23/06/2010

கண்ணன் குழல் - புதுமைப்பித்தன்

ஞாயிற்றுக்கிழமை காலை.

சென்னை எழுந்துவிட்டது. அந்தப் பரபரப்பு, வேகம், அவசரம், ஆவேசம், போட்டி - அவைகளும் எழுந்துவிட்டன.

அதில் நானும் ஒருவன் தான். நூற்றில் இன்னொன்று. அந்த நாகரிக கதியின் வேகம் என்னையும் இழுத்துக்கொண்டுதான் போகிறது.

காலை.

ட்ராமின் படபடப்பு, மோட்டாரின் ஓலம்.

பந்தயக் குறிப்புடன் பத்திரிகையின் விளம்பரக் கூப்பாடு.

அங்கே.

எத்தனை பேர் ஓடுகிறார்கள்? என்ன அவசரம்!

அங்கே ஒரு பரத்தை.

அவள் பிச்சைக்காரி; இது என்ன ஏமாற்றமோ?

நொண்டிப் பிச்சைக்காரன். நல்ல வியாபாரம்.

நொண்டி கால் இல்லாவிட்டால் மனித உணர்ச்சியில் பேரம் செய்ய முடியுமா?

அதைவிட இந்த குமாஸ்தா எதில் உயர்ந்தவர்? அவன் அங்கமெல்லாம் ஒடிக்கப்பட்ட முடவன். அதற்கு மேல் அவனுக்கு இருக்கும் சுமை - அதிலே அவனுக்குக் கிடைக்கும் 30 ரூபாய், தானம் தான். இந்தச் செல்வத்தில் தனது சட்டை ஓட்டையை மறைத்துக்கொள்ள வேண்டிய கௌரவம்; அதைச் சமூகம் எதிர்பார்க்கிறது.

மறுபடியும் ட்ராமின் கணகணப்பு, மோட்டாரின் ஓலம், நாகரீகமும் அதன் சாயையும்.

வெள்ளையில் கருப்புப் புள்ளிகள்.

என் மனதிலே ஏதோ காரணமில்லாத துயரம் சோகம். ஏன்?

நானும் அந்த மனித மிருகம்தானே. ஒரு மூலை திரும்பினேன். ஒரு புல்லாங்குழல் ஓசை, அதன் இசையிலே, அதன் குரலிலே ஒரு சோகம்... எல்லையற்ற துன்பம்.

அவனும் ஒரு பிச்சைக்காரன் தான். அழுக்குப் பிடித்த உடல், உடலைக் காண்பிக்கும் உடை, சிறு மூட்டை, தகரக் குவளை.

ஒரு படிக்கட்டிலே உட்கார்ந்து குழலிலே லயித்திருக்கிறான். பிச்சைக்காகவல்ல. எதிரே இரண்டு மூன்று குழந்தைகள். அவனைப் போன்றவை, ஆனால் அவனுடையதல்ல.

அந்தக் குழலின் துன்பத்திலே லயித்துத்தான் நானும் நின்றேன்.

கதவு திறந்தது.

ஒரு பூட்ஸ் கால், 'போ வெளியே!' என்று உதை கொடுக்கிறது.

'படார்'

கதவு சாத்தியாகிவிட்டது.

இவனும் உருண்டான். குழலும் விழுந்து கீறியது.

மறுபடியும் மோட்டாரின் ஓலம்!

"என்ன சாக வேண்டும் என்ற ஆசையா?" என்ற கூப்பாடு.

நானும் விலகினேன்.

உயிரை விட எனக்கும் ஆசையில்லை.

மற்றவர்களுக்கில்லாத அக்கறை எனக்கென்ன?

கோழை! சீச்சீ...

(காந்தி, 05-09-1934)

கருத்துகள் இல்லை: