05/05/2012

சுமிருதியும் திருக்குறளும் - ஆ.சிவசுப்பிரமணியன்

வேத சமயத்தின் புனித நூல் தொகுதிகளுள் ஒன்றாக சுமிருதி விளங்குகிறது. நான்கு வேதங்களும் எழுத்து வடிவம் பெறாது காதால் கேட்டு மனனம் செய்வதன் வாயிலாகவே பாதுகாக்கப்பட்டு வந்தன. இதனாலேயேஎழுதாக்கிளவிஎன்ற சொல்லால் வேதம் சங்க இலக் கியத்தில் குறிப்பிடப்பட்டது. வேதங்களைப் போன்றே சுமிருதிகளும் வாய்மொழியாக ஒரு குறிப்பிட்ட காலம் வரை வழங்கியுள்ளன. சுமிருதி என்பது குறித்துஅபிதான சிந்தாமணி’ (பக்கம் 702) பின்வருமாறு விளக்கம் தருகிறது.

இவை தர்மசாத்திரங்கள், நித்தியகருமங்கள், ஆசாரம், விவகாரம், பிராயசித்தம், இராசதர்மம், வருணாசிரமம், அக்நிகார்யம், விரதம் முதலிய பலவற்றைக் கூறும். இவைகள் பல இருடிகளால் (ரிஷிகளால்) கூறப்பட்டவை”.

சுமிருதிகளின் எண்ணிக்கை பதினெட்டாகும். இந்நூல்கள் யாவும் பார்ப்பனியத்தை உள்வாங்கி எழுதப் பட்டவை.

பார்ப்பனியம் சார்ந்த வேதங்களும் வேள்விகளும் சங்ககாலத் தமிழகத்தில் ஊடுருவியிருந்ததையும், வேத எதிர்ப்பாளர்களையும் சங்க நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. சங்ககாலத்தை அடுத்த பல்லவர் காலத்தில் வேதசமயத்தின் தாக்கம் அதிகரித்து சோழர் காலத்தில் அது உச்சகட்டத்தை அடைந்தது.

வள்ளுவர் காலத்திற்கு முன்னரும், அவர் வாழ்ந்த காலத்திலும், வாழ்ந்து மறைந்த பின்னரும், பார்ப்பனிய சமயமும், அதன் புனிதநூல்களும் தமிழ்நாட்டில் செல்வாக்குடன் விளங்கின. இப்பின்புலத்தில் வள்ளுவரின் திருக்குறளை ஆராய்வது அவசியமான ஒன்றாகிறது. இதன் முதற்படியாக சுமிருதிகளின் பொதுவான இயல்புகள் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

சுமிருதிகள் தோன்றிய சமூகம்:

சுமிருதிகளின் காலம் கி.மு நான்காம் நூற்றாண்டி லிருந்து ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலமாகும். இக்காலகட்டத்தில்தான் அடிப்படையான பொருளாதார மாறுதல்கள் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருந்தன. தனிச்சொத்துரிமை வளர்ந்து வலுவடையத் தொடங்கியது. நில உடைமை உறவுகள் முகிழ்ந்து அதன் அடிப்படையில் முரண்பட்ட வர்க்கங்களும் உருப்பெற்றன. நில உடைமை யாளர்கள், கால்நடை உரிமையாளர்கள், ஒரு பக்கமும், குத்தகை விவசாயிகள், உழவர்கள், கால்நடை மேய்ப் பவர்கள் மற்றொரு பக்கமும் சமூகத்தில் உருப்பெற்றனர். (பிரபாவதி சின்கா 1982 : 9)

சமத்துவம் வாய்ந்த இனக்குழு வாழ்க்கையழிந்து தனிமனிதர்களுக்கும் வர்க்கங்களுக்கும் இடையிலும் நில உரிமையாளர்களுக்கும் உழவர்களுக்கும் இடையிலும் முரண்பாடுகள் வளரத் தொடங்கின.

மற்றொரு பக்கம் அவைதிக சமயங்கள் அல்லது வேதமறுப்புச் சமயங்கள் என்றழைக்கப்பட்ட சமணம், பௌத்தம், ஆஜீவகம் ஆகியனவற்றின் மீதான தாக்குதலில் பார்ப்பனிய சமயம் வெற்றி பெற்றுத் தன்னை வலுவான சக்தியாக நிலைநிறுத்திக் கொண்டது.

திருக்குறள் தோன்றிய சமூகம் :

சுமிருதிகள் தோன்றிய சமூக அமைப்பை ஏறக்குறைய ஒத்ததாகவே திருக்குறள் தோன்றிய சமூக அமைப்பும் இருந்தது. சங்க காலத்தில் நிலவிய திணை வாழ்க்கை அழிந்து நிலவுடைமையின் வளர்ச்சி நிலையைத் தமிழ்ச் சமூகம் எட்டியிருந்தது. குறுநில மன்னர்களின் ஆட்சிக்கு மாறாக நிலவிய வேந்தர்கள் ஆட்சி முறை வலுவடைந்து, பேரரசன் ஆட்சி முறையாகியது. விளைநிலங்கள் கொடைப்பொருளாகவும் மாறின.

இத்தகைய ஒத்த சமூகச் சூழலில் உருவான சுமிருதியின், திருக்குறளும் ஒத்த கருத்துடையனவாய் விளங்கினவா அல்லது மாறுபட்டு விளங்கினவா என்பது ஆய்விற்குரிய ஒன்று. இதனடிப்படையில் சுமிருதி கூறும் கருத்துக்களையும் திருக்குறள் கூறும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆராய இடமுள்ளது. இதன் முதற்படியாக ஆளுவோனைக்குறித்து சுமிருதியும் திருக்குறளும் கூறும் செய்திகளைக் காண்போம்.

சுமிருதியின் நோக்கில் மன்னன்:

அரசின் தோற்றம் குறித்துப் பல்வேறு கோட் பாடுகளை அரசியல் அறிஞர்கள் உருவாக்கியுள்ளதாகக் கூறும் பிரபாவதி சின்கா அவற்றுள் ஒன்றாகதெய்வீகக் கோட்பாடுஎன்பதைக் குறிப்பிடுகிறார். இக்கோட் பாட்டின்படி அரசு என்பது கடவுளால் படைக்கப் பட்டது. எனவே அது ஒரு தெய்வீகமான அமைப்பாகும். இக்கோட்பாட்டுடன் நெருக்கமானதாகதெய்வீக உரிமைஎன்ற கோட்பாடு அமைகிறது.

தெய்வீக உரிமைஎன்பதன் அடிப்படையில் மன்னனானவன் வரைமுறையற்ற உரிமைகளையுடையவன். அவனது அதிகாரங்களைக் கட்டுப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. அவனது கட்டளைக்குக் கீழ்ப்படி யாதவர்கள் மரணதண்டனைக்குரியவர்கள்.

குடிமக்கள், மன்னனிடம் தாழ்ந்து பணிந்து போவதை, தெய்வீகக் கோட்பாடும், தெய்வீகக் கடமையும் வலியுறுத்துகின்றன. இதற்குச் சான்றாகப் பின்வரும் செய்திகளைக் குறிப்பிடலாம். “சுக்கிர நீதிஎன்ற வட மொழி நூல், “எல்லாவுலகங்களும் அரசனின்றி அச்சத்தால் எப்பக்கங்களிலும் சிதறுண்டிருக்குங்கால் அவ் வெல்லாவற்றையும் காத்தற் பொருட்டுப் பிரம்ம தேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன் அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு அரசனைப் படைத்தான்.”

என்று மன்னனின் தெய்வீகக் கூறுகளைச் சுட்டுகிறது. பல்வேறு தெய்வங்களின் மனித வடிவமே மன்னன் என்பது நாரத ஸ்மிருதியின் கருத்தாகும்.

கணக்கற்ற அதிகாரங்களைக் கொண்டிருப்பதால் அக்கினி, இந்திரன், சோமன், யமன், குபேரன் ஆகிய தெய்வங்களின் ஆற்றல் மன்னனிடம் குடி கொண்டிருக் கின்றன என்பது அவரது கருத்தாகும். சில புராணங்களும் கூட இவற்றையொட்டியே சில கருத்துக்களைக் கூறு கின்றன. மனுதர்ம சாஸ்திரம் மன்னனைக் குறித்துப் பின்வரும் கருத்தை முன்மொழிகிறது.

வேதம் கட்டளையிட்டிருக்கின்றவாறு உபநயன முதலிய சமஸ்காரங்களைக் கொண்ட க்ஷத்திரி யனால் இவ்வுலகம் விதிப்படி காப்பாற்றத்தக்க தாகும். இந்திரன், வாயு, எமன், சூரியன், அக்கினி, வருணன், சந்திரன், அளகேசன் ஆகிய திசைக் காவலர் அனைவரின் தன்மைகள் ஓருருவாகத் தோன்றியவனே அரசன்.

திசைக்காவலரான தேவர்களின் வடிவினன் ஆதலால் மனிதர்களின் மிக்கொளியுடையவனாய் ஆண்டு கொள்ளும் ஆற்றல் மிக்கவனாய் அரசன் திகழ்கின்றான்.

ஏறிட்டுப் பார்க்கும் எவரையும், அவரது கண்ணையும் மனத்தையும் காந்தச்செய்வதால் யாரும் அரசனுக்கெதிரே நின்று பார்க்கக் கூடாதவராகின்றனர்.

தனது மகிமையினால் அவ்வப்போது தீயாகவும், காற்றாகவும், சூரியனாகவும், சந்திரனாகவும், யமனாகவும், குபேரனாகவும், வருணனாகவும், தேவேந்திரனாகவும் இருப்பான்.”

வள்ளுவர் எந்த ஒரு மன்னனின் அவையிலும் அரசவைக் கவிஞராக இருந்ததாகத் தெரியவில்லை. அவரை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழிக் கதைகள் அடித்தள மக்கள் பிரிவைச் சார்ந்தவராகவே அவரைச் சுட்டுகின்றன. இந்நிலையில் அரசனின் சிறப்பைக் கூறும்இறைமாட்சிஎன்ற அதிகாரத்தைத் தம் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் அடிப்டையிலேயே உருவாக்கியுள்ளார் என்று கருதுவதில் தவறில்லை. இறைமாட்சி என்ற அதிகாரத் தலைப்பிற்குஇறைவனது உண்மை கூறுதல்என்று மணக்குடவரும், ‘இறைவனது தன்மை கூறுதல்என்று பரிப்பெருமாளும் பொருள் உரைத்துள்ளனர்.

மன்னனை இறைவனாகவே காணும் சுமிருதி கருத்தை வள்ளுவர் உள்வாங்கியுள்ளார் என்பதைஇறைஎன்ற சொல்லால் மன்னனைச் சுட்டுவதிலிருந்து உணரலாம். முதற்குறளில் மன்னனுக்கு இருக்க வேண்டிய படை, சூடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறு உறுப்புகளைக் குறிப்பிகிறார். அடுத்து மன்னனுக்கு இருக்க வேண்டிய அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்ற நான்குகுண நலன்களையும், தூங்காமை, கல்வி, துணி வுடைமை என்ற மூன்று குணநலன்களும் நீங்கப் பெறாத வனாய் இருக்க வேண்டும். அறவழிநிற்பவனாகவும், பொருளை ஈட்டி அதைப் பாதுகாத்துப் பகுத்தளிக்கும் ஆற்றல் உடையவனவாகவும் இருக்க வேண்டும் என்கிறார். இச்செய்திகளையடுத்து,

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

 மீக்கூறும் மன்னன் நிலம்” (386)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

 கவிகைக்கீழ்த் தங்கும் உலகு” (389)

என்று கூறும் செய்திகள் மக்களின் கண்ணோட்டத்தி லிருந்து மன்னனைப் பார்த்ததால் உருவானவை என்று கூற முடியும். இதன்வழி சுமிருதிகளின் கண்ணோட்டத்தி லிருந்து அவர் மாறுபட்டு நிற்கிறார்.

மன்னனின் கடமை :

உலகின் பல்வேறு நாடுகளிலும்தெய்வீக அரசுஎன்ற கருத்தியல் மன்னராட்சிக் காலத்தில் நிலவியுள்ளது. ஆனால் இந்திய மன்னராட்சி முறையில் வழக்கமான மன்னர் கடமைகளுடன் வேறுபாடான ஒரு கடமையும் மன்னர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஆர்.எஸ்.சர்மா, பார்ப்பனிய ஆதாரங்களின் கூற்றுப்படி, சாதிகளை நிலை நாட்டுவதும் அரசனின் குறிப்பிடத்தக்க கடமைகளுள் ஒன்று.

நான்கு சாதியாரும் அவரவர்க்கு உள்ள கடமை களைச் செவ்வையாகச் செய்வதை மேற்பார்வை யிடுவதும் அதற்கு வழி வகுப்பதும் அரசனின் கடமை என்று பெரும்பாலும் எல்லா ஆதாரங் களும் சொல்லுகின்றன.”

என்கிறார். பிற நாடுகளின் மன்னர்கள் வர்க்க வேறு பாடுகளை நிலைநிறுத்தியும், தான் பின்பற்றும் சமயத்திற்கு ஆதரவளித்தும், சில நேரங்களில் மாற்றுச் சமயத்தினருக்குத் தொல்லை தந்தும் ஆட்சி புரிந்துள்ளனர். இந்திய மன்னர்கள் இக்கடமைகளுடன் வருணப் பாகுபாடுகளைப் பாதுகாக்கும் கடமையையும் மேற்கொண்டிருந்தனர்.

மன்னனின் வருணம் குறித்தும், வருணக்கலப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் அவனது கடமை குறித்தும் திருக்குறள் எதுவும் கூறவில்லை. சுமிருதிகளிலிருந்து திருக்குறள் மாறுபடும் முக்கிய பகுதி இதுவேயாகும்.

நாலாம் வருணத்தோன் அரசனாயிருக்கும் நாட்டில் அந்தணர் வாழக்கூடாது என்பது மனுவின் வழியாகும்” (4.61).

மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தாரால் நடை பெறுகின்றதோ அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போலக் கண் முன்னே துன்பமுறுகின்றதுஎன்று குறிப்பிடுகிறார்” (8.21)

நாலாம் வருணத்தாரும், நாத்திகருமே மிகுந்து இருபிறப்பாளர் இல்லாமல் போகின்ற நாடு வறுமை வயப்பட்டு விரைவில் அழிந்துபோகும் என்றும் எச்சரிக்கிறார்”. (8.22)

ஆனால் திருக்குறள் குறிப்பிடும் அரசனும் குடி மக்களும் தனித்தனியான வருண அடையாளங்கள் இன்றியே காட்சியளிக்கின்றனர்.

மன்னனது இன்றியமையாத ஆறு உறுப்புகளுள் ஒன்றாகபடைஎன்பதை வள்ளுவர் குறிப்பிடுகிறார். இப்படையினர் போரில் வெற்றிபெற்றால் உரிமையாக்கும் பொருட்களில் ஒன்றாகப் பெண்ணைக் குறிப்பிடுகிறார் மனு. (7:96)

ஆனால் வள்ளுவர்,

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

 இல்லாயின் வெல்லும் படை”. (769)

என்று படையின் பெருமையைக் குறிப்பிடும்படை மாட்சிஅதிகாரத்தில் குறிப்பிடுகிறார். இக்குறளில் இடம்பெறும்செல்லாத் துனிஎன்ற சொல்லுக்குசெல்லாத்துனியாவது மகளிரை வெளவல், இளிவர வாயின செய்தல் முதலியவற்றால் வருவதுஎன்று பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். பரிப்பொருள்செல்லாத்துனிஎன்பதற்குபோகாத் துன்பம் உறுதலும்என்று உரை எழுதிபோகாத் துன்பமாவது பெண்டிரைக் கைக் கொள்ளுதலும் இளிவரவு செய்தலும் போல்வனஎன்று விளக்கமளிக்கிறார்.

போரில் கைப்பற்ற வேண்டிய பொருட்களில் ஒன்றாகமகளிர்மனுசுமிருதியில் குறிப்பிடப்பட்ட திருக்குறள் அச்செயல் படையிடம் இருக்கக் கூடாது என வலியுறுத்துகிறது.

தனி உரிமை பெற்றோர் :

நான்கு வருணப் பாகுபாட்டை வலியுறுத்தும் சுமிருதிகள், அவற்றுள் தலையான வருணமாகவும், தனி யுரிமை உடைய வருணமாகவும் அந்தணரைக் குறிப்பிடு கின்றன. விதிக்கப்படும் தண்டனைகளில் பாகுபாடு காட்டுதல், கொடை வழங்கல் ஆகியன பார்ப்பனர்களை மையமாகக் கொண்டு மனுசுமிருதியில் கூறப்படுகின்றன. ஆனால் திருக்குறளில் இத்தகைய தனியுரிமை பெற்ற பிரிவினர் எவரும் இடம் பெறவில்லை. வேள்வி குறித்தும், அதை மேற்கொள்ளும் அந்தணர் குறித்தும் திருக்குறள் குறிப்பிடுகிறது. ஆனால் அதன் அடிப்படையில் தனி யுரிமை பெற்றவர்களாக எவரையும் குறிப்பிடவில்லை.

உழுதொழில் என்பது பார்ப்பனர் மேற்கொள்ளத் தகுதியற்ற ஒன்றாக மனுசுமிருதியில் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் உழு தொழிலின் மேன்மையை வலியுறுத்திஉழவுஎன்ற தலைப்பில் ஓர் அதிகாரமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.

சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம்’ (1031)

உழுவார் உலகத்தார்க் காணி’ (1032)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ (1033)

என்று உழு தொழிலையும் உழவரையும் போற்றுவதுடன் நில்லாது

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேமென் பார்க்கும் நிலை’ (1036)

என்று சற்று அழுத்தமாகவே உழவின் தேவையை வலியுறுத்துகிறார்.

தனியுரிமை பெற்ற வருணப் பிரிவினர் மேற் கொள்ளக் கூடாத தொழிலாக ஸ்மிருதிகள் குறிப்பிடும் உழுதொழிலையும் அதை மேற்கொள்வோரையும் சிறப்பிக்கும் இச்செயலின் மூலம் சுமிருதியின் சாதிய மேலாண்மைக் கருத்துடன் வள்ளுவர் முரண்படுகிறார்.

நாலாம் வருணத்தாருக்குப் பொருளியல் போன்ற இம்மைப் பயன்தரும் கல்விகள் கற்பித்தலாகாது (4.80) என்று மனு குறிப்பிட்ட, கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகக் குறளில் கூறப்படுகிறது.

நான்கு வருணங்களும் தமக்கு விதிக்கப்பட்ட கடமை களை முறையாகச் செய்ய வேண்டும் என்பது சுமிருதிகள் சுட்டும் விதிமுறையாகும். ஆனால் வருணங்கள் குறித்தோ அவற்றிற்குரிய கடமைகள் குறித்தோ திருக்குறள் எதையும் குறிப்பிடவில்லை. மேலும் சலுகை பெற்ற வர்க்கத்தைச் சார்ந்த பார்ப்பனர்கள் தம் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக யாரிடமிருந்தெல்லாம் வற்புறுத்திப் பொருளைப் பெற வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன. தம் நலனுக்காக அறமில்லாத முறையில் பணம் பெறுவதை வருணத்தின் அடிப்படையில் ஸ்மிருதிகள் வலியுறுத்து கின்றன. ஆனால் திருக்குறளோ,

ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை

என்கிறது.

குறளை மறந்த தமிழ் மன்னர்கள் :

பல வடமொழிச் சுமிருதிகளில் குறிப்பாக மனு சுமிருதியின் கருத்துக்களுடன் பலவாறு வள்ளுவர் மாறுபட்டு நிற்பதைச் சில எடுத்துக்காட்டுகள் வாயிலாகக் கண்டோம். இம்மாறுபாடே தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளில் திருக்குறள் புறக்கணிக்கப்படக் காரண மாயிற்று. அறம் என்பதே சுமிருதியைச் சார்ந்ததாக மாறியது. திருக்குறளின் அறத்துப்பாலுக்கு உரை எழுதும் போதுஅறமாவது மநுமுதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன வொழிதலுமாம்என்று பரிமேலழகர் விளக்கம் கூறும் நிலை தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது. தமிழ் மன்னர்களின் கல்வெட்டுக்களில் நாம் எந்த நெறியில் நின்று ஆட்சிபுரிகிறோம் என்பதைத் தொடக்கத்தில் குறிப்பிடுவார்கள். சான்றாகப் பின்வரும் தொடர்களைக் குறிப்பிடலாம்.

மனுவாறு விளங்க

மனுநெறி சிறக்க

மனுநெறி தழைக்க

இவ்வாறு குறிப்பிட்ட தமிழ் மன்னர்கள்குறள் வழி நின்று’, ‘வள்ளுவர் வழி நின்றுஎன்று குறிப்பிடவில்லை. இதற்குக் காரணம் குடிமக்களின் கண்ணோட்டத்திலேயே அரசு மற்றும் அரசன் குறித்த பார்வை திருக்குறளில் இடம்பெற்றுள்ளமைதான். இது மன்னர்களுக்கும் அவரைச் சார்ந்து நிற்போருக்கும் உகப்பாயில்லாமல் போனதில் வியப்பில்லை. மன்னனையும் அவனை அண்டி நிற்போரையும் அரவணைத்து அவர்தம் நலனைப் பேணும் தன்மையால் சுமிருதிகள் தமிழ் மன்னர்களால் ஏற்றுக் கொள்ளப்பட திருக்குறள் ஓரங்கட்டப்பட்டது.

இவ்வாறு மன்னர்களால் ஓரங்கட்டப்பட்டமையே திருக்குறளின் சிறப்பாகும். மற்றொரு பக்கம் மக்களிடையே அது பரவலாக வழங்கி வந்துள்ளது. இதன் அடிப் படையிலேயே திருக்குறளுக்கு தருமர் தொடங்கி திருமலையார் வரை பதின்மர் உரையெழுதியுள்ளனர். தன்காலத்திய மேட்டிமையோர் நெறியான சுமிருதி நெறியிலிருந்து விலகி நின்று அறம் கூறியமையே வள்ளுவரின் தனிச்சிறப்பாகும்.          

நன்றி - உங்கள் நூலகம்  ஆகஸ்ட்2010
நன்றி - கீற்று    

கருத்துகள் இல்லை: