நான் நினைத்ததைப் போலவே, ஒரு சிலர் "சப்லிமினல்' என்ற சொல்லுக்கும், "சப்ளைம்' என்ற சொல்லுக்கும் தொடர்பிருப்பதாக எண்ணிவிட்டார்கள். ஆனால், சில நேரங்களில் மொழியியலில், அதிலும் குறிப்பாக ஆங்கிலச் சொற்பிறப்பியலில் (எடிமாலஜி) நம்முடைய தர்க்கம் (லாஜிக்) வேலை செய்வதில்லை. "சப்ளைம்' என்ற சொல் மேன்மையான, உயர்வான, சிறப்பான, பெருமையான என்ற பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், "சப்லிமினல்' என்ற சொல் நம் புலனுணர்வு அல்லது உணர்ச்சி நிலையின் நுழைவாயிலில் தூண்டப்படும் அல்லது நிகழும் ஒரு மனப்போக்கு அல்லது உளவியக்கம் என்று ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி பொருளுரைக்கிறது. அப்படித் தூண்டப்படும் மனப்போக்கு நம்மால் உணர முடியாததாகவும், அதே சமயம், நம்முடைய மனப்பாங்கை மாற்றக்கூடியதாகவும் இருக்குமென்றும், அந்த அகரமுதலி குறிக்கிறது.
இதே சொல்லுக்கு மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி, உணர்ச்சியை (சென்சேஷன்) அல்லது புலப்பாட்டைத் (பெர்சப்ஷன்) தூண்டுவதற்கியலாத என்ற பொருளையும் கொடுக்கிறது. இச்சொல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நுழைவாயில் என்ற சொல்லைக் குறிக்கும் "சப்-லிமன்' என்ற லத்தீன் சொல்லிலிருந்து ஆங்கிலத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இன்று பெரும்பாலும் உளவியலில் பயன்படுத்தப்படும் இச்சொல், பல நுகர் பொருள்களுக்கு நம்மை அடிமையாக்குவதற்கு விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் சில யுக்திகளைக் குறிக்கும் சொல்லாகப் பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது.
1959-ஆம் ஆண்டு சந்தை - அங்காடிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஜேம்ஸ் வைகரி என்பவர், ஒரு திரைப்படத்தின் இடையில் ""பசியா? பாப்கார்ன் உண்ணுங்கள்; தாகமா? கொகொகோலா பருகுங்கள்'' என்ற விளம்பரத்தை நுழைத்தார். அந்த விளம்பரம் ஒளிபரப்பாகிய கால அளவு பொதுவாக ஒரு மனிதனின் கவனத்தை ஈர்ப்பதற்குத் தேவையான கால அளவைவிடக் குறைவானதாகவும், ஆனால் உள்மனதின் அல்லது ஆழ்மனதின் (சப்கான்ஷியஸ்) கவனத்தை ஈர்ப்பதற்குப் போதுமானதாகவும் இருந்தது. ஆனால், இந்த விளம்பரம் பாப்கார்ன் விற்பனையை 57.8 சதவிகிதமும், கொகொகோலா விற்பனையை 18 சதவிகிதமும் அதிகரித்தது. 1999-இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அந்த ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு மனிதனின் ஆழ்மனதில், அவனுக்கு வெளிப்படையாகத் தெரியாமலேயே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில கருத்துகளை விளம்பரங்கள் மூலம் செலுத்திவிட முடியும் என்ற உண்மையைக் கண்டறிந்தனர். அதன் விளைவு, மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தற்பொழுது புலன் உணர்வுகளைத் தூண்டும் கிளர்ச்சியூட்டும் செய்திகளையும், படிவங்களையும் தங்களுடைய விளம்பரங்களில், யாரும் வெளிப்படையாகக் கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளே புகுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், இவை இளைஞர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை, அவர்கள் அறியாமலேயே அவர்களது அடிமனதில் ஏற்படுத்தி விடுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பல போட்டி நிறுவனங்களுக்கிடையே நிகழும் விளம்பரப் போரிலும், "சப்லிமினல் மெசேஜ்' என்ற உத்தி தற்போது கையாளப்படுகிறது. இந்த முன்னுரையோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.
டி.வி.கிருஷ்ணசாமி, "சப்ளைம் என்ற சொல்லின் பொருளை வைத்து நோக்கும்போது, சப்லிமினல் என்ற சொல்லுக்கு எல்லாவற்றிலும் அடக்கமானதாகவும், மேலானதாகவும் இருப்பதாகும். எனவே, இதற்கு இணையான தமிழ்ச்சொல் "மேல் அடங்கல்' என்று எழுதியுள்ளார்.
புலவர் உ.தேவதாசு, "ஆங்கில அகராதிகள் தரும் பொருள்களின் அடிப்படையில், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில தமிழகராதி உணர்வு நிலையின் அடி எல்லை, உணர்வுக்கருநிலை என்னும் பொருள்களைக் கொடுத்துள்ளதாகவும், "ஆழ் மனநிலை' என்ற சொல் மிகப் பொருத்தமாக இருக்கலாம்' என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சங்க இலக்கியங்களில் காணப்படும் "உள்ளுறை உவமம்' என்ற சொல்லும் பொருத்தமாகலாம் என்பதனால் "உள்ளுறை உணர்நிலை' என்ற சொல்லையும் பரிந்துரைத்துள்ளார்.
ஷா.கமால் அப்துல் நாசர், "நம் உள்ளுணர்வில் ஒளிந்திருக்கிற அல்லது உணர முடிகிற சப்லிமினல் கிரேட்னஸ், சப்லிமினல் ட்ரூத் என்ற தொடர்புடைய பயன்பாடுகளை எண்ணிப் பார்க்கும்போது, சப்லிமினல் என்ற சொல்லுக்கு "உணர்வுக்கப்பாலான' என்ற சொல் பொருந்தலாம் என்கிறார்.
முனைவர் வே.குழந்தைசாமி, "ஒருவரது எண்ண ஓட்டத்தில் அவரை அறியாமல் ஏற்படும் அகமாற்றத்தை இச்சொல் குறிப்பதாலும், வெளியிடா எண்ணங்களைத் திருவள்ளுவர் "கரந்து - கரப்பு' என்ற சொற்களால் குறிப்பிடுவதாலும், இதற்கு "கரந்துபடு மாற்றம்' அல்லது "புலனுணரா மாற்றம்' என்ற சொற்கள் பொருந்தும் என்கிறார்.
"உளவியலில் இச்சொல் நாம் விழிப்புணர்வோடு அறியமுடியாத வகையில் ஏற்படும் ஒரு மனநிகழ்வைக் குறிக்கும் என்பதால், இச்சொல்லுக்கு மேலோட்டமான முயற்சி, செயற்கையான, ஊக்கமளிக்காத, உணர்வுகளைத் தூண்டாத, உணர்ச்சியை எழுப்பாத, திடமான ஞானமிலாத என்னும் சொற்களை ஜ.ரமேஷ் பரிந்துரைத்துள்ளார்.
புலவர் சி.செந்தமிழ்ச்சேய், "இச்சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி தூண்டுதல் புலப்பாட்டு எல்லைக்குக் கீழ்ப்பட்ட, புலப்படாத தூண்டுதல் நெய்மையுடைய என்ற இரண்டு பொருள்களைக் கொடுத்துள்ளதாகவும், ஆனால் ஆழ்மன உணர்நிலை, அறிதுயில்நிலை என்னும் தொடர்கள் கிட்டத்தட்ட பொருந்துவது போல் தோன்றினாலும், அவை ஏற்புடைத்தாய் அமையாது' என்றும், "விளிம்பிரு உள்மறை உணர்நிலை' என்றோ, "விளிம்புறை உணர்மறைநிலை' என்றோ பொருள் கொள்ளலாம் என்றும் கூறியுள்றார்.
வெ.ஆனந்தகிருஷ்ணன், "சப்லிமினல் என்ற சொல்லுக்கு ஒருவர் அறியாமலேயே உள்ளம் நெய்மை அடையும் நிலை என்று அகராதியில் காணப்படுவதாலும், இச்சொல் கனவுக்கும், நனவுள்ளத்திற்கும் இடையில் இருக்கும் காரணத்தால், "துணை நனவுள்ளம்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும் எழுதியுள்ளார்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நோக்குங்கால், விழிப்புணர்வின் அடிமட்டத்தில் அல்லது நுழைவாயிலில் நாம் உணராமலேயே நம்மைத் தாக்கும் மனப்போக்கை இச்சொல் குறிப்பதால் "உணர்வறியாப் போக்கு' என்பது பொருத்தமாகலாம். அதைவிட, புலவர் செந்தமிழ்ச்சேய் பரிந்துரைக்கும் "உள்மறை உணர்நிலை' என்ற சொல் மிகப் பொருத்தமாகும்.
நன்றி - தமிழ்மணி 24 03 2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக