ஃபோபியா என்ற சொல்லை முதற்சொல்லாக வைத்து இந்தச் சொல் வேட்டையைத் "தமிழ்மணி'யில் சென்ற வாரம் தொடங்கியபோது வாசகர்களும், தமிழ்ச் சான்றோரும், மொழியியல் வல்லுநர்களும் என்ன தீர்ப்பு அளிப்பார்களோ என்று எனக்கு ஒரு புதுவகையான ஃபோபியா ஏற்பட்டது. ஆனால், ஆன்றவிந்த சான்றோர் பலர், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருந்தும் கொண்டுவந்து கொட்டியிருக்கும் இணைச்சொற்களைப் பார்க்கும்போது மலைப்பும், வியப்பும் ஏற்பட்டிருக்கிறது.
அறந்தாங்கியிலிருந்து மு.சீவானந்தம் என்ற வாசகர் ஃபோபியா என்ற சொல்லுக்கு "அரட்டி' என்ற சொல்லையும், தூத்துக்குடி மெஞ்ஞானபுரத்திலிருந்து அ.ஜெயசிங் என்ற வாசகர் "கற்பனை அச்சம்' என்ற சொல்லையும், தஞ்சாவூரிலிருந்து மருத்துவர் ச.தமிழரசன் "வெறுப்பு' என்ற சொல்லையும், சென்னை வழக்குரைஞர் இ.தி.நந்தகுமார் "பேரச்சம்' என்ற சொல்லையும், மயிலையிலிருந்து ஜி.ஸந்தானம் என்ற வாசகர் "பேரச்சம்' அல்லது "தொடரச்சம்' என்ற சொல்லையும், ஃபோபியாவைக் குறிக்கும் சொற்களாக எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.
கோயம்புத்தூர் கோவில்பாளையத்திலிருந்து முனைவர் வே.குழந்தைசாமி, கம்பராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டி, ஃபோபியா என்ற சொல்லுக்கு "வெருள்' அல்லது "வெருட்சி' என்பது சரியான இணைச்சொல்லாக அமையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். புலவர் அடியன்மணிவாசகன் என்னும் அன்பர் மனம் கலங்கிக் குழம்புதலை, "அலமரல்', "தெருமரல்' என்றும், அச்சத்தால் மனம் நடுங்குதலை "அதிர்வு', "விதிர்ப்பு' என்றும், மனம் துணுக்குறுதலை "வெருவுதல்' என்றும் இலக்கியச் சான்றோடு சுட்டிக்காட்டியிருக்கிறார். இதைத் தவிர சூழ்நிலை மற்றும் இயற்கைதரும் அச்சத்தை பேம், நாம் மற்றும் உரும் என்ற சொற்களால் நம் இலக்கியங்கள் குறித்திருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
திருவண்ணாமலையிலிருந்து புலவர் சி.சம்பந்தன் என்பவர் "நலிதல்', "கலங்குதல்', "அலமரல்' ஆகிய சொற்களை பத்துப்பாட்டு, நெடுநல்வாடையிலிருந்தும், "விதிர் விதிர்ப்பு' என்ற சொல்லை சிவப்பிரகாசர் அருளிய நால்வர் நான்மணி மாலையிலிருந்தும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
முத்தாய்ப்பாக, பொன்புதுப்பட்டி சேக்கிழார் சிவநெறிக்கழகத்தைச் சேர்ந்த சைவப்புலவர் தமிழ்ச்செல்வி என்பவர் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையையே அனுப்பியிருக்கிறார். தமிழில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், பண்புச்சொல் என்று பிரிக்கப்பட்டு, அவை மேலும் தெய்வப்பெயர், மக்கள் பெயர், விலங்கு, மரம், இடம், பல்பொருள் பெயர், செயற்கை வடிவம், பண்பு, செயல், ஒலி என்று பிரிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அச்சம் என்ற தமிழ்ச்சொல் பண்புச்சொல் என்றும், பல்வேறு பண்பு நிலைகளில் ஏற்படும் அச்சங்கள் 47 தமிழ்ச் சொற்களால் குறிக்கப்பட்டிருப்பதாகவும் எழுதியிருக்கிறார்.
அவை: (1) ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம் தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்துபவை என்றும்; (2) அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும் அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள் அடையாளம் காட்டும் என்றும்; (3) அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படுவதாகவும்; (4) கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுவதாகவும் எழுதியிருக்கிறார்.
மேலும், ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தூய தமிழ்ச் சொற்களின் சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்டியுள்ளார்.
அரியலூரிலிருந்து முனைவர் சா.சிற்றரசு என்பவர் கடலால் தோன்றும் அச்சத்தை "நாம்' (நாமநீர் வேலி உலகுக்கு.... சிலம்பு) என்றும், எதிரியால் - பகைவரால் தோன்றும் அச்சத்தை "பேம்' என்றும், ஆட்சியாளரால் - சூரியனின் வெம்மையால் தோன்றும் அச்சத்தை "உரும்' என்றும், தனிமையால் உள்ளத்தில் தோன்றும் அச்சத்தை "உள்நடுங்கல்' என்றும், காட்டில் உண்டாகும் அச்சத்தை "சூர்' என்றும், இலக்கியச் சான்றுகளோடு சுட்டிக்காட்டி, ஃபோபியா என்ற சொல்லை "அச்சம்' என்று குறிப்பிட்டாலே போதும் என்றும் எழுதியிருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் அருள் நடராசன் என்னும் வாசகர் ஃபோபியா என்ற சொல்லுக்கு "வெருளி' என்ற சொல்லை அவர்கள் (மருத்துவர்கள்) பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டு, 128 வகையான ஃபோபியாக்களையும், அவை அனைத்திற்கும் உரிய 128 வகை வெருளிகளையும் பட்டியல் போட்டே அனுப்பி விட்டார்.
மூடப்பட்ட இடத்திற்குள் ஏற்படும் க்ளாஸ்ட்ரோஃபோபியாவை "அடைப்பிட வெருளி'ó என்றும், கம்ப்யூட்டரால் வரும் ஃபோபியாவை "கணினி வெருளி' என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது சுவையாக இருக்கிறது.
ஆக, தமிழ்ச் சான்றோர் அனுப்பியுள்ள குறிப்புகளைக் கூர்ந்து நோக்கின், இரண்டு செய்திகள் நமக்குப் புலப்படுகின்றன. ஒன்று, பல்வேறு வகையான அச்சங்களைக் குறிக்கும் சொற்கள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றன என்பது; இரண்டாவது, "வெருளி' அல்லது "வெருட்சி' என்னும் சொல் ஏற்கனவே இலக்கியங்களில் காணப்படுவது மட்டுமன்றி, மருத்துவர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனவே, வெருளி அல்லது வெருட்சி என்னும் சொல் ஃபோபியாவைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளலாம்.
அடுத்த சொல் வேட்டை
அடிக்ட் (Addict) என்கிற சொல்லுக்கும் பொருத்தமான ஒரு சொல் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. "அடிமை' என்ற சொல் பொருத்தமாக இல்லை. "போதை' என்ற சொல் சரியான தமிழ்ச் சொல்லா என்று தெரியவில்லை. அதைக் குறிக்கும் சரியான தமிழ்ச் சொல்லை (சொற்களை) வாசகர்கள் உருவாக்கி அனுப்பி வைக்கலாம்.
வேட்டை தொடரும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக