அரசியல் எல்லைகளையொட்டி பழங்காலத்தில் பல நாடுளாக பாரதம் பிரிந்து கிடந்த போதிலும், பூகோள அமைப்பின் காரணமாக வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை நீரோட்டமாக நிலவி வந்துள்ளது. இந்தியாவில் புண்ணிய நதிகளை உதாரமாகக் கொண்டு பூகோள ஒருமைப்பாட்டை கே.என்.பணிக்கர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். "கங்கே சயமூனேனசவா, கோதாவரி சரஸ்வதி, நர்மதே, சிந்து, காவேரி ஜலேஸ்மின் சன்னதி குரு'' என்ற ரிக்வேத வரிகளை ஆசிரியர் பணிக்கர் மேற்கோள் காட்டுகிறார். இந்த நதி நீராதாரங்களில் தான் மனித நாகரிகம் கருக்கொண்டது. அதில் வரலாற்று ரீதியாகப் பெருமையோடு பேசப்படுவது சிந்து வெளி நாகரிகம்.
சிந்து நதிப்பிரதேச நாகரிகம் பற்றி பல வரலாற்று ஆசிரியர்கள், இதுவே பாரத நாகரிகத்தின் தொட்டில் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வரலாறு மட்டுமல்லாது இன்னொரு சகோதர வரலாறும் உண்டு. இந்தச் சகோதரம் மூத்ததா, இளையதா என்று வழக்காடுவது நமது நோக்கமல்ல; உறவு உண்டு. அதுவே காவேரி நாகரிகத்தின் சிலப்பதிகார நாகரிகம்.
தமிழ் மொழியின் தலைக் காப்பியமாக, பல புதுமைகளை மேற்கொண்டு (இந்த புதுமைகளை விவரித்தால் பெருகும்) இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரம், ஒரு கதையைப் பின்னணியாகக் கொண்ட காவியமா அல்லது ஒரு இனத்தின் வரலாற்றை பேசும் சரித்திர நூல் என்ற பிரமிப்பு எற்படுவது இயற்கை.
இங்கு தெய்வங்களக மானுடத்தை ஒட்டி ஏற்றம் பெறுகிறது. ஒரு கணவன் மனைவி கதை. கணவன் கலை உணர்வும் இசைப் புலமையும் நிறைந்தவன். மனைவியின் குணாதிசயங்களோ, பாரம்பரியமாகத் தமிழ் நாட்டுக்கே உரிய குடும்பக் கவுரவங்களை ஒட்டியே அமைந்தது. இசையிலும், நடனக் கலையிலும் வல்ல ஒரு கலையரசியிடம் கணவன் மனம் சென்றுவிட்டது. விதி விளையாடியது. கணவன் கொல்லப்பட்டான். மதுரை மாநகர் பற்றி எரிந்தது. மனைவி தெய்வமானாள் சான்றோர்கள் பலர் அந்த தெய்வத்தை போற்றினார்கள். மூன்று காண்டங்கள், முப்பது காதைகள், காவியம் கம்பீரமாகத் தமிழிலக்கிய ஆசாரவாசலில் கோபுரமாக பல நுண்குண்டுகளாக உலகை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. இதற்குள் இருப்பது ஒரு சமுதாய வரலாறு. காவிரி வரலாறு. காவிரி நாகரிக வரலாறு. இது சிலப்பதிகார வரலாறு.
காவியங்களில் நாட்டுப்படலம் பாடுதல் ஒரு மரபு. நாட்டில் சிறந்து விளங்கும் பல்வேறு வளங்கள் இப்பகுதியில் விரிவாக பேசப்படும். சிலப்பதிகாரத்தில் இந்திர விழா ஊர் எடுத்த காதையில் சோழ வள நாட்டின் சிறப்பியல்புகள் பேசப்படுகின்றன. காவிரிப் பூம்பட்டினத்தின் இருபெரும் பகுதிகளான மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம், என்னும் பெரும் பிரிவுகளில் சோழ நாட்டு வணிகவளம், கட்டட அமைப்பு, தொழில்வளம் ஆகியவற்றுடன் அந்நாட்டில் நீதி தவறாத ஆட்சிக்கு ஆதாரமாக அமைந்துள்ள ஐவகை மன்றங்களின் சிறப்பு, ஒரு நாகரிக மக்களின் வரலாறு புதைந்து காணப்படுகிறது. நாளங்காடி அல்லங்காடி பெருமைகள் நாட்டின் வர்த்தக சிறப்பை காட்டுகின்றன.
சிந்து நதி நாகரிகம் பற்றி பேசும் வரலாற்று ஆசிரியர்கள், நகரமைப்புத் திட்டங்கள், வீதிகளின் அமைப்பு, கட்டுமானங்களில் பயன்படுத்தப்பட்ட சுட்ட செங்கற்கள், கழிவு நீர் வெளியேறுவதற்கான சுகாதார வசதிகள் பற்றி விரிவாக பேசுகின்றனர். சோழ நாட்டின் தலைநகர் காவிரிப் பூம்பட்டினத்தின் அமைப்பு, நகர் நிர்மாணக் கலையில் தமிழரது கூர்மையான திறமையை எடுத்துக்காட்டுகிறது. இப்பெருநகர் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஐதராபாத், செகந்திராபாத் நகரங்களை ட்வின்சிட்டி,ரெட்டை நகரம் என்பது போல், மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் இரண்டும் சேர்ந்து ட்வின் சிட்டி என்ற பெருமையைப் பெறுகின்றன.
மருவூர்ப் பாக்கம்:
சிலப்பதிகாரம் இந்திர விழா ஊர் எடுத்த காதையில் 33 வரிகளில் ஆசிரியர் இளங்கோவடிகள் மருவூர்ப் பாக்கத்தின் அமைப்பைக் கூறுகிறார்.
கடற்கரை ஓரக்குடியிறுப்புகள் பெரிதாகவும், கவர்ச்சியாகவும் கட்டப்பட்டுள்ளன. ஒரு பெரிய வணிகப்பகுதியாதலால், பாதுகாப்பு மட்டுமல்லாது, மானின் கண்கள் போன்ற துளைகளை அமைத்து நல்ல காற்றோட்டமுள்ளதாக இவை அமைந்துள்ளன. இங்கு யவனர்களுக்கான இருப்பிடங்களும் உண்டு. வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி யவனர் என்ற சொல் கிரேக்கர்களைக் குறிப்பதாகும். இரு நாட்டாரின் வர்த்தகப் பரிவர்த்தனைகள் தொடர்ச்சியாகத் தொய்வின்றி நடந்து வந்ததால், அவர்களுக்குக்காகவே ஒரு தனிப்பகுதி அமைந்திருந்தது என்பதை
"கயவாய் மருங்கிள் காண்போர் தடுக்கும்
பயன் அளவு அறியா யவனர் இருக்கையும்''
என்ற வரிகளால் அறிகிறோம். தற்காலத்தில் பன்னாட்டு வணிப உறவுகளை நிரந்தரப்படுத்திக் கொள்ள, சம்பந்தப்பட்டவர் தங்கள் அலுவலகங்களைப் பிற நாடுகளில் அமைத்து வருவதோடு, அரசுகளும் டிரேட் கவுன்சில்கள் அமைத்து வர்த்தக ஏற்பாடுகள் மேற்கொள்வதைக் காண்கிறோம். பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழர் இம்முறைறையை கையாண்டுள்ளதை மருவூர்பாக்கம் கிரேக்கப் பகுதி காட்டுகிறது.
எந்தெந்தப் பகுதியில் என்னென்ன பண்டங்கள் வாங்கலாம் என்பதையும், மக்கள் தாங்கள் தேவைகளுக்கு நாடவேண்டிய பகுதிகளையும் இந்த 33 வரிகள் தெளிவாகக் காட்டுகின்றன.
வண்ண வாசனைப் பொருட்கள் (காஸ்மெடிக்ஸ்) பட்டு, பருத்தி நூல் மற்றும் எலி மயிர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆடை வகைகள், உணவுப் பண்டங்கள் விற்கப்படும் பகுதி, நகை விற்பனைப் பகுதிகள் மட்டுமின்றி, உணவகங்கள் மற்றும் இப்போது நாம் காணும் "பாஸ்ட் புட்' பகுதிகள் (பிட்டு, அப்பம், மீன் உணவு முதலியன), ஒரு புறத்தும். சித்திரக்காரர்கள், பொம்மை செய்வோர், சிலை வடிப்போர், நுணுக்கமான கலை வேப்பாடுகளுடன் ஆபரணங்கள் செய்வோர் தையற்காரர்கள், தோல் பொருள் விற்போர் மற்றும் பிழையில்லாது ஒலி இசைகளையும் குற்றமின்றி இசைக்கும் யாழ், குழல் போன்ற கருவிகள் செய்வாரும் மருவூர்ப் பாக்கத்தை சோழப் பொருளாதார மையமாக வளர்த்து நின்றனர்.
பட்டினப்பாக்கம்:
ஒரு பேரரசின் இறையாண்மைப் பெருமை இப்பகுதியில் விரிவாகப் பேசப்படுகிறது. அகன்ற ராஜவீதிகள், செல்வந்தர்களின் மாளிகைகள், அரவர் தொழிலுக்கு ஏற்றவாறு தனித்தனி வீதிகள், கலைஞர்கள், இசைப்புலவர், சான்றோர்கள், குடியிறுப்புகள் எனப் பட்டினப்பாக்கத்தின் பெருமையை இளங்கோவடிகள் விரிவாகக் காட்டுகிறார். நாட்டின் பாதுகாப்புக் குறிப்புகளும் உண்டு.
எந்தவொரு நாட்டு அரசியலிலும் நீதித்துறைக்கு முக்கியத்துவம் உண்டு. ஒரு வழக்கை விசாரித்து நீதி வழங்க மூன்று அடிப்படைகளை தனது பெரிய புராணத்தில், தடுத்தாட்கொண்ட புராணத்தில், சேக்கிழார் எடுத்துக்காட்டுகிறார். 1. ஆட்சி(நடைமுறை) 2. ஆவணம்(இக்காலத்தில் இதுவே டாக்குமென்டரி எவிடென்ஸ்) 3. அயலார் காட்சி-ஐ விட்னெஸ் என மூன்று அடிப்படைகளும் இன்றியமையாதவை. இவற்றிலும் விசாரணையில் தவறுகள் நேர்ந்து தீர்ப்பில் தவறு ஏற்படக்கூடும். அதையே "ஹ்யூமன் எரர்' என்கிறோம். ஆனால், பழந்தமிழ் நாட்டில் நீதியில் கலங்கம் படிந்துவிடலாகாது என்பதில் ஆட்சியாளர்கள் இருந்தமையால் அந்தப் பொறுப்பை ஒரு தெய்வசக்தியிடம் விட்டுவிட்டனர்.
தீர்ப்பில் தவறு ஏற்பட்டு விடுமானால், சோழ நாட்டின் ஐவகை மன்றத்தில் ஒன்றான பாவை மன்றத்தில் தெரிந்துவிடும். அந்த பாவை பேசாது கண்ணீர் சிந்தும். தவறு திருத்தப்படும் சோழ நாட்டின் உச்ச நீதி மன்றத்தின் அமைப்பு இது.
"உனா நூல்கோடி ஒரு திறம் பற்றினும்,
நாவொடு நவிலாது, நவை நீர் உகுத்துப்
பாவை நின்றழும் பாவை மன்றமும்.''
இந்திய நிதிமன்றங்களில் குவிந்திருக்கும் வழக்குகள் முழுமையாக முடிவு பெற 320 ஆண்டுகளாகும் என்று அண்மையில் ஒரு சட்ட நிபுணர் சென்னையில் கூறினார். இந்தியாவுக்கு ஒரு பாவை மன்றம் மட்டுமல்ல, அன்றிருந்த சதுக்க பூதமும் உடனடித் தேவை.
பட்டினப் பாக்கம் நீதி மன்றத்துக்குச் சாட்சி கூற வருவோர் பொய்சாட்சி கூற முடியாது. கூறினால், அங்கு ஒரு சதுக்கத்தில் வாழும் பூதம் அவர்களைப் பிடித்து அறைந்து தின்றுவிடும். சோழ நாட்டின் ஜஸ்டிஸ் டெலிவரி சிஸ்டம் அப்பழுக்கற்ற ஒன்றாக விளங்கியது. இந்த சதுக்க பூத பாவை மன்றச் செய்திகள் கற்பனையாகவே இருப்பினும் அதன் பின்னணி மக்களில் ஒரு தார்மீக பயத்தை உண்டாக்கி, நீதி சரிந்து விடாதிருக்க உதவக்கூடும். காவியத்தின் பின் பகுதியில், கோவலன் சிறப்பியல்புகளை பேசும் நண்பன், ஒரு ஏழைத் தாயின் மகனைக் காப்பாற்ற அவனைக் கொல்ல வந்த சதுக்க பூதத்துக்குத் தன்னைத் தந்து அவனை விடுவிக்க பூதத்திடம் முறையிட்டதும், பூதம் மறுத்ததும், காவியத்தில் மதுரைக் காண்டத்தில் காண்கிறோம். இதே போன்று நோய் தீர்க்கும் இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம் போன்ற நீதி காக்கும் அமைப்பும் பட்டினப்பாக்கத்தில் இருந்தது.
மனித நாகரிகத்தின் வெளிப்பாடாக விளங்கும் புற அமைப்புகள் மட்டுமில்லாது, மனிதநேயப் பண்பாடுகளும் நிறைந்த முழுமையான நாகரிகத்தை, இளங்கோவடிகள் காவியத்தில் காட்டுகிறார். சோழ நாட்டில் குணவாயிற் கோட்டம் என்றும் ஆசிரமத்தில் யோக நிலையில் இருந்து அவர் இக் காவியத்தை பாடியிருக்க முடியாது. சோழ நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவர் நேரடியாகவே பயணம் செய்து திரட்டிய செய்தியாகவே இப்பகுதி அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தின் கட்டுமானத்தில் தனது கவித்துவத்தை மட்டுமே இளங்கோவடிகள் நம்பியிருக்கவில்லை. இந்தக் காவிரி நாகரிக வரலாற்றை எழுதுவதில், நவீன கால ஆராய்ச்சியாளர்கள் போலவே, நீண்ட பயணம் மேற்கொண்டு சேகரித்த, கண்கூடாக நேரில் கண்ட உண்மைகளுக்குக் காவிய, வரலாற்று வடிவம் தந்து புகார் காண்டத்தை இளங்கோவடிகள் படைத்திருக்கிறார். உழைப்பின் கடுமையை இவ்வரிகளில் காணலாம்.
1 கருத்து:
கங்கே ச யமுநே சைவ கோதாவரி
ஸரஸ்வதி - ரிக் வேதத்தில் இல்லை.
அது தனிப்பா. கும்பத்தில் நீரை நிரப்பி
அந்நதிகளை தியானிக்கும் விதமாக அமைந்துள்ளது
தேவ்
கருத்துரையிடுக