03/04/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 34 : தமிழின் சிறப்பு!

'முத்தமிழ்க் காவலர்' கி..பெ.விசுவநாதம்

பெயர்ச் சிறப்பு

 நமது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை ""உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்' என்பதற்கு "அழகு' எனவும் பொருள் உண்டு. இவ்வுண்மையைத் ""தமிழ் தழுவிய சாயல்'' என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை' எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்'ழை உடையது "தமிழ்' எனப் பொருள் கூறுவதும் உண்டு.
 தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவம்' வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. -வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்.
 தமிழுக்கு "முத்தமிழ்' எனவும் பெயர் உண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும்; இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும். நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும். எண்ணமும், துணிவுமின்றி எச்செயலும் நடைபெறாது. இது உளநூற் புலவர்களின் கருத்து. இதை நமது முன்னோர்கள் அன்றே அறிந்து பெயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது.
 சைவ சமய ஆச்சாரியராகிய ஞானசம்பந்தரை, நாம் "திரு' என்ற அடைமொழி சேர்த்து, திருஞானசம்பந்தர் எனக் குறிப்பிடுகிறோம். ஆனால் அவரோ, தம் பெயருக்கு முன் "தமிழ்' என்பதையே அடைமொழியாகக் கொடுத்துத் "தமிழ் ஞானசம்பந்தன்' எனக் குறிப்பிட்டுக் கொண்டார். இது நமக்குத் தமிழையும் சம்பந்தரையும் ஒன்றாகக் காட்டுகிறது.

 வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்' எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்' எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பன ஆகும்.

 நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

 ""தமிழுக்கும் அமுதென்று பேர்'', தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. ""தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர். இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.

 இனிமைச் சிறப்பு

 "தமிழ்' என்பதற்கு "இனிமை' என்றும் ஒரு பொருளுண்டு. இதனை ""இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.

 ""பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்'' என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது:
 ""போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?'' என்னே தமிழின் சுவை!

 ""அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்'' எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும், அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா?
 ""தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்'' என்பதே. என்னே தமிழின் இனிமை!

 தன்னைப் "பித்தன்' என்று சுந்தரமூர்த்தி நாயனார் வைதபொழுது, இறைவன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தாராம். காரணம், ""தமிழால் வைதான்'' என்பதே. இதனாலேயே இறைவனுக்குத் ""தமிழால் வைதாரையும் வாழவைப்போன்'' என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக இல்லறத்தில் வலக்காலை எடுத்து வைக்கும் மணமக்களை நோக்கி, ""தமிழும் அதன் இனிமையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள்'' என்று நல்லறிஞர்கள் வாழ்த்துக் கூறி வருவது தமிழகத்தின் வழக்கமாக இருந்து வருகிறது.

 நன்றி என்பதைக் குறிக்கும் "தாங்க்ஸ்' என்ற ஆங்கிலச் சொல்லும், நல்லது என்பதைக் குறிக்கும் "அச்சா' என்ற இந்திச் சொல்லும், அதன் வலிய ஒலியால் அச்சுறுத்துவது போலத் தோன்றும். தமிழில் நன்றி, வணக்கம் என்பது மட்டுமல்ல, ""இது மக்கள் தன்மைக்கு ஒவ்வாது'' என்று வைவதுகூட அதன் மெல்லோசையால் வாழ்த்துவது போலத் தோன்றும். இது நமது மொழியில் இயல்பாகவே அமைந்துள்ள ஒன்று. என்னே தமிழின் இனிமை!
 கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான்.
 ""நேற்றே மலைக்கு நடந்தேன், பலவிடங்களில் அலைந்தேன்; இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன்; ஒரு கொடியைப் பிடித்தேன்; ஏறிச் சென்று கலைத்தேன்; சட்டியில் பிழிந்தேன்; நன்றாக வடித்தேன்; அதனைக் கண்டு மகிழ்ந்தேன்; அதில் சிறிது குடித்தேன்; களித்தேன்; அயர்ந்தேன்; மறந்தேன்; இன்று காலை எழுந்தேன்; நினைத்தேன்; தேனை அடைத்தேன்; எடுத்தேன்; விரைந்தேன்; நடந்தேன்; வந்தேன்; சேர்ந்தேன்; இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்'' என்று.
 நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன். அடடா! எப்படி தேன்? எவ்வளவு தேன்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே! இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் "படித்தேன்' எனக் கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி "தேன்' என ருசிக்கும். என்னே தமிழின் இனிமை!

 எளிமைச் சிறப்பு!

 தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப்பெறுகிறது. இச் சிறப்பைப் பிற மொழிகளிற் காண
 இயலாது.

 தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல, படிக்கவும் எளிது. தமிழ் ஓர் எழுத்துக்கும் ஒரே ஒலியானதால் எவரும் எதையும் படிக்க முடியும். உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து ஆகிய அனைத்தும் சேர்ந்து மொத்தம் 247 எழுத்துக்களே. இவைகளை அறியப் பெரியவர்களுக்குச் சில வாரங்களும், சிறியவர்களுக்குச் சில மாதங்களும் போதுமானது. பின் எடுத்த நூல்களையெல்லாம் படிக்கலாம். ஆகவே, தமிழ் படிக்கவும் எளிதானது.
 தமிழ்மொழி பேசவும் எளிது. தமிழ்ச் சொற்களில் 100 சொற்கள் எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு சொல்லாக ஒலித்துப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு, அண்ணாக்கு, உண்ணாக்குக் கொண்டே ஒலிப்பதாக இருக்கும். தொண்டைக்குக் கீழே வேலையேயிராது. வடமொழிச் சொற்களில் பெரும்பான்மையானவை அடிவயிற்றின் துணையின்றி ஒலிக்க முடியாதவை. இவ்வாறு வலிந்து ஒலிப்பதால் நாவும் உலர்ந்து, தொண்டையும் வறண்டு குடலும் காய்ந்துவிடுகிறது. ஆகவே, இதுகாறும் கூறியவற்றால், தமிழ் மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் கூட மிகவும் எளிமையானது என நன்கறியலாம்.

 (கட்டுரைத் தகவல் உதவி: ஆர்.அன்பரசன்)

நன்றி - தமிழ்மணி

2 கருத்துகள்:

arulanandam சொன்னது…

thaen ...superb .....

arulanandam சொன்னது…

thaen ...superb...