12/02/2011

'சிலைகளைக் கோணலாகப் போட்டுவிட்டு மரபை நவீனமாக்கிவிட்டோம்' - ஓவியர் சந்ரு

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் தொடங்கி நாட்டார் கலையின் செழுமையான சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் பல்லவ, பாண்டிய, சோழ நாயக்கர் காலம் என்று ஒரு நீண்ட பாரம்பரியம் கொண்டது நம் கலை மரபு. சமூக, அரசியல் பண்பாட்டு தளங்களில் இக்கலை மரபை முன்னிறுத்தி பல்வேறு விவாதங்களும் ஆய்வுகளும் நடந்துள்ளன. எனினும் ஓவிய - சிற்ப கல்விப்புல சூழலில் இது குறித்து காத்திரமான பதிவுகள் மிகக் குறைவே. செய்யப்பட்டுள்ள பதிவுகளில் ஓவியர் சந்ருவின் பங்கு முக்கியமானது. இக்கலை மரபைத் தன் பயிற்சிகளின் வாயிலாக உள்வாங்கி, அதன் நீட்சியாகத் தொடர்ந்து தனது படைப்பு வழியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் ஓவியர் சந்ரு. தனது வாழ்வனுபவத்தின் தேடலோடும் விமர்சனப் பார்வையோடும் அப்படைப்புகளை அவர் முன்வைத்து வருகிறார். சந்ரு, சென்னை ஓவிய மாணவர்கள் மீது அவர் செலுத்திய பாதிப்புகளின் அடையாளமாக இன்றைய இளைய தலைமுறை ஓவியர்கள் ஒரு பெரும் கூட்டமாக இருக்கிறார்கள். நமது கலை மரபை, அதன் மதம் - தத்துவம் சார்ந்த அடையாளங்களையும் மீறி ஒரு கலைப்படைப்பாக புரிந்து கொள்ளவும், தற்கால வாழ்வனுபவங்களின் ஊடாக அறிந்து கொள்ளவும் சந்ருடனான சிற்பம் மற்றும் ஓவியம் குறித்த இந்த உரையாடல் உதவும். மரபு சார்ந்த கலைப் படைப்புகளை நோக்கும் அவரது பார்வை கலை இலக்கிய மரபு சார்ந்த மற்ற வடிவங்களுக்கும் பொருந்துவதாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சந்ருவின் ஓவியக் கண்காட்சி - சித்தரமும் கைப்பழக்கம் - சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. சந்ரு மாணவராக இருந்தபோது வைத்த கண்காட்சிக்கு அப்புறம் அவர் வைக்கும் முதல் கண்காட்சி இதுதான். இக்கண்காட்சியையொட்டி இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டது.

தீராநதி: நமது கலை மரபு, வேர்களைத் தேடி, மரபைத் தேடி போன்ற வார்த்தைகள் சமீப காலங்களில் கலைத்துறையில் அதிகம் பேசப்படும் வார்த்தைகள். இதுசார்ந்து படைப்புகளும் நிறைய முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒரு ஓவியராக அவற்றைப் பற்றி உங்களது விமர்சனங்களிலிருந்து தொடங்கலாமா?

சந்ரு: நல்லது, நம்முடைய வரலாற்றுக் காலத்துத் தொன்மை அடையாளமாகக் கிடைக்கும் சின்னங்கள் பல்லவர் காலத்திலிருந்து கிடைக்கின்றன. பல்லவர்களது சிந்தனைமுறை என்று ஒன்று இருக்கிறது. அதை வைத்துத்தான் பல்லவர்கள் காலம் என்று சொல்கிறோம். அப்புறம் சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் என்று நிறைய பிரிவுகள் வருகிறது. அந்தந்த காலகட்டத்தில் அதததுக்கான மாற்றத்தோடு பல்வேறு விதமான வெளிப்பாடுகள் இருந்திருக்கிறது. இதை நாம், பாணி என்று சொல்கிறோம். இந்தப் பாணியை வைத்து இது சோழர்கள் காலத்தவை, இது பாண்டியர்களுடைய அடையாளம், இது நாயக்கருடையவை என்று சொல்கிறோம். அவற்றை நமது கலைஞர்கள் தங்களுடைய மரபாக முன் வைக்க விரும்புகிறார்கள். தங்களுடைய படைப்புகளில் அந்த விருப்பங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் நாம் மரபு என்று சொல்கிற ஒரு பொம்மையைப் பார்த்து, அதிலிருந்து இவர்கள் ஒரு பொம்மையை வரைந்துவிட்டு, அப்புறம் நாங்கள் மரபைக் காப்பாற்றிவிட்டோம் என்று சொல்லிக்கொண்டு வருவதுதான் பெரும்பாலும் நடக்கிறது. உதாரணமாக காளிங்க நர்த்தன் சிலையை எடுத்துக்கொள்வோம். இவர்கள் என்ன செய்கிறார்கள்? முகம், கால், கை, எல்லாவற்றையும் கோணல் மாணலாகப் போட்டுவிட்டு, நாங்கள் மரபை நவீனமாக்கி விட்டோம் என்று சொல்கிறார்கள். இவர்களது படைப்புகளைப் பார்க்கும் போது மரபு குறித்த குறைந்தபட்ச புரிதல், செய்நேர்த்தி கூட இவர்களிடம் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

நான் தாராசுரம் கோயிலுக்குச் சென்று ஒரு சிலையைப் பார்த்து வரைந்து கொண்டிருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அந்த சிலை என்ன சிலையென்றுகூட எனக்குத் தெரியாது. அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெரியவர் வந்து செல்கிறார், ''அது மன்மதன்'' என்று. அது அவருக்கு பரிச்சயமான கதை. அவருக்கு, அந்தச் சிலை ஒரு கதைக்கான அடையாளம். அந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு அவருடைய தாத்தா அவருக்கு மன்மதனுடைய கதையைச் சொல்லியிருப்பார். இப்பொழுது தாத்தா சொன்ன கதையை அவர் நமக்கு சொல்கிறார்: ''சிவபெருமான் தவக்கோலத்தில் இருக்கம்போது அவருடைய தவத்தைக் கலைப்பதற்காக, அவரது கவனத்தை திசை திருப்புவதற்காக மன்மதன் செல்கிறார். அப்பொழுது சிவன் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனைச் சாம்பலாக்கி விடுகிறார். செய்தி கேள்விப்பட்டு வரும் ரதி, சிவனிடம் கேட்கிறாள்: ''என்னப்பா இப்படி என் புருஷனைச் சாம்பலாக்கிவிட்டாயே. நான் என் புருஷனுக்கு எங்க போவேன்''. சிவன் சொல்கிறார்: ''அம்மா அவனைச் சாம்பலாக்கியது மற்றவர்கள் பார்வைக்குத்தான். உனக்கு எப்போதும் அவன், அவனுக்கான முழு தோற்றத்தோடும் வீரியத்தோடும் உன் கணவனாகவே இருப்பான்.'' இது தான் கதை.'' பெரியவர் சொன்ன இந்தக் கதை நமது மனதில் இருக்கிறது.

மற்றொரு சந்தர்ப்த்தில், வேறெங்கேயோ, யாரோ ஒருவர் ஒரு பையனைப் பார்த்து சொல்கிறார்: ''அடேய் நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டு ஏண்டா ஒவ்வொருத்தியையாத் தேடி, அவளுகள் பின்னாடியே அலைந்து கொண்டிருக்கிறாய். ஒரு வேலையை நம்பி, அதன் மீது மனதை வைத்து அதை நல்லபடியாகச் செய். அந்த உற்பத்தி உனக்கு சந்தோசத்தைக் கொடுக்கும். அப்போது, ''அஹா , எப்படியாப் பட்ட நல்ல காரியம்'' அப்படின்னு உன்னைச் சுற்றி பத்து பேர் வருவார்கள். நீ உனக்கான நபரைத் தேர்வு செய்யலாம். காரியத்துக்கு காரியமும் நடக்கும். நல்ல பெயரும் கிடைக்கும். இதவுட்டுப்புட்டு, சும்மா அலைஞ்சின்னா, உனக்கும் உதவமாட்ட, ஊருக்கும் உதவமாட்ட.'' இதுவும் நம் மனதில இருக்கிறது.

வேறொரு சந்த்ர்ப்பத்தில், நம்முடைய தனிமையில் உற்பத்திப் பெருக்கத்துக்கான இயல்பான உந்துதல் பெண்ணின் பாலான ஈர்ப்பாக நமக்குள் இருக்கிறது. அந்த உந்து சக்தி அற்புதமானது. இயற்கையினுடைய பெரிய நிலைப்பாடு அது. ஆனால் சமூகக் கட்டமைப்புகளால் நமக்கு நாமே புழுங்கி, வெறிகொண்டு தறிகெட்டு, சந்தர்ப்பத்தைத் தேடி அலைந்து, கிடைத்த சந்தர்ப்பத்தில் யாரையாவது போட்டு நசுக்கி, சின்னாபின்னப் படுத்தி குற்றவுணர்விலேயே அந்த நேரத்தைக் கழித்துக்கொண்டு வந்துவிடுகிறோம். சமூகச் சிக்கல்களால்தான் இவ்வளவு குரோதமும் நமக்குள் இருக்கிறது. ஆனாலும் நீங்கள் அதனை ஒரு மென்மையான விஷயமாக யோசித்துச் செய்ய வேண்டியதிருக்கிறது. நிச்சயம், அதை நீங்கள் மென்மையாகத்தான் கை€யாள்வீர்கள் என்கிற விஷயமும் இருக்கிறது.

சமூக வாழ்க்கையில் இருக்கிற ஒரு அனுபவம் கதையாக மாறுகிறது. அது புராணங்கள் பெயரிலோ அல்லது சாமி பெயரிலோ சொல்லப்படுகிறது. கதை சிற்பமாக மாறுகிறது. நான் பார்த்து வரைந்து கொண்டிருந்த மன்மதன் சிலை பொம்மைதான். '' ஒரு வேலையை நல்லபடியா முடிச்சின்னா உனக்கும் சந்தோஷம் மத்தவங்களுக்கும் சந்தோஷம்.'' பெண்ணு கிடைக்கணுலம்பா.'' இந்த நிலைப்பாடுதான் சிவன் தவக்கோலத்தில் இருக்கிறது. சிவனே காமனாகவும் இருக்கிறான். சிவனுக்குள்ளேயே காமன் இருக்கிறான். அந்த தவம் எதுக்காக செய்யப் பட்டதோ, எதை நோக்கமாக வைத்திருந்ததோ அந்த காரியம் நடந்தால் ரதிக்கும் நல்லது. ரதி உன்னை விரும்புவாள். இப்போது அந்த சிற்பம், அந்தக் கதை இன்றைக்கானதாகவும் நிலைப்பாடு கொள்கிறது. நான் அதனை சிற்பமாகவோ, ஓவியமாகவோ செய்கிறேன். இப்படி நம்முடைய சமகால வாழ்க்கையில் நானும் நீங்களும் பரிமாறிக்கொள்வதுக்கான ஒரு அனுபவத்தை,. அந்தச் சிலை வைத்துக்கொண்டு இருக்கும்போதுதான் நாம் அதைக் கையிலெடுக்கிறோம். நமது மரபைப் புரிந்துகொள்வது என்பது, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு அது எவ்வாறு தன்னை வெளிப்படுத்துகிறது என்பதுதான்.

ஆனால் இந்த விஷயத்தை உணராமல், வெறும் பொம்மையை மட்டும் வரைவதுதான் நடக்கிறது. பொதுவாக இந்தியாவில் இருக்கிற பெரும்பாலான கலைஞர்கள் பொம்மையைப் பார்த்து பொம்மை போடுவர்கள்தான். ஒரு அய்யனார் சிலை தலைமாதிரி கிடைத்தால், அதை கோணல் மூஞ்சியாகப் போட்டுவிட்டு, நாங்கள் நவீன ஓவியம் போட்டு விட்டோம், நடராஜர் சிலையை கோணல்மாணலாகப் போட்டுவிட்டு, ''நாங்க கியூபிசத்தில் நடராஜர் பண்ணிட்டோம். அப்ஸ்ராக்ட் நடராஜர் பண்ணிவிட்டோம். இம்ப்ரஷனிஸத்தில் பண்ணிவிட்டோம். இது தான் போஸ்ட் மார்டனிஸமாக்கும்''னு வெறுமனே பெயரளவில் இவர்களோட வியாபாரத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். பெரும் பாலும் நடராஜர் சிலையும் பிள்ளையார் சிலையும்தான் போடப்படுகிறது. நம்முடைய மரபுக் கலைக்கு அடையாளம் பிள்ளையார் சிலையும் நடராஜர் சிலையும்தான் என்று நாம் அவற்றை முன்வைத்தால், மற்றவர்கள் அப்படியானால் நீங்களே உங்களுடைய சாமியை வைத்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அக்கலை அவனுக்கும் தற்கால அனுபவங்களுக்கும் உகந்ததாக இருக்க வேண்டியதிருக்கிறது.

தீராநதி: நமது மரபிலிருந்து என்ன மாதிரியான விஷயங்களைச் சமகாலப் படைப்பில் எடுத்தாள வேண்டும் என்று கருதுகிறீர்கள். அவற்றுக்கான தேவை என்ன?

சந்ரு: அகிரா குரோசவா, உலகம் முழுவதும் உண்மையையும் அமைதியையும் தேடிப் போகிற மனிதனுக்கு அற்புதமான படைப்புகளை செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான, மார்ட்டின் ஸ்கார்சேவோட ''தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் ஜ“சஸ் கிரைஸ்ட்'' படத்தையும் உலகம் முழுவதும் இருக்கிறவர்கள் பார்த்திருக்கிறார்கள். அவனும் உலகம் முழுவதும் இருக்கிற மனிதனுக்காகத்தான் சொல்லி இருக்கிறான். எந்த நாட்டவர் என்றில்லாமல், அங்காங்கே இப்படியான அற்புதமான மனிதர்கள் எல்லா நாடுகளிலும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் அவர்களுடைய படைப்புகள் வியாபாரமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. எப்படி புத்தருடைய வார்த்தைகளும் சித்தர்களுடைய வார்த்தைகளும், சித்தாந்தங்களும் கிறிஸ்து என்கிற விஷயமும் அவன் சொன்னவைகளும் என்று எல்லாம் வியாபாரமாக்கப்பட்டதோ, அப்படி வியாபாரம் ஆக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய அனைத்து அணுகுமுறைகளும் வெளிப்பாடுகளும் திரும்பத் திரும்ப பொட்டலம் போட்டு பரப்பப்பட்டுவிட்டது. இப்போது தமிழில் ஒரு கிழவியால் சொல்லப்பட்ட ஒரு கிராமத்துக் கதை, உலகம் முழுவதும் இருக்கிற குழந்கைளுக்கு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றால், அதை பல்வேறு மொழிகளால் மொழிபெயர்க்க வேண்டும் என்பது உங்களுடைய தலையாய கடமையாகவும் கூட இருக்கிறது. அகிரா குரோசவா போல், மார்ட்டின் ஸகார்சேவோ போல் நம்முடைய சிறப்புகளும் சித்திரக்காரர்களும் இந்த மனித இனம் முழுமைக்குமான அற்புதமான விஷயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வரைத்திருக்கிறார்கள். நடராஜர் சிலை ஒன்றுதான் அவன் அதை கட்டமைப்பதற்கான கூறுகளைக் கச்சிதமாகக் கொண்டிருக்கிறது. பஞ்சபூதங்களுடைய இயக்கமென்பதும் பரவலாக இருந்திருக்கிறது.

ஆனால் நமது மரபிலிருந்து இதுபோன்ற, உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கான விஷயங்களை எடுத்து, அதை பரவலாகக் கொண்டு போகப் போகிறோம் என்று புறப்படுகிறவர்கள், திரும்பவும் பொம்மையிலிருந்து பொம்மைக்குதான் போகிறார்களே ஒழிய, அதற்குள் இருக்கிற வாழ்க்கைக்குள் போகிறதில்லை. நடராஜரைப் புதுமையாக்கும் போது அது நடராஜர் சிலையாக இருக்க வேண்டிய அவசிய இல்லை. நடராஜர் சிலை செய்தவனுக்கு என்னவெல்லாம் தாத்பரியங்கள் இருந்ததோ, அவனுக்கு இருந்த நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் தொழில்முறையான அவனுடைய பயிற்சியும் எப்படி நடராஜர் சிலை ஆனதோ, அது மாதிரி என்னுடைய வாழ்க்கையில் இருக்கிற விருப்பும் வெறுப்பும் அதிலிருந்து நான் விரும்புகிற ஆழ்ந்த தளமான ஒரு நிலைப்பாடுமே இங்கு உற்பத்திப் பொருளாக வேண்டியதிருக்கிறது. ஆக, நடராஜர் சிலை போல செய்துவிட்டு, நாங்கள் மரபைக் காப்பாற்றிவிட்டோம் என்றால், அது பித்தலாட்டம்; ஏமாற்றுவேலை. இவர்கள் வியாபாரிகள். ''டூப்ளிகேட்'' பண்ற பசங்க. காசுக்கான மதிப்பு தெரிந்து எத்தனை பேர் கள்ளநோட்டு அடிக்கிறார்கள். அது மாதிரி இவர்கள் படமும் சிற்பமும் செய்கிறார்கள்.

நம்முடைய தாத்தாக்களில் ஒருவன் தற்குறி, ஒருவன் பண்பாளன், ஒருவன் நல்ல விவசாயி, ஒருவன் திருட்டுப் பயல். ஈவு இரக்கமில்லாமல் நரபலி கொடுத்துவிடுவான். நமது பாட்டிகளில் ஒருத்தி குடும்பஸ்தி, இன்னொருத்தி கொலைகாரி. இப்போது நீங்கள் எந்த தாத்தாவையும், பாட்டியையும் முன்னெடுக்கப் போகிறீ‘கள்; யாரை உங்களுடைய வாழ்க்கையில் அனுசரிக்கப் போகிறீ‘கள்? என்ற கேள்வி வருகிறது. உங்களுடைய வேர்கள் என்பது, உங்கள் தாத்தா கழட்டிப் போட்டுவிட்டுப் போன வேஷ்டி கிடையாது. அவர் வாழ்ந்த வாழ்க்கை அது. மரபு என்பது மிகவும் அற்புதமான ஒரு விஷயம். நான் அந்த மரபுக்கான கூறுகளையும் தோற்றங்களையும் எடுத்துக்கொண்டு அதற்கு மேல் என்னுடைய சமூகரீதியான நிலைப்பாட்டைப் படைக்கிறேன்.

தீராநதி: நமது மரபான சிற்ப - ஓவிய வெளிப்பாட்டு முறைகளில், எக்காலப் பாணி தனிப்பட்ட முறையில் உங்களை வியப்புறச் செய்கிறதுசந்ரு: என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துபவர்கள் பல்லவர்கள்தான். அவர்கள் கெட்டிக்காரர்கள். அவர்களுடைய மிடுக்கும் செய்நேர்த்தியும் கட்டமைப்பும் கதை சொல்கிற விதமும் ஒரு அற்புதமான படைப்பாக அதனை மாற்றுகிறது. அதற்குப் பிறகு ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் கும்பகோணத்திலிருக்கிற நாகேஸ்வரன் கோவில் வேலைப்பாடுகள். நாகேஸ்வரன் கோவில் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள். அந்த சமயத்தில் நிறைய தொடர் வேலைகள் அங்கே நடந்திருக்கின்றன. அவற்றில் ஏழு கோவில்களையும் நான் பார்த்திருக்கிறேன். இவர்களுடைய எல்லா வேலைப்பாடுகளுமே மிகவும் அற்புதமானவை. முற்கால பாண்டியர்கள் காலத்தைப் பொறுத்தவரைக்கும் அறந்தாங்கி ஆவூடையார் கோவில் முக்கியமானது. கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல் இருக்கும் அவர்கள் வெளி ' அவுட்லைனை ' திக்காகப் போட்டாலும் ஒவ்வொரு உருவத்துக்கும் ஒரு உணர்வெழுச்சி இருக்கிறது.

''ரெப்ரஸ்கோ'' என்பது சுதை மீது கண்ணாடியைப் பதிப்பது போல் நிறங்கள் உலர்வதுக்கு முன் நிறங்களைப் பகிர்வது. ''டெம்ப்ரோ'' என்பது துணி மேலேயே வைத்து நிற அழுத்தம் கொடுப்பது. அஜந்தாவில் இந்த இரண்டு முறைகளும் சிறந்ததாக இருக்கின்றன. நம்முடைய தஞ்சாவூர் ஓவியங்கள் ''ரெப்—ஸ்கோ.'' சித்தன்னவாசல் சமண ஓவியங்கள் அஜந்தாவை விட துல்லியமானவை. மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் புட்டுக்கு மண் சுமந்த படலமும் சிறப்பானது. ஆயிரங்கால் மண்டபமும் முக்கியமானது. அதனை மங்கம்மாள் காலம் என்று சொல்கிறார்கள். அந்த ரதமும் அவன் பண்ணியிருக்கிற அலங்காரமும் உடலோட சுழற்சியும் அது ஒரு ரம்மியமான விஷயம். நான் அந்தக் காலத்து கலைஞர்களிலேயே இவன்தான்டா அற்புதமான விஷயங்களை நிகழ்த்தினவன் என்று சொல்வேன்.

தீராநதி: இப்போது உங்களுடைய தனிப்பட்ட ஏதாவது ஒரு படைப்பை எடுத்துக் கொண்டு, அதை ஒரு கலைப்படைப்பாக ஏன் செய்தீர்கள்? என்று விளக்க முடியுமா?

சந்ரு: எந்தப் படைப்பை எடுத்துக்கொள்ளலாம், நீங்களே சொல்லுங்கள்.

தீராநதி: உங்களது அர்த்தநாரீஸ்வரரை எடுத்து கொள்ளலாமா?

சந்ரு: சரி. அர்த்தநாரி கோலம் ஆணா, பெண்ணா, சிவனா? பொதுவாக அர்த்தநாரி என்று அரவாணிகளைத்தான் சொல்கிறார்கள். இன்னொரு நிலைப்பாடும் இருக்கிறது. பெண் பணிந்து போனதாகவும், ஆண் அவனுக்கான வீரியத்தில் இருந்ததாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. ஆனால் உருவத்தில் அதற்கான பண்புகளில் வேறுபாடு இருக்கிறது. கருத்தரிப்பதாகவும் பிள்ளை பெறுவதாகவும் அவளுக்கான, சமூக இருத்தலுக்கான அணுகுமுறைகளே வேறுவேறாக இருக்கும்போது அவள் பணிந்து போகக் கூடியவளாகவும், அவன் அவனுடைய நிலையிலேயே இருக்கிறவனாகவும் அக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு பேரும் சமம்தான் என்ற ஒரு காட்சியாக நாம் அதனைப் பார்க்கும் போது அது அரவாணிகள் நிலை அல்ல. ஆணும் பெண்ணுமான ஒரு நிலை.

நான் ஓவியக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்த போது, பல ஆசிரியர்கள் நமது மரபு எங்கே போனது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது கேரளா மாணவர்கள் மோகினியாட்டம், கதகளி, அவற்றில் இருக்கிற ஆபரணங்கள் என்று செய்து கொண்டிருந்தார்கள். எனக்கு அர்த்தநாரியைப் போடுவதில் ஒரு சுதந்திரம் கிடைத்தது. அர்த்தநாரியைக் கோவிலிலும் பார்க்கிறோம், அது எதார்த்தமாகவும் இருக்கிறது. அக்காலங்களில் அர்த்தநாரிக்கு பூஜை என்பது இல்லை. அந்த தோற்றத்திலேயும் எனக்கிருக்கிற பாலியல் சம்பந்தமான ஒரு உணர்வுகளிலும் தான் அது அதற்கான அடையாளமாக எனக்கு இருந்தது.

அடுத்தக் கட்டம் இயங்குதலுக்காக இயங்குதல், இயங்கிக் கொண்டிருத்தல் இயங்கும் நிலையிலிருந்து இயங்குதல் என்ற நிலைப்பாடு. ஓட்டப் பந்தயத்தில் ஓடுறவர்களால் எல்லையைப் பிடித்த பிறகும் கூட நிற்கமுடியாது ஓடிக்கொண்டிருப்பார்கள். அப்போது நமது உடல் அதற்கான ஒரு இயக்கத்தை வைத்துக்கொண்டு இருக்கிறது என்பது உறுதியாகிறது. கலவியல் நிலையிலேயும் இப்படியான நிலைகள் இருக்கின்றன. உச்சத்தில் நம்முடைய நாடி, நரம்புகள ஒரு மௌனத்துக்குள் நம்மைத் தள்ளுகின்றன. அதுவரைக்கும் நம்மை ஆணாகவும் பெண்ணாகவும் கருதிக்கொண்டிருந்த தடுப்புகள் ஒரு மௌனத்தை நோக்கிப் போகிறது. அந்தக் கணத்தை நாம் ஆணுமற்ற பெண்ணுமற்ற ஒரு நிலையாகவே கருதுகிறோம். உச்சம் என்று சொல்லப்படும் நிலையில் அவள் ஆணாகவும் இல்லை. பெண்ணாகவும் இல்லை. இவனும் தன்னை ஆணாகவும் உணரவில்லை, பெண்ணாகவும் உணரவில்லை. இது தான் விஷயம். ஒரு இயக்க நிலையிலேயே இருந்துவிட்டார்கள். உச்சம் என்று சொல்கிற, அந்த அழுத்தத்தை கலவியில்தான் அடையமுடியும் என்று ஒன்றும் கிடையாது. ஒரு பூவைப் பார்க்கும் போதும் அடையக்கூடியதுதான். அதை ஒரு பெரிய மனநிலை அல்லது ''எக்ஸைட்மெண்ட்'' என்று சொல்கிறோம். நான் ஒரு ஓவியம் பண்ணும்போது உண்டாகிற நிலையும் அதுதான்.

தொடர்ந்து நானும் அர்த்தநாரி பண்ணிக்கொண்டேதான் இருக்கிறேன். அதைப் பண்ணிக் கொண்டே இருக்க, இருக்க காலகட்டமும் அனுபவமும் எப்படி வேறுபட்டுக்கிட்டே போகுதோ, அது மாதிரி வெளிப்பாட்டுக்கான முயற்சியும் வேறுபட்டு விட்டது. எனது செய்நேர்த்தி வேறுபடுவது மாதிரியே கருத்துருவும் மாறுபடுகிறது.

எழவு வீடுகளில் சண்டை போடுவதற்கு என்றே ஒரு ஐந்து பேர் வருவார்கள். ''நீ அன்னிக்கு அத கொடுத்த, இன்னைக்கு கொடுக்கல. எங்க தாத்தா செத்ததுக்கு நீ வரல'' என்று சண்டை போடுவதுக்கு நிறையக் காரணங்கள் இருக்கும். சாவு என்றால் என்ன? மனித வாழ்க்கை என்றால் என்ன? இறந்து போனவனுக்கும் நமக்குமான நிலைப்பாடுகள் என்ன? சாவின் மூலம் என்ன புரிந்துகொள்ளப் போகிறோம்? வாழ்வில் என்ன கடைபிடிக்கப் போகிறோம்? இப்படிப்பட்ட எந்த கேள்விகளும் இல்லாமல் அங்கே ஒரு கொண்டாட்டம் நடக்கிறது. அதுதான் மயானசங்கல்பம். ''செத்தவன் செத்தான். நாம் உயிரோட இருக்கிறோம். அதனால் நாம் கொண்டாடுகிறோம்'' இறந்தவர்களுக்காக கொண்டாடுகிறோம் என்பது நம் உயிரோடு இருக்கிறோம் என்கிற வன்மத்தில் இருந்துதான் வருகிறது. அதை நான் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே அர்த்தநாரிக்கு முன்னால் சிவனும் பார்வதியும் கபாலத்தை மாலையாக அணிந்து கொண்டு நாட்டியமாடுகிறார்கள் என்கிற தோற்றத்தை வரைகிறேன். எதை உற்பத்தி என்று நினைக்கிறீர்களோ, எதை அடையாளம் என்று நினைக்கிறீர்களோ, அது இன்னொரு அடையாளத்துக்கானதாக மாறிக்கொண்டேதான் போய்கொண்டிருக்கிறது. யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு எனக்குமான பகிர்வு கொஞ்சம் சுமூகமாக இருக்கும் என்று சொல்வதற்காகவே, இந்த அனுபவத்தை வெளிப்படுத்துவதுக்காகவே நான் அர்த்தநாரி கோலத்தைப் பண்ணுகிறேன்.

தீராநதி: அர்த்தநாரிக்குப் பிறகு காளியையும் அதிகமாகப் போட்டிருக்கிறீர்கள். காளி உங்களை வசீகரிக்க என்ன காரணம்?

சந்ரு: காளியை ஒரு உக்கிரமான தேவதையாகவும் அழிவுக்குரிய ஒரு தெய்வமாகவும் நாம் பார்க்கிறோம். நமது சமூக வாழ்க்கையில் அவரவர்களுக்கு என்று ஒரு குலதெய்வம் இருக்கும். அப்புறம் இஷ்ட தேவதைகள் என்று சில இருக்கும். வீரசிவாஜிக்கு காளி இஷ்ட தெய்வம். சிவாஜி பெரிய போர் வீரன். பத்தாயிரம் பேர்களைக் கொல்வது அவனக்கு சர்வ சாதாரணம். அவன் வாழ்க்கையில் அவன் அதைத் தான் செய்தாகவேண்டும். ஆனால் அவனுக்கும் ஒரு சக உறவு தேவைப்படுகிறது. சாதாரணமான ஒரு பெண்ணால் அவனுக்கு ஈடுகொடுக்க முடியாது. துர்காவால்தான் முடிகிறது. அவனுக்கு சமம் அவள்தான். அவன் எவ்வளவு பேரை அழிக்கிறானோ அவ்வளவு போரை அவளால் உருவாக்கமுடியும். அப்புறம் ராகிருஷ்ண பரமஹம்சர், சிவாஜியைப் போல் கிடையாது. இவர் பெரிய சாது. சாதுக்கள் துர்காவை பரிபூரண இயக்கமாக பார்க்கிறார்கள். அவள் தாய்மையுடையவள். அவளே கழுத்தறுக்கிறவளாகவும் இருக்கிறாள்; இயற்கையினுடைய ஒரு பெரிய வீச்சு இதில் இருக்கிறது. அதை சாதுக்கள் அடையாளமாகப் பார்க்கிறார்கள். சாதுக்கள், போர் வீரன் இரண்டு பேருமே சமூகத்தில் முக்கியமானவர்கள். நமக்கு பரிச்சயமானவர்கள். எனவே இயல்பாகவே நாம் துர்காவால் வசீகரிக்கப்படுகிறோம்.

தீராநதி: இப்போது அரசியலில் சிலைகளை ஒரு மதக் குறியீடாக பயன்படுத்துகிற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. நீங்கள் அவற்றை படைப்பு ரீதியாக முன்னெடுத்துச் செல்கிறீர்கள். இந்த முரண்பாட்டை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?

சந்ரு: மதவெறியர்கள் பார்க்கிற கஜசம்ஹாற மூர்த்தியல்ல நான். கஜசம்ஹார மூர்த்தி என்கிற விஷயத்துக்குள்ளே இருக்கிற விந்தை நிலைதான் நமக்குத் தேவை. அத்தனை அவதாரங்களிலும் அவர் சொல்ல வருகிற விஷயம் என்ன? அன்பே சிவம், தூய அறிவே சிவம் என்கிற தாத்பரியம்தான்.

தீராநதி: ஆனால் உங்கள் ஓவியங்களையே அவர்கள் எடுத்தாளக்கூடிய சூழல் உருவானால்?

சந்ரு: அதை நாம் தவிர்க்கவே முடியாது. நாம் குழந்தை பெற்று வளர்க்கிறோம். அது நமக்கு நல்லது செய்யும் என்று பொத்திப் பொத்தி பாதுகாக்கிறோம். ஆனால் நாம் ஏதோ வேலையில் இருக்கும்போது, ஒரு பருந்து அதைத் தூக்கிக் கொண்டு செல்கிறது என்று வைத்துக் கொள்வோம். பருந்து, குழந்தை மற்றும் நாம் இவர்களில் யாரை இப்போதுக் குறை சொல்வது? பருந்துக்கு அதற்கான பசி; தூக்கிக் கொண்டுதான் போகும். நாம் நமக்கான ஆசையில் பதறி அழத்தான் செய்வோம். நான் இப்போது கண்காட்சி நடத்துகிறேன். சாமி படத்தை நல்லாப் போட்டிருக்கிறார் சந்ரு என்று தூக்கிக்கொண்டு, போய் கும்பிட்டார்கள் என்றால், நான் ஒன்றும் செய்யமுடியாது. அதற்கு நான் பொறுப்பாளி இல்லை. ஏனெனில் படம் போட்டு, படம் போட்டு அடுக்கி வைத்துக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. ஆனால் அந்தப் படத்தின் மூலமாகச் சொல்லப்படுகிற தாத்பரியத்துக்கு என்றைக்கும் நான் பொறுப்பேற்பேன்.

நன்றி: தீராநதி

 

கருத்துகள் இல்லை: