முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியதாய்த் திகழும் சிறப்புடையது தமிழ்மொழி. பண்டைத் தமிழர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இயல்நெறிக் காலத்தைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் எடுத்துரைக்கின்றன. உள்ளதை உள்ளவாறு பதிவு செய்யும் பான்மை கொண்ட இவ்விலக்கியங்கள் தம் காலத்து மானுட வாழ்வியல் மட்டுமன்றித் தாவர இனம் முதலியவற்றையும் அவ்வவற்றின் இயல்பும் வடிவும் தோன்றப் படைத்து மொழிந்துள்ளன. அவற்றை அடியொற்றிப் பின்வந்த இலக்கியங்கள் தத்தம் கால இயல்புக்கேற்ப மரபு வழி நின்றும் புனைவுகளைக் கூட்டியும் அவற்றை விவரிக்கின்றன. இவ்விலக்கியங்கள் வழிப் பெறலாகும் தாவரவியல் அடையாளங்களைத் தெளிய ஆராய்ந்து மேலைத் தாவரவியல் வகைப்பாட்டின் நெறிநின்று அவை அறியப்பட்டு வருகின்றன. அவ்வகையில் புலனுணர்வு கொண்ட தாவரமாகிய அனிச்சம் பற்றிய ஆய்வும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.
புலனுணர்வுத் தாவரங்கள்:-
சங்க இலக்கியத்தில் புலனுணர்வு கொண்ட தாவரங்களாகச் சுட்டப் பெறுவன நெருஞ்சி, மாழ்கி என்பன. தரையோடு படரும் செடித் தாவரமான நெருஞ்சியின் மலர்ந்த பூ சூரியனை நோக்கித் திரியும் இயல்பினது. இதனை, ''சுடரொடு திரிதரும் நெருஞ்சி'' (அகநா. 336) என்றும், ''பாழூர் நெருஞ்சி பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு'' (புறநா. 155) என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மாழ்கி எனும் தரைத் தாவரம் தொட்டவுடன் இலைகள் மயங்கும் இயல்பினது என்பதை ''வெண்மறி மாழ்கியன்ன தாழ்பெருஞ் செவிய'' (அகநா. 104) என்று அகநானூறு சுட்டுகின்றது. இம்மாழ்கியே இன்றைய தொட்டாற் சுருங்கி என்பார் பி.எல். சாமி. இவற்றோடு மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டிய தாவரம் அனிச்சம் ஆகும். ''மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து'' என்ற திருக்குறள் (90) அனிச்சம் மோந்தால் வாடும் இயல்பினது என்பதைக் குறிப்பிடுகின்றது. இவ்வனிச்சம் சங்க இலக்கியங்களுள் குறிஞ்சிப்பாட்டு, கலித்தொகை ஆகியவற்றில் சுட்டப் பெறுகின்றது. ஆயின் புலணுணர்வு உடையதாக அவ்விரு சான்றுகளும் உணர்த்தவில்லை.
சங்க இலக்கியத்தில் அனிச்சம்:-
சங்க இலக்கியங்களுள் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் 99 மலர்களுள் ஒன்றாக அனிச்சம். ''ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்'' (62) என்று குறிப்பிடப்படுகிறது. அரிநீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. இரண்டும் பெயரளவில் மட்டுமே சுட்டுகின்றன. ஆயின் கலித்தொகை,
''அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்
புரிநெகிழ் முல்லை நறவோடு அமைந்த
தெரிமலர் கண்ணியும் தாரும் நயந்தார்'' (கலித்.மரு. 26:1-3)
என்று அனிச்சம் கண்ணியும் தாருமாகச் சூடுதற்குரியது என்பதைக் குறிப்பிடுகிறது.
திருக்குறளில் அனிச்சம்:-
திருக்குறள் நான்கு குறட்பாக்களில் அனிச்சத்தைக் குறிப்பிடுகின்றது. அவற்றுள் அறத்துப்பாலில் விருந்தோம்பல் அதிகாரத்தில் ஒன்றும் காமத்துப்பாலில் நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில் மூன்றும் இடம் பெற்றுள்ளன.
''மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து'' (90)
''நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்'' (1111)
''அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை'' (1115)
''அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்'' (1120)
என்னும் இந்நான்கு பாக்களுமே அதன் மென்மைத் தன்மையை உணர்த்துவனவாக உள்ளன. இவற்றுள் மோப்பக் குழையும் அனிச்சம் எனும் தொடரே அதன் புலனுணர்வுத் தன்மையை எடுத்துரைக்கின்றது. ''அனிச்சப்பூ கால் களையாள்'' என்னும் குறள்வழி அனிச்சப்பூ தனிமலர் என்பதும் நீண்ட காம்பினை உடையது என்பதும் அனிச்சப்பூவைக் காட்டிலும் அதன் காம்பு கனமானது என்பதும் பெறப்படுகின்றன. பிற இரண்டும் பூவின் மென்மைத் தன்மையை உணர்த்துகின்றன.
பிற்கால இலக்கியங்களில் அனிச்சம்:-
திருக்குறளுக்குப் பின்வந்த இலக்கியங்களான பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், திருக்கோவையார், திருப்புகழ் முதலியன அனிச்சம் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் பெருங்கதை, சீவகசிந்தாமணி, திருக்கோவையார், கம்பராமாயணம் ஆகியன அனிச்சப்பூ மாதரடிக்கு நெருஞ்சியாக உணரப்படும் என வள்ளுவர் சொல்லிய குறளை வழிமொழிந்து அனிச்சத்தின் மென்மையை மரபு வழியே போற்றுகின்றன. ஆயின் பெருங்கதை, ''அணிநிற அனிச்சம் பிணியவிழ்ந் தலர்ந்த அந்தண் நறுமலர் அயிர்ப்பிற்று ஆகும்'' - (பெருங். நரவாண 5:134,135) என்றும், சீவகசிந்தாமணி, ''அனிச்சத்தம் போதுபோலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி'' (சீவக. 2039) என்றும், திருப்புகழ், ''அனிச்சம் கார்முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான்'' (திருப். திருச்சொல். 19) என்றும் அனிச்சத்தின் மோப்பக் குழையும் புலனுணர்வைக் குறள் வழிச் சார்ந்து எடுத்துரைக்கின்றன. அனிச்சம் மாலையாகப் புனைதற்குரியது என்பதைச் சீவகசிந்தாமணி, பெருங்கதை ஆகியன குறிப்பிடுகின்றன.
ஆய்வுப் பார்வையில் அனிச்சம்:-
அனிச்சத்தின் தாவரவியல் அடையாளமாகப் பெருங்கதை, ''அணிநிற அனிச்சம்'' என்று குறிப்பிடுகிறது. அழகிய நிறம் பொருந்திய பூ என்ற அளவில் மட்டுமே இது உணர்த்துகிறது. நிறம் எதுவென்பதைக் குறிப்பிடவில்லை. ஆயின், அதன்கண் மற்றோரிடத்தில் ''வரி இதழ் அனிச்சம்'' (சீவக. 2:12:12) என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அனிச்சம் இதழ்களில் வரிக்கோடு பெற்று விளங்குகிறது என்ற கூடுதல் குறிப்புப் பெறப்படுகிறது. ஆயின் வேறுவகையான அடையாளங்களை ஏதும் தரப்படவில்லை. உரையாசிரியர்தம் உரைக்குறிப்புகள் வழியே 1. மோந்தால் அன்றி வாடாது. 2. இரவில் மலரக்கூடியது என்ற கருத்துக்களை ஆய்ந்து தருகிறார் கோவை இளஞ்சேரன்.
பிங்கல நிகண்டு ''அனிச்ச மரமும்'' என்று அனிச்சத்தை மரமாகக் குறிப்பிடுகின்றது (பிங்.8714). சூடாமணி நிகண்டு குறிப்பிடும் ''அம்கான் அனிச்சம்'' என்ற தொடர் வழியே அனிச்சம் காட்டு மரவகையாகக் கொள்ளப்படுகிறது. அனிச்சத்தைப் பிங்கல நிகண்டும், திவாகர நிகண்டும் நறவம் எனும் பெயரோடு இணைத்துக் கூறுதலான் நறவு எனும் கொடி வகையான மயங்க இடமுள்ளது. ஆயின் அனிச்சம் நெருஞ்சியோடு கூறப்படுவதாலும் பாதத்தில் படுதல் என்ற குறிப்பானும் தரையில் படரும் செடிவகையாகக் கொள்கிறார் இரா. குமாரசுவாமி. ஆயின் மரத்திலிருந்து காம்பு கழன்று வீழ்ந்த பூவே மிதிபடுவதாகக் கொண்டு மர வகையே என்பார் கோவை. இளஞ்சேரன். இவ்வாறு அனிச்சம் மரம், செடி, கொடி என்ற வகைகளுள் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் என்று மயங்கச் செய்கின்றது.
புலனுணர்வின் வழி அடையாளம்:-
மோப்பக் குழையும் என்ற திருக்குறள் தொடரில் உள்ள மோத்தல் என்பதற்கு ''வானில் மேகங்கள் நீர் மோப்ப அதனால் அனிச்சம் இதழ் மூடுகிறது என்ற புது விளக்கத்தைக் கொண்டோமானால் அனிச்சமலர் பற்றிய புதிர் விடுபடுகிறது என்று கூறும் குமாரசாமி ஆனகாலிஸ் என்ற செடித்தாவரமே அனிச்சம் என்று நிறுவுகின்றார். ஆயின் ''மோப்ப'' என்பது மணத்தை உள்ளே கொள்ள மூக்கு வழியே வருதலும் உண்டு. எனினும் மோத்தல் என்பது உள்ளிழுக்கும் செயலேயாகும்'' என்று கூறம் கோவை இளஞ்சேரன் ''உள்ளிழுக்கும் உயிர் வளியைவிட வெளிவிடும் கரியமிலவளி (CARBON DIOXIDE) கூடுதல் வெப்பமுள்ளது. அவ்வளவு வெப்பத் தாக்குதலுக்கு முன்னே, உயிர் வளியின் குறைந்த அளவு வெப்ப ஈர்ப்பிலேயே குழைந்துவிடும்'' என்று விளக்கம் தருகிறார். குவிதல் வேறு, குழைதல் வேறு ஆனகாலிஸ் குவியும் இயல்புடையது. எனவே வள்ளுவர் கூறும் குழையம் இயல்புடைய அனிச்சம் ஆனகாலிஸ் அன்று என மறுத்துறைக்கிறார் கோவை. இளஞ்சேரன், அனிச்சத்தை நாக மல்லிகையைக் கூறும் கூற்றும் அவ்வாறே மோப்பக் குழையும் இயல்பின்மையால் மறுக்கப்பட்டுள்ளது. அழிந்துவிட்டது என்று உறுதியாகக் கொள்ள முடியவில்லை. இதுதான் என்று கண்ணால் காணவும் வாய்ப்பில்லை. இலக்கியங்களிலும் ஆய்வாளரது கருத்துகளிலும் பட்டுத் தெரித்து நிற்கிறது என்றவாறு அனிச்சம் பற்றிய ஆய்வுத் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மோயினள் உயிர்த்த காலை வாடிய பூ:-
சங்க இலக்கியமான அகநானூற்றில் பாலைத்திணை, பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது என்னும் துறையில் அமைந்த பாடலின்கண்,
''பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
ஆகத் தொக்கிய புதல்வன் புண்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை மாமலர்
மணியுரு இழந்த அணியழி தோற்றம்'' (அகநா.5)
என்ற அடிகளில் ''ஒரு பெண் தன் தலைவன் பொருள்வயின் பிரிவை மேற்கொள்ள, அதனையாற்றாது புதல்வன் தலையில் அணிந்திருந்த பூவின் கண் மோந்தனளாகப் பூ தன் மணி உருஇழந்தது'' என்று கூறப்பட்டுள்ளது. ஈண்டு அம்மலர் செங்கழுநீர் மலராக உரையாசிரியரால் சுட்டப்படுகிறது.
மோந்த காலை வாடிய பூவும் மோப்பக் குழையும் அனிச்சமும்:-
''மோப்பக் குழையும்'' என்ற குறளுக்கு இலக்கியமாகக் கருதும் வகையில் ''மோயினள் உயிர்த்த காலை மாமலர் மணியுரு இழந்த அணியழி தோற்றம்'' என்ற அகநானூற்று அடி திகழ்கிறது. ஆயின் ''தூநீர் பயந்த துணைமை பிணையல்'' என்ற குறிப்பு இம்மலர் நீர்ப்பூ வகையினது என்று குறிப்பதால் அனிச்சம் நீர்ப்பூவன்று எனக் கருதி இப்பாடலை ஆய்வில் கொள்ளாது விடுத்திருக்கலாம். ஆயின் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள இரு சான்றுகளுமே அனிச்சத்தை நீர்ப் பூக்களுடனேயே இணைத்து ''ஆம்பல் அனிச்சம் தண்கயக் குவளை'' என்றும், ''அரிநீர் அவிழ் நிலம் அல்லி அனிச்சம்'' என்றும் குறிப்பிடுதல் ஆராயத்தக்கது. சு.குமாரசுவாமி கலித்தொகை நீர்ப்பூக்களோடு அனிச்சத்தை இணைத்துச் சுட்டுதலைக் குறிப்பிடுகிறார். ஆயின் இணைத்து ஆராய முற்படவில்லை.
நன்நீரை வாழி அனிச்சமே என்ற குறள்தொடரைச் சற்றே ஆராயின் நன்நீர்மை என்ற பொருளுடன் ''நல்ல நீரிலே தோன்றுதல்'' என்ற மற்றொரு பொருட்குறிப்புக்கும் இடம் தருகின்றது. இதன் கண் உள்ள நன்னீரை என்பதை, அகநானூற்றின் ''தூநீர்தந்த'' என்ற தொடருடன் ஒப்பிட்டு நோக்கலாம். அவ்வாறே, ''அணி நிற அனிச்சம்'' என்ற பெருங்கதைத் தொடரையும் ''அணியழி தோற்றம்'' என்ற தொடரோடு ஒப்பிடலாம். மேலும் அனிச்சத்தோடு கூறப்படும் அன்னம் நீர் வாழ்ப் பறவை என்பதும் ஈண்டு கருதத்தக்கது. குளத்தில் குடைந்து நீராடிய மகளிர் தம் பாதம் இயல்பைக் காட்டிலும் மென்மைத்தாகும் நிலையில் நீரூறிய அப்பாதத்தில் படும் அனிச்சமும் அன்னத்தூவியும் நெருஞ்சியாகக் குத்தும் எனக் கொண்டால் நீரில் மிதந்து காணும் பூவும், தூவியும் கண்ணில் புலனாகும்.
மோயினள் உயிர்த்த காலை மாமலர் மணியுரு இழந்த தகைமை ''மோப்பக் குழைதலுக்கும்'' கோவை இளஞ்சேரன் கூறும் மூச்சுக்காற்றை உள்ளிழுத்தலால் வாடுதலாகிய பொருளுக்கும் பொருந்துகிறது. அவர் உள்ளிழுத்தலாகிய வெப்ப ஈர்ப்பாலேயே வாடும் அனிச்சம் என்றனராக, ஈண்டு உள்ளிழுத்தலால் வாடிய மலர் மூச்சுக்காற்று வெளியிடும் வெப்பத்தால் திறமிழந்தது எனக் கொள்ளும்போது அதற்கு அணி சேர்ப்பதாகவே அமைகின்றது.
தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் அனிச்சம் எது என்பது பற்றிய ஆய்வு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அகநானூற்றின் ஐந்தாம் பாடல் குறிப்பிடும் மோயினள் உயிர்த்த காலை எனும் தொடரை அனிச்சத்தின் முதன்மைப் பண்பான மோப்பக் குழைதலோடு பொருத்தி ஆராய அப்பூ அனிச்சமாக இருக்கலாம் என்பதும், அவ்வாறு கொண்டால் அனிச்சம் நீர்ப் பூ வகையினது. நீல நிறத்தது என்ற கூடுதல் குறிப்புகள் அனிச்சம் பற்றிய தேடலுக்கு உதவுவனவாகக் கிடைக்கின்றன என்பதும் இவ்வாய்வின் வழியே பெறப்படுகின்றன.
நன்றி: ஆய்வுக்கோவை
1 கருத்து:
Dear Mr. Sigamani,
Thanks for posting this article which was of relevance to my article "Innilai" I have posted on my blog here: http://nvkashraf.blogspot.com/2011/12/innilai.html.
Will spend some time visiting your other posts soon.
Regards,
NVK Ashraf
கருத்துரையிடுக