03/04/2011

நேர்காணல் - நாசர்

தாநாயகனாக, குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக, வில்லன் நடிகராக கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பன்முகப்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார் நாசர். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைத் தனக்குள் உள்வாங்கிக் கொள்பவர். அவர் தமிழ் சினிமா மீது கொண்டுள்ள அக்கறையை அவர் தயாரித்த, இயக்கிய சில திரைப்படங்களின் மூலம் அறிந்துகொள்ள முடியும். பொது நிகழ்வுகளில் அவர்  வெளிப்படுத்தும் கருத்துகள் தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் குறித்ததாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள இரு திரைப்படப் பள்ளிகளில் படித்தபோதும் உலகளாவிய திரைக்கலைப் பரிச்சயமும், நவீன நாடகக்குழுக்களில் தான் பெற்ற பயிற்சியும்தான் சினிமாவை, நடிப்பைத் தெரிந்துகொள்ள உதவியது என்று கூறும் நாசர், திரைப்படக் கல்லூரி நிறுவனங்கள் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளார்.  அண்மையில் `கர்ணன்' என்ற சோலோ நாடகம் மூலம் தனது நடிப்புத் திணவுக்குத் தீனி போட்டிருக்கும் அவருடன் மூன்று மணிநேரம் நீடித்த உரையாடலில் சினிமா, நாடகம் குறித்த தன் அக்கறையை வெளிப்படுத்தினார்.

தீராநதி : நீங்க, நடிப்பைத் தொழில்முறையாகப் பயிற்றுவிக்கும் இரு திரைப்படப் பள்ளிகளில் பயின்றுள்ளீர்கள். அதற்கான பின்னணி,  குறிப்பாக உங்களுக்கு நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம், உத்வேகம் எவ்வாறு நிகழ்ந்தது?


நாசர்: நடிப்பு என்பது நானாகத் தேர்வு செய்த ஒரு விஷயம் இல்ல; நான் நடிக்கறதுல என் அப்பாதான் அதிக ஆர்வமாக இருந்தார்.  அவருடைய கட்டாயத்தின் பேரில்தான் நான் நடிப்பைத் தொழிலாகத் தேர்வு செய்ய நேர்ந்தது.  இதனடிப்படையில்தான் நான் இரண்டு இன்ஸ்டிடியூட்டுகளில் படித்தது.  அதன்பிறகு தான் எனக்கு நவீன நாடகம், இலக்கியம் போன்றவற்றின் பரிச்சயம் கிடைத்தது.  அதன்பிறகுதான் எனக்கு நடிப்பின் நுவான்சஸ் (nuances) புரியத் தொடங்கியது.  எனது கேரியரில் இது முக்கியமான கட்டம்.

தீராநதி : அப்போ திரைப்படக் கல்லூரிக்குப் போறதுக்கு முன்னாடி தியேட்டரோட எக்ஸ்போசர் கிடையாது.  அதாவது நவீன நாடக நடிப்புல கிடைச்ச உத்வேகத்துல நீங்க இன்ஸ்டிடியூட்டுக்குப் போகலை இல்லயா?

நாசர் : ஆமாம். அதுக்கு முன்னாடி நான் செங்கல்பட்டுல இருந்தேன்.  பிறந்து வளர்ந்தது எல்லாம் செங்கல்பட்டுதான். அங்க எனக்கு லோக்கல் டிராமா குழுக்களோட நல்ல பரிச்சயம் இருந்தது.  அங்க தசரா, தீபாவளி சமயங்களில் நடக்கிற நாடகங்களில் நான் நடிச்சிருக்கேன். இது தவிர பள்ளி, கல்லூரிகளில் நடித்ததைக் கணக்குல எடுத்துக்க முடியாது. ஆனால், நடிப்புதான் எனக்குத் தொழில் என்கிற கட்டாயம் ஏற்பட்ட பிறகு, இன்ஸ்டிடியூட்டெல்லாம் கம்ப்ளீட் செய்த பிறகு எனக்கு சென்னைதான் வாழ்க்கைன்னு ஆனது. அப்பவும் நான் சென்னையிலயே நிரந்தரமாத் தங்க முடியல.   தினசரி காலையில சென்னைக்குப் போய், இரவுல செங்கல்பட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். பாதி நாள் ரயிலிலேயே கழிந்தது.  இதுக்கு இடையிலதான் நவீன நாடகங்களோட எக்ஸ்போஷர் இருந்தது.  ஒரு பார்வையாளனாக மட்டுமே அப்போது அதை அவதானிக்க முடிந்தது.  அதில் நடிக்கணும்னா சென்னையிலயே தங்கணும்.  அது என்னால முடியாது.  என்னோட குறியெல்லாம் கடைசி டிரெயினப் பிடிக்கிறதுதான்.  அதுக்கு இடையில என்னெல்லாம் பார்க்க முடியுமோ, சுகிக்க முடியுமோ அதையெல்லாம் நான் தவறாம செய்துகொண்டிருந்தேன்.  சில நேரங்களில் கடைசி ரயில் டைம் வரைக்கும் எங்கயாவது சுத்திக்கிட்டு இருந்தாகணும்.  அங்க வீட்டுக்குப் போனா வீட்டுச்சூழல், பொருளாதார நிலைமைகளச் சந்திக்கணும்.  அப்பா `என்னடா ஏதாவது சினிமா வாய்ப்புக் கிடைச்சுதா'ன்னு கேட்பார். இல்லைனு பதில் சொல்லக் கஷ்டமா இருக்கும். அதனால இன்னைக்கு என்ன நாடகம், ஃபிலிம் சொசைட்டியில் என்ன சினிமா, கூட்டம்னு தேடிப்போய் அங்க உட்கார்ந்துக்குவேன். நடு ராத்திரியில வீட்டுக்குப்போய் படுத்துட்டு, காலையில் முதல் டிரெயின் 4.55க்கு, அதப் பிடிச்சு சென்னை வந்திருவேன்.

ஒரு கட்டத்துல நவீன நாடகத்தோடே ஈர்ப்பு அதிகமாயிருந்தது.  அப்ப நடிச்சுதான் பார்ப்போமேன்னு முடிவு செய்தேன்.  டாக்டர் ருத்ரனோட இயக்கத்தில் (ருத்ரனின் நாடக்குழுவின் பெயர் முத்ரா) (இந்திரா பார்த்தசாரதி எழுதிய) இபாவோட `ரங்கசீப்' நாடகத்துல நடித்தேன். அதுகூட தற்செயலாத்தான் நடந்தது. நான் போகும்போது நடிகர்களை யெல்லாம் தேர்ந்தெடுத்து முடிச்சிட்டாங்க. அந்தக் காலகட்டத்தில `பரிக்ஷா' ஞாநியோட பழக்கம் இருந்தது. அப்போ `பரிக்ஷா'வில் நாடகங்கள் அதிகம் போடலை.  அவர் மூலமாத்தான் நான் ருத்ரனப் போய்ப் பார்த்தேன்.

நான் செங்கல்பட்டுல நாடகங்கள்ல நடிச்சதுக்கும், இங்க நவீன நாடகங்களில் நடிச்சதுக்கும் பெரிய வித்தியாசத்த உணர்ந்தேன்.  ஒரு நாடகப் பிரதியை அணுகுற முறையே வித்தியாசமா இருந்தது. அங்க பாடத்த 40 பக்க நோட்டில் எழுதிக் குடுப்பாங்க.  அத வாத்தியார் காலில் விழுந்து கும்பிட்டு வாங்கிக்கிடணும்.  அது  பெரிய சடங்கு (ரிச்சுவல்)போல நடக்கும் முக்கிய நிகழ்வு. அத நாங்க மனப்பாடம் பண்ணுவோம். ஆனால், இங்க அணுகுமுறை முழுக்க வேற மாதிரியா இருந்தது. ருத்ரன், ஞாநி, கூத்துப்பட்டறை அணுகுமுறைகளில் வித்தியாசங்கள் இருந்தாலும், பொதுவான அணுகுமுறையும் இருந்தது. அது அங்க நான் அனுபவித்த அணுகுமுறையிலிருந்து வித்தியாசமானது. இங்க தொடங்குறதுக்கு முன்னாடி ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் பற்றி விவாதம் நடக்கும். இது அந்தப் பிரதியை உள்வாங்கிக்கொள்ள உதவியா இருக்கும்.  பிரதியின் முரண்பாடுகள், மையப் பிரச்னை, எதை நோக்கி நகர்கிறது ஆகிய அம்சங்கள் ஒவ்வொரு நடிகனுக்கும் தெளிவாயிடும். இது உண்மையிலேயே எனக்குப் புதுமையான அனுபவமா இருந்தது. ஔரங்கசீப்புன்னா ஏன் அவர் அப்படி இருந்தார் அப்படீன்ற பின்னணியோட பிரதியை வாசிக்க முடிந்தது.  ருத்ரன் உளவியலாளரா இருந்ததால கூடுதலா பிரதியை அலசினார்.  அப்ப ஒருநாள் குழுவிலிருந்த ரமேஷ் (இப்போது அவர் இல்லை.  அகால மரணமடைந்து விட்டார்.) எனக்கு ஔரங்கசீப்போட ஜாதகம் கிடைச்சிருக்குன்னார்.  சரி, ஜாதகத்த வைச்சு நாடகத்துல என்ன செய்ய முடியும்னு கேட்டாங்க.  `இல்ல இந்த ஜாதகத்துக்கு அவர் இப்படித்தான் இருந்தாகணும்.  அந்த அடிப்படையில் நாடகத்தப் பார்க்கலாம்' அப்படீன்னார்.  எனக்கெல்லாம் இது புதுசா இருந்தது. ஓஹோ, ஒரு நாடகத்தை இப்படியும் அணுகலாமுன்னு புரிஞ்சது.

இந்தச் சூழல் என் மனதில் ஒரு சுழலை ஏற்படுத்தியது. அங்கதான் பாலாசிங், ப்ரீதம் சக்ரவர்த்தி போன்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும், நட்பும் கிடைத்தது.  இதனால தொடர்ந்து நாடகத்துலயே நடிக்கலாமான்னு நினைத்தேன்.  ஆனால், சினிமாவுல பெரிய நடிகனாகணும் என்பதுதான் என் அப்பாவோட விருப்பம்.  முடிவு எடுக்க முடியாத குழப்பம்.

அந்த சமயத்துல ருத்ரன் மறுபடியும் `மேக்பத்' நாடகத்தைத் தொடங்கினார்.  அதை வித்தியாசமான முறையிலும் அணுகியிருந்தார்.  இதில் முழுமையா பங்கெடுத்தேன்.  நாடகம் அரங்கேறுகிற சூழ்நிலையில், ஒரு படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது.  ரொம்பத் தயங்கித் தயங்கி ருத்ரன்கிட்ட கேட்டேன்.  உடனே, `உன் பாதை அதான்.  நீ ஓகே சொல்லிடு.  நான் ரமேஷை வைச்சு முடிச்சிக்கிடுறேன்'னு சொன்னாரு.  அதுக்குப் பிறகு நீண்டகாலம் நாடகப் பங்கேற்பு என்பது இல்லாமலேயே போயிட்டுது.   ஆனால், ஒரு ஏக்கம் மட்டும் எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும்.  அதனால கிடைக்கிற நேரத்தில் எல்லாம் நான் நாடகங்களோட, நாடக்காரர்களோட தொடர்பு வைச்சுக்கிறது உண்டு.  இரு வேறு நடிப்புப் பள்ளிகளில் படிச்சதைவிட, அவற்றில் நான் பெற்றதைவிட நாடகங்கள் மூலமா கிடைச்ச தகவல்கள்தான் நான் இன்றைய நடிகனாக உருவாக அடிப்படையா அமைஞ்சிருக்கு.  முதலில் இரண்டு நாடகங்களில் நடிச்சது மட்டுமல்ல; கூத்துப்பட்டறை யோட தொடர்பும் கிடைச்சுது.  அவங்க நாடகங்கள், மற்ற குழுக்களின் நவீன நாடகங்கள், பட்டறைகளைப் பார்த்தது மூலமாவும் நடிப்புங்கறதப் பற்றி நிறைய புரிதல்கள் எனக்குள்ள நிகழ்ந்திருக்கு.  அதனாலதான் கொஞ்ச நாள் அதுல ஒரு பார்வையாளனா மட்டுமில்லாமல், முழுமையான பங்கேற்பாளனாகவும் இருந்திருக்கணுமோன்னு இப்ப நினைக்கிறேன்.  இன்னும் கொஞ்ச நாள் நாடகத்தில் நடிச்சிருந்தால் என் நடிப்பு பக்குவப்பட்டிருக்குமோ?ன்னு இப்பவும் ஏக்கமா இருக்கு.  ஏதோ ஒரு நல்ல அனுபவத்தை இழந்திட்ட மாதிரிதான் இன்னமும் உணர்கிறேன்

தீராநதி : இரண்டு, மூன்று ஆண்டுகள் திரைப்படக் கல்லூரிகளில் படிச்சதைவிட,  நீங்க ஊரில் நாடகங்களில் நடிச்சது, பின்னர் `முத்ரா' குழுவில் நடிச்சது, பிறகு நவீன நாடகங்களைப் பார்த்தது இவையெல்லாம்தான் நீங்க நடிப்பைச் செரிவாக்கிக்கொள்ள உதவியதுன்னு சொல்கிறீர்கள்; அதை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

நாசர்: முதலில் சென்னையிலுள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை (ஃபிலிம்சேம்பர்) நடத்திய ஒரு நடிப்புப் பள்ளியில் படித்தேன்.  இங்கிருந்துதான் ரஜினிகாந்த், சுதாகர் போன்றவர்களெல்லாம் வந்தாங்க.  அவங்க (ஃபிலிம்சேம்பர்) பாடத்திட்டம்ங்கிறது அப்ப இருக்கிற தென்னிந்திய சினிமாவுக்கான (நான்கு மொழிகளில் வகுப்புகள் நடத்தினார்கள்.) ஒரு பாடமுறை.  அவ்வளவுதான்.  அதில் ரொம்ப ஆழமான பாடங்கள் கிடையாது.  ஆனால், அதிலயாவது ஒரு ஒழுங்குமுறை இருந்தது. நேரடியாக ஒரு நடிகனுக்கு அடிப்படையா என்ன நடைமுறைகள் (பிராக்டிகல் அப்ரோச்) தெரியணும்ங்கிறதையாவது சொல்லிக் கொடுத்தாங்க. அரசுத் திரைப்படக் கல்லூரியில் அதுவும் கிடையாது. சுத்தம். மற்ற அரசுக் கல்விக்கூடங்கள் மாதிரியேதான் அதுவும் இருந்தது.  பொதுவா, நான் நடிகர்களிடம் வழக்கமாக இரண்டு கேள்வி கேட்பது உண்டு. அரசியலுக்கு எப்ப வருவீங்க சார்ங்கிறது ஒரு கேள்வி. இன்னொரு கேள்வி நடிகனாவதற்கு லக் வேணுமான்னு.  ஆனால், நான் அதிர்ஷ்டத்தையெல்லாம் நம்பற ஆள் கிடையாது. ஆனாலும் எனக்கும் லக் இருந்தது, அதிர்ஷ்டம் இருந்தது என்று கூற வேண்டுமானால், அது நான் அரசு திரைப்படக் கல்லூரியில் படித்த அந்த ஒரே ஒரு ஆண்டுதான்.  ஏன்னா அப்போதான் யூகிசேது டைரக்ஷன் படிக்கிறாரு.  ராஜீவ்மேனன் கேமரா படிக்கிறார்.  சிவக்குமார் (சென்னை ஃபிலிம் சொசைட்டி) அங்க படிக்கிறார். வெங்கடேஷ் சக்கரவர்த்தி கொஞ்சகாலம் அந்த சமயத்துல அங்க விரிவுரையாளரா இருக்கிறார்.  சினிமாவுக்கான எக்ஸ்போஷர் இவங்க நாலு பேர் மூலமாத்தான் எனக்குக் கிடைக்குது.  ஒருவேளை நான் அந்த வருஷம் சேராம ரெண்டு வருஷம் முன்னாடியோ, பின்னாடியோ சேர்ந்திருந்தால், ஏன்னா நடிப்புங்கிறது ஒரே ஒரு வருஷம்தான். மற்ற பாடத்திட்டங்கள் மூன்று வருடங்கள், அதனால இரண்டு வருஷங்கள் முன்னால சேர்ந்திருந்தாலோ, இரண்டு வருடங்கள் பின்னால் சேர்ந்திருந்தாலோ நான்  இவங்களைச் சந்தித்திருக்க முடியாது;  நான் ஒரு ரெஸ்பான்சிபிள் நடிகனாக உருவாவதற்கு இந்த நான்கு பேர்தான் காரணம். இந்தப் படங்களெல்லாம் அவசியம் பார்க்கணும், இந்தப் புத்தகங்களெல்லாம் அவசியம் படிச்சாகணும்னு சொன்னவங்க அவங்கதான். த்ரோபோவில் இருந்து பல சினிமா மேதைகளை அவர்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்.  இல்லையென்றால் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் இதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை.  வெறும் நடிகன் என்கிற புள்ளியிலிருந்து நான் வட்டமாக மாறுகிற உருமாற்றம் அங்க நடக்கிறது. திரைக்கலையின் பல கதவுகள் அங்கே திறந்துவிடப்படுகிறது. நடிகன் என்பவன் வெறும் நடிப்பை மட்டுமே கற்றுக்கொள்கிறவன் அல்ல; எந்த ஊடகத்தில் நடிக்கிறானோ, அதற்கேற்ப தன்னை வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.  அந்த ஊடகத்தின் ஆழம் ஒரு நடிகனுக்குக் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்.  இதை இப்போது நான் உணர்கிறேன்.  இந்த உணர்தலுக்கு அப்போதைய அனுபவங்கள் உதவியா இருந்ததுன்னு சொல்லணும். ஆனால், அப்பவே இதையெல்லாம் உணர்ந்தேன்னு சொல்ல முடியாது. இதெல்லாம் புதுசா இருக்குங்கறது மட்டும் புரிஞ்சுது.

ஏன்னா, நான் செங்கல்பட்டில் இருந்தபோது நல்ல சினிமா, கெட்ட சினிமா எதுன்னு என் அம்மா, அப்பா சொன்னதுதான்; நிறைய சண்டைக்காட்சிகள் இருந்தால் அது கெட்ட சினிமா; குடும்பப் படங்கள், கண்ணீர் வரவழைக்கிற படங்கள் நல்ல சினிமா அவ்வளவுதான்.  நான் அதிகாரபூர்வமாக பார்த்த நல்ல படங்கள் கண்ணீரை வரவழைக்கிற குடும்பப் படங்கள்தான். ஆனால், திருட்டுத்தனமாக சண்டைக் காட்சிகள் உள்ள எம்.ஜி.ஆர் படங்கள் பார்க்கறதுண்டு. நான் `ரிவால்வர் ரீட்டா'ங்கற சண்டைப்படத்த 17 தடவை பார்த்திருக்கிறேன்.  பொய் சொல்லி, ஸ்கூல் கட் பண்ணி, வீட்டுல காசு திருடி அந்தப் படம் பார்த்திருக்கிறேன்.  அந்த வயசுக்கு அது சரி.  ஆங்கிலப் படங்கள் செங்கல்பட்டுக்கு அறவே வராது.  `ஆராதனா' மாதிரி நல்லா ஓடிய இந்திப்படம் எப்பவாவது வரும். இந்த அடிப்படையிலதான் சென்னைக்கு வருகிறேன். இங்கு எனக்குப் புதிய கதவுகள் திறந்து விடப்படுகின்றன.  அது புதிய காற்றை என் மீது வீசுகிறது.  அதை நான் சுவாசித்தேன்.

தீராநதி : நீங்க படித்த காலத்திலிருந்து இன்றுவரை அரசு திரைப்படக் கல்லூரி குறித்து, அதன் பாடத்திட்டங்கள் குறித்து அதிருப்தி தொடர்ந்து நிலவுகிறது.  குறிப்பாக அங்கிருந்து வெளிவரும் மாணவர்கள் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  இதற்கு என்ன காரணம்?

நாசர்: இப்ப இன்னும் அவல நிலைமை நிலவுகிறது.  இப்ப படத்துக்குப் படம் புதிய நடிகர்கள் வராங்க.  நடிகர்களின் தேவையும் அதிகமாக இருக்கிறது.  கூத்துப்பட்டறை உண்மையாகவே நல்ல நடிகர்களை டெலிவரி செய்கிறதோ இல்லையோ, ஆனால், கூத்துப்பட்டறைக்குப் போனால் நல்ல நடிகர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.  திரைப்படத்துறைக்குக் கொஞ்சம் பயிற்சிபெற்ற நடிகர்கள் வந்தால் பெட்டராக இருக்கும் என்ற தேவையில் அந்தத் தேடல் நிலவுகிறது.  அவர்கள் கூத்துப்பட்டறைக்குச் செல்கிறார்கள்.  இந்த நிலையில், அதாவது பயிற்சி பெற்ற நடிகர்களைத் தேடி அலைகிற இந்த நிலையில் அரசு திரைப்படக்கல்லூரியில் நடிப்புப் பிரிவையே மூடியிருக்கிறார்கள். தொழில் சார்ந்து இயங்குகிற ஒரு கல்வி நிறுவனம், அவ்வப்போது அந்தத் தொழில் சார்ந்த வளர்ச்சி என்ன, தேவை என்ன என்பதைப் பொருத்து புதிய பாடத்திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் இல்லையா! அதற்கு மாறாக மூடுவிழா நடத்தியிருப்பது என்ன நியாயம்? இதற்குப் பின்னணியில் என்ன அரசியல் உள்ளது.  அப்படியே நடந்தாலும் அதில் படிக்கிற குறைந்தது 20 மாணவர்கள் முடித்து வெளியே வரும்போது, தாம் படித்த துறை சார்ந்த தொழிலில் தைரியமாக இறங்குவதற்கான தன்னம்பிக்கையையும், அத்தொழில் சார்ந்த தொழில்நுட்ப அறிவையும், தேவைகளையும் கொடுப்பதில்லை; எனக்குக் கொடுக்கலை.

தீராநதி : இதுல ஒரு முரண்நகை (Irony) இருப்பதாகப் பார்க்கப்படுது. தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும் சினிமாவுக்கு முக்கியத்துவம் உள்ளது.  அரசியல் மாற்று சக்திகள் வளருவதற்கான களமாகவும் தமிழ் சினிமா பார்க்கப்படுகிறது.  கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் சினிமா ஏற்படுத்திய தாக்கம்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது.  பண்பாட்டு அளவில் 100 ஆண்டுகள் முன்புவரை தமிழர்கள் மத்தியில் ரத்தத்தோடு கலந்திருந்த கூத்து, ஆட்டம்  பாட்டு, இசைக்கு மறுதலியாக சினிமா மாறியுள்ளது.  பொருளாதார ரீதியாகவும் உலகில் சினிமாத்தொழில் அமோகமாகக் கோலோச்சும் இடமாக இருக்கிறது.   உலகில் வேறு எங்கேயும் விட இங்குதான் திரைக்கலையைக் கற்பதற்கான கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது.  இதற்கான மனநிலை என்ன?

நாசர் : என்ன காரணம்னா இன்னும் சினிமா ஒரு மாயையாகவே பார்க்கப்படுது.  தனிப்பட்ட கட்சி அரசியல் எதற்குள்ளும் நான் போகவில்லை.  பொதுவாக ஒருவருக்கு ஏதேனும் ஒன்றில் திறமை இருக்க வேண்டுமானால், அது அவரது ரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும்; அவரது பரம்பரையில் இருக்க வேண்டும் என்ற மாயை நிலவுகிறது.  அவர் மிகப் பெரிய ஜாம்பவானாகப் பார்க்கப்படுகிறார். ஆனால், இன்றைய நவீனமான சமகாலத்தில் எந்தத் திறமையையும் நீங்கள் யாராக இருந்தாலும் மனசு வைத்தால் கற்றுக் கொள்ளலாம்.  இப்போது உள்ள பல கல்வித் திட்டங்கள் அப்படித்தான் இருக்கிறது. ஒரு நூற்றாண்டு முன்புவரை திறமைகள் என்பது, கலை சார்ந்த எந்த ஒரு தொழிலும் அது பொற்கொல்லராகட்டும், ஒரு பெயிண்டராகட்டும் அல்லது காரைக்குடியில் நாம் பார்க்கிறோமில்லையா அது மாதிரியான கட்டடக்கலையாகட்டும் எல்லாமே பரம்பரை, பரம்பரையா குடும்பத் தொழிலாகக் கற்றுத் தரப்பட்டது.  ஒரு கட்டடக் கலைஞர் தனது மகன் மிகச் சிறுவனாக இருக்கும்போதே தாம் கற்ற கலையைக் கற்றுத் தரத் தொடங்குகிறார். இதேபோல பொற்கொல்லரும் தனது பிஞ்சு மகன் கையில் கருவிகளைத் தருகிறார்.  இதுதான் ரத்தத்தில் ஊறியிருக்கணும்ங்கறது.  நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கூத்தாடியின் மகன்தான் கூத்தாட முடியும்.  அல்லது வேறு யாரோ ஒருத்தர் கூத்தாடப் போனால் அதட்டி, உருட்டி மிரட்டி நிறுத்திடுவாங்க. ஆனால் இன்று அது சாத்தியமில்லை.  ரத்தத்தில் ஊறியது என்பதை நான் ஏற்கவில்லை.  எதை வேண்டுமானாலும் பயிற்சியின் மூலம் கற்க முடியும்.  ஆனால், இங்கு என்ன காரணத்தாலோ சில விஷயங்களை அதீதமாக்கியுள்ளனர். ஒரு மாயை நீடித்து இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.

தீராநதி : தமிழ்நாட்டில் இந்தக் கண்ணோட்டம் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கு.  கோயில் சிலைகளைக் குறிப்பிட்ட பரம்பரையினர்தான் கற்க முடியும் என்பதை சுவாமிமலை ஸ்தபதிகள் பயிற்சி நிறுவனம் உடைத்துள்ளது.  இங்கு எவர் செய்த உலோகச் சிலைகளையும் விற்பனைக்கு வைக்க முடியும்.  மாமல்லபுரம் கல்லூரியில் யாவரும் சிற்பம் பயிலலாம்.  இதே போல நெசவு, சுடுமண் கலை போன்ற கைவினைகளைக் கற்கலாம்.  முன்னெல்லாம் `குருவிற்குக் கோவணம் துவைத்துப் போட்டு 16 வருஷம் குருகுலவாசம் செய்தால்தான் இசை கற்க முடியும் என்ற காலம் மலையேறிவிட்டது. ஒரு வருடத்திலேயே இசை சொல்லிக் கொடுத்து விடுகிறான்' என்று சுப்புடு கூட சொல்லியிருக்கிறார். இப்படி பல்வேறு கலைப்பிரிவுகளை அதற்கான பள்ளிகளில் பயில முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது.  இங்கு பல விஷயங்கள் ரெகுலரைஸ் ஆகியுள்ளது. ஆனால், பாய்ஸ் கம்பெனி பயிற்சிகளுக்கு மாற்றாக ஒரு நிறுவனம் அமைக்கப்படாதது ஆச்சரியமாக உள்ளது.

நாசர் : ஆமாம்.  அதற்கான ஒரு ஏற்பாடு குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் பல பேர் இது விஷயமாக யோசித்து வருகிறார்கள். அரசு திரைப்படக் கல்லூரியைப் பொருத்தவரையில் அங்க நடிப்புத்துறை மூடப்பட்டது ஒரு விதத்துல சந்தோஷம்தான்.  ஏன்னா,சடங்குக்காகவோ, கவுரவத்துக்காகவோ ஒரு விஷயத்த வைச்சுக்கிட்டிருக்கணும்னு அவசியமில்லை.  அந்தத் துறை சரியான ஒரு பயிற்சியைத் தரணும்.  அப்படித் தர முடியலைங்கிறபோது மூடிவிடுவது நல்லது. கனவு மனசை ஆளுகிற ஒரு களம் இது.  பணம், பதவிங்கிறதைவிட வெற்றி, தோல்விங்கிறது இன்று தமிழ் சினிமாவில் பெரிய அடையாளமாக இருக்கிறது.  இதையெல்லாம் சமாளிக்கும் மனோ தைரியத்தை யார் கொடுக்க முடியும்? இந்த நோக்கோடு அரசு திரைப்படக் கல்லூரி நடக்குதா என்பதுதான் என் கேள்வி.


தீராநதி :
அரசு நியமனம்தான் இதற்குக் காரணமா? அரசியல்வாதிகளை நியமிப்பதால் அவர்களால் கல்லூரியை நிர்வகிக்க நேரம் செலவிட முடியவில்லை என்று கூறப்படுகிறதே?


நாசர்: இன்னமும் வெள்ளைக்காரன் விட்டுச்சென்ற சட்டதிட்டங்களை வைத்திருக்கிறோம்.  பி.எஸ்சி., பாட்டனி படித்த ஒருவரை ஃபிலிம் இன்ஸ்டிடியூட் பிரின்சிபாலா போட முடியாது.  இன்று பல கல்லூரிகளில் விஸ்காம் சொல்லித் தருகிறார்கள்.  இங்க படிக்கிறவர்கள் எங்க போயி வேலை செய்யப் போறான் என்கிற கவலை அக்கல்லூரிகளுக்குக் கிடையாது.  அங்க கிரியேடிவிடி கிடையாது. விஸ்காமுக்கும், ஃபிலிம் ஸ்கூலுக்கும் தொடர்பு கிடையாது.  அதோட பாடத்திட்டங்கள் வேற.  ஃபிலிம் ஸ்கூலோட பாடத்திட்டங்கள் வேற. இன்று எல்லாமும் டிஜிட்டலாகப் போய்விட்டதால் யார் வேண்டுமானாலும் கையாளலாம் என்ற நிலை உள்ளது.  இது அரைவேக்காட்டுத்தனமான தைரியத்தை அளிக்கிறது.

தீராநதி : மீண்டும் உங்க ப்ரஃபைலுக்குள் வரலாம்.  உங்க தந்தைக்கு நடிப்பின் மீது ஏன் இவ்வளவு காதல் இருந்தது?

நாசர் : இது ஒரு வினோதமான எண்ணம்தான்.  அந்தக் காலத்துல தம் பிள்ளைகள் படிச்சு கலெக்டர் ஆகணும், டாக்டராகணும், எஞ்ஜினீயர் ஆகணும்னு ஆசைப்பட்டாங்க. ஆனால், எங்கப்பா தன் மகன் நடிகனாக ஆகணும்னு ஆசைப்பட்டார். இது இன்ட்ரஸ்டிங்கான விஷயந்தான்.  சினிமாவுல பிரச்சனைகள் வரும்போது என் அப்பாவிடம் நான் சண்டையே போடுவதுண்டு. `என்னை ஏன் நடிகனாக்குனீங்க.  மாதச் சம்பளக்காரனாகவே நான் நிம்மதியா வாழ்ந்திருப்பேனே'ன்னு சொல்லுவேன். ஏர்போர்ஸில் எனக்குக் கிடைத்த வேலைய விட்டுட்டுத்தான் நடிக்க வந்தேன்.  தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் வேலை கிடைத்தது.  அத விட்டுட்டேன். அதனால `நான் நடிகனாகி எனக்கென்ன கிடைச்சுது' அப்படீன்னு அப்பாகிட்ட சொல்லுவேன். ஆனா முழு மனதோட வெறுக்கல.  நான் சொல்கிற கருத்துகள் பரவலாகப் போய்ச் சேருது. என்னுடைய பேரு, சம்பளம் மட்டுமே அடையாளமில்லாமல் எனக்கென்று கலாரீதியான அடையாளம் இருக்கு. அதெல்லாம் எனக்கு மகிழ்ச்சிதான்.  பிரச்சனைன்னு வரும்போது, அது குடும்பத்துக்குள்ள திரும்பும்போது அது மாதிரி சொல்றதுண்டு.  மொத்தத்துல என் அப்பாவோட கனவுதான் நான் பெரிய நடிகனாகணும்ங்கிறது.  நான் சின்னப்பையனாக இருக்கும்போது ஷகிலாங்கற குழந்தை நட்சத்திரம் பிரபலமாக இருந்தார். அவர் நடித்த எந்தப் படமாக இருந்தாலும் அப்பா என்னை அழைத்துச் சென்று காட்டுவார். அதேபோல மாஸ்டர் சேகர், மாஸ்டர் பிரபாகர் நடித்த படங்களைக் கட்டாயப்படுத்திப் பார்க்க வைப்பார்.  அப்பல்லாம் அவர் கனவு என்னன்னு எனக்குத் தெரியாது.  ஆனால், நான் ஏர்போர்ஸில் சேரணும்னு முடிவு எடுத்த பிறகுதான் நீ நடிகனாகணும்னு சொன்னாரு.  அதுவரை நான் ஏன் நாடகத்தில் நடிக்க வைக்கப்பட்டேன்.  ஏன் ஷகிலா போன்ற குழந்தை நட்சத்திரங்களின் படங்களைப் பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டேன்ங்கறது தெரியாது.  ஷகிலா சோகக் காட்சிகளில் அழுது நடிப்பதில் பிரபலமானவர். படம் பார்த்து வந்த பிறகு, ஷகிலா மாதிரி என்னை நடித்துக் காட்டச் சொல்லுவார்.  என் எதிர்காலம் தொடர்பாகத் தனக்குள் ஒரு கனவை வளர்த்துக்கொண்டு வந்துள்ளார் என்பது நான் வேலைக்குச் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்த பின்னர்தான் தெரிந்தது. இதை ஒரு மரபார்ந்த ஈடுபாடாகக் கொள்ளலாம்.  ஆனால், எந்த அளவுக்கு அது கலாரீதியானதுன்னு சொல்ல முடியாது.  ஒருவேளை அவர் நல்லாப் படித்திருந்தால் நடிகனாகணும்னு நினைக்கும்போது நவீன நாடகங்களில் விட்டிருக்கலாம்.  நாங்க லோயர் மிடில் கிளாஸ்தான், இருந்தாலும் அவங்க வாழ்ந்த காலகட்டத்தில் பெரிய பொருளாதாரச் சுமைகள் கிடையாது. அதனால இந்த மாதிரி சிந்தனைகள் வந்திருக்கலாம். எங்க அப்பா தங்க நகைகளுக்கு கில்ட் போடுகிற தொழில் செய்து வந்தார்.  மார்க்கெட் பக்கத்தில் ஒரு மேசை அளவு இடம்தான் கடை. மூணு வருஷம் முன்னாடிவரை அந்தத் தொழில்தான் செய்து வந்தார்.  குடும்பத்துல உள்ளவங்க, சொந்தக்காரங்க எல்லாம் என்னையத் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. குடும்பத்துல உள்ள முக்கியமான உறுப்பினர் என் மீது கடுமையான குற்றச்சாட்டு வைத்தார். `நீ இவ்வளவு பெரிய நடிகனாயிட்ட.  இன்னும் அப்பாவை கில்ட் போட்டு சம்பாதிக்க வைச்சிக்கிட்டு இருக்க'ன்னு சத்தம் போட்டார்.  அதுவரைக்கும் அதை நான் உணரவேயில்லை. நானும் ஒரு பெரிய நடிகன் அப்படின்னு உணர்ந்ததேயில்லை. அவரும் யதார்த்தமாக இருந்தார்.  ஒரு நாள் இது பிரச்சனையாகி `சரிப்பா இனிமே சம்பாதித்து என்ன செய்யப் போறீங்க.  எனக்கு மானம் போகுது'ன்னேன். அவருக்கு அது அதிர்ச்சியா இருந்தது.  இருந்தாலும் சரிப்பா இனிமே வீட்டிலேயே இருக்கேன்னு சொல்லிட்டார்.  அப்புறம் ஒரு மாதத்துக்குப் பிறகு வீட்டுக்குப் போயிருந்தேன்.  அப்பா என்னைவிட இளமையா இருப்பார். ஆனால் அன்னக்கி ரொம்ப வாடிப் போயிருந்தார்.  `ஏன்டா என்னய வீட்டுல உட்கார வைச்ச. எல்லாமே போச்சேடா'ன்னார்.  (தொடர்ந்து பேச முடியாமல் நாசர் குரல் தழுதழுத்தது.) `என்னப்பா என்னாச்சு'ன்னேன். `கடையில் இருக்கும்போது ஒருத்தன் வருவான். என்ன பாய், உன் பையன் கமல்கூட நடிக்கிறானாமேன்னு சொல்லுவான். அப்புறம் இன்னொருத்தன் வந்து உன் பையன் நடித்த இன்ன படம் 100 நாள் ஓடுதாமேம்பான்.  இல்லன்னா பாய் உன் பையன் நடித்த படம் ஓடலயாமுல்லம்பான்.  இப்படி ஏதாவது ஒண்ணு சொல்லிக்கிட்டே இருப்பாங்கடா.  இப்ப ஒண்ணுமே இல்ல.  வாழ்க்கையே இல்லாத மாதிரி இருக்கு'ன்னு சொன்னாரு.  அவர் எனக்குள்ளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.  கடைத்தெருதான் அவர் என்னைப் பார்ப்பதற்கான சாளரமாக இருந்துள்ளது.  அது அடைபட்டதும் அவரால் தாங்க முடியவில்லை.  அவர் கனவில் அவர் வாழ முடியவில்லை.

தீராநதி : சென்னை திரைப்படச் சங்கம் (Chennai Film Soceity) உங்களுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது?

நாசர்: திரைப்பட வாய்ப்புக்காக அலையும் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாகக் கழிந்தது.  மதியம் யார் வீட்டுக்குப் போனால் சாப்பாடு கிடைக்கும்? யார் டீ வாங்கித் தருவார்கள்? என்ற கேள்விகள். சினிமா சான்ஸ் கிடைக்காமலே போயிடுமோ என்ற பயம். அம்மா எப்பப் பார்த்தாலும் அழுவாங்க.  ஐயோ, கிடைச்ச வேலைய விட்டுட்டு இப்படிக் கஷ்டப்படுறியேன்னு. இப்படி பல கேள்விகள், குழப்பங்கள், பசி, பட்டினி, மயக்கம்.  இவற்றுக்கு இடையே ஒரே போக்கிடம் சென்னை ஃபிலிம் சொசைட்டிதான்.  இதுக்குக் காரணம் வெங்கடேஷ் சக்ரவர்த்தி மாதிரியான நபர்கள்தான். அப்போ வெங்கடேஷ் சக்ரவர்த்திக்கே நிரந்தர வருமானம் கிடையாது. அதையும் மீறி அவங்க வீட்டுக்குப் போனால் எனக்கு சாப்பாடு கிடைக்கும்.  அவங்கதான் எனக்கு தைரியம், பலம் அளித்தவர்கள். இந்தக் காலகட்டத்தில்தான் உலகத்தின் தலைசிறந்த திரைப்படங்களைப் பார்த்தேன். ஃபிலிம் சொசைட்டியில் ஒரு படம் பார்த்துட்டு,  அதைப் பற்றி விவாதிக்கும் போது எனக்கே ஒரு தைரியம் கிடைக்கும்.  சரி நம்ம தப்பா வரலை.  சரியாத்தான் போய்க்கிட்டு இருக்கோம்ங்கிற நம்பிக்கை கிடைக்கும்.  நம்ம ஈடுபடற தொழில் பற்றிய ஞானம் அதிகரிக்கும்போது பயம் போயிடும்.

உதாரணமா `ஹேமத்' என்று ஒரு ஜெர்மன் படம்.  16 மணி நேரம் ஓடும் படம். 16 மணி நேரமும் என்னால உட்கார்ந்து படம் பார்க்க முடியாது.  கடைசி டிரெயின் போயிடும்.  கொஞ்ச நேரம் மட்டும் படம் பார்த்துட்டு கடைசி டிரெயினைப் பிடிச்சிடலாம்னு உட்கார்ந்தேன். ஆனால், ஃபிரேமிலிருந்து ஒரு நிமிசம்கூட கண்ணை நகர்த்த முடியலை.  கதை ரொம்ப சிம்பிளான கதைதான்.  ஒரு குடும்பத்தில் 60 வருடகாலம் நடக்கும் கதை. எந்தவிதமான திடீர்த் திருப்பங்களும் இல்லாத படம். படம் வெற்றியடையணும்னா திருப்பங்கள் இருக்கணும், கிளைமாக்ஸ் எதிர்பாராத முடிவாக இருக்கணும் என்கிற கணிப்புகளைப் பொய்யாக்கிய படம்.  மிகவும் நேர்த்தியான, யதார்த்தமான படம்.  அந்த அளவுக்கு நாடகத்தன்மையற்ற, எளிமையான படத்தை நீங்க பார்க்க முடியாது.  ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன் அமைதியாக இருக்கும் ஒரு குடும்பம் உலகப்போரில் என்ன மாற்றங்களைச் சந்திக்கிறது.  எவ்வாறு சிதைகிறது என்பதுதான் கதை.  16 மணி நேரத்தில் ஒண்ணுக்குப் போவதைக்கூட அடக்கிக்கொண்டு படம் பார்த்தேன்.  அதற்குப் பிறகு நடைபெற்ற விவாதங்கள், அது எவ்வாறு படம் பிடிக்கப்பட்டது, எவ்வாறு தொலைக்காட்சித் தொடராகவும் வெற்றி பெற்றது, இவ்வளவு எளிமையாக இக்கதையை சொல்ல முடிந்தது எதனால், நடிகர்கள் வெளிப்படுத்திய நடிப்பு, மேக்கப் என்று பல்வேறு கூறுகள் குறித்து அலசப்பட்டது.  இது மாதிரியான அனுபவங்கள் எனக்குக் கூடுதல் பலம் அளித்தது.  உனக்கு மற்றவர்களைவிடக் கூடுதல் தகவல்கள் தெரியும்.  நீ சினிமாவைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளாய் என்ற புரிதல்கள் எனக்குள் ஏற்பட்டன.  `சைக்கிள் திருடன் (Bicycle Thieve)' படம் பார்த்துட்டு மிரண்டு போயிருக்கிறேன்.  இது மாதிரி ஏராளமான படங்கள்.  நான் சினிமா பற்றி வைத்திருந்த கனவுகள் அப்படியே நொறுங்கும்.  நாம் நினைக்கிற எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி மாதிரியான படங்கள் மட்டும் சினிமா இல்லை. வேற சினிமாவும் இருக்கு என்கிற புரிதல்தான் அப்போது புதிய பலமாக இருந்தது.  ஒவ்வொரு படம் பார்க்கிறதும் பெரிய ரிச்சுவல் மாதிரி நடக்கும். இன்றைக்கு எல்லாமும் டி.வி.டி.களில் கிடைக்குது. போன் செய்தால் எத்தனை காப்பி வேணும்னு கேட்கிறான். ஆனால், அன்றைக்கு அப்படியில்லை.  ஒரு படம் பற்றிக் கேள்விப்பட்டால் அந்தப் படம் பார்க்க எப்போ வாய்ப்புக் கிடைக்கும்னு காத்திருக்கணும். அது ஒரு தவம் மாதிரி.  இன்னைக்கு என்ன படம்?  நீ இந்த பார்க்குக்கு வந்திரு.  இங்க இருந்து தியேட்டருக்குப் போவோம்னு பேசி வச்சு, முனைக் கடையில் டீ சாப்பிட்டுப் போவோம்.  படம் பார்த்த பிறகு அதப்பற்றி விவாதிச்சுக்கிட்டே மாம்பலம் ரெயில் நிலையம்வரை நடந்தே செல்வோம்.  காசு இல்லை.  மதியம்கூட சாப்பிடவில்லை என்பதெல்லாம் ஒரு விஷயமாகவே தோணாது.  உண்மையில் ஒரு படத்தை உள்வாங்குவதே, அதைப் பார்ப்பதற்கு முன்னும், பின்னும் நடக்கிற காரியங்கள்தான். இந்த அனுபவங்கள் இன்று யாருக்கும் வாய்க்காது. பர்மா பஜாருக்கு போன் செய்தால் யார், யாருக்கு என்ன படம் பிடிக்கும்னு தெரிந்து வைத்திருக்கிறான்.  சார் இன்னின்ன படங்கள் இருக்குனு நேரிலேயே டெலிவரி செய்துவிட்டுப் போகிறான்.  தேடலே இல்லாமல் போய்விட்டது.  அலைதல் இல்லை.

தீராநதி : இதற்கிடையே ஒரு கேள்வி. நீங்கள் செங்கல்பட்டில் நடித்த தசரா நாடகங்கள் என்ன மாதிரியான தன்மை உடையதாக இருந்தது?

நாசர் : விறுவிறுப்பான குடும்பக்கதைகள்.  அதீதமான அழுகைக் காட்சிகள்.  சிறுவனாக இருக்கும்போதே நடிக்கத் தொடங்கிவிட்டேன்.  நான் நன்றாக அழுது நடிக்கும் குழந்தை என்பதால், ஷகிலா நடிப்பது போன்ற அழுகைக் காட்சி எனக்காக உருவாக்கப்படும்.  என் அப்பாவுக்கு உள்ளூர் நாடகக்குழுக்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. அவங்களுக்குப் பணம்கூடக் கொடுப்பார்.  அதனால எனக்கான ஒரு பாத்திரம் ஒவ்வொரு நாடகத்திலும் நிச்சயம்.  செங்கல்பட்டில் என்னைக் கையாண்ட இரண்டு முக்கியமான வாத்தியார்கள் (இயக்குனர்கள்) ஒருவர் கோபால்சாமி.  அவர் இப்போ உயிரோடு இல்லை. இன்னொருத்தர் கஸ்ட் மணி.  இந்த இரண்டு பேர் என்னைக் கையாண்டவிதம் எனக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும்.  அப்பா எனக்கு விளக்கிச் சொல்வார்.  `இல்லப்பா, அந்த மாமா நாடகத்துல நடிக்கும்போது அப்படித்தான் நடிக்கணும்.  இந்த மாமா நாடகத்துல அவர் சொல்றபடி நடிக்கணும்'னு சொல்வார்.  அதனால் அப்பவே டைரக்டருக்கு ஏற்ற மாதிரி நடிக்கறது எனக்கு பழக்கமாயிட்டுது. ஆனால், அப்போ கையாண்ட முறைய ஒரு சிறந்த நடிப்புக் கோட்பாடா 15, 18 வருடங்களுக்குப் பிறகு உலக நடிப்புக் கோட்பாடா நான் புத்தகங்களில் படிக்கிறேன்.  உதாரணத்துக்கு  கோபால்சாமி வாத்தியார் என்ன சொல்வாருன்னா `எப்பவும் சத்தமா கை, கால்களை நல்லா அகலமாக வீசி பேசணும்.  அதேசமயம் மைக் எங்கயிருக்குன்னு பார்த்துக்கணும்'னு சொல்வாரு.  ஆனால், கஸ்ட் மணி வாத்தியார் நாடகத்தில் நடிக்கும்போது `அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.  உண்மையிலேயே அழுதியான்னா எங்க பார்த்தாலும் நீ அழுகிறேனு தெரியும்.  மைக் பார்க்கணும்னு அவசியமில்லை.  மைக்கில் கேக்கணும்ங்கிறது பின் மண்டையில் இருந்தாப் போதும் அப்படி'ம்பார்.  இப்ப அதுக்கு தொழில்நுட்பக்கலைச்சொற்கள் தெரியுது.  அப்போ பின் மண்டை, முன் மண்டைன்னு ஞாபகம் வைச்சிக்குவேன்.  அந்த வாத்தியாருக்கு முன் மண்டை.  இந்த வாத்தியாருக்குப் பின் மண்டை.  சின்ன வயசிலயே இரு வேறு இயக்குனர்களுடன் நடிக்க மனசு பக்குவப்பட்டதனால் இன்று ராம.  நாராயணன் படத்திலயும் நடிக்க முடியுது.  மணிரத்னம் படத்திலயும் நடிக்க முடியுது.  பலதரப்பட்ட இயக்குனர்களுடன் பணியாற்றும்போது மனம் பக்குவப்படுது.  இதில் நான் வீண்விவாதம் பண்ண விரும்பல.  இது தொழில்.  கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை, கொடுக்கப்பட்ட கால அளவுக்குள் நான் செய்து முடிக்க வேண்டும்.  அதற்கு நான் காசு வாங்குகிறேன்.  இதில் என் தொழில் நேர்த்தி என்ன, அது அவ்வாறு  இல்லையா என்பதை விமர்சகர்கள்தான் சொல்ல வேண்டும். ஒரு கதாசிரியரும், இயக்குனரும் உருவாக்கியுள்ள ஒரு கதாபாத்திரத்தை நான் மேற்கொள்ள வேண்டும். அதற்கு மேல் ஒன்றுமில்லை.  என்னைப் பொருத்தவரை இதைக் கலை என்று சொல்ல மாட்டேன்.

தீராநதி : ஒரு நடிகனுக்குக் கதாபாத்திரங்கள் தான் மீடியம் இல்லையா?

நாசர் : ஆமாம்.  செங்கல்பட்டு நாடக அனுபவங்கள் இப்போது சுவையான அனுபவங்களாக உள்ளது.  முதலில் நாடக வாசிப்பு நடக்கும்.  அப்புறம் ஆண்கள் ரிகர்சல் நடக்கும். பெண்கள் ரிகர்சல் தனியாக நடக்கும். அப்பவெல்லாம் பெண் நடிகர்களைச் சென்னையிலிருந்து அழைத்து வருவார்கள்.  சரியா நாடகத்துக்கு முதல்நாள் இரவுதான் பெண் நடிகர்கள் வருவார்கள்.  இரவுதான் லேடீஸ் ரிகர்சல் நடக்கும்.  இரவெல்லாம் முழிச்சிக்கிட்டு இருப்போம்.  மியூசிக் ரிகர்சல் நடக்கும். கடைசியா கிராண்ட் ரிகர்சல் நடக்கும்.  எல்லாமே இண்ட்ரஸ்டிங்காக இருக்கும்.  இதெல்லாம் ஸ்கூலில் கிடைக்காது. ஸ்பெஷல் நடிகர்களாக கள்ளபார்ட் நடராஜன், தாம்பரம் லலிதா போன்றவர்களை அழைத்து வருவார்கள்.  அவர்களுடன் நடித்துள்ளேன்.  அவர்கள் வரும்போது அதீத மரியாதை தருவார்கள். சிம்ரன் போன்றவர்கள் இன்று வந்தால் என்ன மரியாதை கிடைக்குமோ அந்த மரியாதையை அன்று அவர்களுக்கும் கொடுத்தார்கள்.  இந்த மாதிரியான விஷயங்களைப் பார்த்து, ஈர்க்கப்பட்டு என்னை நடிகனாக்க வேண்டுமென்று அப்பா நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.

தீராநதி : இன்ஸ்டிடியூட் முடிச்ச பிறகு செங்கல்பட்டு நாடகங்களில் நடிக்கவில்லையா?

நாசர்: இல்லை.  சினிமா வாய்ப்புகளைத் தேடத் தொடங்கிட்டேன். ஆனால், என்னோட துரதிருஷ்டம் என்னன்னா, ஒருத்தர் சினிமா சான்ஸ் தேடணும்னா சென்னையில் உள்ள ஏதாவது அமெச்சூர் டிராமா கம்பெனிகளில் சேர்ந்து நடிக்கணும்.  சாயந்தரம் சினிமா டைரக்டர்கள் நாடகம் பார்க்க வருவாங்க.  அப்ப அவங்களை இம்ப்ரஸ் செய்தால் கூப்பிட்டு விடுவாங்க.  நான் லியோ பிரபு குழுவில் சான்ஸ் கேட்டேன்.  எந்த ஊருன்னாரு.  செங்கல்பட்டுன்னேன்.  சென்னையில் எங்க ரூம்னு கேட்டார்.  இல்லை சார்.  டெய்லி செங்கல்பட்டிலிருந்து வருகிறேன்னு சொன்னேன்.  குழுவில் சேர்த்துக் கொள்ள முடியாதுன்னு சொல்லிட்டார்.  அன்று நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இன்று நடிகர்கள் வருகிறார்கள்.  அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை.  அதுதான் இன்றைய கவலையாக இருக்கிறது.  புது நடிகர்கள் அவசியம்.  நான் நடிக்க வரும்போது புது நடிகனாக வந்தேன்.  சிவாஜி, கமல் எல்லோரும் புது நடிகர்களாகத்தான் வந்தார்கள். ஆனால், நடிப்பு என்ற தொழில் ஒரு நடிகனிடம் என்ன டிமாண்ட் செய்கிறது.  அவற்றை நாம் எப்படி டெலிவரி செய்யப் போகிறோம் அப்படீன்ற முன்னேற்பாடு.  நான் ஒரு டிரைவர் தேடும்போது யாரையும் `வாப்பா, வந்து ஓட்டிஓட்டி கத்துக்கோ'ன்னு சொல்லமாட்டேன். `உனக்கு என்ன முன் அனுபவம் இருக்கு, ஸ்டெப்னி மாற்றத் தெரியுமா? சின்னச் சின்ன ரிப்பேர் பாக்கத் தெரியுமா?'ன்னு கேட்டுதான் வைச்சுக்கிறோம்.  அத மாதிரி ஒரு பொறுப்புள்ள நடிகனுக்கு பயிற்சி அவசியம்னு நினைக்கிறேன். அது இன்றைக்குப் புதிதாக நடிக்க வருகிறவர்களிடம் இருக்கா என்ற கேள்வி எழுகிறது.  ஒரு படத்தில் நல்லா நடித்துவிடுவது முக்கியமல்ல. பல்வேறு சூழல்களில், பல்வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துவதற்கு அந்த ஊடகத்தில் பயிற்சி அவசியம். அது இன்று இல்லை.  வெற்றிடமாக உள்ளது. இந்த இண்டஸ்ட்ரிதான் அந்த வெற்றிடத்தை நிரப்பணும்.

தீராநதி : ஒரு நடிகன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?

நாசர்: இப்போது டீக்கடைக்காரரை டீக்கடைக்காரராக நடிக்க வைக்கிறார்கள்.  ஓகே.  நாளைக்கு அவரை குதிரை வண்டி ஓட்டுபவராக நடிக்கச் செய்ய முடியுமா? என்ற கேள்வி இருக்கிறது. நடிகன் என்பவன் சுற்றியுள்ள விஷயங்களை அவதானிக்கிறவனாக இருக்க வேண்டும்.  அதுமட்டுமல்ல, ஒரு நடிகன் ஒரு பொறுப்புள்ள மனிதன் என்ற அளவில் குறைந்தபட்ச சமூக அக்கறையுள்ளவனாக இருக்க வேண்டும்.  வாசிப்புப் பழக்கம் உள்ளவனாகவும் இருப்பது அவசியம் என்று நினைக்கிறேன்.  பல குணாதிசயங்களை வெளிப்படுத்த வேண்டிய தொழிலில் உள்ள நான், பல குணாதிசயங்களையுடைய மனிதர்களைத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.  அதற்கான நுட்ப உணர்வுகளை பாப்புலர் நாவல்களில் பார்க்க முடியாது. சினிமாவுக்கு யதார்த்தத்தை ஒட்டிய நடிப்பு தேவைப்படுகிறது.  நாம் யதார்த்த சினிமா எடுக்கிறோமா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் நடிப்பைப் பொருத்தவரையில் அது யதார்த்தத்தையொட்டியதாக இருக்கிறது. அந்த யதார்த்த உலகைத் தீவிர இலக்கியங்களில்தான் பார்க்க முடியும்.  அங்குதான் உண்மையாகவே ஒரு கதாபாத்திரத்தின் மனோவியல், வாழ்வியல் தெளிவாகச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில்தான் ஒரு கதாபாத்திரம் ஒரு பிரச்சனையை எதிர்கொள்கிறது.  அப்பிரச்சனையைத் தீர்க்க முயல்கிறது. அதில் ஜெயிக்கிறது; அல்லது தோற்கிறது.  இதை பாப்புலர் நாவல்களில் பார்க்க முடியாது.  தமிழ் சினிமா மாதிரி அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அந்த சீனில் திடீர்னு அவனுக்கு எங்கிருந்தோ ஞானோதயம் வரும்.  அது எனக்குத் தேவையில்லை.  இப்படித்தான் நான் இலக்கியத்தை உள்வாங்கத் தொடங்கினேன்.

தீராநதி : ஒரு நடிகராக உங்கள் வாசிப்பிற்கும், வளமையான இலக்கிய வாசகரின் வாசிப்புக்கும் வேறுபாடு இருக்கும் என்று நினைக்கிறேன்.

நாசர்: நிச்சயமாக.  நீங்க ஒரு வங்கியில் பணியாற்றுகிறீர்கள்.  உங்களுக்கு வாசிக்கும் பழக்கம் இருக்கிறது.  நீங்கள் ஒரு நாவல் வாசிக்கும்போது அதை பேங்க் அக்கவுண்டில் பயன்படுத்த முடியாது.  ஆனால், நடிகனான நான் வாசிக்கும்போது பல கதாபாத்திரங்களுக்குள் அதைப் பயன்படுத்த முடியும்.

தீராநதி : உங்கள் வாசிப்பு என்பது உங்களைப் பாதிக்கும் ஒன்றிரண்டு கதாபாத்திரங்களுக்குள் வாழ்கிற தாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நாசர்:
ஆமாம்.


தீராநதி :நீங்கள் சொல்கிற பிரச்சனை நவீன நாடகங்களிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.  நடிகர், இயக்குநர், நாடகாசிரியர் இவர்கள் பிற கலைகளின் பரிச்சயம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். நடிகர், இயக்குனர் சொல்வதைக் கேட்டால்போதும் என்ற போக்கு நிலவுவதாகவும், இயக்குனர்கள், நாடகாசிரியர்கள் இலக்கியம், ஓவியம், இசை போன்ற பிற கலைகளுடன் உறவு தேவையில்லை என்று நினைப்பவர்களாக உள்ளதாகவும் ஒரு விமர்சனம் உள்ளது. ஆனால் நாடகம், சினிமா ஆகியவை பல்வேறு கலைகளின் கூட்டு உழைப்பு அல்லவா?

நாசர்: சினிமாவிலும் அந்தப் பிரச்சனை உள்ளது.  அப்படி ஒரு நிர்ப்பந்தத்தை இந்தத் தொழில் ஏன் ஏற்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  ஆனால் இதெல்லாம் எனக்கு அவசியமாகப்படுகிறது.  ஒரு திரில்லராக இருந்தாலும் கூட அதற்கு ஆய்வு தேவைப்படுகிறது. ஆனால், அதற்கான முயற்சிகள் கூட இல்லாமல்தான் எடுக்கிறார்கள். இதனால் அடிப்படை லாஜிக் கூட அடிபடுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட நாடகம், சினிமா, இசை இவற்றுக்கு இடையேயான ஒரு பலமான இணைப்பு, உறவைப் பார்க்க முடிந்தது.  அன்றைய சினிமாவில் புதுமைப்பித்தன் இருந்திருக்கிறார். ஜெயகாந்தன் இருந்திருக்கிறார். இன்று எழுத்தாளர்களுக்கும் சினிமாவுக்கும் பெரிய இடைவெளி நிலவுகிறது.  இது சினிமா பற்றிய விஷயம் மட்டுமில்லை.  ஒட்டுமொத்தமாகவே வாசிப்புப் பழக்கம் அவசியமென்று நினைக்கிறேன்.

தீராநதி : நீங்கள் `நடிப்பு எனக்குத் தொழில், அதைக் கலை என்று சொல்ல முடியாது' என்று கூறினீர்கள்.  ஆனால், இந்தி சினிமாவில் இன்றைய நஸ்ருதீன் ஷா, ஓம்புரி அன்றைய உத்பல் தத் போன்றவர்கள் வணிக சினிமா, தீவிர சினிமா, தீவிர நாடகம் மூன்றிலும் சிறப்பாக, சமமான முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறார்கள்.  இங்கு மட்டும் அதைக் கிண்டலாகப் பார்க்கப்படுகிற சூழல் நிலவுவது ஏன்?

நாசர்: அப்படிக் கிண்டல் செய்யும் நிலைமை இப்போது இருப்பதாகச் சொல்ல முடியாது.  அப்படியும் ஒரு நிலைமை இருக்குமானால் அந்த மனப்பான்மையை நாம் எப்போதுதான் உடைப்பது? மாபெரும் நடிகர்  சிவாஜிகணேசன் தனது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்ற நிலை ஏற்படும்வரை `தங்கப்பதக்கம்' வரை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.  நாடகம் மூலமாக என்ன வருமானம் கிடைத்திட முடியும்? இருந்தாலும் ஆத்மதிருப்தி அங்குதான் கிடைத்தது.  ஒரு முறையான பயிற்சி ஒரு நடிகனுக்குத் தரப்பட்டால் அவன் அதில் சுகம் கண்டுவிட்டால் நடிப்புக்கான வடிகாலை விடவே மாட்டான்.  ஒரு தடவை நாடகத்தில் நடித்த  சுகத்தை அனுபவித்துவிட்டால் வருஷத்துக்கு ஒரு நாடகமாவது நடிப்பீங்க. அதனால அந்த எக்ஸ்போஷர் இல்லைன்னா அதப் பற்றிக் கேவலமாகத்தான் நினைப்பீர்கள்.  என்ன ஒரு ஆச்சர்யமென்றால் மோகன்லால் இன்னமும் நாடகம் பண்ணிக்கிட்டு இருக்கிறார்.  இத்தனைக்கும் இவர் நேரடியாக சினிமாவுக்கு வந்தவர். உச்ச நடிகர் ஆனபிறகும், 3 வருசத்துக்கு முன் கர்ண பாரதத்தை சமஸ்கிருதத்தில் பண்றார்.  இப்ப அடுத்த நாடகமும் சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்.  அதேசமயம் கேரளாவில் இருக்கிற சமூகத்தெளிவு இங்கு இல்லை.  டி.வி.யில் நடித்தால் சினிமாவில் கூப்பிட மாட்டாங்களோ, நாடகத்தில் நடித்தால் சினிமாவில் எடுத்துக்கொள்ள மாட்டார்களோ என்ற பயம் உள்ளது.  நாம ஏற்படுத்திய மாயைதான் இது.  இதை நாம்தான் உடைக்க வேண்டும்.

தீராநதி : இதை மீட்டுருவாக்கம் செய்ய ஏதாவது முயற்சி செய்வீர்களா?

நாசர்: செய்யணும்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு `பொன்னியின் செல்வன்' நாடகத்தில் நடித்தேன்.  அதற்குப் பின் `பட்டம்' நாடகத்தில் நடித்தேன்.  பிறகு சிறிய இடைவெளி.  இப்போது `கர்ணன்' நடித்துள்ளேன்.  இனி வருடத்துக்கு ஒரு நாடகம் செய்வேன்.  ரோகிணி `பெண்வெளி' செய்துள்ளார். இதைப் போல மற்றவர்கள் வருவார்கள் என்று நினைக்கிறேன்.  பசுபதி போன்றவர்களும் நடிப்பார்கள் என்று நினைக்கிறேன்.  கமலுக்கும் நாடகத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது.

தீராநதி : சினிமா என்ற ஊடகம் நடிகர்கள் ஊடகம் அல்ல.  அது இயக்குநர் ஊடகம். அதில் ஒரு நடிகனுக்கு நீங்கள் சொல்கிற மாதிரியான விஷயங்கள் தேவையில்லை.  அது பல்வேறு தொழில்நுட்பங்களினூடாகச் செயல்படுகிற ஒரு ஊடகம்.  இதில் நடிகன் என்பவன் ஒரு உடல்.  ஒரு உடல் இருந்தால் போதும் என்ற கருத்து இப்போது பேசப்படுகிறது?

நாசர்: அப்படியானால் சிறந்த நடிகர் விருது தேவையில்லையே.  கையையோ காலையோ காட்டினால் அங்கு நடிகன் இல்லையா? சிறந்ததொழில்நுட்பத்தினூடாக அதில் நடித்த உறுப்புகளுக்கு மட்டும் விருது தரப் போகிறீர்களா? கமல் சிறந்த நடிகர்.  நாசர் சிறந்த நடிகர்.  பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர் என்று ஏன் சொல்ல வேண்டும்? ஆனாலும், நான் என்ன நினைக்கிறேன் என்றால் இன்னும் 50 வருஷத்தில் சினிமாவில் இருந்து நடிகர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். 3டி அனிமேஷன் தொழில்நுட்பம் மிகப் பிரமாதமாக வளர்ந்து வருகிறது.

தீராநதி : இது நடிகனுக்கு ஒரு சவாலா?

நாசர்: சவால்தான்.  என்னுடைய காலகட்டத்தில் அது நடக்காது.  இருந்தாலும் மாற்றங்களுக்கு நாம் தயாராகிக் கொள்ள வேண்டும்.  நடிப்பின் மாயைகள் எல்லாம் உடைந்துவிட்டது.  விஞ்ஞானப்பூர்வமாக நடிப்பு என்பதன் இலக்கணம் மாறியுள்ளது.  `லயன் கிங்' என்ற 2டி அனிமேசன் ஃபிலிமைப் பார்த்தீர்கள் என்றால் அதில் ராஜா சிங்கம் இறந்த பின்னர் குட்டி சிங்கம் அந்த ராஜா சிங்கத்தைச் சுற்றிச்சுற்றி வந்து `அப்பா எழுந்தி ருப்பா.  அப்பா, எழுந்திருப்பா' என்று திரும்பத் திரும்பக் கூறும்போது யாராலும் அழாமல் இருக்க முடியாது.  வெறும் கோடுகள் உங்களை அழவைக்கின்றன.  அப்போ நடிப்பதற்கு நடிகனோட முகமும் வேண்டாம், உடலும் வேண்டாம்.  என் கை போதும் என்று கோடுகள் மூலமா உணர்ச்சிகளை செலுலாய்டில் வடித்து உங்களை அழச் செய்கிறான் என்றால், அவன் எவ்வளவு பெரிய நடிகனாக இருக்க வேண்டும்.  என்னைவிட ஒரு உலோகப் பேனாமுனை சிறப்பாகச் செய்ய முடியும் என்றால் நான் என்ன பெரிய ஆள்.  மீண்டும் திரைப்படம் என்பது பல்வேறு கலைகளின் கலவை.  இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் ஆளுமை கொண்டவனே ஜெயிக்க முடியும்.

தீராநதி : இதுபோன்ற புரிதல் இன்றைய தமிழ் சினிமா இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இருக்கிறதா?

நாசர் : இருக்கு, இல்லைன்னு நான் பதில் சொல்ல முடியாது.  இந்தக் கேள்வியை ஹாலிவுட்டில் நீங்க கேட்க முடியாது.  ஐரோப்பிய சினிமாக்காரங்ககிட்ட கேட்க முடியாது. இங்க இல்லைங்கறதாலதான் நீங்கள் கேட்கிறீங்க. எனக்கு இருக்கு. இங்க சினிமாவுல ஒரு தனி மனிதனை பாப்புலராக்கி அவன் மேலதான் தமிழ் சினிமா பயணிக்குது.

தீராநதி :
தமிழ் சினிமாவில் தற்போது ஒரு புதிய அலை வீசுவதாகச் சொல்கிறார்கள்.  அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


நாசர் : ஆமாம்.  மாற்றம் வந்துள்ளது.  அது நல்ல விஷயம்தான்.  சினிமா யதார்த்தத்தை ஒட்டி இருக்க வேண்டும்.  அந்த இலக்கணத்தின் அடிப்படையில் இப்போது நாம் சினிமாவைத் தொட ரம்பித்துள்ளோம்.  சந்தோஷம்.  ஆனாலும், இப்போது ஃபார்ம பிடிச்சிட்டோம்.  கண்டண்ட்? யதார்த்த சினிமாவுக்கான வடிவத்தை அடைந்துள்ளோம்.  உள்ளடக்கம்? இரண்டும் இணைந்தால்தான் நாம ஏதாவது செய்ததாகச் சொல்ல முடியும்.  அதுவும் வரும்.  `சுப்பிரமணியபுரம்', `நாடோடிகள்', `பசங்க' என இப்போ வந்த படங்கள் யதார்த்த வடிவத்தைத் தந்துள்ளன. அதனால் தொடர்ந்து உள்ளடக்கத்துக்கான தேவை எழுந்துள்ளது. அடுத்து உள்ளடக்கத்தில் மாற்றம் வரும்.

தீராநதி : அப்படி ஒரு மாற்றம் வருவதை சினிமா பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.  மீண்டும் சினிமாவை மாயையில் வீழ்த்தவே செய்வார்கள் என்று விமர்சகர்கள் கூறுகிறார்களே?

நாசர்: அதுவும் நடக்கும்.  எம். ஜி.ஆர், சிவாஜிக்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோர் கொண்டுவந்த ஒரு அலை நிரப்பியது.  மீண்டும் `சகலகலா வல்லவன்', `முரட்டுக்காளை' மூலம் பிரமாண்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது.  இப்போது மீண்டும் ஒரு அலை.  மீண்டும் பிரமாண்டம் வரலாம்.  இது ஒரு சுழற்சிதான்.  இந்த சுழற்சியினூடாக வளர்ச்சி எவ்வாறு உள்ளது; அந்த சுழற்சியில் தாமதமேற்படுத்த முடியுமா என்பதுதான் நமது கவலை.  இந்தியில் பேரலல் சினிமா வருது.  கோவிந்த்நிகலானி, நஸ்ருதீன் ஷா, ஓம்புரி போன்றவர்கள் இதைக் கொண்டு வந்தார்கள். இப்போது இந்தியில் ஆக்ஷன் படமே கிடையாது.  அமீர்கான் மாதிரி டாப் ஹீரோ டைரக்ட் பண்ணும்போதுகூட `தாரே ஜமீன் பர்' போன்ற கதைகளைத்தான் தேர்வு செய்கிறார்.  அமிதாப் நடித்த `பிளாக்' மிகப்பெரிய பட்ஜெட் படம்.  அமிதாப் என்ற மிகப்பெரிய நடிகனை அவர் இளமையாயிருந்ததைவிட அதிகமாக இன்று இந்தி சினிமா முன் நிறுத்துகிறது.  சிவாஜிகணேசனுக்கு அதை நாம் செய்தோமா? `தேவர்மகனில்' கமல் செய்தார்.  அதோடு சரி.  60 வயது கிழவன் பற்றிய யதார்த்தமான கதையை யாருமே யோசிக்கவில்லை.  நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களோடு ஒப்பிட்டு நோக்காதவரை எப்போதுமே பிரச்சனைதான்.  நாம வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறோம்.

தீராநதி : வெற்றி என்றால் ஒரு படம் வருடம் முழுவதும் ஓட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  ஒரு கடையில் 10 புடவைகள் இருக்கிறதென்றால் அவரவர் விருப்பத்துக்தேற்ப தேர்வு செய்வார்கள்.  அதுபோல, ரசிகர்களின் தேர்வுக்கு மதிப்பளிக்காமல் பிரமாண்டத்தைத் திணிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

நாசர் : ஆமாம். `சிவாஜி'யைப் பார்த்த அதே மக்கள்தான் `சுப்பிரமணியபுரத்தையும்' பார்த்தார்கள்.  இதில் மக்கள் ரசனையைக் குறை சொல்ல ஒன்றும் இல்லை. இதே மக்கள்தான் இன்று பாட்டு, சண்டை இல்லாத 90 நிமிட `உன்னைப் போல் ஒருவன்' படத்தையும் பார்க்கிறார்கள். அதன் கண்டெண்ட் பற்றி பல தர்க்கங்கள் உண்டு.  அது வேற விஷயம்.   இந்த மாதிரிப் படங்களை எடுக்க கொஞ்சம் புத்திசாலித்தனம் வேண்டும்.  நடிகர்கள் கதாபாத்திரங்களில் மிகவும் ரிஜிட்டாக உள்ளனர். அவர்கள் தோல் எப்போதும் விரைப்பாக உள்ளது.  ரிலாக்ஸ் ஆக மறுக்கிறார்கள்.  அது எப்படி போகும்? முதலில் தன்னம்பிக்கை வேண்டும். முதலில் பைக் ஓட்டும்போது பாடி ரிஜிட்டாகத்தான் இருக்கும்.  போகப்போக ரிலாக்ஸ் ஆகும்.  ஒரு கையில் செல்ஃபோனை வைத்துப் பேசிக்கொண்டே பைக் ஓட்டலாம்.  நீங்க அந்த கிராஃப்ட் பற்றிய முழுமையான அறிவைப் பெறும்போது ரிலாக்ஸ் ஆகும்.  இங்கதான் நான் திரும்பத் திரும்ப பயிற்சிக்கு வர்றேன்.  பயிற்சி இருந்தால்தான் அது போகும்.  இல்லைன்னா நூறு வருஷம் ஆனாலும் ரிஜிடிடி போகாது.  becoming an actor என்பது பெரிய process.இந்த processதான் என்னை வேறு மனிதனாக்கியது.  பேர், புகழ், பணம் இதெல்லாம் முக்கியமில்லை.  இந்த processஐ நான் கடந்து வந்ததுக்காக என் அப்பாவுக்கு நன்றிக்கடன் உள்ளவனாக உள்ளேன்.  நான் ஒரு ஷாட்டில் இன்வால்வ் ஆகிறேன்.  டைரக்டர் டிஸ்கஸ் பண்றாரு.  கேமிரா ஆன் ஆகுது. டேக்1, டேக்2. .  7வது டேக் ஓகே ஆகுது.  இதுல எல்லாமும் மறந்து போகுது.  இதுக்குள்ள எனக்கும், அந்த கேரக்டருக்கும் இடையில் ரசாயன மாற்றம் ஏற்படுது.  இதுதான் பிராசஸ்.  இதுதான் ஒரு நடிகனுக்கு சுகம். ஆனால், எத்தனை பேர் இந்த பிராசஸை அனுபவிக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.  வெற்றி, தோல்விங்கற  ரிசல்ட்தான் முக்கியமாகப் படுது.

தீராநதி : சினிமா நடிப்புக்கும், நாடக நடிப்புக்கும் என்ன வேறுபாடு?

நாசர்: இரண்டும் வேறு வேறு ஊடகங்கள்.  தன்மையைப் பொருத்தவரை இரண்டும் ஒன்றுதான்.  இன்று இரண்டிலும் யதார்த்த நடிப்பே பின்பற்றப்படுகிறது. ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்புக் கோட்பாடுகள் நாடகத்துக்கானது. அதுதான் இன்று சினிமாவில் பின்பற்றப்படுகிறது.  ஆனால் அணுகுமுறை, எக்சிகியூஷன் வேறு வேறாக உள்ளது.  மேடையில் நாடகத்தை நிறுத்திவிட்டு உங்கள் தவறைத் திருத்திக்கொள்ள முடியாதுங்கிற சவால் நாடகத்துல இருக்கு. அதேபோல,  சினிமாவில் ரீடேக் எடுக்கிற வசதி இருந்தாலும், நடிப்பில் வரிசைக்கிரமமாக எதுவும் நடப்பதில்லை.  ஒரு வருஷம் கூட எடுக்கிறார்கள்.  இந்தக் காட்சியில் கொஞ்சம்; அந்தக் காட்சியில் கொஞ்சம் என்று எடுக்கிறார்கள்.  எல்லாத்தையும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.  இது சினிமா நடிப்பில் மிகப் பெரிய சவால்.

தீராநதி : சினிமா, நாடகத்துக்கு ஒரு கதை தேவையில்லை என்ற கருத்து இன்று நிலவுகிறதே?

நாசர் : அந்த மாதிரியான சினிமாவும் இருக்கு.  எழுத்து,  இசை, ஓவியம், சிற்பம், இலக்கியம் உள்பட அனைத்து தற்காலக் கலைகளிலும் இப் பிரச்சனை இருக்கிறது. கோணங்கியிடம் கேட்டால் கதை எதுக்கு, தேவையில்லை என்பார்.  இன்னொரு எழுத்தாளர் வேறு மாதிரி கூறுவார்.

தீராநதி : சினிமாவுக்கும் வேறு கலைகளுக்கும் வேறுபாடு இருக்கு இல்லையா?

நாசர்: சினிமாவுல கதை இல்லாம நிறைய முயற்சிகள் செய்துள்ளனர்.  தார்க்கோஸ்வ்கியின் `ஸ்டாக்கர்' படத்தில் கதை கிடையாது.  இரண்டு பேர் உண்மையைத் தேடிச் செல்வதுதான் படம்.  இடம், நேரம், காலம் என்ற பொருத்தப்பாடுகள் இல்லாமல் எடுக்கப்பட்ட படம்.  நான்  நரேசன், நான் லீனியர், அப்ஸ்டிராக்ட் என எந்த ஸ்டைலிலும் எடுக்கலாம். ஆனால் மெயின்ஸ்டிரீம் படம் என்கிறபோது,  `ஒரு ஊரில் ஒரு ராஜா' என்று கதை சொல்லிப் பழக்கி வைத்துள்ளோம்.  இதை மாற்றி நான்  நேரேடிவ் படம் எடுக்கலாம்.  ஆனால், அதற்கு ரசிகர்களைப் பழக்கப்படுத்தியுள்ளோமா என்ற கேள்வி உள்ளது.

தீராநதி : ரசிகர்களைத் தயார்படுத்தியுள்ளோமா என்கிறீர்கள்.  சரி, தமிழ் சினிமாவின் ரசிகர்கள் யார்?  சினிமா தயாரிப்பாளர்கள் ரசிகர்கள் என்று யாரை நினைக்கிறார்கள்? சினிமா என்கிற பொருளாதாரத்தில் அதன் வாடிக்கையாளர்கள் யார்? மூன்று வயதுக் குழந்தைகள் முதல் 90 வயது முதியோர் வரை சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளது.  அவர்களில் அனைத்துத் தரப்பினரும் இவர்கள் எடுக்கும் ஒரே படத்தைப் பார்த்தே தீரவேண்டும் என்று வற்புறுத்துவது ஏன்? பெண்களுக்கான பிரச்சனை வேறாக உள்ளது.  இளைஞர்களுக்கான பிரச்சனை வேறாக உள்ளது.  முதியோர்களுக்கான பிரச்சனை வேறாக உள்ளது இல்லையா?

நாசர் : என்ன கேட்கிறீர்கள் என்பது புரியுது.  ஒரு குரூப் `லேடீஸ் தியேட்டருக்கே வருவதில்லை' என்று கவலைப்படுகிறார்கள்.  இன்னொரு தரப்பினர் `சார், யூத் இல்லாம படம் ஓடாது' என்கிறார்கள். இது ஏன் என்றால், எல்லாப் படமும் எல்லா இடங்களிலும் 100 நாள் ஓட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  நான் என்ன நினைக்கிறேன் என்றால் இந்தப் படம் இவர்களுக்கானது.  இதன் ரசிகர்கள் இன்ன தரப்பினர் என்ற அடிப்படையில் படம் எடுக்க வேண்டும்.  அதற்கேற்ற அளவில் பட்ஜெட் முடிவுசெய்து படம் திட்டமிட வேண்டும்.  இளைஞர்களுக்கான படம், பெண்களுக்கான படம், ஏன் விவசாயிகளுக்கான படம் என்று கூட எடுக்கலாம்.  அப்போதுதான் புதிய கதைகள் உருவாகும்.  சினிமா உலகம் பன்முகப்பட்டதாக வெளிப்படும். ஒரே நேரத்தில் எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது இல்லையா?

தீராநதி : இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் இல்லையா? மூன்று வயதுக் குழந்தையிடம்கூட அடல்ட்ரி திணிக்கப்படுகிறது.

நாசர் : ஆமாம். குழந்தைகள் உலகத்தை நாம் மறந்துவிட்டோம்.  ஒரு வெளிப்பாடு, ஒரு படைப்பு வியாபாரியிடம் போகிறது.  அவர்தான் தீர்மானிக்கிறார்.  சினிமாவில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை அவர்தான் கூறுகிறார்.  ஒரு கோடியில் படம் எடுத்தாலும், 100 கோடிகளில் படம் எடுத்தாலும் ரிசல்ட் ஒண்ணுதான்.  உச்சபட்ச வருமானம் எந்தப் படமாக இருந்தாலும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.  1 கோடியில் படம் எடுத்தாலும் 100 கோடி வசூலாகும்.  80 கோடியில் படம் எடுத்தாலும் 100 கோடி வசூலாகும்.  `பர்பியூட் ஃப் ஹேப்பினஸ்' என்ற ஹாலிவுட் படம் பார்த்தேன்.  வில் ஸ்மித் அவ்வளவு பெரிய நடிகன்.  ஆக்ஷன் ஹீரோ.  சாதாரணமாக ஆறு வயது மகனுக்கும் அவனது தந்தைக்குமான உறவு குறித்த வேடத்தில் நடித்துள்ளார்.  அவர் ஆக்ஷன் ஹீரோ என்பதால் செயற்கையாக வில்லன்களை நுழைக்கவில்லை.  ஹாலிவுட் சினிமாவாக இருந்தாலும், ஐரோப்பிய சினிமாவாக இருந்தாலும் அங்கு குடும்பக்கதைகள் தனியாக இருக்கும். வயது வந்தோருக்கான சினிமா தனியாக இருக்கும். அது தேவை. அதை வெட்கமில்லாமல் பார்க்கலாம்.  குழந்தைகளுக்கென தனியான படங்கள் இருக்கும்.  நாம ஒரு கதைக்குள்ள எல்லாத்தையும் கொண்டுவர முனைகிறோம்.  யார் நமது  ரசிகர்கள் என்று கேட்கிற நிலைமையை உருவாக்கியுள்ளோம். சினிமாவில் இன்னமும் தொழில்முறை அணுகுமுறை, அதை ஒரு தொழிலாக அங்கீகரிப்பது இல்லை. அது ஒரு வியாபாரமாக இருக்கிறது.  இன்று சில தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் கூட தமிழ் சினிமாத்துறையில் இறங்கியுள்ளது.  ஆனால், அவர்களும்கூட இங்கு என்ன நடைமுறை உள்ளதோ அதையே பின்பற்றுபவர்களாக உள்ளனர்.  ஓடும் குதிரை மீது பணம் கட்டுபவர்களாகத்தான் உள்ளனர்.  இதுதான் இங்குள்ள கட்டமைப்பு.  இதற்குள் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  கமல் அதில் முக்கியமானவர்.

தீராநதி : அவரும் பிரமாண்டமாகத்தான் திட்டமிடுகிறார்.  `தசாவதாரம்' 80 கோடி, 100 கோடியில் தயாராகிறது என்பதைக் கேள்விப்படும்போது பயமாக இருக்கிறது.  தோல்வியடைந்தால் என்ன ஆகும் என்ற பயம் உண்டாகிறது.

நாசர் : அவர் மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தில் இருப்பதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.  ஒரு `தசாவதாரம்' கொடுத்ததும், `உன்னைப்போல் ஒருவன்' என்ற ஒரு எளிமையான படத்தைக் கொடுத்து மிகப் பெரிய வெற்றிப்படமாக்கியது அதனால்தான்.  அடுத்து ஒரு பிரமாண்டத்தை அவர் கொடுத்தாக வேண்டும். ஒரு எளிமையான படம் எடுத்து அது தோல்வியடைந்துவிட்டால் அடுத்து பிரமாண்டமான படம் எடுத்தால் அதன் விலையைக் குறைக்கத்தான் பார்ப்பார்கள். இதுதான் இங்குள்ள வியாபாரக் கட்டமைப்பு. கமல் மாதிரியான ஒரு ஆள் அதில் தோற்றுவிடக்கூடாது.  யாராவது சினிமாவை வேறு கோணத்தில் பார்த்தால் அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும்.  அந்த நிலை இல்லை.  கமல் வேற வேற மாதிரி படங்கள் செய்கிறார் என்றால் அதை வேறு வேறாகப் பார்ப்பதில்லை.  அது சாத்தியமானால் கமலின் வெளிப்பாடுகள் நிச்சயம் வேறு மாதிரியாக இருக்கும்.  சினிமா தயாரிப்பில் டிரண்ட் செட்டராக அவர் இருப்பார்.

தீராநதி : நவீன நாடகங்களோடு தொடர்ந்து தொடர்பில் உள்ளீர்கள்.  நாடகத்தில் தற்போதைய போதாமைகள் எவை என்று நினைக்கிறீர்கள்? நாடக பிராசஸின் பல கூறுகள் இன்று வியாபாரமாகி இருக்கிறது.  கூத்துப்பட்டறையில் நடித்தால் சினிமா வாய்ப்பு, நிறுவனங்களில் ஸ்டிரஸ் மேனேஜ்மெண்ட், பள்ளி, கல்லூரிகளில் பட்டறைகள், நாடகத் தயாரிப்புகள், விழிப்புணர்வுத் திட்டங்கள் என நிறைய பைபுராடக்டுகள் உள்ளன. ஆனால், முதன்மையான நாடகத் தயாரிப்பு, உண்மையான பார்வையாளர்களைச் சென்றடைவது என்பது எவ்வாறு உள்ளது?

நாசர்: நாடகத்தில் போதாமை என்பது பார்வையாளர்கள்தான்.   இதற்கு நாடகக்காரர்களைக் குறை சொல்வதா, பார்வையாளர்களைக் குறை சொல்வதா?  நிச்சயமாகப் பார்வையாளர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களை நாம்தான் வழிப்படுத்த வேண்டும். நாடகக்காரர்களுக்கும் பரந்த நோக்கு வேண்டும்.     உள்ளடக்கத்திலும் போதாமை உள்ளது.  கோமல் `தண்ணீர் தண்ணீர்' நாடகத்தை ஊர் ஊராகச் சென்று போட்டார்.  தொடர்ந்து அவரது பல நாடகங்கள் தமிழகம் முழுவதும் நிகழ்த்தன.  அதற்கு மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால், நவீன நாடகம் ஒரு முறைதான் அரங்கேற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.  நவீன நாடகங்கள் வடிவத்தில் நன்றாக இருக்க வேண்டும். உள்ளடக்கம் என்பது சரிசமமாகவாவது இருக்க வேண்டும்.  கதை சொல்லக்கூடிய வடிவத்துக்கு நாம் பழக்கப்பட்டுள்ளோம். யதார்த்த நடிப்புக்கு வரவேற்பு உள்ளது.  சினிமா மூலமாக அதைத்தான் வளர்த்து வைத்துள்ளோம்.  இதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள்.  இன்று மராட்டிய மொழி நாடகங்கள், டில்லியில் நடைபெறும் நாடகங்கள் ஏன் நல்லாயிருக்குன்னா அவங்க கதைதான் சொல்றாங்க. மராட்டிய நாடகங்கள் பெரும்பாலும் யதார்த்தத்தை ஒட்டிய கதைகளாகத்தான் உள்ளன.  எல்லா நாடகங்களும் நேர்மையான, யதார்த்தமான கதைகளைக் கொண்டு சென்றாலே ஒரு மீட்டுருவாக்கம் நடைபெறும் என்று நான் நினைக்கிறேன்.  அதற்காக அதை வெகுஜனப்படுத்துவதை நான் ஏற்கவில்லை. துணுக்குத் தோரணமாக மாறுவது பத்தானது.  எஸ்.வி.  சேகர், கிரேஸிமோகன் நாடகங்கள் வேறு.  நாம நேர்த்தியாக, உண்மையாக, நேர்மையாகச் செயல்பட வேண்டும். அடிப்படை அழகியல் வேண்டும். தமிழ்நாட்டில் நாடகம் இரண்டு எக்ஸ்டிரீம் நிலைகளில் உள்ளது.  ஒன்று எஸ்.வி. சேகர்.  கிரேஸி மோகன், ஒய்.ஜி. மகேந்திரன் நாடகம்.  இல்லன்னா புரியாத நாடங்கள்.  இடையிலான பல நிலைகள் என்பது இல்லை.

தீராநதி : பாரம்பரிய ரசனையை இழந்து விட்டோமா?

நாசர் : நிச்சயமாக இழந்திருக்கிறோம்.  50 ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கு அனைத்துக் கலைகளும் சடங்கு சார்ந்தே இயங்கின. ஆனால், ஐரோப்பாவில் பார்த்தீர்கள் என்றால் அனைத்துக் கலைகளும் ரெகுலரைஸ் ஆகிவிட்டன.  ஆனால் இங்கு ரெகுலரைஸ் பண்ணும்போது, சரி, சாமி, மூடநம்பிக்கைகள் வேண்டாம் என்றால் அந்தக் கலைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.  தேவதாசி முறையை ஒழிக்கும்போது அவர்கள் கலைக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை.

தீராநதி : நமது பண்பாட்டு அடையாளங்களை நாம் இன்னமும் உருவாக்கவில்லை அல்லவா?

நாசர் : தேவதாசி முறையை ஒழித்துவிட்டோம்.  விபசாரத்தை ஒழிக்க முடிந்ததா? இல்லையே! அதேபோல் இன்று டெரகோட்டா கிடையாது.  அவர்கள் எல்லோருமே மண்சட்டிகள் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  பாரம்பரியக் கலைஞர்களின் வாழ்வாதாரங்கள் பற்றி நாம் கவலைப்படவில்லை.  இதெல்லாமும்தான் இன்றைய வெற்றிடத்துக்குக் காரணம்.  இதுக்குக் கடந்த 63 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தை நாம் பார்க்க வேண்டும்.  அவர்கள்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.  கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆட்சி நடைபெறுகிறது என்பதால் அவர்களுக்குக் கொஞ்சம் அதிகப் பொறுப்பு இருக்கிறது.  ஆனால், அடிப்படை அழகியலையே இழந்துவிட்டோமோ என்று கவலையாக இருக்கிறது.

வாஸ்து பார்க்கிறோம் என்ற பெயரில் வீட்டுக்கு அடிக்கும் பெயிண்ட் உளவியல் ரீதியாகப் பாதிக்கக்கூடியவை.  வீட்டுக்காரர்களைவிட எதிர்வீட்டில் உள்ளவர்கள், வீதியில் செல்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்.  இதை யார் அவர்களிடம் சொல்வது? இது சமூகத்துக்கோ, அரசுக்கோ தெரியாது என்று சொல்ல முடியுமா? இதுபோல் சிங்கப்பூரில் சாத்தியமில்லை.  எதிர்வீட்டுக்காரர் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சுத்தம், சுகாதாரம் தொடர்பாகக்கூட இதேமாதிரியான அக்கறையின்மை சமூகத்தில் நிலவுகிறது.

தீராநதி : எதிர்கால நாடகம், சினிமா தயாரிப்பு குறித்து உங்கள் திட்டம் என்ன?

நாசர் : `பொன்னியின் செல்வன்' நாடகத்தைத் தமிழகம் முழுவதும் போட வேண்டும் என்றுதான் நினைத்தோம். ஆனால் அதுக்குப் போதுமான ஸ்பான்சர்கள் கிடைக்கவில்லை.  நாடகங்கள் தயாரிப்பது காஸ்ட்லியான விஷயமாகவும் இருக்கிறது. ஆனாலும், தொடர்ந்து நாடகங்களில் நடிப்பேன், சினிமா தயாரிப்பைப் பொருத்தவரை ஏற்கெனவே நான் சிலரை நம்பி ஏமாந்துவிட்டேன்.  இப்படி, அப்படி செய்யலாம்னு சொல்லி என்னை ஏமாற்றிவிட்டார்கள்.  அந்த இழப்பிலிருந்து இப்போதுதான் சிறிது மீண்டிருக்கிறேன். மீண்டும் என்ன மாதிரியான தயாரிப்புகளில் ஈடுபடுவது என்ற லோசனையில் உள்ளேன். கமர்ஷியலான படங்களா, அல்லது மீடியம் ரேஞ்ச் யதார்த்த படங்களா என்பதைத் திட்டமிட வேண்டும். பொருளாதார ரீதியாகவும் யோசிக்க வேண்டியுள்ளது.  அதன் பிறகு மீண்டும் தொடரும்.

நன்றி - தீராநதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக