தமிழ் இலக்கணத்தில் இன்னும் விளங்காத அல்லது தெளிவாக விளக்கிக் கூறமுடியாத பகுதிகள் பல உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் சார்பெழுத்து. ''சார்பெழுத்து என்றால் என்ன?'' என்ற வினாவிற்கு மிக எளிதாகச் ''சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள்'' என்று கூறுவர் இன்றைய மாணவர் பலரும். ''சார்ந்துவருதல் என்றால் என்ன?'' என்று வினவினால் ''தனித்தியங்காதன'' என்று பதில் கூறுவர். ''தனித்தியங்குதல் என்றால் என்ன? என்று வினா எழுப்பினால் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழிப்பர். ஏன் இந்த நிலை? வழிவழியாக ஆசிரியர்கள் கூறிய தொடர்களையே - பொருள் புரியாமலேயே - மனனம் செய்து ஒப்புவித்ததன் பயனே இதற்குக் காரணம் எனலாம். ''சார்பெழுத்து என்றால் என்ன?'' என்ற வினாவிற்குச் சில மாணவர்கள் ''முதல் எழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் ஆகும்'' என்று பதில் கூறுவர். ''அவை யாவை?'' என்று கேட்டால், ''குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்'' என்று தொல்காப்பியரைப் பின்பற்றிப் பதில் கூறுகின்றனர். ''அவை எவ்வாறு முதல் எழுத்துக்களைச் சார்ந்து வருகின்றன?'' என்று வினா எழுப்பினால் அதற்குப் பதில் கூற முடியாது விழிக்கின்றனர். இது மாணவர்களின் நிலை மட்டுமன்று. இதனை எவ்வாறு விளக்குவது என்று சிந்தித்ததன் விளைவே இக்கட்டுரை.
நுண்மாண் நுழைபுலமிக்க புலவர்கள் சார்பெழுத்துக்குக் கூறிய விளக்கங்கள் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதாக உள்ளனவா? தொல்காப்பியர் சார்பெழுத்து என்ற கலைச்சொல்லைப் பயன்படுத்தவில்லை எனினும் ''எழுத்தெனப்படுவ'' என்றும், ''எழுத்தோரன்ன'' என்றும் இரண்டு கலைச் சொற்களைப் பயன்படுத்துகின்றார். தொல்காப்பியர் கூறிய ''எழுத்தோரன்ன'' என்ற கலைச்சொல்லே பிற்காலத்து இலக்கண நூலாரால் ''சார்பெழுத்து'' என்று அழைக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. எனினும் இக்கட்டுரை தொல்காப்பியர் கூறும் ''எழுத்தோரன்ன'' என்ற கலைச் சொல்லையே சார்பெழுத்து என்று கருதிச் ''சார்பெழுத்து'' என்ற கருத்தாக்கத்தை விளக்க முயல்கிறது.
தொல்காப்பியர் எழுத்ததிகார முதல் நூற்பாவில்
''எழுத்தெனப் படுவ அகர முதல
னரக இறுவாய் முப்பஃதென்ப...''
என்று கூறிவிட்டுச் சற்று யோசித்துக் கூறுவதுபோலச் சிறிது இடைவெளிவிட்டு அடுத்த வரியில்
''....சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே'' என்று கூறுவார்.
இங்குச் ''சார்ந்து வரல் மரபின்'' என்ற தொடரே பின்னர்ச் சார்பெழுத்து என்று பெயர் வழங்கக் காரணமாயிற்று. அடுத்த நூற்பாவிலேயே சார்ந்து வரும் மரபினையுடையது அவை யாவை என்பதனை,
''அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன''
என்ற அடுத்த நூற்பாவில் கூறுகிறார். இங்குச் சார்ந்து வரும் மரபினையுடைய அவை ''எழுத்தோரன்ன'' என்றும் கூறுகின்றார்.
அவ்வாறெனின் இம்மூன்றும் எழுத்தா? இல்லையா? என்பதே தெளிவாக இல்லை. ஏனெனில் ''எழுத்தோரன்ன'' என்ற தொடர் எழுத்திலிருந்து வேறுபட்டது என்ற பொருள் தொனிக்கச் செய்கிறது. இதனாலேயே இன்றைய மொழியியலார் எழுத்தெனப்படுவ, எழுத்தோரன்ன, அல் எழுத்துக்கள் என்று தொல்காப்பியர் கூறும் தமிழ் ஒலிகளை மூன்றாகப் பகுப்பர் (சணமுகம். செ.வை. 1980:73) ''எழுத்து'', ''எழுத்தோரன்ன'' என்ற இக்கலைச் சொற்களே பின்னால் வந்த இலக்கண நூலான நன்னூலில் முதல் எழுத்து, சார்பெழுத்து என்று குறிக்கப்பட்டன. தொல்காப்பியர் கூறிய ''எழுத்தோரன்ன'' என்ற மூன்றும் சார்ந்து வரும் மரபினையுடையன என்ற கருத்தே ''சார்பெழுத்து'' என்ற பெயர் பெறக் காரணமாயிற்று.
சார்ந்து வரல் மரபு என்பது என்ன என்று புரிந்து கொள்வோமாயின் சார்பெழுத்தை விளக்குவது எளிதாகிவிடும். இதனைப் பேராசிரியர்கள் பலரும் பலவிதமாக விளக்குகின்றனர். வெள்ளைவாரணனார் ''இவற்றியல்பு தனியே வர இயலாது. ஒன்றனைச் சார்ந்துவருதலே என்பது புலனாகும். எனவே தன்னியல்பின் நிற்றல் ஆற்றாதனவாய் மொழியைச் சார்ந்து வரும் இயல்புடைய எழுத்துக்களே சார்பெழுத்தாதல் தொல்லாசிரியர் துணிபென்பது தேற்றம்'' என்பார் (1962:33). பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, ''முதலெழுத்துக்களைத் தனியே ஒலித்துக் காட்டமுடியும். ஆனால் சார்பெழுத்துக்களை யாதேனும் ஒரு சொல்லில் வைத்துத்தான் ஒலித்துக் காட்ட முடியும்''. என்பார் (1977:49). ஆனால் உகரத்தை இதழ் விரித்து உச்சரித்தால் அது குற்றியலுகரம் ஆகும் என்பது பேராசிரியருக்குத் தெரியாததன்று ஆகையால் இது தெளிவான விளக்கமாகப்படவில்லை. ''சார்ந்துவரல் மரபின்'' என்பது இருவரின் கூற்றின் மூலமும் தெளிவு பெறவில்லை என்பதே உண்மை. பேராசிரியர் முருகரத்தனம் கூறும்போது ''சார்பெழுத்துக்கள் எப்போதும் மற்ற அல்லது ஒரு சில குறிப்பிட்ட எழுத்துக்களுடன் இருந்தே வழங்குவன எனப் பொருள்படும், அதாவது அவை இன்றைய மொழியியல் கருத்துப்படி ஒரு குறிப்பிட்ட எழுத்துச் சூழலிலேயே வழங்கும்'' என்பார் (1973:275). இக்கருத்து முதல் எழுத்து என்று கருதப்படும் ''ங்'' என்ற எழுத்துக்கும் பொருந்தும். ஆகையால் இதுவும் சரியான விளக்கம் தருவதாக இல்லை.
சார்ந்து வரல் மரபு என்பதனை விளங்கிக் கொள்வதற்கு முன் எழுத்து என்றால் என்ன என்பதனை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். எழுத்து என்றால் என்ன? எழுதப்படுவதா?. எழுப்பப்படுவதா? என்றால், எழுத்து என்பது ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் பெற்று விளங்குவது என்பது தொல்காப்பியர் கருத்தாகும். அதனாலேயே ''கூட்டு எழுஉதல்'' என ஒலிவடிவத்தையும், ''மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்'' என வரிவடிவத்தையும் பேசுகிறார் தொல்காப்பியர். ஆகையால் எழுத்து எனப்படுவன ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் பெற்று விளங்குவனவாகும். வரிவடிவம், ஒலிவடிவம் இவற்றில் ஏதேனும் ஒன்றில்லாவிடில் அதனை ''எழுத்தோரன்ன'' என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இதனை அடிப்படையாகக் கொண்டு இப்போது சார்பெழுத்து மூன்றனையும் விளக்கலாம்.
குற்றியலுகரம் எப்படி உச்சரிக்கப்படும் என்ற ஒலிவடிவம் பற்றிய செய்தி உள்ளது. ஆனால் அது எத்தகைய வரிவடிவத்தை உடையது என்ற செய்தி இல்லை. இவ்விடத்து ''முப்பாற்புள்ளி'' என்ற தொடரைக் காட்டி இக்கருத்தை மறுக்க முயல்வர் சிலர். அத்தொடர் குறித்து இருவகையான கருத்துள்ளமையாலும் சந்தேகத்தின் பலனைக் கையிலெடுத்துக்கொண்டு நாம் இவ்வாறு விளக்கலாம்.
குற்றியலிகரமும் அரை மாத்திரை யளவாய்க்குறுகி ஒலிக்கும் என்று கூறப்படுகிறதே தவிர அதன் வரிவடிவம் குறித்த செய்தி ஏதும் இல்லை.
ஆய்தத்தின் வரிவடிவம் மெளிவாகக் கூறப்படுகிறது. ஆனால் அதன் ஒலிவடிவம் குறித்துக் கூறப்படவில்லை. அதனால்தான் அதற்கு ஆறுவகையான ஒலிப்பு முறையைப் பயன்படுத்துகிறோம். அதனை அடுத்து வரும் வல்லெழுத்தை நலிபொலியாக மாற்றுவதையே இன்றைய தமிழிலும் ஒலிப்பு முறையாகக் காணமுடிகிறது. ஆய்தத்திற்கு எனத் தனி ஒலிப்புமுறை கூறப்படவில்லை.
தொல்காப்பியர் ''எழுத்தோரன்ன'' என்று கூறிய இம்மூன்றும் ஒலிவடிவம் அல்லது வரிவடிவம் ஏதேனும் ஒன்றனையே பெற்று விளங்குகின்றன என்பது தெளிவாகிறது.
இனி இவற்றின் சார்ந்து வரல் மரபினை விளக்கலாம். குற்றியலுகரம் ஒலிவடிவம் மட்டும் பெற்றிருப்பதால் அதன் வரிவடிவத்துக்காக அது தன்னுடைய முதல் எழுத்தைச் சார்ந்து வருகிறது. அது தன்னுடைய முதல் எழுத்தின் வடிவத்தையே பெற்று விளங்குகிறது. இதனையே சார்ந்து வரல் என்கிறார் எனலாம்.
குற்றியலிகரமும் அரைமாத்திரையளவில் குறுகி ஒலிக்கும் ஒலி வடிவம் பெற்றுள்ளது என்பது குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எனத் தனியாக ஒரு வரிவடிவம் இல்லை. வரிவடிவத்தை அது தன்னுடைய முதல் எழுத்தாகிய இகரத்திடமே பெறுகிறது. ஆகையால் இதுவும் வரிவடிவத்துக்காகத் தன் முதல் எழுத்தாகிய இகரத்தைச் சார்ந்து நிற்கிறது என்று விளக்கலாம்.
ஆய்த எழுத்து இவற்றிலிருந்து சற்று வேறுபட்டு நிற்கிறது. ஆய்த எழுத்துக்கு ''முப்பாற்புள்ளி'' என்று வரிவடிவம் தெளிவாகச் சுட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒலிவடிவமும் தெளிவாகச் சுட்டப்படவில்லை இது ஒலிவடிவத்திற்காகத் தன்னை அடுத்து வரும் ஒலியைச் சார்ந்து நிற்கிறது.
சான்றாக எஃகு என்ற சொல்லில் ஆய்த எழுத்து உச்சரிக்கப்படுவதற்கும் காஃபி என்ற சொல்லில் ஆய்த எழுத்து உச்சரிக்கப்படுவதற்கும் வேறுபாடுள்ளமை தெளிவு.
இதுகாறும் கூறியவற்றால் சார்ந்து வரல் மரபு என்பது விளக்கப்பெற்றது. சார்பெழுத்து என்பது குறித்துத் தொல்காப்பியர் கொண்ட கருத்து ''ஒலிவடிவம், வரிவடிவம் இவற்றில் ஏதேனும் ஒன்றில்லாத எழுத்து'' என்பதாகும். ஒலிவடிவுக்காகவோ, வரிவடிவுக்காகவோ முதல் எழுத்துக்களைச் சார்ந்து நிற்பது சார்பெழுத்து ஆகும். இவ்விளக்கம் தொல்காப்பியர் கூறிய ''எழுத்தோரன்ன'' என்ற குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் இம்மூன்றனுக்கு மட்டுமே பொருந்தும். நன்னூல் கூறிய பத்துக்கும் இவ்விளக்கம் பொருந்தாது. ஏனெனில் நன்னூலாரின் சார்பெழுத்துக் குறித்த கருத்தாக்கம் வேறுபட்ட ஒன்றாகும். நன்னூலார் எழுத்துக்களுக்குரிய இயல்பான மாத்திரையளவிலிருந்து குறைந்தாலும் கூடினாலும் அதனைச் சார்பெழுத்து என்று கருதினார். இது மேலும் ஆய்வதற்குரிய கருத்தாகும்.
நன்றி: ஆய்வுக்கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக