26/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 21

நாம் அன்றாடம் ஆங்கிலப் பேச்சு வழக்கில் "ஃபுல் - ஃப்ளெட்ஜ்டு' (full-fledged) என்ற சொல்லை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். அந்தச் சொல் "ஃப்ளெட்ஜ்' என்ற சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதே. ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியில், இச் சொல்லுக்கு "பறப்பதற்குப் போதுமான அளவுக்குச் சிறகுகள் வளர்தல்' என்ற பொருளும், "ஃபுல்-ஃப்ளெட்ஜ்டு' என்ற சொல்லுக்கு "முழுமையாகப் பயிற்சி அளிக்கப்பட்ட அல்லது முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட' என்ற பொருள்களும் உள்ளன.

ஆங்கிலத்தில் பல சொற்கள் லத்தீன், கிரேக்க மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து தழுவப்பட்டிருந்தாலும், "ப்ளெட்ஜ்' என்ற சொல், "பறக்கும் திறன் கொண்ட' என்ற பொருளுடைய தொன்மையான ஜெர்மானியச் சொல்லான "ஃப்ளக்கி' (flucki) என்ற சொல்லிலிருந்து தொன்மையான ஆங்கிலத்திற்கு "ஃப்ளைஜ்' என்ற சொல்லாகவும், இடைக்கால ஆங்கிலத்தில் "ஃப்ளெஜி' என்ற சொல்லாகவும் மருவி வந்தது என்றும், அப்படி வந்த காலம் 1566 என்றும், மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி தெரிவிக்கிறது.

ஆர்னிதாலஜி (ornithology) என்று அழைக்கப்படும் பறவையியலில், பறவைகளுக்குச் சிறகு முளைப்பதைப் பற்றியும், தாய்ப் பறவைகள் தன் குஞ்சுகளை சிறகு முளைக்கும் வரை எப்படிப் பாதுகாக்கின்றன; அதன் பின், அவை எப்படிப் பிரிந்து விடுகின்றன என்பதைப் பற்றியும் பல சுவையான தகவல்கள் உண்டு. மூர் அல்லது முர்ரெலெட் என்று அழைக்கப்படும் ஒருவகை கடற்பறவை, தன் இனத்தோடு கூட்டமாக கடற்கரையில் உள்ள பாறைகளின் இடுக்குகளிலோ, பொந்துகளிலோ, வளைகளிலோ முட்டையிட்டு விட்டுப் போய்விடும். பின்னர், அப்பறவைகளின் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியே வந்ததும், அவை தாமாகவே கடல் அருகில் வந்து குரல் எழுப்பும். உடனே தாய்ப் பறவைகள் கூட்டமாகக் கரைக்கு அருகில் வந்து, அதனதன் குஞ்சுகளை அவற்றின் குரலில் இருந்தே அடையாளம் கண்டு, கடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும். மனித இனத்தில் கூட, எந்தத் தாயாலும் குரலை வைத்தே பிறந்த குழந்தையை அடையாளம் காண முடியுமா? என்பது சந்தேகம்தான். இந்தச் சுவையான தகவலோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

ஷா.கமால் அப்துல் நாசர், கம்பராமாயணத்தில் சடாயுகாண் படலத்தில், "உருக்கிய சுவணம் ஒத்து' என்று தொடங்கும் பாடலில் வரும் "தெரிப்புறு செறி சுடர் சிறை விரித்து' என்ற வரியையும், "பெரிதும் நன்று' என்று தொடங்கும் பாடலில் வரும் "திண்சிறை விரியும் நீழலில் செல்ல' என்ற வரியையும், "மழைபுரை பங்குழல்' என்று தொடங்கும் பாடலில் வரும் "தழை புரையும் சிறைக்கூகை, பாறுமுதல் பெரும் பறவை' என்னும் வரிகளையும் மேற்கோள்காட்டி, "சிறைவிரி' என்ற சொல்லைப் பரிசீலனை செய்யலாம் என்கிறார்.

என்.ஆர்.சத்யமூர்த்தி, பறவைக்குச் சிறகுகள் முளைப்பதைக் குறிக்கும் என்றும், இடியமாடிக்காகப் (idiom) பயன்படுத்தும் போதுகூட, சிட்டுக்குச் சிறகு முளைத்துவிட்டது எனக் கூறுகிறோம் என்றும், இப்பயன்பாடு, ஒருவன் தன் காலிலேயே நிற்கும் நிலையை எய்துவதைக் குறிப்பிடவும் கையாளப்படுகிறது என்றும், எனவே இதை "தன் கால்நிலை' என்று குறிப்பிடலாம் என்கிறார். அவ்வாறு குறிப்பிடுகையில், தன் காலிலேயே நிற்கும் நிலை என ஏழாம்வேற்றுமை உருபும், பயனும் உடந்தொக்கத்தொகையாக விரியும் என்பதால் "தளிர்நிலை' என்றும் சொல்லலாம் என்கிறார். மேலும் ப்ளெட்ஜ்லிங்க் என்பது ஓர் இளம் பறவையையோ அல்லது அனுபவமற்ற ஒரு மனிதனையோ குறிக்கும் என்றும் கூறுகிறார்.

எம்.எஸ்.இப்ராகிம், "சிறகடிப்பு' என்ற சொல்லையும், சோலை.கருப்பையா, சிறகு முளைத்து, துளிர்விட்டு, பருவமெய்தி போன்ற சொற்களையும், தெ.முருகசாமி, "பக்கத்துணை' என்ற சொல்லையும் பரிந்துரைக்கின்றனர்.

அ.கு.மான்விழி, வழக்கமான பொருள்களைத் தாண்டி, சார்பற்றத் தன்மை (indipendent nature) என்ற ஒரு பொருள் உள்ளதாகவும், இச்சொல்லின் நீட்சி நிலைகளான வினைச்சொல், பெயர்ச்சொல், பெயர் உரிச்சொல், அடைமொழி ஆகியவற்றிலேயே நிறைய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன என்றும், அவை ஆரம்ப நிலையில் உள்ளவர், அனுபவமில்லாத ஒருவர் என்ற பொருள்களிலேயும் பயன்படுத்தப்படலாம் என்றும், இச்சொல்லின் பயன்பாட்டை நாம் வழக்கில் கொண்டுவரும் பொழுது, தனிநபர் சார்ந்த செய்திகளுக்கு, துவக்க நிலை (யாளர்), முதல் முயற்சியாளர், அனுபவத்தேடல், புதிய அனுபவம் போன்ற சொற்களையும், வணிக அமைப்பு, வணிக நிறுவனம் அல்லது பொது அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவற்றின் செய்திகளுக்கு தடம்பதித்தல், காலூன்றல், அடியெடுத்துவைத்தல் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும், "அணியமாதல்' என்ற சொல்லும் பொருந்தலாம் என்கிறார்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இச்சொல் மனிதர்களுக்கான பயன்பாட்டை மட்டுமே வைத்து உருவாக்கப்படும்போது, அதன் வீச்சு குறைவாகவும், பறக்கும் செயல்பாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும்போது, பொதுத்தன்மை உடையதாகவும் மாறுவதை உணரலாம். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, இச்சொல்லுக்குப் பொருத்தமான இணைச்சொல் "சிறகு வளர்தல்' என்றே எண்ணுகிறேன். சிறகு என்ற சொல் இலக்கியத் தமிழில் சிறை என்றும் காணப்படுகிறது. எனவே, சிறைவிரி அல்லது சிறகுவிரி என்ற சொற்கள் சுருக்கமாகவும், அழகாகவும் இருப்பினும், அவை வளர்தல் அல்லது முளைத்தல் என்னும் செயல்பாட்டைக் குறிக்காது.

நன்றி - தமிழ்மணி 31 03 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக