21/09/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 1

புதுச் சொற்களை உருவாக்குவதற்கான சொல் வேட்டையில் ஈடுபடும் முன்னால், வாசகர்கள் ஒரு செய்தியை கவனத்தில் கொள்ளுதல் நலம். நீதிமன்றங்களில் சாட்சி விசாரணையின் போது குறியிடப்படும் பத்திரங்களை ஆங்கிலத்தில் எக்சிபிட்(exhibit) என்று சொல்வார்கள். இந்தச் சொல்லுக்கு சரியான மொழிபெயர்ப்பு "காட்சிக்கு வைக்கப்படுவது' என்பதே ஆகும்.

ஆனால், இந்தச் சொல்லை தமிழில் மொழிபெயர்த்த மொழியியல் வல்லுநர்கள் இதைச் "சான்றாவணம்' என்று மொழிபெயர்த்தார்கள். அதற்குக் காரணம், வழக்குகளில் காட்டப்படும் பத்திரங்களை "ஆவணம்' என்று சொல்லும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் இருந்ததுதான்.

இறைவன், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட போது, இறைவனிடம் சுந்தமூர்த்தி நாயனார் கேட்ட கேள்வி:

"ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று
அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்றைக் காட்டுக''

என்பதாகும். எனவே, சொல் வேட்டையில் ஈடுபடும்போது, இலக்கியச் சான்றுகளோடு நாம் புதுச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி முடியாதபோது, சொற்களின் வேர்களுக்குப் போய் (root of the word) புதுச் சொற்களை உருவாக்குவதில் தவறில்லை.

சில நேரங்களில், சில மொழிபெயர்ப்புகள் ஒரு காலத்தில் சரியானவையாகவும், பிற்காலத்தில் சரியற்றதாகவும் ஆகிவிட வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு ட்ரெயின் (train) என்கிற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும் போது நீராவி என்ஜினைக் கருத்தில் கொண்டு அது விடும் புகையை மையப்படுத்திப் "புகை வண்டி' என்று மொழிபெயர்த்தார்கள். ஆனால், இன்றைக்கு எந்த ரயில் வண்டியும் புகை விடுவதே இல்லை. எனவே, இனிமேலும் ரயில் வண்டியைப் புகை வண்டி என்று அழைப்பது பொருத்தமாகுமா என்பது தெரியவில்லை. சிலர் இதைத் "தொடர் வண்டி' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், "ட்ரெய்லர்' கூட தொடர் வண்டிதான் என்பதால் ரயிலைத் தொடர்வண்டி என்று அழைப்பது எங்ஙனம் சரியாக இருக்கும்?

"ஃபோபியா' (phobia) என்கிற ஆங்கிலச் சொல் உயரம் குறித்த அச்சம், இருள் குறித்த அச்சம், தனிமை குறித்த அச்சம், தண்ணீர் குறித்த அச்சம் போன்ற பல்வேறு வகையான அச்சங்களைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். ஆங்கிலச் சொல் அகராதிகளில் இந்தச் சொல்லுக்கு "அச்சம்' என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்தால், தமிழில் இந்தச் சொல்லை "அச்சம்' என்றே குறிப்பிடுகிறோம். ஆனால், "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு அச்சம், பயம், நடுக்கம் போன்ற சொற்களைத் தாண்டி வேறு ஒரு பொருள் இருக்கிறது. ஆனால், அதை உணர்த்தும் சரியான தமிழ்ச்சொல் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அடுத்த வாரத்திற்குள் உருவாக்கி வாசகர்கள் அனுப்பி வைக்கலாம்.

முன்பே கூறிய இக்கருத்துகளை மனதிலே கொண்டு, இந்த வாரம் "ஃபோபியா' என்கிற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை நாம் தேடுவோம்.

இனி, அடுத்த வாரம் "ஃபோபியா'வுக்குப் புதிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்த களிப்பில் இன்னொரு புதுச் சொல் வேட்டையில் இறங்குவோம்…

(தொடரும்…)

நன்றி - தமிழ்மணி 11 11 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக