ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்பு தமிழ்மொழியிலும், இலக்கியத்திலும், உரைநடையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றத்திற்கு மூலக்காரணமாக இருந்தவை, ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த ''ஜான் கூட்டன்பர்க்'' என்பவர் கண்டுபிடித்த அச்சு இயந்திரமேயாகும். இவ்வச்சு இயந்திரங்கள் தொடக்கக் காலத்தில் கிறித்துவச் சமயம் தொடர்பான செய்திகளை அச்சிடுவதற்கு மட்டுமே பயன்பட்டன. ஆனால் காலப்போக்கில் இதழ்களைப் பதிப்பிப்பதற்கும், நூல்களை அச்சிடுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் தமிழியல் வளர்ச்சியில் இதழியலுக்குப் பெரும் பங்கு உண்டு. இவ்விதழ்களுள் கலாநிலயம் இதழ் குறிப்பிடத்தக்கது.
கலாநிலயம்:-
கலாநிலயம் இலக்கியத்திற்காக வெளிவந்த வார இதழாகும். இதன் ஆசிரியர் திரு. டி.என். சேஷாசலம் ஐயர் பி.ஏ.,பி.எல்., ஆவார். இவ்விதழ் சனவரி 5, 1928-ல் தொடங்கி, ஆகஸ்டு 1, 1935 வரை எட்டு ஆண்டுகள் வியாழன்தோறும் வெளிவந்துள்ளது. கலாநிலயம் இதழானது மூன்று முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது என்பதை, இரண்டாமாண்டு தலையங்கத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அவை 1. நற்றமிழில் நல்ல பயிற்சி 2. கவிகளின் நயம் கண்டுணர்தல் 3. மற்றுள்ள மொழிகளின் மாண்பறிதல் என்பதாகும். இக்கூற்றை அறன் செய்யும் வண்ணமாகவே கலாநிலயம் இதழ் முழுமையும் காணப்படுகிறது. இவ்விதழானது பதினெட்டுப் பக்கங்களையும், 32(நீ) 18(அ) செ.மீ. அளவுகளையும் கொண்டுள்ளது. முகப்பு அட்டையிலேயே இதழின் பெயர், வெளியிடும் இடம், விலை, பொருளடக்கம், தலையங்கம், இடம் பெற்று, படம் ஏதும் இன்றி வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கலாநிலயம் இதழும் உரை முயற்சியும்:-
கலாநிலயம் இதழில் மக்களுக்கு நீதி வழங்கும் பகுதியாகத் தலையங்கமும், மக்களுக்கு மொழி அறிவைப் புகட்டும் வண்ணமாகத் ''தமிழ்ப்பாடம்'' என்ற பகுதியும், மேலும் சமூக நிகழ்வுகளை அறிவிக்கும் பொருட்டு ''வர்த்தமானம்'' என்ற பகுதியும் காணப்படுகிறது. இவற்றோடு சில இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் (அண்டபுராணம், மதுரைக்கோவை) முயற்சியும், குறுந்தொகை, கலித்தொகை, திருக்குறள், சூளாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம், மதுரைக்கோவை, நளவெண்பா போன்ற இலக்கியங்களுக்கு உரை எழுதும் முயற்சியும் செய்து, அவற்றை வெளியிட்டும் உள்ளனர்.
கலாநிலயம் இதழும் திருக்குறளும்:-
இவ்விதழில் வெளிவந்துள்ள உரை இலக்கியங்களுள் அன்று முதல், இன்று வரை பல உரைகளைப் பெற்ற நூல் திருக்குறளேயாகும். இந்நூலுக்கு முற்காலத்தில் உரை எழுதியவர்கள் பத்துபேர்.
''தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமேலழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு
எல்லை உரை செய்தார் இவர்''
இவற்றுள் பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர் ஆகிய நால்வரின் உரைகளே இன்று கிடைக்கப் பெறுகின்றன. இவற்றுள் பரிமேலழகர் உரையே சிறந்ததெனப் போற்றப்படுகிறது. இப்பத்துப்பேர் மட்டுமின்றி இராமானுஜக் கவிராயர், சரவணப்பெருமாள் ஐயர், தண்டபாணி தேசிகர், அரசன் சண்முகனார், இராமலிங்கப் பிள்ளை, புலவர் குழந்தை, மு. வரதராசனார், நாவலர் நெடுஞ்செழியன், சுஜாதா, சாலமன் பாப்பையா, சே. உலகநாதன் மற்றும் பலர் உரை எழுதியுள்ளனர். இவ்வுரை முயற்சியில் கலாநிலயம் இதழும் தன் பங்கிற்கு ஓர் உரையைத் திருக்குறளுக்கு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வுரையானது ''திருக்குறள் நீதி'' என்ற தலைப்பில் ஏ. இராமலிங்கம் என்பவர் எழுதியுள்ளார். இது தொடர்ச்சியாக ஜூலை - 7, 1932 முதல் மே - 25, 1933 வரை 14 இதழ்களில் வெளிவந்துள்ளது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற பெரிய தலைப்புகளின் கீழ்ப் பாயிரம், இல்லறவியல், துறவறவியல், அரசியல், அங்கவியல், ஒழிப்பியல், களவியல், கற்பியல் என்ற சிறிய தலைப்புகளின் கீழ் அதிகாரத் தலைப்பு இடம்பெற்று, ஓர் இதழில் 80 முதல் 100 குறள்களுக்குத் தொடர்ச்சியாக உரை எழுதப்பட்டுள்ளன.
கலாநிலயம் இதழும் திருக்குறள் உரையும்:-
கலாநிலயம் இதழில் ''திருக்குறள் நீதி'' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள திருக்குறள் உரையானது உரைநடை அமைப்பில் இல்லாமல், கவிதை நடையை உடையதாகவே காணப்படுகிறது. இவை,
அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
.......(ஆத்திச்சூடி)
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
.........(கொன்றை வேந்தன்)
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம்
.... ....... ...... (உலகநீதி)
இவையெல்லாம் ஒரு வரிப்பாவில் அமைந்து நீதி கூறும் இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சான்றாக உலகநாதர் இயற்றிய நூல், ''உலகநீதி'' என வழங்கப்படுதல் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். அவ்வகையிலேயே ''திருக்குறள் நீதி'' என்றும் பெயர் இட்டு இருக்கலாம். இவ்வுரையும் மேல் குறிப்பிட்டுள்ள நீதி இலக்கியங்களை நினைவுபடுத்தும் வண்ணமாகவே ஒரு வரியில் அமைந்துள்ளது.
சான்றுகள் I பாயிரம்:-
பூமிக் கமிழ்தம் பொழிபுன லாகும்
காப்பதும் கெடுப்பதும் புரிவது மழையே
............ ......... .............
இவ்வாறு மூன்று பால்களுக்கும் உரை எழுதப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் சுருங்கிய வடிவம் கொண்ட யாப்பு குறள் வெண்பாவாகும். இவ்வெண்பாவால் இயற்றப்பெற்ற இலக்கியம் என்ற பெயரைப் பெற்று இருப்பது திருக்குறளாகும். விரிந்தால் பெருகிக்கொண்டே செல்லும் பொருண்மைக் கருதி, ''குறள்'' எனப் போற்றப்படும் சூழலில், குறளுக்குக் குறள் வடிவைக் காட்டிலும் சிறிய அளவில் உரை முயற்சி செய்திருப்பது போற்றுதற்குரிய செயலாகும்.
கலாநிலயம் இதழில் திருக்குறள் உரைத்திறம்:-
திருக்குறள் நீதி என்ற பெயரைக் கொண்ட இவ்வுரை குறுகி அமையும் வகையில், குறளில் உள்ள பொருளைச் செறிவாக்கி வழங்கியுள்ளார். அதே சமயத்தில் ஆசிரியர் தன்னுடைய தனிப்பட்ட கருத்தை (அ) விளக்கத்தை உரையில் இடம்பெறச் செய்யவில்லை. இதழில் இடம் பெற்றுள்ள உரையிலும் இலக்கியச் சொற்களே உள்ளன. சமூகத்தில் மக்கள் பயன்படுத்தும் இயல்பான சொற்களும் இவ்வுரையில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
சான்று அறத்துப்பால்:-
''வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று''
என்ற குறளுக்கு,
''பூமிக்கு அமிழ்தம் பொழிபுன லாகும்''
என்று உரை எழுதியுள்ளார். இவ்வரை சீர், சொல், பொருள் ஆகிய நிலைகளில் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
சீர்:-
குறள்
(1) வான்நின்று (2) உலகம் (3) வழங்கி வருதல் (4)தான்
(5) அமிழ்தம் (6)என்று (7)உணரல்பாற்று
உரை
(1) பூமிக்கு (2) அமிழ்தம் (3) பொழிபுனல் (4) ஆகும்
சொல்:-
குறள்
(1) வான் (2) நின்று (3) உலகம் (4) வழங்கி (5) வருதலால் (6) தான் (7) அமிழ்தம் (8) என்று (9) உணரல் (10) பாற்று
உரை
(1) பூமிக்கு (2) அமிழ்தம் (3) பொழி (4) புனல் (5) ஆகும்
சீர் முறைகளைக் கொண்டு ஆராயும்போது திருக்குறளில் ஏழு சீர்கள் உள்ளன. ஆனால் இவ்விதழ் உரையில் நான்கு சீர்கள் மட்டுமே காணப்படுகின்றன. குறளில் காணப்படுகின்ற ''வான்நின்று'', ''வழங்கி வருதல்'' என்ற இரு சீர்களின் பொருளை நோக்கும்போது ''வானில் இருந்து பெய்யும் மழையைக் குறிக்கிறது.'' இத்தொடரின் பொருள் மாறாமல், ''பொழிபுனல்'' என்ற ஒரே சொல்லில் கூறியுள்ளார். அடுத்து, ''உலகம்'' என்றால் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற ஐம்பூதங்களின் தொகுப்பேயாகும். இவற்றில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகக் காணப்படுவது நிலமாகும். இக்குறளில் உள்ள உலகம் என்ற சொல்லானது மக்கள் வாழும் இடத்தையே குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அதனால் உரையாசிரியர் ''உலகம்'' என்பதை ''பூமி'' என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். மேலும் பிற சீர்ளை நீக்கிவிட்டு ''ஆகும்'' என்ற தனிச் சொல்லோடு உரையை முடித்து வருகிறார். இவ்வாறு ஏழு சீர்கள் கொண்ட குறளுக்கு நான்கு சீர்கள் மட்டுமே இடம்பெற்றுத் திருக்குறள் முழுமைக்கும் கவிதை நடையில் உரை எழுதி முடித்திருப்பது தனிச்சிறப்பாகும்.
காமத்துப்பால் உரைத்திறம்:-
அக இலக்கியங்களுக்கு உரையானது திணை, துறை, கூற்று, கேட்போர் போன்றவற்றை நிலைகளன்களாகக் கொண்டு காணப்படுவது மரபு. இம் மரபைப் பின்பற்றி காமத்துப்பாலில் கற்பியலுக்கு மட்டும் கூற்று வகையால் பிரிக்கப்பட்டு உரை எழுதப்பட்டுள்ளது. உரையாசிரியர் கூற்று யார் யாரிடம் நிகழ்த்தப்பட்டது என்ற தகவலையும் தலைப்பாகக் கொண்டு எழுதியுள்ளார்.
சான்று: தனிபடர் மிகுதி உறுப்பு நலனழிதல்+
தலைமகள் தோழி
காதலிரு காதலர்க்குங் கருத்தொப்ப தேயின்பம் பசந்துபணி பொருமுன்கண்
.............. நயத்தவர்னால் காமைச்சொல்.
தமிழியல் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க இதழாகிய கலாநிலயம் இதழில் இலக்கியப் பணிகளுள், பழந்தமிழ் இலக்கியங்களுக்கான உரை முயற்சியும் ஒன்று. நவில்தோறும் நூல்நயம் கண்டு பயில்வோர் பலரும் திருக்குறளுக்கு ஓர் அடி உரையாக அமைந்த இவ்வுரை, ஒரு வரிப்பா இலக்கியங்களின் வரிசையில் நீதியை வலியுணர்த்துவதாகக் காணப்படுவதால், ''திருக்குறள் நீதி'' எனப் பெயர் இடப்பட்டுள்ளது. பொருள் நிலையில் செறிவாக்கி விடுகை ஏதும் இன்றி குறள் வழங்கும் பொருளை முழுமையாய் வழங்கும் வகையில் ஆசிரியரின் உரைதிறம் அமைந்து விளங்குகிறது.
நன்றி: ஆய்வுக்கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக