12/02/2011

இலக்கியப் பார்வை - 10

இடைச்சங்கத்திற்கு செல்வோமா!
தமிழ் ஆய்ந்த இடைச்சங்கம் கபாடபுரம் என்னும் இடத்தில் இருந்தது. கன்னியாகுமரிக்கு தெற்கே நிலப்பரப்பு இருந்ததாகவும், அதில் ஒரு பகுதியே கபாடபுரம் என்றும் சொல்வர். பின்பு, கடலில் மூழ்கி அழிந்து விட்டதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.
இங்கிருந்த தமிழ்ச்சங்கத்தை வெண்டேர்ச்
செழியன் என்ற மன்னன் முதல், முடத்திருமாறன் என்பவன் வரை 59பேர் வளர்த்திருக்கிறார்கள். இந்த சங்கத்தில் 3700 புலவர்கள் இருந்தனர். அப்போது, பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் என்ற நூல்கள் இயற்றப்பட்டன. அந்த நூல்களும் கடலில் மூழ்கி அழிந்துவிட்டன. இந்த சங்க காலத்தில் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்
எழுதப்பட்டது. அது நமக்கு கிடைத்ததற்கு காரணம், யாரேனும் அதை பிரதி எடுத்திருக்க வேண்டும். அது கடல்கோள் ஏற்பட்ட பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்÷ ற எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இடைச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், வெள்ளூர் காப்பியனார், சிறுபாண்டரங்கனார் என்ற புலவர்கள் முக்கியமானவர்கள். இந்தச் சங்கம் 3700 ஆண்டுகள் இருந்தது.
புறநானூறு பற்றி அறிவோமே!
புறநானூறு என்னும் நூல், காதல் அல்லாத புகழ், வீரம், கொடை உள்ளிட்ட பல பொருட்களைப் பற்றி பாடப்பட்ட
நூலாகும். இந்நூலில் 400 பாடல்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், 267,268ம் பாடல்கள் கிடைக்காததால் 398 பாடல்களே உள்ளன. பல புலவர்கள் இந்த நூலிலுள்ள பாடல்களைப் பாடியுள்ளனர். ஆனால், இவற்றைத் தொகுத்தவர் யார் எனத் தெரியவில்லை. பெருந்தேவனார் என்ற புலவரின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் இந்த நூல் துவங்குகிறது. இந்நூலில் அவ்வையாரின் பாடல்கள்(33) அதிகமாக உள்ளன. பாரிவள்ளல் இறந்த பிறகு, அவரது மகள்கள் (பாரி மகளிர்) வருந்திப் பாடிய பாடல் 112வதாக வருகிறது. புறநானுற்றை ஆராய்ந்து பதிப்பித்தவர் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்.
இறந்தவர்களை தாழியில் வைத்துப் புதைத்தல், நடுகல் நாட்டுதல், கணவரின் மறைவுக்குப் பிறகு பெண்கள் நகைகளைக் களைதல், உடன்கட்டை ஏறுதல் ஆகிய பழக்க வழக்கங்கள் அக்காலத்தில் இருந்ததை புறநானூறு பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
"நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்று மோசிகீரனார் என்பவர் பாடிய பாடல் இன்றைய உலகத்துக்கும் பொருந்தும். "நெல்லும், தண்ணீரும் மட்டுமல்ல, நல்ல ஆட்சியும் மனிதனுக்கு முக்கியம்' என்ற பொருளில் எழுதப்பட்ட பாடல் இது.
கணியன் பூங்குன்றனார் எழுதிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.
பொருநராற்றுப்படை
பொருநாராற்றுப் படை என்ற நூல் கரிகால் பெருவளத்தான் என்ற புகழ் பெற்ற மன்னனைப் பற்றிப் பாடப்பட்டது. இளவயதில், இவனது எதிரிகள் அரண்மனையில் தீ வைத்ததாகவும், அதனால் இவனது கால்கள் கருகி
"கரிகால்' ஆனதாகவும் சொல்லப்பட்டாலும், இன்னொரு சிறப்பான தகவலும் இருக்கிறது. "கரி' என்றால் "யானை'. இவன் தன் எதிரிகளை காலில் போட்டு மிதித்தால், யானை துவம்சம் செய்வது போல இருக்குமாம்! இதனால் தான் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறுவர். இந்த நூலை "முடத்தாமக்கண்ணியார்' என்ற பெண் புலவர் எழுதியுள்ளார். "முடத்தாமம்' என்றால் "தாமரை' எனப் பொருள். தாமரை போன்ற கண்களை உடையவராம் இவர்.
"பொருநர்' என்றால் "மற்றொருவர் போல வேடம் கொள்ளுதல்' என்பதாகும். போர்க் களத்து வீரர் போல் வேடமணிந்த ஒருவர், கரிகாலனின் வீரத்தைப் பாடுவது போல், இந்
நூலில் வரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நூல் 248 அடிகளைக் கொண்டது.

நன்றி – தினமலர்

கருத்துகள் இல்லை: