20/09/2011

வேளாண் வளர்ச்சியும் வேந்தர் வீழ்ச்சியும் - மே.து.ரா.

பண்டைய இலக்கியங்களான எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும், அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த நில உற்பத்தியின் வளர்ச்சிப் போக்குகளையும், அந்த வளர்ச்சிப் போக்குகளினூடே தோன்றிய மனித வாழ்கையின் உற்பத்தி உறவுகளையும், இவற்றுக்கு இயைபாக வடிவங்கொண்ட சமூக பொருளியக் கட்டமைப்புகளையும், இந்தக் கட்டமைப்புகளைப் பேணிக் காக்கின்ற ஆட்சிமுறைமைகளின் உருவாக்கத்தையும் வரையறுத்துக் கூறத்தக்கவாறு தெளிவாகப் பதிவு செய்திருக்கின்றன. இவற்றைப் பொது வகையில் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்:

1. உணவு திரட்டி உண்ணும் தொடக்க நிலை;

2. குடி-குழு வாழ்க்கையில் காடுகளை எரித்துப் பயிர் செய்துவந்த நிலை;

3. ஓரிடத்தில் குடியமர்ந்து நில உற்பத்தியை மேற்கொண்டபோது அதனையொட்டி மன்னர்கள் தோன்றிய நிலை;

4. நீர்வளத் திட்டங்களை அமைத்து விரிந்த நிலப் பரப்பை உற்பத்திக்குக் கொண்டுவரத் தொடங்கியபோது, அதைப் பேணவும் பெருக்கவும் வாய்ப்பாக நானிலங்களையும் தம்மிடத்தே உள்ளடக்கியதாக உருப்பெற்ற வேந்தர்களின் கால நிலை;

5. நில உற்பத்தி வளத்தால் ஆங்காங்கே செல்வமும் மேன்மையும் கொண்டவர்களாக மேலெழுந்து, வேந்தர்களின் ஆட்சிக்கும் ஆளுமைக்கும் அடங்காது தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, கிழான், கிழவோன் என்றெல்லாம் பெயர் பெற்றிருந்த நிலத்தலைவர்-வேளாண் உற்பத்தியாளர் கால நிலை.

குறுகிய நிலப் பரப்பைத் தம் ஆளுமைக்குள் கொண்டிருந்த மன்னர்களைவிட, வலிமையிலும் வல்லாண்மையிலும் ஆற்றலிலும் ஆக்கச் செயல்திறத்திலும் மேலானதொரு ஆட்சியமைப்பின் வேண்டலையே வேந்தர்கள் நிறைவேற்றித் தந்தார்கள். இந்ந வகையில் வளம் மிக்க நிலங்களைப் பகைவரிடமிருந்து காத்தும் நீர் வள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தும் வேளாண் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் பெரிதும் பின்புலமாக வேந்தர்கள் இருந்தார்கள். ஆனால், வேளாண் உற்பத்தி வளர்ச்சியும் அதனால் ஏற்பட்ட விரிவாக்கமும் பரந்து சென்றபோது, வேந்தர்களது ஆட்சிக்கும் ஆளுமைக்கும் அப்பால் நில வளத்திணைக் கொண்டிருந்த வேளாண் உற்பத்தியாளர்கள் வலுப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

வேந்தர்களது பேராற்றலின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, அவர்களது ஆட்சிக் கட்டமைப்பின் கட்டுப்பாடுகளைக் கடந்து வேளாண் நில விரிவாக்கத்தின் பரப்புகள் நெடுகக் கிடந்தன. இதனால், இத்தகைய நிலப் பரப்புகளைத் தம் படைவலிமை கொண்டு போரிட்டு வென்றாலும், அவற்றைத் தம் பிடிக்குள் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேந்தர்களால் இயலவில்லை. உற்பத்தி வளத்தால் நிலத் தலைவர்களாக வளர்ந்திருந்தவர்களை வெற்றி பெற வாய்ப்பில்லாதபோது, அவர்களது வளத்துக்கு அடிப்படையாக அமைந்திருந்த வேளாண் கட்டமைப்புகளை அழிப்பதையன்றி வேந்தர்களால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.

இந்தக் கட்டத்தில், புதிதாக வளம் பெற்ற நிலத்தலைவர்கள், தமது விளைநிலங்கள் அமைந்து கிடந்த எல்லைப் பகுதிகளின் ஆட்சியாளர்களாகவோ, பிற நில உற்பத்தியாளர்களிடம் திறை அல்லது இறை பெற்றவர்களாகவோ உருவாகிவிடவில்லை., அப்போது அவர்கள், நில உற்பத்தி வளத்தினைப் பெருக்குவதிலும் காப்பதிலுமே முனைப்புக் கொண்டிருந்தனர். இதனால், ஒரு கட்டத்தில் இவர்கள், வேந்தர்களைவிட வளம் கொண்டவர்களாகவும் செல்வம் மிகுந்தவர்களாகவும் ஏற்றம் கொண்டனர்.

இவ்வாறு நிலத்தலைவர்கள் முன்னேற்றம் அடைந்து, புகழ் பெறத்தக்க நிலையினை எட்டியிருந்ததைப் புறநானூற்றுத் தொகுப்பில் உள்ள பல பாடல்களில் காணமுடியும்.

''பசிப்பிணி மருத்துவன் இல்லம்'' (சிறுகுடி கிழான் பண்ணன், புறம்173) என்றும், ''உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின், இன்னே சென்மதி'' (வல்லார்கிழான், புறம் 181) என்றும், ''வருநர்க்கு வரையாது தருவன சொரிய'' (மல்லி கிழான், புறம் 381) என்றும், ''சேயை யாயினும் இவணை யாயினும், இதற்கொண் டறிஞை'' (கரும்பனூர் கிழான், புறம் 177) என்றும், ''காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை நெல்விளை கழனி அம்பர் கிழவோன்'' (புறம் 385) என்றும், ''தண்பல விழிதரும் அருவி நின், கொண்பெருங் கானம்'' (கொண்கானங்கிழான், புறம் 154) என்றும், ''வேலி ஆயிரம் விளைக நின் வயலே'' (பொறையாற்றுக் கிழான், புறம் 391) என்றும் பெருமை பெற்ற நிலத்லைவர்கள் போற்றப்படுகிறார்கள்.

இந்தப் பாடல்களில் காணப்படுகின்ற ஒரு போக்கினை நுணுகிப் பார்க்கவேண்டும். இங்கு நிலத்தலைவர்கள் ஆட்சியாளர்களுக்குரிய பண்பு நலன்களோடு பாடப்படவில்லை. குறிப்பாக, அவர்களது படை வலிமையின் சிறப்புகளும் போர்களில் பெற்ற வெற்றிப் பெருமைகளும் குறிப்பிடப்படாமையே தனித்துப் பார்க்கத்தக்கவையாகும். அவர்கள் ஆட்சியாளர்களாக மாறாததாலேயே படை வலிமையும் வெற்றிப் பெருமையும் பாடப்படவில்லை. ஆனால், இவர்களது செல்வமும் கொடையும் சிறப்பாகக் கூறப்படுகின்றன.

குடித் தலைவர்களாகவும் சீறூர் மன்னர்களாகவும் அரசர்களாகவும் இருந்த சிலரும் காலத்தின் வேண்டலை - வற்புறுத்தலை ஏற்று, தங்கள் குழுவினருடன் நில உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட்டு வேளாண் உற்பத்தியாளர்களாக - நிலத்தலைவர்களாக உருமாறியிருக்ககலாம். ஆயினும், வேளாண் உற்பத்தி முயற்சிகளும் அவை ஏற்படுத்திய உறவுகளும் வளங்களும் அத்தகையோரை ஆட்சியாளர் என்ற நிலையிலிருந்து அப்புறப்படுத்தி, உற்பத்தியாளர்களாகவே இனங்காணச் செய்திருக்கும்.

படைவேண்டுவழி வாள்உதவியும்

வினைவேண்டுவழி அறிவுஉதவியும் (புறம்179 : 6-7)

வேந்தர்களுக்குத் துணை புரிந்த நாலை கிழவன் நாகன் போன்றவர்களும் இருந்திருக்கின்றனர். இவர்கள் வேந்தர்களது வேண்டியபோது படை திரட்டித் தந்தும் தக்க அறிவுரை வழங்கியும் ஆக்க வகையில் உதவியிருக்கின்றனரேயன்றி, அவர்களுக்குக் கீழ்ப்பட்டுக் கிடந்தவர்களாகக் காட்டப்படவில்லை. அடுத்து வந்த இடைக் காலத்தில் வேளாளர் செய்த பணிகளையொட்டி இவை அமைந்திருப்பதும் இங்கு ஒப்ப நோக்கத்தக்கது. அதாவது, இடைக் காலத்தில் ஏற்பட்ட மாறுதல்களுக்கான அடித்தளம் அப்போது அமைந்துகொண்டிருந்தது என்பதே புலனாகின்றது. இத்தகைய வளமும் வளர்ச்சியும் கொண்டிருந்த அந்த நிலத்தலைவர்கள், அடுத்து வேந்தர்களுக்கு மேலானவர்களாகவும் ஏற்றம் கொண்டதில் வியப்போதும் இல்லை.

இதனால், வேந்தர்களுக்கு மேலான செல்வம் கொண்ட நிலத்தலைவர்கள், தங்களுக்கு ஒப்பானோராக இல்லாத வேந்தருக்குப் பெண் கொடுக்கவும் மறுத்தனர். இந்தப் போக்குகளை, புறநானூற்றுத் தொகுப்பில் இடம்பெற்றள்ள மகட்பாற்காஞ்சிப் பாடல்களில் (336- 355) காணப்படும் மகளிரை வேந்தருக்கு மணம் செய்துகொடுக்க மறுத்தல் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

கொற்ற வேந்தர் வரினும் தன்தக

வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் (புறம் 338:8-9)

வேந்துகுறை யுறவும் கொடாஅன் (புறம் 341 : 1)

புரையர் அல்லோர் வரையவள் இவள்எனத்

தந்தையும் கொடாஅன் (புறம் 343 :12-13)

செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி நிறல்அல் லோர்க்குத் தரலோ இல்என (புறம் 345 : 13-14)

என்றெல்லாம் வேந்தர் போன்றோரை வளத்திலும் புகழிலும் சிறப்பிலும் ஒப்பில்லாதோராகவே நிலத்தலைவர்கள் கருதினர். இதனாலேயே தங்கள் பெண்களைத் தங்களுக்கு இணையில்லாதோருக்கு மணம் செய்துதர மறுத்தனர்.

ஆனால், தங்களை உயர்வாகக் கருதிக் கொண்டிருந்த வேந்தர்களோ, நிலத்தலைவர்கள் தங்களுக்கு அடிபணியவேண்டும் என்று எதிர் பார்த்தனர் போலும். செல்வ வளம் நிறைந்திருந்த நிலத்தலைவர்கள் வேந்தர்களுக்குக் கீழ்ப்படிய முன்வரவில்லை.

நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்

கடிய கூறும் வேந்தே தந்தையும்

நெடிய அல்லது பணிந்துமொழி யலனே (புறம் 349 :1-3)

அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா (புறம் 354 : 1)

என்று வேந்தர்களுக்குப் பணிய மறுக்கும் வகையில் நிலத்தலைவர்கள் ஏற்றம் கொண்டிருந்தனர்.

வேளாண் உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டிருந்த புதிய நிலைமைகளாக இவை அமைகின்றன.

''வம்ப வேந்தர்'' (புறம் 345) என்று குறிக்கப்படுவதால், குடிப் பெருமை கொண்ட நிலத் தலைவர்கள், குடிப் பெருமையில்லாது புதிதாக எழுந்ததாகக் கொள்ளப்படும் வம்ப வேந்தர்களை ஏற்றுக்கொள்ளவில்€ல் என்ற கருத்து சில ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.ஆனால், இது பொருத்தமாகத் தோன்றவில்லை. ஏனெனில், வேந்தர்கள் புதிதாகத் தோன்றியோர் அல்லர். குடிவழி அமைப்பிலிருந்து உருவான ஆட்சியமைப்பு முறையின் வழியில் வந்தோரே வேந்தராக ஏற்றம் பெற்றனர். வேந்தர்கள் குடித் தலைவர்களையும் வேளிரையும் இன்ன பிற பகைவர்களையும் வென்று படிப்படியாகவே மேலெழுந்தனர். ஆகவே, புதிதாகத் தோன்றியோராக அவர்களைக் கொள்ளமுடியாது.

''வம்ப'' என்ற சொல்லுக்குப் ''புதிய'' என்ற பொருள் கூறப்படுவதைப் போன்றே, ''நிலையில்லாத'', ''குறும்பு'', அயலார்'' என்ற பொருள்களும் வழங்கப்படுகின்றன. புறநானூறு முதல் 269 பாடல்களுக்குக் கிடைத்திருக்கின்ற பழையவுரை, ''வம்ப'' என்ற சொல்லுக்குப் ''புதிய'' (புறம் 3, 77), ''நிலையில்லாத'' (புறம் 78,79 ) என்ற இரு பொருள்களைத் தருகிறது. ''குறும்பு'' (புறம் 287), ''புதிய'' (புறம் 325, 345), ''நிலையில்லாத'' (புறம் 78) என்ற மூன்று வகையான பொருள்களை ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்களும் குறிக்கிறார். ஆயினும், பத்துப்பாட்டுக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர், ''வம்பலர்'' (பட்டின. 249) என்ற சொல்லுக்குப் ''புதியவர்'' என்றே பொருள் கொள்கிறார். ஆனால், ''உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்'' (பெரும்பா. 76). ''ஆறுசெல் வம்பலர் காய்பசி தீர'' (பெரும்பா.365) ஆகிய இடங்களில் ''புதியவர்'' என்ற பொருளைவிட ''அயலவர்'' என்ற பொருளே பொருந்துகின்றது. அகநானூறுக்கு உரை கண்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் ''வம்ப'' என்ற சொல்லுக்குப் ''புதிய'' (அகம் 100, 190) என்று பொருள் கூறுகிறார். எனினும், ''வம்ப மோரியர்'' (அகம் 251) என்று வருமிடத்து, ''புதிய மோரியர்'' என்று குறித்ததைவிட, ''குறும்பு மோரியர்'' அல்லது ''அயலரான மோரியர்'' எனச் சுட்டியிருந்தால் இன்னும் பொருத்தமா இருந்திருக்கும். நற்றிணைப் பாடல்களுக்கு உரையாத்த பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யர் அவர்கள், ''வம்ப'' (நற் 126, 164, 298, 352) என்பதற்கு ''அயலவர்'' என்றே பொருள் கொண்டிருப்பதும் இங்கு நோக்கத் தக்கது.

மகட்கொடைப் பாடலில் வரும் ''வம்ப'' (புறம் 345) என்பதற்குக் ''குறும்பு'' அல்லது ''நிலையில்லாத'' எனும் பொருள் கொள்வதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது. பிற மகட்கொடைப் பாடல்களில் வரும் பொருளமைதிக்கும் இதுவே ஏற்றதாக அமைகின்றது. அத்துடன், மகளைப் பெற்ற மன்னன் அல்லது தந்தை தொல்குடியினராக இருப்பதைப் போன்று, வேந்தரும் முதுகுடியினராகவே கூறுப்படுகின்றனர்.

தொல்குடி மன்னன் மகளே முன்நாள்

கூறி வந்த மாமுது வேந்தர்க்கு (புறம் 353 :11-12)

குடிச் சிறப்பிலும் பழம் பெருமையிலும் இரு தரத்தாரும் ஒத்தவராகவே காணப்படுகின்றனர். ''ஒர்எயில் மன்னன் ஒரு மடமகள்'' (புறம் 338 :12) என்ற அளவில் அமைந்து, ''பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே'' ( புறம் 340 :9) என்று போற்றும்படி மகட்கொடைப் பெண்டிர் சிலர் மன்னர் குலச் சிறப்புப் பெற்றிருந்தாலும், பெரும்பாலான பாடல்களில், வயல்கள் நிறைந்த ''தண்பணை''க் கிழவோர்தான் (புறம் 341, 342, 351) தந்தையராக இருந்திருக்கின்றனர். வேந்தர்களைப் புறக்கணிக்கும்படியாக ஆங்காங்கே நிலத் தலைவர்கள் மேன்மை பெற்றுவிட்டார்கள் என்பதையே மகள் மறுப்புப் பாடல்கள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.

இந்த வேந்தர்கள் ''வேட்ட வேந்தன் '' (புறம் 336), ''கொற்ற வேந்தர்'' (புறம் 338), ''யானை வேந்தர்'' (புறம் 339), இரங்கு முரசின் கடுமான் வேந்தர்'' (புறம் 350), ''முரசின் வேந்தர்'' (புறம் 351), ''மாமுது வேந்தர்'' (புறம் 353), ''அரைசு தலை'' (புறம் 354) என்று பலவாறாகக் குறிக்கப்பட்டிருக்கின்றனரேயன்றி, ''வம்ப வேந்தர்'' (புறம் 345) என்று மட்டுமே விளிக்கப்படவில்லை. அடைமொழி இல்லாது ''வேந்தர்'' (புறம் 337, 341, 342, 347, 349) என்று மட்டும் சில இடங்களில் காணப்படுகின்றன. வேந்தர்கள் மட்டுமின்றி, வேறு பல மன்னர்களும் பிறரும் மகட்கொடை வேண்டி நின்றிருக்கிறார்கள் (புறம் 340, 342, 343, 354).

வேந்தர்கள் நால்வகைப் படைகளோடும் பிறர் வல்லாண்மையுடனும் உற்பத்தி தரும் வளமான நிலங்களை அடையும் எண்ணத்தில் போர்தொடுக்க முயன்றபோதெல்லாம், ''தந்தையும் நெடிய அல்லது பணிந்து மொழியலன்'' (புறம் 349). மகட் கொடைக்காக நடைபெற்ற போர்களில் அல்லது முயற்சிகளில் மகளைப் பெற்ற தந்தையரும் வேந்தர்களை வெற்றிகொண்டிருக்கிறார்கள் (புறம் 342). சில வேளைகளில், நிலத் தலைவர்கள் தோல்வியடைந்ததாகத் தெரிந்தாலும், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு, நில உற்பத்திக் கட்டமைப்புக்கள் அழிந்ததாக மட்டுமே பெரும்பாலும் இருந்திருக்கின்றது. மகட்கொடை கிடைக்காதபோது, அதாவது, அதன் வழியாக உற்றபத்தி நிலங்களைக் கைப்பற்ற முடியாதபோது, நீர்நிலைகளைச் சீரழித்தல், வயல்களைப் பாழாக்குதல், இவற்றால் ஊரினைப் பொழிவிழக்கச் செய்தல் என்பதே போரின் நோக்கமாக மாறியிருக்கின்றது.

மூவேந்தர்களும் பிறரும் பெரும் படைகளுடன் வளமான நிலங்களைக் கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டபோது, நிலத்தலைவர்கள் பெரும்பாலும் படைகொண்டு அவற்றை எதிர் கொண்டதாகத் தெரியவில்லை. ஏனெனில், நிலத் தலைவர்களிடம் நிலையான படை இருக்கவில்லை. உற்பத்தி வாய்ப்புகளைக் காக்கும் அளவுக்குக் காவலர்கள்தாம் இருந்திருக்கவேண்டும். ஆனால், நில உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பிற சுற்றத்தாரும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள் (புறம் 341,354). இத்தகைய போர்களில் இறுதி வெற்றி வேளாண் உற்பத்தியாளருக்குத்தான் கிடைத்தது. காலத்தின் வேண்டலைப் புரிந்துகொள்ளாமல், நில உற்பத்தியாளர்கள் மேல் படைகொண்டு வந்த வேந்தரும் பிறரும் தோல்விகளையே தழுவினார்கள். ஏனெனில், போர் வழியாக வேந்தர்களோ, பிறறோ மகட்கொடை பெற முடிந்ததாகவோ, விளை நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டதாகவோ பாடல்களில் கூறப்படவில்லை.

நிலத்தலைவர்கள் ஆட்சியுரிமை கொண்டவர்களாக இருக்கவில்லை. அதாவது, அவர்கள் தொல்குடியினராக இருந்தாலும், தங்கள் குடியினரைக் காப்பவர்களாகவோ, இதனால் நில உற்பத்தியில் மரபுரிமை என்ற பெயரில் பங்கு பெறும் வாய்ப்புக் கொண்டவர்களாகவோ தெரியவில்லை. ஏனெனில், இவர்கள் வேளாண் உற்பத்தியாளர்கள். உற்பத்தி வளத்தில் மேலெழுந்தவர்கள். மாறாக, வேந்தர், மன்னர், அரசர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட மற்றவர்கள், எந்த வகையிலும் தாமே தம் முயற்சியில் நேரடியாக நில உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்களாக இருக்கவில்லை. ஆனால், வேந்தர், மன்னர், அரசர் போன்றோர் மரபு வழியினால், ஆட்சியுரிமையும் மக்களைப் பகைவரிடமிருந்து காக்கும் கடமையும் கொண்டிருந்தார்கள். இதனாலேயே தங்களுடைய ஆளுமைக்கு உட்பட்டிருந்த பகுதிகளில் இருந்த நிலங்களில் விளைந்த உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பங்கு பெறுபவர்களாகவும் இருந்தார்கள். இந்த வேறுபாடுகளை மகட்கொடைப் பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

''தொல்குடி மன்னன் மகள்'' என்றும் ''ஒர்எயில் மன்னன் மடமகள்'' என்றும் '' பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந்தனன்'' என்றும் கூறப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், இவர்கள், மன்னர் என்ற நிலையிலிருந்தாலும், நில உற்பத்தியாளர்களாகவும் மாறிவிட்டமையை மனத்தில் கொள்ளவேண்டும். சீறூர் மன்னராக இருந்து, தமது குடியினருடன் ''தண்ணடை'' பெற்று நில உற்பத்தியாளர் நிலைக்கு உயர்ந்திருக்கலாம்; அல்லது வேளாண் உற்பத்தி முயற்சிகளின் படிநிலை வளர்ச்சிகளால் இத்தகைய அடுத்த கட்டத்துக்கு முன்னேறி வந்திருக்கலாம். இந்த மூன்று இடங்களிலும் குடிப்பெருமை, ஆளுமை, நிலப்பரப்பு, போர்த்திறம். கொடைச் சிறப்பு ஆகியன முன்னிலைப்படுத்தப்படாமல், மன்னர் என்பது விளிச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டிருப்பதை உணரலாம். மன்னர் என்ற நிலையில் தந்தை இருந்ததால் மகட்கொடை மறுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஏர்பரந்தவயல் நீர்பரந்தசெறுவின்

நெல்மலிந்த மனைப் பொன்மலிந்தமறுகின்

படுவண்டு ஆர்க்கும் பல்மலர்க் காவின்

நெடுவேள் ஆதன் போந்தை அன்ன

பெருஞ்சீர் அருங்கொண் டியளே கருஞ்சினை

வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்

மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்

கொற்ற வேந்தர் வரினும் தன்தக

வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண்தோட்டுப்

பிணங்குகதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று

உணங்குகலன் ஆழியின் தோன்றும்

ஒர்எயில் மன்னன் ஒருமட மகளே (புறம் 338)

இங்கு மன்னன் மடமகளாக விளிக்கப் பட்டிருந்தாலும், ஏர் உழுத வயல்களையும் நீர்நிறைந்து நிற்கும் கழனிகளையும் நெல் நிரம்பிய இல்லங்களையும் பொன் நிறைந்த தெருக்களையும் மொய்க்கின்ற வண்டுகள் ஒலிக்கும் பல மலர்களையுடைய சோலைகளையும் உடைய நெடுவேள் ஆதன் என்பவனது போந்தை என்ற ஊரினைப் போன்று பெரும் செல்வம் உடையவளாகவே மன்னன் மகள் விவரிக்கப்படுகிறாள்.

இவற்றுக்கு மாறாக, வேப்ப மாலை, ஆத்தி மாலை, பனை மாலை அணிந்தவராக மட்டுமே சேர, சோழ, பாண்டியர் கூறப்படுகின்றனர். அன்றைய நிலையில், அவர்தம் ஆளுமை குறைந்துவிட்டதால், செல்வமும் சிறுத்திருக்கலாம். அதனால்தான், தன் தகுதிக்கு ஏற்றவர்களாக அமைந்து, தன்னை வணங்கிப் கேட்போரையன்றிப் பிறருக்கு மகளைப் பெற்ற தந்தை மகட்கொடை தரமாட்டான் என்று பாடல் விவரிக்கிறது. பெண்ணுக்கு - பெண்ணைப் பெற்றவர்களுக்கு - மன்னனுக்கு உரிய செல்வமாக வள வயல்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றன; வரி பெறும் உரிமை மட்டும் கொண்ட நிலப்பரப்புகளை உடையவர்களாக இவர்கள் இந்தப் பாடலில் காட்டப்படவில்லை.

அன்று ஏற்பட்டிருந்த வளர்ச்சி நிலையை அறிய மற்றொரு எடுத்துக்காட்டையும் இந்தப் பாடல் வழங்கியிருக்கிறது. இப்பாடலில் குறிக்கப்பெறும் நெடுவேள் ஆதன் என்ற மன்னனும், ஆளுமைச் சிறப்பால் பெற்ற செல்வத்தை உடையவனாக இல்லாமல், வன வயல்களை உடையவனாகவே காட்டப்பெறுகிறான். அன்றைய நிலையில், சீறூர் மன்னர்களும் பிற அரசர்களும் பெரிதும் நில உற்பத்தி நிலைக்கு மாறியிருந்தார்கள் என்பதை இவை புலப்படுத்துகின்றன.

ஆனால், வேந்தர்கள் அந்த நிலைக்கு மாறாததால், வளம் குறைந்து, குடிப்பெருமை, போர்த்திறம் ஆகிய பழமைச் சிறப்புகளில் மட்டுமே மூழ்கிக் கிடந்தார்கள். இதனால், இவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை போலும்.

பெரும் நிலப்பரப்பை ஆள்பவர்களாக இருந்தாலும், வாளினை எடுக்காமல் - போர்புரியாமல் சென்று கேட்டால் மகளைப் பெற்ற தந்தை அகம் மகிழ்வான் என்று புறநானூறு இதை மேலும் தெளிவுபடுத்துகிறது.

.......................மண் ஆள் செல்வராயினும் எண்ணார்

வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றா அர்

வரல்தோறு அகம்மலர (புறம் 337 :2-4)

அத்துடன், வேந்தர் செல்வ நிலை குலைந்ததையும் மகளின் தந்தையர் வளம் உயர்ந்ததையும் மற்றொரு பாடலில் காணலாம்.

வேந்து குறையுறவும் கொடான்.................

..........................................................................

பெருங்கவின் இழப்பது கொல்லா

மென்புனல் வைப்பின்இத் தண்பனை ஊரே (புறம் 341)

இங்கு வேந்தர்கள் தம் உயர் நிலையிலிருந்து குறைந்துவிட்டதால் பெண் கொடுக்க மறுப்பது புலனாகிறது. அத்துடன், இந்தப் பாடலில், தந்தையின் வளமான ஊரும் கூறப்பட்டிருக்கிறது. பெண்ணைப் பெற்ற தந்தையின் நில வளத்தைவிட வேந்தரது செல்வ நிலை குறைந்துவிட்டதையே இப்பாடல் காட்டுகிறது. அதனால்தான்,

திருநயத் தக்க பண்பின்இவள் நலனே

பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே

.....................................................................................

தண்பணைக் கிழவன்இவள் தந்தையும் வேந்தரும்

பெறா அ மையின் பேரமர் செய்தலின் (புறம் 342: 5-12)

பெண்ணை மகட்கொடையாகப் பெற இயலாத வேந்தர்கள் போர் தொடுத்து நின்றார்கள். வேந்தர்கள் முழுமையாகச் செல்வம் அழிந்து சீர்கெட்டு நின்றார்கள் என்றும் கூறிவிடமுடியாது. புதிய வள வயல்களையுடைய தண்பணைக் கிழவரோடு ஒப்பிடுகையில் வேந்தர்களின் செல்வம், ஆட்சியுரிமை, படை வலிமை, குடிப்பெருமை ஆகியன பெரிதாகத் தெரியவில்லை.

மீன்நொடுத்து நெல்குவைஇ

மிசைஅம்பியின் மனைமறுக்குந்து

மனைக்குவைஇய கறிமூடையால்

கலிச்சும்மைய கரைகலக்குறுந்து

கலம்தந்த பொற்பரிசம்

கழித்தோணியான் கரைசேர்க்குந்து

மலைத்தாரமும் கடல்தாரமும்

தலைப்பெய்து வருநர்க்குஈயும்

புனல்அம் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்

முழங்குகடல் முழவின் முசிறி அன்ன

நலம்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்

புரையர் அல்லோர் வரையலள் இவள்எனத்

தந்தையும் கொடாஅன் ஆயின் (புறம் 343 : 1-13)

என்று கூறப்படுமளவு, ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களுடன் கூடிய, விழுப்பொருள் கொடுத்து மகட்கொடை கேட்க முயன்றபோதும், வளவயல்களுக்கு அவை ஈடாகாது என்று ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், மரத நிலங்களோடு சேர்த்து விழுப்பொருள் கொடுத்தால்தான் பெண் பெற முடியும் என்றும் இல்லையெனில் பண்பில்லாத முறையற்ற போர்தான் வழியென்றும் புலவர் அறிவுறுத்துகிறார். அதாவது, மருத நிலம்தான் பெரிதும் வேண்டப்படுகிறது; உயர்வாகக் கருதப்படுகிறது.

செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை

செறிவளை மகளிர் ஓப்பலின் பறந்தஎழுந்து

துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு

நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ

புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து

பண்புஇல் ஆண்மை தருதல் ஒன்றோ

இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே (புறம் 344 : 1 -7)

பெண்ணின் தந்தைக்கு இயைபான மருத நிலத்தினை விழுப்பொருளாக வழங்கிப் பெண் கேட்டல் அல்லது பண்பற்ற போரினைத் தொடங்குதல் என இரண்டு வழிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலைக்கு வேந்தர்கள் தள்ளப்பட்டனர். ஆனால், வேந்தர்களோ போரினைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியதாயிருந்தது. ஏனெனில், பெண்ணுடைய தந்தைக்கு ஒப்பான விழுப்பொருள் தருமளவுக்கு வேந்தர்களிடம் மருத நிலங்கள் இருக்கவில்லை. ஒரு வேளை, படை வலிமையினால், நிலத்தலைவர்களை வென்றுவிடமுடியும் என்றும் எண்ணியிருக்கலாம். அல்லது, வேந்தர் என்பதால் பெண்ணைக் கேட்கும்போது கொடுத்தாக வேண்டும் என்று ஆட்சியுரிமையின் முன்னைய வழமைகளை வலியுறுத்துவதாகவும் இது இருக்கலாம். ஆனால், வளர்ந்துவிட்ட நிலையில் இவற்றையெல்லாம் ஏற்கக்கூடிய நிலையில் இவற்றையெல்லாம் ஏற்கக்கூடிய மனநிலையில் நிலத்தலைவர்கள் இருக்கவில்லை.

இங்கும்கூட, செல்வம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது என்று எடுத்துக்கொள்ள முடியாது. மகட்கொடை வேண்டுவோர் வாரிக் கொடுத்தாலும், பெண்ணிண் பிறந்த இல்லத்துக்கு ஏற்றவாறு தகுதி பெற்றிருக்க வில்லையென்றால் அது முழுமையாக மறுக்கப்பட்டது.

வந்தோர் பலரே வம்ப வேந்தர்

.................................................................

செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி

நிரல்அல் லோர்க்குத் தரலோ இல்என (புறம் 345: 7-14)

என்று, ஒத்த உயர் நிலை இல்லாதவர்களுக்கு, அவர்கள் வேறு வகையில் செல்வம் கொண்டவர்களாக இருந்தபோதும் பெண் கொடுக்க முன்வரவில்லை என்பது தெளிவாகவே கூறப்படுவதைக் காணலாம்.

இப்பாடலில் செல்வம் எனப்பட்டது வள வயல்கள்தாமா என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், வள வயல்களாக இருப்பினும், பெண் இல்லத்தார்க்குப் பொருந்துவதாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

......................................நொடை நறவின்

மாவண் தித்தன் வெண்ணெல் வேலி

உறந்தை யன்ன உரைசால் நன்கலம்

கொடுப்பவும் கொளாஅன் நெடுந்தகை (புறம் 352 :8-11)

வேந்தர்கள் பெண் கேட்டு நிலத் தலைவர்களிடம் வேண்டி நின்றது ஏன் என்பதையும் பார்க்கவேண்டும். பெண்வழி வாழ்க்கை முறையில், பெண்ணை மணக்கும்போது நிலத்தலைவர்களிடம் இருந்த நிலங்கள் யாவற்றையும் அடையமுடியும் என்று எண்ணியிருக்கவும் வாய்ப்புண்டு. இது மேலும் ஆய்வுக்குரியது என்றாலும், ''பெருஞ்சீர் அருங்கொண்டியள்'' (புறம் 338 : 5) என்று பெண் கூறப்படுவது நோக்கத்தக்கது. கொள்ளைப் பொருளாகவோ, கொள்ளப்படும் பொருளாகவோ தான் பெண் கருதப்படுகிறாள். வேந்தர்களின் நோக்கம் பெண்ணை மணந்துகொள்வதாக இருக்கவில்லை. பெண் வழியாகக் கிடைக்கும் வளநிலங்களைக் கொள்ளையாகக் கைப்பற்றுவதாகவே இருந்திருக்கிறது.

பெண் வேண்டி நின்றோர் வேந்தர்களாக இருப்பினும், மன்னர்களாக இருப்பினும், வேறு பலராக இ.ருப்பினும் அவர்களது பெயர்கள் எதுவும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள மகட்கொடைப் பாடல்களில் குறிப்பிடப்படவில்லை.

பொதுவாக வேந்தர், மன்னர், அரசர் போன்றோரின் பெருமைகளைப் பட்டியலிட்டுப் புகழுகின்ற புலவர்தம் பாடல்களில் ஏன் வேந்தர்களது பெயர்களைக் குறிக்கவில்லை என்பது புரியாததன்று. குடிப் பெருமையும் படை வலிமையும் இருந்தாலும்கூட, அவர்களின் ஆளுமை மறைந்துவிட்டது. இதற்கான காரணியாக இருக்கலாம். அதே வேளையில், பெண்ணுடைய தந்தையரின் பெயர்கள் குறிக்கப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது. ஆட்சியாளர்களாக இல்லாத வளம் படைத்த இவர்களைப் போன்றோரிடம் பரிசிலுக்காகச் சென்றபோது புலவர்கள் பெயர் குறித்துப் பாடியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், இங்கு இரு திறந்தார் நிலைமைகளையும் அன்றைய புதிய வளர்ச்சிப் போக்குகளையொட்டி முன்னிறுத்தியிருந்ததால் பெயர்கள் வேண்டப்படவில்லை போலும்.

வேந்தர்களோடு நெருங்கிய உறவு கொண்டாடிய கபிலர், பரணர் போன்றோரும் அரிசில்கிழார், மதுரை மருதன் இளநாகனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் போன்ற பெரும் புலவர்களும்கூட மகட்கொடைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இருந்தாலும், இவர்கள், நடைமுறை நிலைமைகளை எடுத்துக் காட்டியதோடு நிறுத்திக் கொண்டார்களேயன்றி, தண்பனைக் கிழவருக்கு வேந்தர் மேலானவர் என்றோ, நிகரானவர் என்றோ, மகட்கொடை தரலாம் என்றோ, தருவது இயைபானதுதான் என்றோ எக்கருத்தையும் முன்மொழியவில்லை. வேந்தரை மேன்மைப்படுத்தி, பெண் கொடுக்கலாம் என்றோ. தண்ப€ணைக் கிழவரின் தகுதிக்குப் பெண் கேட்க வேண்டாம் என்றோ அறிவுறுத்தும் பணியை இருவரிடத்தேயும் மேற்கொள்ளவில்லை. இதுவே கபிலர், பரணர் போன்ற புலவர்களின் இயல்புகளுக்கு மாறாக -முரணாக அமைந்துள்ளது.

அக்காலத்தில், ஏற்றுமதி இறக்குமதி வணிகம் சிறப்புற நடைபெற்றதால், அரசுக்கு வரியாக வருவாய் பெருமளவில் கிடைத்துவந்தது. இருந்தாலும், வேளாண் உற்பத்தியினால் வரியாகவும் திறையாகவும் கிடைத்த வருவாய அதைவிட மிகுந்து வேந்தர்களின் செல்வ வளத்துக்கு முதன்மைக் காரணியாக அமைந்தது. அதனால்தான், வருவாய் தரக்கூடிய வள நிலங்களைத் தம் ஆளுகைக்குள் கொண்டுவர வேந்தர்கள் பெருமுயற்சி மேற்கொண்டனர். ஆனால், நிலத் தலைவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டவுடன், வரியாகவும் திறையாகவும் கிடைத்துவந்த நில வருவாய் வேந்தருக்குக் கிடைப்பது தடைபட்டது. அவர்களை அச்சுசுறுத்தவும் பணிய வைக்கவும் ஆளுமைப்படுத்தவும், இவற்றின்வழி வரி - திறை பெறவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாகவே மகட்கொடை பயன்பட்டிருக்கலாம்.

தொடர்ந்து வேளாண் உற்பத்திக் கருவிகளின் மேம்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றம், நீர்பாய்ச்சு முறைகளின் வளர்ச்சி, பட்டறிவுப் பயன்பாடு, மக்களின் விடாமுயற்சி ஆகியன நிலப்பரப்பளவில் விரிவாக்கத்தை ஏற்படுத்தித் தேவையை எஞ்சியிருக்கும் உற்பத்தியைக் கொடுத்தன. உணவுப் பொருட்களில் கிடைத்த இந்த எஞ்சிய உற்பத்திதான் - மிகை உற்பத்திதான் - உபரி உற்பத்திதான் அன்றைய மானிட வாழ்வில் பல சமூக பொருளிய மாற்றங்களுக்கு வழியமைத்துக் கொடுத்தது எனலாம். தமது பயன்பாட்டுக்காக உற்பத்தி, தங்கள் குழு - குடித் தேவைகளுக்கான உற்பத்தி என்ற நிலை மாறி, விற்பனைக்காக உற்பத்தி என்ற புதிய அடுத்த கட்ட நிலை உருவாகத் தொடங்கியது.

இந்த மாற்றங்களெல்லாம், சங்க காலத்தில் இறுதியில் தொடங்கி, பல்லவர் ஆட்சிக் காலத்தின் தொடக்கம் வரை படிப்படியாக நடந்தேறின. இந்தப் படிநிலை வளர்ச்சிகளால், புதிய வேளாண் பொருளியல் செம்மை பெற்றதையும், அந்தச் செம்மையினால், நில உற்பத்திப் பகுதிகளில், பெரிதும் குழு வாழ்க்கை முறை குலைந்து, புதிய சமூக-பொருளியக் கட்டமைப்புகள் தோன்றி வந்தததையும் காணலாம். நில உற்பத்திப் பகுதிகளில் வளமையும் வாய்ப்பும் மிக்க பகுதியினர் தோன்றியதால், இவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கின்ற வழியும் வல்லமையும் வேந்தர்களிடம் இல்லாது போயிற்று.

புதிய நிலப் பகுதியினரின் தோற்றத்தினால், அப்போது இருந்த மூவேந்தர்கள் செல்வாக்கிழந்தது மட்டுமின்றிச் செயலிழந்தும் போயிருக்கலாம். அல்லது, மூவேந்தர் முன்பு செல்வாக்குப் பெற்றிருந்த பகுதிகளில் முழுமையாக இல்லாதும் போயிருக்கலாம். ஒரு வே€ளை இருந்திருந்தாலும், பெயருக்குச் சிறியதொரு பகுதியைக் கொண்டவர்களாகவோ, ஆட்சி அதிகார மற்றவர்களாகவோ, செல்வாக்கற்றவர்களாகவோ நீடித்திருக்கலாம். இவை யாவற்றுக்கும் மாறாக, வேந்தர்களின் செல்வாக்கு பகுதிகளுக்கு அப்பால் - வேந்தர்களின் ஆளுமைப் பகுதிகளுக்கு தொலைவில் - வேந்தர்களின் படை வலிமை எட்டாத வெளிப்பகுதிகளுக்கு வேளாண் விரிவாக்கம் பரந்து சென்றடைந்துவிட்டதால், அங்கு வலுப்பட்டிருந்த நிலத் தலைவர்களை அடக்கியாளக்கூடிய திறத்தினை மூவேந்தர்கள் இழந்திருக்கலாம். ஆனாலும்கூட, வேந்தர் ஆட்சி முறைமைக்கு மாற்றாக, புதிய நில உற்பத்திச் சக்திகளைப் பல வகையானும் ஒன்றிணைக்கின்ற ஓர் அரசமைப்பு முறைமை உடனடியாக அப்þ‘து தோன்றியிருக்கவில்லை. ஆட்சியமைப்பு முறைமை தோன்றியிருக்காவிட்டாலும், அப்போதைய பொருளிய வளர்ச்சியும் சமூக அசையவியக்கங்களும், தமிழக வரலாற்றின் சிறப்பு மிக்க காலப் பகுதிகளில் ஒன்றாக அக்காலகட்டத்தை நிலைபேறடையச் செய்திருக்கின்றன என்பதையும் மறந்துவிட முடியாது.

வேளாண் உற்பத்தி வளர்ச்சியின் விரிவாக்கத்தால் பரந்து கிடந்த நிலப்பகுதிகளை ஒன்றிணைத்து ஆளுமை செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் அன்று உருவாகாதிருந்தனர் என்பது உண்மைதான். இப்பணிகளைச் செய்யக்கூடியவர்களாக சேர, சோழ, பாண்டியராகி மூவேந்தர் மேன்மை பெற முடியாதிருந்தபோது, ஒரு வகையிலான வெற்றிடமும் ஏற்பட்டிருந்தது.

மூவேந்தரைவிட வளமும் வல்லமையும் பெற்றிருந்ந புதிய நிலத் தலைவர்கள் வேளாண் உற்பத்திப் பகுதிகளில் முடங்கிவிட்டிருந்ததால், அவர்களாலும் இந்த வெற்றிடத்தை நிறைவு செய்ய முடியவில்லை. வேளாண் உற்பத்தி வளத்தில் திளைத்திருந்த புதிய நிலத் தலைவர்கள், வேளாண் உற்பத்தியினை மேலும் பெருக்கி வளம் பெற விழைந்தார்களேயன்றி, வரி, பெறுவதன் வழியாக மட்டுமே செல்வம் பெறுவதை நாடவில்லை. விரிந்து கிடந்த வேளாண் உற்பத்திப் பகுதிகளை இணைத்து ஆளமை செய்ய முடியக்கூடிய நிறுவன வலிமையும் அவர்களிடம் அப்போது இருந்திருக்க இயலாது.

அத்துடன், அவர்களைப் போன்றே வேளாண் உற்பத்தி வளத்தில் மேலெழுந்திருந்த புதிய நிலத் தலைவர்கள் அடுத்தடுத்து நிலை பெற்றிருந்தார்கள். ஒருவருக்கொருவர் பூசலிட்டு - போரிட்டுத் தங்கள் உற்பத்தி வளத்தினைச் சீரழித்துக்கொள்ள அவர்கள் எவருமே முன்வரலில்லை. வேளாண் உற்பத்திக்கு வாய்ப்பான பொது அமைதியினையே அவர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனாலும், அவர்கள் தங்கள் வேளாண் உற்பத்திப் பகுதிகளில் கோலோச்சுவோராக அமையாவிட்டாலும், சமூக-பொருளியப் போக்குகளைக் கட்டுப்படுத்துவோராக வளர்ந்து வந்தனர். ஆனால், அப்போது குழு வாழ்க்கை முறிவில் தோன்றிய புதிய சமூக-பொருளியக் கட்டமைப்பு முழு அளவில் திரட்சி பெறாமலேயே இருந்தது.

உண்மையில், இக்காலகட்டம், குழு வாழ்க்கை முறையிலிருந்து நிலவுடைமை அமைப்பு முறைக்கு மாறிக்கொண்டிருந்த இடைநிலைக் காலப் பகுதியாகும்.

நில உற்பத்தியில் பங்கு என்ற வகையில் வரி பெறும் ஆட்சியுரிமையுடன் இணைந்த அதிகார ஆளுமையைக் காட்டிலும், உற்பத்தி வயல்களை உடைமையாகக் கொண்ட செல்வ வளத்தின் சமூக பொருளிய விழைந்தனர். இதனைக்கூட, அன்றைய காலமும் களநிலைச் சூழல்களும் அவர்கள் மேல் திணித்தண என்பதுதான் உண்மை.

அன்றைய நிலையில், சங்க இலக்கியங்களின் வாயிலாக இரண்டு அடிப்பமைப்படைப் போக்குகளைக் காண முடியும். ஒன்று, அப்போது நிலங்கள் விற்பனைப் பெருள்களாக மாறிவிடவில்லை. மற்றது, நிலங்களைப் பிறருக்கு உற்பத்திக்குக் கொடுத்து, அதன் பயனில் பங்கு பெறுகின்ற உழுவித்துண்போர் (இன்றைய பொருளில் குத்ததைக்குத் தருவோர்) தோன்றிடவிடவில்லை. அக்காலத்தின் சமூக-பொருளியக கட்டமைப்பினை இறுதி செய்தற்கு இந்த இரு கூறுகளும் சிறப்பாக நோக்கத்தக்கன.

நன்றி: தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2007

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக