முன்னுரை
நாட்டிலக்கியம் மக்கள் இலக்கியம். அவர்களின் இன்பம், துன்பம், உறவுநிலை, பொருளாதாரம், உணர்வு ஆகியயைவகளின் வெளிப்பாட்டு ஊடகமாக நாட்டிலக்கியம் விளங்குகின்றது.
தற்காலத்தை புதுக்கவிதை, நாவல், சிறுகதை ஆகிய இலக்கியங்களின் காலம் எனலாம். அவற்றுள் நாவலே மிகுதியாகப் பேசப்படுவதாகவும் பரபரப்பு ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அத்துணை அளவுக்கு நாட்டில் நாவல் இலக்கியம் பெருகியுள்ளது. நாவல்களில் நாட்டிலக்கியத் தாக்கம் மண்ணின் மணத்தோடு கலந்து வீசுகிறது. இது இயல்பானதோர் தாக்கமே ஆகும். அதனை இக்கட்டுரை ஆராய்கிறது.
தமிழ் நாவல் வளர்ச்சி
தமிழில் முதல் நாவல் 1876-இல் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால், ''பிரதாப முதலியார் சரித்திரம்'' என்ற பெயரில் எழுதப்பட்டது. பின்னர் 1896-இல் இராஜமய்யரால், ''கமலாம்பாள்'' சரித்திரமும் 1898-இல் மாதவையாவால் ''பத்மாவதி'' சரித்திரமும் படைக்கப்பட்டன.
நடேச சாஸ்திரி தி.ம. பொன்னுசாமிப்பிள்ளை. வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி போன்றோர் எழுதி வந்தனர். தொடர்ந்து வ.ரா. காசிவேங்கடரமணி, கல்கி, தேவன், அகிலன், மு.வ.ஜெயகாந்தன், ஜானகிராமன், நா.பார்த்தசாரதி ஆகியோரும் நாவல்களை எழுதினர். இன்று பல புதிய எழுத்தாளர்கள் குறிப்பாக ஜெயமோகன் போன்றோரும் சிறந்த நாவல்களைப் படைத்தளிக்கின்றனர்.
வட்டார நாவல்களும், பாமர சமுதாயத்தைப் படம் பிடிக்கும் நாவல்களும் நாட்டிலக்கியச் செல்வாக்கினை மிகுதியாகப் பெற்றுள்ளன.
பிரதாப முதலியார் சரித்திரம்
தமிழின் முதல் நாவலான இதில் பல கதைகள் நூற்றுக்கணக்கில் இடம் பெற்றுள்ளன. இவை பல நாட்டுப்புறக் கதைகளாக உள்ளன. ''ஒன்பது உருவங்களின் கதையும்'' (ப.72), ''அரபு தேசத்து ஆயிரம் இரவு கதையும்'' (ப.130) ''ஆனைக்கு மணி கட்டிய கதையும்'' (ப.89) ''குரங்கு வழக்கு தீர்த்த கதையும்'' (ப.296) கூறப்படுகின்றன.
இராமாயணக் கூத்து கதை இடையில் சம்பவமாக வருகின்றது. ''பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு'' (பக்-163)
''அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன்
அம்மியை உடைத்தது'' (ப-260)
போன்ற பழமொழிகளும் இந்நாவலில் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு அத்தியாயத்தின் பெயரே ''இம்மை மறுமை பற்றிய விடுகதை'' என்று அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்.
''இங்குண்டு அங்கில்லை அங்குண்டு இங்கில்லை
இங்குமுண்டு அங்குமுண்டு இங்குமில்லை அங்குமில்லை"
என்ற ஒரு விடுகதையைப் போடுகிறார். அதற்கு விடை ''இம்மை மறுமை'' அதாவது பிறப்பு மறுபிறப்பு ஆகும். இந்நாவல் ''மங்களம் பாடுதல்'' போல ''படிப்போர் நலம் பெறுவர்' என வாழ்த்தி முடிவதும் நாட்டிலக்கியமாகிய வில்லுப்பாட்டின் தாக்கமேயாகும்.
ராவ்பகதூர் சிங்காரம்
கொத்தமங்கலம் சுப்புவின் இந்நாவலில் அவரின் பாடல்களைப் போலவே நாட்டிலக்கியத் தாக்கம் மிகுந்துள்ளது.
மஞ்சு விரட்டும்போது தெம்மாங்கு பாடுவதாக ஒரு பாடல் வருகிறது.
''தொத்த மாடும் வத்தமாடும்
துவண்டு நிக்குதடா
தொட்டித் தண்ணியை நினைச்சுட்டு
வாயை நக்குதடா'' (பக்.47)
என்ற பாடலில் எள்ளல் சுவை மிக்கு நையாண்டி நடை புலப்படுகிறது. ஒரு பெண்ணின் மனநிலையைப் படம் பிடிப்பதாக,
''ஊருக்கு மேக்காலே ஊமைப் புத்தூர் - அங்கே
ஒருத்தர் வீட்டிலே பாலெருமை
காய்ச்சின பாலும் கசக்குதென்பாள் - நல்ல
கட்டித் தயிரும் புளிக்கு தென்பாள்'' (பக் 309)
என்ற ஒரு பாடலும் நாடகப் பாடல்களும் இந்நாவலில் நிறைந்துள்ளன.
சட்டி சுட்டது
இந்நாவலில் ஆர்.சண்முகசுந்தரம் எழுதியுள்ளார். நாவலில்,
''ஒண்ணாகப் பொறந்தவங்க
ஒரு முலைப்பால் உண்டவங்க
கூடப் பொறந்தவங்க
கூட்டுப் பால் உண்டவங்க''
''பழமை படிச்சவங்க
பண்டிதத்தால் வெண்ணவங்க - உங்க
பழமை படிக்கலியே
பண்டிதங்க வெல்லலியே''
என்று குப்பமூக்கன் ஒப்பாரிப் பாடுகிறான். இப்பாடல்கள் நாட்டுப்புறங்களில் பாடப்படுபவை. இவை கையறுநிலையும், அவலச்சுவையும் மிகுந்துள்ளன. இது கொங்கு மாவட்ட வட்டார வழக்குகள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகளைப் படம்பிடிக்கும் நாவலாகும்.
தேவன்
கல்யாணியின் நாவலில் ஒவ்வோர் அத்தியாயம் தொடங்கும் போது ஒரு கதைப்பாடல் உள்ளது. இது இராஜா தேசிங்கு கதைப்பாடல் உள்ளது.
''கலைத்தல் கதம்பி எழும்பினானையா ராசா தேசிங்கு
இடது காலுக்குச் சிமிட்டாக் கொடுத்தான் ராசா தேசிங்கு
பரத நாட்டிமாடி வருவரு பராசாரி குதிரை
குதிரை வருவதைக் கண்ணால் கண்டான் தாவு சைதுல்லா (ப-124)
இது முகலாயர் மற்றும் உள்நாட்டு மன்னர்களின் போரை விளக்குகிறது. மற்ற எத்தாக்கமும் இந்நாவலில் இல்லை.
தலைமுறைகள்
நீலபத்பநாபன் இந்நாவலின் முன்னுரையில் ''எனக்குப் பழக்கமான ஒரு சமூகத்தின்...இத்யாதி இத்யாதியானவர்களை எல்லாம் கூடிய மட்டும் சிந்தாமல் சிதறாமல் களாப்பூர்வமாய் வெளிப்பிரகடனம் பண்ண இங்கே கதை வித்தானது என்பதால் இது சிறந்த வட்டார நாவலாய் கன்னியாகுமரி மாவட்டத்தைப் படம் பிடிக்கிறது.
இந்நாவலில் இடம்பெறும்
''ஐயை
அறைக்கா பக்கா நெய்
வெள்ளைக் காரன் கப்பலிலே
தீயைக் கொளுத்தி வை''
என்ன சிறுவர்களின் பாடலில் சந்த ஒலி இசைப்பதைக் காணலாம்.
''ரவுண்டு ஈரிரண்டு
மாயச்செண்டு, மல்லிகைப் பூச்செண்டு
பத்துள்ள என்தம்பி
பிணமுள்ள என்தம்பி
காசுள்ள என்தம்பி
கணக்குப்பிள்ளை என்தம்பி'' (ப.159)
என்று விளையாடும் பொழுது குழந்தைகள் பாடும் பாடலையும் பயன்படுத்தியுள்ளார். இது அண்ணன் தம்பி உறவையும் நேசத்தையும் வெளிப்படுத்துகிறது.
உண்ணாமலை ஆச்சி என்ற பாத்திரம்
''வா........வா.............வா.......உம்
வாவாவோ.........கண்ணே நீஉம்
வளர்ந்துலாக் கண்ணே நீஉம்
யாரடிச்ச நீ அழுதே
என் ஐயா உன்னை அடிச்சாரைச் சொல்லியடு'' (ப-209)
என்ற தாலாட்டுப் பாடலை பாடுகிறாள். குழந்தை வளர்ந்து வரக்காணும் கனவாக இது இருக்கிறது.
ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்
வட்டார வழக்குகளை வடித்துத்தர உத்தேசமில்லை என்று கூறியிருந்த பொழுதும் ஜெயகாந்தனின் இப்படைப்பில் நாட்டிலக்கியத் தாக்கம் உள்ளது.
''ஒரு தட்டு ஒரு தட்டு
மண்ணெடுத்து ஆமாம்போ
மண்ணெடுத்து ஆமாம்போ
போட்டாண்டி போட்டானடி
உசந்தரோடு''
என்ற பாடல் சுண்ணாம்பு இடிக்கும்போது பெண்கள் பாடுகிறார்கள். இது உழைக்கும் மக்கள் பாடுகிற பாடலை ஒத்துள்ளது.
கோபல்ல கிராமம். கோபல்லபுரத்து மக்கள்
கி. ராஜநாராயணன் ஒரு கதை சொல்லி எனப்பேசப்படுபவர். அவரது படைப்புகளில் நாட்டுப்புற மக்களின் நையாண்டி நடையையும் பேச்சையும் காணலாம்.
கோபால்ல கிராமம் கம்மவாரின் வரலாற்றை நாட்டுப்புற மக்களின் கண்ணோட்டத்தில் காண்பது இந்நாவல். வீரர் கதைகள், நாட்டுப்பாடல்கள், பழமொழிகள் வழக்கங்கள் ஆகியவை விரவியுள்ளன. நாட்டுப்புறப் பண்பாட்டு மரபில் தோன்றிய ஒரு வரலாற்று நாவல் இது கோபல்ல புரத்து மக்கள் நாவலில் குடியேறிய மக்களின் வாழ்வும் பிரச்சனைகளும் அவர்களது வீரம், நையாண்டி பேச்சுகள், பாசம், காமல் ஆகியவை பேசப்படுகின்றன.
பிறகு
ஆமணியின் இந்நாவலில் ''சக்கிலியே குடி வந்த கதை'' ''ஆவாரம்பூ குனுக்கு'' எனும் நாடோடிக் கதைகள் சொல்லப்படுகின்றன. கரகாட்டம், நையாண்டி மேளம் போன்ற கலைகளும் ஜடாமுனி தொட்டேரம்மன். சக்கம்மாள் போன்ற நாட்டுப்புறத் தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன.
வாடி வாசல்
விறு விறுப்பு நிறைந்த வீரம் செறிந்த இந்நாவலை சி.சு. செல்லப்பா எழுதினார். மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு என்னும் மஞ்சுவிரட்டை மையமாகக் கொண்ட நாவல் இது.
தன் தந்தையின் மரணத்துக்குக் காரணமான ஒரு நிகழ்ச்சியின் மீது தன் பழிவாங்கும் உணர்ச்சியைக் கொட்டித் தீர்த்துக் கொள்ளும் ஓர் இளைஞனின் ஆவேசமே இந்நாவலின் கரு. இதுவும் நாட்டுப்புற மக்களின் உணர்வே ஆகும்.
ரப்பர் பின்தொடரும் நிழலின் குரல்
நாவலாசிரியரான ஜெயமோகனின் மேற்கண்ட நாவல்களில் நாட்டுப்புற மக்களின் உணர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
''ரப்பரில் குத்ததைக்கு விட்டு விட்டு ஏமாந்தவரின் சாபம் தான் குத்தகை எடுத்து பணக்காரர் ஆன குடும்பத்தை வீழ்த்துகிறது என்ற நம்பிக்கை அடிப்படையிலான கதையைக் கருவாகக் கொள்கிறார்.
''பின்தொடரும் நிழலின் இரவில்'' இறந்தபின் முன்னோர்க்கு ''பிண்டம்'' வைக்கும் சடங்கையும் காக்கைக்கு பிண்டம் வைத்தால் அவை வந்து உண்டால் முன்னோர் திருப்தி அடைவதாகவும் உண்ணாவிட்டால் திருப்தி அடையவில்லை என்ற நம்பிக்கையையும் அழகாகப் புனைந்துள்ளார்.
முடிவுரை
ஹெட்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு; நாஞ்சில் சுந்தரராமசாமியின் ''புளிய மரத்தின் கதை'' ஆகியயை வட்டார நாவல்கள், ரகுநாதனின் ''பஞ்சும் பசியும்'', டி. செல்வராஜனின்'' மலரும் சருகும்'', வண்ண நிலவனின் ''சம்பாநதி'' க.சமுத்திரத்தின் ''ஊருக்கு வெளியே'', பொன்னீலனின் ''கரிசல்'' பூமணியின் வெக்கை போன்றவை நெல்ல வட்டார நாவல்கள் சங்கராமின் ''மண்ணாசை'' தி.ஜா. வின் மோகமுள் சா.கந்தசாமியின் சாயாவம் சி.எம்.முத்துவன் ''கறிச்சோறு'' போன்றவை தஞ்சை வட்டார நாவல்கள் இவை ஆய்வுக்குரியவை.
தமிழ் நாவல்களில் கதைப்பாடல்கள் ஒப்பாரி, சடங்குப்பாடல்கள்., சொலவடைகள், நையாண்டி வார்த்தைகள், நம்பிக்கைகள் ஆகிய நாட்டுப்புற இலக்கியக் கூறுகள் இடம் பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக