12/02/2011

புலம் பெயர்ந்த பெண் கவிஞர்கள் பார்வையில் - கற்பு, திருமணம், குடும்பம் குறித்த சிந்தனைகள் - ப. தமிழரசி

எண்பதுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெண் கவிஞர்கள் முக்கிய இடம் பெறுகிறார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் இக்காலக்கட்டத்தில் எழுத்துத் துறையில் இளம் பெண்கள் பெருவாரியான எண்ணிக்கையில் இலக்கியத்துறையில் அதுவும் குறிப்பாகக் கவிதைத் துறையில் பிரவேசித்தனர். இவர்களில் பெரும்பாலோர் பல்கலைக்கழகங்களில் பயின்றவர்கள். பொதுவான சமூகச் சிந்தனைகளுடனும், விரிந்த பார்வைகளுடனும் பிரச்சனைகளை அகன்ற சிந்தனையுடன் பார்க்கும் தெளிவுடனும் வளர்ந்தவர்கள். உலகளவில் வெவ்வேறு தளங்களில் எண்பதுகளில் உருவாகிய பிரச்சனைகளை இவர்கள் தங்கள் கோணத்தில் அலசியுள்ளனர். ஒரு புதிய அரசியல் கலாச்சாரம், சமூகப் பிரக்ஞையின் ஒரு முக்கியக் கூறாக இவர்களின் கவிதைகள் அமைகின்றன. இவர்களது கவிதைகளில் பெண்களின் இருத்தல் பற்றிய பயங்களும், சமூக நம்பிக்கையின்மையும், இன்றைய சூழல் குறித்ததுமான கவிதைகளே பிரதான இடம்பெறுகின்றன.

மனித சமூகம் தன்னை மேம்படுத்திக்கொண்ட நூற்றாண்டு இது. வாழ்க்கை என்ற சாரத்திற்காகத் தம் நாடுவிட்டு நாடு போய்த் தம் வாழ்வியல் தேவைகளை நிரப்பிக்கொண்ட காலகட்டம். இந்தக் கால கட்டத்தில் பெண் பற்றிய பழைய கருத்துக்கள் நம்மைவிட்டு மாறிப்போய்விட்டன. ஏனெனில்

முந்நீர் வழக்கம் மகடூவோடில்லை

என்ற தொல்காப்பியர்காலக் கருத்துக்களுக்கு இன்று மதிப்பில்லை. பெண்களும் தம் வாழ்வியல் தேவை குறித்ததான கவலைகளைக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் அமைப்பான வீடுகளைவிட்டு வேலைதேடிப் பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் செல்கிறார்கள். தங்களது வாழ்க்கை குறித்ததான தெளிவான சிந்தனைகளை அவர்கள் கொண்டிருப்பதன் காரணமாகவே அவர்களது படைக்கும் ஆற்றல் முன்னைவிடப் பலமடங்கு அதிகமாக இன்று பளிச்சிடுகிறது. மரபுமீறல்கள் அவர்களின் கவிதைகளில் அதிகளவில் எதிரொலிக்கிறது. உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு என்ற மாயவாதங்கள் எல்லாம் மாயமாக மறைய வேண்டும் என்ற சிந்தனைகளே அவர்களின் பிரதானமாக அமைகிறது. காலங்காலமாக நாம் வாழ்ந்து வந்த சமூக அமைப்பு, கலாச்சாரம் பற்றிய வினாக்களும், தர்க்கங்களும் பெண்கள் மத்தியில் இடம்பெற்றிருந்தன. பெண்களது விழிப்புணர்வு, பெண் விடுதலைக் கருத்துக்கள் ஆகியவை காரணமாகத் தவிர்க்க முடியாதபடி வாழ்வின் சகல அம்சங்கள் பற்றியும் மறு பரிசீலனை, கருத்துப் பரிமாற்றம் ஆகியவை சிறிய அளவிலாவது அயல்நாடுகளில் வாழும் பெண்களின் படைப்புகளில் காணப்படுகின்றன. அவைகுறித்தான ஒரு சிறிய அறிமுகமாகவே இக்கட்டுரை அமைகிறது.

புலம் பெயர்ந்த பெண் கவிஞர்கள்:-

போர்ச்சூழலும், வாழ்வின் தேவைகளும் ஒன்றிணைந்து மக்களை ஊர்விட்டு, நாடுவிட்டு, கண்டம்விட்டு உலகின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று வாழச்சொல்கிறது. தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அந்தந்த கால கட்டங்களில் அவ்வப்பகுதிகளுக்குச் சென்று குடியேறியவர்களாக அந்த நாட்டின் பண்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களாக வாழ நேரிடினும் தம் பழைய மரபுகளை மறக்க இயலாமல் திரிசங்கு நிலையில் வாழ்பவர்களாகத் தோற்றம் தருகின்றனர். காலம் தந்த கருத்துச் சுதந்திரம் இந்தப் பெண்களின் கவிதைகளில் அழகாய்த் தோற்றம் தருகிறது. பலரும் தாம் வாழ்ந்த, வாழும் சூழலை மையமாகக் கொண்டே தம் கவிதைகளைப் படைக்கின்றனர். இதழ்களில் பல பெண் படைப்பாளிகள் தங்களது கவிதைகளைப் படைத்துள்ளனர். எழுதுவதிலும், வாசிப்பதிலும் ஒரு புதிய ஆர்வம் உலகளவில் பெண்களிடையே காணப்படுகின்றன. அப்படைப்பாளர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அருந்ததி, கௌரி, திரிசடை, செல்வி, சிவரமணி, சுல்பிகா, ஊர்வசி, அவ்வை, மைத்ரேயி, மைதிலி, அருளையா, சங்கரி, ராதா, நளாயினி, ஊரெழுதர்ஷ’னி, வசந்தி போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் மட்டுமின்றிப் பல நாடுகளில் இருந்தும் வெளிவரும் இதழ்களில் பல பெண்கள் எழுதியுள்ள நல்ல கவிதைகளும் குறிப்பிடத்தக்கனவே.

மனித சமூகம் நெடுங்காலமாக ஆணாதிக்கச் சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. எல்லா நிலைகளிலும் ஆணாதிக்க கருத்துநிலையே சமூகத்தில் வேரூன்றி உள்ளது. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது அங்கிகரிக்கப்பட்ட கருத்து நிலையின் வெளிப்பாடாகும். தாய் புனிதமானவள், பூஜிக்கத்தக்கவள் எனினும் தந்தையே அதிகாரம் உள்ளவன் என்பது இதன் பொருள். ஆனால் நவீன சமூகத்தின் பெண்களும் கல்வியறிவு பெற்றுச் சமூக வாழ்க்கையில் முக்கிய இடம்பெறத் தொடங்கியதும், பெண்களின் இருத்தலுக்கும் இந்த மரபார்ந்த கருத்து நிலைக்கும் இடையே முரண்பாடு தோன்றத் தொடங்கியது. இந்த முரண்பாட்டின் அடிப்படையில் பெண்களின் தனித்துவம், பெண் விடுதலை பற்றிய உணர்வும் பெண் நிலைவாத சிந்தனைகளும் தோன்றின. பெண் எவ்வகையிலும் ஆணுக்குத் தாழ்ந்தவள் அல்ல. ஒரு சுதந்திர உயிரி, எல்லாத் துறைகளிலும் பெண்ணும், ஆணும் சமமாக வாழ்வதையே அவள் விரும்புகின்றாள். பெண் வெறும் பாலியல் பிம்பம் மட்டும் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் உயிர்ப்பே அவளுள் உறைந்து கிடக்கிறது என்பதைத் தங்களின் கவிதைகள் வெளிப்படுத்த வேண்டும் என்ற துடிப்புப் பெண்களுக்கு ஏற்பட்டது. பெண்ணை ஓர் உயிரியாகப் பார்க்கும்போது அவளின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையும் ஏற்பட்டது.

நாமிந்த உலகிற்கு

நரகத்துழலவா வந்து பிறந்துள்ளோம்

புதை குழிகளில்

சாகாத பிணங்களாய்

சதா வாழவா வந்தோம்

இல...

புதிதாய்ப் பிறப்போம்

புதுமைகள் செய்வோம்

என்ற சுல்பிகாவின் பிரகடனம் பெண் குலத்தின் பிரகடனமாக மட்டுமின்றி முழு மனித குலத்தின் பிரகடனமாகவும் அமைகின்றது.

கற்பு:-

கற்பு எனப்படுவது சொன்ன சொல் மாறாதது என்ற மூத்த முன்னோர்களின் வார்த்தைகள் பொய்யாய்ப் போய்விட்ட காலம் இது. கற்பு எனப்படுவது மனம் சார்ந்த நிகழ்வாகப் பார்க்கப்பட்டது போய் இன்று உடல் சார்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

என்ற திருவள்ளுவரின் குறளுக்கு அர்த்தம் மாறிப்போனதைப் போல, கற்பு குறித்த கருத்துக்களும் மாறிவிட்டன. நம் பெண்களைப் பொறுத்த வரையில் எத்தனையோ சுழற்காற்றுக்கு இடையிலும் புடவையை நழுவவிடாதிருப்பதே கற்பு. கணவனைத் தவிர மற்றொருவனை மனதாலும் நினையாதிருப்பதே கற்பு. இந்தக் கருத்தமைந்த கவிதைகளே இங்கு அதிகமாக உள்ளது. அயல்நாடுகளில் வாழும் பெண்களின் கற்பு குறித்த பார்வை இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. அவர்களைப் பொறுத்தவரை கற்பு எனப்படுவது உடல் சார்ந்ததாகப் பார்க்கப்படுவதில்லை. மனம்சார்ந்து பார்க்கப்படுகிறது. வாழ்க்கைக்கும் கற்புக்கும் தொடர்பில்லை. தான் யாருடன் வாழ நேரிடுகிறதோ அவர்க்கு உண்மையாய் வாழ்வதே கற்பு என்ற சிந்தனையும் காணப்படுகிறது. பெரும்பாலும் கற்பு என்பது பழங்கதையாய்ப் பாவிக்கப்படுவதாலும், பெண்கள் அடிமைப்பட்ட இது ஒரு தந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதாலும், கற்பு குறித்த கவிதைகள் அவர்களின் கவிதைகளில் அதிகம் இடம் பெறுவதில்லை.

திருமணம்:-

திருமணம் செய்து கொள்ள இருப்பவரின் சாதி, மதம், பெற்றோர் என்று இங்கிருப்பவர்களைப் போல எண்ணாமல், தன்னைத் திருமணம் செய்து கொள்ள இருப்பவரின் வேலை நிலை, மாத வருமானம், வசிப்பிடச் சான்று உள்ளவரா என்பதையெல்லாம் பார்த்துத் தெளிவான பின்னரே திருமணத்திற்குச் சம்மதிக்கிறார்கள். ஆயினும் இந்தத் திருமண விளையாட்டில் நிறைய பேர் தோற்றுப்போவது தான் பரிதாபம். இதற்குக் காரணம் ஆண்களின் மனநிலை, காலம் காலமாக நமக்குச் சொல்லப்பட்டு வரும் கதைகள், பெண்கள் கண்ணகிகளாகவும், சீதைகளாகவுமே இன்னும் இருக்கவேண்டும். அதாவது கணவன் எதைச் செய்தாலும், என்ன சொன்னாலும், எதிர்த்துப் பேசாமல், ஏனென்று கேட்காமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு இந்தப் பெண்களிடம் தோற்றுப் போகும்போது திருமண விளையாட்டும் முற்றுப்பெறுகிறது. இதனை,

அசோகவனங்கள் அழிந்து போய்விடவில்லை

இந்த வீடே

எனக்கான அசோகவனமாயுள்ளது

ஆனால்

சிறைபிடித்தது இராவணனல்ல, இராமன் தான்

இராமனே, இராவணனாய்த்

தனது அரசிருக்கையின் முதுகுப்புறமாய்

முகமூடிகளை மாற்றிக் கொண்டதைப்

பார்க்க நேர்ந்த கணங்கள்

இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது

என்ற சிவரமணியின் கவிதையைப் படிக்க நேரிடும்போது, அதிர்ந்து போவது அவர் மட்டுமல்ல படிப்பவர்களும் தான். தொடர்ந்து தான் மிகவும் பலவீனப்பட்டுப் போய் உள்ளதாகவும், யாரும் என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என்கிறார். நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது இதயம் என்று கவிஞர் வருந்தும்போது மேற்கத்திய நாடுகளில் உள்ள பெண்கள் திருமணம் என்ற விளையாட்டால் எவ்வளவு பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

குடும்பம்:-

குடும்பம் என்பது தத்துவ ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்றார் காரல்மார்க்ஸ். அதுபோலக் குடும்பம் என்ற அமைப்பு முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டால் ஒழிய, பெண்களுக்கு விடுதலை என்பது சாத்தியமில்லை என்ற கருத்தே தீவிரப் பெண்ணியவாதிகளின் கருத்தாக அமைகிறது. குடும்பம் என்கிற அமைப்புதான் பெண்களை மனோரீதியாக அடிமைப்படுத்துகிறது. ஆண் - பெண் வாழ்க்கை என்பது தோழமையுடன் கூடியதாக இல்லாமல் ஆண்டான் அடிமை உறவாகவே இங்கு இருந்து வருகிறது. கவிஞர் சாந்தா இதைச் சொல்லவரும்போது உன் அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறி, அதனால் உன்னை விலைபேசியவனையும், விலைக்கு வாங்கியவனையும் அறுத்தெறிகிறாய் என்கிறார்.

கறுத்த பெண்ணே

உன் அடிமைச் சங்கிலிகளை அறுத்து

அதனாலேயே

உன்னை விலை பேசியவனை

விலைக்கு வாங்கியவனை

அறுத்தெறிகிறாய்

எனும்போது, குடும்பம் என்ற அமைப்புக்குள் பெண் வாழ்க்கை முழுவதும் பிழிந்தெடுக்கப்படும் நிலையை மிகத்தெளிவாக உயர்த்துகிறார் எனலாம்.

காலம் காலமாகக் குடும்பம் என்ற அமைப்புப் பெண்ணை அடக்கியே வைத்திருக்கிறது. மழை பெய்வதும், பெய்யாததும் கூடப் பெண்ணின் கையில் இருப்பதாய்க் கூறி அவளைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

இறுவாய்:-

இவ்வாறாக அயல்நாடுகளில் வாழும் பெண்கள் பலரும் தங்கள் கவிதைகளில் பெண்களின் கற்பு, திருமணம், குடும்பம் என்ற நிலைகள் குறித்துப் பலவாறு சிந்திக்கின்றனர். கற்பெனச் சொல்லவந்தால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்ற பாரதியின் வரிகளே அவர்களின் கவிதைகளிலும் எதிரொலிக்கின்றன. திருமணம் என்ற வாழ்க்கை அமைப்பு முறையை அவர்கள் நம்பத் தயாராக இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழும் காலம் முழுவதும் தன்னோடு வாழ முன்வருபவளை, தனக்குச் சமமாக நடத்தும் தோழமையான ஆணையே அவர்கள் திருமணம் என்ற பந்தத்திற்குள் அடக்க நினைக்கிறார்கள். குடும்பம் என்ற அமைப்பு குறித்து அவர்கள் அதிகம் சிந்திப்பதில்லை. குடும்பம் என்ற அமைப்புதான் பல்வேறு விதமான பெண்ணியச் சிக்கல்களுக்கு அடிகோலுகின்றது என்று நினைப்பதால் குடும்பம் என்ற அமைப்பு குறித்தும் அவர்கள் அதிகம் பேசுவதில்லை எனலாம்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கருத்துகள் இல்லை: