27/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 27

உண்மையில் சொல்லப்போனால், "அஃப் கோர்ஸ்' என்பது ஒரே சொல் அல்ல; இரண்டு சொற்களின் கூட்டுச் சேர்க்கை. இந்தச் சொல்லாக்கம் எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தால், 13-ஆம் நூற்றாண்டில் "முன்னோட்டம்' அல்லது "முன்வழி ஓட்டம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட பழைய ஃப்ரெஞ்சுச் சொல்லான "கோர்ஸ்' என்பதிலிருந்தும், கிட்டத்தட்ட அதே பொருளில் அல்லது "ஓட்டப்பந்தயம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட பழைய இலத்தீன் சொல்லாகிய "கர்சஸ்ட என்ற சொல்லிலிருந்தும் ஆங்கிலத்தில் "கோர்ஸ்' என்ற சொல் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், 14-ஆம் நூற்றாண்டில், ஓட்டம், இயக்கம் என்னும் பொருளிலிருந்து சற்று மாறுபட்டு, கல்விக் கூடங்களில் கொடுக்கப்படும் பாடத்திட்டத்தைக் குறிக்கவும் "கோர்ஸ்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அப்பொழுதெல்லாம் "பை கோர்ஸ்' என்று பயன்படுத்தப்பட்ட இச்சொலவடை 1540-க்குப் பின் "அஃப் கோர்ஸ்' என்று உருமாற்றம் பெற்றது. அவ்வாறு மாற்றம் பெற்றபோது, இது "ஆஃப் தி ஆர்டினரி கோர்ஸ்' என்ற சொற்றொடரைக் குறிக்கும் சுருக்கச்சொல்லாகப் பயனுக்கு வந்தது.

ஒரு நிகழ்வின் அல்லது செய்தியின் ஓட்டத்தையும், செல்வழியையும் குறிப்பதற்குப் பயன்படும் சொல்லாகிய கோர்ஸ் என்ற சொல், பை கோர்ஸ் (by course), இன் கோர்ஸ் (in course), இன் டியூ கோர்ஸ் (in due course of), இன் தி கோர்ஸ் ஆஃப் (in the course of), மேட்டர் ஆஃப் கோர்ஸ் (matter of course), அஃப் கோர்ஸ் (of course), ஆஃப் கோர்ஸ் (off course) என்றெல்லாம் பல்வேறு நிலைகளில் பயன்பாட்டிற்கு வந்தது. வெவ்வேறு சொற்களோடு கோர்ஸ் என்ற சொல் கூடும்போது, பல்வேறு வகையான படிவங்களை அது காட்டத் தொடங்கியது.

கேம்ப்ரிட்ஜ் அகரமுதலி, அஃப் கோர்ஸ் என்ற சொல்லுக்கு (1) ஆமோதிப்பதையோ, அனுமதிப்பதையோ குறிக்கப் பயன்படும் சொல் அல்லது (2) ஏற்கனவே அறிந்த ஒன்றையோ அல்லது இயல்பான ஒன்றையோ சுட்டிக்காட்ட உதவும் சொல் அல்லது (3) ஆச்சர்யத்தைக் கொடுக்காத (எதிர்பார்த்ததைப் போலவே நிகழ்ந்த) ஒரு நிகழ்வையோ, செய்தியையோ குறிக்கும் சொல் என்று மூன்று வகையான பொருள்களைத் தருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், "அஃப் கோர்ஸ்' என்ற சொல்லுக்கு, இடத்திற்குத் தகுந்தாற்போல், பின்வரும், ஆச்சர்யம் தரா நிலை, ஆமாம், இப்போதே, இயற்கையில், இருப்பினும், இருக்கலாம், உண்மையில், உறுதியாக, தெரிந்ததுதான், நிச்சயமாக, முழுமையாக முதலிய பல சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.

முனைவர் ஜி.ரமேஷ், "நாம் முன்பு அறிந்ததைப் பற்றியது சம்பந்தமான ஒன்று' என்றும், இருந்தாலும், இருந்தபோதிலும், தெரிந்தாலும் ஆகிய பொருள்களையும் இச்சொல் குறிக்கும் என்கிறார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், "நாம் உரையாடல்களின் போது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைதான் அஃப் கோர்ஸ் என்றும், அதற்குப் பல இணையான தமிழ்ச்சொற்கள் உள்ளன என்றும், பொதுவாக உரையாடல்களின் போது அச்சொல், செல்லும் திசை, போக்கு, நடவடிக்கை, பந்தய ஓட்டக்களம் என்னும் பொருள்களைக் குறிக்கும் என்றும், இதற்கு இணையான தமிழ்ச்சொற்கள், கண்டிப்பாக, நிச்சயமாக, உறுதியாக' என்றும் கூறியுள்ளார்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், சூழ்நிலைகளுக்கேற்ப இச்சொல், நிச்சயமாக, உறுதியாக, உள்ளபடியே, உண்மையில், அப்படித்தான், அப்படியே, இயல்புதானே, ஆம் அப்படித்தான், அப்படியே ஆகட்டும் ஆகிய பொருள்களைக் கொடுத்தாலும், "நிச்சயமாக' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும், அதிலும் இந்தச் சொல் வடமொழியாக இருக்குமென்று எண்ணித் தவிர்க்க நினைத்தால், "உறுதியாக' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

வி.ந.ஸ்ரீதரன், எனினும், என்றாலும் என்னும் சொற்களையும், செ.சத்தியசீலன் ஏற்றது, பொருத்தமானது, உடன்பாடானது, இயல்பானது என்னும் சொற்களையும், மு.தனகோபாலன், "இருந்தாலும்' என்றும், தெ.முருகசாமி "ஒருவேளை' என்றும், என்.ஆர்.சத்தியமூர்த்தி, "உண்மைதான், இயல்பானதே, ஏற்புடையதே, தாராளமாக, தடையின்றி' முதலிய சொற்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகத்திற்காகப் பதிப்பித்த ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில், ஆங்கில அகரமுதலிகளில் இல்லாத ஒரு புதுமையைச் செய்திருக்கிறார். "கோர்ஸ்' என்கிற சொல்லுக்குப் பொருள் எழுதும் இடத்திலேயே பை கோர்ஸ் ஆஃப், இன் டியூ கோர்ஸ், இன் தி கோர்ஸ் ஆஃப், மேட்டர் ஆஃப் கோர்ஸ் மற்றும் அஃப் கோர்ஸ் ஆகிய அனைத்துச் சொற்றொடர்களுக்கும் பொருள்களை அளித்துள்ளார். அதில், "அஃப் கோர்ஸ்' என்ற சொல்லுக்கு இயல்பாக, "ஐயத்துக்கு இடமின்றி' என்ற சொற்களை வழங்கியுள்ளார்.

ஆனால், அஃப் கோர்ஸ் என்ற சொல், அது பயன்படுத்தப்படும் இடம், காலம் மற்றும் நிகழ்வை ஒட்டி, ஆமோதிப்பு, அனுமதிப்பு, ஏற்கனவே அறிந்த ஒன்று, எதிர்ப்பார்த்ததைப் போன்று நிகழும் நிகழ்வு ஆகிய பல பொருள்களைக் கொள்கிறது. இப்படிப் பார்க்கும்போது, "ஆம்' என்ற சொல் மட்டுமே ஆமோதிப்பு, அனுமதிப்பு, எதிர்ப்பார்ப்பு, இயல்பான நிகழ்வு ஆகிய அனைத்துக் குறியீடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அதே சமயம், முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், அரும்பாடுபட்டு உருவாக்கிய சொற்களஞ்சியத்தில் அளித்துள்ள பொருளை முற்றிலும் மாற்றுவதற்கு நமக்குப் போதிய அதிகாரமோ, அறிவோ இல்லை. எனவே, அஃப் கோர்ஸ் என்ற சொல்லுக்கு "ஐயத்திற்கிடமின்றி ஆம்' என்ற சொற்களை ஏற்பது சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியத்தில் அளித்துள்ள பொருளை ஒட்டி அமையும் என்பதால், "அஃப் கோர்ஸ்' என்ற சொல்லுக்கு இணையான சொற்றொடர் "ஐயத்திற்கிடமின்றி ஆம்' என்பதே.

நன்றி - தமிழ்மணி 12 05 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக