03/04/2011

உள்ளூர்க்காரன் - பாஜின் - தமிழில் திலகவதி

திய உணவுக்குப் பின் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு, `எல்லையற்ற பனியும் காடும்' என்ற நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன், எழுத்தர் சூ ஃபாங் உள்ளே வந்து, `சென் அய்யா! உங்களோட சொந்த ஊர்லருந்து ஒருத்தர் வந்து, வெளியில காத்திருக்காரு. அவரு உங்களைப் பார்க்கணுமாம்.' என்றார்.

`நெஜமாவா? யாரு அவரு? அவரு என்னோட சொந்த ஊர்க்காரருன்னு உனக்கு நிச்சயமாத் தெரியுமா?' நான் எழுந்து, புத்தகத்தை படுக்கையருகே இருந்த மேசை அருகே வைத்தேன்.

`ஆமா. அவரு உங்களைப் பாக்க விரும்பறதா சொல்றாரு.'

நான் உடற்பயிற்சி செய்யும் மைதானத்துக்குச் சென்றேன். வெயில் தகித்துக் கொண்டிருந்தது. குடியிருப்பு வரிசைகள் அமைதியாக இருந்தன. என்னுடைய குழுமத்தில் இருந்த அனைவரும் பகல் தூக்கத்தில் இருந்தார்கள்.

ஹும்..., சூ டியான், நிச்சயமாக அவன் என் சொந்த ஊர்க்காரன்தான். அவன் சாதாரண உடைகளை அணிந்திருந்தாலும், முதல் பார்வையிலேயே நான் அவனை அடையாளம் கண்டுகொண்டேன். அவன் தன்னுடைய எலும்பையும் சதையையும் கழற்றிவிட்டு வந்தானானால்கூட என்னால் அந்த எலும்புகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அவன் முதுகில் இருந்த பையில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டிருந்தான் என்பது வியப்பாக இருந்தது. அந்தக் குழந்தையின் வாயிலிருந்து உமிழ்நீர் கம்பியாக வழிந்து கொண்டிருந்தது. அவன் என்னைப் பார்த்து தர்மசங்கடத்துடன் சிரித்தான். எலும்பெடுத்த அவனுடைய முகம் பக்கவாட்டில் விரிந்தது. முன்னோக்கி ஒரு கோப்பையைப் போல் கவிந்திருந்த அவன் காதுகளில் தாறுமாறாக முடி முளைத்திருந்தது.

அவன் எப்படி இந்த நிலைமைக்கு ஆளானான் என்று வியந்தபடியே, `எதுக்காக நீ என்னைப் பாக்க ஆசைப்பட்டே?' என்று நான் கேட்டேன், நீலக் கந்தலை அணிந்துகொண்டு ஆட்டு மூத்திர வாடையடிக்க, ஒரு பிச்சைக்காரனைப் போன்ற இந்த நிலைமைக்கு அவன் எப்படி வந்து சேர்ந்திருப்பான். எனக்கு அவன், ஒரு சேற்றுக் குட்டையில் உழலும் பன்றியை நினைவுபடுத்தினான்.

`சென் ஜுன், நான்... எனக்கு மட்டும் வேற ஏதாவது வழி தெரிஞ்சா. நான் உங்களுக்குத் தொல்லை தந்திருக்கமாட்டேன், என் மகனுக்கு உடம்பு சரியில்ல. நிமோனியா. அதனாலதான் நான் உங்ககிட்ட உதவி கேட்டு வந்தேன்.' அவனுடைய படர்ந்த மூக்கு துடித்தது.

`அதுக்கு என்கிட்ட ஏன் வரணும்? நீயே ஒரு டாக்டர்தானே?'

`இங்க உங்களைத் தவிர வேற யாரையும் எனக்குத் தெரியாது. நமக்குள்ள இருந்த கசப்பு உணர்வுகளை தயவு செஞ்சு இப்போ மறந்துடுங்க. அவன் செத்துக்கிட்டு இருக்கான். தயவு செஞ்சு, குழந்தையைக் காப்பாத்துங்க!'

`நான் என்ன செய்ய முடியும்?' நான் குழுமத் தலைமையகத்தில் இருந்த என்னுடைய அறைக்கு அவனை அழைத்துச் சென்றேன். பிறகு, வைத்திய உதவியாளர் ரென் மிங்கை வரச் செய்தேன். பையன் மிகவும் மோசமான நிலையில்தான் இருந்தான். எவ்விதமான சத்தத்தையும் அவன் எழுப்பவில்லை.

ரென் தன்னிடம் நிறைய பென்சிலின் இருப்பதாகச் சொன்னான். சூவே ஒரு டாக்டர்தான் என்பதனால், அவன் ஓர் ஊசியை சுத்திகரித்து, ஒரு பஞ்சு உருண்டையை எடுத்துக் கொண்டான். ஒரு பெரிய அளவில் மருந்தை ஊசியின் மூலம் தன்னுடைய மகனின் பிட்டத்தில் ஏற்றினான். பையனை என்னுடைய படுக்கையின் மீது படுக்க வைத்தான். `தூங்கு, நல்லா தூங்கு!' என்றபடி அவன் ஒரு அழுக்கான மேலங்கியினால் குழந்தையை மூடி வைத்தான்.

சனியன், என் அறைக்குள் நுழைந்ததும், என் படுக்கையை ஆக்கிரமித்துக்கொண்டான்.

சூ என் பக்கம் திரும்பினான். `இந்த நிமோனியா, தட்டம்மையினால வந்தது. நம்மகிட்ட பென்சிலின் இருக்கறவரைக்கும் அவனை நாம்ப குணப்படுத்த முடியும்.' அவன் பெருமூச்சு விட்டான். `நாங்க கிட்டத்தட்ட ஒரு மாசம் பயணம் செஞ்சிருக்கோம். சில சமயங்கள்ல, ராத்திரியில ரயில்வே ஸ்டேஷன்ல படுத்துத் தூங்குறது, சில சமயங்கள்ல திறந்த வெளியில படுத்துத் தூங்குறது, இப்படியெல்லாம். எனக்கு உடம்புக்கு ஒண்ணும் வராமப் போனது என்னோட அதிர்ஷ்டம்தான். ஆனா, அவன் இந்த மாதிரியான வாழ்க்கையை சமாளிக்க முடியாத அளவுக்கு இவன் சிறு வயதுப் பையன்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவனுடைய கடைசி சில வாக்கியங்கள் என்னுடைய ஆர்வத்தைத் தூண்டின. எழுத்தர் சூ ஃபாங் ஒரு தெர்மோஸ் பாட்டிலையும் மூன்று கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவற்றை அவர் என் மேசையின் மேல் வைத்துவிட்டு வெளியே சென்றார்.

கிளம்பத் தயாராகி, நான் `இன்னிக்கி மத்தியானம் எனக்கு ரொம்ப வேலை இருக்கு. நீ இங்க உன் பையனோட தங்கியிருக்கலாம்' என்றேன்.
நான் வெளியே செல்லத் தொடங்கியதும் சூ எழுந்து நின்றான். அந்த அயோக்கியப் பயலுக்கு குறைந்த பட்சம் இந்த மரியாதையாவது மறக்காமல் இருக்கிறதே.

அவனை நான் ஏன் வெளியே போடா என்றுச் சொல்லவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஏன் அவனை என் முகத்திலேயே விழிக்காதே என்று சொல்லவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவனை வெறுத்தேன். அவன் என்னுடைய அக்காவைத் திருமணம் செய்துகொள்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவன், அவளைக் கை விட்டுவிட்டான். ஏனென்றால், அவன் படைப்பிரிவில் அதிகாரி நிலைக்குப் பதவி உயர்வு பெற்றிருந்தான். நிச்சயமாக பீஜிங்கில் இருக்கும் பெண்கள் மேலும் கவர்ச்சிகரமானவர்களாகவும், வெண்ணிற முகங்களுடனும், மென்மையான உடல்களுடனும் இருப்பார்கள். அவன் ஏற்கெனவே இருந்த நாட்டுப்புறத்துப் பையன் அல்ல. ஆனாலும், தன்னுடைய நிலைமை முன்னேறி இருக்கிறது என்பதற்காக திருமணம் செய்து கொள்வதாக இருந்தவளை அப்படிக் கைவிடுவது ஒழுக்கக்கேடான விஷயம். என்னுடைய அக்கா, பல தினங்கள் அழுதுகொண்டே இருந்தாள். தன்னால், வெளியே போய் மற்றவர்கள் முகத்தில் விழிக்கக்கூட முடியவில்லை என்றாள். எங்கள் கிராமத்திலிருந்து ஆறு மைல் தொலைவில் இருந்த சூ கிராமத்துக்குப் போய், அவனுடைய பெற்றோரைச் சந்தித்து, அவன் இப்படி நம்பிக்கை மோசம் செய்ததற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லும்படி கேட்கலாமா என்று நான் அப்போது விரும்பியதை எண்ணிப் பார்த்தேன். ஆனால், அதனால் ஒரு பயனும் இருக்காது என்று சொல்லி என்னுடைய தாயார் என்னைத் தடுத்து நிறுத்திவிட்டார், சூ குடும்பத்தார் மிகவும் பலம் படைத்தவர்கள் அவர்களோடு சண்டை போடும் அளவுக்கு என் குடும்பத்தாருக்கு திறன் இல்லை.

நான் அவனுடைய துணிச்சலை வெறுத்தேன். ஆனால், நான் இப்போது என்ன செய்யவேண்டும்? என்னுடைய ஆட்களின் முன்னிலையில் நான் அவனிடத்தில் கடுமையாக நடந்துகொள்ள முடியாது. குறிப்பாக வாயிற்காப்போன், மருந்தாளுனர், எடுபிடியாட்கள், எழுத்தர் எல்லோருமே உடல் நலம் அற்ற பையனைப் பார்த்திருந்தார்கள். உள்ளூர்க்காரன் என்ற முறையில் அவனை உபசரிக்க தயக்கம் இருந்தபோதிலும் நான் சமையலை கவனிக்கும் அணியினரிடம் இரண்டு பேருக்காகும்படி விருந்தாளிகளுக்கான உணவை சிறப்பான முறையில் தயார் செய்யும்படிச் சொன்னேன். சிப்பாய்கள் பார்வையில், உள்ளூர்க்காரன் சாதாரணமான உணவை சாப்பிடுவது அவமானகரமானதாக இருக்கும். அவன் சிலமணி நேரங்களில் அங்கிருந்து போகிறவனாகத் தெரியவில்லை. அவனுடைய இரவு சாப்பாட்டுக்கும் நான் என் கைப்பணத்தில் இருந்துதான் தரவேண்டும் போல் இருந்தது. அவனுக்கு சாப்பாடு போடுவது பற்றி எனக்கு கவலை இல்லை. போடுவதென்றால், குதிரை விட்டையைத்தான் போடவேண்டும்.
அவன் எப்படி இத்தகையதோர் நாடோடி வாழ்க்கைக்கு வந்து சேர்ந்தான்? பிலுக்கிக்கொண்டு ஒய்யாரமாகத் திரியும் அந்தப் பகட்டுக்காரனை ஆறு வருடங்களுக்கு முன்பு, இலையுதிர்காலப் பண்டிகையை பெய்ஜிங்கில் முடித்துக்கொண்டு அவன் வீடு திரும்பியபோது நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவன் தரைப்படையின் மைய மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து கொண்டிருந்தான். அவனுடைய மனைவி ஒரு மருந்தாளுனர். பளபளக்கிற தோல் ஷூக்களை அணிந்துகொண்டு, பசுமை நிற மேலங்கியை அவன் அணிந்திருந்தான். அவர்கள் தெருக்களில் நடந்து சென்றபோது குழந்தைகள் விசிலடித்துக்கொண்டு, `ஓ! பெரிய அதிகாரிகளே! திரும்பிப் பாருங்களேன், ஓ! பெரிய அதிகாரிகளே!' என்று கத்தியபடி அவர்களைத் தொடர்ந்து ஓடினார்கள். அந்த நேரத்தில் நான் ஒரு சாதாரண அணித் தலைவனாக இருந்தேன். எங்கள் ஊரில் ஒருவரை ஒருவர் நாங்கள் கடந்து சென்றபோது, அவன் என்னைப் பார்த்துத் தலையைக் கூட அசைக்கவில்லை. இப்பொழுது பார்த்தால் உள்ளூரில் இருக்கும் நாய்கள் கூட இந்த நாடோடிப் பயலைப் பார்த்தால் உறுமும் போல இருந்தது.

குழுமத்தின் தளவாய் யீ, தெற்கு மலையில் இருந்த மூன்றாவது அணியினருடன் விவசாயிகளுக்கு அறுவடையில் உதவுவதற்காகச் சென்றிருந்தார். ஆகவே, நான் யாரையும் இரவு உணவுக்கு அழைக்கவில்லை. எனது அறையில் சூவுடன் தனியாக அமர்ந்திருந்தேன். இன்னமும் தூங்கிக் கொண்டிருந்த பையனின் உடல்நிலை தேறியிருந்தது. உடலின் சூடு மூன்று டிகிரிகள் குறைந்திருந்தது. சூ மேசையில் இருந்த பன்றியின் வதக்கிய விலாவையும் வறுத்த சோயா பாற்கட்டியையும் பார்த்தவாறிருந்தான்.

`எடுத்துச் சாப்பிடு!' நான் என்னுடைய கிண்ணத்தில் சோற்றை நிரப்பிக்கொண்டேன். நான் அவனோடு மது அருந்தவில்லை. நல்ல உணவே போதுமானதாக இருந்தது.

அவன் ஒரு பெரிய துண்டு சோயா பாற்கட்டியை விழுங்கினான். பிறகு, வாய் நிரம்ப சோறை உண்டான். `ஓ! நன்றி, சகோதரர் சென். நான் கடந்த அஞ்சு வாரங்கள்ல இப்பிடி ஒரு உணவை சாப்பிட்டதே இல்லை.'

`சீ வாயை மூடு! யார் உன்னுடைய சகோதரன்!'

`சகோதரர் சென்!' அவன் மீண்டும் தொடங்கினான், அவனுடைய பெரிய மஞ்சள் பற்களைக் காட்டியபடி. `நான் இதை எப்பவும் மறக்க மாட்டேன். ஆஹா, எவ்வளவு அருமையா இருக்குது.' அவனுடைய உதடுகள் எண்ணெய்ப் பசையோடிருந்தன.

நான் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவன் என்னுடைய வெறுப்பான மன நிலையை உணர்ந்துகொண்டு அமைதியானான்.

இரண்டு கிண்ணங்கள் சாப்பிட்டு முடித்ததும் நான் சாதாரணமாக, `உனக்கு என்ன ஆச்சு?' என்று கேட்டேன்.

அவன் பன்றி எலும்பைக் கடித்தபடி பெருமூச்சு விட்டான். `அதை ஒண்ணு ரெண்டு வார்த்தைகள்ல விளக்கறது கஷ்டம்.'

`அதைப்பத்தி எனக்குச் சொல்லு!'

நான் தேநீர் தயாரிக்கத் தொடங்கியதும் அவன் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான். `ரெண்டு மாசங்களுக்கு முன்னால ஒரு அதிகாரிகள் சந்திப்புல, எங்க மருத்துவமனையோட மேலதிகாரி ஏதாவது குத்தம், குறை இருந்தா சொல்லுங்கள் என்று கேட்டார். ஒவ்வொருத்தரும் எதையாவது ஒண்ணை சொல்லியாகணும்னு எதிர்பார்த்தாங்க. என்னோட முறை வந்தப்போ, நான் எந்திரிச்சு மூத்த அதிகாரிகள் வார்டு சார்பா பேச ஆரம்பிச்சேன். ஏன்னா, நான்தான் இயக்குநரா செயல்பட்டுக்கிட்டு இருந்தேன்.'

`என்ன சொன்னே?' நான் தேநீர் அருந்திக் கொண்டிருந்த கோப்பையை அவனுக்கு முன்னால் வைத்தேன்.

`நன்றி. நான் சொன்னேன், என்னோட வார்டுல வேலை பாக்குற ஏழு செவிலியர்களும், சில மூத்த தலைவருங்க அவங்ககிட்ட தவறா நடந்துக்க முயற்சி பண்ணினதா என்கிட்ட புகார் சொல்லியிருக்காங்க. ஒரு ஜெனரல், ஒரு செவிலியின் பாவாடையை போன வாரம் கிழிச்சே கிழிச்சுட்டாரு. அவரோட பேரை நான் இங்க சொல்ல விரும்பல. இது மாதிரியான விஷயங்கள் எங்க வார்டுல திரும்பத் திரும்ப நடந்துக்கிட்டு இருக்கு. அந்த மூத்த அதிகாரிங்க பழைய புரட்சிக்காரங்க. இளைய தலைமுறைக்கு முன் மாதிரியா இருக்க வேண்டியவங்க. எல்லாத்துக்கும் மேல அவங்க எல்லாருக்கும் பேரக் குழந்தைங்க இருக்காங்க. அவங்க இப்பிடி நடந்துக்கறது வெட்கக்கேடான ஒரு விஷயம்.' அவன் கோப்பையில் இருந்து தேயிலையை எடுத்து ஒரு மடக்குப் பருகினான்.

நான் சிரிக்க விரும்பினேன். `எப்பேர்ப்பட்ட முட்டாள்.' `அப்புறம் என்ன நடந்துச்சு?' என்று கேட்டேன்.

`அந்த சந்திப்புல உயர் அதிகாரி இந்த விஷயங்களை கவனிக்கறதா சொன்னார். எல்லாம் சரியானபடி இருக்கறதாத்தான் இருந்துச்சு. ஆனா, ஒரு வாரம் கழிச்சு, திடீர்னு மருத்துவமனை வாசல்ல பெரிய பெரிய சுவரொட்டிங்க. என்னைத் தாக்கி வசைபாடும் வாசகங்களோடயும், புரட்சிக்கு எதிரான கருத்துகளை பரப்பறதா குற்றம் சாட்டியும் ஒட்டப்பட்டிருந்துச்சு. எனக்கு பயமாப் போச்சு. இது வாழ்வா, சாவாங்கற பிரச்னை. என் கண்ணாலேயே மார்ஷல் சென் யீயை செம்படைக்காரங்க அடிச்சுத் துவைக்கறதை நான் பார்த்திருக்கேன். நான் ஒரு அற்பப் புழு. எங்க ஆஸ்பத்திரியிலருந்த புரட்சிப் படை கையில நான் மாட்டியிருந்தா அதுதான் என்னோட முடிவா இருக்கும். ரெண்டு நாள் கழிச்சு, நாங்க மதிய சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு இருந்தப்போ, எங்க பக்கத்து வீட்டு பொண்ணு திருமதி. லியு வேகவேகமா உள்ள வந்து, `சூ! சீக்கிரமா இங்கே இருந்து ஓடிடு! அவங்க உன்னைத் தேடிக்கிட்டு வர்றாங்க' அப்பிடின்னா. அப்புறம் படிக்கட்டுகள்ல காலடிச்சத்தம் முழங்கறதை நாங்க கேட்டோம்.

கதவைத் திறந்துகிட்டு வெளியேர்றது இப்போ முடியாம போயிடுச்சு. என்னோட மனைவி அமைதியா யோசிக்கற திறமை படைச்சவ. அவ `குழந்தையையும் உங்க கூட எடுத்துக்கிட்டுப் போங்க! அவங்க அவனை சும்மா விட மாட்டாங்கன்னு சொன்னா.' அதனால நான் இந்தப் பையனை என் முதுகுலயே சுமந்துக்கிட்டு லியுவோட வீட்டுப் பால்கனி வழியா வெளியே இறங்கினேன். அவங்க என் வீட்டுக்குள்ள புகுந்து என்னோட மனைவிகிட்ட கூச்சல் போட்டுக்கிட்டு இருக்கறதை என்னால கேக்க முடிஞ்சிது. நான் லியுவோட வீட்டுப் பக்கத்திலிருந்து திருட்டுத்தனமா வெளியேறி, நேராக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் ரயிலேறிட்டேன். அந்த வண்டி வடகிழக்குப் போய்ச் சேர்ந்துச்சு. அதனாலதான் நான் இங்க இருக்கேன்.'

`நீ அதிர்ஷ்டக்காரன்.' நான் ஏன் அப்படிச் சொன்னேன் என்று எனக்குத் தெரியவில்லை. `உனக்கு இங்க சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா?'

`இல்ல, உன்னைத் தவிர வேற யாரையும் எனக்குத் தெரியாது. நாங்க அப்பிடியே சுத்தித் திரிஞ்சோம். சில சமயங்கள்ல ரயிலேறிப் போவோம், சில சமயங்கள்ல நடந்தே போவோம். ச்சாங்சுன் நகரத்துல என்னோட படம் போட்ட ஒரு அறிவிப்பை நான் பாத்தேன். அதுல நான் புரட்சிக்கு எதிரான குற்றவாளி அப்பிடின்னும், என்னை நியாயத் தீர்ப்புக்கு உட்படுத்தணும்னும் போட்டிருந்துச்சு. எனக்கு ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கு. இதுல எல்லாம் உன்னை சம்பந்தப்படுத்தணும்ங்கறது என்னோட நோக்கம் இல்ல...'

எடுபிடி வேலையைப் பார்த்த மெங் ஹய் உள்ளே வந்து மேசையைத் தூய்மைப்படுத்தத் தொடங்கினான். நான் சூவுக்கு ஒரு குளோரி சிகரெட்டைக் கொடுத்தேன். அவன் அதை பற்ற வைத்து தாய்ப்பாலை உறிஞ்சுவது போல உறிஞ்சினான். குழந்தை விழித்துக் கொண்டது. நான் மெங்கிடம் ஒரு கிண்ணம் உணவைக் கொண்டுவரும்படிச் சொன்னேன். சோற்றையும் கறியையும் பார்த்ததும் அந்தப் பையன், தன் உடல் நிலைமையை மறந்து உணவை நோக்கி வேகமாகப் பாய்ந்தான். `அப்பா! ரொம்ப அருமையா இருக்கு' வாய் நிறைய உணவை வைத்துக்கொண்டு அவன் முணுமுணுத்தான். நான் அதை கவனித்தேன். அவனுடைய அப்பாவைப் போல் இல்லாமல், பையனுக்கு வட்ட வடிவமான கண்கள். சூ இனத்தில் அது சகஜம்.

`மெதுவா சாப்பிடு டுன்டுன்.' சூ தன் மகனின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். பிறகு என்னிடம், `இப்போ அவனுக்கு எவ்வளவோ தேவல. மருந்து வேலை செஞ்சிருக்கு.' என்றான்.

எடுபிடி ஆள் வெளியே சென்றதும், சூ தொடர்ந்தான். `நான் உண்மையிலேயே உன்னை எந்தத் தொல்லையிலயும் மாட்டிவிட விரும்பல. ஆனா, எங்களால எந்த ஆஸ்பத்திரிக்கும் போக முடியாதுங்கறது உனக்குத் தெரியும். நாங்க ரொம்ப நாளைக்கு தங்க மாட்டோம். நான் உனக்கு ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்கேன், சென்கன்.'
`நீ இங்க ரொம்ப நாளைக்குத் தங்க முடியாது. இது பாதுகாப்பான இடமும் இல்ல. அதிர்ஷ்டவசமா குழுவோட தளவாய் இன்னிக்கு ராத்திரி ஊர்ல இல்ல.'

`புரியுது. நான் நாளைக்குக் காலைல புறப்பட்டுடறேன். என்னோட இனிய சகோதரனே, எனக்கு ஒரு உதவி செய்வியா?'

`என்ன?'

`எனக்கு ஒரு ஊசியும் கொஞ்சம் பென்சிலினும் குடு.'

`என்னால என்ன செய்ய முடியுமோ செய்யறேன்.'

அவனுக்கும் எனக்கும் இடையில் எதுவும் இணக்கமானதாக இருக்க முடியாது. இப்பொழுது அவன் என் கைவசம் இருப்பதனால், நான் அவனுக்கு ஒரு நிம்மதியான பொழுதைத் தரமாட்டேன். அவன் நிச்சயதார்த்தத்தை முறித்த பொழுதில், என் அம்மாவால் கிராமத்து ஜனங்கள் முன்னால் தலையையே உயர்த்த முடியவில்லை. என்னுடைய அக்கா அவனை உயிரோடு தின்றே தீர்த்திருப்பாள்.

அன்று இரவு நான் மருந்தாளுனரை, மருந்தையும் ஊசியையும் கட்டி வைக்கும்படி சொன்னேன். இதன் பொருள் நான் சூ விருப்பப்பட்டபடி அவனை அனுப்பி வைப்பேன் என்பதல்ல. உண்மையில், குழுமத் தளவாயின் படுக்கையில் படுத்தபடி, நான் சூவைப் பற்றி அப்பகுதி அரசு அதிகாரிகளுக்கு இவனைத் தெரிவித்தாக வேண்டுமா என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவன் என்னிடம் சொன்னது உண்மையா, இல்லையா என்பது யாருக்குத் தெரியும்? அவன் உண்மையிலேயே புரட்சிக்கு எதிரானவனாக இருக்கலாம். இது கட்சிக்கு என்னுடைய விசுவாசத்தை நான் காட்டிக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும், சூவையும் பழிவாங்கியது போலாகும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசு அதிகாரிகள், என்னை வட்ட அதிகாரிகள் பகுதிக்கு உதவித் தலைவராக பதவி அது உயர்வு கொடுக்க இருப்பதாக கேள்விப்பட்டிருந்தேன். ஒரு குழுமத்தின் அரசியல் ஆசிரியர், குழுமத் தலைமைக்கு ஈடான பதவிக்குத் தேர்வு பெறுவதாக இருந்தால் அவ்வளவு பெரிய பதவி இன்னொருவருக்குப் போவதைப் பார்த்துக்கொண்டு நான் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பேன் என்றா நினைத்தீர்கள்? இல்லை. எனவே, நான் ஏதாவது செய்தாக வேண்டும். இந்தச் சூழ்நிலையில் புரட்சிக்கு எதிரான ஒருவனைப் பிடித்துத்தருவதைவிட வேறு எது பொருத்தமானதாக இருக்கும்?

பையனை என்ன செய்வது? எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. அவன் தன் தகப்பனின் விதியைப் பங்கு போட்டுக் கொள்ளட்டும். இருவருமே கைது செய்யப்பட்டாலும் நான் வருத்தப்பட மாட்டேன். நாளைக்கு முதல் வேலையாக அந்தப் பிராந்திய அரசு அதிகாரிகளை அழைக்க வேண்டும்.

நான் மனத்தில் ஒரு திட்டத்தோடு படுக்கப் போனேன்.

ஆனால் மறு நாள் காலை நான் என் மனத்தை மாற்றிக் கொள்ளத் தொடங்கினேன். நான் கவனத்தில்  எடுத்துக் கொள்ளாத விஷயம் ஒன்று இருந்தது. அது என்னவென்றால், அதிகாரிகள் சூவை கைது செய்துவிட்டாலும், அந்தப் பையனைத் தங்களோடு அழைத்துச் செல்ல முடியாமல் போகலாம். சூ, அந்தக் குட்டிப் பிசாசை கவனித்துக் கொள்ளும்படி என்னைக் கேட்டுக் கொள்ளலாம் என்பதுதான். ஒரு வேளை, அவன் பையனை எங்களுடைய சொந்த ஊரான சூ கிராமத்திற்கு அனுப்பி வைக்கும்படி என்னிடம் கெஞ்சலாம். அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் முன்னிலையில் என்னுடைய சொந்த ஊர்க்காரன் சொல்வதை என்னால் எப்படி மறுக்க முடியும்? அந்தக் குழந்தை ஒரு எதிர்ப்புரட்சியாளன் அல்லாமல் வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே இதைக் கையாளுவதற்கு நான் ஒரு சரியான வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு அவர்கள் புறப்படுவதற்குத் தயாரானார்கள். எனக்கு சரியான தீர்வைப் பற்றி யோசிப்பதற்கு நேரமில்லை, என் மேலதிகாரிகளை மகிழ்ச்சியடையவும் செய்யவேண்டும், அதே நேரத்தில் சூ கைதானதுக்கான பழி என் மேல் விழாமலும் இருக்கும்படி பட்டுக் கத்தரித்தாற்போல் அந்த வேலையைச் செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று எனக்குத் தோன்றியது. நான் தலையைச் சொரிந்தபடி இருந்தேன். ஆனால் எனக்கு எந்த எண்ணமும் உதிக்கவில்லை.

இறுதியாக, நான் மருந்துக் கட்டை எடுத்துக் கொண்டு அவர்களைத் தொடர்ந்து சென்றபோது, போகட்டும், அந்தப் போக்கிரி இந்த ஒருமுறை என் கைவழியே நழுவிப் போய்த் தொலையட்டும் என்று, எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நிச்சயமாக இன்னொரு முறை வரும்.

எங்கள் கட்டடத்தின் நுழைவாயிலில், நான் அவனிடம் மருந்துகளைக் கொடுத்தேன். அதைப் பார்த்தபோது, அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது. `என் இனிமையான சகோதரர் சென், நீங்கள் எங்களுடைய வள்ளல். நாங்க உங்களை மறக்கவே மாட்டோம். டுன்டுன், கீழே இறங்கு. சென் மாமாவின் காலில் விழுந்து வணங்கு!' அவன் அந்த அழுக்குப் பையனைத் தரை மீது இறக்கிவிட்டான்.

`இல்லை, இல்லை. அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல.' நான் அந்தக் குட்டிக் குரங்கைத் தூக்கி, அவனை அவன் தந்தையிடம் ஒப்படைத்தேன். என்னுடைய எடுபிடி ஆள் மெங், எழுத்தர் சூ ஆகியோரின் முன்னால் அவன் இப்படி ஒரு நாடகம் ஆடுவதை நான் விரும்பவில்லை. மேலும், அந்த வேளையில் என் மூளையை எது குழப்பியது என்று எனக்குத் தெரியவில்லை. நான் என்னுடைய பர்ஸில் இருந்து இரண்டு பத்து யுவான் நோட்டுகளை எடுத்து அதை சூவிடம் கொடுத்தேன்.

அவன் பணத்தைப் பெற்றுக் கொண்டான். கண்களில் நீர் கசிய, `எங்களைக் காப்பாத்தியிருக்கிங்க!  நாங்க உயிரோட இருக்கற வரைக்கும் இதை நாங்க நினைவுல வச்சுக்குவோம்' என்றான். குழந்தையை முதுகில் சுமந்தபடி அவன் திரும்பி நடந்தான். அவனுடைய சிக்குப் பிடித்த தலைமயிரை ஈரக்காற்று பின்னால் இருந்து உசுப்பித் தூக்கியது. சருகுகள் அவர்களுக்கு முன்னால், உருண்டு உருண்டு சென்றன.

நான் ஏன் அதைச் செய்தேன் என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, நான் மிகவும் பெருந்தன்மையானவன் என்று என்னோடு இருப்பவர்களிடம் நான் காட்டிக் கொள்ள விரும்பியிருப்பேன். அல்லது அந்த அயோக்கியன் என்னிடம் என்றென்றைக்கும் நன்றியோடு இருக்கவேண்டும் என்று நான் விரும்பியிருப்பேன்.

 
பாஜின், பரவலாகப் படிக்கப்பட்ட மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். ரஷ்யப் புரட்சிக்காரர்கள் இருவரின் பெயரையும் இணைத்து, `பாஜின்' என்று புனை பெயராகச் சூட்டிக் கொண்டார்.

அவர் ஷாங்காயில் வசித்த மேல் தட்டு வர்க்கத்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அக்குடும்பத்தில் அறிவாளிகளும், உயர் பதவி வகித்தவர்களும் இருந்தனர். அந்த வீட்டில் ஐந்து தலைமுறையைச் சார்ந்த குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். பாஜின்னின் தகப்பன் வழி தாத்தாதான் ஒரு சர்வாதிகாரியைப் போலக் கோலோச்சி அனைத்தையும் முடிவு செய்து கொண்டிருந்தார். பாஜின் சிறு வயதில் தன் தாயிடமும், அதற்குப் பிறகு தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களிடமும் கல்வி பயின்றார்.

பிறகு, வெளி நாட்டு மொழிகள் கற்பிக்கும் மையத்தில் சேர்ந்து ஆங்கிலம் கற்றார். பியோதரின் புகழ்பெற்ற கையேடான `இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்' அவரை வெகுவாக ஈர்த்தது. அதற்கு அடுத்தபடியாக, எம்மா கோல்டுமென்னின் எழுத்துகளில் அவர் பெரிதும் ஆர்வம் கொண்டார். அவரைத் தன்னுடைய `ஞானத்தாய்' என்று போற்றினார்.

ஆங்கிலம் பயிலச் சேர்ந்த அந்த மையத்தில்தான் அவர் முதலில் `பிறை நிலா' என்ற இலக்கியப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கி, வசனப் பகுதிகள் நிறைய எழுதினார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஷாங்காய்க்கும், அதற்குப் பிறகு நாஞ்சிங்கில் இருந்த பல்கலைக்கழகத்துக்கும் சென்று கல்வி பயின்றார். பட்டம் பெற்றதும், ஃபிரான்சுக்குப் போய், பாரீஸ் முதலான பல ஊர்களில் சில மாதங்கள் குடியிருந்தார். ஃபிரெஞ்ச் மொழியையும் கற்றுக் கொண்டார். மீண்டும் ஷாங்காய் வந்தபோது பெரும்பாலும் அவர் மொழி பெயர்ப்புகளிலேயே ஈடுபட்டார்.

அவருடைய முதல் நாவலான `அழிவு' அவரே நடத்திய ஒரு மாதாந்திரப் பத்திரிகையில் தொடராக வெளி வந்தது. அதைத் தொடர்ந்து பத்தாண்டுகள் அவர் பல முக்கியமான நூல் வெளியீட்டு நிறுவனங்களில் ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணி புரிந்தார். அந்தச் சமயத்தில்தான் `குடும்பம்', எனும் முப்பாகமாகப் பிரிக்கப்பட்ட நாவலும், காதல் குறித்த நாவலான `மூடுபனி, மழை, மின்னல்,' மேலும் `இலையுதிர்காலத்தில் ஒரு வசந்தம்', `கடலில் கனவு' `முளை' ஆகிய குறு நாவல்களையும், `பழி' எனும் கட்டுரைத் தொடரையும் `கடவுள்கள், ஆவிகள், மனிதர்கள்' என்னும் படைப்பையும் படைத்தார்.

`அமைதியின் தோட்டம்', `வார்டு நம்பர் 4', `குளிர்கால இரவுகள்' ஆகியவை சில முக்கியமான படைப்புகள். கலாசார புரட்சியின் போது, பா ஜின் எதிர்ப் புரட்சியாளராகக் கருதப்பட்டு, மிகவும் கடுமையான தண்டனைகளுக்கு ஆளானார். அவருடைய மனைவி விதம், புரட்சியின் போது, மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் இறந்துபோனார். அவர் இறந்துபோனது பாஜினை பெருத்த தாக்குதலுக்கு ஆளாக்கியது. அவருடைய வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத வேதனையாக அது நிலைத்திருந்தது.

1977-ல் அவர் சற்றுத் தேறி வந்தார். அதற்குப் பிறகு, தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற பல இலக்கியப் பதவிகளும், சீன எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைமைப் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டன. அவருடைய பிற்கால எழுத்துகளில் மிக முக்கியமானது, `எண்ணச் சிதறல்கள்' என்னும் ஐந்து பாகங்களாக வெளி வந்த நூல். அது 1978-ல் இருந்து 1986-க்குள் எழுதப்பட்டது. அதில் அவர் மிகுந்த வேதனையோடு, ஒளிவு மறைவு இல்லாமல், கலாசார புரட்சி ஏற்படுத்திய துயரங்களை எல்லாம் வெளிப்படுத்தி இருந்தார். எதிர்கால சந்ததிகள், புரிந்துகொள்வதற்கும், தவிர்ப்பதற்கும் உதவும்படி கலாசார புரட்சி பொருட்காட்சி ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பாஜினின் எழுத்துகளில், எமிலி சோலா, இவான் துர்கனேவ், அலெக்சாண்டர் ஹெட்சன், ஆண்டன் செகாவ், எம்மா கோல்ட்மென் ஆகியவர்களுடைய எழுத்தின் தாக்கத்தைக் காணலாம். அவருடைய எழுத்துகளில் பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாகவும் உள்ளன. பள்ளிக் கல்வி முடித்த ஒருவர்கூட, மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ளும் விதத்தில், எளிய, புதிய சீன மொழியில் தன்னுடைய படைப்புகளை வழங்க வேண்டும் என்பதில் அவர் கருத்தாக இருந்தார். ஆகவே, கடினமான வார்த்தைகளையும், பொருள் விளங்காத சொற்களையும் தவிர்த்தார்.

83-ம் ஆண்டிலிருந்து பார்கின்ஸன்ஸ் வியாதியினால் பாதிக்கப்பட்டு, பேச்சும் நடையும் இழந்து, சில வருடங்கள் மருத்துவமனையிலேயே அவர் இருக்கும்படி நேர்ந்தது. இறுதியாக, 2005-வது வருடம் தம்முடைய நூற்றி ஓராவது வயதில் பாஜின், இயற்கை எய்தினார்.
`ஃபுக்குவோக்கா ஆசிய கலாசார விருது' அவருக்கு 1990-ல் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக