27/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 25

எர்கோனாமிக்ஸ்' என்ற சொல் புழக்கத்திற்கு வந்தே சுமார் 60 ஆண்டுகள்தான் ஆகின்றது. இச்சொல் சற்று வித்தியாசமானதாகவும், விசித்திரமானதாகவும் இருக்கிறது. காரணம், ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி, பிற அகரமுதலிகள், கலைக்களஞ்சியம் ஆகியவை இச்சொல்லைப் பற்றித் தரும் தகவல்கள் மாறுபட்டிருக்கின்றன. ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு, "மனிதர்கள் வேலை செய்யும் பணியிடத்தில், அவர்களுடைய திறமை, வசதி, அவர்களுக்குக் கிடைக்கும் நன்னலம் போன்றவற்றைப் பற்றிய ஒரு படிப்பு' என்று குறிப்பிடுகிறது. ஆனால், மெரியம் வெஃப்ஸ்டர் அகரமுதலி, இதற்கு இரு பொருள்களைத் தருகிறது. ஒன்று, "மனிதர்கள் கையாளும் பொருள்களை, அவர்கள் திறமையான வகையிலும், பாதுகாப்பான முறையிலும் பயன்படுத்தக் கூடியவகையில் வடிவமைக்கும் அறிவியலின் ஒரு பிரிவு'. இரண்டாவது, "ஒரு பொருளின் வடிவமைப்புப் பொருண்மைகள்'. ஆனால், கலைக்களஞ்சியம் இச்சொல்லைப் பற்றித் தரும் விளக்கம் "மனிதர்களின் நலன் மற்றும் உற்பத்தித் திறனை முழுமையாக வெளிக்கொணரும் விதத்தில் எந்திரங்களையும், வேலைப் பொருள்களையும், வேலைச் சூழ்நிலையையும் உருவாக்கித் தரும் தொழில்' என்பதாகும்.

சுவிட்சர்லாந்து நாட்டில் தொடங்கப்பட்ட அனைத்துலக எர்கோனாமிக்ஸ் சங்கம், இச்சொல்லுக்கு "ஓர் அமைப்பில் கூட்டாகச் செயல்படும் மனிதர்களுக்கும் மற்ற பொருள்களுக்கும் இடையே உள்ள உறவையும், பரிமாற்றத்தையும் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் ஓர் அறிவியல் பாங்கு' என்று பொருள் தருகிறது. இதைத் தவிர "ஓர் அமைப்பில் செயல்படும் மனிதர்களுடைய நன்னலத்தையும், அவர்களுடைய உற்பத்தித் திறனையும் அதிகப்படுத்தும் நோக்கில், பொருள்களை வடிவமைக்கும் தொழில் எர்கோனாமிக்ஸ்' என்றும் விளக்கமளிக்கிறது.

அனைத்துலக எர்கோனாமிக்ஸ் சங்கத்தின் இணையதளத்தில், இச்சொல் "கிரேக்கச் சொற்களான எர்கான் (வேலை அல்லது பணி) மற்றும் நோமோஸ் (விதிகள்) என்ற சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டதாகவும், இது ஓர் அமைப்பு சார் அறிவியல் கோட்பாடு என்றும், மனித நடவடிக்கைகளில் எல்லாத் துறைகளுக்கும் இது பொருந்தும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் தொழிலாளர் துறையின் ஒரு பகுதி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் ஆகும் (Occupational Safety and Administration). இந்நிறுவனத்தின் இணையதளத்தில் எர்கோனாமிக்ஸ் என்பது, "ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் திறமைகளுக்கேற்ப பணிச்சூழலையும், பணித் தேவைகளையும் தீர்மானிக்கும் அறிவியல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணியாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுக்கும்போது, உற்பத்திப் பெருக்கமும், உடல்நலமும், அபாயக்குறைவும், பணியாளர்களின் மனநிறைவும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

ஓஷா (OSHA - Safety and Health Admistration) என்றழைக்கப்படும் அமெரிக்க அரசாங்கத்தின் தொழிலாளர் துறையின் ஓர் அங்கம், பணியாளர்களிடையே அவர்களுடைய உடல் மற்றும் மனதில் பணிச் சூழலால் ஏற்படும் தாக்கத்தினால் வரும் உடல்நலக் குறைவுகளை எர்கோனாமிக் குறைபாடுகள் (Ergonomic disorders) என்று பெயரிட்டு, அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கிறது. அவை: (1) மீண்டும் மீண்டும் ஒரே வேலையைச் செய்யும்போது, உடல்மேல் ஏற்படும் பாதிப்பு (Repetitive strain injuries), (2) சதைகளிலும், நரம்பு மண்டலத்திலும் ஏற்படும் குறைபாடு (Musculoskeletal disorders), (3) மன அழுத்தத்தால் ஏற்படும் குறைபாடு (Cumulative trauma disorders). இந்த விஞ்ஞானம் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் கிளை உடலியல் எர்கோனாமிக்ஸ் (Physical ergonomics) என்றும், இரண்டாவது கிளை புலனுணர்வு எர்கோனாமிக்ஸ் (Cognitive ergonomics) என்றும், மூன்றாவது கிளை நிறுவன ரீதியான எர்கோனாமிக்ஸ் (Organizational ergonomics) என்றும் அழைக்கப்படுகின்றன.
இத்தகையத் தகவல்களோடு, இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், எர்கோனாமிக்ஸ் என்ற சொல்லுக்கு பணியுயர் சூழலியல், பணித்திறன் வளர்சூழலியல், பணி மேம்பாட்டியல், பணித்திறன் மேம்பாட்டியல் ஆகிய சொற்களையும், முனைவர் பா.ஜம்புலிங்கம், பணிச்சூழலியல், பணியிடத் திறமையறி ஆய்வு, பணி சூழ் அறிவு கூர்நோக்கு என்னும் சொற்களையும், ஷா.கமால் அப்துல் நாசர், "பணிச்சூழலியல்' என்ற சொல்லையும், முனைவர் ஜி.ரமேஷ், பணிச்சூழலியல், வசதியான அலுவலகச் சூழல், பணியாற்றப் பாதுகாப்பான இடம், வேலை செய்ய சிறந்த பகுதி ஆகிய சொற்களையும் பரிந்துரைக்கிறார்கள்.

சி.அண்ணாதுரை, உடலை எவ்வாறு வளைத்து எப்பணியை எவ்வாறு எளிதாகச் செய்வது என்பதை அறிவுறுத்துவது வாகியல்தான். எனவே "வாகியல்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், மனிதப்பொறியியல், பணிச்சூழலியல், பணியியல் என்னும் சொற்களையும், என்.ஆர்.சத்தியமூர்த்தி, "பணியியல்' என்ற சொல்லையும், எழில் சோம.பொன்னுசாமி, "பணிச்சூழலியல்' என்ற சொல்லையும், மதுரை பாபாராஜ், "பணிச்சூழல் இணக்க ஆய்வு' என்ற சொல்லையும் குறிப்பிட்டுள்ளனர்.

வாசகர்களின் கடிதங்களையும், இந்தச் சொல் தோன்றி வளர்ந்த விதத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால், பணிச்சூழலியல், பணி மேம்பாட்டியல் என்னும் இரு சொற்களும் பொருத்தமாகத் தோன்றுகின்றன. ஆனால், இவ்விரு சொற்களுக்குள், "சூழல்' என்பது வினையாகவும், "மேம்பாடு' என்பது பயனாகவும் விளையும் காரணத்தால், "பணிச்சூழலியல்' என்ற சொல்லே பொருத்தமுடையதாகும்.

"எர்கோனாமிக்ஸ்' என்ற சொல்லுக்கு வாசகர்கள் தேர்ந்தெடுத்த இணைச்சொல் “பணிச்சூழலியல்'.

நன்றி - தமிழ்மணி 28 04 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக