13/09/2011

நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள் - சி.செல்வம்

முன்னுரை

''அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது'' என்பது தமிழ்க்குடியில் பிறந்த ஒளவையாரின் முதுமொழியாகும். இம்மானிடப்பிறப்பில் நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை முறைகளை அதாவது அம்மக்களின் பிறப்பு என்னும் நிகழ்வுக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதும், பிறப்புக்கு முன்பும், இறப்புக்குப் பின்பும் நிகழ்கின்ற அனைத்து வாழ்வியல் நம்பிக்கைத் தொடர்பான நிகழ்ச்சியையும் நாட்டுப்புறவியல் எனலாம். நாட்டுபபுற மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஆராய்வதே இக்கட்டுரையின் இலக்காக அமைகிறது.

நம்பிக்கையின் வகைகள்

நாட்டுப்புறவியல் என வரையறுக்கப்பட்ட காலம் தோன்றிய காலம் இது தான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. மனிதன் என்று தோன்றினானோ அன்றே நாட்டுப்புறவியற் கூறுகளும் தோன்றி இருக்கலாம் என்று எண்ணுவதற்கு இடமுண்டு. இந்நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகப் பல்வேறு நம்பிக்கைகள் வழக்கில் உள்ளதை அத்தகைய மக்களின் வாழ்க்கை முறையின் வழி அறியமுடிகிறது. ''நம்பிக்கை என்பது, மரபாகத் தொன்றுதொட்டு வரும் கருத்துருவாக்கமானது நாட்டுப்புற மக்களிடையே காரண காரிய அடிப்படையில் உருவாகி வளர்ந்ததாகும்'' எனக் கூறும் டபிள்யூ. போஸ்வெல் என்பாரின் கருத்தினை மேற்கோள் காட்டுவார் சு. சக்திவேல்.

மனிதனின் வாழ்க்கை முறையில் தெய்வ நம்பிக்கையே பெரிதும் காணப்படுகிறது. இந்நம்பிக்கைகள் அனைத்தும் அச்சத்தின் அடிப்படையில் தோன்றியது எனலாம். இந்நாட்டுப்புற நம்பிக்கையை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை, நம்பிக்கை, மூடநம்பிக்கை ''நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு, அம்மக்கட் சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றன. மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன'' என சு. சக்திவேல் குறிப்பிடுகிறார்.

மனித வாழ்வில் பல்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத் தகுந்த நம்பிக்கைகள் (1) கடவுள் தொடர்பான நம்பிக்கைகள் (2) குழந்தை தொடர்பான நம்பிக்கைகள் (3) பெண்கள் தொடர்பான நம்பிக்கைகள் (4) திருமணம் தொடர்பான நம்பிக்கைகள் (5) வீடு தொடர்பான நம்பிக்கைகள் (6) நோய் தொடர்பான நம்பிக்கைகள் (7) கனவு தொடர்பான நம்பிக்கைகள் (8) உடை தொடர்பான நம்பிக்கைகள் (9) சகுனம் தொடர்பான நம்பிக்கைகள் (10) மழைத் தொடர்பான நம்பிக்கைகள் (11) மரணம் தொடர்பான நம்பிக்கைகள் என்பவைகளாகும்.

(1) கடவுள் தொடர்பான நம்பிக்கைகள்

இறைவழிப்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் எந்தப் பொருளும் கால்களினால் தீண்டப்படக் கூடாது. அவற்றில் பூவினை வீட்டின் கூரையிலோ, ஓட்டிலோ, ஆற்றிலோ போட வேண்டும். இறைவன் இருக்குமிடத்திலும் பார்க்கும் திசையிலும் காலணிகளை இடக்கூடாது. இறைவனிடம் செலுத்துவதாக வேண்டியுள்ள நேர்த்திக்கடனைத் தவறாமல் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தாவிடின் மாரியம்மனாகிய தெய்வத்தைப் பொறுத்தவரைத் தீங்கு விளையும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது இதனை,

''ஆரு கடன் நின்றாலும் மார்கடன் ஆவாது''

எனற நாட்டுப்புற வரிகளின் மூலம் உணரமுடிகின்றது.

(2) குழந்தை தொடர்பான நம்பிக்கைகள்

குழந்தைப்பேறு என்பது இன்றியமையாதவொன்றாகவும், இனிமையானதாகவும் கருதப்பெறுகின்றது. குழந்தையைப் பெற்றெடுத்த பின் அக்குழந்தையை நன்கு வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் முழு ஆர்வமுள்ளமை அனைத்துப் பெற்றோர்கட்கும் உண்டு. அக்கருத்தில் மக்களிடையே பல நம்பிக்கைகள் இன்னும் உள்ளன.

கண்ணேறு கழித்தல்

குழந்தைகள் அழகாக இருப்பதால் அக்குழந்தைகளைப் பார்க்கும் மற்றவர்களுடைய கண்கள்படும், அதனால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு உடல் நலம் குன்றும் என்ற நம்பிக்கை உண்டு. இந்நம்பிக்கையின் பொருட்டே,

''கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது''

என்பார்கள். ஆகையால், குழந்தையைக் கண்டு மகிழ்ந்தவர் நடந்து செல்லும்போது, அவரது கால் பட்ட மண்ணை எடுத்து மிளகாய், உப்பு முதலியவற்றைப் படி (அளத்தற்கருவி) யிலிட்டுக் குழந்தையை வலமாகவும் இடமாகவும் மும்முறை சுற்றி, எரிகின்ற அடுப்பில் இடுவர். இதனைக் ''கண்ணேறு கழித்தல்'' என்றும் திருட்டிக் கழித்தல்'' என்றும் கூறுவர்.

காகு குத்துதல்

தீமை தரும் ஆவிகள் குழந்தைகளை நாடக்கூடாது என்பதற்காகப் பெரியோர்கள் சிறு இரும்பு அல்லது உலோகங்களை அருகில் வைப்பது இயல்பாகும். இதே நோக்கத்திற்காகவே உடலின் மற்ற இடங்களில் வாய்ப்புக் குறைவு என்பதால், காதுகளில் நிலையாக இருக்கலாம் என்பதற்காகவே காது குத்தும் வழக்கம் எனக் கூறின் தவறில்லை.

குழந்தை தொடர்பான பிற நம்பிக்கைகள்

''கொடி சுற்றிப் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது, மாலை சுற்றிப் பிறந்தால் மாமனுக்கு ஆகாது'' என்பது பழமொழி. இக்கருத்தின் படிக் குழந்தை உடல் முழுவதும் கொடி சுற்ற பிறந்தால் குடும்பத்திற்கு தீங்கு நிகழும் என்பர்.

கருத்தரித்து இருக்கும் பெண் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையிலிருந்து எழமுயலுகையில் இடது கையை ஊன்றினால் பெண் குழந்தை வாய்ப்பு என்றும் வலது கையை ஊன்றினால் ஆண் குழந்தை வாய்ப்பு என்றும் கூறி அத்தகைய நம்பிக்கையை வெளிப்படுத்துவர்.

(3) பெண்கள் தொடர்பான நம்பிக்கைகள்

பெண்கள் இரவு நேரங்களில் தலையலங்காரம் செய்தல், மல்லாந்து படுத்தல், அழுதல் போன்றவை கூடாது என்பர். மாதவிலக்கு நாட்களில் பூச்சூட்டிக் கொள்ளுதல், கோயிலுக்குச் செல்லுதல் கூடாது. வீட்டில் குறிப்பிட்ட இடத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். பூப்பெய்திய மகளிரை வீட்டின் தனி இடத்தில் இருக்கச் செய்து, சில நாட்களுக்குப் பின் மஞ்சள் நீராட்டு நடத்தும் வரை அப்பெண்ணை எவரும் தீண்டாவண்ணம் தனிமைப்படுத்தவர். இதை மீறினால் துட்ட தேவதைகளால் குடும்பத்துக்குத் தீங்கு விளையும் என்பர்.

(4) திருமணம் தொடர்பான நம்பிக்கைகள்

விதவைப் பெண்டிர்கள் திருமண நிகழ்ச்சிக்கு வரக்கூடாது. ''புதனுக்குப் பெண் அழைப்பு உகந்தது'' என்பர். புதுப் பெண்ணை புதன் கிழமை அழைத்தால் குடும்பம் வளமாயிருக்கம். ''ஆடி அழைப்பு'' என்பது திருமணமான புது தம்பதிகள் ஆடி மாதத்தில் ஒன்றாக இருக்கக் கூடாது. ஆகையால் பெண்ணைத் தாய் வீட்டுக்கு அழைப்பர். திருமணமான பெண் புகுந்த வீட்டுக்கு வரும் போது தன் வலது காலை முதலில் எடுத்து வைத்து வரவேண்டும். திருமணமான பெண் வீட்டுக்கு வரும்போது நெற்களைக் கொடுத்து அழைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.

(5) வீடு தொடர்பான நம்பிக்கைகள்

உறவினர் வீட்டுக்குச் சென்றால் மீண்டும் எட்டாம் நாள் வரகூடாது. கர்ப்பிணிப் பெண்கள் வாய்க்கால், ஆறு கடந்து பிறந்த வீட்டுக்குச் செல்லக்கூடாது. இரவு நேரத்தில் வீட்டின் பின் பக்கக் கதவைத் திறந்து வைக்கக்கூடாது. இரவு நேரத்தில் வீட்டைக் கூட்டக்கூடாது. வீடுகளில் குளவி கூடு கட்டியது என்றால் பெண் குழந்தை பிறக்கும் என்பர். இரவு நேரத்தில் உப்பை பெயர் சொல்லக்கூடாது. இரவு நேரத்தில் வெள்ளை நிறத்தைப் பெற்றுள்ள உப்பு, சுண்ணாம்பு, தயிர், மோர், பால் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது என்ற நம்பிக்கையுள்ளது. வீட்டின் தெருக்கதவுக்கு முன் முருங்கை மரம், கேணி போன்ற நீர்குத்து முதலியவை இருக்கக்கூடாது. இரவு நேரம் முழுவதும் வீட்டில் விளக்கு ஏற்றியிருக்க வேண்டும். நிலைக்கு நேரே நடை பாதையில் உட்கார்ந்து சாப்பிட்டாலோ படுத்து உறங்கினாலோ கடன் வரும். புது வீடு கட்டிக் குடி புகுமுன் வீடு முழுவதும் தீயைக் காட்டி இழுத்துச் சென்று வீதியின் முச்சந்திப்பில் இட்டு, பூசணிக்காய் உடைப்பர். வடக்குப் பார்த்த வீடு ஆகாது. இதுபோன்ற நம்பிக்கைகள் நாட்டுப்புறங்களில் மட்டுமல்லாது, நகர்ப் புறங்களிலும் நிலவி வருகிறது என்பதை அறியலாம்.

(6) நோய் தொடர்பான நம்பிக்கைகள்

கொடிய நோய்களுக்கு ஆட்பட்டவர் மருத்துவமனைக்குச் சென்று குணமடையாமல் இறைவனை வேண்டிக் குணமடைந்ததாகக் கூறப்படுகிறது. ''அம்மை, காலரா முதலிய நோய்களை ஏற்படுத்துவது மாரியம்மன் செயலே என்று நம்புகின்றனர்'' அம்மை முதலிய நோய்கள் தோன்றினால் மருத்துவ உதவி நாடுவதைவிடப் பிரார்த்தனையில் ஈடுபடுவது விரைவில் குணமடையச் செய்யும் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. மருந்து உண்பது நோயை அதிகப்படுத்தும் என்ற அச்சத்தினால் அம்மை நோயின் வீரியத்தைக் குறைக்கும் பொருட்டு மாரியம்மன் துதியைப் பின்வருமாறு தாலாட்டாகப் பாடுவர்.

''சிரசினிற் முத்தையம்மா தற்காத்து நீயிறக்கம்

முகத்தினில் முத்தையம்மா முன்னதாய் நீயிறக்கம்

கழுத்தினில் முத்தையம்மா கட்டழகில் நீயிறக்கம்

தோளினில் முத்தையம்மா துந்தரியே நீயிறக்கம்

மார்பினில் முத்தையம்மா மாதாவே நீயிறக்கம்

வயிற்றினில் முத்தையம்மா வடிவழகி நீயிறக்கம்

துடையினில் முத்தையம்மா தேவியே நீயிறக்கம்

முழங்காலில் முத்தையம்மா மீனாட்சி நீயிறக்கம்

கணுக்காலில் முத்தையம்மா காமாட்சி நீயிறக்கம்

பாதத்தில் முத்தையம்மா பாரினிறக்கிவிடும

பெற்றவளே என்தாயே பேரரசி மாரிமுத்தே''

என்று மாரியம்மன் துதியைப் பாடுவதன் வாயிலாக அம்மை இறங்கி விடும் என்று நம்புகின்றனர்.

(7) கனவுத் தொடர்பான நம்பிக்கைகள்

எருமை, காவலர் (போலீஸ்) துறத்துவதாகக் கனவு கண்டால் கேடு நடக்கும். பாம்பு துறத்துவதாகக் கனவு கண்டால் சனி பிடிக்கும். துறத்திய பாம்பு கொத்திவிட்டால் சனி நீங்கும். கழுதையைக் கனவில் கண்டால் இடையூறு நிகழும். கனவில் உப்பு, பால், வெண்ணிறப் பூ, வெள்ளை ஆடு, வரட்டி, இளநீர், பச்சைத் தென்னைமட்டை போன்றவை கனவில் வந்தால் துன்பம் வரும் என்ற நம்பிக்கையுள்ளது. இவற்றில் உப்பு, பூ, கனவு கண்டால் நல்லதும் நடக்குமென்பர். விடியற்காலையில் காண்கின்ற கனவு பலிக்கும் என்பது மரபு.

(8) உடை தொடர்பான நம்பிக்கைகள்

நல்ல நிகழ்ச்சிக்குச் செல்லும்போது கருப்பு நிற ஆடை அணியக்கூடாது. விதவை வெள்ளை ஆடை உடுத்த வேண்டும். விதவைப் பெண் அவ்வாடையை ஈரத்தோடு உடுத்த வேண்டும். சுமங்கலிப் பெண்கள் வெள்ளை ஆடைகளை உடுத்தக் கூடாது. இறந்தவர் வீட்டிற்கு கருப்பு ஆடை அணிதல் நன்று. நல்ல காரியங்களுக்கு ஆடை எடுக்கும் போது கருப்பு நிற ஆடையை எடுக்கமாட்டார்கள்.

(9) சகுனம் தொடர்பான நம்பிக்கைகள்

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் ஒவ்வொரு நாள் வாழ்விலும், ஒவ்வொரு சிறு செயலிலும் கூட எத்தனையோ நம்பிக்கைகள், சகுனங்கள், சாத்திரங்கள் அவனை ஆட்டிப்படைக்கின்றன. மெத்தப் படித்த மேதாவிகளும் பெருஞ்செல்வர்களும் சில சமயம் இவற்றை அலட்சியப்படுத்துவார்கள். பிறகு அடுத்தடுத்து அவர்களுக்கு ஏதாவது தொல்லைகள் ஏற்படும். இறுதியாக அவர்களும் பாமர மக்களைப் போல இந்த நம்பிக்கைகளுக்கும், சகுனங்களுக்கும், சாத்திரங்களுக்கும் அடிமையாகி விடுகின்றனர் என்று சோமலெ கூறுவதாகச் சு. சண்முகசுந்தரம் கூறுவார்.

நாட்டுப்புற மக்களிடையே நிகழும் வாழ்க்கைக் கூறுகளும் சகுனமும் ஒன்றாகும். இவற்றில் நல்ல சகுனம், கெட்ட சகுனம் என்று இரண்டாகக் கூறலாம். வெளியில் புறப்படும்போது எதிரே சுமங்கலி வந்தால் நல்ல சகுனம். விதவை வந்தால் கெட்ட சகுனம். ஒற்றைப் பார்ப்பனன் வந்தால் கெட்ட சகுனம். இரட்டைப் பார்ப்பனர் வந்தால் நல்ல சகுனம். ஒற்றைத் தும்மல் கெட்ட சகுனம். இரட்டைத் தும்மல் நல்ல சகுனம். நாய் ஊளையிட்டால் கெட்ட சகுனம். நாய் வந்தால் நல்ல சகுனம். வண்ணான் எதிர் வந்தால் நல்ல சகுனம். எண்ணெய்க்காரன் எதிரிலே வந்தான் கெட்ட சகுனம். பல்லியின் ஒலி எத்திசையில் கேட்கிறதோ அத்திசையை வைத்து நன்மை, தீமைகள் உண்டு என நம்புவர். வெளியில் செல்லும்போது இரும்புகளால் செய்த ஆயுதங்கள் எடுத்து வந்தால் கெட்ட சகுனம். காலையில் துயிலெழுந்தவுடன் நரி முகத்தில் விழித்தல் நல்ல சகுனமாகும். பூனை முகத்தில் விழித்தால் கெட்ட சகுனம். எந்தச் செயலைச் செய்யத் துவங்கியபோதும் எந்த சொல்லைப் பேசத் துவங்கியபோதும் கடிகார மணியோ, (அல்லது) கோயில் மணியோசை அடித்தால் நல்ல சகுனமாகக் கருதுவர்.

(10) மழை தொடர்பான நம்பிக்கைகள்

மழை இல்லாத காலத்தில் வைக்கோலினால் கட்டப்பட்ட கொடும்பாவியையும், மண்ணைக் குவித்து வைக்கப்பட்ட கொடும்பாவியையும் கிராமப் பெண்கள் சூழ்ந்து மாரடைத்து அழுவார்கள். பின் வைக்கோலால் செய்யப்பட்ட கொடும்பாவியை இழுத்துச் சென்று முச்சந்தியிலிட்டு எரிப்பர். மண்ணினால் செய்யப்பட்ட கொடும்பாவியைக் கலைத்து விடுவர். இவற்றினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடையே நிலலிவருவதைக் காணலாம்.

(11) மரணம் தொடர்பான நம்பிக்கைகள்

இறப்புக்குச் சென்று வரும்போது ''போயிட்டு வரேன்'' என்று சொல்லாமல் ''போகிறேன்'' என்று அல்லது சொல்லாமலேயே போதல் முறையாகும். இறந்த வீட்டில் நடக்கும் சாவுச் சடங்குகளில் உண்ணும்போது இலையை வெளிபுறம் மடக்க வேண்டும். முதல் குழந்தை (தலைப்பிள்ளை) இறந்தால் வீட்டின் அருகிலேயே புதைப்பர். ''சனிப்பிணம் தனியே போகாது'' என்றும் கூறுவர். அதனால் சனிக்கிழமையில் இறந்தவர்களைச் சுடுகாட்டிற்கோ, இடுகாட்டிற்கோ கொண்டு செல்லும்போது கோழிக் குஞ்சைப் பாடையில் கட்டி செல்வர். திருவாதிரை, ஏகாதசி போன்ற நாட்களில் இறந்தவர்கள் சொர்க்க வாசலுக்குச் செல்வதாகக் கூறுவர்.

முடிவுரை

நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள் பெரும்பாலும் தெய்வத்தோடு தொடர்புடையவையாகத் திகழ்வதைக் காணமுடிகிறது. இவ்வாறாக நாட்டுப்புற மக்களிடம் நம்பிக்கை பெரும்பங்கு வகிப்பதை இதன் வழி அறிய முடிகிறது. மேலும், தெய்வ வழிபாட்டிற்கு நம்பிக்கையே முதற்படியாகும் என்பது புலனாகிறது. மனிதனின் வாழ்வு நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்வதைக் காணலாம்.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக