12/02/2011

''ஊர்ச்சோறு'' சிறுகதைத் தொகுப்பில் தலித்தியப் பிரச்சனைகள் - பே. நடராசன்

''ஊர்ச்சோறு'' என்னும் சிறுகதைத் தொகுப்பினைத் தமிழ்ச் சிறுகதை இலக்கிய உலகிற்குத் தந்துள்ளவர் அபிமானி ஆவர். இவரது இயற்பெயர் மணி ஆகும். வயது 40. இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார். ''தாமரை'' இதழின் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். தலித் எழுத்தாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் இவர். இவரது சிறுகதைத் தொகுதிகளான நோக்கோடு பனைமுனி, ஊர்ச்சோறு ஆகியவற்றோடு பாரம் சுமப்பவர்கள், தலித் கவிதைத் தொகுதி போன்றவற்றையும் இவர் படைத்துள்ளார். தலித்துகளுக்கும், ஆதிக்க சாதியினர்க்கும் இடையே எழும் போராட்டங்கள் மற்றும் தலித்துகளுக்கு இடையே நிகழும் உள்சாதி ஒடுக்கு முறைகளையும் தம்முடைய படைப்பின் வழி ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். எல்லாப் பிரிவுகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள். தலித்துகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து ஒடுக்குமுறைகளும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது ஆசிரியர் கருத்தாகும். ''தலித்துக்கள் தங்கள் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலமே ஆதிக்க சாதியினரை எதிர்க்கும் துணிவைப் பெறுகிறார்கள்'' என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஊர்ச்சோறு என்னும் சிறுகதையில் மொத்தம் பதினாறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் புற்று, ஊர்ச்சோறு, தேர் என்ற மூன்று சிறுகதைகள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

''புற்று'' தரும் சிந்தனைகள்:-

''புற்று'' என்னும் சிறுகதையில் கந்தசாமி மகன் துரையரசு ராசுத்தேவர் வயக்காட்டில் வேலை பார்த்து வருகிறான். ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் இரயில் ஏறி பம்பாய் சென்று விடுகிறான். அங்கு தனியார் ஆலையில் வேலை பார்த்து வருகிறான். அவ்வப்போது தாய், தந்தையர்க்குப் பணம் அனுப்பி வைக்கிறான். கூலி வேலைக்குப் போக வேண்டாமெனக் கடிதம் எழுதுகிறான். ஆனால், பாட்டான், முப்பாட்டான் காலத்து வேலையை விட விருப்பம் இல்லை தாய், தந்தையர்க்கு. தந்தைக்கு காலில் புற்று வரவே, இரண்டு செருப்புக்களை மகன் வாங்கிக் கொடுக்கிறான். ''அப்பா படும் அவஸ்தைகளைக் கண்டு, நகரத்திற்குப் போய் இரண்டு செருப்புகள் வாங்கிக் கொண்டு வந்து தந்தான்''. தந்தை செருப்புக்களைக் காலில் மாட்டிக்கொண்டு ராசுத் தேவர் வயக்காட்டிற்கு வேலைக்குச் செல்கிறார். அதிகாலை நேரத்தில் தேவர், கோனார், நாடார் தெருக்களைத் தாண்டித்தான் வயக்காட்டிற்குச் செல்ல வேண்டும். அதிகாலை நேரத்தில் ராசுத் தேவரின் மகன் பூல்பாண்டி வழியில் தென்படுகிறான். உடனே கந்தசாமி காலில் அணிந்து இருந்த செருப்புக்களைக் கையில் எடுத்துக் கொள்கிறார். ''அடே கந்தசாமியா? வெள்ளனங்காட்டியே சோலிக்குக் கிளம்பிட்ட?'' என்று பூல்பாண்டி கேட்கிறான். பெரியவர் என்ற மதிப்பின்றி ஏளனமாக மரியாதை இல்லாமல் ஐயா என்று அழைக்காவிட்டாலும் பரவாயில்லை. ''அடே கந்தசாமி'' என்று சிறுவன் பூல்பாண்டி அழைக்கையில், கந்தசாமியின் எண்சாண் உடம்பும் ஒரு சாண் உடம்பாகக் கூனிக் குறுகி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். கந்தசாமி மகன் துரையரசு வயதுகூட இல்லாத குறைந்த வயசுக்காரன் பூல்பாண்டி. இன்னும் சில கிராமங்களில் தலித்துக்கள் பொதுத் தெருவில் நடக்கக்கூடாது. காலில் செருப்பு அணியக் கூடாது. வயதான பெரியவர்களை உயர்சாதிச் சிறுவர்கள் பெயர் சொல்லி அழைக்கின்ற கொடுமை நிலவுகிறது. இந்தியா சுதந்திரமடைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னும் சமத்துவம் ஏற்படவில்லை. தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல் என்று பாடப் புத்தகங்களில் கூட எழுதப்பட்டுள்ளது. தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அரசால் இயற்றப்பட்டிருந்தாலும், முழுமையாகக் காவல்துறை அதிகாரிகளால் பின்பற்றப்படுவதில்லை என்பது உண்மையாகும் (வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 மற்றும் விதிகள் 1995).

வன்கொடுமை வழக்குகள்:-

2000-இல் நாடு முழுவதும் 30,315 வன்கொடுமை வழக்குகள் பதிவானதில் வெறும் 1.214 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 19,608 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 9,006 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன (தீக்கதிர், மார்ச் 23, 2002). சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்துபவர்களை வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ்க் காவல்துறை அதிகாரிகள் கைது செய்து, வழக்கு விசாரணை நடத்தி இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கலாம் என விதி இருக்கின்றது. இதனை முறையாகக் காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தினால் சாதி பெயரைச் சொல்லி இழிவுப்படுத்துவது ஓரளவு குறையும். இந்த சிறுகதையில் தேவமார் தெருவின் கிழக்குப் பகுதியில் ''சண்பகா உணவகம்'' என்ற பெயரில் தேநீர்க்கடை உள்ளது. கடை உரிமையாளர் சின்னப்பாண்டியன் ஆவர். அக்கடையின் முகப்பிலே பாய்லருக்கு வெளியே சுவற்றில் கயிற்றில் கண்ணாடி டம்ளர்கள் கட்டி தொங்கவிடப் பட்டிருக்கின்றது. கோனார், தேவர், நாடார் சமூகத்தினர் குடிப்பதற்கு எவர்சில்வர் டம்ளர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

''டே கந்தசாமி, காப்பி சாப்டலடே'' ''இல்ல பாண்டியன் சோலிக்கு நேரமாயிட்டு கரையேறி வரும்போது குடிச்சிக்கிறேன்'' என்று பதில் சொல்கிறார் கந்தசாமி. இந்த சூழ்நிலை இன்னும் சில கிராமங்களில் நிலவுகின்ற தன்மையினை ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.

இரட்டை டம்ளர் முறை:-

''கோவை மாவட்டம், அவிநாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில், இன்னும் இரட்டை டம்ளர் முறை நீடிப்பதாக அப்பகுதிகளில் பணிபுரியம் ''விழுதுகள்'' அமைப்பு தெரிவித்துள்ளது. தலித் இயக்கங்களின் தொடர்ச்சியான பிரச்சாரங்களுக்குப் பிறகு தற்பொழுது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. தலித் மக்களுக்குத் தனி டம்ளர் அளிப்பதற்குப் பதில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்களில் டீ, காபி போன்றவை தரப்படுகின்றன. ஆனால் பிறருக்குக் கண்ணாடி டம்ளர்களில் வழங்கப்படுகின்றன விஞ்ஞான வளர்ச்சி மிகுந்த தற்போதைய காலக்கட்டத்தில் இந்த இரட்டை டம்ளர் முறை சமுதாயக் கொடுமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது'' என்கிறார். இப்பகுதியில் இயங்கி வரும் ''விழுதுகள்'' அமைப்பின் இயக்குநர் தங்கவேல் (தலித் முரசு டிசம்பர், 2004). உயர்சாதி வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வீடுகளில் தண்­ர் பருகினால் பாவம் என்ற நிலை இருந்தமையைத் தஞ்சை மாவட்டத்தில் விவசாயச் சங்கங்களை உருவாக்கி விவசாயிகளின் பேரெழுச்சிக்கு அடிக்கல் நாட்டியவர் கன்னடத்துப் பிராமணரான சீனிவாசராவ். இவர் சேரிப்பெண்ணொருத்தியிடம் தண்­ர் கேட்டபோது அப்பெண், ''சாமி நாங்கள் நண்டு திம்போம். செத்த மாடு திம்போம் எங்கக் குடிசையிலே நீங்கத் தண்ணி கேக்கலாமா? எங்களுக்குப் பாவம் இல்லையா சாமி?'' என்று கேட்கிறாள் (சுபாஷ் சந்திரபோசு 1999-95). தலித் இனத்தவர் வீடுகளில் தண்­ர் பருகக்கூடாத நிலையை இது தெரிவிக்கிறது.

சிரட்டை கட்டித் தொங்க விடுதல்:-

1997-ஆம் ஆண்டு நிகழ்ந்த தென்மாவட்ட சாதிக் கலவரங்களின் போது கலவரப் பகுதியில் சுற்றுப் பயணம் செய்த ''சமூக அக்கறையுள்ள எழுத்தாளர்கள்'' ''அறிஞர்கள் குழு'' வெளியிட்டுள்ள அறிக்கையில் மம்சாபுரத்து மறவர்கள் அப்பகுதியைச் சுற்றியுள்ள எல்லாத் தேநீர்க் கடைகளிலும் கட்டாயமாகச் சிரட்டைகளைத் தொங்கவிட்டுத் தேவேந்திரர்களுக்கு அதில் தான் தேநீர் கொடுக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதையும் இதனைத் தேவேந்திரர் ஏற்றுக் கொள்ள மறுத்ததற்காக அமச்சியர்பட்டி தீக்கிரையாக்கப்பட்டுச் சூறையாடப்பட்டுள்ளதையும் நேரில் கண்டோம். பல ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கொடுமையை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சியாக மறவர்களின் சாதி உணர்வு வெளிப்பட்டுள்ளது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இதுபோன்று இராஜபாளையம் அருகிலுள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில், அங்கு வாழும் கிறிஸ்தவ நாடார்கள் ஊர்வலமாகச் சென்று ஊரிலுள்ள தேநீர் விடுதிகளில் சிரட்டைகளைக் கட்டித் தொங்கவிட்டனர் (தகவல், பணி, அ. மாற்கு, ஆ. சிவசுப்பிரமணியன், பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் பக். 7, 8, 17, 18). இவ்வாறு தீண்டாமைக் கொடுமைகளை மீண்டும் தென் மாவட்டக் கலவரத்தின் விளைவாக நிலைநிறுத்தும் முயற்சிகள் ஏற்பட்டதனை அறிய முடிகிறது. இறுதியாக கந்தசாமி செருப்புக்களைக் காலில் அணிய முடியாத நிலையை எண்ணி, வயக்காட்டிலே தூக்கி எறிந்து வீட்டிற்கு வந்து விடுகிறார். ''அவனுவனுவ மாதிரி மேப்பொறந்தச் சாதிகாரனுவளாலத் தான் எண்ணியலாச் செருப்புப் போட்டுக்க முடியல அதான் அவன் காட்டுக்குள்ளே தூக்கி வீசிப்புட்டேன்'' கந்தசாமி கூலி வேலைக்குக் காட்டுக்குச் செல்லாமல், தனது மகன் அனுப்பி வைக்கிற பணத்தில் மீண்டும் காலத்தைக் கழிக்கிறான் என்று கதையை முடிக்கிறார் ஆசிரியர். செருப்புப் போடக்கூடச் சுதந்திரமில்லாத ஒரு ஜ“வனின் மனப் போராட்டத்தையும், அதனால் ஏற்படுகின்ற மன விரக்தியையும் ஆசிரியர் சித்திரித்துக் காட்டியுள்ளார்.

மாசானத்தின் மனிதநேயம்:-

''ஊர்சோறு'' என்னும் சிறுகதையில் தலித்துகளுக்குள்ளே உள் முரண்பாட்டை ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். ''மாசானம்'' என்ற சலவைத் தொழிலாளி வீடுவீடாய்ச் சென்று ஊர்ச்சோறு எடுக்கிறார். எல்லா வீடுகளிலும் சோறு கிடைக்காது. சில வீடுகளில் சோளக்கஞ்சியும், சில வீடுகளில் கேப்பைக் கூழும் கிடைக்கும். இவற்றையெல்லாம் ஒன்றாகக் கூழாக்கி, சற்று எரிப்பான துவையல் வைத்துத் தனித்தனிப் பாத்திரங்களில் ஊற்றிக் குடும்பத்தோடு குடிக்கிறார்கள். மாசானம் கடைசியாக இருக்கின்ற வீட்டிற்குச் சோறு எடுக்கச் செல்கிறார். ஏழ்மையான குடும்பம், குழந்தை பசியால் சத்தம் போடுகிறது. தாய் அப்பொழுதுதான் சோற்றை உலையில் வைத்திருக்கிறாள். மாசானம் குழந்தையின் பசியை ஆற்றுவதற்காகத் தான் வைத்திருந்த பாத்திரத்திலிருந்து பருக்கையை எடுத்துக் குழந்தைக்குக் கொடுக்கிறார். குழந்தை அழுகையை நிறுத்தியது. இந்தக் காட்சியைப் பார்த்துத் திடுக்கிட்டு குழந்தையின் தாய் ''ஊர்ச்சோத்தத் திங்கிற அளவுக்கு எம்புள்ள ஒண்ணும் விதியத்துப் போயிரல, இந்த மாதிரி இனி என்னிக்கும் பண்ணாத தெரிஞ்சிதா?'' என்று சொல்லிவிட்டுக் குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டு, இரண்டு அடிகள் கொடுத்தார். அந்த அடி மாசானத்துக்கு விழுந்தது போன்று இருந்தது. மாசானம் மனக் குமுறலோடு இல்லறத்திற்குச் சென்றார். இது தலித் இனத்திடையே உள்சாதி முரண்பாட்டை விளக்குகிறது. தலித் இன மக்களிடையே உள்சாதி முரண்பாட்டின் காரணமாக, மிகப்பெரிய ஒற்றுமையின்மையைக் காண முடிகிறது எனலாம்.

தேர்வடம் பிடிப்பதில் பிரச்சனை:-

''தேர்'' என்னும் சிறுகதை பறையர்களுக்கும், மேல்சாதிக்காரர்களுக்கும் தேர்வடம் பிடித்து இழுப்பதில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை விளக்கிச் செல்கிறது. இந்தச் சம்பவம் நடைபெற்ற இடம் நெல்லை மாவட்டத்தின் தென்பகுதியாகும்.

சிவன் கோவிலில் ஆண்டாண்டு காலம் கருவறைக்குள் சென்று பறையர்கள் இறைவனைத் தரிசிக்க இயலாது. சித்திரைத் திருவிழாவின் போது தேர்வடம் பிடித்து இழுப்பதில் ஏற்பட்ட இனக் கலவரத்தில் தேர் நடுத்தெருவில் நின்றுவிட்டது. இதில் பறையர்கள் கலவரம் செய்வதற்கே ஆயத்தமாக இருந்தனர். இறுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அடங்கமறு, அத்துமீறு என்பதற்கேற்பப் பறையர்கள் செயல்பட்டதால் ஒரு வழியாகச் சமரசம் ஏற்பட்டது எனலாம். அனைத்துச் சாதியினரும் தேர்வடம் பிடிக்கும் உரிமையும் பெற்றனர். தமிழகத்தில் இன்னும் பல ஊர்களில் தலித் இன மக்கள் பெரும்பாலும் கோயிலின் தேர் இழுப்பதற்கோ, கருவறைகள் சென்று இறைவனைத் தரிசனம் செய்வதற்கோ உயர் சாதிக்காரர்கள் இடையூறாக இருக்கின்ற நிலையைக் காணமுடிகிறது.

''ஊர்ச்சோறு'' என்னும் சிறுகதைத் தொகுப்பில் ஆசிரியர் அபிமானி தலித்திய மக்களின் பிரச்சனைகளை எடுத்துக் காட்டுகிறார். தலித் இன மக்களின் உள்சாதி முரண்பாடு, தலித் இன மக்கள் கோயிலின் கருவறைக்குள் சென்று இறைவனைத் தரிசிப்பதற்கோ, தேர்வடம் பிடித்து இழுப்பதற்கோ மறுக்கப்படுகின்ற நிலையையும், தேனீர் கடைகளில் இரட்டை டம்ளர் பயன்படுத்துகின்ற நிலையையும், காவல்துறை அதிகாரிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தாத நிலையையும் எடுத்துக் காட்டியுள்ளார் என்பதைச் சிறுகதைகள் வழி அறிகின்றோம். போராட்டத்தின் மூலமாகவே தலித் இன மக்கள் உரிமைகளைப் பெறமுடியும் என்பதே ஆசிரியரின் எண்ணமாகும். உரிமைகளைப் பெற இதுவே சாத்தியமாகும் எனலாம்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கருத்துகள் இல்லை: