07/11/2011

மொழிப் பயிற்சி – 64 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

டென்மார்க் நாட்டை இடென்மார்க் என்று எழுதுதல் சரியா?

புதியன புகுதல்

"பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினானே'

நன்னூல் நூற்பா (சூத்திரம்) ஆதலின் மொழி இலக்கணக் கட்டுப்பாடுகளிலும் காலத்திற்கேற்ப சில பழைய விதிகளைத் தளர்த்தியும், புதியவற்றை ஏற்றதும் உண்டு என அறிக.

மொழி முதலாக வரும் எழுத்துகள் பற்றித் தொடரின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். ட, ர, ல எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்ட தமிழ்ச் சொல் இல்லை. ஆனால் பிறமொழிச் சொற்களை எப்படி எழுதுவது? அரங்கசாமி, இராமன், இலக்குவன், உலோபி என்று அ, இ, உ - க்களை முதலில் இணைத்து வழங்குவது தமிழில் வழக்கம்.

டங்கன் துரை என்ற பெயரை இடங்கன் துரை எனலாமா? எல்லீஸ் ஆர். டங்கன் என்ற திரைப்பட இயக்குநர் ஒருவரின் பெயரை எல்லீஸ். ஆர். இடங்கன் என எழுதலாமா? டென்மார்க் எனும் நாட்டை இடென்மார்க் என்று எழுதுதல் சரியா? டயர் என்பான் பெயரை இடயர் எனலாமா?

"ர' விலும் அப்படியே; ரப்பர் எனும் ஆங்கிலச் சொல்லை இரப்பர் என்று எழுதுதல் சரியா? இரப்பர் என்ற தமிழ்ச் சொல் (யாசிப்பவர்) உள்ளதே. ரம்பம் என்பதை இரம்பம் என்றெழுதலாமா? ரவை, ரவா(உணவுப்பொருள்) இதனை இரவை, இரவா என்றெழுதினால் வேறு பொருள் தரும் தமிழ்ச் சொல் ஆகிறதே!

லம்பாடி, லப்பை எனும் சொற்களை இலம்பாடி, இலப்பை எனல் சரியா? லட்டு - இலட்டுவா? சிந்தித்தால் பிறமொழிச் சொற்களில் இம்மூன்றையும் முதலெழுத்துகளாக ஏற்பதில் தவறில்லை எனத் தோன்றுகிறது.

மொழி முதல் எழுத்துப் பட்டியலில் "ங' இடம் பெற்றுள்ளது. "ங' இப்போது எந்தச் சொல்லில் மொழி முதல் எழுத்தாக வருகிறது? அங்ஙனம், இங்ஙனம் என அ, இ சேர்த்து வழங்குகிறோம்.

"ஞ'கர வரிசையிலும் ஞ, ஞா, ஞி, ஞெ, ஞொ இந்த ஐந்து மட்டுமே பழைய காலத்திலும் மொழி முதல் எழுத்தாக வந்துள்ளன.

(எ-டு) ஞமலி (நாய்), ஞாலம் (உலகம்), ஞிமிறு (வண்டு), ஞெகிழி (கொள்ளிக்கட்டை), ஞொள்கல் (இளைத்தல்). ஆயினும் "ஞ' மொழி முதலில் வாராது என விட்டுவிடல் தவறு. ஞாலம், ஞமலி போன்ற அருஞ்சொற்களை இழக்க நேரிடும்.

அதனால், முடிவாக நாம் மொழி முதல் எழுத்தாக வருவன பற்றி எழுதுகிறோம். மனத்திற் கொள்க.

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் (அ முதல் ஒü முடிய) சொல்லின் முதல் எழுத்தாக வரும். (அம்மா, ஆடு, இலை, ஈட்டி எனக் கண்டு கொள்க).

மெய்யெழுத்துகள் பதினெட்டும் மொழி முதல் வாரா என முன்னரே அறிவீர்கள். உயிர் மெய் எழுத்துகளில், க, ச, ஞ, ட, த, ந, ப, ம, ய, ர, ல, வ என்னும் பன்னிரண்டும் இவற்றின் பெருக்கமும் (வர்க்கமும்) (க, கா, கி, கீ, கு, கூ எனத் தொடர்ந்து வருவன) எனத் தெளிக. ட வையும் ஏ வையும் ல வையும் இவர் எப்படிச் சேர்க்கலாம் என எம்மீது எவரும் சீற்றம் கொள்ள வேண்டாம். தமிழ்ப் பேரறிஞர் அ.கி.பரந்தாமனார் அவர்களே ஐம்பதாண்டுகள் முன்னர் எழுதியுள்ளார்கள்.

இவை இருக்கட்டும். இப்போது புதிதாகச் சென்னையில் இளைஞர்கள் இடையே உரையாடலில் மிகுதியாக இடம் பெற்றுள்ள சொற்களை எழுதட்டுமா? "அவன்தான்டா ஆட்டயப் போட்டான்' (திருடிவிட்டான் என்று பொருளாம்), "சரியான மொக்கை' (ஒன்றுக்கும் ஆகாதது - உருப்படாதது எனப் பொருளாம்) இந்தத் தமிழ்ச் சொற்களை எவர் கண்டுபிடித்தார்களோ?

"ஜொள் விடுறான்', "லுக் விட்டான்', "ஜோட்டாலடி', "கிராக்கி', "கட்டை' போன்ற பல சொற்கள் இன்று தமிழ்ப் பேச்சு வழக்கில் புழக்கத்தில் உள்ளன. இவ்வழக்குச் சொற்களை எழுத்தில் (நூல்களில்) சேர்த்துவிட்டால் வரப்போகும் நம் வழிமுறை

யினர் (சந்ததியர்) தமிழின் தரத்தைக் குறைத்தே மதிப்பிட வேண்டி வரும். அருள் கூர்ந்து, எழுத்தில் "தவிர்ப்பன தவிர்த்தல்' கடைப்பிடியுங்கள்.

பிழை திருத்தங்கள்:

மருந்து நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் "மூல நோய்க்கு முழு ஆதரவு தரும் மருந்து' என்று ஒரு மருந்தின் பெயரைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். மூல நோய்க்கு முழு ஆதரவா? அப்படியானால் மூல நோய் நன்றாக முற்றி வளர இம் மருந்து உதவுமா? அவர்கள் நினைப்பது, "மூல நோயை முற்றிலும் அகற்றிட உதவும்' என்ற பொருள் பற்றித்தான். ஆனால் அதற்கான வாக்கிய அமைப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: