26/11/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 22

"மாடஸ்டி' என்ற சொல்லுக்கு மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி இரண்டு வகையான பொருள்களைத் தருகிறது. ஒன்று, தற்பெருமை அல்லது வீண் கர்வத்திலிருந்து விடுபட்டவர் என்பது. இன்னொன்று உடை, பேச்சு அல்லது நடத்தையில் ஒரு ஒழுங்கு அல்லது மேம்பாடு என்பது. ஆனால், குற்றவியலில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-இல் மாடஸ்டி என்ற சொல், ஒரு பெண்ணின் மானத்தைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு, மானபங்கம் என்பது (outraging the modesty) தண்டனைக்குரிய குற்றமாகக் குறிப்பிடப்படுகிறது.

இச்சொல் ஆதியில் எப்படித் தோன்றியது என்று வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், மனித குலம்,  சமயம்-மதம் சார்ந்த வாழ்க்கையை வாழத் தொடங்கியபோது விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் மிக முக்கியமான ஒன்றான உடைக் கட்டுப்பாடு தோன்றியபோது உருவானதாகத் தெரிகிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் சட்ட விதிமுறைகள்  (canon law) நான்கு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டது என்றும், அதில் முதல் காலகட்டம் கி.பி.12-ஆம் ஆண்டின் இடைப்பட்ட பகுதியிலும், இரண்டாவது காலகட்டம் கி.பி.1100-ஆம் ஆண்டு முதல் 1500-ஆம் ஆண்டு வரையும், மூன்றாவது காலகட்டம் 1917-ஆம் ஆண்டு வரையும், நான்காவது காலகட்டம் 1917க்குப் பின்னும், உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 1917-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் விதிமுறைகளில் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வரும்பொழுது, தலை மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னாளில் தளர்வு படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. யத மதம், ஜொராஸ்டிரிய மதம், இஸ்லாம், சீக்கிய மதம் போன்ற பல மதங்கள் வழிபாட்டிற்குச் செல்லும்போது, தலையைத் துணியால் மூடிக் கொண்டு போக வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி இருப்பதை நாம் அறிவோம். இதன் உட்பொருள், இறைவன் சந்நிதியில் அடக்கமும், பணிவும் அவசியம் என்பதை வலியுறுத்துவதாகும் என்று ஒரு கருத்து உண்டு. எனவே, பெரும்பாலும் ஒருவரின் நடத்தை மற்றும் தோற்றத்தில் காணப்படும் ஒழுங்கை அடிப்படையாக வைத்து இச்சொல் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. அதனால் தான், 1867-இல் தொடங்கப்பட்ட அமெரிக்கப் பெண்மணிகளுக்கான நவநாகரிகப் பத்திரிக்கையான "ஹார்பர்ஸ் பஜார்' என்ற பத்திரிக்கை ஒரு காலத்தில் பெண்களின் வயது கூடக்கூட, அவர்கள் அணியும் கவுனின் நீளமும் கூடவேண்டும் என்பதை ஒரு சித்திரமாக வரைந்து காட்டியது. இத்தகைய தகவல்களோடு இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

டி.வி.கிருஷ்ணசாமி, "மாடஸ்டி' என்ற ஆங்கிலச்சொல் அடக்கம், நிதானம் என்ற நல்ல பண்புகளைக் குறிக்கிறது என்றும், அச்சொல் மாடஸ்ட், மாடரேட் என்பவற்றிலிருந்து வந்ததாகவும் கருதலாம் என்றும் கூறியுள்ளார். தெ.முருகசாமி, "நடைத்தூய்மை' என்ற இணைச் சொல்லைப் பரிந்துரைத்துள்ளார்.

என்.ஆர்.ஸத்தியமூர்த்தி, ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியில் தன்னுடைய தகுதிகள், சாதனைகள் பற்றிய பணிவான அல்லது அடக்கமான மதிப்பீடுகளைக் கொள்ளுதல் என்னும் பொருள்கள் தரப்பட்டுள்ளதாகவும், சேம்பர்ஸ் அகரமுதலியில் தூய்மையுள்ள, கற்புள்ள என்னும் பொருள்கள் உள்ளதாகவும், பெண்கள் குறித்துப் பயன்படுத்தப்படும்போது, "கற்பு' என்ற பொருளிலும், இருபாலருக்கும் பயன்படுத்தப்படும்போது, அடக்கம், எளிமை, பணிவு என்னும் பொருள்களைத் தரலாம் என்கிறார்.

வி.ந.ஸ்ரீதரன், "அடக்கம்' என்றும், வே. குழந்தைசாமி "அடக்கமுடைமை' என்றும் கூறியுள்ளனர். புலவர் உ.தேவதாசு, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ்ச்சொல் அகராதியில் நாணம், தன்னடக்கம் என்ற பொருள்கள் தரப்பட்டிருப்பதாகவும், வள்ளுவப் பெருந்தகை இருவகைப் பொருள்களில் "நாண்' என்ற சொல்லைக் கையாள்வதால், "நாணம்' என்ற சொல் பொருந்தும் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், மாடஸ்டி என்ற சொல்லைப் பெரும்பாலும் மகளிரோடு தொடர்புபடுத்தியே கூறமுடியும் என்றும், அதனால் பெண்மை, அடக்கம், தன்னடக்கம், பணிவு, நாணம். தனித்தன்மை என்னும் சொற்களே பொருந்தும் என்கிறார். புலவர் சத்தியசீலன், "ஒழுக்கத்தின் தன்மையே பணிவு' என்ற கிரேக்க அறிஞரின் கூற்றை அடிப்படையாக வைத்தும், வள்ளுவரின் "பணிவுடையன் இன்சொலன்' என்ற குறளை ஒத்தும், மாடஸ்டி என்ற சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் "பணிவு' என்கிறார்.

புலவர் சி.செந்தமிழ்ச்சேய், கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணிமன்ற அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆட்சிச் சொற்கள் அகரமுதலியில் இச்சொல்லுக்கு தன்னடக்கம், நாணம், எளிமை என்ற பொருள்கள் தரப்பட்டுள்ளதாகவும், குறள்வழி நோக்கின் "ஐந்தடக்கல்' என்ற தொடரும் பொருந்தி வரலாம் என்கிறார்.

முனைவர் அ.சிதம்பரநாத செட்டியாரைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சென்னைப் பல்கலைக்கழகம் பதிப்பித்த, ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில், இச்சொல்லுக்கு நாணம், தன்னடக்கம், பணிவு நயம் என்ற பொருள்களோடு, பெண்டிர் ஆடையின் கீழ்க்கழுத்தை சிறிதே மூடியுள்ள பின்னல் வேலைப்பாட்டுத் துகில் (ஸ்கார்ஃப் ஆக இருக்கலாம்) என்ற பொருளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, மாடஸ்டி என்ற சொல் ஒருவரது ஆடை, தோற்றம், நடத்தை, இப்படிப் பல பொருள்களில் விரிவது தெரிகிறது. இதனடிப்படையில் நோக்கும்போது, இச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ஒரு மேன்மையான நடத்தையைக் குறிக்க வேண்டும், அதே சமயம் கண்ணியமான ஆடை அலங்காரத்தையும் குறிக்க வேண்டும். இது இருபாலருக்கும் பொருந்தும் என்பதையே வரலாறு காட்டுகிறது. ஆகவே, இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் "கண்ணியத் தோற்றம்'.

"மாடஸ்டி' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "கண்ணியத் தோற்றம்’.

நன்றி - தமிழ்மணி 07 04 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக