நேரம்
இருட்டும் வரை நான் மற்ற
இளம் பெண்களைப் போல உற்சாகத்துடன் காணப்
பட்டேன். என்னிடம் இருக்கும் அழகோ, பண வசதியோ,
கல்வித் தகுதியோ இல்லாமலிருந்த இளம்
பெண்களைப் பற்றி கிண்டல் பண்ணிச்
சிரிப்பது, அவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும்
கூறுவது போன்ற பொழுது போக்கு
விஷயங்களில் நான் ஆர்வத்தைச் செலுத்தினேன்.
பிரகாசத் தைப் பரப்பிக் கொண்டிருக்கும்
ஒரு இளம்பெண் நான் என்று எனக்கு
அருகில் இருக்கும் அழகான மாளிகை களில்
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூறுவார்கள். தாய் இல்லாமல் வளர
வேண்டிய நிலையில் இருந்த எனக்கு, பாசத்தைத்
தருவதற்காக ஏராளமான நடுத்தர வயதைக்
கொண்ட பெண்களும் தயாராக இருந்தார்கள். என்
தந்தையின் கண்களில் படுவதற்கும், அவருடைய மனதில் மறுமணத்தைப்
பற்றிய சிந்தனை களை உண்டாக்குவதற்கும்
வயதான கன்னிப் பெண்கள் தீவிரமாக
முயற்சி செய்தார்கள். வாசனைப் பொருட்களைத் தேய்த்து,
முகத்தை மேலும் வெள்ளை ஆக்கிக்கொண்டு,
ஷிஃபான் புடவை அணிந்து என்
தந்தையைப் பார்ப்பதற் காக வந்த எந்த
நாகரீகப் பெண்ணையும், அவர் அன்புடன் என்னுடைய
அறைக்கு அனுப்பி வைத்தார். தன்னுடைய
ஒரே மகளை சந்தோஷப்படுத்தக்கூடிய ஒருத்திக்கு மட்டுமே,
தன்னுடைய இரண்டாவது மனைவியாக வாழ்வதற்கான அதிகாரம் இருக்கிறது என்று அந்தச் செயல்
அறிவித் தது. நல்ல தோற்றமும்,
வசதி படைத்த வருமான என்
தந்தை மீது ஈர்ப்புக் கொண்டு,
எவ்வளவு நவநாகரீகமான பெண்கள் என் அறைக்குள்
என்னிடம் பாசத்தை வெளிப்படுத்த ஓடி
வந்திருக்கி றார்கள்! "மகளே, சின்ன செல்லமே'
என்றெல்லாம் அழைத்து அவர்கள் தங்களுடைய
கூர்மையான மார்பகங்களை நோக்கி என்னுடைய முகத்தைச்
சாய்த்து காமம் கலந்த கண்ணீரைச்
சிந்தியிருக்கிறார்கள்! என்னுடைய முகத்தைப் பார்க்கும்போது, அதற்கு என் தந்தை
முகத்தின் சாயல் இருப்பதை மட்டுமே
அவர்கள் பார்த்தார்கள். என் தந்தையின் மெலிந்த,
வில்லைப் போன்று வளைந்திருக்கும் உதடுகளையும்...
எனக்கு அந்தப் பெண்களைப் பார்க்கும்போது
எப்போதும் வெறுப்பு மட்டுமே தோன்றும். அவர்கள்
அளித்த பரிசுப் பொருட்கள், நான்
பயன்படுத்தாமல் சமையலறையின் பழைய அலமாரிகளில் மலையென
குவிந்து கிடந்தன. பல வகைப்பட்ட துணிமணிகள்,
பவுடர் டப்பாக்கள், சில்க் நாடாக்கள், குழந்தை
பொம்மைகள், கதைப் புத்தகங்கள்... நான்
அப்படித்தான் வளர்ந்தேன். நானும் என் தந்தையும்
மட்டுமே இருக்கும் ஒரு தனிப்பட்ட உலகத்தில்,
என் படுக்கையறையின் சுவரில் பித்தளைச் சட்டத்தில்
தொங்கிக் கொண்டிருந்த படத்தில் என் தாய் சிரித்துக்கொண்டிருந்தாள்.
உலகத்தின் முடிவு வரை நீண்டு
நின்றிருக்கும் புன்னகை.
அந்தப்
புன்னகையில் இருந்த காந்த சக்தியை
உணர்ந்திருக்கும் என் தந்தையை - வேறொரு
பெண்ணின் சிரிப்பு ஈர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று நான் முடிவெடுத்தேன்.
என் தந்தையிடம் தேவையே இல்லாமல் நெருங்கிப்
பழக முயற்சிக்கும் எந்தவொரு பெண்ணும் என் மனதில் இயல்புத்
தன்மையை பாதித்தார்கள். அப்படிப்பட்ட பெண்கள் நான் சிறுவயதில்
படித்த "சின்ட்ரெல்லா' என்ற கதையில் வரும்
சித்தியை ஞாபகப்படுத்தினார்கள்.
அந்தக்
காரணத்தால்தான் இருக்க வேண்டும். அன்று
சிறிதும் எதிர்பாராத சூழ்நிலையில் என் தந்தை ஒரு
பெண்ணை வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைத்துக்
கொண்டு வந்தபோது எனக்கு ஒரு மாதிரி
ஆகிவிட்டது. எனக்கு அறிமுகமானபோது, புன்னகையைத்
தவழவிட்டவாறு என் நெற்றியில் தடவிவிட
அவள் முயன்றாள். நான் அதை விரும்பாதது
மாதிரி ஒரு முக வெளிப்பாட்டைக்
காட்டினேன். என் நெற்றி சுருங்கியது.
என் கண்களின் பார்வை கூர்மையான ஒரு
கத்தியைப் போல ஆனது. வேதனையால்
நெளிவதைப் போல அந்தப் பெண்
திடீரென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, சுவரில் சாய்ந்து
நின்றாள். நாங்கள் ஒருவரோடொருவர் வெளிப்படுத்திக்
கொண்ட பேரமைதி என் தந்தையின்
கவனத்தை ஈர்த்தது. முகத்தைக் கழுவுவதற்கு மத்தியில் வாஷ்பேசினில் இருந்து கண்களை உயர்த்தி,
அவர் முதலில் என்னையும் பிறகு
வந்திருந்த பெண்ணையும் பார்த்து சிரிக்க முயற்சித்தார்.
""என்ன, இரண்டு பேரும்
ஒருவரோடொருவர் பேசாமல் இருக்கீங்க?'' -என்
தந்தை கேட்டார்.
""ஸ்ரீதேவிக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று
தோன்றுகிறது'' -தான் ஏதோ விளையாட்டுக்காகக்
கூறுவதைப்போல சர்வ சாதாரணமாக அந்தப்
பெண் புன்னகைத்துக்கொண்டே கூறினாள்.
""அவளுக்கு யாரையும் பிடிக்கவில்லை என்ற நிலையே வந்தது
இல்லை. உங்களைப் போன்ற நாகரீகமான ஒரு
அறிவாளியை அவளுக்குப் பிடிக்காமல் போகாது'' -என் தந்தை சொன்னார்.
வந்திருந்த
பெண்ணின் தலை முடியின் நிறம்
பிணம் தின்னிக் காகங்களுடைய சிறகுகளின் அடர்த்தியான கறுப்பு நிறமாக இருந்தது.
வெளிறிய முகத்திற்கு அந்தக் கருப்பு நிறம்
பொருத்தமாக இருந்தது. உதடுகளில் சிவப்பு லிப்ஸ்டிக்கையும், கன்னங்களில்
இளம் சிவப்பு சாயத்தையும் அவள்
பயன்படுத்தி இருந்தாள். இடப் பக்க கன்னத்தில்
சாயம் சற்று அதிகமாகத் தேய்த்திருந்ததாலோ,
கண்களில் அளவுக்கும் அதிகமாக கருப்பு நிறம்
இருந்ததாலோ, ஒரு சர்க்கஸ் கோமாளியின்
முகத்தை அவளுடைய முகம் ஞாபகப்
படுத்தியது. ஆண்களைக் கவர்வதற்காக தினந்தோறும் முகத்தில் சாயம் தேய்க்க வேண்டிய
சூழ்நிலையில் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்களைப்
பார்க்கும்போது எனக்கு வெறுப்பு மட்டுமல்ல,
பரிதாபமும் தோன்றுவது உண்டு. எங்களுடைய வீட்டையும்
தோட்டத்தையும் மொத்த செல்வத்தையும் அபகரிப்பதற்காக
மட்டுமே என் தந்தையை வழிபடுவது
மாதிரி நடிக்கக்கூடிய அந்தப் பெண்ணை நான்
பார்த்த நிமிடத்திலிருந்தே வெறுக்கத் தொடங்கினேன்.
அவளுடைய
உணவு முறையும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு பறவை உண்ணக்கூடிய
அளவில் உள்ள உணவையே அவள்
அரை மணி நேரம் எடுத்து,
மிகவும் மெதுவாக உட்கொண்டாள். பாத்திரங்களை
உயர்த்திக் காட்டும்போது, அவள் என் தந்தையிடம்
தன்னுடைய புருவங்களை உயர்த்திக்கொண்டு சொன்னாள்: ""அய்யோ... இதையெல்லாம் சாப்பிட்டால் என் உடலின் எடை
அதிகமாயிடும்.''
அவளுடைய
உடலுக்கு, உண்மையாகச் சொல்லப்போனால், உயரத்திற்குத் தக்கபடி எடை இல்லை.
அவளுடைய மார்பகங்கள் எலுமிச்சங்காய்கள் அளவிற்குத்தான் இருந்தன. நீலநிற ஷிஃபான் புடவையைக்
கொண்டு மூடப்பட்டிருந்த பின்பகுதி ஒட்டிப்போயும், சப்பிப்போயும் இருந்தன. பெண்மைத்தனத்தை விட ஆண்மைத் தனமே
அதிகமாக இருந்தது. அந்தத் தோற்றத்திலும், உடலமைப்
பிலும், பிறகு அவளுடைய முகத்திலும்
இருந்து கண்களை எடுக்க என்
தந்தை மிகவும் சிரமப்படுவதைப் போல
எனக்குத் தோன்றியது. அவளுடைய கண்களையும் என்
தந்தையின் கண்களையும் கண்களுக்குப் புலப்படாத ஒரு கயிறைக் கொண்டு
யாரோ கட்டி விட்டிருப்பதைப் போல...
""ஸ்ரீதேவி, இவங்கதான் மனநோய் மருத்துவமனையை ஆட்சி
செய்யும் டாக்டர் மாலதி. எனக்கு
என்றைக்காவது பைத்தியம் பிடித்தால், எனக்கு இலவசமாக சிகிச்சை
செய்வதாக மாலதி கூறியிருக்காங்க'' - என்
தந்தை குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு சொன்னார்.
நான்
சிரிக்கவில்லை. என் தந்தைக்குப் பைத்தியம்
பிடித்தால், அதை நினைத்து நான்
சிரிக்க முடியாதே! என் தந்தையும் டாக்டர்
மாலதியும் வெறும் சம்பந்தமில்லாத விஷயங்களைப்
பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். என் தந்தை அந்தப்
பெண் அருகில் இருக்கும் போது
மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார் என்பதை சமையல் காரர்களும்
சமையலைப் பரிமாறுபவர்களும் என்னைப் போலவே புரிந்துகொண்டிருந்தார்கள்.
மூன்றரை
மணிக்கு தேநீர் குடித்த பிறகு,
என் தந்தை தனியாக டாக்டரை
தன்னுடைய காரில் அழைத்துக்கொண்டு போய்
வீட்டிலோ மருத்துவமனையிலோ விட்டுவிட்டு வந்தார். என் தந்தை திரும்பி
வருவதற்கு முன்னால் வேலைக்காரர்கள் என் காதுகளில் விழுவது
மாதிரி அந்தப் பெண்ணை விமர்சித்தார்கள்.
"எஜமானை அவங்க மயக்கிட்டாங்க' என்று
சமையல்காரன் உரத்த குரலில் சொன்னான்.
"கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தால், நாங்கள் அல்ல- ஸ்ரீதேவிக்குட்டிதான்
சிரமப்படும்' என்று ஒரு கிழவி
சொன்னாள்.
""அப்பா அந்த பெண்ணைத்
திருமணம் செய்தால், நான் அந்த நிமிடத்திலேயே
வீட்டை விட்டு எங்கேயாவது போய்விடுவேன்''
என்று நான் சொன்னேன். ""குழந்தை, நீ
இந்த வீட்டை விட்டு எங்கேயும்
போகக் கூடாது. உனக்கு உரிமை
இருக்குற வீடு. இதை ஒரு
இரண்டாம் தாய்க்கு வீசிக் கொடுத்துவிட்டு, நீ
இந்த ஊரை விட்டுப் போய்விட்டால்
அவங்களுக்கென்ன இழப்பு?' -சமையல் காரன் கேட்டான்:
""இழப்பு உனக்குத்தான், ஸ்ரீதேவிக்குட்டி.''
என்னுடைய
வளர்ப்புத் தாயான கிழவி சொன்னாள்.
அன்று
சாயங்காலம் தன்னுடன் இருந்து டி.வி.
பார்ப்பதற்காக என் தந்தை என்னை
முன்னறைக்கு அழைத்தார். நான் அந்த அழைப்பை
மறுத்துவிட்டேன். என்னுடைய அறைக்குள்ளேயே உணவு நேரம் வரை
புத்தகம் வாசிப்பதில் ஈடுபட்டு நேரத்தைச் செலவிட வேண்டும் என்று
நான் முடிவெடுத்தேன். டாக்டர் மாலதியுடன் நெருங்க
நெருங்க நான் என் தந்தையை
விட்டு விலகி விலகி, அந்தப்
பெண்ணை என் வீட்டில் இரண்டாவது
தாயாக ஏற்றுக்கொள்ளும் நாள் வரும்போது, நான்
முற்றிலும் அறிமுகமே இல்லாத ஒருத்தியாக மாற
வேண்டும் என்பது என்னுடைய நோக்க
மாக இருந்தது. அவளை வாழ்க்கையின் பங்காளியாக
ஆக்கக்கூடிய தந்தை என்னுடைய தேவை
இல்லையே! உண்மையாகச் சொல்லப்போனால் என் தாய் இறந்த
துக்க நாளிலிருந்து இந்தப் பதினைந்து வருட
காலமாக நான்தான் என் தந்தையின் வாழ்க்கைப்
பங்காளியாக இருந்து வந்திருக்கிறேன். நான்
தேர்ந்தெடுத்த ஆடைகளை அவர் அணிந்தார்.
நான் விருப்பப்பட்ட தம்பதிகளை மட்டுமே அவர் வீட்டில்
நடக்கும் விருந்துகளுக்கு அழைத்தார். எனினும், திடீரென்று எங்கிருந்து வந்து சேர்ந்தாள் இந்த
டாக்டர் மாலதி? எந்த மண்
மேட்டுக்குள்ளிருந்து மேலே வந்தது இந்த
சாணகப் புழு?
என்
தந்தையுடன் கொண்டிருந்த இந்த நிழல் போரில்
வேலைக்காரர்கள் என் பக்கம் இருந்தார்கள்.
என்னுடைய உத்தரவு களைப் பின்பற்றி
நடப்பதற்கான சூழ்நிலையே எந்தச் சமயத்திலும் வந்ததில்லை
என்று ஒருவரோடொருவர் பெருமையாகக் கூறிக் கொண்டிருந்தவர்கள் டாக்டர்
மாலதியை வெறுத்தார்கள். அவள் உணவு சாப்பிடுவதற்காக
வரும் நாளன்று சைவ உணவுகளில்
அளவுக்கும் அதிகமாக உப்பைச் சேர்ப்பதில்
அவர்கள் உற்சாகம் காட்டினார்கள். மாமிச உணவு சாப்பிடும்
நானும் என் தந்தையும் அப்படிப்பட்ட
காய்கறிகள் எதையும் சாதத்துடன் சேர்த்துச்
சாப்பிடுவதில்லை. டாக்டர் மாலதி உயர்ந்த
குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும்; அவள் மீன், மாமிசம்
போன்றவற்றைச் சாப்பிடுவது இல்லை என்றும் என்
தந்தை சமையல்காரனிடம் கூறியிருந்தார். அவள் விருந்தாளியாக வந்த
நாளன்று அவருக்காக சமையல் செய்யும் சாம்பாரிலும்
அவியலிலும் எந்தச் சமயத்திலும் வெங்காயத்தையோ
வெள்ளைப் பூண்டையோ சேர்க்கக்கூடாது என்றும் என் தந்தை
கட்டளையிட்டிருந்தார்.
அவள்
ஒரு நாள் எங்களுடன் சேர்ந்து
உணவு சாப்பிட உட்கார்ந்திருந்தபோது, நான் சைவ
உணவு சாப்பிடுபவர்களைக் கிண்டல் செய்தேன். டாக்டர்
மாலதி உணவு சாப்பிடுவதை உடனடியாக
நிறுத்திவிட்டு என்னையே பார்த்தாள்.
""உண்மையாகச் சொல்லப்போனால் மாமிசம் சாப்பிடுபவர்கள்- பிணத்தைத்
தின்பவர்கள்'' -அவள் சொன்னாள்.
""ஆட்டை வெட்டிக் கொன்ற
நாளன்றே சமையல் செய்து சாப்பிடுபவர்களை,
பிணத்தைத் தின்பவர்கள் என்று கூறுவது சரியாக
இருக்குமா?'' -நான் கேட்டேன்.
""கொல்லப்பட்ட எந்த உயிராக இருந்தாலும்
பிணம்தான்'' -டாக்டர் மாலதி சொன்னாள்.
என் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவளுடன்
சண்டை போட்டு வெற்றி பெற
முடியாது என்ற விஷயத்தை அந்த
நிமிடத்தில் நான் புரிந்துகொண்டேன். அதற்குக்
காரணம்- அன்றிலிருந்தே என் தந்தை ஒரு
சைவம் சாப்பிடக்கூடிய மனிதராக மாறி, நான்
எடுத்து வைத்த பொரித்த கோழியை
அவர் சுவைத்துப் பார்க்கக்கூட இல்லை. மனிதர்கள் வருடக்கணக்காக
மிருகங்களுக்குச் செய்து வரும் மிகப்
பெரிய பாவங்களின் காரண மாகத்தான் உலகமெங்கும்
மனிதப்பிறவி சபிக்கப்பட்ட இனமாக ஆகிவிட்டது என்று
டாக்டர் மாலதி சொன்னாள். மிருகங்களுக்குச்
செய்த பாவம் அல்ல- செய்து
கொண்டிருக்கும் பாவம் எப்போதும் நம்மை
தண்டிக்கப்பட்டவர்களாக ஆக்கும் என்றும், தண்டனைக்
குரியவர்களாக ஆக்கும் என்றும் அவள்
சொன்னாள்.
""நாம் என்ன தண்டனையை
அனுபவித்துக் கொண்டிருக்கி றோம்?'' -நான் கேட்டேன்.
""புற்று நோய், எய்ட்ஸ்,
அணு ஆயுதப் போர் பயம்-
இவை அனைத்தும் மிருகங்களின் சாபம் மூலம் அனுபவிக்க
வேண்டி வந்த தண்டனைகள்தான்'' -அவள்
சொன்னாள்.
""மாலதி, விஷயத்தை மாற்றணும்.
ஸ்ரீதேவியை பயமுறுத்த வேண்டிய தேவையில்லை'' - என்
தந்தை சொன்னார். சர்வ சாதாரணமாக, ஒரு
புன்சிரிப்புடன், எனக்கும் அந்தப் பெண்ணுக் கும்
இடையே நடந்து கொண்டிருந்த வாக்குவாதங்கள்
சிறிதும் முக்கியத்தன்மை அற்றது என்று என்
தந்தை நடித்துக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து
என் தந்தை தன் நண்பர்களிடம்
கூறினார்:
""ஸ்ரீதேவியை ஒருத்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டால்,
அதற்குப் பிறகு எனக்கு எந்தக்
கவலையும் இல்லை.''
பதினெட்டு
வயதே ஆகியிருக்கும் மகளை, அவள் விருப்பப்படும்
காலம் வரைக்கும் படிக்க வைக்கும்படி அவர்கள்
ஒவ்வொருவரும் என் தந்தைக்கு அறிவுரை
கூறினார்கள்.
""ஸ்ரீதேவி சாதாரண குழந்தைதானே? அவள்
இன்னும் கொஞ்ச காலம் விளையாடி
வளரட்டும். அவள் வீட்டை விட்டுப்
போய்விட்டால், வீடு இருள் நிறைஞ்சதா
ஆயிடும்'' -ஒரு நாள் என்
தாயின் சினேகிதியாக இருந்த அம்மிணியம்மா சொன்னாள்.
அவளுடைய கணவரும் அதே கருத்தைத்
தொடர்ந்து சொன்னார்.
அன்று
இரவு தூக்கமே வராமல் சிறிது
நேரம் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கிடந்துவிட்டு, நான்
படுக்கையை விட்டு எழுந்து எங்களுடைய
வீட்டின் தளங்களிலும் அழகாக அலங்கரிக் கப்பட்ட
அறைகளிலும் சுற்றிக் கொண்டிருந்தேன். என் தந்தைக்கு பூஜை,
பிரார்த்தனை ஆகியவற்றில் நம்பிக்கை கிடையாது. ஆனால், என் தாய்க்குச்
சொந்தமாக இருந்த பூஜையறையில் இருந்த
ஒரு விநாயகர் சிலைக்கு முன்னால் எல்லா நேரங்களிலும் ஒரு
குத்து விளக்கு எரிந்து கொண்டே
இருக்கும். வீட்டில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த அதற்கு
முன்னால் கவலையுடன் நான் விழுந்து வணங்கினேன்.
""நீ இருந்தும் இந்த வீட்டில் அமைதி
இல்லாத சூழ்நிலை உண்டாகி இருக்கிறதே!'' -நான்
முணுமுணுத் தேன். விளக்கின் திரி
அதற்கு பதில் கூறவில்லை. வரவேற்பறையிலும்,
தளங்களிலும் அலங்காரப் பொருட்களாக இருந்த சிலைகளுக்கு முன்னாலும்
நான் தலை குனிந்து நின்றேன்.
எனக்கு உதவி செய்வதற் காகவாவது
டாக்டர் மாலதியை ஒரு வழி
பண்ண வேண்டும் என்று நான் அவற்றிடம்
கேட்டுக்கொண்டேன். இரண்டு ஏக்கர் பரப்பள
விற்கு விரிந்து கிடந்த தோட்டமும் அதில்
இருக்கும் பழ மரங்களும் பூந்தோட்டங்களும்
எனக்குச் சொந்தமாக ஆகாமல் போய் விட்டால்,
இந்த அழகான இல்லம் வேறொருத்தருக்குச்
சொந்தம் என்று ஆகிவிட்டால்... ஒரு
நிமிடம்கூட வாழ மாட்டேன் என்று
நான் யாரிடம் என்றில்லாமல் கூறிக்கொண்டேன்.
என்னுடைய வளர்ப்புப் பூனை "ம்யாவ்' என்று குரல்
எழுப்பியது. ""உன் இடமும் இல்லாமல்
போகும்'' -நான் அவளிடம் சொன்னேன்.
எனக்கு எதையும் தெளிவாகப் பார்க்க
முடியவில்லை. என்னுடைய கண்ணீர் கன்னங்களிலும் கழுத்திற்குக்
கீழேயும் துளித்துளியாக விழுந்து கொண்டிருந்தது. எனக்குள் உண்டான மாறுதல் என்
தந்தையிடம் ஏமாற்றத்தை உண்டாக்கியது. தொடர்ந்து அவர் கோபப்படக்கூடிய மனிதராக
மாறினார். என் போராட்டத்திற்குக் கீழ்ப்படிந்து
மாலதி என்ற பெண்ணை உதறி
விடுவதற்கு என் தந்தை தயாராக
இல்லை. என் தந்தை பதினான்கு
வருடங்கள் ஒரு பெண்ணின் தேவையே
இல்லாமல் எனக்காக மட்டுமே அப்படிப்பட்ட
சுகங்களைத் தியாகம் செய்து வாழ்ந்தார்
என்றும்; இனி வரும் நாட்களிலாவது
இளமையை இழக்காதவரும், நல்ல உடல் நலத்தைக்
கொண்டவரு மான அவர் திருமணம்
செய்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக் காமல் இருக்க வேண்டுமென்றும்
என் தந்தை மற்றும் தாயாரின்
நண்பர்களும் சிநேகிதர்களும் என்னிடம் கூறினார்கள்.
""ஸ்ரீதேவி, நீ திருமணமாகி இந்த
வீட்டை விட்டு வெளியே போன
பிறகு, உன் அப்பாவை யார்
பார்த்துக் கொள்வார்கள்?'' -அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.
என்
தந்தைக்கு தனிமையைத் தரக் கூடாது என்பதற்காக
என்றென்றும் ஒரு திருமணமாகாத பெண்ணாக
அந்த வீட்டில் இருக்கத் தயார் என்று நான்
சொன்னதை அவர்கள் தீவிரமாகவே எடுத்துக்
கொள்ளவில்லை.
""உன்னைப் போன்ற ஒரு
அழகான இளம் பெண் திருமணம்
ஆகாமல் அலமாரிக்குள் அடைந்து கிடப்பதா? அது
நடக்காத விஷயம். இரண்டோ மூன்றோ
வருடங்களுக்கு உன்னுடைய வாசலில் இளைஞர்கள் வரிசையில்
வந்து நிற்க ஆரம்பிப்பார்கள்'' -அம்மிணியம்மா
சொன்னாள்.
என்னுடைய
கல்லூரியில் என்னுடன் சேர்ந்து படித்த இளைஞர் களில்
ஒருவன்கூட என்னை ஈர்க்கவில்லை. நான்
அவர்கள் ஒவ்வொருவரையும் என் தந்தையுடன் ஒப்பிட்டுப்
பார்த்தேன். உருக்குக் கம்பிகளைப் போன்ற நரைத்த முடிகளை
இங்குமங்குமாகக் காட்டும் அந்தத் தலையையும், சுத்தத்தையும்,
இளமையான கைவிரல்களையும், மூலிகை வாசனை வரும்
சோப்பை மட்டுமே பயன்படுத்தும் என்
தந்தை அருகில் இருப்பதைக் காட்டும்
நறுமணத்தையும் என்னால் எப்படி மறக்க
முடியும்? இளம் நிறங்களில் இருக்கும்
சில்க் சட்டைகளை மட்டுமே அவர் அணிந்தார்.
என் தந்தை ஆடை அணியும்
உயர்ந்த நிலை, என் கண்ணோட்டத்தில்
இளைஞர்களை மிகவும் பாமரர்களாகக் காட்டியது.
அவர்கள் உரத்த குரலில் பேசும்
முறை என்னை வெறுப்படையச் செய்தது.
கட்டுப்பாடு இல்லாத குரல்களும்தான். என்
தந்தையின் குரல் மென்மையானதாகவும் ஆண்மைத்தனம்
கொண்டதாகவும் இருந்தது. அந்தக் குரல் கழுத்திற்குக்
கீழே இதயத்திற்குள்ளிருந்து வரக்கூடிய சத்தமாக இருந்தது. அதன்
வேர்கள் துடிக்கக்கூடிய இதயத்தில் இருந்தன. அதனால்தான் இருக்க வேண்டும் - என்
தந்தை தன்னுடைய சிறுசிறு தேவைகளுக் காக என்னை அழைப்பதை
நிறுத்தியபோது, நான் திடீரென்று வறுமையில்
வாடிக்கொண்டிருப்பதைப் போல எனக்குத் தோன்ற
ஆரம்பித்துவிட்டது. நான் இல்லாமல் அவர்
கடைகளுக்குப் போகவும், தனக்குத் தேவைப்பட்ட புதிய ஆடைகளை வாங்கவும்
ஆரம்பித்த போது, நான் முழுமையாக
நொறுங்கிப் போய் விட்டேன். நான்
அந்த வீட்டில் ஒரு தேவையற்ற பொருளாக
ஆகிக் கொண்டிருந்தேன். மாலதி என்ற மணப்பெண்
வலக் காலை வைத்து ஏறி
வருவதற்காக அந்தப் பளிங்குப் படிகள்
காத்துக் கிடந்தன. என் தந்தையின் மெத்தையில்
விலை மதிப்புள்ள சாட்டின் விரிப்புகள் தோன்றின. ஜன்னல் கதவுகளில் சில்க்
திரைச்சீலைகள் வந்து விழுந்தன. எந்தச்
சமயத்திலும் அடைக்கப்படாமல் இருந்த அந்தக் கதவு
எல்லா நேரங்களிலும் மூடப்பட்டிருந்தது. கதவுக்கு அப்பால் என் பாசத்திற்குரிய
தந்தை படுத்திருக்கிறார் என்பதும், கதவைத் திறந்து உள்ளே
நுழைந்தால் முன்பைப் போல அவர் என்னைக்
கட்டிபிடித்துக் கொண்டு, என் முடிகளில்
தன் விரல்களைக் கொண்டு வருடுவார் என்பதும்,
என் மனதில் இருக்கும் அச்சங்களை
அறிவாலும் பாசத்தாலும் முழுமையாக இல்லாமல் செய்வார் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், ஒரு வினோதமான
கெட்ட எண்ணம் கதவுக்கு வெளியே
நின்றிருந்த என் கைகளை செயல்பட
விடாமல் செய்தது. என் தந்தை வாசிக்கும்
பத்திரிகையின் பக்கங் களின் சத்தங்களை
எவ்வளவு கூர்மையாக கவனித்தும் என்னால் கேட்க முடியவில்லை.
என் தந்தையும் என்னைப் போலவே அறிமுகமில்லாத,
புதுமையான ஒரு மவுனத்தின் பிடியில்
சிக்கிக் கொண்டு விட்டாரோ? தந்தையின்
கண்களும் ஈரமாகின்றனவோ? என் தந்தையும் நானும்
தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு எங்களுடைய இரவு உணவைச் சாப்பிட்டதை
அவர் மறந்துவிட்டாரோ? மழை தொடங்கியதும், என்
அறைக்குள் வந்து ஜன்னல் கதவுகளை
அடைத்ததை என் தந்தை நினைத்துப்
பார்க்கவில்லையா?
என்
தந்தையின் நினைவுகளும் டாக்டர் மாலதியின் கட்டுப்
பாட்டிற்குள் சிக்கிக்கொண்டு விட்டனவா? என் தந்தையின் அன்றாடச்
செயல்களில் பல மாற்றங்களையும் அவள்
உண்டாக்கி விட்டிருக்கிறாள். திருமணத்திற்குப் பிறகு, தனக்கு ஒரு
மகள் இருக்கிறாள் என்ற விஷயத்தை என்
தந்தை அவ்வப்போது மறந்துகூட போகலாம். யாருடனோ எதனுடனோ எதிர்ப்பைக்
காட்ட வேண்டும் என்று முடிவெடுத்த நான்,
இரவு நேரத்தில் பூஜை அறையின் அணையா
விளக்கின் திரியை ஊதி அணைத்தேன்.
வேலைக்காரர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.
என் பூனை மட்டும் அந்த
அசாதாரணமான செயலைப் பார்த்து, தனக்கு
அதன் அர்த்தம் புரிந்துவிட்டது என்பதைப் போல கண்களை மூடிக்
கொண்டது. "ம்யாவ்' -அது சொன்னது.
ம்யாவ்...
என் தந்தை ஒரு மாலை
வேளையில் என்னை க்ளப்பிற்கு அழைத்துச்
சென்றார். என் வயதில் இருப்பவர்களுடன்
சேர்ந்து பேட்மின்டனோ கேரமோ விளையாடும்படி அவர்
சொன்னார். ""உன் வயதில் இருக்கும்
சிநேகிதிகள் உனக்கு இல்லாமல் இருக்
கிறார்கள். முன்பு செய்ததைப் போல
நீ சிநேகிதிகளை அழைத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்கோ
ஷாப்பிங்கிற்கோ செல்வதும் இல்லை. சமீபகாலமாக முன்கூட்டியே
வயதாகிவிட்ட ஒருத்தியைப் போல நீ ஆகிவிட்டாய்''
- அவர் காரில் இருக்கும்போது கூறினார்.
டிரைவரின் காதில் விழும்படி அந்த
அளவிற்குக் கடுமையான சொற்களை என் தந்தை
பயன்படுத்தியது என்னைக் கோபமடையச் செய்தது.
க்ளப்பில் இருந்த என் தந்தையின்
நண்பர்கள் என்னைச் செல்லப் பெயர்கள்
வைத்து அழைத்தபோதும், என்னைப் போன்ற புத்திசாலித்தனமான
ஒரு மகள் கிடைத்ததற்காக என்
தந்தையைப் புகழ்ந்தபோதும், நான் சாதாரண மரியாதைகளைக்கூட
விலக்கி, மிகவும் அமைதியாக இருந்தேன்.
என் தந்தையின் நண்பர்களுடைய ஆண் பிள்ளைகள் முகப்பருவும்
வெளியே தெரியக்கூடிய அளவிற்கு பற்களையும் கொண்டவர்கள். என்னைத் தங்களுடன் சேர்ந்து
விளையாட அழைத்தார்கள். கொசுவையோ ஈயையோ தட்டுவதைப் போல
நான் என்னுடைய வலது கையால் அவர்களை
சிரமமே இல்லாமல் தவிர்த்தேன். என் கண்களில் என்னுடைய
வயதில் இருந்த இளைஞர்கள் முழுமையான
சிலைகளாகத் தெரிந்தார்கள். அவர்களுடைய செயல்களிலும் அசைவுகளிலும் எந்தவொரு உயர்ந்த தன்மையையும் நான்
பார்க்கவில்லை. என்னுடைய முரட்டுத்தனமான நடத்தையால் நான் அவர்களை என்னிடமிருந்து
விலகி இருக்கும்படி செய்தேன். மற்ற இளம் பெண்கள்
அவர் களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன்
பேட்மின்டன் விளையாடவும், உரையாடவும் செய்தார்கள். நான் என்னுடைய வெள்ளை
நிறப் பிரம்பு நாற்காலியில் சாய்ந்து
படுத்துக்கொண்டு, முழுமையான வெறுப்புடன் அந்த இளம் பெண்களையும்
இளைஞர்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். க்ளப்பிற்கு மேலே வானத்தில் ஒரு
கூட்டம் நட்சத்திரங்கள் வந்து பரவி நின்றபோது
என் தந்தை என்னை நோக்கி
நடந்து வந்தார். தனியாகப் புல் வெளியில் அமர்ந்தி
ருந்த என்னையே அவர் புருவங்களைச்
சுருக்கிக்கொண்டு பார்த்தார்.
""என்ன ஆச்சு, ஸ்ரீதேவி?
அவர்கள் யாரும் உன்னை விளையாடுவதற்கு
அழைக்கலையா?'' -என் தந்தை கேட்டார்.
""எனக்கு அவர்களுடன் சேர்ந்து
விளையாட கொஞ்சமும் விருப்பம் இல்லை'' -நான் சொன்னேன்.
""அவர்கள் இந்த நகரத்தில்
இருக்கும் வசதி படைத்த குடும்பங்களைச்
சேர்ந்த பிள்ளைகள். அவர்களுடைய நட்பு உனக்கு அவசியம்
தேவை. இன்று இல்லாவிட்டாலும் நாளைக்கு
அவர்களில் ஒருவனை உனக்கு கணவனாகத்
தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்''
-என் தந்தை சொன்னார்.
""ஒரு கணவனிடம் நான்
எதிர்பார்க்கக்கூடிய குணங்கள் எதுவும் இந்த இளைஞர்களிடம்
இல்லவே இல்லை. முகம் முழுவதும்
சலம் நிறைந்த முகப்பரு. பற்களைத்
தேய்க்கக்கூட இல்லை. கை விரல்களில்
கறுத்த சேறு. இவர்களில் இருந்து
ஒரு ஆளை நான் எந்தச்
சமயத்திலும் கணவனாக ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்.
அதைவிட கடலுக்குள் குதித்து தற்கொலை செய்து கொள்வேன்''
-நான் சொன்னேன்.
""நீ ரொம்பவும் மாறிட்டே''
-என் தந்தை குறைப்பட்டுக் கொண்டார்.
""அப்பா, நீங்க ரொம்பவும்
மாறிட்டீங்க'' -நான் சொன்னேன்.
தொடர்ந்து
க்ளப்பிலிருந்து வீடு வரை காரில்
வரும்போது நாங்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவே
இல்லை. இரவு உணவு சாப்பிடுவதற்காக
மேஜையின் இரண்டு பக்கங்களில் அமர்ந்திருந்தபோது,
தந்தை சொன்னார்.
""இந்த வயதில் சிலருக்கு
காரணமே இல்லாமல் ஒரு குணம் வந்து
சேர்வது சர்வ சாதாரணமாக நடக்கக்
கூடியதுதான் என்று மாலதியே சொன்னாங்க.
ஜெர்மனியர்கள் அதை "வெல்ஷ்மேஷ்' என்று கூறுகிறார்களாம். இருபது
வயது வந்துவிட்டால், அது தானாகவே போய்
விடுமாம்.''
""இறுதியில் நான் ஒரு பைத்தியம்
என்று அவங்க சொல்லுவாங்க. அப்பா,
அந்தப் பெண்ணின் வார்த்தைகளை வேத வார்த்தைகள் என்று
நினைப்பது ஆபத்தானது'' -நான் சொன்னேன். என்னைப்
பற்றி அந்தப் பெண்ணுடன் விவாதிப்பது
என்ற விஷயத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு மோசமான
செயல் என்று மட்டுமே என்னால்
பார்க்க முடிந்தது. என்னுடைய பேராசிரியர்களும் நண்பர்களும் என்னுடைய கவலைக்கான காரணத்தை இடையில் அவ்வப்போது விசாரிப்பதுண்டு.
ஆனால், என் தந்தைமீது நான்
வைத்திருந்த பாசத்தால், அவரை மற்றவர்களுக்கு முன்னால்
குற்றவாளியாக நிறுத்த எந்தச் சமயத்திலும்
என்னால் முடியாது. ஆனால், என் தந்தை?
நாற்பத்தெட்டு வயதைக் கடந்த என்
தந்தை? என் தந்தை என்னுடைய
எதிரியான அந்த மனநல மருத்துவரிடம்
வீட்டில் இருக்கும் ரகசியங்கள் முழுவதையும் சொல்லி முடித்துவிட்டார். அவருடைய
விலை குறைந்த பரிதாபத்தைப் பெறுவதற்காக
தன்னுடைய ஒரே மகளை மனநல
நோயாளியாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டார்.
""அப்பா, நான் எந்தக்
காலத்திலும் உங்களை மன்னிக்கவே மாட்டேன்''
-நான் சொன்னேன். என் தந்தை தக்காளி
சூப் பருகிக் கொண்டிருந்தார். திடீரென்று
தன்னுடைய கரண்டியைத் தட்டில் வைத்துவிட்டு, அவர்
நாற்காலியை விட்டு எழுந்தார். அவர்
என்னை இறுக அணைத்து, என்னிடம்
மன்னிப்பு கேட்கத் தயாராவார் என்று
நான் அந்த நிமிடத்தில் ஆசைப்பட்டேன்.
முன்பைப் போல அவர் என்னை
இறுக அணைப்பார் என்றும், என் செல்லமகளே என்று
அழைத்து என்னுடைய கண்ணீரைத் தன்னுடைய துவாலை யால் துடைப்பார்
என்றும் நான் நம்பினேன். ஆனால்,
அவர் என்னைப் பார்க்கக்கூடச் செய்யாமல்,
தன்னுடைய அறையைத் தேடிப் போய்விட்டார்.
கதவை சத்தமாக இழுத்து அடைத்தார்.
இனியொருமுறை அவருடைய அன்பு எனக்குக்
கிடைக்காது என்று அப்போது மட்டுமே
எனக்குப் புரிந்தது.
நானும்
சாப்பாட்டை முழுமையாக முடிக்காமல் எழுந்தேன். வேலைக்காரன் திகைத்துப் போய்விட்டான். நானும் என்னுடைய படுக்கையறைக்குள்
நுழைந்து கதவைப் "படார்' என்று அடைத்தேன்.
அன்று இரவு வீட்டை விட்டு
வெளியேறி ஏதாவதொரு நகரத்திற்கு வண்டி ஏறினால் என்ன
என்றுகூட நான் நினைத்தேன். எனக்கு
நான் பிறந்து வளர்ந்த வீட்டில்
இனி என்ன இடம் இருக்கிறது?
என் தந்தையின் இதயத்தில் இடமில்லாதபோது நான் இனி யாருக்காக
அங்கே வாழ வேண்டும்? இல்லத்தரசியாக
டாக்டர் மாலதி வந்து சேர்ந்தால்,
வேலைக்காரர்களும் அவளுடைய உத்தரவுகளை மட்டுமே
பின்பற்ற ஆரம்பிப்பார்கள். என்னுடைய கட்டளைகளை ஒரு பைத்தியக்காரியின் உத்தரவுகளாக
எடுத்துக் கொள்ள வேண்டும் என்று
அந்தப் பெண் அவர்களிடம் கூறுவாள்.
என் தந்தை கூறியதால் இருக்க
வேண்டும் - மறுநாள் காலை பத்து
மணி ஆகும்போது அம்மிணியம்மா என் அறைக்கு வந்தாள்.
என்னை அருகில் நிறுத்தி, என்
கன்னங்களை வருடியவாறு அவள் சொன்னாள்:
""ஸ்ரீதேவி, உன் மனதில் என்ன
கவலை இருந்தாலும், அதைப் பற்றி என்கிட்ட
சொல்லு. நான் உன் தாயின்
மிகவும் விருப்பத்திற் குரிய சினேகிதியாக இருந்தேன்.
உன் சொந்தத் தாயிடம் கூறுவதைப்
போல, முழு சுதந்திரத்துடன் என்கிட்ட
பேசணும்.''
நான்
எதுவும் கூறாமல் அவளுடைய மடியில்
தலையை வைத்துப் படுத்தேன். அவளிடம் என்றல்ல - யாரிடமும்
நான் என் தந்தையை விமர்சித்துக்
கூறுவதற்குத் தயாராக இல்லை. என்
தந்தைக்கும் எனக்குமிடையே இருக்கும் விஷயங்களில் அன்னியர்களோ வேலைக்காரர்களோ தலையிடுவதை நான் விரும்பவில்லை.
""ஸ்ரீதேவி, உன்னை நினைச்சு அப்பா
எந்த அளவிற்குக் கவலைப் படுகிறார் என்று
உனக்குத் தெரியாதா? குழந்தை, அப்பாவுக்கு இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திடாதே!
அப்பாவுக்கு மாரடைப்பு ஏதாவது வந்துட்டா....? குழந்தை,
அதை நீ விரும்பமாட்டேல்ல?'' - அவள் கேட்டாள்.
""நான் என்ன செய்யவேண்டும்
என்று அப்பா விரும்புகிறார்? சீக்கிரமா
முகத்துல பரு இருக்குறவன் யாரையாவது
திருமணம் செய்து கொண்டு நான்
இந்த வீட்டை விட்டுப் போக
வேண்டுமென்று என் தந்தை ஆசைப்படுகிறாரா
என்ன? என் தந்தை டாக்டர்
மாலதியைத் திருமணம் செய்து கொண்டு வந்தால்,
நான் இங்கு அவர்களுக்குத் தொல்லையாக
இருப்பேன் என்று அப்பா நினைக்கிறாரோ?
என்னால் கிழட்டுத் தம்பதிகள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதில்லை'' - நான் சொன்னேன்.
அம்மிணியம்மா
சிரித்தாள்.
""அப்பாவும் ஒரு ஆண்தானே? முதுமை
வர்றதுக்கு இன்னும் பத்தோ இருபதோ
வருடங்கள் தாண்டனும். அவர் திருமணம் செய்து
கொள்ளட்டும். உனக்கும் ஒரு அம்மா கிடைப்பாளே!''
- அவள் சொன்னாள்.
""எனக்கா? அந்தப் பெண்ணை
நான் ஒரு தாயாக எடுத்துக்
கொள்வேன் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
பைத்தியம் பிடித்தவர்களுக்கு மத்தியில் இருந்ததால் அவளும் அரை லூசாகவே
ஆகிவிட்டாள். எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்குன்னு
அவள் என் அப்பாவிடம் சொல்லியிருக்கா.
என்னை மனநல மருத்துவ மனையில்
கொண்டுபோய் அவள் சேர்க்கச் சொன்னால்,
அப்பா அவள் கூறியபடி நடப்பார்''
- நான் சொன்னேன்.
அம்மிணியம்மா
என் உதட்டில் தன்னுடைய கைவிரலை வைத்தாள்.
""உஷ்...... சத்தம் போட்டுச் சொல்லாதே.
அப்பாவுக்கும் மகளுக்கு மிடையே இருக்கும் கருத்து
வேறுபாட்டை வேலைக்காரர்கள் தெரிஞ்சிக்கக் கூடாது'' - அவள் சொன்னாள்.
""இங்கே வேலை பார்ப்பவர்களை
வெறும் வேலைக்காரர்களாக நான் நினைப்பது இல்லை.
அவர்கள் என்மீது வாழ்நாள் முழுவதும்
பாசம் வைத்திருப்பவர்கள். அவர்கள் எனக்கு என்னுடைய
சொந்தக்காரர்களைப் போல.... அவர்களுடைய அன்பு
மட்டும்தான் எனக்கு ஆறுதலாக இருக்கு''
- நான் பதைப்பதைப்புடன் சொன்னேன்.
""அழாதே ஸ்ரீதேவி... நானும்
உன்னுடைய அப்பாவும் ஒண்ணா உட்கார்ந்து கொஞ்சம்
பேசுறோம். இந்தப் பிரச்சினைக்கு பரிகாரம்
கண்டுபிடிக்கணுமே!'' - அவள் சொன்னாள்.
என்னுடைய
அறையில் நானும் பூனையும் மட்டுமே
எஞ்சி இருந்தோம். என் தாயின் சிரித்துக்கொண்டிருக்கும்
ஓவியமும் இருந்தது. நான் கட்டிலில் படுத்து,
போர்வையால் என் உடலை மூடிக்கொண்டேன்.
கல்லூரிக்கு அன்று போக வேண்டாம்
என்று நான் படுத்துக்கொண்டே தீர்மானித்தேன்.
நான் எதற்கு படிப்பைத் தொடர
வேண்டும்? என் தேர்வுகளின் வெற்றியைப்
பார்த்துப் பெருமைப் படுவதற்கு இனிமேல் யாரும் இல்லையே!
படிப்பு சிறிதும் இல்லாதவர்களைவிட படிப்பை முடித்தவர்களால் மனிதர்களை
வேதனைப்படச் செய்ய முடியலாம். வேதனைப்படச்
செய்யும் தகுதியை நான் எதற்குத்
தேடி அடைய வேண்டும்? சமையலோ
தையலோ தோட்ட வேலையோ கற்றுக்
கொண்டால், வேறு யாரையும் நம்பி
இருக்காமல் வாழ என்னால் முடியும்.
வளைகுடா நாடுகளுக்குச் சென்று ஒரு தையல்காரியாகவோ
சமையல்காரியாகவோ நான் வாழலாம். என்
தந்தையின் வீடு, சொத்து, அன்பு
- எல்லாவற்றையும் அந்தப் பெண் தனியாக
இருந்து அனுபவிக்கட்டும்....
ஒரு
மாலை நேரத்தில் டாக்டர் மாலதி இரவு
உணவுக்கு வர இருக்கும் விஷயத்தைத்
தெரிந்து கொண்ட நான் என்
தோழிகளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தேன். நான்
மாலதியை வெறுக்கிறேன் என்ற விஷயம் அவர்களுக்கு
நன்றாகத் தெரியும். அதனால் மாலதியின் வழிகாட்டுதல்களை
எதிர்பார்ப்பதைப் போல நடித்துக் கொண்டு
அவர்கள் சில கேள்விகளைக் கேட்டார்கள்.
அந்தக் கேள்வி கேட்கும் செயல்
ஒரு ஆளை அவமானப்படுத்தும் முயற்சிக்கான
ஆரம்பம் என்பதை மாலதி அறிந்திருக்கவில்லை.
மனநல நிபுணர் என்ற நிலையில்
அந்த இளம்பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சிந்தித்துக் கூறுவதற்கு அவள் முடிந்தவரையில் முயற்சி
செய்தாள்.
""விதவையான என் தாய் எப்போது
பார்த்தாலும் பணவசதி படைத்த ஆண்களைத்
தேடி அலைந்து கொண்டிருக்கிறாள். விருந்து
நடக்கும் இடங்களில் அவள் காந்தப் பார்வைகளுடனும்
புன்சிரிப்புகளுடனும் ஆண்களை வசீகரிக்க சிறிதும்
வெட்கம் இல்லாமல் முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். இதை மாற்றுவதற்கு என்ன
வழி?'' - ஒரு இளம்பெண் கேட்டாள்.
""உன் தாய்க்கு தன்னுடைய
தனிமை தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக
இருந்திருக்கலாம். தனிமைக்குத் திருமணம் ஒரு பரிகாரமாக இருக்கும்
என்று கூறுவதற்கில்லை. பணவசதி ஒரு ஆளுக்கும்
வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுத்ததும் இல்லை. உன் தாயின்
இந்த நடவடிக்கைக்குக் காரணமே நீதான். நீ
உன் தாயை விட்டு விலகி
இருப்பதால் மட்டுமே அவங்க ஆண்களிடம்
நிம்மதியைப் பெற முடியும் என்று
நம்புறாங்க. பிள்ளைகள் மனரீதியாக தாய், தந்தையிடமிருந்து விலகிச்
செல்லும் காலத்தில், வயதான தலைமுறைக்கு பாதுகாப்பே
இல்லாமல் போய்விடும். சிலர் ஆசிரமங்களில் போய்
தங்கி விடுவார்கள். வேறு சிலர் காதல்
உறவுகளில் சிக்கிக் கொள்வார்கள்'' - டாக்டர் மாலதி சொன்னாள்.
""என் தாய் அழகானவள்
இல்லை என்பது மட்டுமல்ல; அவலட்சணமானவளும்கூட.
அவளுக்குப் பெண்களிடம் இருக்கக் கூடிய உடல் அழகுகள்
எதுவும் இல்லை. ஒரு அலியைப்போல
இருப்பாள். எனினும், தான் ஒரு அழகி
என்று அவள் நம்புகிறாள். பக்கத்து
வீட்டைச் சேர்ந்த ஒரு ஆண்
என் தாயை உயிருக்கு நிகராகக்
காதலிக்கிறான். அவனுடைய காதலை என்
தாயால் எப்படி சம்பாதிக்க முடிந்தது?''
- இன்னொரு இளம்பெண் கேட்டாள்.
கூறப்பட்ட
பிரச்சினைகள் கற்பனையானவை என்ற விஷயம் டாக்டர்
மாலதிக்கு தெரியாது. தெளிவான சிந்தனையுடன், முழுமை
யான ஈடுபாட்டுணர்வுடன் அவள் அந்த விஷயங்களை
விவாதிக்கத் தயாரானாள். ""காதலிப்பதற்கு உடல் அழகு தேவையே
இல்லை. ஆண் காதலிப்பது, ஒருத்தியின்
பெண்மையைத்தான். குணத்தை வெளிப்படுத்தக்கூடிய வெறும்
ஒரு கருவியே சரீரம். ஆன்மாவிற்கு
அதைத் தாங்கியிருக்கும் மனிதனின் முகத்துடன் என்ன உறவு இருக்கிறது?''
அன்று
நாங்கள் அவளிடம் விவாதம் செய்ய
முயற்சிக்கவில்லை. அவளுடைய இதயப்பூர்வமான நடத்தை
என்னுடைய தோழிகளைத் திருப்தியடையச் செய்தது.
""டாக்டர் மாலதியைக் கிண்டல்
பண்ண நாங்கள் தயாராக இல்லை''
- அவர்கள் என்னிடம் கூறினார்கள். எல்லாரும், அறிமுக மான எல்லாரும்தான்.
அந்த பெண்ணுக்குப் பின்னால் எல்லாரும் அணி திரண்டு நின்றார்கள்.
அந்த அளவிற்குப் பரந்த மனம் படைத்தவளும்,
நிறைய படித்தவளுமான ஒருத்தி இரண்டாவது தாயாக
கிடைத்தது மிகப் பெரிய அதிர்ஷ்டம்
என்று எல்லாரும் கூறினார்கள்.
திருமணத்தை
டிசம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று ஜோதிடர் என்
தந்தையிடம் கூறினார். இரண்டாவது திருமணமாக இருப்பதால், ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிக்கனமான செலவில் அந்த நிகழ்ச்சியை
நடத்த வேண்டும் என்று என் தந்தை
கூறினார்.
""ஒரு மணமகனுக்குரிய மாலையை
கழுத்தில் அணிந்துகொண்டு இந்த வயதில் ஆட்களுக்கு
முன்னால் போய் நிற்பதற்கு எனக்குத்
தயக்கமாக இருக்கிறது'' - என் தந்தை டாக்டர்
மாலதியிடம் கூறினார். இறுதியில் பதிவுத் திருமணம் போதும்
என்று இருவரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். பதிவு
செய்யப்படும் அலுவலகத்திற்கு இரண்டு சாட்சிகளை அழைத்துக்
கொண்டு போக வேண்டியதிருக் கும்.
அவ்வளவுதான். தாங்கள் ஒரு மோசமான
காரியத்தை நிறைவேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப்போல, அவர்கள் திருமணத்தைப் பற்றி
ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டார்கள்.
என்
தந்தையின் அறையை ஒரு முதலிரவு
அறையைப்போல மாற்றும் வேலைகளில் என்னை வளர்த்த வேலைக்காரி
ஈடுபட்டிருந்தாள். அவர்கள் சந்தோஷப்படுகிற விதத்தில்
கட்டிலின் விரிப்புகளை அவள் மாற்றினாள். நான்
அமைதியாக அவை எல்லாவற்றையும் பார்த்துக்
கொண்டிருந்தேன். அந்த வயதான பெண்
ஒருநாள் என்னுடைய தாய்க்காகவும் இதே அறையில் பட்டு
விரிப்புகளை விரித்து, பூமாலைகளைக் கோர்த்துக் கட்டியிருப்பாள் அல்லவா? நான் நினைத்தேன்.
என் தாயை மறந்து, இதற்கு
முன்பு அறிமுகமே இல்லாத ஒரு பெண்ணை
எஜமானியாக ஏற்று வரவேற்க அவள்
தயாராகிவிட்டாள்! என்னுடன் அவள் பழகும் விதத்திலும்
சில மாறுதல்கள் தெரிவதை என்னால் காண
முடிந்தது. என்னுடைய உத்தரவுகளை இனிமேல் யார் கேட்கப்
போகிறார்கள்? என்னுடைய அப்பாவிப் பூனையா?
""என் பூனைக்குட்டிக்கு நீங்கள்
யாரும் பால் கொடுப்பதில்லை. அதன்
உடல் மெலிந்து போய்விட்டது. எல்லாரும் திருமண விஷயத்தைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கிறீர்கள். என் பூனை செத்துப்போனால்கூட
உங்களில் யாருக்கும் ஒரு கவலையும் உண்டாகாது.
அப்படித்தானே?'' - நான் அந்த வயதான
பெண்ணிடம் கேட்டேன்.
என்னுடைய
உரத்த சத்தத்தைக் கேட்டதால் இருக்க வேண்டும் - மற்ற
வேலைக்காரர்களும் அங்கு ஓடி வந்தார்கள்.
அவர்கள் என் முகத்தில் கண்களைப்
பதித்து, பொம்மைகளைப் போல அசைவே இல்லாமல்
நின்றிருந்தார்கள்.
""என் பூனை செத்துவிடும்.
கொஞ்ச நாட்கள் சென்றபிறகு, நானும்
இறந்து விடுவேன். நான் இறந்துவிட்டால், அந்தப்
பெண்ணுக்கு சந்தோஷமாக இருக்கும். சொத்து எதையும் பங்குபோட
வேண்டி வராதே!'' - நான் உரத்த குரலில்
சொன்னேன்.
என்
தந்தையின் காலடி ஓசைகளைக் கேட்டு
வேலைக்காரர்கள் ஒரு அடி பின்னோக்கி
நகர்ந்து நின்றார்கள். ஆனால், அவர்கள் அந்த
இடத்தைவிட்டு சமையலறைக்குப் போகவில்லை. அவர்கள் ஒரு துயரக்
காட்சியின் பார்வையாளர்களாக இருந்தார்கள்.
""ஸ்ரீதேவி, அமைதியாக இரு. உனக்கு என்ன
பைத்தியமா பிடிச்சிருக்கு?'' - என் தந்தை சத்தமான
குரலில் கேட்டார். அவருடைய முகத்தைப் பார்க்கவே
எனக்கு தைரியம் வரவில்லை.
""பைத்தியம் எனக்கு இல்லை. இந்த
வயதான காலத்தில் திருமணம் செய்துகொள்ள தயாராகிக் கொண்டிருக்கும் உங்களுக்கு தான்பா பைத்தியம்'' - நான்
சொன்னேன்.
என்
தந்தை என்னுடைய வலது கன்னத்தில் அடித்தார்.
மீண்டும் அடித்தார். தோல் உரிந்துவிடுமோ என்று
நான் பயந்தேன். என் காதுகளுக்கு உள்ளேயும்
ஒரு வேதனை உண்டானது. வாழ்க்கையில்
முதல் தடவையாக எனக்கு அப்படிப்பட்ட
ஒரு அடி கிடைத்தது. அது
என்னை ஆச்சரியப்படச் செய்தது. கவலையுடன் சேர்த்து எனக்கு ஒரு தனிப்பட்ட
சந்தோஷமும் உண்டானது. என்னுடைய தந்தையின் அரக்கத்தனத்தை அந்த வகையில் வேலைக்காரர்களால்
புரிந்து கொள்ள முடிந்ததே! கொஞ்சிக்
கொஞ்சி வளர்த்த ஒரே மகளை
மிருகத்தனமாக அடிப்பதற்கு என் தந்தைக்கு கை
எழுந்தது அல்லவா? நான் வழிந்து
கொண்டிருக்கும் கண்ணீர் அருவிகளை முகத்தில்
இருக்கும்படி காட்டிக்கொண்டு, தவறாகக் கருதப்பட்ட ஒரு
தேவதையைப்போல அந்த அறையில் நின்றிருந்தேன்.
என்னுடைய மன ஒளி அந்த
அறையில் இருந்த இருளை நீக்கி,
அங்கு சூரிய உதயத்தை உண்டாக்கும்
என்று நினைத்தேன். என் கள்ளங்கபடமற்ற தன்மை,
என் புனிதத் தன்மை, என்
தியாகம் - இவை அனைத்தும் கடலின்
வெள்ளி அலைகளைப் போல அந்த இரட்டைக்
கட்டிலைச் சுற்றி ஆரவாரித்து நின்று
கொண்டிருந்தன. ஆமாம்.... ஒரு புனிதப்பெண் அங்கு
பிறந்து கொண்டிருக்கிறாள்....
மறுநாள்
நான் என்னுடைய வீட்டை விட்டு இன்னொரு
நகரத்திற்குச் செல்வதற்காக ஒரு பேருந்தில் ஏறி
உட்கார்ந்திருந்தேன். என்னுடைய முதல் பேருந்துப் பயணம்
அது. வியர்வையில் குளித்த மனிதர்களின் கந்தக
வாசனை என்னை என்னவோ செய்தது.
எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு நடுத்தர வயது
மனிதன் தன்னுடைய கைவிரலை வைத்தோ கால்
விரலை வைத்தோ என்னுடைய பின்
பகுதியை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தான். நான் கோபத்துடன் திரும்பிப்
பார்த்தபோது, அவன் வலது கண்களை
மட்டும் சுருக்கி, தன்னுடைய மன ஆசையை வெளிப்படுத்தினான்.
""இனி என்னைத் தொட்டால்,
நான் உன்னைக் கொன்னுடுவேன்''- நான்
சொன்னேன். பயணிகள் என்னை நோக்கி
ஆர்வத்துடன் பார்த்தார்கள். நடத்துநர் அருகில் வந்தார். என்னுடைய
குற்றச்சாட்டைக் கேட்டுவிட்டு நடத்துநர் சொன்னார்:
""தெரியாமல் கை பட்டிருக்கும் தங்கச்சி.....
இந்த அளவிற்குக் கோபப்படக் கூடாது!''
பயணிகளில்
சிலர் சிரித்தார்கள். தன்னுடைய தூய குணத்தைப் பற்றியும்,
கள்ளங்கபடமற்ற தன்மையைப் பற்றியும் எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தவன் உரத்த குரலில் விளக்கிக்
கூறிக் கொண்டிருந்தான்.
""நான் ஒரு வர்ணம்
அடிப்பவன். பெண் பிள்ளைகளின் பின்பகுதியைக்
கிள்ளும் பழக்கமெல்லாம் எனக்கு இல்லை. நல்ல
மனிதர்களைப் பற்றி மோசமாகப் பேசக்கூடாது''
- அவன் சொன்னான். அவனுடைய குரலில் இருந்த
எளிமை பயணிகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
""மனிதர்களைத் தொடாமல் பயணம் செய்ய
வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால்,
சொந்தக் காரில் போக வேண்டியதுதானே?''
- ஒருவன் என்னைப் பார்த்துக் கேட்டான்.
எல்லாரும் சத்தம் போட்டுச் சிரித்தார்கள்.
பிறகு முதலில் வந்த நிறுத்தத்தில்
நான் பேருந்தில் இருந்து வேகமாக இறங்கினேன்.
களைப்பைப் போக்குவதற்கும், கோபத்தைத் தணிப்பதற்கும் நான் ஒரு மரநிழலில்
போய் உட்கார்ந்தேன். என்னுடைய தலைக்கு மேலே பறவைகள்
ஓசை உண்டாக்கின. கழுகைப் போல அமைதியாக
இருக்கும் சில பறவைகள் என்
மூளையில் சிறகடித்தன. இனி நான் எங்கே
செல்வேன்? என் தந்தை என்னைத்
தேடி வராவிட்டால், இந்த இரவு நேரத்தை
நான் எங்கு செலவழிப்பது? என்
தந்தை பைத்தியம் பிடித்து, தன் கண்ணாடியைக் கூட
முகத்தில் அணிய மறந்து, என்னைத்
தேடி ஓடி வந்து "என்னை
மன்னிச்சிடு, என் ஸ்ரீதேவிக் குட்டி'
என்று கூறி கண்ணீர்விட்டால், நான்
ஒரு வெற்றி வீராங் கனையின்
தலை நிமிர்தலுடன் வீட்டிற்குத் திருப்பிச் செல்வேன். டாக்டர் மாலதி என்ற
பெண் எங்களுடைய வாழ்க்கையை விட்டு விலகிப் போகவும்
செய்வாள். மீண்டும் நான் என்னுடைய உறுதியான
அதிகார பலத்துடன் ஒரு காலத்தில் ஆட்சி
செய்த சாம்ராஜ்யம் எனக்கு மட்டுமே சொந்தமானதாக
ஆகும். நான்தானே ராணி? என் தந்தை
என்னுடைய முக்கிய பிரஜையாக மட்டுமே
இருந்தார். நான் பலவற்றையும் நினைத்து,
பலவற்றையும் கனவு காண்கிறேன் என்று
நினைத்தவாறு அந்த மரத்தடியில் படுத்திருந்தேன்.
என்னைச் சுற்றி மத்தியான வெயில்
சிறிய மஞ்சள் நிற விரிப்புகளை
விரித்திருந்தது.
நான்
கண் விழித்தபோது, சீருடை அணிந்த சில
பெண்களும் ஆண்களும் என்னைப் பிடித்துத் தூக்கி
ஒரு ஸ்டேஷன் வண்டிக் குள்
ஏற்றினார்கள். அவர்கள் எமனின் ஆட்களாக
இருப்பார்களோ என்று நான் எண்ணினேன்.
""என்னை எங்கே கொண்டு
போகிறீர்கள்?''- நான் கேட்டேன். அவர்கள்
என்னை ஒரு இருக்கையில் படுக்க
வைத்து, என் கையில் ஏதோ
குத்தினார்கள். வண்டியில் என்னுடைய தலைப்பகுதியில் அதுவரை வாய் திறக்காமலும்
அசையாமலும் உட்கார்ந்திருந்த ஒரு ஆள் சொன்னார்:
""மேனிக் டிப்ரெஸ்ஸிவ்... கட்டுப்படுத்துவதில்
கவனமாக இருக்கணும்.''
""நானா? நான் ஒரு
டிப்ரெஸ்ஸிவ்வா? நீங்கள் என்ன சதித்திட்டம்
தீட்டி என்னைப் பிடித்துச் செல்வதற்காக
வந்தீர்கள்? இதற்குக் காரணம் டாக்டர் மாலதியா?''
-நான் உரத்த குரலில் கேட்டேன்.
அவர்களுடைய மௌனம், மரங்களிலும் வீடுகள்
மீதும் பனி விழுவதைப் போல
அந்த ஓடிக்கொண்டிருந்த வாகனத்தில் மெல்ல... மெல்ல... விழுந்து, கனத்துக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு என்னுடைய நாக்கை
உயர்த்தவோ, எதிர்ப்பை வெளிப்படுத்தவோ என்னால் முடியவில்லை. காலத்திலும்
தோற்றத்திலும் வந்த மாற்றங்களை அதற்குப்
பிறகு நான் உணரவே இல்லை.
எப்போதும் என்னுடைய தலையில் மறதியின் பனித்துகள்கள்
விழுந்து கொண்டேயிருந்தன.
ஒரு
நாள் என்னை சோப்பு போட்டு
குளிப்பாட்டி புதிய கவுன் அணிவித்து
மருத்துவமனையின் பணிப்பெண்கள் தோட்டத்தில் இருந்த பெஞ்சில் சாய்த்து
உட்கார வைத்தார்கள். அன்று என்னைப் பார்ப்பதற்காக
பார்வையாளர்கள் வருவார்கள் என்று அவர்கள் என்னிடம்
கூறினார்கள். நான் ஒழுங்காக நடந்து
கொண்டால், ஒரு வேளை என்னை
ஒரு வாரத்தில் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு மருத்துவமனையைச்
சேர்ந்தவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள் என்றும் அந்தப் பெண்கள்
என்னிடம் சொன்னார்கள்.
""கொல்லுவேன் என்று கூறி அவர்களுக்குத்
தொந்தரவு உண்டாக் கக்கூடாது'' -ஒருத்தி
சொன்னாள். என்ன முட்டாள் தனமாக
பேசுகிறாள்! நான் அந்த மாதிரியான
குணம் கொண்டவளா?
""நீ யாருடன் பேசுகிறாய்
என்று தெரியுதா?'' -நான் கம்பீரமான குரலில்
கேட்டேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச்
சிரித்துக் கொண்டார்கள். பெஞ்சுக்கு அடியிலிருந்து நிர்வாணமான கால்களை நான் சிரமப்பட்டு
வெளியே எடுத்தேன். மெல்லிய தோல், முரட்டுத்தனமான
கால்கள்- இவை என்னுடைய கால்கள்தான்
என்பதை நான் எப்படி நம்புவேன்?
பனிநீர் மலரின் இதழைப் போல
இருக்கும் என்னுடைய தோல் எப்படி இந்த
அளவிற்கு மோசமாக வடிவம் எடுத்தது?
என்னுடைய கால்களை வேறு யாருக்காவது
கொடுத்துவிட்டு, அவருடைய அவலட்சணமான கால்களை
என் உடலுடன் சேர்த்து வைத்து
இங்குள்ள டாக்டர்கள் தைத்துவிட்டார்களோ?
""ஒரு கண்ணாடி தா.
நான் என்னுடைய முகத்தைப் பார்க்க வேண்டும்'' -நான்
சொன்னேன்.
""கண்ணாடியைக் காட்டுவதற்கு டாக்டரின் சம்மதம் கிடைக்காது'' -ஒரு
பணிப்பெண் சொன்னாள்.
""என் முகத்தை நான்
பார்ப்பதற்கு எந்த டாக்டரின் அனுமதி
கிடைக்க வேண்டும்?'' -நான் உரத்த குரலில்
கேட்டேன்.
""இது என்ன பாழாய்ப்
போன ஒரு இடம்! இது
ஏதாவது பைத்தியக்கார மருத்துவமனையா? இங்கு இருக்கும் சட்டங்களும்
நடைமுறைகளும் மிகவும் வினோதமாக இருக்கின்றனவே?''
-நான் தொடர்ந்து கேட்டேன்.
""நிறுத்துங்க... அவர்கள் வந்துவிட்டார்கள். டாக்டர்
மாலதியும் அவங்களோட கணவரும். அவர்கள் போவது வரை
நாக்கை கட்டுப்படுத்தணும். அப்படியென்றால் மட்டுமே நீங்கள் ஒரு
வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்ல அனுமதி கிடைக்கும்.''
என்னுடைய
முக்கிய பணிப்பெண் கூறினாள்.
என்
கண்களுக்கு முன்னால் எப்போதும் திரண்டு நின்றிருந்த மூடுபனிக்கு
மத்தியில் நான் என் தந்தையையும்
மாலதியையும் பார்த்தேன். தலைமுடி முழுவதும் நரைத்து
விட்டிருந்த ஒரு தந்தை... கூந்தல்
நரைத்த அவருடைய மனைவி... எவ்வளவு
வேகமாக அவர்கள் முற்றிலும் வயதான
தம்பதிகளாக மாறிவிட்டிருக்கி றார்கள்! "சக்கிக்கு ஏற்ற சங்கரன்!' -நான்
சொன்னேன். அதைக் கூறி முடித்தபோது,
என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
""ஸ்ரீதேவி, நாளை மறுநாள் ஓணம்.
உன்னை வீட்டிற்கு அழைத்துப் போவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். ஒரு
வாரம் கடந்த பிறகு, உனக்கு
இங்கே திரும்பி வரவேண்டுமென்று தோன்றினால், நாங்கள் உன்னைத் திரும்பவும்
அழைத்துக்கொண்டு வருகிறோம்'' -என் தந்தை கூறினார்.
நான் தலையை ஆட்டினேன்.
""இந்த கவுனை அணிந்துகொண்டு
நான் எப்படி பயணம் செய்வேன்?''
-நான் கேட்டேன்.
""மாலதி புடவையையும் மற்றவற்றையும்
கொண்டு வந்திருக் கிறாள்'' -என் தந்தை சொன்னார்.
டாக்டர் மாலதி என் தோளில்
தன் கையை வைத்தாள்.
""எழுந்திரு. ஆடையை மாற்றி விட்டு,
நாம் வீட்டிற்குப் போவோம்.''
என்
வீட்டிற்கு என்னை அழைப்பதற்கு அவளுக்கு
எப்படி தைரியம் வந்தது? நான்
அவளுடைய முக வெளிப்பாட்டைக் கூர்ந்து
கவனித்தேன். தான் ஒரு நிரபராதி
என்று அந்தப் பெண் நடித்துக்
கொண்டிருந்தாள்.
வீட்டை
அடைந்தவுடன் என்னை வரவேற்பதற்கு என்னுடைய
வயதான வேலைக்காரப் பெண் வரவில்லை. அவள்
இறந்து விட்டாள் என்று என் தந்தை
கூறினார். பூனை? பூனை ஒரு
நாள் காணாமல் போய்விட்டது. மாலதி
அதை உயிருடன் புதைத் திருப்பாள் என்று
நினைக்க எனக்கு சிரமமாக இல்லை.
மாலதி என்ற பெண்ணின் மனதில்
உண்டாகும் ஒவ்வொரு கெட்ட எண்ணத்தையும்
புரிந்துகொள்ள என்னால் முடிந்தது. என்னை
பைத்தியக்கார மருத்துவமனைக்கு அனுப்புவது... பூனையை மண்ணுக்குள் புதைப்பது...
என்னுடைய ஆயாவை வீட்டை விட்டு
யாருக்கும் தெரியாமல் வெளியே போகச் சொல்வது...
இனி என் தந்தையை விஷம்
கொடுத்துக் கொல்வது... அப்போது இந்த வீடும்
சொத்துக்களும் பணிப்பெண்களும் வேலைக்காரர்களும் வாகனங் களும் அவளுக்குச்
சொந்தம் என்றாகிவிடும். "நான் உயிருடன் இருக்கும்போது,
என் தந்தையைக் கொல்வதற்கு அவளால் முடியாது' -நான்
எனக்குள் கூறிக்கொண்டேன். என் தந்தையைப் பத்திரமாகப்
பார்த்துக் காப்பாற்றுவது என்பது இனிமேல் என்னுடைய
வாழ்க்கையின் ஒரே இலக்காக ஆனது.
என் படுக்கையறையில் எந்தவொரு மாற்றத்தையும் அந்தப் பெண் உண்டாக்கியிருக்க
வில்லை. நான் ஒரு காலத்தில்
இங்கிருந்து பிரிந்து சென்றபோது, அங்கு இருந்த பொருட்கள்
அனைத்தும்- பூனையைத் தவிர- அலமாரியிலும் மேஜை
மீதும் அப்படியே இருந்தன. நான் அவிழ்த்துப் போட்ட
நைட்டி அதே நிலையில் கட்டிலில்
கிடந்தது. களைப்பு அதிகமாக இருந்ததால்
அதற்குப் பிறகு யாரிடமும் பேசாமல்
நான் கட்டிலில் போய் படுத்துக்கொண்டேன். உறக்கம்
மட்டுமே என் வாழ்க்கையில் அழியாமல்
எஞ்சியிருந்த ஒரே ஒரு கொடை...
என்னைக்
குளிப்பாட்டுவதற்கும் ஆடைகள் அணிவிப்பதற்கும் பணியாட்கள்
இருந்தார்கள். என்னுடைய உணவை படுக்கை யறைக்கு
ஒரு பெரிய மரத்தட்டில் வைத்துக்
கொண்டு வந்து தருவதற்கும், சாப்பிட்டு
முடித்ததும் எச்சில் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு
போவதற்கும் பணியாட்கள் இருந்தார்கள். ஆனால், என்னை அணைத்துக்
கொள்வதற்கோ முத்தமிடுவதற்கோ யாரும் அந்த வீட்டில்
தயாராக இல்லை. என் தந்தைகூட
என்னைத் தொடுவதற்குத் தயங்கினார். என் தந்தை என்னைக்
காணும் போதெல்லாம், ஒரு வெறுப்பை உணர்வதைப்
போல எனக்குத் தோன்றியது.
என்னுடைய
அழகு போய்விட்ட காரணத்தாலா என் தந்தை என்னைத்
தொடாமல் இருக்கிறார் என்று நான் உரத்த
குரலில் கேட்டேன். முகம் பார்க்கும் கண்ணாடியில்
என்னுடைய புதிய தோற்றம் தெரிந்ததைப்
பார்த்ததும், நான் கவலைக்குள்ளாகி விட்டேன்.
நிறம் குறைந்து, எலும்பும் தோலும் மட்டுமே கொண்ட
ஒருத்தி எனக்கு முன்னால் ஓரங்கள்
சிதிலமான பற்களைக் காட்டி சிரித்துக்கொண்டு நின்றிருக்கிறாள்.
எப்போது
என்னுடைய அழகான பற்கள் விழுந்து
அவலட்சண மாக ஆயின? எனக்கு
எதுவும் ஞாபகத்தில் வரவில்லை. பைத்தியக் கார மருத்துவமனையில் இருந்தபோது
நடைபெற்ற சம்பவங்களை நினைத்துப் பார்க்க என்னால் முடியவில்லை.
எவ்வளவு முயற்சித்தும், அங்கு நோயாளிகளுடன் சேர்ந்து
இருந்த பெண் நான்தான் என்பதை
நம்ப என்னால் முடியவில்லை. திரும்பிச்
செல்ல வேண்டிய நாள் வந்தபோது
என் தந்தை சொன்னார்:
""மாலதி, இனிமேல் அவள்
அங்கு திரும்பப் போக வேண்டாம். இப்போது
அவளால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அவளைப் பார்த்துக்
கொள்வதற்கு நிறைய வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்.''
டாக்டர்
மாலதி என் கண்களையே உற்றுப்
பார்த்தாள். அவளுடைய கண்கள் பாதாளக்
கரண்டிகளைப் போல எனக்குத் தோன்றின.
பழைய கிணறுகளுக்குள் கிடக்கும் சேற்றை வாரி எடுக்கும்
பாதாளக் கரண்டிகள்... நான் காரணமே இல்லாமல்
நடுங்கினேன். என் உள்ளங்கைகள் வியர்த்தன.
""சரி.. பார்ப்போம்'' -டாக்டர்
மாலதி சொன்னாள். நான் நன்றியை வெளிப்படுத்தும்
விதத்தில் புன்னகையை வெளிப்படுத்தினேன்.
நான்
பேச ஆரம்பிக்கும்போது, மற்றவர்கள் என்னுடைய வார்த் தைகளில் ஒரு
அசாதாரணத் தன்மை இருப்பதை உணர்வதைப்
போல காலப்போக்கில் எனக்குத் தோன்றியது. அதனால் மற்றவர்கள் அருகில்
இருக்கும்போது நான் அமைதியாக இருந்தேன்.
தனியாக என் படுக்கையறையில் நேரத்தைச்
செலவிடும்போது நான் சுதந்திரமாக, யாரிடம்
என்றில்லாமல் கருத்துகளைப் பரிமாறி னேன். என்னுடைய
புத்திசாலித்தனமான நடவடிக்கைகளைப் பார்த்து நானே சிரித்துக்கொண்டேன். அப்படியே
காலம் ஓடிக்கொண்டிருந்தபோது, என் மனதில் இருந்த
யாரையும் வெறுக்கக் கூடிய எண்ணங்கள் விலகிச்
சென்றன. டாக்டர் மாலதி என்னுடைய
சொந்த வாழ்க்கைக்குள் தலையை நுழைக்க முயற்சிக்காமல்
இருந்தால், அவளை இரண்டாவது தாயாக
ஏற்றுக்கொள்ளவும், அவள் பக்கம் நிற்கவும்
நான் தயாராக இருந்தேன்.
""அதன்படி நடக்கணும்'' -நான்
சொன்னேன். வாசலில் ஒரு சிகரெட்டை
இழுத்தவாறு நடந்து கொண்டிருந்த என்
தந்தை நான் இருந்த பக்கம்
திரும்பினார்.
""நீ என்னிடம் ஏதாவது
சொன்னாயா ஸ்ரீதேவி?''
""இல்லை...'' -நான் சொன்னேன்.
பல
நேரங்களில் நான் ஏதாவது கூறினால்,
அதைக் கேட்டு என் தந்தை
என்னிடம் "நீ ஏதாவது சொன்னியா,
ஸ்ரீதேவி?' என்று கேட்கும்போது, நான்
உடனே கள்ளங்கபடமில்லாத குரலில் கூறுவேன். "இல்லையே!'
நான்
அமைதியாக இருக்கும் போதும் உரையாடல்களைக் கேட்கிறேன்
என்று என் தந்தை ஒரு
நாள் மாலதியிடம் சொன்னார். அந்தப் பெண்ணின் முகம்
வெளிறியது. என் தந்தையையும் மனநல
மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்க
வேண்டியதிருக்கும் என்று அவள் நினைத்திருக்கலாம்.
ஒரு இரவு நேரத்தில் தூக்க
மாத்திரைகளைச் சாப்பிடாமல் நான் விளக்கை அணைத்து
விட்டுப் படுத்தேன். அந்த இரவு நேரத்தில்தான்
முதல் தடவையாக நான் அந்த
ஓசையைக் கேட்டேன். தோட்டத்திலிருக்கும் சரளைக் கற்கள் நிறைந்த
பாதையில் யாரோ மெதுவாக நடந்து
வருவதைப்போல் எனக்குத் தோன்றியது. ஒரு மெல்லிய காலடிச்
சத்தம்... நான் ஜன்னலின் அருகில்
சென்றேன். தோட்டத்தில் அடர்த்தியான இருட்டு இருந்தது. என்னுடைய
டார்ச் விளக்கை எடுத்து நான்
தோட்டத்தில் இருந்த இருட்டை நீக்க
முயற்சித்தேன். புல் வெளியையும் சரளைக்
கற்கள் இருந்த பாதையையும் பூஞ்செடிகளையும்
மரங்களையும் நான் டார்ச் விளக்கின்
அசையும் வெளிச்சத்தில் பார்த்தேன். யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை.
""யார் அது?'' -நான்
உரத்த குரலில் கேட்டேன். காலடிச்
சத்தம் நின்றது.
""யாரு?'' -நான் மீண்டும் பயந்து
கொண்டே கேட்டேன். யாரும் பதில் கூறவில்லை.
என் தூக்கத்தை அந்த யாரென்று தெரியாத
நபரின் காலடிச் சத்தம் கெடுத்தது.
எனக்கு பயம் அதிகமானது. யாரோ
என்னைக் கொல்வதற்காக வந்திருக்கிறார்கள் என்று நான் பயப்பட்டேன்.
டாக்டர் மாலதி என்னைக் கொலை
செய்யும்படி யாருக்காவது பணத்தைத் தந்திருப்பாளோ? தன் வாழ்க்கையை மேலும்
சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவள் அதைச் செய்யாமல்
இருக்க மாட்டாள். நான் இறந்து என்னுடைய
பூனையைப் போல மண்ணுக்குக் கீழே
புதைக்கப்பட்டுவிட்டால், என் தந்தைக்கும் நிம்மதி
கிடைக்கும். என்னுடைய மரணத்துடன் என்மீது இருக்கும் பொறுப்பை
முடிவுக்குக் கொண்டு வந்து விடலாமே!
வேலைக்காரர்கள்
கூட்டமாகக் கூடி உட்கார்ந்து பேசிக்
கொண்டிருக்கக்கூடிய ஒரு இடமாக சமையலறைக்கு
வெளியே இருந்த வாசல் இருந்தது.
அங்கு அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து, அவர்களுடைய உரையாடல்களைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப் பதில் எனக்கு எப்போதும்
உற்சாகம் இருந்தது. அந்தப் பணியாட்க ளுக்கு
நடுவில் எனக்கு எந்தச் சமயத்திலும்
குற்ற உணர்வு உண்டானதே இல்லை.
முதலில் சிலர் கூறுவதுண்டு - "ஸ்ரீதேவிக்
குட்டி, இங்கே இருக்க வேண்டாம்.
அப்பா எங்களைத்தான் திட்டுவார்' என்று. நான் அசைய
மாட்டேன். இறுதியில் அவர்கள் நான் அங்கு
இருப்பதைப் பற்றிக் குறை கூறுவதை
நிறுத்தி விட்டார்கள். நானும் அவர்களுடைய ஒரு
தோழியாக ஆனேன்.
""பூனை அருகில் வரும்போது,
முகத்திலும் கைகளிலும் கழுத்திலும் அவர்களுக்கு தோல் சிவந்து தடிமனாக
ஆகிவிடும்'' - ஒரு நாள் சமையல்காரன்
சொன்னான்.
""யாருக்கு?'' -நான் கேட்டேன்.
""நம்முடைய எஜமானிக்கு...'' -அவன் சொன்னான்.
""அது ஒரு அலர்ஜி
என்று அவங்க சொன்னாங்க'' - வேலைக்காரி
சொன்னாள்.
""அதனால் அவள் பூனையை
உயிருடன் புதைத்திருக்க வேண்டும்'' -நான் சொன்னேன். என்
குரலில் இருந்த கோபத்தை இல்லாமற்
செய்ய நான் படாத பாடு
பட்டேன்.
""புதைக்கவில்லை. ஒரு நாள் காலையில்
நாங்கள் பால் கொடுக்க அதை
அழைச்சப்போ, அது வரவில்லை. எந்த
இடத்திலும் அதைப் பார்க்க முடியவில்லை''
- சமையல்காரன் சொன்னான்.
""உன்னைத் தேடி வந்திருக்கும்
என்று நாங்கள் நினைத்தோம்'' -வேலைக்காரிகளில்
ஒருத்தி சொன்னாள்.
""இரவு நேரத்தில் அதை
ஒரு பைக்குள் போட்டு தோட்டத்தில் புதைத்திருப்பாள்''
-நான் சொன்னேன்.
""பூனையைத் தொட்டால் அவங்களுக்கு உடல் அரிக்கும். அப்படி
எதுவும் நடந்திருக்காது'' - சமையல்காரன் சொன்னான்.
""கைக்கூலி கொடுத்து அதைக் கொன்னுருக்கணும்'' -நான்
சொன்னேன். வேலைக்காரர்கள் சிறிது நேரம் எந்தவொரு
அபிப்ராயத்தையும் கூறவில்லை. இறுதியில் சமையல்காரன் சொன்னான்: ""என்னவோ.. எனக்குத் தெரியல...''
""இரவு நேரங்களில் சரளைக்
கற்கள் போடப்பட்டிருக்கும் பாதையின் வழியாக நடந்து வருவது
பூனையின் ஆவியாகத்தான் இருக்க வேண்டும். ஒரு
வாரத்திற்கு இரண்டோ மூன்றோ தடவை
நான் அந்தக் காலடிச் சத்தங்களைக்
கேட்கிறேன்''. -நான் சொன்னேன்.
""குழந்தை, நீ சொன்ன பிறகு
நானும் கூர்மையா கவனிச்சுக்கிட்டு படுத்திருந்தேன். நானும் சத்தத்தைக் கேட்டேன்''
- என் வேலைக்காரி சொன்னாள். ""காற்றின் சத்தமாக இருக்க வேண்டும்.
காற்றடிக்கி றப்போ, சரளைக் கற்கள்
அசைந்திருக்கும்'' -சமையல்காரன் சொன்னான்.
""அய்யோ... எனக்கு பயமா இருக்கு''
- ஒருத்தி சொன்னாள். நான் உரத்த குரலில்
குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன்.
""பூனையின் ஆவி உங்களில் யாரையும்
தொந்தரவு செய்யாது. எதிரியை மட்டுமே அது
தண்டிக்கும்'' -நான் சொன்னேன்.
மறுநாள்
காலையில் நான் எழுந்தபோது வேலைக்காரர்கள்
என்னிடம், ஒரு மீனின் முதுகெலும்பைப்
போல இருந்த முள்ளை பூனையின்
ஆவி வாசலில் இருந்த புல்
பரப்பில் போட்டு விட்டுப் போயிருக்கிறது
என்று சொன்னார்கள். பூனையின் வாசனை அப்போதும் அந்த
இடத்தில் இருந்தது. எஜமானியின் முகத்திலும் கழுத்திலும் சிவப்பு நிறத்தில் கோடுகள்
திடீரென்று தெரிந்தன என்றும் கூறினார்கள். பூனையைத்
தேடி எல்லாரும் எல்லா அறைகளுக்குள்ளும் சென்றார்கள்.
யாராலும் அதைப் பிடிக்க முடியவில்லை.
நடு இரவு வேளையில் ஒருமுறை
கண் விழித்தபோது தான் ஒரு பூனையின்
அழுகைச் சத்தத்தைக் கேட்டதாக வேலைக்காரி சொன்னாள்.
""எழுந்து பார்த்திருக்கலாம்ல?'' -என் தந்தை
ஆர்வத்துடன் கேட்டார்.
""அய்யோ... எஜமான்... எனக்கு பயமாக இருந்தது''
-அவள் சொன்னாள்.
காணாமற்போன
பூனை என்னுடைய வருகையை வாசனை பிடித்து,
எங்களுடைய வீட்டிற்குத் திரும்பி வந்திருக்கும் என்று என் தந்தை
கூறினார். நான் டாக்டர் மாலதியின்
முகத்தை கவனித்தேன். அவள் மேலும் வெளிறிக்
காணப்பட்டாள். பூனையை காலனின் ஊருக்கு
அனுப்பியது அவள்தான் என்ற காரணமாக இருக்கலாம்
- அவள் என் தந்தையின் கதையை
நம்பியது மாதிரி காட்டிக் கொள்ளவேயில்லை.
மறுநாள்
அமாவாசை. எனக்குத் தூக்கம் வரவில்லை. தலைக்கு
உள்ளேயும் முழுமையான இருள் வந்து நிறைந்திருக்கிறது
என்ற ஒரு தோணல் என்னை
மிகவும் பலவீனமாக ஆக்கியது. எவ்வளவு நேரம் நான்
ஒரு பிணத்தைப் போல அசைவே இல்லாமல்
அந்தக் கட்டிலில் படுத்திருந்தேன் என்று எனக்கு இப்போது
ஞாபகம் வரவில்லை. தோட்டத்தை நோக்கி இருக்கும் ஜன்னல்கள்
திறந்து கிடந்தன. பாரிஜாத மலர்களின் வாசனை
காற்றில் மிதந்து வந்து என்னுடைய
நாசித் துவாரங்களுக்குள் விளையாடிக் கொண்டி ருந்தது. இனம்
புரியாத ஒரு ஆனந்தம் என்
இதயத்தை மேலும் வேகமாக அடிக்கச்
செய்தது. சரளைக்கற்கள் வழியாக மெதுவாக... மிகவும்
மெதுவாக... என்னுடைய பூனையின் ஆவி நகர்ந்து கொண்டிருந்தது.
ஒரு முறை அவள் "ம்யாவ்'
என்று நீட்டி முழங்கினாள். நான்
பாசத்துடன் அவளை வரவேற்பதற்காக ஜன்னலை
நோக்கி ஓடினேன். கறுத்த வெளியாக இருந்தாலும்,
வெள்ளை நிறத்தைக் கொண்ட பூனையை என்னால்
காண முடியும் என்று நான் நம்பினேன்.
கருப்பிலும் ஒரு வெளுத்த நிழல்
விழ வேண்டும். "ம்யாவ்...' -அது குரல் தந்தது.
அதன் பாதத்தின் சத்தத்தை மீண்டும் நான் ஆச்சரியத்துடன் கேட்டுக்
கொண்டிருந்தேன். டார்ச் விளக்கை எடுத்துக்கொண்டு
ஜன்னல் வழியாக வெளியே குதிக்க
நான் தீர்மானித்தேன். ஆனால் என் டார்ச்
விளக்கு எரியவில்லை. நான் என் கெட்ட
நேரத்தை நினைத்து மனதில் திட்டினேன்.
மறுநாள்
வீட்டில் ஒரே ஆரவாரமாக இருந்தது.
என் இரண்டாவது தாயின் மரணம்- எதிர்பாராத
மரணம் இரவில் நடந்து முடிந்திருந்தது.
பாவம் பெண்! அவளுடைய முகத்திலும்
கழுத்திலும் சிவப்பு அடையாளங்கள் இருந்தன.
கழுத்தில் தாலி கிடக்கும் இடத்தில்
ஒரு அங்குலத்திற்கும் அதிகமாக இரண்டு ஆழமான
காயங்கள் இருந்ததையும் எல்லாரும் பார்த்தார்கள். முகத்தில் பூனையின் பற்கள் பதிந்தால் இருக்கக்கூடிய
ரத்த அடையாளங்கள். போலீஸ்காரர்கள் எல்லாரையும் விசாரித்தார்கள். தூக்க மாத்திரைகள் சாப்பிட
முயன்ற என் தந்தையைத் தடுத்தவாறு
ஒரு போலீஸ் அதிகாரி கேட்டார்:
""நீங்கள் எதையும் பார்க்கலையா?
ஒரு சத்தத்தையும் கேட்கலையா? உங்களுக்கு அருகில் படுத்துத் தூங்கிக்
கொண்டி ருந்த பெண்ணை ஒரு
ஆள் கொலை செய்றப்போகூட நீங்கள்
சுகமாக உறங்கிக் கொண்டிருந்தீர்களா?''
என்
தந்தை சாதாரணமாக இரண்டோ மூன்றோ தூக்க
மாத்திரைகளை உட்கொள்ளுவது உண்டு. அதன் காரணமாக
இருக்க வேண்டும் - என் தந்தையின் உறக்கம்
கனமாகிவிட்டது. ஆனால், அவர்கள் அந்தக்
கதையை நம்புவார்களா? மணிக்கணக் கில் அவர்கள் என்
தந்தையிடம் கேள்விகள் கேட்டார்கள். இறுதியில் கழற்றிப் போட்ட ஆடையைப் போல
கிடந்த உயிரற்ற உடல்மீது என்
தந்தை அழுது கொண்டே போய்
விழுந்தார்.
வேலைக்காரர்களையும்
போலீஸ்காரர்கள் விசாரணை செய்தார்கள். "ஸ்ரீதேவிக்குட்டியோட
பூனையின் ஆவி எஜமானி யைக்
கொன்னிருக்கலாம்' என்று என்னுடைய வேலைக்காரி
அவர்களிடம் கூறினாள். அவள் கூறியதை அவர்கள்
தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. போஸ்ட்மார்ட்டத்திற்காக பிணத்தைக் கொண்டு போன பிறகு,
எனக்காக அந்த ஸ்டேஷன் வேகன்
வந்தது. ஏற்கெனவே தெரிந்த சிலர் என்னை
வண்டியில் ஏற்றியபோது, நான் எதிர்ப்பு காட்டவில்லை.
நான் போவதைப் பார்த்து என்
தந்தை அழவும் இல்லை.
தமிழில்
: சுரா
நன்றி - இனிய உதயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக