நகர நாகரிகம், மேட்டிமையின் அடையாளம் என்பவற்றில் ஒன்றாக இன்று நாடு முழுவதும் கற்காரை (கான்கிரீட்) வீடுகள் உருவாகி வருகின்றன. ‘தனி வீடு’ என்னும் உணர்வு ஒரு வெறியாக மாறி எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. உலக வங்கியின் வழியாகப் பன்னாட்டு மூலதனம் ‘குறைந்த வட்டி’ என்னும் தூண்டிலைப் போட்டு ‘வீடு கட்டக் கடன்’ என்னும் பெயரில் ஏழை நாடுகளைச் சுரண்டி வருகிறது.
காலனிய ஆட்சியின் தொடக்கப் பகுதியில் தமிழ்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் பனை, தென்னை, புல்வகைகள் வேய்ந்த கூரை வீடுகளில்தான் வாழ்ந்தனர். இவ்வீடுகளின் சுவர்கள் குடிசைகளாக இருந்தால் செங்கல் இல்லாத மண்சுவர்களாகவும், சற்றே பெரிய இரண்டு அறை வீடுகள் சுடப்படாத செங்கல் சுவர்களோடும், அதைவிடப் பெரிய வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவையாகவும் அமைந்திருந்தன. இந்தத் தொழில்நுட்பம் வெப்ப மண்டலப் பகுதியிலுள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இந்த வீடுகளைப் பற்றி நாம் சொல்லக்கூடிய ஒரே குறைபாடு அவை கழிவறை வசதி இல்லாதவை என்பதுதான். ‘கழிவறை’ என்ற கோட்பாடும் இடவசதியும் வெப்ப மண்டலப் பகுதியான தமிழ்நாட்டில் அக்காலத்தில் இல்லை. (எனவே மலம் அள்ளும் சாதியாரும் தமிழ்நாட்டில் தோன்றவில்லை).
‘வீடு’ என்ற சொல் தொழிற்களத்தில் இருந்து ‘விடுபட்டு’ நிற்கும் இடத்தைத்தான் முதலில் குறித்தது. ‘விடுதி’ என்னும் சொல்லும் அந்தப் பொருளில் வந்ததுதான். பிற்காலத்தில் மேலோர் மரபு ‘வீடு’ என்பது மண் உலகத்திலிருந்து விடுபட்டுச் சேர்கிற ‘துறக்கத்தை’ (சொர்க்கத்தை) குறிக்க வந்ததாகும். சங்க இலக்கியத்தில் ‘வீடு’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘மனை’ என்ற சொல்லே காணப்படுகிறது. ஒரு மனிதன் உண்டு, உறங்கி, இனப்பெருக்கம் செய்யும் இந்த இடத்துக்குரியவள் ‘மனைவி’ எனப்பட்டாள்.
மலை, காடு, வயல், புல்தரை, மணல்வெளி என நிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் தெய்வங்கள் உறைகின்றன. இவற்றை மனிதன் தொல்லை செய்யக்கூடாது. எனவே வீடு கட்டவிருக்கும் நிலத்தில் முளை அறைந்து, கயிறு கட்டி கயிற்றின் நிழல் வழியாகத் திசைகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். அந்தந்தத் திசையிலுள்ள தெய்வங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு வேண்டுவன செய்யவேண்டும். பின்னரே அந்த நிலத்தில் மனிதன் தனக்குரிய இருப்பாக வீடுகட்டத் தொடங்கவேண்டும் என்பது பழந்தமிழர் நம்பிக்கை.
‘‘நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டு
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து’’
என்கிறது நெடுநல்வாடை. மனைத் தெய்வங்களையும் திசைத் தெய்வங்களையும் வேண்டி அமைதிப்படுத்தும் (சாந்தி செய்யும்) இந்தச் சடங்குக்கு ‘தச்சு செய்தல்’ என்பது இன்றைய பெயராகும்.
‘‘தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை துடைவை என்றிவையெல்லாம் வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன்’’ என்பது பக்தி இயக்கம் கிளர்ந்த காலத்தில் (கி.பி.9 நூ) பெரியாழ்வார் பாசுரமாகும். பார்ப்பனர்களின் ‘சுகஜீவனம்’ என்பது அக்காலத்தில் எவ்வாறிருந்தது என்பதனை இப்பாசுரத்தால் உணர முடிகிறது. இதே காலத்தைச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மனின் தண்டந்தோட்டம் செப்பேட்டால் மற்றுமொரு செய்தியினை அறிகிறோம். பார்ப்பனர் 308 பேருக்கு அரசன் ஒரே செப்பேட்டின் வழி ‘பிரமதேயம்’ வழங்குகிறான். இதன்படி அரசன் அளித்த உரிமைகளில் சில, ‘சுட்டிட்டிகையால் மாடமாளிகை எடுக்கப் பெறுவதாகவும் துரவு கிணறு இழிச்சப் பெறுவதாகவும்’ என்பவையாகும்.
அதாவது சுட்ட செங்கலால் வீடுகட்டிக் கொள்ளவும், வீட்டிற்கு மாடி எடுத்துக் கட்டவும், வீட்டுத் தோட்டத்தில் கிணறு வெட்டிக் கொள்ளவும் அக்காலத்தில் அரசர்களின் அனுமதி வேண்டும். அந்த அனுமதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே இயல்பாக வழங்கப்பட்டிருந்தது. பார்ப்பனர்களின் தீட்டுக் கோட்பாட்டை அரண் செய்வதற்கும், பேணிக் கொள்வதற்கும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாகக் கிணறுகள் இருப்பதனை இப்பொழுதும் பார்ப்பனத் தெருக்களில் (அக்கிராமங்களில்) காண இயலும். இந்த உரிமையினை அரசர்கள் மற்றச் சாதியாருக்கு வழங்கவில்லை.
சாதிவாரியாக வீடுகட்டும் உரிமைகளை அரசர்களால் வகுக்கபபட்டிருந்ததை அறியப் பல சான்றுகள் கிடைக்கின்றன. பழனிக்கருகிலுள்ள கீரனூர்க் கல்வெட்டு 12-ஆம் நூற்றாண்டில் அப்பகுதியில் வாழ்ந்த இடையர்களுக்கு அரசன் சில உரிமைகளை வழங்கியதைக் குறிப்பிடுகிறது. அவ்வுரிமைகளில் ஒன்று, வீட்டிற்கு இருபுறமும் வாசல் வைத்துக் கட்டிக் கொள்ளலாம் என்பதாகும். அப்பகுதியில் அதுவரை அவர்களுக்கு அந்த உரிமை இல்லை.
காலனிய ஆட்சியின் தொடக்கம் வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகள் ஓலைக்கூரை அல்லது புற் கூரைகளாக இருந்ததென்பதனை முன்பே குறிப்பிட்டோம். இவ்வீடுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகள் இன்றளவும் குனிந்த வாசல் உடையனவாகவும், பின்புற வாசலும் சன்னலும் இல்லாதனவாகவும் இருப்பதனை நினைவில் கொள்ள வேண்டும். நிலைவாசல் (ஆள் நிமிர்ந்தபடி உள்ளே செல்லும் உயரத்தில் இருப்பது) சன்னல்கள், பின்புறவாசல், மாடி, இரட்டைக் கதவு வைத்தல், சுட்ட செங்கல்லால் சுவர் ஆகியவை தனித்தனி உரிமைகளாக சாதிவாரியாக அடுக்கப்பட்டிருந்ததே தமிழக வரலாற்றில் சாதியம் தொழிற்பட்ட முறைக்குக் கண்கண்ட சான்றாகும்.
சமூக, பொருளாதார ரீதியில் எளிய மக்கள் ‘குடியிருப்பு’ பற்றி விரிந்த சிந்தனைகள் இல்லாமல்தான் வாழ்ந்தனர். ‘எனக்கும் சொத்து இருக்கிறது’ என்ற உணர்வை வெளிப்படுத்த ‘எனக்கும் காணி நிலமும் கலப்பை சார்த்த இடமும் இருக்கிறது’ என்றனர். இந்தச் சொல்லடையிலிருந்து அவர்களுக்கு வீடு என்பதே தொழிற்கருவிகளைப் பாதுகாக்கும் இடமாகவே இருந்திருக்கிறது என்று தெரிகிறது. நிலமும் உழவுத் தொழிற் கருவிகளுமே வாழ்க்கை என்பதே அன்றைய நிகழ்வாகும்.
எனவே, தாழ்வாரம், நடுக்கூடம், சமையலறை, படுக்கையறை என்பதான நினைவுகளும் உணர்வுகளும் அவர்களிடத்தில் உருவாக வழியில்லை. அரசதிகாரமும், சாதிய மேலாண்மையும் அவ்வகையான நினைவுகள் அவர்களிடத்தில் உருவாகாமல் பார்த்துக் கொண்டன. இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புக்களில் புதிதாகக்கட்டும் வீடுகளில்கூடப் பக்கச் சுவர்களில் பெரிய சன்னல்களை வைப்பதில்லை என்பதைக் கள ஆய்வில் காண முடிகிறது. காலங்காலமாக அவர்களின் சமூக உளவியல் சிதைக்கப்பட்டிருந்ததன் பின் தொடர்ச்சியாகவே இதனைக் கருத வேண்டும்.
நன்றி - உன்னதம் நவம்பர் 2005
1 கருத்து:
நாம் வசிக்கும் வீட்டிற்குபின் இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா? மனை, வீடு பற்றியெல்லாம் உதாரணங்களோடு அருமையாக விளக்கியுள்ளார். அக்கால சாதி ஒடுக்குமுறைகளையும் இப்பதிவின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தொ.பரமசிவன் அய்யாவிற்கு நன்றி. அற்புதமான கட்டுரையை பதிந்தமைக்கு சிங்கமணி அவர்களுக்கும் நன்றி.
கருத்துரையிடுக