03/02/2011

கம்பராமாயணத்தில் இயற்கை இகந்த (மீவியற்கை) நிகழ்ச்சிகள் - கோ. செகநாதன்

கம்பராமாயணக் காப்பியக் கதை சமயத்தையும் இறைவனையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதால் அதன் ஒவ்வொரு அணுவிலும் மீவியற்கைக் கூறுகள் இடம் பெற்றிருக்கின்றன. வான்மீகியின் மூல அடிப்படைக் கதையை மாற்றாமல் கம்பன் இராமனையும் சீதையையும் திருமாலாகவும் திருமகளாகவும் மீட்டுருவாக்கம் செய்து காட்டியிருப்பதால் அந்நிலையிலும் மீவியல்பு பண்புகள் உள்ளன. பெரும்பாலும் உலகப் பழங்காப்பியங்கள் அனைத்திலும் இத்தகைய மீவியற்கைக் கூறுகளைக் காணுகின்றோம்.

கம்பராமாயணத்தில் மீவியற்கை:-

மீவியல்பு கூறுகள் பாத்திரப் படைப்பு, பாத்திரப் பண்புகள், செயல்கள், கதை நிகழ்வுகள், கதைச் சூழல், கவிதைப் பொருள், சொல்லாட்சி ஆகியனவற்றில் எல்லாம் இடம்பெறலாம் என்பதைக் கம்பராமாயணம் சுட்டுகின்றது. ''மீவியல்பு இன்றேல் கதையுமில்லை; காப்பியமும் இல்லை'' இருப்பினும் கம்பன் மீவியல்பு பண்புகளை உலகியலோடு இணைத்துக் காட்டியிருக்கும் பாங்கு எண்ணத்தக்கதாகும்.

காப்பியக் கதையின் நிகழ்வுகளில் மீவியற்கை:-

காப்பியக் கதையின் முதல் நிகழ்ச்சியிலேயே மீவியற்கைப் பண்பு உள்ளது. மகவருள் ஆகுதியும், பூதம் எழுதலும், பிண்டம் அளித்தலும், இராமன் பிறப்பும் என இது தொடர்கின்றது. இவ்வாறு முதன்மைக் கதையில் அமைந்த மீவியற்கைக் கூறுகள், கவிஞனின் கற்பனை வளத்தினால் கிளைக்கதைகளிலும் இடம்பெறுகின்றன. மகவருள் ஆகுதி வழங்கிய கலைக்கோட்டுமுனி, உரோமபதன் நாட்டில் மழை பெய்யச் செய்த முன்வரலாறு இங்குச் சுட்டத்தக்கது. கம்பனின் இராமாயணத்தில் அரக்கர், குரங்கினம், தேவர் ஆகியோர் கதை மாந்தர்களாக இடம்பெறுவதால் மீவியல்பு பண்பு தவிர்க்கவியலாத ஒன்றாகி விடுகின்றது.

பாத்திரப் படைப்புகளில் மீவியற்கை:-

கம்பராமாயணத்தில் அரக்கரின் உருவமும், செயலும், ஆற்றலும், பண்பும், பிறவும் மீவியற்கையாக அமைகின்றன. இரணியனின் அபூத உருவமும், இராவணனின் பத்துத் தலையும் இருபது கரமும், கும்பகருணனின் விண்முட்டும் மேனியும், தலையற்ற கவந்தவடிவமும், சீதைக்குக் காவலர்களாக அமைந்த அரக்கியர்களின் உடல் தோற்றங்களும் எனப் பல முதன்மை, துணைமை, சிறுபாத்திரங்களும் மீவுருவம் கொள்ளுகின்றனர். அரக்கர்கள் இன்றிக் காப்பியத்தை அமைய முடியாது என்று சொல்லும் அளவிற்குக் காப்பியத்தின் பிற்பகுதி அரக்கர்களின் பங்கேற்பால் நிறைந்திருக்கின்றன. தாடகை வதமும், முனிவர் வேள்விக் காக்க அசுரரை அழித்தலும் காப்பியத்தின் முன்பகுதியில் இடம்பெறினும், சூர்ப்பணகை என்னும் அரக்கி காப்பியக்களனில் பாத்திரமாக இடம் பெற்றபின்பு அவள் தொடர்பான மீவியல்பு பண்பு கூறுகள் மிகுதியாக இடம்பெறுகின்றன.

குரங்கினத்தை மனிதப் பண்புகளுடனும் அதீத ஆற்றல்களுடனும் படைத்துக் கதைமாந்தர் ஆக்குதல், மீவியல்பு பண்புநிலையில் சீதையை மீட்டல், இராவணனை அழித்தல் ஆகிய காப்பியக் கதையின் முடிவுகளுக்கு மிகவும் தேவையானதாக்கி அமைத்தலும் - அவ்விழையில் மீவியல்பு பண்புகளைப் படைத்துக் காட்டியிருப்பதும் கம்பனின் கவித்திறனைக் காட்டும் சான்றுகளாகும். தேவர்களும் காப்பியப் போக்குகளும் கதையோட்டத்திற்கும் இன்றியமையாதவர்களாகின்றனர். சில சூழல்களில் காப்பியச் சிக்கல்களை அவிழ்க்கவும், தீர்வு காணவும் முடிவுகூறவும் தெளிவுறுத்தவும் வழிகாட்டவும் தேவர்களின் பாத்திரப் படைப்புத் துணைபுரிவதைக் காணுகின்றோம்.

''திருவடி சூட்டுபடலத்தில்'' பரதன் இராமனை ஆளும்படி கூறுகின்றான். இராமன் பரதனை ஆளும்படி வேண்டுகின்றான். பரதன் தானும் துறவு பூண்டு காடுறைவேன் என்கின்றான். இவ்வாறு அரசாட்சி நட்டாற்றில் விடப்படுவதைத் தவிர்க்கத் தேவர் இடையில் வருகின்றனர். இமையவர் பரதன் நாடாள வேண்டும் என்ற முடிவைக் கூறிப் பிரச்சனைக்குத் தீர்வு காணுகின்றனர். இதனை மீவியல்பு உத்தி எனக் கொள்ளலாம்.

''அவ்வழி இமையவர் அறிந்து கூடினார்

இவ்வழி இராமனை இவன் கொண்டுஏகுமேல்

செவ்வழித்து அன்றுநம் செயல்என்று எண்ணினார்

கவ்வையர் விசும்பிடைக் கழறல் மேயினார்''

''ஏத்த அரும் பெருங்குணத்து இராமன் இவ்வழி

போத்து அரும் தாதைசொல் புரக்கும் பூட்சியான்

ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந்நிலம்

காத்தல் உன்கடன்இவை கடமை என்றனர்''

அனுமன் வாலைச் சுடாதபோதும், சீதை தீயில் புகும்போதும் அவியும் போதும் நெருப்புக் கடவுள் இன்றியமையாத செயற்மிகு பாத்திரமாக அமைவதைக் காணலாம்.

அவ்வாறே தேவர் இடையில் புகுந்து இராமனின் ஐயத்தை நீக்கும் செயலையும் குறிப்பிடலாம். இறந்த தசரதன் வானுலக்த்திலிருந்து வரும் அளவிற்கு மீவியல்பு கூறுகள் மரணத்தையும் கடந்து செல்லுவதைக் காணலாம். மறுமையின் நித்திய வாழ்வைக் காட்டும் நோக்கமும் இம்மீவியல்பில் அமைகின்றது.

மானிடக் கதைமாந்தரில் மீவியல்பு பண்புகள்:-

கம்பனால் மானிடராகப் படைக்கப்பட்ட இராமன், சீதை பாத்திரப் படைப்பிலும் மீவியல்பு பண்புக்கூறுகள் மிகுதி. இறையவதாரத் தொடர்பு பற்றி இதனுள் அமைதி காணலாம். சீதை தீயைச் சுடாதே எனல், தீக்கடவுளிடம் தன் கற்பை நிலைநாட்டக் கூறுதல் என்பனவும் சுட்டலாம். முனிவர்கள் மீவாற்றல் பண்பினராகப் படைக்கப்படுதல். அவர்கள்தம் சாப ஆற்றலால் வரமளித்தல் போன்றவற்றால் இதனை அறியலாம். தசரதன் முனிகுமரனை அறியாது கொன்று சாபமடைதல், அகலிகை சாபம், வாலி, இராவணன் போன்றோர் வாழ்வின் சாபங்கள் என இது விரிந்து காப்பியக் கதைப்போக்கிற்கும் கட்டமைப்பிற்கும் உதவுவதைக் காணலாம்.

இதனைத் தவிர தேவர் ''மலர்மாரி பொழிதல்'' என்னும் செயல் கம்பன் காப்பியத்தில் பன்முறை உத்தியாக வருகின்றது. தேவர்களது துன்பத்தை நீக்குதல் இராமன் பிறப்பின் நோக்கம் என்பதால் ஒவ்வொரு படிநிலையிலும் இராமன் பெறும் வெற்றி, தேவர் வாழ்வுக்கு உய்வு என்பதால் அவர் மகிழ்ந்து பூமழை பொழிவதாகக் காட்டியிருக்கும் கம்பனின் உத்திநயம் போற்றத்தக்கதாகும்.

''இத்திறம் நிகழும் வேலை இமையவர் முனிவர் மற்றும்

முத்திறத்து உலகத்தாகும் முறைமுறை விரைவில் மொய்த்தன்

தொத்த உறுமலரும் சாந்தும் சுண்ணமும் இணையர் தூவிட

வித்தக சேறி என்றார் வீரனும் விரைவது ஆனார்''

எனத் தேவர்கள் கடல் கடக்க நின்ற அனுமனை வாழ்த்துவது இதற்குச் சான்றாகும். காப்பிய நிகழ்வுகளில் வருணனிடம் வழிகேட்டல், சேது உருவாகுதல், மாயாசீதை, மாயாசனகன் உருவாதல் ஆகியனவும் மீவியல்பு பண்பு கூறுகளே ஆகும்.

கம்பன் மூலநூலாசிரியனாகிய வான்மீகியைப் பின்பற்றி மூலக்கதைக்கு ஏற்றவாறே மீவியல்பு பண்புகளைப் படைத்துக் காட்டியிருக்கின்றான். எனினும் இரணியன், மாயாசீதை போன்ற நிகழ்ச்சிப் பகுதிகள் கம்பனால் புதியனவாகப் படைக்கப்பட்டனவாகும். கம்பராமாயணக் கதையின் செயலுக்கும் திருப்பத்திற்கும் தேவரும் அரக்கரும் காரணமாகக் காட்ட பெறுவதால் தோற்றமும் திருப்பமும் முடிவும் எல்லாம் மீவியல்பு பண்புகளைக் கம்பன் படைத்துக் காட்டியுள்ளான்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கருத்துகள் இல்லை: