''மதம் என்பதக் குறிக்கும் Religion என்ற ஆங்கிலச் சொல் இலத்தீன் சொல்லாகிய ''Religis" என்ற சொல்லிலிருந்து தோன்றியுள்ளது. இச்சொல்லுக்குச் சேர்க்கை, கணக்கிடதல எனப் பலவகையாகப் பொருள் கூறப்படுகின்றது. மேலும் மதம் மனிதன் கடவுளிடம் கொண்டுள்ள தொடர்பையும், மதச் சடங்குகள் மனிதனின் எண்ணங்களை நிறைவு செய்வதையும் கூறுகின்றது''. ''ஆன்மாவிடம் உள்ள நம்பிக்கையே மதம் என்று டைலர் (Tyler) வரையறை செய்கிறார்''. ''உலகத்தை அரசோச்சும் ரு பெரிய சக்தியுடன் தொடர்பு கொண்டு அதனுடன் இணைந்து வாழ முயலும் மனித வாழ்க்கையின் பகுதியே மதம்'' என்று ஃபிளெய்டெரர் (Plyaiderer) என்பார் இலக்கணம் வகுக்கிறார். மனிதன் தான் சார்ந்திருப்பதாக உணர்கின்ற கடவுள் அல்லது கடவுள்களை நம்பி அச்சக்திக்குக் கீழ்ப்படிகின்ற தன்மையே மதம்'' என்று பாஸ்கல் கில்பர்ட் வரையறை செய்கிறார். மதம் என்பது ஆறு பரிமாணங்களைக் கொண்ட ஒன்றாகும். அவை 1. கோட்பாடுகள், 2. ஐதீகங்கள், 3. ஒழுக்க நெறிகள், 4. போதனைகள், 5. சடங்குகள், 6. சமூக நிறுவனங்கள் என்பவையே அந்த ஆறு பரிமாணங்கள் என்று பேராசிரியர்ர நினியன் ஸ்மார் கூறுகின்றார்.
மதத்தின் பணிகள்:-
மதம் தனிமனிதர்களின் விருப்ப, ஆர்வங்களை நிறைவேற்றுகின்ற ஒன்று எனினும், அதில் சமூகத் தன்மைகள் பல உள்ளன. சமூகத்திற்காக அது பல செயல்களைச் செய்கின்றது. கடவுளின் இடத்தைத் திருக்கோயில்களோ, திருச்சபைகளோ பெற்றுக்கொள்கின்றன என்று கூறமுடியாது. மாறாக, மனிதன் தோழமை உணர்வோடு பிறருடன் சேர்ந்து கடவுளை இந்த அமைப்புகளின் மூலம் அடைந்து கொள்ள விழைகின்றான்.
ஆர்னால்ட் டபுள்யூ கிரீன் (Arnold W.Green) கருத்துப்படி மதம் மூன்று செயல்பாடுகளை ஆற்றுகின்றது. இவை எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தும். அவை.
1. உலகில் மனிதன் அனுபவிக்கும் துன்பங்களைப் பகுத்தறிவுக்குப் பொருந்தும் வகையில் கூறி பொறுத்துக்கொள்ளச் செய்கின்றது.
2. தான் (Self) என்னும் தன்மையை மேனிலைப்படுத்துகின்றது.
3. சமூக மதிப்பீடுகளை இணைத்துச் சமூகத்தை ஒருங்கிணைந்த சத்தியாக்குகின்றது.
மதத்தின் பலவீனங்கள்:-
சமூகத்தை ஒன்று சேர்க்கும் சக்தியாக மதம் இருந்தபோதிலும், சில நேரங்களில் சம்கத்தை அழிவுப்பாதைக்கு இழுத்துச் செல்கின்றத. ''மதம் மக்களுக்கு அபினைப் போன்றது'' என்று காரல் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஏழ்மையிலும் வறுமையிலும் வாழும் மக்களைக் கரையேற்றாமல் விதி என்று பேசி துன்பதிற்குள்ளாக்குகின்றது மதத்தின் பெயரால் சமூக முன்னேற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. சிந்தனைச் சுதந்திரம் பறிக்கப்பட்டு மக்கள் அல்லலுற்றிருக்கின்றனர். மதங்கள் பல நேரங்களில் சுரண்டலையும், சோம்பேறித்தனத்தையும் வளர்த்துள்ளன. அடிமைத்தனம், தீண்டாமை போன்றவற்றிற்கு ஆதரவு அளித்து வந்திருக்கின்றது. மதங்கள் பழமையையும், மூநம்பிக்கையையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு புதுமைக்கும் அறிவியலுக்கும் தடைக்கல்லாக இருந்திருக்கின்றன. மதத்தின் பெயரால் சமுதாயத்தில் பல சேதங்கள் விளைந்தாலும் காலங்காலமாக மதம் நிலைத்து நிற்கின்றது. இத்தகைய மதத்தினை நிலவுடைமையாளர்கள் ஊடகமாகப் பயன்படுத்தி அப்பாவி மக்களை எவ்வாறு ஏமாற்றுகின்றனர் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
புதினங்களில் மத நிறுவனச் சிக்கல்கள்:-
''மதத்தில் பல்வேறு கிளைச் சமயங்களும், உட்கிளைச் சமயங்களும் உள்ளன. இவைகளுடன் தொடர்புடைய பல்வேறு நிலையங்களும் கிராமப்புறங்களில் செயல்பட்டு வருகின்றன. இம்மாதிரி மத அமைப்புகள் பல தேசிய அளவில் உள்ளன. மதங்கள் மடங்களையும், ஆசிரமங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நிலங்களும் உள்ளன. சங்கராச்சாரியார் மடம், திருப்பனந்தாள் மடம், திருவாவடுதுறை ஆதீனம் போன்றவை மத நிறுவனங்களாகும்''.
தனிமனிதனுக்கு ஆற்றலையும் நம்பிக்கையும் கொடுப்பது மதமேயாகும். தனிமனிதனின் அடிப்படை மதிப்புகளை உருவாக்குகிறது. இதன் மூலமாகச் சமூகத் தரநிலைக்கேற்ற சில நடத்தைக் கூறுகளை உறுதி செய்கின்றது. சமூகக் கட்டமைப்புக்கேற்ற அளவிற்குச் சமூகத் தரநிலை வேறுபாட்டில் உயர்நிலையில் இருக்கும் குழுக்களின் கருத்தியலையும், அதற்கேற்ற மதிப்புகளையும் மதம் பல்வேறு சடங்கு சம்பிரதாய முறைகள் மூலம் நிலைநிறுத்துகிறது. இதன்மூலம் மதம் நிறுவனமாகிறது. சமூகத்தைக் கட்டுப்படுத்தும் பல்வேறு நிறுவனங்களில் மதமும் ஒன்றாகும். இத்தகைய செயல்பாட்டிற்குரிய மதத்தின் மூலம் நிலவுடைமையாளர்கள் கிராம மக்களைச் சுரண்டுவதை இவ்வாய்வுக் கட்டுரையின் மூலம் காணலாம்.
நில உடைமையாளர்கள் சுரண்டலும் மதநிறுவனமும்:-
கிராமங்களில் அதிக நிலமுடைய நிலவுடைமையாளர்களே ஊர்த் தலைவராக இருப்பார்கள். கோயில் நிர்வாக அமைப்புகளுக்கும் இவர்களே தலைவர்கள். கோயில் நிலங்களை எல்லாம் பாதுகாக்கும் பொறுப்பும் இவர்களிடம்தான் இருக்கும். அதில் வரும் வருமானங்களுக்குச் சரியான கணக்குப் காட்டாமல் நிலவுடைமையாளர்களே வைத்துக்கொள்வர். கிராம மக்களில் யாராவது நிலவுடைமையாளரிடம் வருமானம் பற்றிய கணக்குகளைக் கேட்டால், கேட்பவருக்குப் பல வழிகளில் துன்பம் கொடுப்பார்கள். மத குருமார்களையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துக் கொள்வார்கள். இவ்வாறு கிராம மக்களை ஏமாற்றி அவர்களது அறியாமையைப் பயன்படுத்தும் நிலவுடைமையாளர்களை நாவல் ஆசிரியர்களும் தம் நாவல்களில் சித்தரித்துள்ளனர்.
நாஞ்சில் நாடன் - மாமிசப்படைப்பு, பூமணி - நைவேத்தியம், இராஜம்கிருஷ்ணன் - சேற்றில் மனிதர்கள், தோப்பில் முகமது மீரான் - ஒரு கடலோர கிராமத்தின் கதை ஆகிய நாவல்கள் ஊர்த் தலைவர்களாகவும், கோயில் நிர்வாகிகளாகவும் இருக்கும் கங்காதரம் பிள்ளை, மகாதேவய்யர், விருத்தாசலம், அகமதுக்கண்ணு முதலாளி போன்றோர் கோயில் சொத்துகூகளைக் கொள்ளையடிப்பதையும் மக்களைச் சுரண்டுவதையும் சித்தரிக்கின்றன.
''மாமிசப் படைப்பு'' நாவலில் இடம்பெறும் முதலடி (ஊர்த்தலைவர்) கங்காதரம்பிள்ளை கோயில் நிலத்தையெல்லாம் தானே குத்தகைக்கு எடுத்துவிட்டுக் குத்தகைப் பணத்தை, மிகக் குறைவாகக் கொடுத்து, கணக்குக் காட்டி வருகிறார். இதனை இப்புதினத்தில் இடம்பெறும் கந்தையாவின் கூற்றுப் பின்வருமாறு சித்திரிக்கின்றது.
''ஊரு பூரா ஏக்கருக்கு எட்டுக் கோட்டை நெல்லு பாட்டம், ஊரு வகை நிலத்துக்கு மட்டும் ஏன் ஆறு கோட்டை? போன பூவிலே மார்கழி மாசம் நெல்லு கோட்டைக்கு நூத்தி அறுபது ரூபா வரை வித்திருக்கு, ஊருவகை நெல்லு நெல்லு முப்பத்தாறு கோட்டையும் எம்பத்தி எட்டுன்னு போயிருக்கு. இதையெல்லாம் கெவுனிச்சுப் பாத்தா கோயிலுக்கு நல்ல வருமானம் வரும்'' என்பது தெரிகின்றது.
இவ்வரிகள் மூலம் கோயில் நிர்வாகியும் ஊர்ப் பண்ணையாருமான கங்காதரம் பிள்ளை கோயில் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஊர்க்காரர்களிடம் சரிவரக் கொடுக்காமல் ஏமாற்றுவதைக் காண முடிகிறது. இதனை எதிர்த்துகூ கேட்ட கந்தையா என்ற வேளாண்மைத் தொழிலாளியைத் தம் ஆட்களை வைத்துகூ கொன்றுவிடுகிறார். மதத்தின் பெயரைச் சொல்லிப் பண்ணையார்கள் கிராம மக்களை ஏமாற்றுகிறன்றனர்.
இதே நிலையை ''நைவேத்தியம்'' நாவலிலும் காண முடிகிறது. சித்திரம்பட்டி என்ற கிராமத்தின் ஊர்த்தலைவராகவும், கோயில் நிலத்தையெல்லாம் தானே குத்தகைக்கு எடுத்துகூகொண்டு அதன் கணக்கு வழக்குகளையெல்லாம் ஊர்க்காரர்களிடம் தெரிவிக்காம தானே கவனித்துக்கொள்கிறார். கோயில் நிலத்தில் வரும் வருமானத்தைக்கொண்டு கிராமத்திற்கோ, கோயிலுக்கோ செய்யவேண்டிய பொதுக் காரியங்கள் எதுவும் செய்வதில்லை. கிராமத்துகூ காரர்கள் யாராவது கேள்வி கேட்டால் சாதி ஆசாரத்தைக் காரணம் காட்டி விலக்கிவிடுவார். பரம்பரையாக அவர் குடும்பமே கோவில் நிர்வாகத்தைக் கவனித்து வருவதால் அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை.. கோயில் பூசைக் காரியங்கள் நடப்பதற்கே பணம் கொடுக்க மறுக்கிறார். இதனை பின்வரும் நாவல் வரிகள் சித்தரிக்கின்றன.
''கோயிலுக்கு மான்ய நஞ்சையுண்டு, எட்டு மரைக்கால் விதைப்பாடு. இனாம் - சித்திரம்பட்டியில் குளத்துப்பாசனம். நல்ல மகசூல் வரும். மான்ய கணக்கு மகாதேவய்யர் பொறுப்பு. அவர் குடும்பந்தான் நீண்ட காலமாகப் பராமரத்து வருகிறது. பரம்பரரையாக இருந்துவருவதால் அதைப் பற்றி யாரும் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. பொதுக்காரியங்கள் நல்ல முறையில் நடந்தால் சரி என்று விட்டுவிட்டனர். ஆனால் கோயிலுக்குரிய செலவுகளைக்கூடச் செய்வதில்லை''. ஊர்த் தலையாரி கோயிலுக்கு வெள்ளை அடித்துவிட்டுக் கூலி கேட்டபோது மகாதேவய்யர் கொடுக்க மறுக்கிறார். தலையாரி, கோயிலை நஞ்சையில் வந்த வருமானத்தைப் பற்றி கேள்வி கேட்கிறான. இதனை, சங்கரய்யரிடம் தலையாரி கூறும் கூற்றாகக் காணமுடிகிறது. ''அவுகளுக்கு வேற கோவம் சாமி. அதுக்கு இது குறுக்க வந்திருக்கு. அன்னைக்கு அவுகளோட, ரெண்டு மூணு சாமிமாருக பேசிட்டிருந்தாக, நான் பேச்சோட பேச்சா, மானிய நஞ்சையில் எவ்வளவு நெல்லு ஆச்சுன்னு ஒரு வார்த்த கேட்டுப்புட்டேன். அவுகளுக்கு மொகம் சிறுத்துபூபோச்சு. அந்தக் காட்டம் இன்னியும் போகல'' என்று கூறுகின்றான். தற்சமயம் கோயில் பூசை காரியங்களுக்குக்கூட ஒழுங்காகப் பணம் கொடுப்பதில்லை. அதனால் ஆறுகால பூசை நடந்த காலமெல்லாம் போய் இருவேளைப் பூஜையாக மாறிவிட்டது. ''ஈஸ்வரனுக்குக் காலை மாலை இருவேளை பூசையுண்டு, ஆறுகால பூசை நடந்த காலமெல்லாம் போய்விட்டது. படிப்படியாகத் தளர்ந்து இரு வேளையில் நிலைத்துவிட்டது.''
மழையில்லாத காரணத்தால் நிலத்தில் விளைச்சல் இல்லை. அதனால் குத்தகை நெல் வரவில்லை. எனவே கோயில் பூசை செய்ய வருமானம் இல்லை என்று கூறி ஆறுகால பூசையை இருவேளையாகக் கொண்டு வந்துவிட்டார் மகா தேவய்யர். கோயில் நிலத்தில் வரும் வருமானத்தைக் கோயிலுக்குச் கூடச் செலவு செய்யாமல் நிலவுடைமையாளர்கள் சுரண்டுகின்றனர்.
முதலாளியை எதிர்ப்பவன் நரகவாதி என்று கருதப்பட்டான். திருமணங்கள் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே திருமணத்தை நடத்தும் விவரங்களை முதலாளியின் வீட்டில் போய்ச் சொல்ல வேண்டும். அப்பொழுது அவர் விதிக்கும் பள்ளிப் பணத்தை அன்றோ மறுநாளோ முதலாளியின் முன்னிலையில் இரு கைகளையும் நீட்டிக் கொடுக்க வேண்டும். கூடுதலென்றோ குறைவென்றோ சொல்லக்கூடாது. கொடுக்கின்ற பணத்திற்கு இரசீதும் கிடையாது. முதலாளியின் பெயரைக் கிராமத்தில் எவர்க்கும் இடக்கூடாது. அது தெரியாத விதவைப் பெண்ணொருத்தி தன்னுடைய பிள்ளைக்கு முதலாளியின் பெயரை வைத்தாள் அவர் அப்போது, பெயரைச் சொல்லியும் கூப்பிட்டாள். அதற்கு முதலாளி கொடுக்கும் தண்டனையைப் பின்வரும் கூற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. ''இந்தக் கிராமத்திலே வடக்குவூட்டு மொதலாளிமாருக்கப் பேரை உனக்க மகனுக்குப் போட்டது ஒரு குத்தம். நான் வரும்போது எனக்குச் செவி கேக்க எனக்கச் பேரச் சொன்னது வேற ஒரு குத்தம்.... நீ செய்த ரண்டு குத்தத்துக்கு உனக்கப் பேர்ல உள்ள சர்வ 2639 ஒரு ஏக்கர் பத்து செண்ட் தோப்பை நாளைக்கு எழுதிக் கொடுத்துடு. நாளே லைத்தரு (ரெஜிஸ்ட்ரார்) உனக்க வூட்டுக்கு வருவாரு. ஒண்ணுஞ் சொல்லப்படாது'' என்று கட்டளையிடுகிறார். அந்த ஏழைப் பெண்ணிற்குத் திருமணம் முடித்துக் கொடுக்கும நிலையில் பெண்கள் உள்ளனர். முதலாளி கேட்கும் தோப்பைத் தவிர அவளுக்கு வேறு எந்தச் சொத்தும் கிடையாது. இந்த ஒரு முறை மன்னியுங்கள் என் மன்றாடிக் கண்ர் விட்டு அந்த விதவை கேட்டும் மனம் இரங்காமல் அவளது தோப்பைத் தன் பெயருக்கு மாற்றி எழுதிக்கொண்டார்.
இவ்வாறாக, நிலவுடைமையாளர்கள் மத நிறுவன அமைப்பைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு அந்நிறுவனத்திற்குட்பட்ட சொத்துக்களைக் கொள்ளையடித்தனர். அத்துடன் மதத்தின் பெரால் அப்பாவி மக்களை ஏமாற்றி, அவர்களைத் தங்களின் அதிகாரத்தால் அடிமைப்படுத்தி, அவர்களின் உடைமைகளைப் பறிப்பதையும் காண முடிகிறது. மதத்தின் மீது மக்கள் கொண்டுள்ள மூட நம்பிக்கைகளைப் போக்க வேண்டும். அதற்குக் கல்வி அறிவும் விழிப்புணர்வும் தேவையாகும்.
நன்றி: ஆய்வுக்கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக