03/04/2011

சிவப்புக் கல் மூக்குத்தி - நதீன் கோதிமர் - தமிழில் திலகவதி

கலெடுக்கும் இயந்திரம் வீட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது, பாம்ஜி, `ஏற்கெனவே நீ இந்தியர்களைப் பத்தி முதுகுல தூக்கிச் சுமந்துகிட்டு இருக்குற பிரச்னை மட்டும் உனக்குப் போதாதா?' என்று கேட்டான். திருமதி. பாம்ஜி தன்னம்பிக்கைக் குறையாதவளாக, தன் ஓட்டைப் பல் தெரிய புன்னகை செய்தபடி, `அதனால என்ன யூசுஃப்? நம்ம எல்லாருக்கும் அதே தொல்லைங்க இருக்கத்தானே செய்யுது!' என்றாள்.

`என்கிட்ட அப்படிச் சொல்லாதே! நாம போகிற இடத்துக்கெல்லாம் கடவுச் சீட்டை எடுத்துக்கிட்டுப் போகவேண்டியதில்ல. கடவுச்சீட்டுங்களுக்கு எதிரா ஆதிவாசிக் கருப்பருங்க போராடட்டும்; அவங்க கோடிக்கணக்குல இருக்காங்க. அவங்க செஞ்சுக்கட்டுமே அதை.


எப்பொழுதும் போல இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது, பாம்ஜி குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளும், பஹாடின் குழந்தைகளுமாக ஒன்பது குழந்தைகளும் அங்கேயே இருந்தார்கள். சிறியவர்கள் காதில் விழக்கூடாத விஷயங்களைத் தனியே பேசுவதற்கு தனித்த இடமும் தனிமையும் இல்லாத ஒரு சிறிய வீடு அது என்பதால், அவர்கள் எந்தக் காலத்திலும் எப்பேர்ப்பட்ட விஷயத்தையும் கேட்கக் கூடாத அளவுக்கு மிக இளையவர்களாக இருப்பது என்பது முடிவதில்லை. அவர்களுடைய சகோதரியும், ஒன்றுவிட்ட சகோதரி பேபியும் மட்டும்தான் அங்கே இல்லை. பேபிதான் எல்லோரையும்விட மூத்தவள். அவளுக்குத் திருமணமாகிவிட்டது.

குழந்தைகள் ஆர்வத்தோடு, எவ்வித அதிர்ச்சியும் இல்லாமல், சுவாரஸ்யம் ததும்ப பாம்ஜியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாம்ஜி அறையைவிட்டு வெளியே போகவுமில்லை. தன்னுடைய சிகரெட்டுகளை உருட்டித் தயாரித்துக் கொள்ளும் வேலையில் ஈடுபடவும் இல்லை. நகலெடுக்கும் இயந்திரம் வந்ததில் குறுக்கீடு ஏற்பட்டு, அது நின்று போயிருந்தது. அழுக்குத் துணி மூட்டைக்குள் ஒளித்து வைக்கப்பட்டு ஒரு கருப்பனின் வாடகைக் காரில் வந்து இறங்கிய அதை அவன் பார்த்தான். குழந்தைகள், தொட்டதும் சுருங்கிவிடும் தலைமுடி போன்ற `புஸுபுஸு' வென்ற சுனையோடு கூடிய மலர்களைப் போல அடர்ந்த இமைகளோடு இருந்த கருவிழிகள் அகல, அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் கடைசியாக `நம்முடைய சாப்பாடு சாப்பிடுற மேசை மேல் வைக்கறதுக்கு எப்பேர்ப்பட்ட அருமையான பொருள்' என்று மட்டும் சொன்னான். அவர்கள் அந்த இயந்திரத்தை முகர்ந்து பார்த்தார்கள். சில்லென்ற கருப்பு மசையின் வாடை. அவன் கனத்த மனத்துடன் ஓசையில்லாமல் நடந்து வெளியே போனான்.

`இதை அந்தப் பக்கவாட்டுப் பலகை மேல கச்சிதமாக வைத்துவிடலாம்' என்ற திருமதி பாம்ஜி, சுறுசுறுப்பாக பிளாஸ்டிக் கார்னேஷன்ஸ் மலர்களையும் தாஜ்மகாலின் ஓவியம் தீட்டப்பட்ட வெல்வெட்டினால் ஆன அலங்காரத் துணியையும் அகற்றிவிட்டு, இயந்திரத்தை வைப்பதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.



இரவு உணவுக்குப் பிறகு, அவள் இயந்திரத்தில் துண்டு வெளியீடுகளை நகலெடுக்கத் தொடங்கினாள். அந்த அறையில்தான் குடும்பம் வசித்தது. மற்ற மூன்று அறைகளும் படுக்கைகளால் நிரம்பியிருந்தன. எல்லோரும் அங்கே இருந்தார்கள். பெரிய குழந்தைகள் ஒரு மை புட்டியில் இருந்து மையைப் பகிர்ந்து தங்களுடைய வீட்டுப் பாடங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இளைய குழந்தைகள் இரண்டும் ஒரு ஜோடி காலி பால் புட்டிகளை நாற்காலியின் கால்களுக்கு உள்ளேயும் வெளியேயுமாகத் தள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. மூன்று வயதான குழந்தை ஒன்று உறங்கிப் போனதும், பெண் குழந்தைகளில் மூத்த பெண் அதை வெளியே எடுத்துச் சென்றாள்.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் படுக்கைக்குப் போனார்கள். மூத்த குழந்தைகளுக்கு முன்பே பாம்ஜி படுக்கப் போனான். அவன் பழங்களையும் காய்கறிகளையும் விற்பனை செய்பவன். ஒவ்வொரு நாளும் காலை நாலரை மணிக்கு எழுந்து கடைத் தெருவுக்கு ஐந்து மணிக்குப் போய்விடுவான். `இன்னும் ரொம்ப நேரம் ஆகாது' என்றாள் திருமதி பாம்ஜி. மூத்த குழந்தைகள் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தன. அவன் அவளிடமிருந்து வேறுபுறம் திரும்பி நின்றான்.

அவள் முஸ்லிம் பெண்கள் பாரம்பரியமாக அணியும் ஆடைகளைத்தான் அணிந்திருந்தாள். அவளுடைய உடல் மெலிந்து, ஒரு குச்சியில் மாட்டப்பட்ட உள்ளீடற்ற ஆடையைப் போலக்கிடந்தது. குழந்தைக்குப் பால் புகட்டாத காலங்களில் மலிவான, கந்தலாகிப் போன, கிழிந்து தொங்கும் சேலை ஒன்றை அவள் தன் உடல் மீது சுற்றிக் கொண்டிருந்தாள். அவளுடைய மெலிந்த கருப்பு சடை எண்ணெய் பூசிப் பின்னப்பட்டிருந்தது.

அவள் சிறுமியாக இருந்தபோது, அவர்கள் ட்ரான்ஸ்வால் நகரில் வசித்துக் கொண்டிருந்தபோது, அவளுடைய அம்மா அவளுடைய மூக்கில் ஒரு சிவப்புக் கல் மூக்குத்தியை அணிவித்திருந்தாள். அவளுக்கே கூட அது ரொம்ப பத்தாம்பசலித்தனமான அலங்காரமாகப் பட்டதனால், அவள் வெகு காலத்துக்கு முன்பே அதைக் கழற்றிவிட்டிருந்தாள்.

அவள் நள்ளிரவு வரையிலும் கைப்பிரதிகளை நகலெடுத்துக் கொண்டிருந்தாள். அதை அவள் மிளகாய்ப் பொடி இடிக்கும் வேலையை எப்படிச் செய்வாளோ, அதே போல செய்துகொண்டிருந்தாள். அந்தக் கைப்பிரதிகளில் என்ன இருந்தது என்று பாம்ஜி விசாரித்தறியவேண்டி இருக்கவில்லை. அவன் செய்தித்தாள்களில் படித்திருந்தான். கடந்த வாரம் முழுவதும் ஆப்பிரிக்கர்கள் தங்கள் கடவுச் சீட்டுகளை அழித்துவிட்டு, தங்களைக் கைது செய்யுமாறு தங்களைத் தாங்களே அதிகாரிகளிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தலைவர்கள், குற்றம் செய்யத் தூண்டியதற்காக சிறையில் இடப்பட்டிருந்தார்கள். பிரசார மையங்கள் வேட்டையாடப்பட்டிருந்தன. போராட்டம் தொடரவேண்டும் என்பதற்காக, சிறு தலைவர்கள் மட்டும் வெளியே இருக்குமாறு யாராவது உதவி செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆயுதம் எடுத்துச் செல்லாமலும், போராட்ட மையங்களுக்குச் செல்லாமலும், பிரசார அலுவலகங்களுக்குச் செல்லாமலும் பார்த்துக் கொண்டார்கள். அந்தக் கைப்பிரதிகள் என்ன சொல்லக்கூடும்? - `நாைளக்குப் பணிக்குச் செல்லாதீர்கள்!' - `எதிர்ப்பு தினம்' - `விடுதலை வேண்டி கடவுச் சீட்டுகளை எரியுங்கள்!' இப்படி ஏதாவது. அவன் அதைப் பார்க்க விரும்பவில்லை.

வீட்டிற்கு வந்ததும் தன்னுடைய மனைவி மேசை அருகே அமர்ந்து பெயர் பெற்றவர்களோடு அல்லது அறிமுகமற்ற நபர்களோடு ஆழ்ந்த விவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இருப்பதைக் காணுவது அவனுக்கு வழக்கமாகிப் போயிருந்தது. சிலர் வழக்கறிஞர் டாக்டர் அப்துல் முகமத் கான் போன்ற அல்லது பெரு வணிகர் திரு முன்சாமி பட்டேல் போன்ற புகழ்பெற்ற இந்தியர்கள். ஒரு விதத்தில் அவர்களைத் தன் வீட்டிற்குள் சந்திப்பது அவனுக்குப் பெருமையாகக்கூட இருந்தது.

மறுநாள் வேலையில் இருந்து திரும்பியதும் அவன், டாக்டர் கான் அவனுடைய வீட்டுக்குள்இருந்து வெளியே வருவதைக் கண்டான். மெத்தப் படித்தவரான அந்த மனிதர் `அற்புதமான பெண்மணி!' என்று சொன்னதைக் கேட்டான்.

ஆனால், பாம்ஜி தன் மனைவியைப் பற்றி அப்படி ஒன்றும் அதிகப்படியாக எதையும் எண்ணுபவனல்ல. ஒரு முஸ்லிம் பெண்மணி எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ, அப்படி அவள் நடந்துகொண்டாள். நல்லபடியாக இருந்தாள். அந்த மனிதர்களோடு தன்னுடைய வேலை முடிந்ததும், அவர்களோடு சேர்ந்து ஒரு போதும் சாப்பிட உட்கார்ந்துவிட மாட்டாள். மீண்டும் அவன் அவளை சமையல் அறையில்தான் காண்பான். சாப்பாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்வதும், குழந்தைகளுடைய மனநிலைக்குத் தகுந்தபடி அவர்களோடு விளையாடுவதும் பேசுவதும் என்றுதான் அவள் இருப்பாள். `ஜிம்மி! நீ பருப்பு சாப்பிட மாட்டேன்னு சொல்றது ரொம்ப வெட்கக்கேடான ஒரு விஷயம். நமக்கு அதுதானே கிடைக்குது.' `ஆமினா, சீக்கிரமா போ. ஒரு குடம் தண்ணியைக் கொண்டு வா' `சரி நீ கவலைப்படாதே! ஒரு நிமிஷத்துல நான் அதை தச்சுக் குடுக்குறேன். அந்த மஞ்சள் பருத்தி ஆடையை எடுத்துக்கிட்டு வா. அந்தப் பக்கவாட்டுப் பலகை மேல இருக்குற சிகரெட் பெட்டில ஊசி இருக்கு.' இப்படி....

`வெளியே போய்க்கிட்டு இருக்குறது டாக்டர் கான் தானே?'' என்றான் பாம்ஜி.

`ஆமா. திங்கட்கிழமை வீட்லயே இருந்து செய்ய வேண்டிய வேலை ஒண்ணு இருக்கு. தேசாய்க்கு உடம்பு சரியில்ல. அதனால, அவரே இந்த விஷயத்தை நேரடியாகப் போய் சொல்ல வேண்டியதா ஆகிடுச்சு. பாப் ஜாலி நேத்து ராத்திரி முழுக்க துண்டுப் பிரசுரங்களை அச்சடிச்சுக்கிட்டே இருந்தார். இப்போ தன் வலிவந்த பல்லை அகற்றுவதற்காகப் போயிருக்கார். அவன் எப்போதும் சில பெண்கள் தங்கள் கணவர் முரட்டுத்தனமாக சீறி விழுவதைக்கூட அவர் தன்னுடைய அளவற்ற நல்லெண்ணத்தை மறைத்துக் கொள்வதற்காகக் கடைப்பிடிக்கிற வழி என்று எண்ணி நேசிப்பதைப் போல, அரசியல் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் இல்லாததைப் போல அவன் காட்டிக் கொள்வது, அவனுடைய குணாதிசயம் என்பதைப் போல, நடந்து கொள்வான். குடும்பச் செய்திகளைப் பற்றியும் அக்கம் பக்கத்து வீட்டாரைப் பற்றிய வதந்திகளைப் பற்றியும் சொல்வதைப் போலவே அவள் இத்தகைய அரசியல் விஷயங்களையும் அவனுக்குத் தெரிவிப்பாள்.

`இந்தக் கொலைங்களையும் கல்வீச்சுக்களையும், இதுல எல்லாம் நீ ஏன் கலந்துக்கறே, எதுக்காக? இதுலருந்து நீ எதை அடைய விரும்பறே? எனக்கு ஒண்ணுமே புரியல. காங்கிரஸ் கட்சியே இதுலருந்து விலகி நிக்கணும். இதெல்லாம் ஆதிவாசிக் கருப்பர் இனக்குழுத் தொகுதிகளுக்கு மட்டும் போதாதா என்ன?'

அவள் சிரித்தாள். `பாருங்க யூசுஃப்! நீங்க சொல்றதை நீங்களே கூட நம்புவீங்கன்னு எனக்குத் தோணல. இனக் குழுக்கள் நேட்டாலில் ஆரம்பிக்கப்பட்டப்ப, நீங்க இதையேதான் சொன்னீங்கங்கறதை நினைச்சுப் பாருங்க. நாம நம்மளோட ட்ரான்ஸ்வாலில் இருக்குற சொந்த வீடுகள்லருந்து வெளியேறினதுக்கு அப்புறம் இதைப் பத்தியெல்லாம் கவலைப்படத் தொடங்கணும்னு நீங்க சொன்னீங்க. அப்புறம் உங்களோட சொந்த அம்மாவே நுர்ட்டிராப்பில் இருந்த அவங்களோட வீட்டை இழந்தாங்க. நீங்க என்னடான்னா இப்பிடிப் பேசுறீங்க. யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலைமைதான் இருக்குதுங்கறதை நீங்களே பாத்திருக்கீங்க. இன்னிக்கு மதியம் பேபி இங்க வந்திருந்தா. இஸ்மாயிலோட தம்பிக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகுதாம். ரொம்ப நல்ல விஷயம் இல்லியா? அவனோட அம்மா ரொம்ப சந்தோஷப்படுவா. அவ அதைப்பத்தி ரொம்பக் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தா.'

ஜிம்மி, `எதுக்காக அவ கவலைப்பட்டுக்கிட்டு இருந்தா?' என்று கேட்டான். அவனுக்கு பதினைந்து வயதுதான் ஆகிறது. ஆனால், தன்னுடைய அம்மாவுக்கு மிகவும் ஆதரவாக இருக்கக்கூடியவன்.

`அவன் சீக்கிரமாகவே அவனோட வாழ்க்கையை நல்லவிதமா அமைச்சுக்கணும்னு அவ ஆசைப்பட்டா. ஞாயித்துக்கிழமை அன்னிக்கு இஸ்மாயிலோட வீட்ல ஒரு விருந்து இருக்கு. யூசுஃப், நீங்க உங்களோட சூட்டை எடுத்து என்கிட்ட குடுங்க. நான் நாளைக்கு அதை துவைச்சு சுத்தம் செஞ்சு வைக்கிறேன்.'

பெண்களில் ஒருத்தி வெளிப்பட்டாள். `அம்மா! எனக்குப் போட்டுக்கறதுக்கு நல்ல துணியே இல்ல.'

திருமதி பாம்ஜி தன்னுடைய வெளிறிய பழுப்பு முகத்தைச் சொரிந்து கொண்டாள். `ஒரு வேளை பேபி அவளோட ரோஜா நிற ஆடையை உனக்குத்  தருவா, இல்லியா? உடனே பேபி வீட்டுக்குப் போய் அவ அதை உனக்குத் தருவான்னு நான் சொன்னதா சொல்லிட்டு வா.'

பொது இடங்கள் சார்ந்த சத்தங்கள் ஒரு விதத்தில் பாதுகாப்பு உணர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாம்ஜி மேசைக்கும் பக்கவாட்டுப் பலகைக்கும் இடையில் இணைக்கப்பட்டிருந்த பளபளக்கும் கைப்பிடியோடு கூடிய நாற்காலியில் உட்காரப் போனான். தன்னை அறியாமலேயே கண்ணயர்ந்துவிட்டான். அந்த வாரங்களில் சாமான்ய தன்மையின் கனவு மயமான காலங்கள், சங்கடமான அதிர்ச்சிகளைக் கொண்டதாக அமைந்து மீண்டும் நிஜ உலகத்திற்கு இழுத்துச் செல்வதாகவும் அமைந்தது.

மறு நாள் மாலை, அவன் கடைவீதிக்குச் சென்றதும் டாக்டர் கான் கைது செய்யப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டான். அன்று இரவு திருமதி பாம்ஜி அவளுடைய மகளுக்காகப் புதிய ஆடையைத் தைத்துக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சி பாம்ஜியை செயலிழக்கச் செய்தது. அதேசமயம் அவனுக்கு அது ஒரு விதமான நிம்மதியையும் மனஉறுதியையும் தந்தது. அவனுடைய விருப்பத்திற்கு விரோதமாக ஆனால், நாள் முழுவதும் அவன் மனத்திற்குள் வளர்த்துக் கொண்டிருந்த வெறுப்புணர்வு மங்கி, கனத்த, குற்றம் சாட்டுகிற மௌனமாக உருவெடுத்தது. பகல் முழுவதும் அங்கு அந்த வீட்டிற்கு யார் யாரெல்லாம் வந்து போனார்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.

கலவரங்களும் ராணுவத்தினரின் வேட்டையாடல்களும், காவல் துறையினரின் கைதுகளும் நடைபெற்ற அந்த வாரத்தில் அவன் வீட்டுக்கு வந்தபோது, இரண்டு தடவைகள் கருப்பினத்தைச் சேர்ந்த பெண்கள், சாதாரணமான ஆதிவாசிப் பெண்கள் தங்களுடைய நீண்ட அங்கி போன்ற ஆடைகளை அணிந்தவாறு தேநீர் அருந்திக் கொண்டிருந்ததை அவன் கண்டான். இத்தகைய செயலை மற்ற இந்தியப் பெண்கள் தங்கள் வீடுகளில் செய்ய மாட்டார்கள் என்று அவன் மனக் கசப்போடு நினைத்துக் கொண்டான். ஆனால், அவனுடைய மனைவி மற்றவர்களைப் போன்றவள் அல்ல என்று சொல்வதைத் தவிர, அவனால் அவள் மேல் விரல் நீட்டி இது தீய நடத்தை என்றோ, தண்டனைக்குரியது என்றோ, புரட்சிகரமானது என்றோ குற்றம் சுமத்திவிடவும் முடியாது. அது, பஹாட் இறந்தபிறகு, ஐந்து குழந்தைகளோடு விதவையாக இருந்த அவளை மணந்து கொள்ள அவனைத் தூண்டிய அவனுடைய மனக் கவர்ச்சியைப் போல, அவனால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.

வியாழக்கிழமை காலை அவன் கண்விழிக்காதபோது, அதிகாலையிலேயே தனிப்பிரிவுக் காவல்துறையினர் அவன் வீட்டுக் கதவைத் தொடர்ந்து தட்டியவாறு இருந்தார்கள். அவனைப் பொறுத்த அளவில், அவனுடைய உள்ளுணர்வு சரியாக நாலரை மணிக்கு அவனை விழிப்புக் கொள்ளச் செய்வதுதான் வழக்கம். அதற்கு இன்னமும் ஒரு மணி நேரம் பாக்கியிருந்தது.

திருமதி பாம்ஜி எழுந்து, ஒரு நாற்காலியின் மீது தொங்கியவாறு விழுந்து கிடந்த ஜிம்மியின் மழை அங்கியை எடுத்து அணிந்தவாறு, முன் கதவைத் திறப்பதற்காகப் போனாள். பஹாடை அவள் திருமணம் செய்துகொண்டபோது, திருமணப் பரிசாக அளிக்கப்பட்டிருந்த கடிகாரம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அது மணி மூன்று என்று காட்டியது. அவள் விளக்கை எரியச் செய்தவுடன், அவளுக்கு கதவின் மறுபக்கத்தில் வெளியே இருப்பது யார் என்று சட்டென்று புரிந்தது. அவள் வியப்படையவில்லை என்றாலும், கொள்ளையர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக கம்பி சுற்றிக் கட்டப்பட்டிருந்த தாழ்ப்பாளைத் திறக்க அவள் முற்பட்டபோது, அவளுடைய கைகள் மிகவும் வயதானவர்களின் ஒரு கைகளைப் போல நடுங்கின. பிறகு, அவள் கதவைத் திறந்தாள். சீருடை அணியாத இரண்டு கருப்பினத்தைச் சேர்ந்த காவலர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். `நீங்க தானே ஸானிப் பாம்ஜி?'

`ஆமா.'

அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே, அதிகமாகத் தூங்கிவிட்டோமோ என்கின்ற அச்சம் தோன்ற பாம்ஜி சடாரென்று விழித்தான். பிறகு ஆண் குரல்கள் கேட்பதை உணர்ந்தான். இருட்டில் படுக்கையில் இருந்து எழுந்துஜன்னலுக்குப் போய், முன் கதவைப் போலவே பக்கத்தில் இருந்த சிறிய சந்து வழியாக யாரும் உள்ளே புகுந்து தொல்லை தராத அளவுக்கு நெருக்கமாக, கம்பிகளில் பிணைக்கப்பட்ட வலை வழியாகப் பார்த்தான். அச்சம் கொண்டவனாக அவன் முன் அறைக்கு வந்தபோது, நகல் எடுக்கும் இயந்திரத்துக்குப் பக்கத்தில் இருந்த பெட்டியில் காவலர்கள் எதையோ தேடி ஆராய்ந்துகொண்டிருந்ததைப் பார்த்தான். `யூசுஃப் அவங்க என்னைத் தேடித்தான் வந்திருக்காங்க' என்றாள் திருமதி பாம்ஜி.

சட்டென்று பொறி ஒன்று தட்டி, உள்ளுக்குள் ஏதோ சட்டென்று முறிந்தது போல அவனுக்குள் ஒரு தெளிவு பிறந்தது. அவன் பழைய சட்டை ஒன்றை எடுத்துப் போட்டபடி, அந்த இரண்டு காவலர்களின் முன்னால் வந்து நின்றான். ஆதிவாசிக் கருப்பினத்தவருக்காக அவனுடைய மனைவி சிறைக்குப் போகப் போகிறாள். அவளிடமிருந்து தள்ளி நின்றபடி, `பாத்தியா நீ செஞ்ச வேலைய?' என்று சத்தம் போட்டான். `நீ செஞ்சதுக்கெல்லாம் என்ன கிடைச்சிருக்குன்னு பாத்தியா? நான் உனக்கு சொல்லலை? சொன்னேனா இல்லியா? எல்லாம் முடிஞ்சிருச்சு. இதுதான் கடைசிக் கூட்டம். கடைசியில எல்லாம் இந்த நிலைமைக்கு வந்தாச்சு.' அவள் கன்னத்தில் விழவிருக்கும் ஒரு அறையைத் தவிர்ப்பது போல, தலையை லேசாக ஒருபுறமாகச் சாய்த்தபடி, அல்லது அளவற்ற கருணையோடு செவிமடுப்பது போல தலையைச் சற்றே சரித்தபடி அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டாள்.

பஹாடின் மகன் ஜிம்மி ஒரு பெட்டியோடு கதவருகே வந்து நின்றான். இரண்டு அல்லது மூன்று பெண்கள் அவனுக்குப் பின்னால் நின்றார்கள். `இந்தாங்கம்மா! நீங்க என்னோட பச்சை மேல் கோட்டை எடுத்துக்கங்க. நான் உங்களோட சுத்தமான ஜாக்கெட்டை எடுத்து வச்சிருக்கேன்.' அவர்கள் தங்கள் தாயாருக்கு உதவியாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய பாதையில் இருந்து பாம்ஜி விலகி நிற்கவேண்டியிருந்தது. அவனுடைய மனைவி செய்த தடபுடலான ஆர்ப்பாட்டகளை பார்த்தால் அது ஏதோ ஒரு குடும்பத் திருவிழாவுக்கான தயாரிப்புப் போல இருந்தது. அவன் குறுக்கே வந்தபோதெல்லாம், அவர்கள் அவன் மீது இடித்தவாறு நடந்தார்கள். `மன்னிச்சுக்கங்க' என்று முனகியபடி, அந்த இரண்டு காவலர்கள் கூட அவனை நகர்த்திக்கொண்டு தங்களுடைய தேடலை வீடெங்கும் தொடர்ந்து மேற்கொள்ள அவனுடைய வீட்டுக்குள்ளே நகர்ந்தார்கள்.

அவர்கள், நேரு சிறையில் இருந்தபோது எழுதிய ஒரு பெரிய நூலை எடுத்துக்கொண்டார்கள். அது தெருக்களில் விற்பனை செய்தபடி செல்லும் ஒரு விற்பனையாளனிடம் இருந்து வாங்கப்பட்டு, வருடக்கணக்காக அடுப்பங்கரை தண்டயப் பலகையின் மீது வைக்கப்பட்டிருந்தது. சட்டென்று திருமதி பாம்ஜி, `அய்யய்யோ! தயவு செஞ்சு அதை எடுக்காதீங்க!' என்று அதைக் கையில் வைத்திருந்த காவலரின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். அவன் அந்தப் புத்தகத்தை அவளிடம் இருந்து விலக்கிப் பிடித்தபடி நின்றான். `என்னாச்சும்மா, அது என்ன அது அப்பேர்ப்பட்ட ஒரு விஷயம்?' வீட்டில் இருந்தவர்கள் யாரும் அதைப் படித்ததில்லை. ஆனால், அவள், `அது என் குழந்தைங்களுக்காக' என்றாள்.

`விடுங்கம்மா' என்றான் தடித்து, கொழுத்து, குட்டையாக இருந்த ஜிம்மி. ஒரு பட்டாடையின் மீது விருப்பம் கொண்டுவிட்ட வாடிக்கையாளருக்கு அறிவுரை கூறும் வியாபாரியைப் போல இருந்தது அவன் பேச்சு. அவள் படுக்கை அறைக்குள் சென்று உடுத்திக்கொண்டு வந்தாள். அவள் தன்னுடைய பழைய மஞ்சள் புடவையை அணிந்துகொண்டு, மேலே பழுப்பு வண்ண அங்கியைப் போட்டுக்கொண்டு வந்தபோது, அவள் முகத்துக்குப் பின்னால் தெரிந்த குழந்தைகளின் முகங்களைப் பார்க்கும்போது, புகைவண்டி நிலைய பிளாட்பாரத்தில் காண்கிற ஒரு காட்சியைப் போல அது இருந்தது. அவர்கள் எல்லோரும் முத்தமிட்டு அவளை வழியனுப்பினார்கள். காவலர்கள் அவளை துரிதப்படுத்தவில்லை. ஆனால், அவளே வேக வேகமாகத்தான் கிளம்பினாள்.

எல்லோரையும் குற்றம் சாட்டுவது போல், `இனி நான் என்ன செய்யப்போறேன்?' என்றான் பாம்ஜி.

காவலர்கள் பொறுமையாக வேறு புறம் திரும்பிக் கொண்டார்கள்.

`எல்லா சரியாயிடும். பேபி உதவியா இருப்பா. பெரிய குழந்தைங்க சமாளிச்சுக்குவாங்க. அப்புறம் யூசுஃப்...' குழந்தைகள் அவளைச் சூழ்ந்து கூட்டமாக நின்றார்கள். அப்போதுதான் விழித்தெழுந்த சின்னக் குழந்தைகள் இரண்டு பேரும் ஓடி வந்து, கீச்சென்ற குரலில் என்னென்னவோ கேள்விகளை எழுப்பினார்கள்.

`சரி, சரி, வாங்க!' என்றார்கள் காவலர்கள்.

`நான் என் வீட்டுக்காரர்கிட்ட ஒரு வார்த்தை பேசணும்.' அவள் காவலர்களிடம் இருந்து தன்னை உதறிக்கொண்டு அவனிடம் வந்தாள். அவளுடைய புடைவையின் அசைவினால் ஒரு கணம் மற்றவர்கள் அனைவரும் பார்வைக்கு மறைந்தார்கள். அவனும் கைது செய்யப்படும் வரை அவள் செய்த துண்டுப் பிரசுரங்களை அச்சிடும் பணியை வேறு எந்த முட்டாளிடமாவது ஒப்படைக்கும்படி எதாவது ஒரு தகவலை அவள்தன்னிடத்தில் வேண்டுகோளாக வைக்கப்போகிறாள் என்கிற எதிர்பார்ப்புடன் சந்தேகம் கொண்ட அவனுடைய முகம் இறுகியது. `ஞாயித்துக்கிழமை, இவங்க எல்லாரையும் தவறாம ஞாயித்துக்கிழமை கூட்டிக்கிட்டுப் போயிடுங்க' என்றாள் அவள். அவள் என்ன சொல்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை. `நிச்சயதார்த்த விருந்து...' அவள் கிசுகிசுக்கிற தாழ்ந்த குரலில் அவசரமான தொனியில் சொன்னாள். `அவங்க அதை தப்பவிட்டுடக்கூடாது. இஸ்மாயில் வருத்தப்படுவான்.'

கார் அங்கிருந்து போவதை அவர்கள் கவனித்தபடி நின்றார்கள். ஜிம்மி கதவை தாழிட்டான். பிறகு, மீண்டும் திறந்தான். அவனுடைய அம்மா அணிந்திருந்த மழை அங்கியை எடுத்தான். `போய் பேபிகிட்ட சொல்லிட்டு வர்றேன்' என்றான். குழந்தைகள் மீண்டும் படுக்கைக்குப் போனார்கள். அவர்களுடைய அப்பா அவர்கள் யாரிடமும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர்களுடைய பேச்சு, சின்னக் குழந்தைகளின் அழுகைச் சத்தம், வளர்ந்த பிள்ளைகள் அவர்களோடு வாதாடும் குரல்கள் எல்லாம் படுக்கை அறைக்குள் இருந்து கேட்டவாறு இருந்தன. அவன் தனிமையில் இருந்தான். இரவு, தன்னைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருப்பது போல அவருக்குத் தோன்றியது.

பிறகு அவள் தற்செயலாக கடிகாரத்தைப்  பார்த்தான். பழக்கமற்ற ஒரு பயங்கரமான உணர்வு அவனைப் பீடிக்க, இந்த இரவு ஒரு ரகசியமான விஷயமல்ல, அவன் ஏற்கெனவே அடையாளம் கண்டு கொண்டிருக்கக்கூடிய ஒரு நேரம்தான் என்பதைப் புரிந்துகொண்டான். அவன் எப்போதும் விழிக்கும் வேளை. அவன் தன்னுடைய ஆடைகளை அணிந்துகொண்டு, அழுக்கான, விற்பனைக்கென வெளியே செல்லும்போது அணியும் வெண்ணிற மேலங்கியைப் போட்டுக்கொண்டு, கன்னத்தில் வெண்முள்ளாய் முளைத்திருந்த சில நாள் தாடியை சாம்பல் வண்ண உல்லன் துண்டினால் மறைத்துக் கட்டிக்கொண்டு வேலைக்குப் போனான்.
பக்கவாட்டுப் பலகையின் வெளியில் இருந்த நகலெடுக்கும் இயந்திரத்தை காவலர்கள் மற்ற பிரசுரங்களோடும், மாநாட்டுக் கூட்டங்கள் பற்றிய அறிக்கைகளோடும், படுக்கைகள் இருந்த துணிமணிகள் வைக்கும் அலமாரியின் மேல்புறத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய செய்தித்தாள்களோடும் சேர்த்து எடுத்துக்கொண்டு போயிருந்தார்கள். அவை வெள்ளைக்காரர்கள் படிக்கும் வழக்கமான கனமான தினசரிகள் அல்ல; மெல்லிய தற்காலிகமானவை போலத் தோற்றம் அளிக்கும் செய்தித்தாள்கள். சில சமயங்களில் அடக்குமுறையினாலும் பல சமயங்களில் நிதி வசதி இல்லாததினாலும் நின்றுபோய்விடும் தங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்யும் பத்திரிகைகள்.

அவளைத் திருமணம் செய்துகொண்டு அவள் ஐந்து குழந்தைகளோடு வசித்துக்கொண்டிருந்த பஹாடின் வீடாக இருந்த அந்த  வீட்டிற்குள் அவன் குடிபெயர்ந்ததுக்குப் பிறகு அந்த வீடு அது பாம்ஜி இல்லமாக ஆகியது. அந்த எளிமையான, குற்றங்களற்ற, மேல் பார்வைக்கு சாதாரணமான உபயோகமில்லாத வேலையைப் போலத் தோற்றமளித்த, இரவு நேரங்களில் சாப்பாட்டு அறை மேசையின் மீது வைத்து எழுதப்பட்ட அந்த மாநாடுகளைப் பற்றிய அறிக்கைகள், அரசாங்கத்தின் நீலப் புத்தகங்கள், குழந்தைக்குப் பால் கொடுத்தபடி படிக்கப்பட்ட அந்த நூல்கள், வளர்ந்த குழந்தைகள் காங்கிரஸுக்காக செய்த காகித ரோஜாக்கள் ஆகிய இத்தகைய பணிகள் - மலைகளை நகர்த்தும் நோக்கத்தோடு செய்யப்பட்டவை என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. வருடக்கணக்காக  அவன் அதை கவனிக்கவே இல்லை. இப்போது எல்லாம், எல்லாமே போய்விட்டன.

2

வீடு அமைதியாக இருந்தது. குழந்தைகள் தங்கள் அறைக்குள் இருந்தார்கள். கதவைச் சாத்திக்கொண்டு, கூட்டமாகப் படுக்கையில் படுத்துக்கொண்டார்கள். அவன் உட்கார்ந்தவாறு பிளாஸ்டிக் கார்னேஷன் மலர்களும், தாஜ்மகாலின் படமும் வரைந்த வெல்வெட் விரிப்பும் வைத்த இடத்தில் அப்படியே இருப்பதைப் பார்த்தான். முதல் சில வாரங்களுக்கு அவன் அவளைப் பற்றிப் பேசவே இல்லை. வீட்டிற்குள் அவள் சார்ந்த உணர்வுகள் மண்டியிருந்தன. அவன் அழுதான். அவள் மீது கோபப்பட்டான். அவள் இல்லாது போனது பெரிய தூண்களாக, பாறைகளாக, இடிகளாக அவன் மீது இறங்கியது. ஆனாலும், அவன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவள் எங்கே இருக்கிறாள் என்றுகூட விசாரிக்கவில்லை.

ஜிம்மியும், பேபியும் முகம்மது இப்ராஹிம் என்ற வக்கீலிடம் போய் வந்தார்கள். அவர், அவர்களுடைய தாயார் கைது செய்யப்பட்டதும் அருகே இருக்கிற நகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் என்பதை மட்டும் அவர் விசாரித்துச் சொன்னார். அவர்கள் மணிக்கணக்காக அந்தச் சிறையின் பெரிய கதவின் முன்னால் நின்றதற்குப் பிறகு, அவள் அங்கே இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டாள் என்ற செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. அவர்கள், கடைசியாக, அவள் ஐம்பது மைல்களுக்கு அப்பால் பிரிட்டோரியாவில் இருக்கிறாள் என்பதை கண்டுபிடித்தார்கள்.

ஜிம்மி, பாம்ஜியிடம் பேபி புகைவண்டியில் பிரிட்டோரியா போக டிக்கெட் செலவுக்காக ஐந்து ஷில்லிங்குகள் கேட்டான். அங்கு அவள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட பிறகு, அவளுடைய தாயாரை சந்திப்பதற்கு அவளுக்கு அனுமதி தரப்படும். அவன் ஜிம்மி எடுத்துக் கொள்ளும்படியாக மூன்றின் இரண்டு ஷில்லிங் சில்லறையே மேசையின் மீது வைத்தான், அந்தப் பையன். அவள், அதிகப்படியான ஒரு ஷில்லிங் கொடுத்ததற்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா அல்லது அவனிடத்தில் சில்லறை இல்லை என்பது மட்டும்தான் அதன் பொருளா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவனைப்போல அவனை உற்றுப் பார்த்தான்.

வீட்டுக்கு விருந்தாளிகளும் உறவினர்களும் வரும் சமயத்தில் மட்டும்தான் பாம்ஜி திடீரென்று பேசத் தொடங்குவான். அவனுடைய வாழ்க்கையில் இந்த விருந்தினர்களுடன் இருந்த சமயங்களில் அவன் பேசியதைப் போல அவ்வளவு விரிவாக அவன் எப்போதுமே பேசியதே இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் துக்கம் விசாரிப்பதற்காக வந்தவர்களைப் போல அல்லாமல், மரியாதையின் நிமித்தம் அவனைக் கண்டு செல்ல வந்தவர்கள்.

`ஆமா, ஆமா. நான் என்ன கதியில இருக்கேன்னு நீங்கதான் பாக்குறீங்களே. எனக்கு என்ன நடந்திருக்குங்கறதை பாருங்க. ஒம்பது குழந்தைங்க. நான் நாள் முழுக்க வண்டிய ஓட்டிக்கிட்டு வியாபாரம் செய்யறவன். ராத்திரி ஏழு இல்லன்னா எட்டு மணிக்கு வீடு திரும்புறேன். என்னால வேற என்ன செய்ய முடியும்? என்னை மாதிரி ஆளுங்களால என்னதான் செய்ய முடியும்?'

`பாவம் திருமதி பாம்ஜி. எவ்வளவு அன்பான மனுஷி.'

`சரி. நீங்களே பாருங்க. அவங்க நடு ராத்திரில வீட்டுக்குள்ள புகுந்து, வீடு முழுக்க வண்டியை ஓட்டிக்கிட்டு, வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருக்கறவன். எதையாவது செஞ்சு சம்பாதிச்சாகணுமே.' மேல் சட்டையைப் போட்டவாறு அவன் கைகளை அசைத்து, அசைத்து உணர்ச்சிவசப்பட்டவனாகப் பேசுவான். வந்தவர்களுக்கு பழரச பானங்கள் தரும்படி பெண் குழந்தைகளுக்குக் குரல் கொடுப்பான்.

அவர்கள் எல்லோரும் போன பிறகு, பக்திமான் என்று இல்லாவிட்டாலும், மிகவும் கட்டுப் பெட்டியான எப்பொழுதுமே மது அருந்தாத அவன் ஏதோ குடிபோதையில் இருந்து சட்டென்று தெளிவு பெற்றவனைப் போல ஆவான். குழப்பத்துடன் விழிப்பான். அவன் என்ன பேசிக்கொண்டிருந்தான் என்பதை அவனாலேயே நினைவுக்குக்கூட கொண்டுவர முடியாது. உணர்ச்சிகளின் வெம்மை தணிந்ததும், வெறுப்புணர்வும் குற்றமிழைக்கப்பட்டு விட்ட உணர்வும் அவன் தொண்டைக் குழியில் பந்தாய் மீண்டும் திரளும்.

ஒருநாள் மாலை வேளையில் அறைக்குள், சிறிய பையன் ஒருவனை நிறுத்தி வைத்து, அவனுடைய சகோதர, சகோதரிகள் அவனுக்காக ஒரு குழுவாக இணைந்து பரிந்து பேசுவதை பாம்ஜி கேட்டான். `அவங்க அஹமதுகிட்ட ரொம்பக் கொடூரமா நடந்துக்கிட்டாங்க.'

`அவன் என்ன செஞ்சான்?' என்று பாம்ஜி விசாரித்தான்.

`ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல.' தன்னுடைய கைக்குட்டையை உணர்ச்சிவசப்பட்டவளாய் முறுக்கியபடி சிறிய பெண் சொன்னாள்.

தன் தாயைப் போலவே மெலிந்த உடல் கொண்ட பெரிய பெண், தன்னுடைய எலும்பும் தோலுமான கையை அசைத்து எல்லோரையும் அமைதிப்படுத்தினாள்.

`பள்ளிக்கூடத்துல அவங்க அப்பிடி செஞ்சுட்டாங்க. அவனை ஒரு உதாரணமா காட்டினாங்க.'

`என்ன உதாரணம்?' பொறுமை இழந்தவனாக பாம்ஜி கேட்டான்.

`வாத்தியார் அவனைக் கூப்பிட்டு கிளாஸ்ல இருந்த எல்லாருக்கும் முன்னாடி நிறுத்தினார். அப்புறம் இந்தப் பையனைப் பாத்தீங்களா, அவனோட அம்மா ஆதிவாசிகளான கருப்பின மக்களை ரொம்ப விரும்புற காரணத்தால சிறைக்குப் போயிருக்காங்க. அவங்க இந்தியர்களும் ஆதிவாசிங்களை மாதிரியே இருக்கணும்னு விரும்பறாங்க என்று சொன்னார்.'

`பயங்கரம்' என்றான் அவன். அவன் கைகளை பட்டென்று கீழே போட்டான். `அவ எப்பவாவது அப்பிடி நினைச்சிருக்காளா?'

ஜிம்மி தான் படித்துக்கொண்டிருந்த காமிக் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, மேசையின் மீது தன்னுடைய பள்ளிப் புத்தகத்தை எடுத்து வைத்தவாறு, `அதனாலதான் அம்மா அங்க இருக்காங்க' என்றான். `குழந்தைங்களுக்குத் தெரியவேண்டியது அவ்வளவுதான். இது மாதிரியான விஷயங்கள் நடக்கறதாலதான் அம்மா அங்க இருக்காங்க. பீட்டர்சன் கருப்பினத்தைச் சேர்ந்த வாத்தியார். அவரோட கருப்பின ரத்தம் வாழ்நாள் முழுசும் அவருக்குப் பல துன்பங்களை தந்திருக்கணும்னு நான் நினைக்கிறேன். எல்லாரும் ஒண்ணுதான்னு யாராவது சொல்றதை அவர் வெறுக்கறார். ஏன்னா, அது அவர்கிட்ட இருக்குற கொஞ்சம் வெள்ளைத்தனத்தையும் வெளியேத்திடுது. நீங்க வேற எதை அவர்கிட்டே எதிர்பார்க்குறீங்க? இதைப் பத்தி இவ்வளவு ஆரவாரம் செய்யறதுக்கு எதுவுமில்ல.'

`அது சரி, உனக்குப் பதினஞ்சு வயசுதான் ஆகுது. ஆனா, உனக்கு எல்லாம் தெரியும்' பாம்ஜி அவனைப் பார்த்து முனகினான்.

`நான் அப்படிச் சொல்லல. ஆனா, எனக்கு என் அம்மாவைப் பத்தித் தெரியும்.' -பையன் சிரித்தான்.

அரசியல் கைதிகளுக்கு இடையே உண்ணா நோன்பு அனுசரிக்கப்பட்டது. பேபியிடம் அவளுடைய அம்மாவும் உண்ணாநோன்பு மேற்கொண்டிருக்கிறாளா என்று விசாரித்து அறிய பாம்ஜிக்கு மனம் வரவில்லை. அவன் கேட்கவில்லை. ஆனால், அந்த இளம் பெண்ணின் முகத்தில் அவளுடைய தாயின் படிப்படியான மெலிவை அவனால் காணமுடிந்தது. உண்ணாநோன்பு கிட்டத்தட்ட ஒரு வாரம் தொடர்ந்தபோது, பெரிய குழந்தைகள் உணவு மேசைக்கு வந்து கண்ணீர் சிந்தியவாறு, சாப்பிட முடியாமல் வேதனைப்பட்டதை அவன் கண்டான். பாம்ஜி, அவனுடைய உணவுத் தட்டையே ஆத்திரத்தோடு அப்புறமாகத் தள்ளிவிட்டான்.

சில சமயங்களில் காய்கறி வண்டியை ஓட்டிச் சென்றபோது, அவன் சத்தமாக, தனக்குத்தானே பேசிக்கொண்டான். `எதுக்காக? எதுக்காக?' மறுபடியும் மறுபடியும். `எதுக்காக?

எதுக்காக?' என்று அவன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அவள் தன் தலைமுடியை வெட்டிவிட்டுக் கொண்டு, குட்டைப் பாவாடையை அணியும் ஒரு நவீனப் பெண் அல்ல. அவன் சாதாரணமான, ஒரு நல்ல முஸ்லீம் பெண்மணியை மணந்துகொண்டான். அவள் அவனுக்குக் குழந்தைகள் பெற்றுக் கொடுத்தாள். மிளகாயைத் தானாகவே இடித்தாள். சட்டென்று அவன் மனக்கண்ணில், அவள் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்படுவதற்கு முந்தைய நாள் அமர்ந்திருந்ததைப் போல, அவள் நகலெடுக்கும் இயந்திரத்தின் முன் உட்கார்ந்திருக்கும் காட்சி தோற்றமளித்தது. அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது போலிருந்தது, குழப்பமாக இருந்தது. நம்பிக்கை அற்ற நிலையை அடைந்துவிட்டான். குற்றம் நடந்த இடத்தில், அதற்கு பலியாகி, அது ஏன் நடந்தது, எதற்காக நடந்தது என்று புரிந்துகொள்ளவோ, அறிந்துகொள்ளவோ நேரமும் இல்லாத ஒருவனின் ஆவியைப் போல அவன் ஆகிவிட்டான்.


சிறையில் இரண்டாவது வாரமும் உண்ணா நோன்பு தொடர்ந்தது. கடகடக்கும் அவனுடைய லாரியில், அவன் தனக்குத்தானே பேசிக்கொண்ட வார்த்தைகள் வேறு எவரோ பேசிய சொற்களைப் போலவே அவனுக்குக் கேட்டது. அவனுடைய இதயம் அவற்றுக்கு எதிரான பற்றி எரியும் விவாதங்களில் எரிந்தது. `நம்ம கடைங்களை நொறுக்கி, நம்ம வீட்டுக்குள்ள புகுந்து, நம்மளையே கொல்லுற ஆதிவாசிகளோட கூட்டத்துக்காக அவ அங்க சாகற வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கா. `அவ அங்க செத்துப் போயிடுவா. `பேய்ங்க நம்மை எரிச்சுக் கொன்னுடும்.' ஒவ்வொரு நாள் இரவும் அவன் படுக்கையில் ஒரு பாறையைப் போல விழுந்தான். காலை வேளைகளில் பாதங்களில் அடிக்கப்பட்டு எழுப்பப்படும் சுமை இழுக்கும் மிருகத்தைப் போல தன்னைத் தானே படுக்கையிலிருந்து இழுத்துக்கொண்டு வெளியே சென்றான்.

ஒருநாள் காலை பேபி வெகு சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்திருந்தாள். அவன் ரொட்டியையும், தேநீரையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். காய்ந்துபோன ரொட்டியின் வறட்டு இறுக்கமும், கொதிக்கும் தேநீரின் சூடுமாக சமையலறையிலிருந்த மேசை அருகே அவன் அமர்ந்திருந்தான். அவளுடைய உண்மையான பெயர் பாத்திமா.

 

தொழிற்சாலையில் தன்னுடன் பணிபுரியும் மற்ற இளம்பெண்களைப் போல ஆடைகளை அணிவது  மாதிரியே அவள் இந்த அற்பத்தனமான, நவீனமான பெயரையும் தனக்குத்தானே சுவீகரித்துக் கொண்டிருந்தாள். இன்னும் ஓரிரு வாரங்களில் அவளுடைய முதல் குழந்தை பிறக்கும் என்ற நிலை. அவன் அவளுடைய சிறிய முகமும், அவள் தலைமுடியை வெட்டி சுருட்டிவிட்டிருந்த விதமும், புருவங்களை மையால் தீட்டியிருந்த தினுசும், ஆகிய இவை எதுவும் சுருக்கங்கள் வைத்துத் தைக்கப்பட்ட ஆடைக்கு உள்ளேயிருந்து துருத்திக் கொண்டிருந்த அவளுடைய உடலுக்குச் சொந்தமானவை போலவே தெரியவில்லை. அவள் இளம் ஊதா வண்ண உதட்டுச் சாயம் பூசியிருந்தாள். வெள்ளைக்கார இளம் பெண்களைப் போல துணிவாகவும், முட்டாள்தனமாகவும் பகட்டுப் புன்னகை செய்தாள். மொத்தத்தில் அவள் ஓர் இந்தியப் பெண்ணைப் போலவே இல்லை.

`என்ன விஷயம்?' என்று அவன் கேட்டான்.

அவள் மீண்டும் புன்னகை செய்தாள். `உங்களுக்குத் தெரியாதா? அதிகாலையில இந்த நேரத்துக்குள்ள என்னை எழுப்பிவிட்டுடணும்னு நான் பாபிகிட்ட சொல்லியிருந்தேன். உங்களை இன்னிக்குப் போகவிட்டுடக்கூடாதுங்கறதுல நான் உறுதியா இருந்தேன்.'

`நீ எதைப் பத்திப் பேசறேனு எனக்குப் புரியல.'

அவள் அருகே வந்து விருப்பமற்ற அவன் கழுத்தின் மீது தன் கரங்களை வைத்து, வாய்ப்புறத்தில் இருந்த அவனுடைய நரைத்த முடித்திரளின் மீது முத்தமிட்டாள்.

`வாழ்த்துக்கள்! இன்னிக்கு உங்க பிறந்த நாள்ங்கறது உங்களுக்குத் தெரியாதா?'

`தெரியாது. எனக்குத் தெரியாது. அதைப் பத்தி நான் நினைக்கவே இல்ல.' அவன் சட்டென்று ரொட்டியை எடுத்து தன் கவனம் முழுவதையும் சாப்பிடுவதிலும், தேநீர் அருந்துவதிலும் திருப்ப முயன்றான். வேகமாக மென்றான். ஆனால், அவன் விழிகள் அவளைப் பார்த்தபடி இருந்தன. அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவனோடு அங்கேயே நின்றாள். அவள் பேசமாட்டாள். இறுதியாக அவன் தொண்டையைக் கிழித்தபடி உள்ளே சென்ற ஒரு துண்டு ரொட்டியை விழுங்கியபடி, `எனக்கு இந்த விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வர்றதில்ல' என்றான்.

அந்தப் பெண் தன் காதிலிருந்த வளையங்கள் ஆட, தலையசைத்தாள். `நேத்து நாங்க அம்மாவப் பாத்ததும் அவங்க சொன்ன முதல் விஷயம், நாளைக்கு பாம்ஜியின் பொறந்த நாள். அதை மறந்துடாதே அப்படிங்கறதுதான்.'

அவன் அதைக் கேட்டதும் தோள்களைக் குலுக்கினான். `குழந்தைகளுக்கு அது ஒரு பெரிய விஷயம். ஆனா அவ அப்படித்தான். யாராவது வயசான, ஒண்ணுவிட்ட சகோதர, சகோதரிங்களோ, அண்டை வீட்டுக்காரங்களோட பாட்டியோ எப்பவும் எல்லாரோட பொறந்த நாளையும் அவ தெரிஞ்சு வச்சிருப்பா. என்னோட பொறந்த நாள் எந்த விதத்துல முக்கியத்துவமானது, அதுலயும் அவ சிறைக்குள்ள உக்காந்திருக்கறப்ப? அவளோட மனசு முழுக்க இப்பிடி பெண்கள் செய்யக்கூடிய முட்டாள்தனமான விஷயங்களால நிறைஞ்சிருக்கறப்ப, வேற விஷயங்களையும் அவளால எப்படி செய்ய முடியுதுன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல. அவனைப் பத்தி என்னால புரிஞ்சுக்கவே முடியாது அதுதான்.'

`சரி. ஆனா உங்களுக்குத் தெரியாதா? அவங்களுக்கு யாரும் புறக்கணிக்கப்படுறது பிடிக்காது. அதனாலதான் அவங்க எப்பவும் எல்லாத்தையும், எல்லாரையும் ஞாபகத்துல வச்சிருக்காங்க. வசிக்க இடமில்லாதவங்களை, பசியோட இருக்குற குழந்தைங்களை, கல்வி பெறமுடியாத சிறுவர்களைன்னு எல்லோரையும் எல்லாக் காலத்துலயும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அது.... அதுதான் அம்மா.'

`வேற யாரும் அப்பிடி இல்லியே.' அவன் குரல் ஒரு பாதி புகாரைப் போல ஒலித்தது.

`இல்ல, வேற யாரும் அப்பிடி இல்ல' என்றாள் அவனுடைய மாற்றான் மகள்.

அவள் மேசையில் தன்னுடைய வயிற்றை அழுத்தியவாறு உட்கார்ந்தாள். அவன் தன் கைகளால் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான். `எனக்கு வயசாயிக்கிட்டிருக்கு. ஆனா...' அவன் அந்த பதிலின் மூலமாக வேறு ஏதோ ஒரு விநோதமான உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டான்.

அவன் ஏன் அவள் மீது ஆசைப்பட்டான்? ஐந்து குழந்தைகளோடு இருந்த அழகில்லாத விதவை; அவள் எந்த விதத்திலும் மற்றவர்களைப் போன்றவள் இல்லை என்பதை அவன் அறிந்திருந்தான்; அதுதான். அவனுக்கும் அவனுடைய மகளுக்கும் இடையில் இருந்த அந்த கர்ப்ப வயிறு எவ்வளவு உண்மையோ அது அவ்வளவு உண்மை.



ஆசிரியர் குறிப்பு

நதீன் கோதிமர் ஷோகன்னஸ் பர்க்குக்கு வெளியே இருந்த ஒரு சிறு நகரத்தில் பிறந்தவர். அவருடைய பெற்றோர் இருவரும் யூதர்கள். ஷோகன்னஸ்பர்க்குக்கு அருகே குடியேறியவர்கள். கடிகாரங்கள் செய்பவரான அவருடைய தந்தை லாத்வியா எல்லையில் இருக்கும் லுத்துவேனியாவைச் சார்ந்தவர். அவருடைய தாய் லண்டன் நகரைச் சேர்ந்தவர்.

நிற வேறுபாடு, பொருளாதார வர்க்க பேதம் ஆகியவை குறித்து கோதிமர் இளம் வயதிலிருந்தே ஆர்வம் கொண்டதற்கும், தென்னாப்பிரிக்காவின் நிற வேறுபாட்டுக் கொள்கைக்கு எதிரான குரல் எழுப்பவும், அவருடைய பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது.

வளர் இளம் பருவத்திலேயே அதிகார மையங்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாவதின் வேதனையை கோதிமர் அறிந்தவராக இருந்தார்.

நதீன் கோதிமரின் முதல் கதை அவருடைய பதினைந்தாவது வயதில் எழுதப்பட்டது. பின்னால், `நியூயார்க்கர்' போன்ற பல முக்கியமான பத்திரிகைகளில் அவருடைய கதைகளும், படைப்புகளும் வெளிவரத் தொடங்கிய பிறகு, அவர் உலகம் முழுவதும் அறியப் பெற்றவரானார். மண்டேலா 1990-வது வருடத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபோது, அவர் முதலில் பார்க்க விரும்பிய வெகு சிலரில் கோதிமரும் ஒருவர். தொன்னாப்பிரிக்க காங்கிரஸ் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டிருந்த காலத்திலேயே கோதிமர் அந்த இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டார்.

இதன் காரணமாக, அவருடைய பல படைப்புகள், புதினங்கள் நீண்ட காலத்துக்குத் தடை செய்யப்பட்டன. நிற வேற்றுமைக்காக மட்டுமல்லாமல், பொதுவாக மக்கள் வாழ்வு, ஆரோக்கியம், அரசு அடக்குமுறை என்ற சிந்தனைகளிலேயே மூழ்கியவர் அவர். தென்னாப்பிரிக்கா ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால், உலக நாடுகளிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயம் வெளியே தெரிந்தபோது, அதை சீர்படுத்துவதற்கான பெரு முயற்சிகளில் கோதிமர் ஈடுபட்டார். மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நிதி திரட்டும் பணியில் அங்குள்ள எழுத்தாளர்கள் பலரை ஈடுபடுத்தினார்.

மனிதர்களுக்கு இடையே பேதங்களை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கோதிமருடைய மனப்பான்மையை 1998-ல் அவருடைய பெயர் ஆரஞ்ச் பரிசுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டபோது, அதை மறுத்ததிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதற்காக அவர் சுட்டிய காரணம், அந்தப் பரிசு பெண் எழுத்தாளர்களுக்கு மட்டுமேயானது என்பதே.

அவர் 1974-ல் புக்கர் விருதைப் பெற்றார். வேறு பல மதிப்புக்குரிய இலக்கிய விருதுகளைப் பெற்ற கோதிமர் 1991-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். அவருடைய பல படைப்புகளும் சமூக அவலங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட போர்க் குரலாகவே ஒலிக்கிறது

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக