23/06/2010

வழி - எஸ்.ராமகிருஷ்ணன்

வக்கீல் குமாஸ்தா விருத்தாசலம்பிள்ளை என்றைக்கும் போல விடிகாலை ஐந்துமணிக்கு எழுந்து கொண்டார். நட்சத்திரங்கள் மறையாத வானம் ஜன்னலில் தெரிந்தது. சைக்கிளை அடுப்படி சந்தில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். சோப் டப்பாவும் வலைதுண்டுமாக நந்தவனத்துக்கு குளிக்கப் புறப்பட்டபோது தெரு தூக்கத்தில் மூழ்கியிருந்தது. முப்பதுவருடத் தினப்பழக்கம் இது. சைக்கிள் அவர் யோசனைக்கு இடம் தந்தபடி தானே போய்க்கொண்டிருந்தது. காலையில் கோர்டுக்கு வரப்போகும் சிங்கிகுளம் கொலைகேஸ் பற்றி யோசித்தார்.

ஒரு தெரு தாண்டும் முன்பு அது கலைந்து மூத்தவளுக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றிய யோசனையாக உருமாறியது. இருள் பம்மிய வீதியில் சைக்கிள் சென்றபடியிருந்தது. எல்லா வீடுகளும், தெருவும் மனிதர்களும் பார்த்து பழகின தொல்பொருள்களாகவே அவருக்குத் தெரிந்தன. மனது வாயு தொல்லைக்குரிய மருந்து, வீட்டு வாடகை, வரப்போகும் அம்மன் கொடை என உருமாறி சுழன்று கொண்டே வந்தது. கல் பரவின தெருக்களில் சைக்கிள் போகும்போது நாய்கள் விழித்துக்கொண்டன. கடலைக்காரத் தெருவைக் கடந்து வலப்பக்கமாக திரும்பினார். நீண்ட தானாக்கார வீதி தெரிந்தது. குளிர்கால இரவென்பதால் ஜன்னல் மூடப்பட்ட வீடுகள் ஈரமேறியிருந்தன. தானாக்கார தெருவை கடக்கும் முன்பே அடுத்தது வாடியான் தெரு, அடுத்து ஒரே சந்து, பிறகு நந்தவனம் என மனம் முந்தியது. சைக்கிள் வாடியான் தெருவுக்குள் நுழைந்தது. மிகக்குறுகலான தெரு. அதன் முதல் வீடாகயிருந்தது பச்சைப் பெயிண்ட் அடித்த வீயெஸ்வி வீடு. தாண்டினால் வரிசையாக இருப்புறமும் வீடுகள். யோசித்தபடியே பரிச்சயமான அத்தெருவினுள் போய்க்கொண்டிருந்தார். தெருவின் கடைசி வீடு காரையார் வீடு. கம்பியிட்ட திண்ணையும் ஆறுபடிகளும் கொண்டது. வலப்புறமாகத் திரும்பினால் சுப்பையாக்கோனார் சந்து. அதன் முடிவில் திலாக்கிணறு உள்ள நந்தவனமிருந்தது. சைக்கிளில் காரையார் வீட்டை கடக்கும்போது பார்த்தார். விடிவெள்ளி எரிந்து கொண்டிருந்தது. எதையோ யோசித்தபடி வலப்பக்கம் சைக்கிளை திருப்பி மிதித்தார். சைக்கிள் வீயெஸ்வி வீட்டை கடந்து சென்றது. ஒரு நிமிஷ நேரம் திகைத்தவராக சைக்கிளை மெதுவாக ஓட்டினார். சைக்கிள் வாடியான் தெருவுக்குள்தான் போய்க்கொண்டிருந்தது. இப்போதுதான் இதைக்கடந்து போனோம் எனத் தோணியது. ஒரு வேளை கடந்து போகவில்லையோ, எதோ யோசனைதான் கடந்ததாக நினைக்கச்செய்துவிட்டதோ என சுயசமாதானம் கொண்டவராக காரையார் வீட்டைக் கடந்தபோது அதே விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. வலப்பக்கம் சைக்கிளை திருப்பி ஓட்ட வீயெஸ்வி வீட்டு முன்பு திரும்பி ஊர்ந்தது. வாடியாள் தெரு தாண்டினால் சுப்பையா கோனார் சந்தல்லவா வர வேண்டும் ? இது எப்படி வாடியான் தெருவே திரும்பவும் வருகிறது. ஒரு வேளை தான் இன்னமும் தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருக்கிறோமா ? இது கனவில்லை; விழித்துக்கொண்டுதானே இருக்கிறோம் என்று புரியும் போது பாதி தெரு வந்துவிட்டது. சைக்கிளை நிறுத்தி இறங்கி பின்னாடி பார்த்தார். வீயெஸ்வி வீட்டு வாழைமரம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. இது ஏதோ மனப்பிரமைதான் என்றபடி திரும்பவும் சைக்கிளை மிதித்தார். கடைசிவீட்டு விடிவிளக்குவரை வந்துவிட்ட்டு தயங்கியபடி வலப்பக்கம் திரும்பினார். நினைத்தபடி அது வீயெஸ்வி வீட்டு வாசலைக்கடந்தது. விருத்தாசலம் பிள்ளைக்கு எதுவுமே புரியவில்லை. இது எப்படி சாத்தியம் ? தெரு மூடிக்கொண்டு விட்டதா என்ன ? தெருவின் முதல் வீடும், கடைசிவீடும் எப்படி அடுத்தடுத்த வீடாகயிருக்கும் ? திகைப்பும் பயமும் கவ்வ சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்தார். தெரு தன்னைப் பூட்டிக்கொண்டுவிட்டதா ? அப்படியும் சாத்தியமா, இது நிஜமானால் இதில் இருந்து வெளியேறவே முடியாதா ? யோசிக்க யோசிக்க பயம் பூரான் போல ஆயிரம் கால்களால் ஊர்ந்து உடலெங்கும் ஏறியது. வேஷ்டியை இருக்கிக் கட்டிக்கொண்டு மூடிய வீடுகளைப் பார்த்தார். எல்லா கதவும் உறைந்திருந்தன. ஒரு வீட்டிற்கும் மறுவீட்டிற்கும் இடைவெளியேயில்லை. தப்பிக்க முடியாத பொறியில் அகப்பட்டுக் கொண்டுவிட்டதாகத் தோன்றியது உடலை நடுக்கமடையச் செய்தது. துருவெறிய ஜன்னல் கம்பிகள், இருண்ட வானம் எல்லாமும் பீதி கொள்ள செய்தன. சைக்கிளை உருட்டிக்கொண்டு காரையார் வீடுவரை வந்தார். வலப்பக்கம் இருள் படர்ந்திருந்தது. மிக மெதுவாகத் திரும்பினார். அதே வீயெஸ்வி வீடு. பயம் முற்றாக அவரைப் பற்றிக்கொண்டது. மனைவி, மக்கள், கடன், கோர்ட், சிங்கிக்குளம்கொலைகேஸ், என எண்ணம் குடை ராட்டினம் போல சுழன்று அதிவேகமாகியது. தனக்குத் துளியும் பரிச்சயமில்லாத தெரு போல தென்பட்டது. யாராவது வீட்டின் கதவைத் திறந்து வெளிப்படமாட்டார்களா எனக் காத்துக்கொண்டிருந்தார். எவரும் கதவு திறக்கவில்லை. தான் ஒரு வேளை அதிகாலை என நினைத்துக் கொண்டு நள்ளிரவில் புறப்பட்டு வந்து விட்டோமா, வீட்டுக் கடிகாரம் காட்டிய நேரம் சரியானதுதானா ? யோசிக்க யோசிக்க குழம்புகிறது. மனதைத் தேற்றிக்கொண்டபடி சைக்கிளை நிறுத்திவிட்டு ஓடிவிடலாமா என எண்ணம் வந்தது. அதுதான் சரியான வழி, சைக்கிளை பூட்டி நிறுத்தினார். ஆகாசத்தை ஏறிட்டுப் பார்த்தார். ஒரு நட்சத்திரம் கூட இல்லை. ஒளிந்து கொண்டு விட்டனவா ? கண்ணை மூடிக்கொண்டு ஓடுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றபடி தெரு அதிர ஓடத் துவங்கினார். நினைத்ததுபோல ஓடுவது எளிதாகயிருக்கவில்லை. உடம்பு அதிர்ந்து மூச்சு வாங்கியது. கரையார் வீடு திரும்பும்போது கண்ணை மூடிக்கொண்டு இருளில் புகுந்து ஓடினார். பெருமூச்சுடன் நின்று கண் திறந்த போது அது வாடியான் தெருவாகவேயிருந்தது. ஆத்திரமும் பயமும் கொண்டவராக தனியே உரக்க தெருவின் பிறப்பை கொச்சைப்படுத்தி வசையிட்டார். நிசப்தம் தெருவை அடர்ந்து ததும்பியது. செய்வதென்ன புரியாமல் தரையில் உட்கார்ந்தார். வீடுகளுக்குள் உறங்கும் மனிதர்கள் மீது கோபம் திரும்பியது. அவர்களையும் வசைத்தார். யார் வீட்டு கடிகார ஒலியோ கேட்டுக்கொண்டிருந்தது. கதவைத் தட்டி யாரையாவது எழுப்பி உதவி கேட்டால் ? நினைத்தவுடனே என்ன சொல்லி உதவி கேட்க என்ற யோசனையும் தோண மெளனமாகி கொண்டார். தன் வாழ்நாள் முடியப் போகிறதோ. ஸர்ப்பம் போல தெரு தன் வாலைத் தானே கவ்விக்கொண்டிருக்கிறதா. எழுந்து நடந்து தெருமுனைவரை சென்றார். சுப்பையாக் கோனார் சந்து புலப்படவில்லை. தெருவின் வட்டம் சுருங்கிக் கொண்டே வந்து நத்தைகூடு போல ஆகிவிடக்கூடுமோ, என்ன இழவு யோசனைகள் என விரல்களை இறூக்கிக்கொண்டார். பள்ளத்தை தாண்டி குதிப்பதுபோல இருளைத்தாண்டி குதித்தால் அடுத்த தெருவந்துவிடாதா. உடல்வலியுடன் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டார். வேகமாக இருளில் தாவிக்குதித்தார். எதன் மீதோ மோதி அவர் கீழே விழும் சப்தம் அதிர்ந்தது. வீழ்ந்த இடத்தில் கை ஊன்றி தலை தூக்கிப் பார்த்தார். காரையார் வீட்டில் லைட்டைப் போட்டுக்கொண்டு யாரோ கதவு திறக்கும் சப்தம் கேட்டது. ஒரு பெண் கதவைத் திறந்து கொண்டு வாடியான் தெருவில் இறங்கி, கையில் இருந்த குப்பைக்கூடையுடன் வலப்பக்கம் மெதுவாக திரும்பி இருளில் நடந்து அவர் வீழ்ந்து கிடந்த இடத்தருகே வந்து குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு அவரைப் பார்க்காது திரும்பிப் போனாள். அவர் உடனே தெருவை ஏறிட்டுப் பார்த்தார். அங்கே சுப்பையாக்கோனார் சந்து என்ற பெயர் தெரிந்தது.

**

கருத்துகள் இல்லை: