சங்க மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியம் நீதி இலக்கியம் எனப்படும். இதைப் பன்னிரு பாட்டியல் ''அறம், பொருள், இன்பம்'' இம்மூன்றில் மூன்றையோ, ஒன்றையோ பெற்று ஐந்திற்கு மிகாத அடிகளைப் பெற்று, வெண்பா யாப்பில் அமைவது கீழ்க்கணக்கு எனக் குறிப்பிடுகின்றது. அறநூல்கள் அனைத்தும் அறத்தால் வருவதே இன்பம் என்கின்றன. நீதி நூல்களில் தலையாய நூலாக விளங்கும் வள்ளுவத்தில் அறக்கோட்பாடு சொல்லப்பட்டுள்ள முறையை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
மனித வாழ்க்கைக்கு அறம் ஆதாரமாக உள்ளது. அறத்தை அடித்தளமாகக் கொண்ட மனித வாழ்க்கை ஒரு மாளிகை போன்றதாகும். அறம் என்பது ஒழுக்கம், நீதி, கடமை, புண்ணியம், வழக்கம், ஈகை, அறக்கடவுள், சமயம் என்பனவாகும். அறம் எனும் சொல்லைப் பெரும்பாலும் நற்பண்பு அல்லது ''ஒழுக்கம்'' என்ற பொருளில் தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன.
''மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட வழக்க முறைகளின் முழுநிறை வடிவமே அறம்'' என்று க.த. திருநாவுக்கரசு கூறுகிறார் (திருக்குறள் நீதி இலக்கியம்).
''பிறருக்கு இன்பம் அளிக்கும் செயல்களைச் செய்தலே அறம்'' என்று ச. மோகன் குறிப்பிடுகிறார்.
வள்ளுவர், அறத்தால் வருவதே இன்பம் என்கிறார். இதனை,
''அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்தே புகழும் இல''. (குறள் - 39)
என்ற குறளில் வலியுறுத்துகிறார்.
அறம் சமுதாயத்திற்கு வளர்ச்சியைத் தருகிறது என்பதனை,
''சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு'' (குறள் - 31)
என்ற குறளில் விளக்குகிறார். அறத்தினைச் செய்யவேண்டும் என்பதை,
''அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்'' (குறள் - 35)
எனக் குறிப்பிடுகிறார். முதுமைக்காலத்து அறம் செய்வோம் என இல்லாது வாய்ப்பு நேரும் காலத்தே அறம் செய்தால், அது ஒருவனுக்கு இறுதிக்காலத்தும் பெரும் துணையாக அமையும் என்பதனை,
''அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை'' (குறள் - 36)
என்ற குறளில் விளக்குகிறார்.
1. செய்தற்கிடமாகிய பலவிடங்களிலும் அறச்செயல்களைச் செய்க.
2. பின்பு அறிந்து செய்வோம் என்று எண்ணாது முன்பே அறத்தைச் செய்க.
3. ஒருவன் செய்யத் தக்கது அறம்.
4. நீக்கத்தக்கது பழியே.
அறமே ஆக்கம், பழியே கேடு என்ற அடிப்படைக் கோட்பாடு பெறப்படுகிறது.
வள்ளுவரின் அறக்கோட்பாடு:-
அறக்கோட்பாடு என்பது, உடல் எப்பொழுதும் இன்பத்தை விழைகிறது. அறிவோ சான்றோர் சென்ற வழியைச் சுட்டிக்காட்டி உடலை, உணர்ச்சிகளை வென்றெடுக்க விரும்புகிறது. இவை இரண்டிற்கும் இடையில் மனிதன் சிக்கித் தவிக்கும் போதும் எது சரி? எது தவறு? எனத் தடுமாறும் போதும் அறக்கோட்பாடுகள் உருவாயின.
பல்வேறு அளவுகோல்களுடன் நீதிநூல்களை ஆயும்போது, வேறு பல கொள்கைகள் வெளிப்பட்டன. அறவியலின் போக்கை ஈர்த்த சில கொள்கைகள் அறஞ்செய்தற் பொருட்டு நிறைவடைகின்றன என்ற வள்ளுவரின் அறக்கோட்பாடு வழி விளக்குகிறது.
பகுத்துண்டு வாழும் வாழ்க்கை உயர்ந்தது. அதைச் செய்தலே தலையாயக் கடன் என்பதை,
''பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை'' (குறள் - 322)
என்ற குறளில் எடுத்துக் காட்டுகின்றார். தான் உண்பதைப் பிறருக்குப் பங்கிட்டுக் கொடுத்து, தானும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல் அறநூலோர் கூறிய அறங்களில் தலையாய அறமாகும். இவற்றில் வள்ளுவரின் பிறர் நலம் கருதும் தூய நெஞ்சம் புலப்படுகிறது.
வள்ளுவர் அறம் செய்தற்குரியோர் இவர்கள் எனத் தனித்தனியாக வரையறைப்படுத்தாது அரசன், மக்கள், சமூகம் என அனைவரையும் உட்படுத்துகிறார். அறங்கள் இங்கு,
1. தனிமனித அறம்
2. சமுதாய அறம்
3. அரசருக்குரிய அறம்
4. இல்லறத்திற்குரிய அறம்
5. துறவறத்திற்குரிய அறம்
என ஐந்து நிலைகளில் பகுத்து ஆயப்படுகின்றன.
தனிமனித அறம்:-
தனிமனிதனுக்கு எனச் சில குறிப்பிட்ட பண்புகள், ஆசைகள், ஈடுபாடு, மனப்பாங்கு, ஆர்வம் போன்றவை இயல்பாக அமைந்திருக்கும். இவையெல்லாம் ஒருவரிடம் ஏற்படுவதற்குக் காரணம் குழுவாக வாழும் வாழ்க்கை முறையே ஆகும். தனிமனிதப் பண்பினை மையமாகக் கொண்டே அறம் இயங்குகிறது.
''வாழ்வியல் என்ற அடிப்படையில் தனிமனிதனுக்காகச் சொல்லப்படும் கருத்துக்கள் யாவும் சமுதாயத்திற்கும் பொருந்துகின்றன. அதேபோன்று சமுதாயத்திற்குச் சொல்லப்படும் கருத்துக்கள் யாவும் தனிமனிதனுக்குப் பொருந்துகின்றன. தனிமனிதன் இல்லாமல் சமுதாயம் இல்லை. சமுதாயம் இல்லாமல் தனிமனித வாழ்வு அமைவதில்லை என்று சி. கருணாகரன் கூறுகிறார் (குறள் மொழியும், நெறியும்).
திருக்குறளில் முதற்பகுதியாகிய அறத்துப்பாலில் திருவள்ளுவர் தனிமனிதனுக்குரிய ஒழுக்க நெறியின் இயல்புகளை நுட்பமாக எடுத்துரைத்துள்ளார். பொருட்பாலில் தனிமனிதன் பிறரோடு கூடி வாழுகின்ற பொழுது கடைப்பிடிக்க வேண்டிய சமுதாய ஒழுகலாற்றினை வள்ளுவர் விரிவாக விளக்கியுள்ளார். இறுதிப்பகுதியாக ஒழிபியல் எனப்படும் குடிமையியல் பகுதியில் தனிமனிதர்கள் பலர் ஒன்றாகக் கூடிய சமுதாயமாக வாழ்வதற்கு இயல்பாக அமைய வேண்டிய நற்பண்புகளை எடுத்துரைத்துள்ளார்.
''மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற''. (குறள் - 34)
என்ற குறளில் வள்ளுவர் தனமனிதனுக்கு உரிய அறங்களை விளக்கியுள்ளார்.
சமுதாய அறம்:-
மனிதன் தனியாக வாழாது கூட்டமாக இணைந்து குடும்பமாக வாழ்கிறான். தனிமனிதன் சமுதாயத்தில் தனக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து தம்மால் பிறருக்குத் துன்பம் ஏற்பட்டாலும், பிறருக்குத் தம்மால் ஏற்ற நன்மைகளைச் செய்து வாழத் தூண்டுவது சமுதாய அறமாகும்.
ஒருவன் தான் சார்ந்த சமுதாயத்தாலும் பிற சமுதாய மக்களோடும் பழகும்போது சில ஒழுக்கப் பண்புகளை பெறுகிறான். எந்த நிலையிலும் தன் உயிருக்குத் தீங்கு நேர்ந்தாலும் பொய் பேசக்கூடாது, களவு, கொலை போன்ற தீவினைகளை மேற்கொள்ளாது இருக்க வேண்டும் என்கிறார். அன்பு, அருள், பொறுமை போன்ற குணங்கள் இருந்தால், மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட மாட்டார்கள்.
நல்ல குணங்கள் இருந்தால் ஒழுக்கப் பண்பு தானே வரும் என்பதை,
''ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்'' (குறள் - 131)
என்ற குறள் விளக்குகிறது. சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை, பிறரிடம் காணப்படும் தீய குணங்களை நீக்க அறிவுரை கூறவேண்டும். புறம் பேசுதல், பிறனில் விழைதல், களவு, பொய், இன்னா செய்தல், கள்உண்ணல், புலால் உண்ணல், அழுக்காறு, வரைவின் மகிளிர் போன்ற ஒழுக்கக்கேடான பண்புகளை மனிதர்கள் விட்டுவிட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
உண்மையும் நேர்மையும் ஒருவரோடுரொருவர் பழகும் முறையின் போதும், அறம் கூறும்போதும் பிறர் உள்ளம் மகிழும்படி பேசி நடந்து கொள்ளவேண்டும் என்பதை,
''அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்'' (குறள் - 35)
என்ற குறளில் கூறியுள்ளார். சமுதாய அறங்களில் தலையானது ஒருவன் அடக்கம் உடையவனாக வாழ வேண்டும் என்கிறார்.
''யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு'' (குறள் - 127)
என்ற குறளில் வள்ளுவர் நாவடக்கத்தின் அவசியத்தை விளக்குகிறார்.
அரசனுக்குரிய அறம்:-
ஆற்றல் மிகுபடை, அறிவார்ந்த குடிமக்கள், நிறைபொருள், குறையற்ற அமைச்சு, உண்மையான நட்பு, சிறந்த பாதுகாப்பு இவை ஆறும் உடையவனே சிறந்த அரசனாவான். ''திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே'' எனும் திருவாய்மொழி வரி மன்னனுக்குச் சிறப்புரைக்கிறது. அரசன் என்பவன் நற்குணம், நற்செய்கையும் உடையவனாக இருத்தல் வேண்டும் என்கிறார். மன்னன் முறை செய்து மக்களைக் காப்பாற்று வானாகின் அவன் இறைவனாக மதிக்கப்படுவான் என்பதை வள்ளுவர்,
''முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்'' (குறள் - 388)
என்ற குறளில் கூறுகிறார்.
தப்பாத விளைச்சல், தக்கவர், பசியின்மை, பிணியின்மை, பகையின்மை இவற்றெல்லாம் நாடு என்ற அதிகாரத்தில் வைத்துக் கூறுகிறார். வள்ளுவர் நடப்பை மனதில் கொண்டு முறை செய்து காப்பாற்ற வேண்டியது மன்னனின் கடமையாகும். அத்தகைய மன்னனை இறைவன் என்று கூறும் மக்களின் நிலையையும் எடுத்துக்கூறுகிறார்.
மனிதர்களை எல்லாம் நல்ல நெறியில் நிறுத்தி வாழ்க்கைப் பயனைத் துய்க்குமாறு செய்வதே அறநெறியில் நிற்கும் அரசனின் பணியாகும். மக்கள் குற்றம் செய்தாலும் குற்றத்தின் தன்மையை ஆய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யாதவாறு, அதற்கேற்ற தண்டனையை வழங்குவதே அரசனின் கடமையாகும் என்கிறார். இதனை,
''தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து'' (குறள் - 561)
இக்குறளில் விளக்குகிறார்.
அரசன் அறநெறிக்கு இழுக்கு நேராவண்ணம் ஆட்சிபுரிய வேண்டும். அறநெறிக்கு அல்லாதவை எனக் கண்டால் நீக்கிடவேண்டும் என்கிறார். மேலும் மக்கள் இடையில் குற்றம் குறைகள் வராதவாறு காக்கும் மன்னன் தன்னிடமும் அதுபோன்ற குற்றம் தோன்றாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை,
''தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு?'' (குறள் - 436)
என்கிறது குறள். தூய்மையும் உலகநலன் கருதும் எண்ணமும் மன்னனிடம் இருந்தால்தான் தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் கண்டு நீதி வழங்க முடியும் என்று வலியுறுத்துகிறார். மேலும் மனித சமுதாயத்தின் பெரு வளர்ச்சிக்கு மன்னன் இரவு பகலாகப் பாடுபடவேண்டும் என்கிறார்.
சங்க மருவிய காலத்தில் மன்னனும் மக்களும் ஒழுக்க நிலையில் இருந்து தடுமாறிய காலத்தில் இருவரையும் நெறிபடுத்த நீதிநூல்கள் தோன்றின. சமுதாயம் சீர்கேடுகள் நிறைந்த நிலையில்தான் அதிகமான நீதி கருத்துக்கள் தமிழ் இலக்கியத்தில் தோன்றலாயின என்பது புலனாகிறது. வள்ளுவரின் அறன் வலியுறுத்தும் கோட்பாடுகள் தனிமனித அறம், சமுதாய அறம், அரசருக்குரிய அறம், இல்லற, துறவறத்திற்குரிய அறம் என ஐந்து நிலையில் சொல்லப்பட்டு, அவற்றில் முதல் மூன்று நிலைகள் வழி அறக்கோட்பாடு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மக்கள் தவறான வழிக்குச் செல்லாது நல்ல வாழ்க்கை வாழவும், மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் வள்ளுவரின் அறக்கோட்பாடு பெரும் துணைபுரிகிறது.
நன்றி: ஆய்வுக்கோவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக