சூழ்நிலைத் திறனாய்வு என்பது ஆங்கில இலக்கியத் திறனாய்வில் தற்போது மிகப்பெரிய பங்கு ஆற்றிவருகிறது. இதற்கு முன்பாகப் பேசப்பட்டு வந்த இலக்கியத் திறனாய்வு முறைகளைவிடவும் இது வித்தியாசமானது. இது இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறபடியினால் இதற்குச் சரியான சொற்பொருள் விளக்கத்தை (Definition) யாரும் இதுவரை தரவில்லை.
சூழ்நிலைத் திறனாய்வு (Ecocriticism) என்ற பதத்தை முதலாவதாகப் பயன்படுத்தியவர் வில்லியம் ரூக்கர்ட் (William Rueckert) என்பவர். இவர் 1978 - ஆம் ஆண்டு ''literature and Ecology : An Experiment in Ecocriticism" என்ற கட்டுரையில் இந்த பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அதற்குப் பிறகு இதையாரும் பயன்படுத்தவில்லை. 1989-ஆம் ஆண்டு Coeur d'Alene - இல் நடைப்பெற்ற Western Literature Association (WLA) Meetingம், அப்பொழுது ஒரு கல்லூரி மாணவியாக இருந்த Cheryll Glotfelty தன்னுடைய கட்டுரை மூலமாகச் சூழ்நிலை திறனாய்வுக்குத் திரும்பவும் உயிர் கொடுத்தார்.
தற்போது செரி கிலாட்பெல்டி (Cheryll Glotfelty) Nerada பல்கலைக் கழகத்தில் Literature and the Environment துரையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரும் இன்னும் பல பேராசிரியர்களும் இந்தத் திறனாய்வு முறையைக் கொண்டு பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சூழ்நிலைத் திறனாய்வுக்குப் பலரும் சொற்பொருள் விவரிப்பு (Definition) தந்தாலும் சரியானது என்று எதையும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், செரில் கிலாட்பெல்டியின் (Cheryll Glotfelty) ''இலக்கியத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் உள்ள உறவினைப் படிப்பதே சூழ்நிலைத் திறனாய்வு'' என்ற விளக்கமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் சிலர் சுற்றுச்சூழல் என்பதைவிட இயற்கை என்பதே சரியனாதாக இருக்கும் என்று கருதுகின்றனர். சுற்றுச் சூழலுக்கும் (environment), இயற்கைக்கும் (Nature) இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள வேண்டும். பல இடங்களில் இவை இரண்டையும் இணைச் சொற்களாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது சரியன்று. இந்தத் திறனாய்வு முறையில் இயற்கை முக்கியம். அதனால் சூழ்நிலைத் திறனாய்வு என்பது இலக்கியத்திற்கும், இயற்கைக்கும் உள்ள உறவினை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
''சுற்றுச்சூழல் திறனாய்வு என்பது இலக்கியத்தில் உள்ள இயற்கையை ஆராய்வது அன்று. இது ஒரு இயற்கை சார்ந்த உலக பார்வை. மனித இனத்தோடு மற்ற மளிதனில்லாதவையையும், இவர்கள் இவைகள் வாழும் சுற்றுச்சூழலையும் ஒரே இனமாக இணைத்து மனித இனத்தைப் பெரிதாக்கும் முயற்சி'' என்று Michael P. Branch மற்றும் சிலர் கூறுகின்றனர். இதுபோலப் பல விளக்கங்கள் சுற்றுச்சூழல் திறனாய்வுக்கு உள்ளன.
அடுத்ததாகத் திறனாய்வு முறைக்குச் செல்வோம். வில்லியம் ரூக்கர்டின் ''Literature and Ecology : An Experiment in Ecocriticism" என்கிற கட்டுரை The Ecocriticism Reader : Landmarks in literary Ecology என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் பல உயிரியல் சூழல் (biological ecology) சார்ந்த பல கோட்பாடுகளை இலக்கியத் திறனாய்வுக்குப் பயன்படுத்தும்படியாக மாற்றி எழுதியுள்ளார். ''Literature and Biosphae" என்ற துணைத் தலைப்பின் கிழ் எப்படி மனிதர்கள் இயற்கையை அழித்து வருகிறார்கள். இயற்கையை அழிப்பதால் மனிதனும் அழியப்போகிறான். மனிதனின் இந்தத் தவறான முயற்சியைத் தன்னையே அழித்துக்கொள்ளும் முயற்சி அல்லது தற்கொலை முயற்சி என்று கூறுகிறார். இநத் உலகத்தில் மனிதனும், இயற்கையும் சேர்ந்து வாழ்வது (coexist), இணைத்துச் செயல்படுவது (cooperate) மற்றும் செழித்தோங்குவது (flurish) எப்படி என்பதே முக்கியமான பிரச்சனை. இதற்குச் சரியான தீர்வைக் காண வேண்டும்.
சூழலியலில் தொலைநோக்கோடு (Ecological Vision) பல உயிரியல் அறிஞர்களும் தங்கள் கோட்பாடுகளை முன் வைத்துள்ளனர். இவையெல்லாம் இலக்கியத்தைப் படிப்பதற்கு (reading), இலக்கியத்தைச் சொல்லித் தருவதற்கு (teaching) மற்றும் இலக்கியத்தைப் பற்றி எழுதுவதற்குப் (writing) பயன்படாது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் இவையெல்லாம் பயன்படும் என்று Rueckert கூறுகிறார். இவர் கூறும் முதல் சூழலியல் முதல் கோட்பாடு. ''எல்லாவற்றிற்கும் எல்லாவற்றோடும் தொடர்புள்ளது'' (Everything is connected to everything else) இந்தக் கூற்று மூளையைக் குழப்புவதாக (mind-bending or mind-blowing or mind-boggling) இல்லாமல் அறிவை விரிவாக்குவதாக (mind-expanding) உள்ளது. இயற்கை மேல் மனிதனுக்கு உரிமையில்லை என்று சொன்னால் அதைப் பலரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்பொழுது இயற்கை உரிமையைப் பாதுகாக்க மனிதனின் சட்டங்கள் உதவ வேண்டும். அவற்றிற்காகப் போராட வழக்கறிஞர்கள் தேவை என்று வில்லியம் ரூக்கர்ட் கருதுகிறார்.
கவிதைகள் என்பது நிறைக்கப்பட்ட சக்தி (stored energy) என்றும் அது ஒரு உயிருள்ள பொருள் (living thing) என்றும் Rueckert கருதுகிறார். மொழி மற்றும் கற்பனையிலிருந்து வெளிவருவது கவிதை. இது திரும்ப புதுப்பிக்கக்கூடிய சக்தியின் கூற்றாக (renewable source of energy) உள்ளது. கவிதையைப் படிப்பதின் மூலம் (Reading), சொல்லித் தருவதன் மூலம் (Teaching) மற்றும் திறனாய்வதின் மூலம் (Critical discourse), அதில் உள்ள சக்தி வெளிப்பட்டுப் பிறரை அடைகிறது.
ரூக்கர்ட், தன்னுடைய கட்டுரையின் அடுத்த பகுதியில் கவிஞர்களைச் சூரியனுக்கு இணையாகவும், கவிதைகளைப் பச்சை செடிக்கு (Green Plants) இணையாகவும் கூறுகிறார்.
இயற்கை விதியை மீற நமக்கு உரிமையில்லை (We are not free to violate the laws of nature) என்பதை முக்கியமான விதியாக ரூக்கர்ட் கூறுகிறார். இயற்கை விதியை மீறும்போது மிகப்பெரிய அழிவை மனிதன் சந்தித்தாக வேண்டும் என்றும் இயற்கை தரும் தண்டனை, கடவுள் கொடுக்கும் தண்டனையை விடவும் கொடியதாக இருக்கும் என்றும் கூறுகிறார். இயற்கையை வெல்ல நினைக்காமல், இயற்கையோடு மனிதன் இணைந்து வாழ வேண்டும் என்ற கருத்தைக் கூறுகிறார். இந்த இணைந்து வாழுதலை சைம்பியோ (Symbio) என்று கூறுகிறார்.
சூழ்நிலை திறனாய்வின் அடிப்படையில் Oiko Poetics என்ற திறனாய்வு முறையைப் பேராசிரியர் நிர்மல் செல்வமணி எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் இருந்தே தன்னுடைய கோட்பாட்டை எழுதியுள்ளார். அதனால் தன்னுடைய நூல்களுக்குத் திணை (Jinai I, II & III) என்று பெயர் சூட்டியுள்ளார். இதில் கொடுக்கப்பட்டுள்ள பல உதாரணங்கள் தமிழ் இலக்கியத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன.
Oikos என்றால் மனிதன், இயற்கை, ஆவி மற்றும் கலாச்சாரம் கொண்ட ஒரு இருப்பிடமாகும். இதைத் தமிழ் இலக்கிய முறைப்படி முதல், கரு, உரி எனப் பிரிக்கிறார்.
Oikos - I மூன்று வகையாக நிர்மல் செல்லமணி பிரித்துள்ளார்.
1. Integrative Oikos
2. Hierarchic Oikos
3. Anarchic Oikos
ஒன்றிணைக்கப்பட்ட (Integrative) Oikos-ல் இறைசார்ந்தலை (Sacred), இயற்கை (Nature), கலாச்சாரம் (Culture) மற்றும் மனிதர்கள் (humans) கொண்டதாக உள்ளது. இங்கே இவர்கள் இணக்கமாக உள்ளனர். இங்கே மனிதர்கள், ஆவிகள் (Sprits) மற்றம் இயற்கையும் உறவுடன் இருக்கின்றனர். இங்கே நெடுக்காகவும் (horizontal) குறுக்காகவும் (vertical) உறவுமுறை உள்ளது.
Hierarchic (கீழ்மேல் நிலை) Oikos குறுக்காக (Vertical) உறவு முறை உள்ளது. இறை சார்ந்தலை (sacred) மேலாகவும், மனிதன் நடுவிலும், இயற்கை கீழாகவும் உள்ளன. மனித உலகத்தில் ஆள்பவர் மேலாகவும், ஆளப்படுபவர் கீழாகவும் உள்ளனர். அதேபோல நிலங்களிலும் நன்செய் நிலம் (wet and) உயர்ந்ததாகவும், புன்செய் (dry land) கீழானதாகவும் கருதப்படுகிறது. மிருகங்களில் வீட்டில் வாழ்பவை (Domesticated animals) மேலாகவும், காட்டில் வாழ்பவை (wild animals) கீழாகவும் வகுக்கப்படுகின்றன, பிரிக்கப்படுகின்றன.
குழப்பமான (Anarchic) Oikos - இல் Hierarchic Oikos - இல் இருந்த நிலைமை நொறுங்கி வேறுபட்ட நிலைமை உருவாகிறது. இங்கே இறை சார்ந்த யாவும் சந்தேகத்துக்குரியதாகின்றன. சமயம் சார்ந்த தத்துவங்களுக்குப் பதிலாக மனிதன் பணத்தின் மீதான நம்பிக்கையே ஓங்கி நிற்கிறது. இயற்கை என்பது மனிதனுக்குப் பயனுள்ளதாக, முதுலீட்டால் வரவு தருவதாக உள்ளது. மனிதனைக் கூட இந்த Oikosல் ஒரு முதலீட்டாகவே பார்க்கிறார்கள்.
இப்போது மற்ற திறனாய்வு புலன்களுக்குரிய அறிஞர்களும் சூழ்நிலைத் திறனாய்வு முறையை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதில் முக்கியமாக இந்த பெண்ணியத்தில் இருந்து வந்தவர்கள் சூழல் பெண்ணியம் (Ecofeminism) சிறப்பாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். சிலர் சூழ்நிலைத் திறனாய்வு பெண்ணியம்(Feminism) இருந்து வந்தது என்று கருதுகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து. அதிலும் பெண்ணியலார்க்கும், சூழல் பெண்ணியலார்க்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இதை ஜோனத்தான் பேட் (Jonathan Bate) தன்னுடைய Living with Weather : Studies in Romanticism என்ற நூலில் எழுதியுள்ளார்.
சூழ்நிலைத் திறனாய்வாளர்கள் இலக்கியத்தை மாறுபட்ட கோணத்தில் திறனாய்கிறார்கள். இயற்கை சார்ந்த கோட்பாடுகளைப் பயன்படுத்தி இந்தத் திறனாய்வை மேற்கொள்கிறார்கள். இதனால் இவர்களது கண்ணோட்டம் முற்றிலும் வேறுபட்டுள்ளதாக உள்ளது. இவர்களது திறனாய்வு மனிதன் சார்ந்ததாக (Anthropocentric) இல்லாமல் இயற்கை சார்ந்ததாக (Biocentric) உள்ளது. பிராய்டு (Frued), லகான் (Laccan), ஃபோகால்ட் (Foucault), டெட்ரிஜ்ச் (Derrid) போன்ற பெயர் பெற்ற திறனாய்வாளர்கள் இன்னும் இதில் தோன்றவில்லை. ஆனால் வில்லியம் ரூக்கர்ட் (William Rueckert), ஸ்காட் ஸ்லோஷக் (Scott Slovic), செரில் க்ளாட்ஃபில்டி (Cheryll Glotflety), நிர்மல் செல்வமணி (Nirmal Selvamony) போன்றவர்கள் இந்த வெற்றிடத்தை நிரப்ப வாய்ப்புண்டு.
நன்றி: ஆய்வுக்கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக