆடுவர். அக்குரவை ஒலியும் கேட்கும்.
ஆறுகளின் எதிரொலி:-
''நல்எழில் நெடுந்தேர் இயவு வந்தன்ன
கல்யாறு ஒலிக்கும் விடர்முழங்கு இரங்குஇசை''
கற்பாறைகளின் மீது காட்டாறு பாய்ந்தோடும் ஒலி அழகான தேர் ஒன்று ஓடும்போது எழும் ஓசையைப் போல ஆற்று வெள்ளம் மலைப் பிளவுகளில் விழும் ஓசையும் இடையிடையே கேட்ட வண்ணமிருக்கும். அவ்வொலி குகைகளில் எதிரொலிக்கும் ஓசையும் கேட்கும்.
யானையைப் பழக்கும் ஓசை:-
காட்டாற்றின் நீர்ச் சுழியில் சிக்கிக் கொண்ட யானையின் சினம் தணித்து, கட்டுத்தறியில் கட்ட பாகர்கள் பேசும் யானை மொழியும், வடசொல் கலந்த தமிழில் அதனை ஏவல் செய்யப் பழக்கும், விரவு மொழி பயிற்றும் பாகம் ஓசையும், தினைப்புனங்கள் தோறும் பெண்கள் காவல் நிற்பர்; பெருங்குரலெடுத்துக் கூவியும் கிளிகளை விரட்டுவர். மூங்கிலால் செய்யப்பட்ட ஒலி எழுப்பக்கூடிய ''தட்டை'' என்ற கருவியின் இசை எழுப்பி விரட்டும், கிளிகடி மகளிர் விளி படு பூசல் சத்தமும் கேட்கும்.
ஏறுகளின் போரொலி:-
தம் இனத்தைப் பிரிந்து வந்த திமில் அசையக் காட்சித் தரும் முல்லைநில ஆனேறும் மலையில் இருந்து வந்த காட்டுப் பசுவின் காளையும் ஒன்றையொன்று வலிமையாகத் தாக்க கோவலரும் குறவரும் ஆரவாரிக்கும் ஓசையும், காட்டுமல்லிகையும் குறிஞ்சி மலரும் வாடுமாறு ஏறுகள் போரிடும் இடங்களில் ''கலீர்'' என மக்கள் எழுப்பும் ஓசையும் கேட்கும்.
பலாச்சுளைகளில் இருந்து கொட்டைகளை எடுப்பதற்காகச் சிறுவர்கள் காந்தள் மடலால் கன்றுகளை அடித்து ஓட்டும் ஒலியும், கரும்பாலையிலிருந்து வெளிப்படும் ஓசையும், திணையைக் குற்றியபடி மகளிர் பாடும் வள்ளைப் பாட்டின் ஓசையும் தொடர்ந்து கேட்கும்.
சேம்பு மஞ்சள் ஆகியவற்றைக் காவல் காப்போர் பன்றிகளை விரட்டுவதற்காக அடிக்கும் ''பன்றிப்பறை''யின் ஒலியும், இவ்வொலிகளெல்லாம் சேர்ந்து மலையில் எதிரொலித்ததால் எழும் எதிரொலியும் நவிர மலையில், தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கும் என்கிறார்.
இவ்வெல்லா ஓசைகளும் திரண்டு தாழ்வரையில் எழுவனவும், உச்சிமலையில் எழுவனவுமாகிய பிற ஆரவாரங்களும் நெருங்கி எல்லா ஓசைகளும் ஒன்றுபடுவதால் எதெது என்னென்ன ஓசை என இனங்காணவே முடியவில்லை என்கிறார் புலவர். இந்நிலையை மலையே முழங்குவதாக ஒரு மலைப்பு ஏற்பட்டதால் மலையே யானையாகி, அதுவே பிளிறுவது போல் இம்மலையொலி புலவர் காதுகளில் ஒலிப்பதால்,
''என்றுஇவ் வனைத்தும் இயைந்து ஒருங்குஈண்டி
அவலவும் மிசையவும் துவன்றிப் பலவுடன்
அலகைத் தவிர்த்த எண்ணமும் திறத்த
மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப''
என்று பாடலாக்குகிறார் புலவர்.
மலைபடுகடாம் என்பது மலை தரும் ஒலி என்றும் மலையை யானையாக உருவகித்து அதன்கண் பிறந்த ஓசையை ஆகுபெயரால் ''கடாம்'' என்று கூறுகிறார். கடாம் என்னும் சொல்லை இயம்ப என்னும் வினையால் ஓசை என்று தெரிவிக்கிறார் புலவர். கடாம் என்ற சொல்லாலே முன்னின்ற மலையினை யானையாக உருவகித்தமையை உணரச் செய்தார்.
மலைக்கு யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்ததனால் இப்பாட்டிற்கு ''மலைபடுகடாஅம்'' என்று பெயர் கூறினார் என்று நச்சினார்க்கினியரும் உரை கூறுகிறார்.
இவ்விதமாக 292 முதல் 344 வரையிலான பாடல் வரிகளில் இன்னிசையும், பூசலும், ஆரவாரமும், பாடலும், அழுகையும் குரலும், குரவையும், உவகையும், ஓதையும், ஒத்தமும், பறையும் கம்பலையும், வள்ளையும் குன்றகச் சிலம்பும் ஒழிந்தனவும் எனப் பலதிறப்பட்ட ஓசைகளைக் கூறுகிறார் புலவர்.
நன்றி:- ஆய்வுக்கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக