20/09/2011

நாட்டுப்புறவியலும் பண்பாட்டுக் கலப்பும் - முனைவர்.கி.மைதிலி

வாழ்க்கையை ஆடம்பரமில்லாமல் வெளிப்படுத்துவது நாட்டுப்புறவியல். அதனை நுட்பமாக ஆராய்கிறபோதும் பல நோக்கில் அணுகுகிற போதும் மாற்றம் நிகழ்ந்து வருவதைக் காரணக்காரியத்துடன் அறியமுடியும். மக்களின் சூழல் வளர்ச்சி தன்னலம் முதலியவை பண்பாட்டில் கலப்பு நிகழ்வதற்குத் துணையாவதையும் அறியலாம்.

கோதவர் பொங்கல் விழாவைச் சான்றாகக் காட்டலாம். கோதவர் பொங்கலுக்காகப் பானைக்குத் தாங்களே மண்எடுத்துச் சுத்தமாக்கி, பானை செய்து சுடுவர். பிறகு தமது சொந்த நிலத்தில் விளைந்த சாமை நெல்லைக் குற்றி அரிசியாக்கி அந்தப் புதுப் பானையில் இட்டுப் பொங்கல் வைப்பர். அதற்கு நீர் ஊற்றாது. முற்றும் பாலையே விட்டுக் பொங்கலாக்குவர். அத்துடன் தங்கள் வீட்டிலேயே விளைந்த அவரையைக் கொண்டு குழம்பு வைப்பர். இதற்கு மிளகாய் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். வெறும் உப்பு மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள். காரம் தேவையாயின் மிளகினையே சேர்த்துக் கொள்வார்கள். இவ்வாறு விழாவிக்கு வேண்டிய சிறப்பெல்லாம் செய்த பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றுகூடியே கோயிலில் வழிபடுவர்.

இவ்வாறு பொங்கலிட்டுக் ''குழம்பு வைத்து பால், பழம் முதலியனவற்றையும் உடன் வைத்துப்படைத்துப் போற்றிப் பிறகு அனைவரையும் ஒருங்கே சேர்த்து உண்பர்.'' என்னும் கூற்று சிந்திக்கத்தக்கதாகும்,

தாமே உழைத்து தம் பொருள்களேயே கொண்டு செய்த உணவை எல்லாரும் கூடி இருந்து மகிழ்வுடன் உண்ணும் வழக்கம் முதலில் இருந்திருக்கின்றது. பண்பாட்டுக் கலப்பின் பின், பொருளியல் உயர்வின்பின் நிகழ்வுகளில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

பெண்களுக்குப் பாதகமான ஆதீக்கக் கருத்தியல்கள் நுழையுமுன்பு திருமண நிகழ்விலும் இயல்பும் எளிமையும் இருந்தமையைக் கோதவர் திருமணமுறை காட்டுகின்றது.

இவர்தம் மணமுறை€யில் ஒரு புதுமை உண்டு. மணமகனே தனக்கு விரும்பிய பெண்ணேப் பார்த்து முடிவு செய்தல் வேண்டும். பிறகு அவனும் அவளும் விரும்பிய வகையில் பெற்றோர்களுக்குச் சொல்லி மணத்துக்கு ஏற்பாடு செய்து கொள்வார்கள். மணமகன் மாமனாரிடம் நான்கணா கையில் கொடுத்து அவர் காலைப்பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பிடித்துக் கொண்டால் அவன் அவருடைய பெண்ணை விரும்பிகிறான் என்று அறிந்து (மகளுடைய இசைவுபெற்று) தன் மகளை அவனுக்கே கட்டாயம் மணம் செய்து கொடுக்க வேண்டும். மணமகள் இசைவு இன்றி மணமகன் இச்செயலை மேற்கொள்ளமாட்டான். ஒருதலைக்காதல் இவர்களுக்கு புரியாதது மணம் அமாவாசை கழித்து மூன்றாம் பிறை கண்டபின் அன்றைய மூன்றாம் நாளில் வைத்துக் கொள்வார்களாம். பெரும்பாலும் ''பஞ்சமி" திதியாக இருக்குமாம். பிறகு திருமணம் முறைப்படி நடக்குமாம். பெண்வீட்டார் பிள்ளை வீட்டார் இருவரும் கலந்து மணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்வார்கள் என்று கள ஆய்வு செய்து அ.மு.ப. எழுதியுள்ளார்.

எண்வகை மணங்களாவதற்கு முன் களவு மணம் மட்டுமே இருந்தபோது நிகழ்ந்த மணமுறை கோதவர் மரபிலும் இருந்தமையை அறியலாம். பெண்ணின் இசைவு பெற்றே அவள் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புதல் தருகின்றனர். வளர்பிறையில் திருமணம் நடைபெறுகின்றது. இருவீட்டாரும் கலந்து திருமணத்தை ஏற்பாடு செய்வதும் கருத்தில் கொள்ளத்தக்கது. திருமணத்தில் மணமக்கள் தாய் தந்தையரை முக்கியமாக வழிபடுகின்றனர். அதன் பிறகே தெய்வத்தை வணங்குகின்றனர்.

தெய்வத்திற்கான ''கோயிலில் நெய்விளக்கே எரியும். அதை ஏற்ற வேண்டிய நெருப்பினைச் ''சிக்கிமுக்கி''க்கல் கொண்டே உண்டாக்குவர். எருமையின் பாலே அக்கோயிலில் ''நைவேத்தியம்''. இறைவனுக்கு வேறு பொருள் படைப்பது கிடையாது'' என்று கூற்று, தாங்கள் பாதுகாக்கும் எருமையின் பாலையே படைத்து வழிபடுவதும் அந்தப் பாலில் இருந்து எடுக்கப்படும் நெய்யினைச் கொண்டே விளக்கெரிப்பதம், அதற்கு நெருப்புண்டாக்க, சிக்கிமுக்கிக் கல்லைப் பயன்படுத்துவதும் பிற தாக்கங்கள் நுழையுமுன் இருந்த நிலைகளைக் காட்டுகின்றன.

திருமணங்கள் குறிப்பிட்ட இடங்களில்தாம் நிகழும். மலைமுகட்டிலுள்ள காட்டு நாகமரத்தில் சிறுமுழையை உண்டாக்கி அதில் நெய் விளக்கிட்டு அதன் முன்பு திருமணத்தை நடத்துவர் என்பதால் ஸ்தலவிருட்சம் நுழைவதற்கு முன் இருந்த நிலையை அறியமுடிகின்றது.

விளக்கின் முன் மனைவிக்குரிய பெருஞ்சடங்கு தொடங்கிற்று. மணமகன் கொடியை வளைத்து வில்லாக்கி மாமனாரிடம் உத்தரவு பெற்று அக்கொடிவில்லை மணமகள் கையில் கொடுத்தான், கங்கணம் கட்டும் பிற்கால வழக்கை ஒட்டியதோ இது என ஒருவகைப் பண்பும் இணைந்திருப்பதைக் கண்டேன்.

என்னும் கூற்று, தொடக்க நாள்களில் பசுமை, குழைவு இரண்டும் நிறைந்த திருமண நிகழ்ச்சியாக இருந்ததைக் காட்டும். பசுமை உற்பத்திப் பெருக்கத்தினையும் குளிர்ச்சி மகிழ்ச்சியையும் காட்டும். குழைவு அமைதியையும் இரக்கத்தினையும் அன்பினையும் காட்டும். மணம் புரிந்துகொள்வதன் வழி இனிமையும் உதவும் தன்மையும் மக்கட்பேறும் பெறுதல் வேண்டும் எனும் இயல்பு நெறியை விளங்கிக் கொள்ளுமாறு மண நிகழ்வுகள் அமைந்திருக்கும். பின்னாளில் கங்கணம் கட்டுமுறையாக மாறியதையும் உணரமுடிகின்றது. அப்போது அது சடங்காகிப் போய்விட்டதையும் தாமே உணர்ந்து கொள்ளும் உணர்வு குறைந்து போனதையும் எடுத்துச் சொல்ல வேண்டிய பெரியவர் சொல்லாமல் போனதையும் சொல்ல வேண்டும் என்று தோன்றாமையையும் அறிய முடிகின்றது.

இம்மணவினைக்கு வாத்தியங்கள், வேறு ஆரவார ஒலிகள் ஒன்றும் கிடையா. அமைதியான முறையில் அன்பரும் பெரியவரும் வாழ்த்தும் நல்வாழ்த்தொலியே மண ஒலியாக அமைந்தது. அப்படியே இவர்தம் விருந்திலும் ஆரவாரம் காணமுடியலில்லை. எளிய உணவு - சோறு, கறி, குழம்பு, மோர் என்ற அளவிலே உணவு அமைந்தது. அப்படியே ஆரவார வரவேற்பும் வாழ்த்துக் கூட்டங்களும் கிடையா. எனவே இவர் தம் மணவாழ்வு அமைதியான பண்பாட்டிலே. ஆன்றோர் தம் நல்வாழ்த்தின் வலத்தாலும் தெய்வ நலத்தாலும் தொடங்கப் பெறுகின்றது.

அமைதி நிரம்பப்பெற்று, பெரியோர் பலரும் வாழ்த்திட, உடல் நலமும், பொருள் நலமும் கெடாமல் எளிய உணவு பரிமாறி, மணமக்களையே எண்ணி, அவர்களும் மகிழுமாறு முடியும் திருமணமே முதலில் நிகழ்ந்திருக்கும். மரமும் பகட்டும் ஆரவாரமும் சூழ்ந்தால் மணமக்களைக் கூட மறந்துவிட நேரும். மண நிகழ்வைத் தவிர பிறவற்றைப் பேசத் தோன்றும். ஆரவார மிகுதியால் ஒருவருக்கொருவர் கலந்து பழக, பேச முடியாத நிலை ஏற்படும்.

ஏர்க்காட்டுப் பகுதியில் வாழும் ஒரு மரபினரை மலையாளிகள் என்பர். ஆனால் அவர் தமிழரே. இவர்தம் மனத்திலும் எளிமையும் சுதந்திரமும் உள்ளன.

இவர்கள் பலரும் சேர்ந்து கூட்டு மணம் நடத்துவதும் உண்டு. அன்றித் தனித்தனியாக மணம் நடத்துவதும் உண்டு. ஒரு பெண் தன் தாய்மாமனுக்குத் தான் பிறந்தவர் என்று உறுதி செய்தல் முறையாம். இருவரும் வேண்டாம் என்றால்தான் வேறுயாருக்காவது மணம் முடிப்பார்களாம். அவ்வாறு புதிதாக வந்து மணந்து கொள்ளுகின்றவன் தாய்மாமனுக்குப் பத்து ரூபாய் கொடுத்து அவனிடம் விடுதலை பெற்ற பிறகு மணம் செய்து கொள்ள வேண்டும். அம் மனத்திலும் தாய் மாமன் உடன் இருந்தே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளல் வேண்டும்.

''மணத்துக்கு முன்னாள் வருபவரை ஊருக்கு வெளியில் (ஊர் மந்தையில்) பாய் இட்டு உட்கார வைத்து, வரவேற்று, அனைவரையும் ஒரு சேர வணங்கி, பின் ஊருக்கு அழைத்து வருவர்''.

''மணம் நடைபெறுமுன் மணமகனுக்கும் மகளுக்கும் ''நலங்கு'' வைப்பர். மணமகனுக்கு ஆண்களே நலங்கு வைப்பர். ''காஞ்சி தீர்த்தமே தீர்த்தம். காவேரி தீர்த்தமே தீர்த்தம்'' என்று பாடிக் கொண்டே ஆண்களுக்கு நலங்கு வைக்கின்றனர். அப்படியே பெண்களுக்கும் பெண்கள் நலங்கு வைப்பர்''.

''மணம் முடிந்த பின் மறுநாள் மஞ்சள் ஆட்டு விழா நடைபெறும். அதில் அனைவரும் கலந்து மகிழ்வர். மணத்தில் நடப்பட்ட அரங்கொத்து மணமக்கள் அணிந்த பூமாலை முதலியவற்றை நன்கு பூக்கும் ஒரு பூமரத்தோடு சேர்த்துக் கட்டுவர்''.

முதலிய செய்திகள் பண்டைய முறை மணத்தை நன்கு விளக்கும். தாய்மாமன் பெருமை நாட்டுப்புறப் பாடல்களில் மட்டுமல்லாமல் நிகழ்வுகளிலும் இன்றியமையா இடத்தைப் பெற்றுள்ளமையை அறியலாம். திருமணத்திற்கு வரும் பெரியோரை வரவேற்று, இருத்தி, வணங்கிப் போற்றும் நிலைகளை அறியலாம். நலங்கு வைப்பதில் ஆண் பெண் இருவருக்கும் இணையான பங்கு தரப்பட்டிருப்பதை அறியலாம். பூமரத்தோடு சேர்த்து மணப் பொருள்களைக் கட்டுவது, மணமக்களும் பூத்து காய்த்துக் கனிய விரும்பும் நல்லெண்ணத்தின் வெளிப்பாடு என்பதையும் அறியலாம்.

''எல்லா நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பொருள் பொதிந்த பல பாடல்களைப் பாடுகின்றனர். வாழ்விலும் வீழ்விலும் இவர்தம் பாடல்களைப் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் பாடுகின்றனர். மணம் நடப்பதன் முன்பு அருகு எடுத்தல் அப்போது அவர்கள் பாடும் பாடல் இது''

''கல்லிலே நெல் முளைத்து - கற்பகத் தாமரைபூத்து

ஆறுபூச்சூட்டி - அறுபது வேர் ஓடி

மூங்கில் பூச்சூட்டி - முன்னின்று பலர் வாழ்த்த

கட்டின மங்கியம் - காமாட்சி மங்கியம்

உமையவள் மங்கியம் - ஒன்று கோடி அகமாக''

இவ்வாறு பாட்டிசைத்து அருகெடுத்து விழாத் தொடங்குகின்றனர். மேலும் இதே வேளையில்,

''சேரு மேலே சேரும் ஏறு மேலே ஏறும்

பன்னாடியும் பைதாடியும்

பத்தும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க''

என எல்லாரும் வாழ்த்துகின்றனர். இத்தொடரின் பொருள் யாவருக்கும் விளங்கவில்லை. நன்றாகச் செழித்து வாழ் என வாழ்த்துவதாக இது அமைகின்றது என்னும் கூற்றினை நோக்க, நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் மரபு இருந்தமையும் நிகழ்வுக்கு ஏற்ப பாடிக் கொண்டிருந்தமையும் ஒரு கட்டத்தில் பாடிய பாட்டையே நினைவில் இறுத்திப் பாடத் தொடங்கியமையும் பின்னர் அதற்கு பொருள் அறியாமல் பாடி வருவதையும் அறிய முடிகின்றது. பின்னர் நிகழ்வுகளில் கலப்பு நிகழ்ந்திட புராண இதிகாசங்களின் தாக்கம் காரணமானமையை இன்றைய நாட்டுப் புறங்கள் நமக்குக் காட்டுகின்றன.

இன்றைய தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் நாட்டுப்புறவியலில் மிகவிரைவாகப் பண்பாட்டுச் சிதைவையும் கலப்பையும் செய்து வருகின்றன. பண்பாட்டினைக் காப்பதிலும் முயற்சி மேற்கொள்வதை மறந்து விடவில்லை. இவற்றுக்குமுன் நாட்டுப்புறவியலில் புராண இதிகாசங்களின் தாக்கமும் பிறர் தலையீடும் கலப்பினையும் சிதைவினையும் செய்தன என்பதை வாக்காறுகள் காட்டுகின்றன. பழங்குடி மக்களிடம் பண்பாட்டு சிதைவு குறைவாக உள்ளமையை அவர்தம் திருமண நிகழ்வுகளும் பொங்கல் முதலிய கொண்டாட்டங்களும் காட்டுகின்றமை போலவே சாவுச்சடங்குகளும் காட்டுகின்றன. அவற்றைத் தனியே ஆராயலாம். மெல்ல மெல்ல பண்பாட்டுக் கலப்பு நிகழ்வதையும் அதற்கு அம்மக்களின் அறியாமையும் பொருளறியாமல் செய்யும் செயலும் அறிவியல் கருவிகளின் நுழைவும் பொருளியல் வளர்ச்சியும் பழைமையைப் பின்பற்றுவதில் உள்ள ஆர்வக்குறைவும் காரணங்களாகின்றன. பண்பாட்டுச் சிதைவில்லாத நிலையில் எளிமை, இயல்பு, ஒற்றுமை, மனநிறைவு கொண்டு கொண்டாட்டங்களைக் கொண்டாடி இயல்பாக வாழ்வைத் தொடர்ந்தால் நாடும் வீடும் நலம் பெறும்.

நன்றி: வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக