பாரதிதாசன் கவிதைப் பயணத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய இரண்டு சந்திப்புகளில் ஒன்று பாரதி - பாரதிதாசன் சந்திப்பு. இரண்டாவது பாரதிதாசன் - பெரியார் சந்திப்பு ஆகும். தன்னுடைய கவிதை நடையில் மாற்றத்தை விளைவித்ததன் மூலம் கவிதையின் உருவமாற்றத்திற்குப் பாரதியின் சந்திப்பே காரணம் என்கிறார் பாதிதாசன். பின்னர்ப் பெரியாரைச் சந்தித்ததன் மூலம் கவிதையின் உள்ளடக்கம் மாறியது என்கிறார். சுயமரியாதை இயக்கத்தின் மூலம் தமிழ் மக்களுக்குப் பகுத்தறிவுப் பாதையைக் காட்டிக் கொண்டிருந்த பெரியாரைப் பெரிதும் விரும்பினார் பாரதிதாசன். ''சுயமரியாதை இயக்கத்தின் பயனாகப் பகுத்தறிவு, பொதுவுடைமை, சீர்திருத்தம், கடவுள் மறுப்பு, இந்தி எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, திராவிட நாட்டுப் பிரிவினை ஆகிய புதிய சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகளுடன் தமிழ்நாட்டுச் சிந்தனையாளர்களையும், கவிஞர்களையும் கவர்ந்தார் பெரியார்''. மேலும் அவருடைய பெண் விடுதலைக் குரலும் பாரதிதாசனை வெகுவாகவே கவர்ந்தது. பாரதிதாசன் - பெரியார் சந்திப்பு நிகழ்ந்தது 1928 - ஆம் ஆண்டு. பெரியாரின் புரட்சிக் கருத்துக்களைப் பாரதிதாசன் உள்வாங்கத் தொடங்கிய காலக்கட்டம்.
கவிஞரது இளமைக் காலத்தில், 1930 - ஆம் ஆண்டில் எழுதப்பட்ட முதல் காவியம், கவிஞரது ஆற்றல்வாய்ந்த கவிதைகள் இடம்பெற்ற முதல் தொகுதியில் முதலாவதாக இடம்பெற்ற காவியம் சஞ்சீவிப் பர்வதத்தின் சாரல் ஆகும். தலைவனும் தலைவியும் தங்களது அன்பு நிறைந்த காதல் வாழ்க்கையைத் தொடங்க ஏற்ற இடமாக மலையும் மலைசார்ந்த இடத்தைத் தேர்வு செய்திருந்தனர் நம் முன்னோர். காதலையே பெரிதும் விரும்பிப் பாடும் பாவேந்தரும், தமது காதல் ஜோடிகளான வஞ்சியும் குப்பனும் சந்தித்துப் பேச ஏற்ற இடமாக
''குயில்கூவிக் கொண்டிருக்கும் கோலம் மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும் வாசம் உடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும் கண்ணாடி போன்ற நீர்
ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க உண்டு
பூக்கள் மணங் கமழும் பூக்கள் தோறும் சென்று தேன்
ஈக்கள் இருந்தபடி இன்னிசை பாடிக் களிக்கும்''.
மலைச்சாரலைத் தெரிவு செய்கிறார். இங்கே காதல் செய்ய ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுப்பவள் பெண். பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தால் சமூகத்தில் விளைந்த இடர்ப்பாடுகள் ஏராளம். பெண்ணிண் பிரச்சினை ஆரம்பமாவதே இந்தத் திருமணத்தில் தான். எனவே, நாட்டு மக்களுக்கு ஓர் நல்லறிவிப்புச் செய்கிறார்.
''காட்டுமறவர்களும் காதல் மணம் செய்வதுண்டு நெஞ்சில் நிறுத்துங்கள் இந்த இடத்தைத் தான் சஞ்சீவிப் பர்வதத்தின் சாரல் என்று சொல்லிடுவர்''.
தமிழ்ச் சமுதாயம் பாழ்பட்டுப் போனதற்குக் காரணமான மூட நம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், புராண இதிகாசங்களையும், சாதி சமயங்களையும், பெண்ணடிமை நிலையையும் பாரதிதாசன் எதிர்த்தார். இவையே, காப்பியத்தின் மையப் பொருளாகவும் அமைகின்றன.
''சாதிப் பிரிவு சமயப் பிரிவுகள்
நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்
மூடப் பழக்க வழக்கங்கள் எல்லாம்
முயற்சி செய்தே ஓடச் செய்தால்''
சமூகமும் நாடும் விடுதலை பெறும் என்பது கவிஞரது எதிர்பார்ப்பு. ''கவிஞரின் மிக இளமைக் காலத்திலேயே எழுதப்பெற்ற இந்நூலில் பெண் விடுதலை பேசப்படுகிறது. பெண்ணடிமை செய்கின்ற தமிழ்நாட்டைக் கண்டு கவிஞர் எந்த அளவு சீற்றம் கொள்கிறார் என்பதை அறிய முடிகிறது''. இந்நாட்டின் சமுதாயக் குறைகள் 1936 - ஆம் ஆண்டிலேயே கவிஞனை எங்ஙனம் விழிப்பு அடையச் செய்தன என்பதை அறிய முடிகிறது.
மனிதனை இன்புறுத்துவன இயற்கையும் காதலுமாகும். பாவேந்தர், தமது படைப்புகளில் இவற்றை எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். இயற்கையோடியைந்த நம் தமிழர் வாழ்க்கைமுறை கவிஞரைக் கவர்ந்திருக்க வேண்டும். தன்னுடைய முதல் காவியத்தில் காதல், வீரம் என்ற உள்ளடக்கத்தோடு பெண் விடுதலையை முதன்மைப்படுத்திப் பாடியதன் மூலம் தன் கவிதை வாழ்வின் இலட்சியத்தைப் பிரகடனப்படுத்திவிட்டார்.
மனிதநேயம் தான் கவிஞரது கவிதைக் கொள்கை. அதற்குப் பங்கம் வந்தால் கவிஞரது கதைமாந்தர்கள் கத்தியையும் கொலைவாளினையும் எடுக்க அஞ்சுவதில்லை. அன்பு வாழ்க்கையையே பேசும் (இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்) பாவேந்தர் இக்காவியத்திலும் அன்பொழுகும் காதல் மாந்தர்களைப் படைத்துள்ளார். காட்டு மறவர்கள் கூடக் காதல் மணம் செய்வதைக் கண்டு உள்ளம் பூரிக்கும் கவிஞர், நாட்டு மனிதர்கள் தான் சாதியின் பெயரால், சமயத்தின் பெயரால் காதல் எதிரிகளாக இருப்பதைக் கண்டு மனம் வெம்புகிறார். காவியத் தொடக்கத்திலேயே வாடி நிற்கும் குப்பனையும் வாடாமலர் அணிந்து வரும் வஞ்சியையும் தலைமைப் பாத்திரங்களாக அறிமுகம் செய்து வைக்கிறார்.
கதைத் தலைவன் குப்பனோ, காதலையும், கனியிதழ் முத்தத்தையும் வேண்டி கெஞ்சிக் கூத்தாடும் பரிதாப நிலையில் உள்ளான். வஞ்சியோ எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடிக்க வேண்டிய நிலையில் உள்ளாள். காட்டு வழியில் கற்கள் முட்கள் நிறைந்திருக்கும். அவற்றின் மேல் நடந்தால் உன் கால்கள் வலிக்கும் என்று கூறும் குப்பனிடம், குறிக்கோளை அடைந்தே தீருவது என்று எண்ணிவிட்டால் எவ்வித வருத்தமும் தெரியாது என்று பதில் தருகிறாள்.
1930களில் பெண்களுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லாத கால கட்டமாகும். எந்த ஒரு சிறு செயலுக்கும் ஆண்களையே சார்ந்திருந்த காலம். பெண்கள் வெளிக்காரியங்களில் ஈடுபட அனுமதிக்காத காலம். இக்காலக்கட்டங்களில் வாழ்ந்த பாரதிதாசன் படைத்த பெண்கள், பெண்ணிய வாதிகள் காணவிரும்பிய இலட்சியப் பெண்களைப் போல செயல்படுவார்கள். தங்கள் வாழ்வில் நேரிடும் பிரச்சினைகளைத் தாங்களே எதிர்கொள்ளும் திறன் வாய்க்கப் பெற்றவர்கள். பெண்களைச் சிறப்பிக்கும் நோக்கத்துடன், ஆண் பாத்திரங்களை வலிவு குன்றியவர்களாகப் படைத்துள்ளார். வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது அதைக்கண்டு அஞ்சிப் பின்வாங்கும் ஆண்களுக்கு உரம் ஊட்டுபவர்களாகப் பெண் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளம், உடல்சார்ந்த பிரச்சனைகள், குறிக்கோள்வாதிகளைக் குறி வைத்துத் தாக்காது என்பதனை வஞ்சியின் பாத்திரப் படைப்பு நிரூபணமாக்குகிறது. சக்திமிக்க மூலிகைச் செடிகளைத் தேடிச் செல்கையில்,
''கல்லில் நடந்தால் உன் கால் கடுக்கும்''
என்ற குப்பனின் பேச்சுக்கு
''காலிரண்டும் நோவதற்கு காரணமில்லை, நெஞ்சம்
மூலிகை இரண்டின்மேல் மொய்த்திருப்பதால்''
என்று பதில் கூறுகிறாள்.
பாழ் விலங்கால் அந்தோ படுமோசம் நேரும் என்றான். இருந்தாலும் வஞ்சி விடுவதாக இல்லை. இந்நாள் வரை இருந்து வந்த இலக்கிய வழக்கையையே மாற்றுகிறார் கவிஞர். அஞ்சுவது பெண்ணியல்பு ஆறுதல் கூறுவது ஆணியல்பு. அந்நிலையை மாற்றி, இன்ப துன்பம் இணைந்தது தான் வாழ்க்கை என்ற வாழ்வியல் தத்துவத்தை இங்கே பெண் பேசுகிறாள்.
''வாழ்வில் எங்கும் உள்ளது தான் வாருங்கள்''
என்று குப்பனைத் தன்னுடன் வருமாறு அழைப்பு விடுக்கிறாள் வஞ்சி. சாதாரணக் குடும்பத்தில் தோன்றிய வஞ்சியிடம் தன்னம்பிக்கை மிகுந்து இருப்பதைக் காண்கிறோம். கதைத் தலைவனிடமோ அவநம்பிக்கையே மிகுந்து இருக்கிறது. வாழ்க்கை என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். மனத் துணிச்சலோடு அதனை எதிர்த்து வெற்றி பெறுவோம் என்று வஞ்சி கூறுகிறாள். இதன் மூலம் தானும் இயங்கி தன்னைச் சேர்ந்தவர்களையும் இயக்கும் இரண்டுவித சக்திகளைப் பாரதிதாசனின் பெண் பாத்திரமாகிய வஞ்சியிடம் காணமுடிகிறது. ஆணுக்கு நிகராகப் பெண் செயல்பட வேண்டும் என்பது பெண்ணியவாதிகளின் கருத்து. பாரதிதாசன் படைத்த பெண்களோ ஆண்களுக்கே வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்.
பேச்சுரிமை:-
காலங்காலமாக ஏன்? எதற்கு? எப்படி? என்று எந்தவிதமான கேள்வியும் கேட்க முடியாமல், தவித்தது பெண்ணினம். ஆண்களின் பேச்சை அப்படியே வேதவாக்காக ஏற்று நடக்க வேண்டும் என்ற கால கட்டத்தில் கவிதை எழுத வந்தவர் பாரதிதாசன். பெண்களை அடிமைப்படுத்தியிருந்த ஆணாதிக்கச் சமுதாயத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்கப் புறப்படுகிறார். வெளியிலுள்ள ஆண்களின் முன்னிலையில் மட்டுமல்லாது வீட்டிலுள்ள கணவனிடம் கூடத் தன் உள்ளக்கருத்தை எடுத்துரைக்க முடியாத சூழ்நிலை நிலவிய காலம். ஒருவேளை, ஏதாவது பேசிவிட்டாலோ அது ஆடவர்களை அவமரியாதை செய்ததை ஒக்கும் செயலாகும். அப்படிப் பேசும் பெண்களை அடங்காப் பிடாரிகள் - வாயாடிகள் என்று வர்ணிக்கும் ஆணுலகம். கவிஞர் அன்றைய சமூகத்தில் பெண் இருந்த நிலையைக் கூறி அதற்கேற்ற தீர்வும் கூறுகிறார். மூலிகை பறிக்கச் செல்ல வேண்டும் என்ற வஞ்சியை நோக்கி,
''என்னடி பெண்ணே நான் எவ்வளவு சொன்னாலும்
சொன்னபடி கேட்காமல் தோசம் விளைவிக்கின்றாய்
பெண்ணுக்கு இது தகுமோ''
என்று குமுறுகிறான் குப்பன். வஞ்சி கூறிய பேச்சை இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் குப்பன் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாகப் புலம்புகிறான்.
பேச்சுரிமை மறுக்கப்பட்ட பெண்ணினத்தின் அடிமைநிலையை அடியோடு மாற்றி அமைக்கத் திட்டம் தீட்டுகிறது கவியுள்ளம். ஆண்டாண்டு காலமாக, பாதிப்புக்குள்ளான பெண் வாயிலாகவே, நாங்கள் அடிமைப் பட்டிருந்தது போதும். இனிப் பொங்கி எழுவோம், போர்க்குரல் கொடுப்போம் என்று ஆவேசக் குரல் கொடுக்கச் செய்கிறார்.
''பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே
ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைமை தான் ஆடவர்க்கும் உண்டு''
என்று பெண்ணின் பேச்சுரிமையைப் பறித்த ஆணினத்தை எச்சரிக்கை செய்கிறாள் வஞ்சி. மேலும் ஒரு நாட்டின் உண்மையான விடுதலையே, அந்நாட்டுப் பெண்களின் விடுதலையைப் பொறுத்தாகும்.
அறிவு நலத்தில் சிறந்தவர்கள் ஆண்களே என்ற கருத்தாக்கத்தைத் தகர்க்கவே குப்பனை வையமறியாதவனாகப் படைத்துள்ளார் கவிஞர். அறிவுரை வழங்குபவர்கள் ஆண்கள்; அதனைப் பெறுபவர்கள் பெண்கள் என்கிற பழம்போக்கை மாற்றுகிறார் பாவேந்தர். உலக அனுபவமற்றவனாக அறியாமை மிகுந்தவனாகப் படைக்கப்பட்டுள்ள குப்பனுக்கு அறிவு கொளுத்தும் விளக்காக வஞ்சி உருவாக்கப்பட்டுள்ளாள். புராணச் சொற்பொழிவை - புரட்டை உண்மையென்று நம்பி விடுகிறான். மலையை அசைக்க முடியாது என்ற சாதாரண அறிவுகூட இல்லாத குப்பனுக்கு,
''வஞ்சியவள் நகைத்தே இன்ப மணாளரே!
சஞ்சீவிப் பர்வதத்தைத் தாவிப் பெயர்க்கும்
மனிதரும் இல்லை! மலையும் நடுங்காது''
என்று உலகியல் பாடம் நடத்தும் பெண்ணாக வஞ்சி படைக்கப்பட்டுள்ளாள்.
ஆண் பெண் சரிநிகர் சமானம் என்ற சமத்துவப் பெண்ணிய நோக்கில் வஞ்சியின் பாத்திரப் படைப்பு அமைந்திருக்கிறது. பெண் விடுதலையின் முதற்படி பெண் கல்வி. தான் கற்றுச் சிறப்புற்றதோடு, அறிவில் குறைந்த ஆண்மகனுக்கும் அறிவொளி தருபவளாகப் பெண் சித்திரிக்கப்பட்டுள்ளாள். பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நாடு சிறக்காது. பெண்ணுரிமைகளைப் பெண்ணே போராடிப் பெற வேண்டும் என்ற பெண்ணியச் சிந்தனையுடன் வஞ்சி திகழ்கிறாள். மூடப்பழக்க வழக்கங்களால் மூழ்கிப் போன தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க, பகுத்தறிவுக் கரம்கொண்டு தமது மீட்புப் பணியை மேற்கொள்கிறாள், வஞ்சி. கொண்ட இலட்சியத்தில் உறுதியுள்ள பெண்ணைப் படைத்து, இனிவரும் பெண் சமுதாயத்திற்குப் புரட்சிப் பெண்மணியாக வஞ்சியை வளம்வரச் செய்துள்ளார் பாவேந்தர்.
நன்றி: ஆய்வுக்கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக