12/02/2011

இலக்கியப் பார்வை - 7

திருவாவடுதுறை மடம்
தமிழ் இலக்கியப் பணியில் சைவமடங்கள் அரும்பணி ஆற்றியுள்ளன. அவற்றில் திருவாவடுதுறை ஆதீனமும் ஒன்று. 14ம் நூற்றாண்டில் நமச்சிவாய மூர்த்திகள் இந்த மடத்தை நிறுவினார். இவர் உமாபதி சிவாச்சாரியார் என்பவரின்  மாணவர். நன்னூல் என்னும் இலக்கண நூலுக்கு  உரை எழுதிய சங்கர நமச்சிவாயர், சிவஞானமுனிவர் ஆகியோர் திருவாவடுதுறை மடத்தைச் சேர்ந்தவர்கள். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் ஆகியோரை இந்த மடம் ஆதரித்தது. இம்மடத்தைச் சேர்ந்த சிவஞான முனிவர் எழுதிய "சிவஞான போதகம்' என்னும் நூல், சைவ சித்தாந்த நூல்களிலேயே மிகவும் உயர்ந்தது. பல ஆய்வாளர்களால் போற்றப்பட்டது. இப்போதும் பல தெய்வங்களைப் பற்றிய அரிய வரலாற்று நூல்களை இந்த மடம் வெளியிட்டு வருகிறது. இவர் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அவதரித்தார். அங்கு அவருக்கு தம்பிரான் துறை படித்துறையில் கோயில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் குரு அனுக்கிரகம் பெற்று, இந்நூலை எழுதினார்.
தருமபுர மடம்
தருமபுர மடத்தை 14ம் நூற்றாண்டில் குருஞானசம்பந்த தேசிகர் நிறுவினார். ஸ்ரீமாசிலாமணி தேசிகர், வெள்ளியம்பலவாணர், படிக்காசு  புலவர் ஆகியோர் இந்த மடத்தைச் சேர்ந்தவர்கள். தேவார திருமுறை உரை, திருக்குறள் உரை வளம் என்ற நூல்களை இந்த மடம் வெளியிட்டுள்ளது.
திருப்பனந்தாள் மடம்
காசியில் குமரகுருபர சுவாமிகள் குமாரசுவாமி மடத்தை நிறுவினார். அந்த மடத்தைச் சேர்ந்த ஸ்ரீகாசிவாசி தில்லைநாயக சுவாமிகள், திருப்பனந்தாள் மடத்தை, 1720ம் ஆண்டில் நிறுவினார். குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், திருக்குறள் உரைக்கொத்து, பன்னிரு திருமுறைகள், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், கந்த புராணம் ஆகிய நூல்களை இந்த மடம் வெளியிட்டுள்ளது. க.வெள்ளை வாரணனார் எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு, நீ. கந்தசாமி பிள்ளை எழுதிய "திருவாசகம்' ஆகிய நூல்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் இந்த மடம் வெளியிட்டது.
மதுரை மடம்
இன்றுள்ள சைவமடங்களிலேயே மிகவும் பழமையானது மதுரை மடம் ஆகும். இதை "திருஞான சம்பந்தர் திருமடம்' என்றும் அழைப்பர். சைவத்தைக் காக்க மங்கையர்க்கரசியார் என்ற அரசியின் அழைப்புக்கு ஏற்ப ஞானசம்பந்தர் மதுரை வந்தபோது, இந்த மடத்தில் தங்கியிருந்தார். எனவே, பெருமைக்குரிய மடமாக இது திகழ்கிறது.

நன்றி – தினமலர்

கருத்துகள் இல்லை: