''மகாபாரதம்'' ஒரு கடல். பல கதைகளையும், கதைக்குள் கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது. ''பாரதம்'' எண்ணற்ற விமர்சனங்களுக்கும்; மறுவாசிப்புகளுக்கும் வழிவகுத்த நூல். மீண்டும் ஒருமுறை இலக்கிய நோக்கில் இந்தக் கதையை எஸ்.ரா. தனது பாணியில் சொல்லியிருப்பதே பெரிய விஷயம்தான்.
வில்லிபுத்தூரர் தமது பாரதத்திற்கு மூல நூலாக அகத்தியரின் ''பாவபாரதம்'' என்ற நூலைக் கொண்டார். உரைநடையில் மகாபாரதத்தை எழுதிய சித்பவானந்தன், ராஜாஜி, சோ போன்றவர்கள் வியாசபாரதத்தை மூல நூலாகக் கொண்டனர். சித்பவாலானந்தர் வியாசரின் பதினெட்டு பர்தவங்களைக்கொண்டு கதையைச் சுருக்கமாகத் தந்துள்ளார். ராஜாஜி தனது ''வியாசர் விருதில்'' நூற்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளாகப் பிரித்துப் பாரத நிகழ்ச்சிகளை விவரித்துள்ளார். அவருடைய கதை சொல்லல் பெரும்பாலும் உரையாடல் முறையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. ''18 பிரிவுகள், 98 பகுதிகள், 2382 அத்தியாயங்கள் அவற்றில் 96635 செய்யுட்கள், ஸ்லோகங்கள். இதுதான் நமது வசமிருக்கும் வியாஸபாரதம்'' என்று சோ கூறுகிறார். மகாபாரதத்தின் அமைப்பையும் மேலும் நுணுக்கமான விஷயங்களையும், கதாபாத்திரங்கள் பற்றித் தன்னுடன் கருத்துக்களையும் சோ தந்துள்ளார். எஸ்.ரா. வியாசரின் மூலக்கதையை மாற்றாமல் கதை சொல்லும் முறையில் சில மாற்றங்கள் செய்துள்ளார். கதையின் ஆரம்பம், நடு, இறுதி பகுதிகளில் அதிகம் மாற்றங்கள் இல்லை. ஆனால் இடையில் ''நகரங்களின் உரையாடல்; கதா புருஷர்கள்; கதா ஸ்தீரிகள் என்று புதிய பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளார்.
பாண்டவர்கள் நல்லவர்கள். கௌரவர்கள் கெட்டவர்கள் என்ற வழக்கமான நிலைப்பாட்டிலிருந்து எஸ்.ரா. மாறவில்லை. பாண்டவர்களில் குந்தியின் புத்திரர்களுக்கும் மாதுரியின் புத்திரர்களுக்கும் மனவேறுபாடு இருந்தது. இதுபோன்று இன்னும் சில விஷயங்களைக் கூறுகிறார். மாதுரி பாண்டு மூலம் குழந்தை பெற்று அக்குழந்தையை அரசனாக்க வேண்டும் என்று எண்ணியே பாண்டுவுடன் கூடினாள். பாண்டவர்கள் சல்லியனைத் தளபதி ஆக்காததற்குக் குந்தியே காரணம். இவைகள் எல்லாம் வியாசபாரதத்தில் உள்ளனவா என்று தெரியவில்லை.
சோ, சித்பவானந்தர் போன்று வெளிப்படையாகத் தனது கருத்துக்களை எஸ்.ரா. வைக்கவில்லை. ஆனால் சில நிகழ்வுகளைச் சீட்டாட்டத்தில் சீட்டுக்களை அடுக்குவதுபோல் அடுத்தடுத்துக் கூறியுள்ளார். ''உதிரவாசிகள்'' என்ற பகுதியில் நான்கு நிகழ்வுகளை வர்ணித்துள்ளார். முதல் நிகழ்வு யாயதி தனது மகன் புருஷனிடமிருந்து இளமையைப் பெற்று மோகத்தில் மூழ்குவதாகும். தனது தந்தை சந்தனுவின் இச்சையைப் பூர்த்திசெய்ய, பீஷ்மர் தன் பதவியைத் தியாகம் செய்து சத்யவதியை அழைத்து வருவது அடுத்த நிகழ்வாகும். மாதிரியை மோகம் கொண்டு தன் தந்தை பாண்டு பின்பற்றச் செல்வதையும், இதனால் தந்தையின் மரணம் சம்பவிக்கும் என்பதால் தடுக்க முற்பட்டு யுதிர்ஷ்டிரன் முடியாமல் மௌனமாக நிற்கிறான். நான்காவது நிகழ்வில் தனது சகோதரனின் மனைவியுடன் உறவு கொள்ள முயலும்போது அவள் வயிற்றில் உள்ள சிசு அவனை எச்சரிக்கிறது. அவன் சாபத்தால் அந்த சிசு குருடாகப் பிறக்கிறது. நான்கு நிகழ்வுகளில் தந்தையின் மோகத்தைப் பூர்த்தி செய்ய மகன் உதவுவதாகவோ அல்லது எதிர்ப்பதாகவோ உள்ளது. தந்தையின் மோகத்தில் பிறந்த மகன் மறுபடி அந்த மோகத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதுபோன்று ''மூன்று கனவுகள்'' என்ற பகுதியில் ஒரு நிகழ்வு அடுக்கு உள்ளது. படகில் சென்ற குந்தி ஐந்து குழந்தைகளுடன் மூழ்குவது போலக் கனவு கண்டு திடுக்கிட்டு விழிக்கிறாள். கிருஷ்ணன் காட்டுப் பகுதியில் கௌரவர்களை நரி உண்பது போலவும், காந்தாரி சகுனியிடம் முறையிடுவது போலவும் சகுனி கனவு காண்கிறான். இக்கனவுகள் தாய்மாமன்கள் தங்கள் மருமகன்கள் மேல் வைத்திருந்த பாசத்தைக் காட்டுகின்றன. பாரதக்கதை முழுக்க பங்காளிகளை நம்பாமல் தாய்மாமன்களின் ஆலோசனைப்படித்தானே இருசாரரும் நடக்கிறார்கள். இன்றைக்கும் கதை மாறியதாகத் தெரியவில்லை.
''உபபாண்டவம்'' நூலில் பல கதாபாத்திரங்கள் மனதில் நிற்கும்படிச் சித்திரிக்கப்படவில்லை. எஸ்.ரா.வின் மொழி சில இடங்களில் கவித்வமாக உள்ளது. உதாரணமாக மாதிரி பற்றிய வர்ணனையை எடுத்துக் கொள்ளலாம். ''காட்டு நெருப்பைப் போலிருந்தாள் மாதிரி. அவள் மத்ர நாட்டுப் பெண்களைப் போலவே தன் பூப்பின் காலத்தில் அடி எடுத்து வைத்தே இச்சைகளின் அரும்புகள் உடலில் மொக்கு விடுவதை அறிந்திருந்தாள்.''
எஸ்.ரா.வின் மொழிப்பற்றித் தேவிபாரதி ''பால்யவீதி'' என்ற சிறுகதைத் தொகுப்பின் விமர்சனத்தில் கூறியுள்ளார். ''தொன்மங்களின் மீதான மயக்கம் அவரது கதை மொழியைப் புதிர்களும், கனவுத் தன்மைகளும் நிரம்பிய ஒரு வெளியாக மாற்றுகிறது'' இதே கருத்து உபபாண்டவத்தின் மொழிக்கும் பொருந்தும். ஆனால் இந்த மொழியில் எளிமை மிகக் குறைவு என்பதை நிறையாகவும் குறையாகவும் கொள்ளலாம்.
இந்தியில் நந்த கிஷோர் ஆச்சார்யா மகாபாரதத்தில் நியோகம், யயாதி கதை ஆகிய இரண்டையும் இரு நாடகங்களாக எழுதி ''மகாபாரதத்தில் பெண்ணியம்'' என்ற தலைப்பில் தமிழில் வந்துள்ளது. இந்நாடகங்களில் பாலியல், உளவியல், உடலியல் ரீதியாகப் பல விஷயங்களை முன்வைக்கிறார். இதேபோல் கர்ணன் பற்றி இந்தியில் நாடகமும், சாம்பன் பற்றி லங்கத்தில் நாவலும் வித்யாசமான, ஆழமான சிந்தனைகள் கொண்டு வந்துள்ளன. எஸ்.ரா. இதுபோன்று புதிய சிந்தனைகளையோ, அழுத்தமான கருத்துகளையோ வெளியிட்டிருக்கலாம். ஆனால் எஸ்.ரா. கதை சொல்லும் முறை பற்றி முருகேச பாண்டியன் கூறியிருப்பது உண்மையே. ''உபபாண்டவம் இருபத்தோராம் நூற்றாண்டில் மகாபாரதம் என்று சொல்ல இடமிருப்பது எஸ்.ரா.வின் கதை சொல்லுக்குக் கிடைத்த வெற்றியாகும்'' மகாபாரதக் கதையாக (கதைகளை) முழுமையாக உள்வாங்கி அக்கதையை முன்னும்பின்னும் நகர்த்தி நிதானமாக, சுவாரஸ்யமாக கதை சொல்வதில் ''உபபாண்டவம்'' தனித்து நிற்கிறது.
நன்றி: ஆய்வுக்கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக