27/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 26

அறிவைப் பற்றி ஆயும் மெய்யியலின் ஒரு பிரிவே எபிஸ்டமாலஜி ஆகும். இந்த அறிவியலின் நோக்கம் "உண்மையான மற்றும் போதுமான அறிவை, உண்மையற்ற மற்றும் குறைபாடுடைய அறிவிலிருந்து, எது வேறுபடுத்திக் காட்டுகிறது?' என்ற கேள்விக்கு விடை காண்பதே ஆகும்.

1808-ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோ நகரத்தில் பிறந்த நுண்பொருள் கோட்பாட்டியல்  (Metaphysical) அறிஞர் ஜேம்ஸ் ஃப்ரெடெரிக் ஃபெரியர் (James Frederick Ferrier) ஆவார். மனதின் விழிப்பு நிலை பற்றிய மெய்யியலுக்கான ஓர் அறிமுகம் (An Introduction to the Philosophy of Consciousness), என்ற தலைப்பில் 1838-இல் ஒரு கட்டுரைத் தொடரை எழுதத்தொடங்கிய இவர், 1854-இல் தன்னுடைய கோட்பாடுகளின் தொகுப்பை "Institutes of Metaphyscic-The Theory of Knowing and Being' என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்தத் தொகுப்பில்தான், முதன் முதலில் ஜேம்ஸ் ஃப்ரெடெரிக் ஃபெரியர் (James Frederick Ferrier) எபிஸ்டமாலஜி என்ற சொல்லை உருவாக்கினார். இச்சொல், அறிவு மற்றும் புரிந்துகொள்ளுதல் என்ற பொருள்களைக் கொண்ட "எபிஸ்டெமெ' மற்றும், படிப்பு என்ற பொருளைக்கொண்ட "லோகோஸ்' ஆகிய கிரேக்கச் சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது. அறிவின் இயல்பையும், உண்மை, நம்பிக்கை, நிலைநாட்டுதல் இவற்றோடு அறிவுக்குள்ள தொடர்பையும் பற்றி ஆய்ந்தறிவதே எபிஸ்டமாலஜி ஆகும்.

ஸ்டான்ஃபோர்டு மெய்யியல் கலைக்களஞ்சியம், எபிஸ்டமாலஜி என்பது நியாயமான நம்பிக்கைகளையும், அறிவையும் பற்றிய படிப்பு என்று எடுத்துரைக்கிறது. மெரியம் வெஃப்ஸ்டர் அகரமுதலி, இச்சொல்லுக்கு அறிவின் இயல்பு மற்றும் ஆதாரங்களைப் பற்றிய படிப்பு அல்லது கோட்பாடு, அதிலும் குறிப்பாக அறிவின் வரம்பு எல்லைகளையும், அதன் ஒப்புக்கொள்ளத்தக்க அளவீடுகளையும் பற்றிய ஆய்வு என்று கூறுகிறது. ஆக்ஸ்போர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு, அறிவைப் பற்றியும், அதன் வகைமுறைகள், அதன் செல்லத்தக்கத் தன்மை ஆகியவற்றைப் பற்றியும் அறியப்படும் மெய்யியலின் ஒரு பிரிவு என்று உரைக்கிறது.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காகத் தயாரித்த ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில், இச்சொல்லுக்கு "அறிவாதார முறையியல், அறிவின் ஆதாரத்தையும், அறியும் முறைகளையும் ஆராயும் இயல்துறை' என்ற பொருள்களைத் தருகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எபிஸ்டமாலஜி என்பது உண்மையில் அறிவைப் பற்றிய இயல் ஆகும். எப்படி புவியைப் பற்றிய படிப்பு புவியியல் (Geography) ஆகுமோ, எப்படி பொருளாதாரத்தைப் பற்றிய படிப்பு பொருளியல் (Economics) ஆகுமோ, எப்படி குற்றங்களைப் பற்றிய படிப்பு குற்றவியல் (Criminology) ஆகுமோ, மற்றும் எப்படி தாவரங்களைப் பற்றிய படிப்பு தாவரவியல் (Botony) ஆகுமோ, அப்படி அறிவைப் பற்றிய படிப்பு அறிவியல் (Science) என்றே சொல்லப்பட வேண்டும். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே "சயன்ஸ்' என்ற சொல் விஞ்ஞானம் என்று மொழிபெயர்க்கப்பட்டு, அதன்பின் தமிழ்கூறும் நல்லுலகத்தால் "அறிவியல்' என்று மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. எனவே, அறிவியல் என்ற சொல் "சயன்ஸ்' என்ற சொல்லுக்கு இணைச் சொல்லாக ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்ட காரணத்தால், எபிஸ்டமாலஜி என்ற சொல்லுக்கு இச்சொல் மிகப் பொருத்தமானதாக இருப்பினும், அதைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இச்செய்திகளைக் கருத்தில் கொண்டு இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

வழக்குரைஞர் கோ. மன்றவாணன் இச்சொல்லுக்கு அறிவு இயங்கியல், அறிவுத் தேடலியல், அறிவு ஆய்வியல், அறிநுட்பவியல், அறிநோக்கியல் ஆகிய சொற்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார்.

பெ.கார்த்திகேயன் இச்சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் மனித அறிவின் அடிப்படை, அதன் மூலம் வரம்பு மற்றும் அவ்வறிவின் தன்மையை அறிதல் என்ற பொதுவான வரைமுறைகளைத் தருகின்றன என்றும் இச்சொல்லுக்கு மனித அறிவிற்கென்று தனியான பிரிவை நாம் அளிக்க வேண்டுமென்றும் கூறிவிட்டு அதன் காரணமாக மனித அறிவு அகழ்வாழ்வியல் என்றோ அல்லது பொதுப்படையாக மனிதவறிவகழ்வாழ்வியல் என்றோ சொல்லலாம் என்கிறார்.

டாக்டர் ஜி.ரமேஷ், மனித மூளையின் எல்லை, மனித குணங்கள் பற்றிய ஆய்வு, மனித அறிவு பற்றிய பாடம் அல்லது ஞானவியல் என்றும், என்.ஆர். ஸத்யமூர்த்தி ஞானஅகழ்வாழ்வியல், பல்லறிவாழ்வியல் என்னும் சொற்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

செ.சத்தியசீலன், "அறிவுக் கோட்பாடு' என்றும், தெ.முருகசாமி, "அறிவாராய்ச்சியின் அடிப்படை ஆதாரத்துறை' என்றும், டி.வி.கிருஷ்ணசாமி, "திருமுக விளக்கம்' என்றும், மதுரை பாபாராஜ், "அறிவுத்திறனியல்' என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன், "அறிவுத்துறை விளக்க ஆராய்ச்சி, அறிவு பற்றிய ஆராய்ச்சி, அறிவாதார இயல்' என்னும் சொற்களையும் கூறியுள்ளனர்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது எபிஸ்டமாலஜி என்பது அறிவைப் பற்றி ஆய்வு செய்யும் இயல் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதெனத் தெரிகிறது. எனவே, "அறிவாய்வியல்' என்ற சொல் மிகப் பொருத்தமாக இருக்கும்.


நன்றி - தமிழ்மணி 05 05 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக