'கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என்று சிறப்பிக்கப்பெற்ற கலித்தொகையில் குறிஞ்சிக் கலியில் கார்த்திகை நட்சத்திரத்தின் வடிவம் மிக அழகாகக் குறிக்கப்பெற்றுள்ளது.
தலைவி நுண்ணிய நூலால் கட்டப்பெற்ற பூக்களைக் கொண்ட மாலையைத் தன் கூந்தலில் அணிந்திருந்தாள். அவ்வாறு அவள் அணிந்திருந்த அம் மலர்மாலை கார்த்திகை நட்சத்திரத்தைப் போல விளங்கியதாம். இக்கருத்தைக் குறிஞ்சிக் கபிலர்,
"விரிநுண்ணூல் சுற்றிய ஈரித ழலரி
அரவுக்கண் அணியுறழ் ஆரல்மீன் தகையொப்ப''
(கு.கலி 28,அடி 3,4)
என்றவாறு குறித்துள்ளார். மேற்பாடலடியின் கருத்துப்படி கார்த்திகை நட்சத்திரம் பூமாலைக்கு உவமையாகக் குறிக்கப்பட்டுள்ளதால், பூமாலை போன்ற வடிவத்தை அந்நட்சத்திரம் பெற்றிருப்பதாக அறியமுடிகிறது. சூடாமணி நிகண்டு மாலைக்குரிய பல்வேறு பெயர்களைக் (மரப்பெயர்த்தொகுதி, செய்யுள், 66) குறித்துள்ளது. அப்பெயர்களுள் "கத்திகை' என்பது ஒன்றாகும். கலித்தொகை குறித்தவாறு கார்த்திகை நட்சத்திரம் மாலைபோல் விளங்குவதாலும், "கத்திகை' என்னும் சொல்லிலிருந்து கார்த்திகை என்னுஞ்சொல் தோன்றியிருக்கலாம் என்றும் கருதலாகின்றது.
விழுப்புரம் மாவட்டக் கிராமப்புற மக்கள் கார்த்திகை நட்சத்திரத்தை "அஞ்சு குஞ்சு தாய்ப்பெட்டை' என்ற தொடரால் அழைப்பர். தாய்க் கோழியைச் சுற்றி ஐந்து கோழிக்குஞ்சுகள் நிற்கும் வடிவத்தை ஒத்தநிலையில் கார்த்திகை நட்சத்திரம் காணப்படுவதால் அப்பெயர் பெற்றது போலும். கார்த்திகை நட்சத்திரம் "ஆறுமீன் கூடிய ஒரு தொகுதி' என்பதை "ஐந்து குஞ்சுகளும் ஒருதாய்க்கோழியும்' (எண்ணிக்கையால் ஆறு) என்னும் தொடரால் உணர்க.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணையும் (பா. 202) அகநானூறும் (பா.141) கார்த்திகை நட்சத்திரத்தை "அறுமீன்' என்னும் சொல்லால் குறித்துள்ளது ஒப்புநோக்கத்தக்கது. எல்லாவற்றையும் தொகுத்துணரின், வானில் விளங்கிக் கொண்டிருக்கும் கார்த்திகை நட்சத்திரம் ஆறுமீன் தொகுதி என்றும், அதுவட்ட வடிவமாக மாலை போல் விளங்கும் என்பதும் பெறப்பட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கப் புலவராகிய கபிலர், குறிஞ்சிக்கலியில் கூறியுள்ள கார்த்திகை நட்சத்திரத்தின் வடிவம் இன்றைய வானியலோடும் ஒத்துவருவதை வானத்தைப் பார்த்து உணருங்கள். கோளரங்கில் கண்டு மகிழுங்கள், கபிலரின் வானியல் அறிவை எண்ணிப் பெருமிதம் கொள்ளுங்கள்.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக