முன்னுரை
ஐம்பெரும் காப்பியங்களுள் முதற் காப்பியமாகத் திகழ்வது சிந்தாமணி. விருத்தமெனும் ஒன்பாவிற்கு உயர் கம்பன்(Kamban) என்றாலும், தேவரின் விருத்தத்தில் கம்பனும் ஓர் அகப்பை முகந்து கொள்கிறான். கற்பவர்கள் உளமகிழப் புதுப்புது வண்ணங்களை கையாள்வது சிந்தாமணியின் தனிச்சிறப்பு.
ஒரு காப்பியத்தில் ஒன்பான் சுவையும் அமைந்திருத்தல் வேண்டும் என்பர் தண்டியாசிரியர். தொல்காப்பியர் மெய்ப்பாடு என்ற சொல்லாலும், தண்டியலங்கார ஆசிரியர் சுவை என்ற சொல்லாலும் இதனை வழங்குவர்.
நகையே யழுகை யிளிவரால் மருட்கை
யச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென்
றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப (தொல். பொருள்.மெய். நூ.251)
என்பது தொல்காப்பியம்.
நகை இகழ்ச்சியிற் பிறப்பது; அழுகை அவலத்தில் பிறப்பது; இளிவரல் இழிப்பில் பிறப்பது; பெருமிதம் வீரத்தில் பிறப்பது; வெகுளி வெறுக்கத் தக்கனவற்றால் பிறப்பது; உவகை சிருங்காரத்தில் பிறப்பது.
மெய்ப்பாட்டின் தன்மைகளும், சிறப்புகளும் நாடக நூலுக்கே பெரிதும் வேண்டப்படுவதாயினும், இலக்கியங்களும் சுவைபட அமைதல் வேண்டும் என்னும் கருத்தின்படியே இங்கு குறித்துள்ளார்.
சிந்தாமணியில்(Sinthamani) பல இடங்களில் தேவர் இச்சுவைகளைத் தூவியிருக்கிறார். அச்சுவைகளை காண்பதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்.
1. நகைச்சுவை
நகை என்பது சிரிப்பு. இது எள்ளலாலும், இளமையாலும், பேதமையாலும், மடமையாலும் பிறக்கும்
எள்ளல் இளமை பேதமை மடனென்று
உள்ளப்பட்ட நகை நான்கென்ப. (தொல். பொருள். மெய்.நூ.252)
பேதமை காரணமாக நகைப்புத் தோன்றும் ஒரு பாடலைப் பாருங்கள்.
கோல நெருங்கண்....... வண்ணம் காண்மின் (சீவக....பா.119)
பெண்கள் கூந்தலை விரித்து ஈரம் உலர்த்த, அவர்களை ஆண் மயில்கள் எனப் பெண் மயில்கள் நெருங்கிச் செல்லும் காட்சி, அவற்றின் பேதமை காரணமாக நமது உள்ளத்தில் நகைப்புத் தோற்றிவிக்கின்றது.
2. அழுகை
அழுகை என்பது அவலம். இழிவு, இழவு, அசைவு, வறுமை என்ற நான்கின் வழி அழுகை தோன்றும்.
வெவ்வாய் ஓரி முழவாக..... மன்னர்க்கியல் வேந்தே. (சீவக.பா. 309)
அரசியாகிய விசயை சுடுகாட்டில் தன் மகனை ஈன்றெடுக்கின்றாள். அரண்மனையில் பிறக்க வேண்டிய தன் மகன் சுடுகாட்டில் பிறக்க நேர்ந்ததைக் குறித்து அவளுக்குத் தாங்கொணாத் துயரம் ஏற்படுகின்றது. நரியின் குரலே முழவாக; இறந்தாரை எரிக்கும் ஈமத்தீயே விளக்காக; சுடுகாடாகிய அரங்கிலே நிழல்போல் அசைந்து பேயாட; எப்பக்கமும் ஒலிக்கும் கோட்டானின் குரலே வாழ்த்துரையாக அமைய, இங்ஙனம் பிறப்பது தான் மன்னன் மகனாகிய உனக்கு இயல்போ? என்று புலம்புகிறாள். இப்பாடலில் வறுமை காரணமான அவலச்சுவை இடம்பெற்றுள்ளது; கற்பவர் நெஞ்சை உருகச் செய்கிறது.
3. இளிவரல்
மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த விளிவரல் நான்கே (தொல். பொருள். மெய். நூ.254)
இளிவரல் என்பது பிறரால் இகழப்படுவது. மூப்பு என்பது முதுமை கண்டு இழித்தல், பிணி என்பது பிணியுறவு கண்டு இழித்தல், வருத்தம் என்பது தன்னிடத்தும் பிறரிடத்தும் உள்ளதாகிய வருத்தத்தால் இழிப்பு தோன்றல், மென்மை என்பது நல்குரவு. (வறுமை)
மூப்பு காரணமாகத் தோன்றும் இளிவரல் (இழிபு) சுவையைத் திருத்தக்கத் தேவர் நயம்படக் காட்டியுள்ளார்.
''இன்கனி கவரும் மந்தி... கண்ட தொத்தே'' (சீவக. பா. 2725)
கடுவன் ஒன்று தன் மந்திக்குப் பலாச்சுளையை அன்புடன் கொடுக்கும் காட்சியையும், அச்சுளையை மந்தி வாங்கும் போது காவல்காரன் பலாச்சுளையைப் பறித்துக் கொண்டு இரண்டையும் விரட்டி விட்ட காட்சியையும் சீவகன் கண்டு ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தான். அன்புடை மனைவியரிடம் பெறும் இன்பம் தோட்டக்காரன் பெறும் இன்பத்தைப்போல் நிலையில்லாதது எனவும் உடலோடு தோன்றிய காமத்தையும் இனிவரவிருக்கும் இழிவைத் தரும் முதுமையையும் வெறுத்தலே தக்கது என்றும் கருதினான். இப்பாடல், இளிவரல் சுவை அமைந்த பாடல்.
4. மருட்கை
மருட்கை என்னும் சுவை புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் காரணங்களால் தோன்றும்.
இது காறும் காணாத ஒன்றைக் காணுதல் புதுமை, அளவிறந்த ஒன்றைக் காணுதல் பெருமை. மிக நுண்ணியன காணுதல் சிறுமை. ஒன்றன் பரிணாமம் காணுதல் ஆக்கம். இக்காரணங்களால் மருட்கை தோன்றும்.
செம்மலர் அடியும் நோக்கித்......... தேவி என்றான் (சீவக. பா. 739)
சீவகன் காந்தருவதத்தையின் அழகினை நோக்கி மலர் போன்ற கண்களை உடைய இவள், தாமரை மலரில் வாழும் திருமகளே என்றெண்ணினான். புதுமை காரணமாக தோன்றிய எண்ணம் இதுவாகும்.
5. அச்சம்
அஞ்சத் தக்கவற்றைக் கண்டு அஞ்சுதல் அச்சமாகும். அணங்கு, விலங்கு, கள்வர், இறை (அரசன்) என்னும் நான்கு பொருள்களாலும் அச்சம் பிறக்கும்.
இறையால் (அரசனால்) ஏற்படும் அச்சத்தைச் சீவக சிந்தாமணியில் காண்கிறோம்.
... சீருடைக் குரிசிலும் சிவந்து அழன்று ஓர் தீத்திரள்
பாருடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான் (சீவக.பா.274)
அரசனாகிய சச்சந்தன், வஞ்சனை மிக்க துரோகியான கட்டியங்காரனுடன் போர் புரிய சீற்றத்துடன் எழுந்தான். வடவைத் தீ போன்ற சச்சந்தனின் சீற்றம் காண்பாரை அச்சம் கொள்ளச் செய்தது இப்பாடலில் அச்சுச்சு€வை பயின்று வந்துள்ளது.
6. பெருமிதம்
பெருமிதம் என்பது வீரம், கல்வி, தறுகண், இசைமை, கொடை என்னும் நான்கு பொருள் பற்றி தோன்றும். கல்வி என்பது தவமுதலாகியவிச்சை. தறுகண் என்பது அஞ்சத் தக்கன கண்ட இடத்து அஞ்சாமை. இசைமை என்பது புகழெனின் உயிருங் கொடுத்தல்; பழியெனின் உலகுடனும் வரினும் கொள்ளாது நிற்றல். கொடை என்பது உயிர், உடம்பு, உறுப்பு முதலிய எல்லாவற்றையும் கொடுத்தல்.
''ஒன்றாயினும் பலவாயினும்... இரியச் சினவேலோன்'' (சீவக. பா. 2262) போர்க்களத்தில் விபுலனின் வீரத்தைப் பற்றிக் கூறும்போது அவ்வீரனின் பெருமிதத்தைக் காண்கிறோம்.
7. வெகுளி
வெகுளி என்பது சினம். இது வெறுப்பின் காரணமாக எழுவது. உறுப்பறை, குடிகோள், அலை கொலை என்பனவற்றின் வாயிலாக இஃது பிறக்கும்.
உறுப்பறை என்பதுகை, கால், கண் போன்ற உறுப்புக்களைக் குறைத்தல். குடிகோள் என்பது தாரமும் சுற்றமும் குடிப்பிறப்பும் முதலியவற்றுக்குக் கேடு சூழ்தல். அலை என்பது வைதல், நையப்புடைத்தல். கொலை என்பது அறிவும், புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல், அல்லது கொல்வதற்கு ஒருப்படுதல்.
''வேந்தொடு மாறு கோடல்..... திழைக்கின்றானே'' (சீவக. பா. 1089)
கந்துக்கடன், நம்பியின் போர்க் கோலத்தைக் கண்டு அரசனோடு பகை கொள்ளுதல் அழிவைத் தரும். எனவே, பொங்கும் வெகுளியைச் சீவகனிடமிருந்து நீக்கி, போர் செய்யாதவாறு தடுத்துவிட்டால், மன்னனும் இவனது செயலை நன்கு ஆராய்ந்து இவனை வருத்தும் தனது கோபத்தினின்றும் நீங்குவான். இதுவே செய்யத் தக்கது என்று (சீவகன் போர்க்கோலத்தையும் நந்தட்டன் தேர் கொண்டு வரச் சென்றதையும் கண்டு) தன் உள்ளத்தே நினைக்கின்றான். இதில் குடிகோள் காரணமாக வந்த வெகுளிச் சுவையைக் காணலாம்.
8. உவகை
உவகையாவது காமம் அல்லது மகிழ்ச்சி. செல்வம், அறிவுடைமை, புணர்ச்சி, விளையாட்டு என்ற இவை பற்றி உவகைச் சுவை தோன்றும். செல்வம் என்பது நுகர்ச்சி, புலன் என்பது கல்விப் பயனாகிய அறிவுடைமை. புணர்ச்சி, காமப்புணர்ச்சி முதலாயின; விளையாட்டென்பது, யாறுங்குளனுங்காவுமாடிப் பதியிகந்து வருதல், முதலாயின என்பர் பேராசிரியர். உவகை என்பது மகிழ்ச்சியினைக் குறிக்கும்.
''ஒற்றரும் உணர்த லின்றி ........ தொழுகிற் றன்றே'' (சீவக. பா. 2096)
சீவகன் வாயினால் ஒன்றும் கூறாமல் (ஒற்றர்கள் உணரா வண்ணம்) உறுப்பின் குறிப்பினாலேயே உறவினர்க் கெல்லாம் தன் வருகையைத் தெரிவிக்க, அவர்கள் எல்லாரும் ஒரு சேரத் திரண்டு தழுவிக் கொண்டு நம்பி நம்பி என்று கூறி அழுத, ஆனந்தக் கண்ர் காலை இழுத்து ஓடியது. இது மகிழ்ச்சியிற் தோன்றிய உவகையாகும்.
9. சமநிலை
சமநிலை என்பது நடுவு நிலைமையாகும். இதற்கு சாந்தச் சுவையைக் காட்டாகக் கூறலாம். ஐம்பொறிகளையும் அடக்கி, பிறர்வாழ்த்தினும், வையினும், தாளில் வணங்கினும்,வாளில் வெட்ட்னும் மனம் மாறுபடாது அவற்றைச் சமமாக ஏற்றுக் கொள்ளல்.
''ஆங்கவை, ஒரு பாலாக வொருபாலா
உடைமை இன்புறல் நடுவு நிலையருளல்....'' (தொ.பொ.மெய்.நூ. 260)
இந்நூற்பாவில் தொல்காப்பியர் நடுவு நிலை பற்றிக் குறிப்பிடுகிறார். ஒரு மருங்கும் ஓடாது நிகழும் மன நிகழ்ச்சி நடுவு நிலை எனக் குறிப்பிடுவார் இளம்பூரணர். சமநிலையை முத்தியிலம்பகம் வழி அறியலாம்.
முடிவுரை
பல்வகைச் சுவையைப் பாங்காகத் தரும் வண்ணம், சிந்தாமணி காப்பியம் அமைவதால்தான் அதனை இலக்கியச்சோலை எனவும், காவிய அரங்கு எனவும் மொழிகின்றோம்.
நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக