24/06/2010

தமிழனின் தனிப்பண்பு

"முன்பு மாநிலம் ஆண்ட தமிழர் மீண்டும் அரசாளும் நாள் வருமா?'' எனக் கேட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், "தமிழர் அரசு வரும்' என்று தித்திப்பான சேதியைக் கூறினார்.
தமிழர்கள் தங்கள் அரசைப் பெற்றிருக்கிறார்களா? என்பது விரிவாக விவாதிக்க வேண்டிய பொருள். ஆனால் ஒன்றை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும்; தமிழர்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழனின் பண்பு- யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பது அல்ல; யாரையும் தாழ்த்துவது அல்ல.
தமிழகம் உலகின் ஒரு பகுதியாக இருக்கலாம் ஆனால் அது யாருடைய வேட்டைக் காடாகவும் இருந்திட ஒருநாளும் ஒருப்பட மாட்டேன்!
முன்பிருந்த மன்னர்கள் அலை கடலை வென்றார்கள். நம்முடைய வணிகர்கள் நாவாய்களில் (கப்பல்களில்) ஏறிக்கொண்டு, மாரீஸ் தீவுக்கும், பிஜித் தீவுக்கும், மடகாஸ்கருக்கும் சென்று தமிழ் மணம் பரப்பினர் என்று இப்போது ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் இந்தச் செய்தியை நமது பழம்பெரும் இலக்கியங்கள் வெகுநாள்களுக்கு முன்பே கூறியிருக்கின்றன.
தாரணி மெச்ச வாழ்ந்தோம் ஒருநாள்!
தாரணியிலிருந்து யார்- என்ன-
கொடுப்பார்கள் என்று ஏங்குகிறோம் இன்று!
ஞாயிறாகத் திகழ்ந்தோம் அன்று;
இருட்குகையில் சிக்கித் தவிக்கிறோம் இன்று!
அதற்காக "அந்த ஞாயிறு மறைந்துவிட்டது
என்று பொருள் அல்ல'
நமது கண் கொஞ்சும் மங்கலாகிவிட்டது;
பழுதாகிவிட்டது- என்று கூடக் கூறமாட்டேன்.
மங்கலாகிவிட்ட கண்களைக் கொஞ்சும்
துடைத்துவிட்டுக் கொண்டு பார்த்தால்
ஞாயிறு தெரியும்.
நாமும் ஏறிட்டுப் பார்த்து,
நெஞ்சு நிமிர்த்தி-
"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'
என்று இளங்கோவடிகளைப் போலப் பாடிடலாம்!
தயங்காதே!தமிழா!
மயங்காதே தமிழா!
தமிழகம் இன்று தனது இயல்பான மாண்புகளை மறந்து துயில் கொள்கிறது என்று கூற மாட்டேன்; மயங்கிக் கிடக்கிறது என்று கூற மாட்டேன். ஆனால் தயக்கம் இருக்கிறது என்று தான் கூறுவேன்.
"நம்மால் முடியுமா? என்ற தயக்கம் நமக்கு இருக்கிறது.சேரன் வடநாட்டின் மீது படையெடுத்துச் சென்ற போது நம்மால் முடியுமா?' என்று அவன் தயங்கவில்லை.
சோழன் நாவாய்களைச் செலுத்தி அலைகடலுக்கு அப்பால் உள்ள நாடுகள் வென்ற போது "நம்மால் முடியுமா?' என்று அவன் தயங்கவில்லை.
காட்டுப்புறத்தில் தினை பொறுக்கச் சென்ற தமிழ்ச் சீமாட்டி யொருத்தி மீது புலி பாய்ந்து வந்தபோது "நம்மால் முடியுமா? என்று எண்ணி அந்தப் புலி வெட்கத்தால் ஒடியிருக்கும் என்றே கருதுகிறேன்.
அன்று தமிழ்ப் பெண்கள் புலியை முறத்தால் அடித்துத் துரத்தினர். இன்றும் தமிழ்ப் பெண்கள் நமது பகையை முறத்தால் அடித்த விரட்டத் தயார் எனினும் அந்த முறம் கிடைத்தால் அதை எங்கு விலைக்கு விற்றுக் காசாக்கலாம் எனக் கருதுகிற மனம்தான் நமக்குப் பகை
முதலில் நமக்கு இருக்கிற தயக்கத்தைப் போக்கும்
மாநாடுதான் இந்தப் பூம்புகார் மாநாடு!
"தயங்காதே தமிழா! என்று அடிப்படைப் பாடத்தைத் தருகிற மாநாடு இது!
அந்தப் பாடத்தோடு , "மயங்காதே, தமிழா!
என்ற பாடத்தையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்
மயக்கம் ஏனென்றால் பத்து நாள்களாக நாம் தமிழின் பெருமை கேட்டு அந்த மயக்கத்தில் இருக்கிறோம். ஆனால் இந்த மயக்கம் கெடுதல் செய்யாத மயக்கம்! தமிழன் ஒருவன் தான் இவ்விதம் கெடுதல் தராத மயக்கத்தை -மொழிதரும் இன்பத்தால் மயக்கத்தைப் பெறுபவன்.
அந்த மயக்கத்திலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும் ஏனெனில் வேலை இருக்கிறது. நிரம்ப! வேலை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும்! வேலை இருக்கிறது ஒவ்வொரு நாளும் !

கருத்துகள் இல்லை: