மிக இளம் வயதிலேயே அதாவது இருபதாம் வயதில் அரசு வேலை கிடைத்தது குமரேசனுடைய அதிர்ஷ்டம்தான். அதுவும் மிகப் புனிதமான ஆசிரியப் பணி. ஆட்சி மாறும்போதெல்லாம் அரசு வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் விதிமுறைகளும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஒரே ஆட்சியேகூட அடிக்கடி விதிகளை மாற்றிக்கொள்கிறது. அதனால் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயதை நெருங்கும் கிழவர்களுக்குச் சிலசமயம் வாய்ப்புக் கிடைக்கிறது. புதுரத்தம் வெதுவெதுப்போடு ஓடும் இளைஞர்களுக்கும் சிலசமயம் வேலை கிடைத்துவிடுகிறது. நடுத்தர வயதில் இருப்பவர்கள்தாம் பாவம். அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிற மாதிரி விதிகள் வரும் என்று காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
குமரேசன் ஆசிரியர் பயிற்சி முடித்த சமயம் அதிஇளைஞர்களுக்குச் சாதகமாக விதிகள் இருந்தன. அவசர அவசரமாகச் சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு ஓடினான். சூடு ஆறும் முன் வேலைக்குத் தேர்வாகிவிட்டான். கலந்தாய்வு முறை மூலம் பணியிடம் ஒதுக்கப்பட்டது. முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்காகச் சில காலியிடங்களை வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருந்தார்கள். இடம் தேர்வு செய்த பின்னும் ஆணை வழங்கச் சிலரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டார்கள். ஒரு சிலருக்கு அந்தக் கணமே ஆணை வழங்கப்பட்டது. உடனடியாக ஆணை பெற்றவர்களில் குமரேசனும் ஒருவன். அதுவும் அவனுடைய சொந்த ஊரிலேயே வேலை.
ஆணையைப் பெறுவதற்கு முன் இருந்த குமரேசனும் பெற்ற பின்னான குமரேசனும் ஒருவர் அல்லர். பெற்று வந்தபின் முகம் கடுகடுப்பாக மாறிவிட்டது. வீட்டை முழுவதுமாகச் சுற்றிப் பார்த்தான். இரண்டே அறைகள்தாம். எதுவும் ஒழுங்காக இல்லை. ஒரு நாள் முழுக்க எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த முனைந்தான். மாலையில் பார்த்தபோது ஓரளவு திருப்தியாக இருந்தது. இன்னும் ஓரிரு நாள் முயன்றால் முழுவதும் சரியாகிவிடும் என்று நினைத்தான். ஆனால் காலையில் எழுந்தபோது எல்லாம் கலைந்திருந்தன. அம்மாவுக்கு இரவு வெகுநேரமும் விடிகாலையிலும் தொடர்ந்து வேலைகள் இருந்தன. அதற்காக அவள் பொருட்களை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாள். அதில்தான் இந்தக் கலைதல். அம்மாவுடன் கடுமையாகச் சண்டை போட்டான். விரல்களை நீட்டுவதும் கைகளை ஓங்குவதும் பற்களைக் கடிப்பதும் பேசும் சொற்களும் மிகப் பொருத்தமாக அமைந்தன. பயந்துபோன அம்மா அவன் வைத்தது போலவே மாலைக்குள் ஒழுங்குபடுத்தி விடுவதாகச் சொன்னாள்.
ஆடைகள் அழுக்குப் படியாமலும் மடிப்புக் கலையாமலும் பார்த்துக்கொண்டான். சட்டைக் காலரில் லேசாக அழுக்குப் படிவு தென்பட்டாலும் அம்மாவின் முகத்தில் வீசியடித்தான். எவ்வளவு கவனம் எடுத்துத் தேய்த்தாலும் தம்பியின் வேலையில் குறை சொன்னான். அவன் செருப்புகளைப் பரா மரிக்கும் விதமே தனி. வீட்டிலிருந்து கிளம்பும்போது செருப்பின் அடியில் துளிகூட மண் இருக்கக் கூடாது. நான்கு அடி வைத்ததும் மண்பாதையில்தான் இறங்க வேண்டும். ஆனால் அந்த நான்கடி தூரம் முக்கியம். அதேபோல வீட்டுக்குத் திரும்பியதும் துளிகூட மண் இல்லாமல் துடைத்துச் சுத்தப்படுத்தி வைத்துவிட்டுத்தான் உள்ளே நுழைவான்.
வீட்டை ஒழுங்குபடுத்த ஒரே விதி கொண்ட சட்டத்தையே அமல்படுத்தினான். அது: ‘எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்.’
எப்போதும் ஏதாவது ஒரு பொருள் இடம் மாறிவிடும். அவன் கண்களுக்கு மட்டும் அது தெளிவாகத் தெரியும். யார் இந்த வேலையைச் செய்தது என்று பெரிய விசாரணை நடத்துவான். அதற்கு ஒத்துழைத்தாலும் யாரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். யாராவது ஒருவர் பொறுப்பேற்கும்வரை விடமாட்டான். தலை சீவியதும் சீப்பைக் கண்ணாடி மேல் வைக்காமல் அவன் புத்தகங்களின் மேல் வைத்துவிட்டதைப் பற்றி நடந்த விசாரணையின்போது ‘முட்டாள்கள் முட்டாள்கள்’ என்று திட்டினான். ‘மறந்து வைத்தது நீயாகக்கூட இருக்கலாம்’ என்று அவன் தம்பி சொன்னதும் மௌனமாகிவிட்டான். கொஞ்சநேரம் இடைவெளி விட்டு தம்பியின் வாய்த் துடுக்கைப் பற்றிப் பேச தொடங்கினான். நல்ல வேளையாகப் பள்ளிக்கு நேரமானதால் அப்போதைக்குத் தம்பி தப்பித்தான்.
அவனுக்குச் சாப்பாடு போடும் போது ஒரு பருக்கைகூட இரையக் கூடாது. பாத்திரத்தில் இருந்து எடுக்கும்போது குழம்போ ரசமோ சிறிது சிந்திவிட்டாலும் அவன் முகம் பொரியும். ‘போன ஜென்மத்துல திருவள்ளுவனாப் பொறந்தது இவந்தான்’ என்று அவனில்லாத போது அம்மா சொல்ல எல்லாரும் சிரிப்பார்கள். எப்போது சாப்பிட்டு முடித்து எழுந்து போவான் என்று அம்மா எதிர்பார்த்துக்கொண்டே இருப்பாள். உடனடியாகப் போகவும் மாட்டான். சோற்றை நன்றாக மென்று தின்ன வேண்டும், எச்சிலும் சோறும் சேர்ந்து அரைக்கப்பட்டு வயிற்றுக்குள் போனால்தான் எளிதாக ஜீரணமாகும் என்று ஏதோ புத்தகத்தில் படித்திருந்தான். அதனால் சோற்றை வெகுநேரம் மெல்லுவான். கூழானால்தான் விழுங்குவான். ருசி பற்றி அவனுக்குப் பிரச்சினை ஏதுமில்லை. மணிக்கணக்கில் உட்கார்ந்து சாப் பிடுபவனை என்ன செய்வது? அவன் வெளியே கிளம்பும்வரை அம்மா பதற்றத்தோடே இருப்பாள். பின் பெரிய சுமை இறங்கிவிட்டது போலப் பெருமூச்சு விட்டு நிதானமாவாள்.
சிறுவயதில் வேலை. அவன் ஊதியம் குடும்பத்திற்குத் தேவைப்பட்டது. அரசு வேலையில் இருப்பது அந்தச் சிற்றூரில் பெரிய கௌரவம். அவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அப்பா, தம்பி, தங்கை எல்லாரும் தங்கள் காரியங்களை முடித்துக்கொண்டார்கள். வீட்டுக்குள் அவன் நுழைகையில் யாரும் இருக்க மாட்டார்கள். அம்மாவுக்கு வேறு போக்கிடம் இல்லை. தன்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு எல்லாரும் போய்விடுகிறார்களே என்று புலம்புவாள். குளியலறைக்குள் போனால் அங்கிருந்து கத்துவான். சோப்பைத் தண்ணீரோடு யாராவது வைத்திருப்பார்கள். ஷாம்பு காகிதத்தை உள்ளேயே போட்டிருப்பார்கள். கழிப்பறையில் இருந்தும் கத்துவான். கால் வைக்கும் இடத்தில் சிறு கறை தெரியும். குழாயிலிருந்து நீர் லேசாகச் சொட்டும்.
ஆடைகள் யாருடையதும் இன்னொருவருடையதோடு கலந்துவிடக் கூடாது. காலை அவசரத்தில் ஒருமுறை தம்பியின் ஜட்டியைப் போட்டுக்கொண்டு போய்விட்டான். தம்பியும் கிட்டத்தட்டத் தோளுக்கு மேல் வளர்ந்தவன் என்பதால் சட்டென வித்தியாசம் காண முடியவில்லை. பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது இடுப்புப் பகுதியில் இறுக்கம் அதிகமாக இருப்பதை உணர்ந்தான். கழிப்பறையில் போய்க் கழற்றிப் பார்த்தால் தம்பியின் ஜட்டி. அன்றைக்கு மாலையில் வந்து வீட்டில் எல்லாரையும் உண்டு இல்லை என்று செய்துவிட்டான். துணி மடிக்கும்போது ஏன் மாற்றி வைத்தாய் என அம்மாவுக்குக் கேள்வி. உன்னுடைய ஜட்டியைக் காணவில்லை என்று நீ சொல்லியிருக்க வேண்டாமா எனத் தம்பிக்கு. வீட்டில் எந்த ஒழுங்கும் கிடையாது. ஒழுங்கு இருந்தால் ஒழுக்கம் வரும். ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இருந்தால் பொறுப்பு வரும். பொறுப்பு இருந்தால்... இப்படி ரொம்ப நேரம் நீட்டிப் பேசிக்கொண்டேயிருந்தான்.
ராத்திரித் தூக்கத்தில் திடுமென எழுந்து பார்த்தபோதும் அண்ணன் ஏதோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு தம்பி பயந்தான். அறை முழுக்க அண்ணனின் குரல் ஒழுங்குக்கு உட்பட்டு ஒலித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தூங்குவதற்கு வெகுநேரமாயிற்று. தன்னுடைய துணிக்குள் ஒரு ஜட்டி கூடுதலாக வந்து சேர்ந்ததை அண்ணன் ஏன் கண்டுபிடிக்கவில்லை? அணிந்துகொள்ளும்போதும் தெரியவில்லையா? ஆனால் இவற்றை அண்ணனிடம் எப்படிக் கேட்பது? ஏற்கனவே அதிகப் பிரசங்கி என்று தம்பிக்குப் பெயர். காலையில் எழுந்ததும் ஒரு கம்பெனியின் பேரைச் சொல்லி இனிமேல் அந்தக் கம்பெனி ஜட்டியைத்தான் தம்பி போட வேண்டும் என்று சொல்லிவிட்டான். வெவ்வேறு கம்பெனி என்றால் மாறாதல்லவா? அவன் சொன்ன கம்பெனி தம்பிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பட்டா பட்டி டிராயர் போல ஜட்டி தயாரிக்கும் கம்பெனி அது. கோவண வடிவில் ஜட்டியை வடிவமைத்துச் சந்தையில் விற்பனைக்கு விட்டிருக்கும் புதிய கம்பெனி ஒன்றின் தயாரிப்பை வாங்க வேண்டும் என்பது தம்பியின் சமீபகால ஆசை. அதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் தம்பி அண்ணனைக் கடுமையாக வெறுத்தான்.
சில நாட்களாகத் தன்னைப் பள்ளி விடுதியில் சேர்த்துவிடும்படி தங்கை நச்சரித்தாள். பணம் பிரச்சினையாக இருக்கும் என்றாலும் விடுதியில் இருந்தால் ஒழுங்கு வரும். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுவது, கடன்களை முடிப்பது, படிப்பது, பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்று வேலைகளில் ஒழுங்கு படிந்துவிட்டால் எதிர்காலத்தில் ஒழுக்கமும் பொறுப்பும் கொண்ட குடிமகளாகி விடுவாள் தங்கை. ஆசிரியர் என்னும் பெயரில் பிரம்புகளைக் கையில் சுழற்றிக்கொண்டு எந்நேரமும் கண்காணிக்க விடுதியில் ஆட்கள் இருப்பார்கள். கண் காணிப்புக்கு உட்படாத பிள்ளைகள் உருப்படாது. கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்தபின் பார்க்கலாம் என்று சொல்லிவைத்தான். அவள் பள்ளிப் படிப்பை முடிக்கும்வரை அப்படியேதான் சொல்லிக்கொண்டிருக்க நேர்ந்தது. அண்ணனிடமிருந்து தப்பிக்க அவளுக்கு வழியே கிடைக்கவில்லை. படிக்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தம்பி தன் நண்பர்களின் வீடுகளில் இரவுகளைக் கழித்தான். பையனாகப் பிறக்காமல் போனோமே என்று தங்கை மனதுக்குள் வருந்தினாள்.
மழைநாள் விடுமுறை ஒன்றில் வீட்டுக் கதவை ஒட்டி நின்றுகொண்டு குமரேசன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான். வீட்டில் எல்லாரும் அன்றிருந்தார்கள். மழையை ரசிக்கும் முகமும் அவன் உதடுகளில் ஆனந்தமான சிரிப்பும் தெரிந்தன. கண்களை இறுக மூடிக்கொண்டு மழையோசையில் லயிப்புண்ட அவன் தோற்றம் எல்லாருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ஏதோ நடக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தபோதே அவன் முகம் இறுகிக் கோபத்தில் முனகினான். ‘மழ பெய்யுது பாரு, சனியன்’. சீராகப் பெய்துகொண்டிருந்த மழை காற்று வீசலில் அலைப்புண்டு ஒலி மாறத் தொடங்கியதுதான் அவன் கோபத்திற்குக் காரணம்.
வேலை அலுப்புக்காக மாதம் ஒருநாள், இரண்டு மாதத்திற்கு ஒரு நாள் என்று எப்போதாவது அவன் அப்பன் குடிப்பது வழக்கம். அப்படிக் குடித்து வந்த ஓர் இரவில் குமரேசன்தான் கதவைத் திறக்க நேர்ந்தது. அப்பனிடமிருந்து வந்த மதுமணம் அவன் மூச்சுக்குள் நுழைந்து கிறக்கத்தை உண்டாக்கியது. சட்டெனச் சுதாரித்துக் கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டான். விழித்துப் பார்த்த அம்மாவிடம் ‘போதையில இருக்கற ஆள உள்ளவிடக் கூடாது’ என்று சொல்லிவிட்டான். ‘எம்பையனத் தப்பான வேலக்கிப் படிக்க வெச்சிட்டனே’ என்று புலம்பித் தலைமேல் கைவைத்துக் கொண்டு வாசலில் உட்கார்ந்தார். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த அம்மா எழுந்துபோய்க் கதவைத் திறந்தாள். ‘அம்மா’ என்றான் வேகமாய். ‘நானும் வெளிய போறண்டா’ என்று சொல்லிக் கதவை மூடி வெளியே போய்விட்டாள். அதன் பின் அவருக்குக் குடிக்கத் தோன்றினால் சமையல் அறையிலேயோ குளியலறையிலேயோ அவனுக்குத் தெரியாமல் குடித்துவிட்டுப் பேசாமல் படுத்துக்கொள்ளும் ஏற்பாட்டை அம்மா செய்தாள்.
சமையலறை மின்விளக்கு ஆள் இல்லாத நேரத்திலும் எரிந்துகொண்டிருப்பது அவனுக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தது. வெளியே வரும்போது அணைத்து விடுவதும் உள்ளே போகும்போது போட்டுக்கொள்வதும் என்னும் ஒழுங்குகூட இல்லை என்றால் இத்தனை வருசம் அம்மா என்னத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறாள்? இரவில் கழிப்பறைக்குப் போனால் விளக்கை நிறுத்துவதில்லை. சிலநாள் வெளி விளக்கு விடிய விடிய எரிந்துகொண்டேயிருக்கிறது. திடுமெனத் தூக்கத்திலிருந்து விழித்து எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று பார்ப்பான். ஏதாவது எரிந்தால் அம்மாவை எழுப்புவான். ‘நீயே நிறுத்தேண்டா’ என்பாள் அம்மா. வீட்டைத் தன் னால் ஒழுங்குக்குக் கொண்டுவர முடியவில்லையே என்று பலசமயம் நினைத்து வருந்துவான். விடி விளக்கை நிறுத்திவிட்டுப் படுப்பாள் அம்மா. படுக்கும்போது சிறுவெளிச்சம் வேண்டும் என்பதற்காகத்தானே அந்த விளக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்? அவன் அதைப் போட்டுவைப்பான். அம்மா நிறுத்தியிருந்த விளக்கை அவன் போட்ட ஓர் இரவில் அம்மாவும் அப்பனும் கட்டிப் பிடித்துத் தூங்குவதைப் பார்த்து உடனே அணைத்துவிட்டான். சிலநாள் மனமே சரியில்லை. பிள்ளைகள் பெரியவர்களான பின்னும் அம்மாவும் அப்பனும் இப்படி நடந்துகொள்கிறார்களே என்று வருத்தமான வருத்தம். ஒழுக்கமற்ற குடும்பத்தில் வந்து பிறந்துவிட்டோமே என்று பிறப்பையே நொந்துகொண்டான். சின்ன விஷயத்தில்கூட ஒழுங்கு இல்லை. அப்புறம் எங்கிருந்து ஒழுக்கம் வரும்?
பள்ளியில் ஆசிரியர்களிடையே அவனுக்கு நல்ல பெயர். பள்ளியில் மூன்றே வகை ஆசிரியர்கள்தாம் இருந்தனர். கடுமையாக ஒழுங்கைக் கடைபிடிப்பவர்கள், ஓரளவு கடுமையாக ஒழுங்கைக் கடைபிடிப்பவர்கள், ஒழுங்கைக் கடைபிடிப்பவர்கள். முதல் வகையில் குமரேசன் வந்தான். எந்த வேலையாக இருந்தாலும் தலைமையாசிரியர் முதலில் அவனைத்தான் கூப்பிடுவார். எதையும் ஒழுங்காகச் செய்வான். பள்ளிப் பிள்ளைகள் எப்போதும் வரிசையாகத்தான் போக வேண்டும், வரவேண்டும். வரிசை குலைந்தால் ஆக்ரோசம் கொண்டு விடுவான். அவன் பேச மாட்டான். பிரம்புதான் பேசும். எத்தனை கடுமையாக ஒழுங்கைக் கடைபிடிப்பவன் அவன் என்பதற்குப் பள்ளி வட்டாரத்தில் ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்வார்கள். இடைவேளை நேரத்தில் சிறுநீர் கழிக்க வரிசையாகப் பிள்ளைகளை அனுப்பிக்கொண்டிருந்தான். வரிசை என்றால் ஒருவர்பின் ஒருவராக எப்படி வேண்டுமானாலும் போவதல்ல. முன்னால் நின்று பார்த்தால் எல்லோரின் தலைகள் மட்டும் தெரிய வேண்டும். சிறு விலகல் கூட இருக்காது. சிறுநீர் வரிசையில் ஒரு பையன் சற்றே விலகி ‘சார் அவசரம்’ என்றான். அவனது மற்றொரு கை கால்சட்டையை அழுத்திப் பிடித்திருந்தது. அவனுடைய அவசரம் பற்றி ஒன்றுமில்லை. வரிசையில் ஓர் உடம்பு விலகலாமா? குமரேசனின் கை பிரம்பை உயர்த்தியதும் உடம்பு மூச்சு விடாமல் வரிசையில் முழுமையாகச் சேர்ந்துகொண்டது. முறை வரும்வரை அடக்கிக்கொண்டிருக்க முடிந்தது. அப்புறம் எதற்கு அவசரம் என்று கேட்டான்? ஒழுங்கைக் குலைப்பதுதான் நோக்கம். அதற்கு இடம் கொடுத்திருந்தால் அவன் வெற்றி பெற்றிருப்பான் என்று தன் வெற்றிப் பெருமிதத்தைப் பற்றிச் சொல்வான்.
ஓரளவு கட்டாயமாக ஒழுங்கக் கடைபிடிக்கும் ஆசிரியர் ‘அவசரமாக வருபவர்கள் வரிசையின் முன்னால் வந்துவிடுங்கள்’ என வரிசை ஒழுங்கை ஓரளவு மாற்றியிருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார். கேட்டவனை மட்டும் ‘ஒரே ஓட்டமாக முன்வரிசைக்கு வந்துவிடு’ எனச் சொல்லியிருக்க லாம் என்பது ஒழுங்கைக் கடைபிடிக்கும் ஆசிரியரின் அபிப்ராயம். ‘அவசரமாக வருகிறது என்று எல்லாரும் ஒரே சமயத்தில் சொன்னால் என்ன செய்வது?’ என்பது குமரேசனின் கேள்வி. அவனைவிடப் பல ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட ஆசிரியர்கள்கூட அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.
சிறுவயதாக இருந்தாலும் குமரேசன் சிறந்த ஆசிரியர் என்றும் அவனுக்கு நல்லாசிரியர் விருது கொடுக்க அரசிடம் பரிந்துரைக்கலாம் என்றும் தலைமையாசிரியர் முடிவு செய்தார். அதற்காக உள்ளூர் அரசியல்வாதியிடம் பரிந்துரைக்கச் சொல்ல வேண்டும். அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும். என்ன செய்வது? வீட்டுச் சுமைகளைக் கொஞ்சம் குறைத்தபின் பார்க்கலாம் என்று குமரேசன் சொல்லிவிட்டதால் நல்லாசிரியர் விருது தாமதமானது. கையெழுத்து கிறுக்கல் முறுக்கலாக இருக்கக் கூடாது, புத்தகங்கள் நோட்டுக்கள் கிழியக் கூடாது, மூக்கில் சளி ஒழுகக் கூடாது, உடைகள் அழுக்காகும்படி விளையாடக் கூடாது, கத்திக் கூச்சல் போடக் கூடாது என்று கூடாது வகை விதிமுறைகள் பலவற்றைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பான். வகுப்பாசிரியராகக் குமரேசன் அமைந்துவிடக் கூடாது எனப் பிள்ளைகள் கூடுதலாக ஒன்றையும் சேர்த்துக்கொள்வார்கள்.
ஐந்து நிமிடம் குறைவாக நேரத்தைக் காட்டுகிறது கடிகாரம் என்று திட்டிவிட்டு வேகமாக அவன் வெளியேறிய பொழுதொன்றில் தம்பியும் தங்கையும் அம்மாவைப் பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் வெறுப்பு திரண்டிருந்தது. இது தவறாயிற்றே என நினைத்த அம்மா அவர்கள் முன்னால் உட்கார்ந்தாள். சிரித்துக்கொண்டே ‘உங்க அண்ணன் சாமிகிட்ட வரம் வாங்கி வந்தவன்’ எனத் தொடங்கி அந்தக் கதையைச் சொன்னாள். ஈஸ்வரனும் ஈஸ்வரியும் இந்த உலகத்து உயிர்களுக்கெல்லாம் படியளந்து கொண்டிருந்தார்கள். ‘இன்ன வேலையைச் செய்து உன் வயிற்றை நிரப்பிக் கொள்’ என்று வரம் கொடுப்பதுதான் படியளப்பு. ஒவ்வோர் உயிராக வந்து வரம் வாங்கிச் சென்றது. எல்லாருக்கும் வரம் வழங்கி முடித்தபோது ஈஸ்வரனுக்குப் பசி. சாமியே ஆனாலும் வயிற்றுப் பிரச்சினை வந்துவிட்டால் கோபம் வருவது இயல்பு. இருவரும் புறப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அவசர அவசரமாகப் பேன் ஓடி வந்தது. ரொம்ப நேரம் தூங்கிவிட்டது அது. பேனைக் கண்டு கொள்ளாமல் ஈஸ்வரனும் ஈஸ்வரியும் புறப்பட்டார்கள். சாமியின் காலைப் பிடித்துக்கொண்ட பேன் ‘நான் எங்க இருக்கறதுன்னு வரங் குடுங்க சாமீ’ன்னு கெஞ்சிச்சு. ‘போ போயி மசுருல இருந்துக்க’ என்று கோபமாகக் கத்தினார் ஈஸ்வரன். அவர் சொல்லிவிட்டால் அதை அவராலேயே மாற்ற முடியாது. பேன் அழுதுகொண்டே மயிரில் வசிக்கப் போயிற்று. அதன் அழுகை ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரிக்கும் கஷ்டத்தைக் கொடுத்தது. அடடா, கோபத்தை அரைநொடி நேரம் கட்டுப்படுத்தியிருந்தால் ஒரு உயிருக்குக் இந்தக் கஷ்டம் வந்திருக்காதே என்று வருத்தப்பட்டார்கள். என்ன செய்வது? பேனின் வாழ்க்கையில் ஒழுங்கு இல்லை. சரியான நேரத்தில் தூங்கிச் சரியான நேரத்தில் எழும் ஒழுங்கு இருந்திருந்தால் அதற்கு இந்தத் துன்பம் வந்திருக்குமா என்று யோசித்தார்கள்.
அந்தச் சமயத்தில் குமரேசன் உள்ளே நுழைந்தான். ‘ஏழைப் பெற்றோரின் மூத்த மகனாகப் பிறந்ததால் வேலைகளை முடித்துவிட்டு வர நேரமாகிவிட்டது’ என்றான். மனமிரங்கிய ஈஸ்வரனும் ஈஸ்வரியும் ‘எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்து போ’ என்று வரம் வழங்கி அனுப்பிவிட்டார்கள். அதனால்தான் அவனுக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது என்று அம்மா சொல்லி முடித்தாள். கதையின் முதல் பாதி அவர்களுக்குத் தெரிந்ததுதான் என்றாலும் பிற்பாதி ரொம்பவும் பிடித்திருந்தது. கதைகள் தரும் குதூகலத்தை அவர்கள் அனுபவித்தார்கள். தங்கை பாயில் படுத்தபடி படித்துக்கொண்டிருந்தபோது அண்ணன் வந்துவிட்டான். ‘ச்சீ என்ன பழக்கம்? படுத்துக்கிட்டுப் படிக்கறது?’ என்று சீறி விழுந்தான். தங்கை சட்டென்று எழுந்து உட்கார்ந்துகொண்டாள். படித்ததெல்லாம் மறப்பது போல இருந்தது. முகம் கூம்பிவிட்டது. அதைப் பார்த்த தம்பி மெல்ல அவளருகே வந்து காதில் ‘வரம்’ என்றான். தங்கை அடக்க முடியாமல் சிரித்தாள். அதுமுதல் அண்ணனின் கோபத்தைச் சமாளிக்க ‘வரம்’ அவர்களுக்குக் கைகொடுத்தது.
‘பேனுக்கும் கடசியாப் போன ஆளு, எங்களுக்குத் தெரியாதா?’ என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகக் குமரேசன் வரம் பெற்ற கதை பரவலாகிவிட்டது. எதையும் சமாளிக்கும் வித்தையைக் கற்றுக் கொடுப்பதுதானே கதை. அரசல் புரசலாகக் கதை குமரேசனின் காதுகளிலும் விழுந்தது. கடவுளிடம் தானே வரம் வாங்கினேன் என்று சமாதானம் சொல்லித் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். கதைக்குக் கால்கள் முளைத்து விதவிதமாகப் பரவிற்று. ஈஸ்வரன் ஈஸ்வரி கால்களைப் பிடித்துக்கொண்டு குமரேசன் கதறினான் என்றும் உள்ளே போகும்போது மூக்கொழுகிச் சளி வாய்வரை வந்திருந்தது எனவும் கதை விரிந்தது. வரம் பெற்றுத் திரும்பும்போது காற்றில் ஆடிப் படார் படாரென்று அடித்துக்கொண்டிருந்த கைலாசத்தின் ஜன்னல் பலகைகளுக்குக் கொக்கியை மாட்டிவிட்டும் கதவுக்குக் கட்டையைப் பொருத்திவிட்டும் வந்தான் எனவும் அவன் செய்ததைப் பார்த்து ஈஸ்வரனும் ஈஸ்வரியும் வியந்துபோனார்கள் எனவும் கதையின் பின்பகுதியில் கொஞ்சம் சேர்ந்துகொண்டது. மூக்குச் சளியைச் சிந்திவிட்டும் கால் கழுவிவிட்டும் ஈஸ்வரி அவனைச் சுத்தமாக அனுப்பினாள் என்று ஒருமுறை அவன் அப்பன் சொன்னார். ‘எம்பையனுக்கு ஈஸ் வரியே கால் கழுவி உட்டிருக்கறா’ என்பார் போதையில்.
வரத்திற்கு ஏற்றபடி நடந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் அவனுக்கு இருந்தது. முன்னைவிடக் கடுமையாக ஒழுங்கு பார்க்கத் தொடங்கினான். அவனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தபோது அது வெளிப்பட்டது. அவனுக்குச் சீக்கிரம் கல்யாணம் செய்துவிடுவதில் அம்மாதான் தீவிரமாக இருந்தாள். கல்யாணம் முடிந்த உடனே தனிக்குடித்தனம் அனுப்பிவிட வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தாள். ஆனால் பெண் கிடைப்பதுதான் பெரியபாடாக இருந்தது. அவர்கள் சாதியில் படித்த பெண்கள் மிகக் குறைவு. படிப்புக்கேற்ற வேலை செய்யும் பெண்களோ அரிதினும் அரிது. ஆசிரியப் பணியிலிருக்கும் பெண்ணாக இருந்தால் நல்லது என்று முதலில் நினைத்தான். அவர்களிடம் ஒழுங்கு தானாகவே படிந்திருக்கும், குழந்தைகளையும் நல்ல ஒழுக்கத்தோடு வளர்ப்பார்கள் என்று எண்ணம். அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்ததும் சரி, ஓரளவு படித்த பெண்ணாக இருந்தால் போதும் என நினைத்தான். நிறையப் பெண்களைப் போய்ப் பார்த்து வந்தான். ஒருவரையும் பிடிக்கவில்லை. தோற்றம் பற்றி அவன் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. ஆனால் செயலில் நேர்த்தியும் ஒழுங்கும் இருக்க வேண்டும் என்பதுதான் அவன் எதிர்பார்ப்பு.
ஒரு பெண்ணின் ரவிக்கையின் கை ஒருபக்கம் நீளமாகவும் இன்னொரு பக்கம் குட்டியாகவும் இருந்தது. ‘அவசரத்துல டெய்லர் தெச்சுக் குடுத்திருப்பாங்க. அதனால என்னடா?’ என்றாள் அம்மா. ரவிக்கையில்கூட நேர்த்தி இல்லாத பெண்ணோடு எப்படி வாழ்வது? இன்னொரு பெண்ணின் தலை மயிர் கொஞ்சம் நெற்றியில் வந்து விழுந்திருந்தது. ஒழுங்காகப் படியச் சீவ வேண்டாமா? ‘இந்தக் காலத்துல அப்பிடி மயிர எடுத்து விட்டுக்கறது பழக்கம்டா’ என்றாள் அம்மா. பொட்டு சரியில்லை, சேலை சரியில்லை, நகை அணியத் தெரியவில்லை, காப்பி டம்ளரை எடுத்த முறை சரியில்லை, கைக்கு வைத்த மருதாணியில் ஒழுங்கு இல்லை என்று இல்லைகளைப் போட்டு மறுத்துக்கொண்டிருந்தான். இந்த ஜென்மத்தில் இவனுக்குக் கல்யாணம் இல்லை என்று அம்மா கவலைப்பட்டாள். பெண் பார்க்கப் போகும் இடத்தில் மெதுவாகப் பெண்ணின் அறைக்குள் போய் அம்மாவே எல்லாவற்றையும் சரி செய்தாள். அப்படியும் அவன் கண்ணுக்கு ஏதாவது ஒழுங்கின்மை தென்பட்டு விடும்.
சில இடங்களில் மாமியார் இப்பொழுதே கட்டளை போடுகிறாள் என்று அம்மாவை விமர்சித்தார்கள். ‘இப்படியுமா ஒருவன் வரம் வாங்கி வந்திருப்பான்’ என்று நொந்து போனாள் அம்மா. பெண் பார்க்கிற வேலை தொடங்கியதிலிருந்து அதைப் பற்றியே பேச்சு. வீட்டு ஒழுங்குகளைக் கொஞ்சம் மறந்திருந்தான். அதில் எல்லாருக்கும் நிம்மதி. ‘எவளயாச்சும் பாத்து அவனையே கூட்டிக்கிட்டு வரச் சொல்லு’ என்று சலித்துச் சொன்னார் அப்பன். ‘அந்தக் கொடுப்பின அவனுக்கு ஏது? அவனத் தெரிஞ் சவ எவளாச்சும் கூட வருவாளா?’ என்றாள் அம்மா. அவனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்தும் நெருங்கியவர்களிடம் ஆலோசனை கலந்தும்கூட எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. பெண் பார்க்கும் படலம் தொடர்ந்துகொண்டேயிருந்தது. ஆசிரியராக இருப்பவனுக்குப் பெண் கொடுக்கப் பலரும் தயாராக இருந்தார்கள். அதிக வேலை இல்லை, விடுமுறை நிறையக் கிடைக்கும், கை நிறையச் சம்பளம், சமூகத்தில் மதிப்பு இன்ன பிற காரணங்களை எல்லாரும் தெரிந்து வைத்திருந்தார்கள். பல்லாயிரம் கோடி ஊழல் செய்தியைச் சிறிதாகப் போட்டுவிட்டு ஒரு சதவீத ஈட்டுப்படி அரசு ஊழியர்கள் எல்லாருக்கும் அரசு அறிவித்தால்கூட ‘ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்’, ‘ஆசிரியர்களுக்கு லக்கிப் பிரைஸ்’ என்று கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி போடும் உள்ளூர்ச் செய்தித்தாள்களை மக்கள் தவறாமல் படிப்பதனால் உண்டான அறிவு அது.
பார்க்கும் பெண்களை எல்லாம் குமரேசன் மறுத்துக்கொண்டிருந்த போதும் புதிது புதிதாகப் பார்க்கும் பாக்கியம் கிடைத்துக்கொண்டேயிருந்தது. பெண் தேடத் தொடங்கிய சமயத்தில் பார்த்த ஒரு பெண்ணின் தந்தை விடாமல் பல வழிகளில் முயன்று கொண்டிருந்தார். அந்தப் பெண் ஐந்தாம் வகுப்புவரை படித்தவள். அத்துடன் கொஞ்சம் கறுப்பு. கறுப்பாக இருப்பதால்தான் மாப்பிள்ளை மறுக்கிறார் என்று அவராக முடிவுசெய்து அதற்காக நகைகளும் பணமும் கூடுதலாகக் கொடுப்பதாகச் சொல்லி அனுப்பினார். அந்தப் பெண்ணை என்ன காரணம் சொல்லி மறுத்தான் என்பது மறந்து போயிருந்தது. அவள் நகங்கள் அழுக்குப் படிந்து கருத்திருந்தன என்பதாக நினைவுக்கு வந்தது. உடல் கறுப்பல்ல, நகக் கறுப்பே அவன் பிரச்சினை. ‘நகத்தக்கூட வெட்டி ஒழுங்கா வெச்சுக்கத் தெரியாதவ எதையம்மா ஒழுங்கா வெச்சுக்குவா?’ என்றான். ‘ஏம்பயா, உன்னாட்டம் அந்தப் பொண்ணு வாத்தியாரு வேலயா பாக்குது? நகத்துல அழுக்குப்படாம ஊட்டு வேல செய்ய முடியுமா? பாத்திரங் கழுவோணும் , ஊடு கூட்டோணும், துணி தொவைக்கோணும். இதா எங்கையப் பாரு, நகமெல்லாம் கருத்துத்தான் கெடக்குது. வெட்டுனாலும் அப்பிடித்தான் ஆவுது. பெருவெரல் நகத்தயெல்லாம் பொம்பளைங்க வெட்ட முடியாது பையா. வெங்காயம் தொலிக்கோணும், மொளகா கிள்ளோணும், அதுக்கு நகம் வேணுமில்ல’. பொறுமையாக அம்மா சொன்ன காரணங்கள் சரியாகவே பட்டன. ‘எதுனாலும் நீ ஒரு சமாதானம் சொல்லீருவ’ என்றான். ‘கட்டிக்கிட்டு வந்ததுக்கப்பறம் நகத்துல அழுக்குப்படாத நாம வெச்சுக்கலாம். நான் வேண்ணா வெங்காயம் தொலிச்சுக் குடுத்தர்றன்’ எனச் சிரிக்காமல் சொன்னாள் அம்மா. மௌனமாக இருந்தான்.
ரொம்ப நாளாகப் பெண் பார்த்ததில் அவனுக்கும் அலுப்பு வந்திருந்தது. முன்னெல்லாம் வாரம் ஒருமுறை என்றிருந்த லுங்கி ஈரம் இப்போது ஒருநாள் விட்டு ஒருநாள் ஆனதால் தான் ஒழுங்காக இருக்கிறோமா என்னும் கவலையும் மிகுந்திருந்தது. அவன் மௌனத்தைச் சாதகமாகக்கொண்டு பெண் வீட்டில் சம்மதம் சொல்லிவிட்டாள். இருபதாம் வயதில் வேலை கிடைத்த அதிர்ஷ்டத்தைப் போலவே இருபத்தைந்தாம் வயதில் திருமணம் அமைந்தது. உண்மையில் வேலையைப் போலத்தான் அவன் மனைவியும். ஒரு சிக்கலுமில்லை. பள்ளியிலாவது கையில் பிரம்பு வேண்டும். வீட்டில் எதுவும் தேவை யில்லை. வா, போ, எடு, போடு, வை, படு, கழற்று, ஊற்று இப்படி ஏராளமான வினைச்சொற்களை அவளிடம் பயன்படுத்தினான். நில், உட்கார், எழுது, படி, ஓடு என்பவை அவன் பள்ளியில் அதிகம் பயன்படுத்துபவை. ஒழுங்கு குலைந்ததைக் கண்டுபிடித்து அவன் திட்டினால் பேசாமல் வாங்கிக்கொள்வாள். ‘இனிமே இப்படிச் செய்யாத’ என்று முடிப்பான். ‘சரிங்க’ என்பாள் அவள். ‘சரிங்க சார்’ என்று பிள்ளைகள் பள்ளியில் சொல்லும். தன் வீட்டில் ஏராளம் வேலைகள் செய்து களைத்துப் போனவள் அவள். குமரேசன் ஒருவனைச் சமாளிப்பது பெரிய விஷயமாயில்லை.
தனிக்குடித்தனம் அனுப்பும்போது அவனுடைய அம்மா சொல்லியனுப்பிய மாதிரி நகங்களை அழுக்கு அண்டாமல் வைத்துக்கொள்ள முயன்றாள். சின்ன வெங்காயம் தொலிப்பதற்குக் கஷ்டம். பெரிய வெங்காயம் பயன்படுத்தினால் கத்தியில் அரிந்தால் தோல் தானாக வந்துவிடும். ஏதாவது பொருள் தினமும் வாங்கிக்கொண்டேயிருப்பதால் பிளாஸ்டிக் பைகள் சேர்ந்தபடியே இருக்கும். பைகளைக் கைகளுக்கு உறைபோல மாட்டி ஒரு ரப்பர் பேண்ட் போட்டுக்கொள்வாள். அதற்கு நல்ல பலன் இருந்தது. அவன் பார்வை தினந்தோறும் ஒருமுறையாவது அவள் நகங்களை நோக்கி நகர்ந்துவிடும். பார்த்துத் திருப்திகொள்வான். அவன் பொருட்களை அனுமதி இல்லாமல் அவள் எடுக்கமாட்டாள். அவளுடைய எச்சரிக்கையை மீறியும் ஏதாவது கண்டு பிடித்தால் மிகப் பழைய சட்டத்தைச் சொல்வான். ‘எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வை’. எழுதி வைக்கவில்லை என்றாலும் சுவர்கள் அந்த வாசகத்தை எதிரொலித்துக்கொண்டேயிருந்தன.
ஒழுங்கு, ஒழுக்கம், பொறுமை இத்யாதிகள் பற்றி அவன் அதிக நேரம் வகுப்பெடுக்கும் அன்றைக்கு மாமியார் வீட்டுக்குப் போய்ச் சொல்லி அழுவாள். மாமியார் சிரித்தபடி ‘அவன் அப்படித்தான்’ என்பாள். தான் தப்பித்துக்கொண்ட மகிழ்ச்சியை வேறெப்படி வெளிப்படுத்த முடியும்? தம்பி ‘வரம்’ என்பான். ‘அண்ணி, பள்ளிக்கொடத்துல இப்பப் பரிட்ச நடக்குது. முடியற வரைக்கும் வீட்டுலதான் வகுப்பு. பரிட்ச முடிஞ்சு பள்ளிக்கொடம் தொறந் திட்டாங்கன்னா செரியாப் போயிரும்’ என்பாள் அவன் தங்கை. அவர்கள் சொற்கள் தரும் ஆறுதலோடு திரும்பி வீட்டுக்கு வருவாள். கல்யாணமாகி இரண்டு மாதத்திற்குப் பின் ஓர் இரவில் அவள் கிச்சத்தில் முகம் புதைத்திருந்தபோது சட்டென விலகிக் ‘குளிச்சயா?’ என்றான். அவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள். ‘போ குளிச்சிட்டு வா’ என்று திரும்பிப்படுத்துக்கொண்டான். அவள் எழுந்து போகவில்லை. அவமானத்தை அழுது கரைத்தாள். கொஞ்ச நேரம் கழித்து அவனாகவே அவள் பக்கம் திரும்பி ‘சாரி சாரி... எம் மூக்க அறுத்தெறி யோணும்’ என்று சொல்லிச் சமாதானமானான். அன்று முதல் இரவில் ஒருமுறையும் குளிக்கப் பழகிக்கொண்டாள். மறுபடியும் ஒருமுறை அந்த வார்த்தை அவன் வாயிலிருந்து வந்துவிடுமோ என்று பயந்தாள். அதற்குள் அவனுக்கு மறுபடியும் அதிர்ஷ்டம்.
மூன்றாவது மாதம் அவள் வாந்தியெடுத்தாள். கட்டுப்படாத வாந்தி. அவள் அம்மா வீட்டில் கொண்டுபோய் விட்டு வந்தான். ஒருவாரம் தனியாக வீட்டிலிருந்து பார்த்தான். வழக்கம் போல வீட்டில் ஏதாவது ஒழுங்கு குலைந்திருக்கும். ஆனால் யாரிடம் சொல்வது? பேசாமல் இருக்கவே முடியவில்லை. பக்கத்துத் தெருவில் இருந்த அம்மாவிடம் போனான். அவன் மனைவி குழந்தை பெற இன்னும் ஏழெட்டு மாதமாகும். கைக் குழந்தையோடு அனுப்ப மாட்டார்கள். குழந்தைக்கு ஏழு மாதம் ஆக வேண்டும். இன்னும் ஒரு வருசத்துக்கு மேல் ஆகும். இங்கேயே வந்து தங்கிவிடுவானோ என்று அம்மா பயந்தாள். மூன்று மாத நிம்மதி அவ்வளவுதானா என்று அப்பன் புலம்பினார். தம்பி, தங்கைகள்தான் அம்மாவுக்கு அந்த யோசனையைச் சொன்னார்கள். வீட்டைத் தனியாக விடக் கூடாது. அண்ணன் அங்கேயே இருக்கட்டும். வேளாவேளைக்குச் சாப்பாட்டைக் கொண்டுபோய்க் கொடுத்துவிடலாம். அம்மா சின்ன வேலை சொன்னாலும் செய்ய மறுக்கும் பிள்ளைகள் அண்ணனுக்குச் சோறு கொண்டு போய்த் தரும் வேலையைத் தட்டாமல் செய்தார்கள். முடிந்தவரை சோற்றை வைப்பதும் எடுப்பதும் அண்ணன் கண்ணில் படாத வகையில் நடந்தது.
குமரேசன் ஒன்றிரண்டு முறை மாமனார் வீட்டுக்குப் போய் வந்தான். மனைவி நன்றாகக் கவனித்தாள். ஆனால் மாமனார் வீட்டில் ஒரு ஒழுங்கும் கிடையாது. அவனுக்குப் பிடிக்கவேயில்லை. யாரிடமும் சொல்லக் கூடிய சுதந்திரமும் அங்கே இல்லை. மனைவியைக் கூட அங்கே வைத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்தச் சமயத்தில் அவன் பக்கத்து வீட்டுக்காரர் தன் மகன் சரியாகப் படிக்காமல் எந் நேரமும் விளை யாடிக்கொண்டே இருக்கிறான் என்று சொல்லி அவனிடம் ட்யூசன் எடுக்க முடியுமா என்று கேட்டார். மிகக் கடுமையாக ஒழுங்கைக் கடைபிடிக்கும் ஆசிரியர் அவன் என்றும் எவ்வளவு குறும்பு செய்யும் பையனாக இருந்த போதும் அவன் வழிக்குக் கொண்டு வந்து விடுவான் என்றும் அவருக்கு யாரோ சொல்லியிருந்தார்கள். அவன் மிகுந்த சந் தோசத்தோடு ட்யூசனை ஆரம்பித் தான்.
பக்கத்து வீட்டுக்காரரைப் போலவே பிள்ளைகள் பற்றிக் கவலை கொண்ட பெற்றோர் ஏராளம். ட்யூசனுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவனுடைய மாலைப் பொழுது அருமையாகக் கழிந்தது. எந்தப் பிள்ளை ஒழுங்காக இருக்கிறது? அவனுக்குப் பள்ளியைப் போலவே ட்யூசனிலும் வேலை நிறைய இருந்தது. சம்மணம் போட்டு ஓரிடத்தில் ஒருமணி நேரம் பிள்ளைகளை உட்கார வைப்பதே பெரிய சவால்.
கிள்ளுதல், பிடுங்குதல், அடித்தல் என்று எப்போதும் ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யும் பிள்ளைகளைப் பண்படுத்தும் பெரிய பொறுப்பு. கிட்டத்தட்ட ஒன்றரை வருசம். சந்தோசமான வேலைக்குக் கூடுதலாகப் பணமும் கிடைத்தது.
அவனுக்கு எப்போதும் அதிர்ஷ்டம் தான். கடவுள் வரம் வாங்கிய பிறவி. அழகான பெண் குழந்தையோடு அவன் மனைவி வந்து சேர்ந்தாள். குழந்தை தவழும் பருவத்தில் இருந்தது. குழந்தைக்கு ‘ரிதிஷ்னா’ என்று பெயர் வைத்திருந்தான். ‘ரி’ என்ற எழுத்தில்தான் பெயர் வைக்க வேண்டும் என ஜோதிடர் சொல்லியிருந்தார். ரிஷ்கா, ரிக்ஷா, ரிம்பா, ரிதா, ரித்தா, ரித்னா, ரித்தினா, ரிங்கா, ரிச்சிகா, ரிதிஷ்கா, ரிதிஷ்னா என்று சொல்லப்பட்ட பல பெயர்களிலிருந்து ‘ரிதிஷ்னா’வைத் தேர்வு செய்திருந்தான். தன் பள்ளித் தமிழாசிரியர் ஒருவரிடம் இந்தப் பெயரை வைக்கலாமா என்று கேட்டான். அவர் ‘தாராளமாக வைக்கலாம்’ என்று சொல்லிப் பெயருக்கு விளக்கமும் கூறினார். ‘ரிதம்’ என்றால் சந்தம் என்று பொருள். சந்தம் என்பது என்ன? ஒழுங்குக்கு உட்பட்ட ஓசை. ஆகவே ரிதிஷ்னா என்றால் ஒழுங்குள்ளவள் அல்லது ஒழுங்குக்கு உட்பட்ட ஓசை போன்றவள். விளக்கம் குமரேசனுக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்தது. எனினும் சின்னச் சந்தேகம். இது தமிழ்ப் பெயர்தானா? தமிழ்ப் பெயராகவும் இருந்துவிட்டால் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம். அந்தத் தமிழாசிரியர் கடும் தனித்தமிழ்ப் பற்றாளர் என்றபோதும் பெரும்போக்கானவர். ‘உலகத்து முதல்மொழி தமிழ். தமிழிலிருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றின. ஆகவே எந்தச் சொல்லாக இருந்தாலும் அது தமிழ்ச் சொல்தான்’ என்றார்.
பெயருக்கு ஏற்றபடி ரிதிஷ்னா ஒழுங்குக்கு உட்பட்டவளாக இல்லை. பெரிய அதம் செய்தாள். கைக்கு எட்டும்படி ஒரு பொருளையும் வைக்க முடியாது. இழுத்துத் தள்ளிவிடுவாள். எடுத்து வாயில் போட்டுக் கொள்வாள். ஓங்கிப் போட்டு உடைப்பாள். ஒன்றிரண்டு நாட்கள் குழந்தையைப் பார்த்த சந்தோசம் இருந்தது. அவன் எடுத்துக் கொஞ்சிக்கொண்டிருந்த சமயத்தில் மடியிலேயே ஆய் போய்விட்டாள். அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வட்டலுக்கு அருகில் மண்டு வைத்தாள். அவன் கண்ணெதிரிலேயே ஒரு புத்தகத்தை எடுத்துச் சுக்கலாகக் கிழித்தாள். ஒன்றாம் வகுப்புப் பாடப் புத்தகம் அது. இப்பவே கிழிக்கிறாள், படிச்சாப்பலதான் என்று நினைத்தான். வயிற்றை இழுத்துக்கொண்டு வீடு முழுக்க ரிதிஷ்னா ஊர்ந்தாள். கால் முட்டி போட்டுக் கையை ஊன்றிச் சில சமயம் தவழ்ந்தாள். ஏதாவது பிடிமானம் கிடைத்தால் எழுந்து நின்றுகொண்டாள். பொருளற்ற ஒலிகளைச் சத்தமாக எழுப்பினாள். அவள் இழுத்தும் தூக்கியும் எறியும் பொருள்களின் ஓசையைவிட அதிகமாகக் கத்தினாள்.
எப்போது வீட்டுக்குள் நுழைந்தாலும் வீடு முழுக்கப் பொருட்கள் இரைந்து கிடக்கும். மனைவியைப் பார்த்துக் கத்துவான். அவள் ஓடி வந்து எல்லாவற்றையும் பொறுக்கி அதனதன் இடத்தில் வைப்பாள். ஏராளம் பொம்மைகள் வாங்கிப் போட்டான். எந்தப் பொம்மையாக இருந்தாலும் சில நிமிச நேரம்தான். தூக்கி வீசிவிட்டு வேறொரு பொருளுக்குப் போய்விடுவாள். மனைவி மேல் எவ்வளவு கோபித்தும் பயனில்லை. எல்லாவற்றையும் சரி செய்கிறாள். குழந்தையை முடிந்த அளவு இடுப்பில் தூக்கி வைக்கிறாள். எந்நேரமும் வைத்திருக்க முடியவில்லை. குழந்தையும் இடுப்பில் இருக்கப் பிரியப்படுவதில்லை. கீழே தவழ்ந்து ஓடத்தான் விரும்பும். வேலைகளைப் பார்க்கும்போது குழந்தையைக் கீழே விட்டாக வேண்டும். இப்படிப்பட்ட குழந்தையை எதிர்காலத்தில் ஒழுங்காக வாளர்க்க முடியுமா என்று கவலைப்பட்டான். தன் குழந்தையை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்று கனவு கண்டானோ அதற்கு நேர்மாறாகக் குழந்தை வந்து பிறந்திருக்கிறது. இரண்டு வயது வரை வீட்டில் தான் வைத்திருந்தாக வேண்டும். பள்ளிக்கு அனுப்ப முடியாது. முடிந்தால் விடுதியில் சேர்த்துவிடலாம். அதற்கும் உடனடியாக வழியில்லை. பிள்ளைகளை வளர்த்திருக்கும் முறை பற்றிப் பல பெற்றோரைத் திட்டியிருக்கிறான். தன்நிலையே கேவலமாகப் போய் விடும் போலிருக்கிறதே என்று வருந்தினான். தவழ்ந்து குழந்தை வேகமாக வருவதைப் பார்த்தாலே பயம் வந்தது. இதென்னா அரக்கக் குழந்தையா?
அவன் மனைவிக்குக் கவலை ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை. குழந்தையைக் கொஞ்சுவதும் அதன் மொழியில் ஏதேதோ பேசுவதும் எனச் சந்தோசமாக இருந்தாள். அது என்ன செய்தாலும் துளிகூடக் கண்டிப்பதோ மிரட்டுவதோ இல்லை. குழந்தையை இவள்தான் கெடுக்கிறாள் என நினைத்தான். விடுமுறை நாளொன்றில் கண்ணாடியைக் கழற்றிப் புத்தகம் ஒன்றின்மேல் வைத்துவிட்டு அலமாரியில் என்னவோ தேடிக்கொண்டிருந்தான். குழந்தை எவ்வளவோ முயன்றும் கைக்குக் கிடைக்காத பொருள் ஒன்று இப்போது கைக்கு எட்டும் தொலைவில். வேகமாக வந்த குழந்தை சட்டெனக் கண்ணாடியை எடுத்து உட்கார்ந்துகொண்டது. இரண்டு கைகளிலும் பற்றி வாய்க்குக் கொண்டுபோனது. பதறி ஓடி வந்தான். அவன் பிடுங்கி விடுவான் என்பதை அறிந்து கண்ணாடியை வீசி எறிந்தது குழந்தை. சுவரில் பட்டுப் பிரேமில் விரிசல் விழுந்துவிட்டது.
அவனுக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. அப்படியே குழந்தையை ஆவேசமாகத் தூக்கிப் பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினான். பொருள்களை வீசுவது போலக் குழந்தையை வீசிவிட எத் தனித்த கணம். ஓடி வந்த மனைவி குழந்தையைப் பிடுங்கிக்கொண்டாள். பயந்து வீரிட்டு அலறியது குழந்தை. மாரோடு சேர்த்துத் தேற்றினாள். கண்ணில் நீர் நிரம்ப அவனைப் பார்த்துக் ‘குழந்தைங்க’ என்றாள். குழந்தை யோடு திரும்பி வந்தபின் அவள் பேசும் அதிகபட்ச வார்த்தை அது என்று உணர்ந்தான். அவள் முகமும் சொன்ன தொனியும் அவன் இறுக் கத்தைத் தளர்த்தின. படுக்கையில் விழுந்தவன் யோசித்தபடியே தூங்கிப் போனான்.
திடீரென முகத்தில் தண்ணீரைக் கொட்டியது போலச் சில்லிப்பு. விழித்தான். குழந்தை சிரித்தபடி அவனருகே உட்கார்ந்து கையால் அடித்துக்கொண்டிருந்தது. ஒத்தடம் கொடுப்பது போல அத்தனை சுகமாக உணர்ந்தான். அப்படியே கண்களை மூடிக் கொஞ்ச நேரம் அதை அனுபவித்தான். தூக்கி வீசப் பார்த்தவன் அவன் என்பதை அதற்குள் மறந்துவிட்டதா குழந்தை? பிரியமாய்க் குழந்தையைத் தூக்கி வயிற்றின்மேல் இருத்திக் கொண்டான். இரு கைகளாலும் நெஞ்சில் அடித்தது. அதன் சிரிப்பில் சந்தோசம் பொங்கியது.
குழந்தையோடு சேர்ந்து வீட்டைப் பார்த்தான். எல்லாப் பொருள்களும் ஒழுங்கில் இருப்பதாகத் தோன்றியது. இங்கே வைத்த பொருள் அங்கே இருந்தால் என்ன? எல்லாம் இடம்தானே. முழுதான பொருள் உடையட்டும். எப்போதிருந்தாலும் உடையப் போவதுதான். குழந்தையின் பார்வையை முழுதாக வாங்கிப் பார்த்தான். ஒழுங்கு என்று ஒன்றுமில்லை. ஒழுங்கற்று இருப்பதே ஒழுங்கு. குழந்தையோடு சேர்ந்து சந்தோசமாகச் சிரித்தான். கடவுள் தனக்கு ஒரு வேலையும் கொடுக்கவில்லை என்று அப்போது தோன்றியது.
காலச்சுவடு ஏப்ரல் 2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக