24/06/2010

ஆதிசிவனால் அருளப்பட்டு அகத்தியரால் வளர்க்கப்பட்ட மொழி - ஆர். வெங்கட்ராமன்

தமிழ்மொழி உலகிலேயே தொன்மையான மொழி. அதன் காலத்தைக் கண்டறிந்தார் எவரும் இலர். ""கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி'' என்று பாராட்டப்படுவது.

பலபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் "லெமூரியா' என்ற கண்டம் தமிழகத்துடன் தென்பகுதியில் நிலவியிருந்தது எனவும், அது கடலால் கொள்ளப்பட்டுவிட்டது எனவும், இமயம் அதன் பின்பே தோன்றியது எனவும் புவி இயல் ஆராய்ச்சியாளர் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். இதனைப் பலமுறை கடலால் அழிக்கப்பட்ட குமரிக்கண்டம் என ஏற்பதற்குச் சான்றுகள் பல உள.தமிழ்மொழி ஆதிசிவனால் அருளப்பட்டு அகத்தியரால் வளர்க்கப்பட்டது என்பது பாரதியார் வாக்கு.

""வடமொழியைப் பாணினிக்கு வகுத்து அருளி அதற்கு இணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுது ஏத்தும் குடமுனிக்கு வகுத்துஅளித்தார் கொல் ஏற்றுப் பாகர் எனில் கடல்வரைப்பில் அதன்பெருமை யாவரே கணித்து அறிவார்''என்று காஞ்சிப் புராணத்தில் கூறியுள்ளது, தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றது. இலக்கியம், இசை, நாடகம், கணிதம், வைத்தியம் என்ற எண்ணற்ற துறைகளிலும் தமிழ்மொழி உலகுக்கு முன்னோடியாக இருந்துள்ளது. அதன் இனிமையும், எளிமையும், ஆழ்ந்த சிந்தனைகளும் உள்ளம் கவர்கொள்வன. ""யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்'' என்ற புலமை வாக்குப் பொய்யாகாது.

தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழ்ப்பண்பாடு அனைத்தும் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவியிருந்ததென்பது உலகறிந்த உண்மை. ""திரைகடல் ஒடியும் திரவியம் தேடு''வது தமிழர் பண்பு அதே வழியில் இன்று தமிழர்கள் இல்லாத நாடுகள் இல்லையென்றே சொல்லாம்.

எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் எழுதிய வாழ்த்துரை.

கருத்துகள் இல்லை: