14/03/2012

இனியவை நாற்பது - சாமி. சிதம்பரனார்

நூல் வரலாறு

நாற்பது வெண்பாக்கள் கொண்ட நூல்; நல்லவை இவை இவை என்று
எடுத்துரைக்கின்றன. ஆகையால் இந்நூலுக்கு இனியவை நாற்பது என்று
பெயர். இன்று 41 வெண்பாக்கள் இருக்கின்றன. முதற்பாட்டு கடவுள்
வாழ்த்து. சிவன், திருமால், நான்முகன் மூவரையும் வாழ்த்துகின்றது.
இவ்வாழ்த்து பிற்காலத்தாரால் பாடிச் சேர்க்கப்பட்டிருக்க
வேண்டும்.

இந்நூலைச் செய்த ஆசிரியர் பெயர் பூதஞ்சேந்தனார். இவர்
இயற்பெயர் சேந்தனார்; இவர் தந்தை பெயர் பூதனார்; இந்தப் பூதனார்
மதுரையில் வாழ்ந்தவர். இவர் தமிழ் ஆசிரியர். ஆதலால் இந் நூலாசிரியரை
மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்று அழைத்தனர்.


இந்நூல் வெண்பாக்கள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பெற்று
வாழ்வதற்கான நல்லறங்களைக் கூறுகின்றன. பெரும்பாலான வெண்பாக்களில் மூன்று செய்திகள்தாம் சொல்லப்படுகின்றன. சில சிறந்த நீதிகள் இதில் உண்டு. இவ்வெண்பாக்கள் அவ்வளவு கடினமானவையல்ல. எளிதில் பொருள் தெரிந்து கொள்ளக்கூடியவை. மோனையும், எதுகையும் அமைந்த அழகிய வெண்பாக்கள், சில பஃறொடை வெண்பாக்களும் இதில் உண்டு.

பாடல் சிறப்பு

மெய், வாய், கண், மூக்கு, செவி யென்பன ஐம்பொறிகள். இவைகளை
அடக்கி ஆளும் மனிதனே மன அமைதியுடன் வாழ முடியும். கல்லாத மூடர்களின் சேர்க்கையால் செல்வங் கிடைப்பதாயினும் அச்சேர்க்கையைக் கைவிடுதல்தான் நலம். நிலைத்த அறிவும், நெஞ்சிலே உரமும் இல்லாத மனிதருடன் சேர்ந்து வாழாமைதான் நன்மை தரும். இவ்வாறு அறவுரை கூறுகின்றது ஒரு செய்யுள்.

 ‘‘ஐவாய வேட்கை அவா அடக்கல் முன்இனிதே;
கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே;
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.

ஐம்பொறிகளின் வழியால் வரும் நினைப்பையும் ஆசையையும்
அடக்கிக்கொள்வதே மிகவும் சிறந்தது; கையிலே பொருள்

கிடைப்பதாயிருப்பினும் கல்லாதவரை விட்டுப் பிரிதலே நன்று; நிலையில்லாத
அறிவும், நெஞ்சிலே உறுதியும் இல்லாத மனிதரைச் சேராமல்

இருப்பதே நலம்’’ (பா.26)

நன்மைகள் இவை என்று எடுத்துரைக்கும் மற்றொரு செய்யுளும்
மனத்திலே பதிய வைத்துக்கொள்ளத்தக்கதாகும்.

  ‘‘கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே,
உயர்வுஉள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
எளியர் இவர்என்று இகழ்ந்துரையார் ஆகி
ஒளிபட வாழ்தல் இனிது.

கீழ்த்தரமானவர்களுடன் சேராமல் வாழ்வது நலம்; தான் மேலும்
உயர்வதற்கு எண்ணி, அதற்காக ஊக்கம் பெற்று உழைத்தல் நலம்; இவர்
வறியவர் என்று ஒருவரையும் இகழ்ந்து பேசாமல் புகழுடன்
வாழ்வதே நலம்’’ (பா.30)

தன்மானம்

தன்மானத்துடன் வாழாதவன் மனிதன் அல்லன். தன்மானமே உயிர்
எனக் கொண்டவன்தான் மக்களால் அவ்வுணர்ச்சியை எச்சமயத்திலும் இழந்துவிடுவதில்லை. சிலர் ஆபத்தும்
மனச்சோர்வும் ஏற்படும்போது, அவ்வுணர்ச்சியை விட்டுவிடுகின்றனர்.
எச்சமயத்திலும் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதே மனிதத்தன்மை என்று
கூறுகின்றது இந்நூல்.

‘‘உயிர்சென்று தான்படினும் உண்ணார் கைத்து உண்ணாப்
பெருமை போல் பீடுஉடையது இல்

 பசியினால் உயிரே போவதானாலும், உண்ணத்தகாதவர் கையிலிருந்து
உணவைப் பெற்று உண்ணாத பெருமையே சிறந்தது; அதைப் போன்ற
பெருமை வேறு ஒன்றும் இல்லை’’

‘‘மானம் அழிந்தபின் வாழாமை முன்இனிதே

மானங்கெட்ட பின் உயிர் வாழ்வதைவிடச் செத்து மடிவதே
சிறந்ததாகும்’’                                                                        (பா.14)

 ‘‘மானம் படவரின் வாழாமை முன்இனிதே
மானம் கெடும்படியான நிலைமை வருமாயின், அந்நிலைமை வருவதற்கு
முன்பே இறந்துபடுதல் நன்று’’                                              (பா.28)

இவைகள், தன்மானத்தின் பெருமையை எடுத்துக் காட்டின.

அரசன் கடமை

நாடாளும் மன்னவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும்
இந்நூல் எடுத்துரைக்கின்றது. அரசனுக்குக் கூறப்பட்டிருக்கும் அந்த
அறிவுரை, அரசன் அற்ற குடி அரசுக்கும் ஏற்றதாகும்.

‘‘ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே;
முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே;
               
பற்றுஇலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கு
                                     அறிதல்
வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது.               (பா.36)


ஒற்றர்களைக்கொண்டும் நாட்டிலே நடைபெறும் நிகழ்ச்சிகளைத்
தெரிந்துகொள்ளுதல் சிறந்தது; நீதி வழங்குவதற்கு முன்பே, தான் நன்றாக
ஆராய்ந்து உண்மையறிந்து நீதி வழங்குவதே சிறந்தது; ஒரு சார்பிலே
நிற்காதவனாய், எல்லாவுயிர்களிடத்தும் சமமான நிலையில் நின்று,

எல்லாரிடத்திலும் உள்ள நன்மை தீமைகளை அறிந்து கொள்ளுவதே
வேந்தர்களின் கடமை’’

இந்த அறிவுரையைப் பின்பற்றி நடக்கும் அரசாங்கம் எப்பொழுதும்
நிலைத்து நிற்கும்; மக்களால் தூற்றப்படாது; போற்றப்படும்.

சிறந்த அறங்கள்

இன்னும் பல சிறந்த அறங்களும் இந்நூலிலே கூறப்பட்டுள்ளன.
அவைகளில் சிலவற்றைக் காண்போம்.

‘‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’’ என்று நாம்
படித்திருக்கின்றோம். தந்தையைத் தெய்வமாகப் போற்றவேண்டும் என்பதேஇதன் கருத்து. தந்தைமொழியைத் தட்டவே கூடாது என்று இன்றும்
சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றோம். இதற்கு மாறான
கருத்தைஇந்நூலிலே காணலாம் ‘‘தந்தை ஒழுக்கம் அற்றவனாயிருந்தால், -
நீதி இது, அநீதி இது, என்று அறியாதவனாயிருந்தால் - அவனுடைய
சொல்லைக் கேட்கக்கூடாது. கேட்பதனால் யாதும் பயன் இல்லை’’ என்று கூறுகிறது இந்நூல்.

 ‘‘தந்தையே ஆயினும்தான் அடங்கான் ஆகுமேல்
கொண்டு அடையான் ஆகல் இனிது.

தந்தையாயிருந்தாலும் சரி அவன் அடக்க மற்றவனாயிருப்பின், அவன்
சொல்லைக் கேட்டு நடக்காமல் இருப்பதே நலம்’’ (பா.8)

‘‘பிச்சை புக்காயினும் கற்றல் இனிதே (பா.2)

பிச்சையெடுத்தாவது கல்வி கற்றல் மிகவும் சிறந்தது.” இது அனைவரும்
போற்றக்கூடிய சிறந்த அறிவுரையாகும்.

‘‘பற்பலநாளும் பழுதுஇன்றிப் பாங்குடைய

கற்றலின் காழ்இனியது இல்.

பல நாட்களும் சோர்வில்லாமல் சிறப்பு நூல்களைக் கற்பதைவிட மிகச் சிறந்தது வேறொன்றும் இல்லை’’ இவை கல்வியின் சிறப்பை வலியுறுத்தின.

‘‘ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே

வேறு ஒரு உயிரின் உடம்பைத் தின்று, தன் உடம்பை வளர்க்காமல்
இருப்பதே சிறந்த அறம்’’ (பா.5) என்று சொல்லி மாமிச உணவைக் கூடாது
என்று மறுக்கின்றது.

‘‘கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே

கடன் வாங்கி உண்டு வாழாத முறையைக் கண்டறிந்து வாழ்தலே
சிறந்தது’’ (பா.11)

‘‘கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே

பணம் இல்லை என்று செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல்
விட்டுவிடக்கூடாது; கடன் வாங்கியாவது அவற்றைச் செய்து முடிப்பதே
நன்று’’(பா.43) இவைகள் கடன் வாங்குவதை மறுத்தும், அவசியமானால்
கடன் வாங்கலாம் என்றும் கூறின.

‘‘வினையுடையான் வந்து அடைந்து வெய்துறும் போழ்து
மனன் அஞ்சான் ஆகல் இனிது.

ஊழ்வினை தன்னை அடைந்து, அதனால் துன்பம் அடையும்
பொழுதும், உள்ளத்திலே அச்சமும் சோர்வும் இன்றி
உரிய கடமைகளைச் செய்வதே சிறந்தது’’ (பா.15) ஊழ்வினை ஒன்று உண்டு;
ஆயினும், உள்ளத்திலே ஊக்கமும், ஆண்மையும் உள்ளவர் அவ்வினையை
முறியடிக்கலாம்; என்று உரைத்தது இது.

‘‘ஊர் முனியா செய்தொழுகும் ஊக்கம் மிக இனிதே

தான் இருக்கும் ஊரார் வெறுக்கத் தகாத செயல்களைச் செய்து வாழும்
ஊக்கமே சிறந்தது; ஊரார் வெறுக்கும் செயல்களைச் செய்பவன் துன்பத்திற்கு
ஆளாவான்’’ (பா.34) இது ஊருடன் ஒத்துவாழ வேண்டும் என்று
அறிவுறுத்தியது.

 ‘‘எத்துணையும் ஆற்ற இனிது என்ப பால்படும்
கற்றா உடையான் விருந்து         (பா.39)

எந்த அளவிலும் மிகவும் பால் கறக்கும் கன்றோடு கூடிய பசுவை
உடையவன் செய்யும் விருந்தே சிறந்தது என்பர்’’

யார் செய்யும் விருந்து சிறந்தது என்பதை எடுத்துரைத்தது இச்செய்யுள்.
மற்றவர்கள் செய்யும் விருந்தைக் காட்டிலும் கறவைப் பசுவை
வைத்திருக்கின்றவன் செய்யும் விருந்தே சிறந்ததாம். நல்ல பால், நல்ல நெய்,
 நல்ல தயிர் இவை விருந்திற்கு வேண்டியவை. விலைக்கு வாங்கினால்
அவ்வளவு நல்லதாகக் கிடைக்காது. சொந்தமாக மாடிருந்தால்தான்,
கலப்பற்ற பால், தயிர், நெய் கிடைக்கும். ஆதலால் கறவைப்
பசுவையுடையவன் செய்யும் விருந்தே சிறந்த சுவையுள்ள விருந்தாகும் என்று கூறிற்று.

திருக்குறள்

இனியவை நாற்பதிலே திருக்குறளின் கருத்துக்கள் பல
காணப்படுகின்றன.

ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிது

என்பது ‘‘தன் ஊன் பெருக்கற்குத்தான் பிறிதின் ஊன் உண்பான், எங்ஙனம்
ஆளும் அருள்’’ என்ற திருக்குறளின் கருத்தைக் கொண்டதாகும்.

ஆற்றுந் துணையால் அறம் செய்கை
முன் இனிதே              (பா.7)

என்பது ‘‘ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே; செல்லும் வாய்
எல்லாம் செயல்’’ என்ற திருக்குறளின் கருத்தாகும்.

மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே       (பா.14)

என்பது ‘‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார், உயிர் நீப்பர்
மானம் வரின்’’ என்ற குறளின் கருத்தைக் கொண்டதாகும்.

நட்டார்க்கு நல்ல செயலின் இனிது எத்துணையும்
ஒட்டாரை ஓட்டிக் கொளல் அதனின் முன் இனிதே    (பா.18)

என்பது, ‘‘நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக்
கொளல்’’ என்ற திருக்குறளின் பொருளை அப்படியே எடுத்துரைக்கின்றது.
இவ்வாறே பல பாடல்களிலே திருக்குறளின் கருத்துக்கள் காணப்படுகின்றன.

இனியவை நாற்பதிலே உள்ள வெண்பாக்கள் அனைத்தும் சிறந்த
கருத்தமைந்தவை; படிப்போர் மனத்திலே அப்படியே பதியக் கூடியவை;
தமிழ் மக்கள் வாழ்க்கைச் சிறப்பைக் காண்பதற்கு இந்நூல் உதவி
செய்கின்றது; அவர்களுடைய ஒழுக்கச் சிறப்பை விளக்கி உரைக்கின்றது.

1 கருத்து:

K. சொன்னது…

each verse and its meaning is needed. where can I get it? bala