30/09/2012

தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார்? - தந்தை பெரியார்


முதலாவது நான் பகுத்தறிவுவாதி. எந்த விஷயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவன் நான். பஞ்சேந்திரியங்களுக்கும் தெரியப்படும் விஷயங்களை நம்புவேனே தவிர, பஞ்சேந்திரியங்கட்கு புலப்படாத எதையும் நம்புவதில்லை. மற்றும் தமிழர்களுக்காக, நம் மக்களுக்காக தொண்டாற்றி வருகிறேன். தொண்டாற்றுவதில் கடவுள் பற்று, மதப் பற்று இன்றி தொண்டாற்றி வருகிறேன். அதனால்தான், உண்மையாகத் தொண்டாற்ற முடிகிறது என்று கொள்கைகளில் கருத்து வேற்றுமை உள்ளவர்கள் அநேகர் இருப்பார்கள் என்றாலும், என்னைப் பொறுத்தவரை எனது தொண்டு வீண்போகவில்லை என்று கருதித்தான் தொண்டாற்றி வருகிறேன்.

ஒரு சந்தர்ப்பத்தில் சேலம் கல்லூரியில் அப்போது இருந்த கல்லூரி முதல்வர் எனக்கு நண்பர். அவர் வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தமிழ்ப் பற்று என்கிற காரணத்தால் என் மீது மிகவும் அன்பு கொண்டவர். அவர் பேசும்போது, அய்யா அவர்கள் நாஸ்திகர் என்றாலும், மக்களுக்காகத் தொண்டாற்றுபவர் எனக் குறிப்பிட்டார். எனக்காகப் பேசியதாக இன்னொருவர் நான் நாஸ்திகன் அல்ல என்று வாதாடினார். அன்றும் இப்படித்தான் பேசுவதற்கு எனக்கு தலைப்புக் கொடுக்கவில்லை. என்ன பேசுவது என்று தெரியாமலிருந்தபோது இந்த நாஸ்திகம் என்பதையே வைத்துப் பேசினேன்.

அதுபோல, இங்கு தலைவர்கள்  தனது வரவேற்புரையில், தமிழைப் பற்றி குறிப்பிட்டனர். இப்போது இது பரபரப்பாக இருக்கிறது.  பலர் என்னைக் கண்டித்து கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். சிலர், நீ தமிழனா? என்று கூடக் கேட்டு எழுதி இருக்கிறார்கள். சிலர் எனது கொள்கையை ஆதரித்தும் கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். நாம் எல்லோரும் தமிழ்நாட்டில் இருக்கிறோம், நாமெல்லாம் தமிழர்கள்தான்; நான் மொழிப்படி தமிழனல்ல; கன்னடியன் எனக்கு தமிழ் தெரிந்த அளவுக்கு கன்னடம் தெரியாது. அதற்காக நான் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழன் சிறப்பைச் சொல்லும்போது, அது கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் என்கிறான். தமிழ் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வழங்கி வருகிறது என்றாலும், இன்றும் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து அதன் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

நான் அயல்நாடுகளையெல்லாம் சுற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் இங்கிலீஷைப் பாதுகாக்க வேண்டுமென்று இயக்கமோ, அதற்காக ஒரு போராட்டமோ கிடையாது. ஆனால், அந்த மொழி யாருடைய  பாதுகாப்பும் இன்றி வளர்ந்து கொண்டும், பரவிக் கொண்டும்தான் வருகின்றது.

மொழியின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்து மக்களிடையே எவரும் பிரச்சாரம் செய்வது கிடையாது. மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவர் உணரப் பயன்படுத்தும் ஒரு சாதனமே தவிர, மற்றபடி அதற்கென்று தனிச் சிறப்புக் கிடையாது! தமிழிலிருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு இவைகள் தோன்றின என்று சொல்லுவார்கள். ஆனால், மலையாளியோ, தெலுங்கனோ, கன்னடியனோ, துளுவனோ எவனும் இதனை ஒத்துக் கொள்வதில்லை. அந்தந்த எல்லைக்குத் தக்கபடி மாற்றமடைந்துள்ளது.

வடமொழியின் கலப்பு அதிகமாகி தமிழுக்கும், அதற்கும் சம்பந்தமில்லாமல் போய்விட்டது. வடமொழி கலப்பது ஒரு காலத்தில் நாகரிகமாகக் கருதப்பட்ட காரணத்தால் வடமொழிக் கலப்பு அதிகமாகி விட்டது. இப்படி நாகரிகம் - சந்தர்ப்பம் நடப்பு வழக்கம், காலம் இவைகளைப் பொறுத்து மொழி மாறுபட்டிருக்கிறது.
நம் நாட்டிலேகூட நாகர்கோயில்காரன் தமிழ் பேசுவதற்கும், திருநெல்வேலிக்காரன் பேசுவதற்கும் மாறுபாடு உண்டு. அது போலவே, மதுரைக்காரன் பேசுவதற்கும், திருச்சிக்காரன் பேசுவதற்கும், தஞ்சாவூர்க்காரன் பேசுவதற்கும், சேலம்காரன் பேசுவதற்கும், கோயமுத்தூர்காரன் பேசுவதற்கும், சென்னையிலுள்ள தமிழன் பேசுவதற்கும் நிறைய மாறுபாடுகள், வித்தியாசங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் விட நம்மோடு பல காலமாகப் பழகி நம்மோடு இருக்கும் பார்ப்பனர் பேசுவது தனி அலாதியாகத்தான் இருக்கிறது. தமிழ் படித்த புலவர்களே மேடையில் பேசுவது போல வீட்டில் பேசுவது கிடையாது. இப்படி இடத்திற்குத் தக்க மாதிரி, சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி பேசுகிறார்கள்.

தமிழ் பேசுவதிலேயே இலக்கணப்படி பேசுவதற்கும் சாதாரணமாகப் பேசுவதற்கும் நிறைய மாறுபாடு இருக்கலாம் என்றாலும் நான் மொழியைப் பற்றி சொல்லுவதெல்லாம் மொழியினாலே நமக்கேற்பட்ட,
மக்களுக்கு ஏற்பட்ட நன்மையென்ன? அதனால் நம் மக்கள் எந்த அளவிற்கு முன்னுக்கு வந்தார்கள்? என்பதற்குத்தான். இதைக் கேட்டால் தமிழன்பர்கள் என்ன சொல்வார்கள்? எனக்கு கடிதம் எழுதிய ஒருவர் தமிழில் பெரிய புராணம், சிலப்பதிகாரம், குறள், கம்பராமாயணம் இவைகள் எல்லாம் இருப்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். இதிலிருந்து அவர் வேறு ஒன்றுமில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார். இன்னொரு நண்பர் தொல்காப்பியம் என்ற நூல் இருப்பது தெரியுமா? என்று எழுதியிருக்கிறார். கம்பராமாயணம், சிலப்பதிகாரம் இதைச் சொன்னதிலிருந்தே தமிழின் தன்மையை நாம் உணர்ந்து கொள்ளலாமே!

தொல்காப்பியத்திலே தான் என்ன இருக்கிறது? அதிலும் நாலு ஜாதி; அந்த நான்கு ஜாதியில் நம்மைத் தான் கீழ் ஜாதியாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்கு................

என்ற பாடலைப் பார்த்தாலே போதுமே. தமிழ் ஏதோ புலவன் பிழைப்புக்குப் பயன்படுகிறதே தவிர, அதனால் நம் மக்களுக்குப் பயன் இல்லை. அதன்படி நாம் கீழ்மக்கள்தானே.

குறளை ஒரு அளவுக்கு நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதை பரப்பியதில் எனக்கு பெருமை பங்கு உண்டு.
குறளைப் பற்றி அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது இருந்தபோது குறள் மாநாடு கூட்டி, தமிழ்ப் புலவர்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி குறளைப் பற்றி மக்களுக்கு விளக்கம் செய்து குறளைப் பரப்பினேன். இந்த மாநாட்டிற்கு மறைமலை அடிகளைத் தவிர மற்ற தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.

நான் பேசும்போது, குறள் குற்றமற்ற நூல் என்று சொல்ல முடியாது என்றாலும், மற்ற நூல்களில் இருப்பதைவிட இதில் குறைகள் குறைவு என்று சொல்லலாம். அந்த அளவுக்குத்தான் குறளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசினேன்.

அந்த மாநாட்டிற்கு திரு.வி.க. தலைமை வகித்தார். நான் இப்படிப் பேசியதை சிலர் போய் மறைமலை அடிகளிடம் சொல்லி இருக்கிறார்கள். என்னவென்றால், அவன் குறளைத் தான் பாக்கி வைத்திருக்கிறான் என்று நினைத்தேன். அதிலேயும் கை வைக்க ஆரம்பித்து விட்டானே. இதற்கு இவர் (திரு.வி.க.) போய் தலைமை வகிக்கிறாரே என்று வேதனையோடு சொன்னார்கள்.

திரு.வி.க. அவர்களை சந்திக்க நேர்ந்தபோது, மறைமலை அடிகள், நீ என்ன குறள் மாநாட்டிற்கு தலைமை வகித்தாயாமே, அதில் பேசியதையெல்லாம் எப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாய்? என்று கேட்டார்.

அதற்கு திரு.வி.க., அவர் பேசியதில் தவறு ஒன்றும் இல்லை. இத்தோடு விட்டதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டும். அவரில்லா விட்டால் குறள் இந்த அளவிற்கு வந்திருக்காது என்று ஏதோ சமாதானம் சொல்லி இருக்கிறார்.

பிறகு ஒரு சமயம் மறைமலை அடிகள் தனது லைப்ரரியை விற்க வேண்டுமென்று கருதி என்னை அழைத்து தனது லைப்ரரியைக் காட்டினார். குறைந்தது 20 - 30 பெரிய பெரிய கண்ணாடி பீரோக்கள் நிறைய புத்தகங்கள் இருந்தன. பீரோவின் இரு பக்கமும் கண்ணாடி கதவுகள் போட்டு புத்கங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான் எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு வந்து கடைசியில் அடிகளாரைப் பார்த்து, என்ன சாமி எல்லா புத்தகங்களும் இங்கிலீஷ் புத்தகங்களாகவே இருக்கின்றனவே. தமிழ்ப் புத்தகங்கள் ஒன்றுகூட காணவில்லையே என்று கேட்டேன். அதற்கு அவர், தமிழிலே அலமாரியிலே வைத்து பாதுகாக்கும்படியாக மக்களுக்குப் பயன்படும் படியாக என்ன இருக்கிறது? என்று சொன்னார். அதற்கு நான் சொன்னேன், சாமி எழுதிய புத்தகங்கள் இருக்குமே என்று சொன்னேன்.  அது நிறைய இருக்கிறது. இன்னும் அச்சுப் போட வேண்டியவைகளும் இருக்கின்றன என்றாலும், இதோடு அவைகள் வைக்கக் கூடியவை அல்ல என்றார். அவர்  அந்த அளவுக்கு ஒத்துக் கொண்டது எனக்கும் மகிழ்ச்சியளித்தது.

தமிழ் என்று சமயத்திலே போய் புகுந்ததோ, சமயக்காரன் எப்போது தமிழ் கதவைத் திறந்து இறந்தவனை எழுப்பியது என்று சமயத்தில் கொண்டு போய் புகுத்தினானோ, அன்றே தமிழும் முன்னேற முடியால் கெட்டுப் போய் விட்டது.

பட்டினத்தார் - தாயுமானவர் - இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ் படித்து சாமியானவர்கள் தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய, எவனும் பகுத்தறிவு வாதியாகவில்லை. நமக்குத் தெரிந்து மறைமலை அடிகள் தமிழ்ப் படித்து சாமி ஆனவர்தானே. இப்போது நடந்தது சாமிசங்கரதாஸ் நூற்றாண்டு விழா. இந்த சங்கரதாஸ் என் வீட்டில் வந்து நாடகத்துக்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்தவர். சங்கரம் பிள்ளை என்று பெயர். பிறகு சங்கரம் பிள்ளை சங்கரதாஸ் ஆகி இன்று சாமி ஆகிவிட்டார். அதற்கு முன் தமிழ்ப் படித்தவர்கள் எல்லாம் கவியாகப் படித்தவர்கள். இப்போது போல் வசனமாகப் படித்தவர்கள் அல்ல. ஆதலால் அவர்களுக்கு கவி எழுத வந்தது. எல்லாம் குப்பை கூளங்கள்தான். கா. சுப்பிரமணிய பிள்ளை காலையில் எழுந்ததும் பட்டைப் பட்டையாக சாம்பலை அடித்துக் கொண்டு அரைமணி நேரம் தேவாரம், திருவாசகத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பார். இந்த திரு.வி.க.வும் அப்படி இருந்தவர்தான். என்னோடு பலமுறை வாதிட்டு கொஞ்ச நாள் கோபமாகக் கூட இருந்து பிறகு பழக ஆரம்பித்தார். அதன்பின்தான் அவர் சாம்பல் அடிப்பதையும், தேவாரம் ஓதுவதையும் நிறுத்தினார். பிறகுதான் அவர் உண்மையாகத் தொண்டாற்ற முடிந்தது.

(29.9.1967 அன்று சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை)
நன்றி - விடுதலை 3.10.1967

அசோகர் கல்வெட்டு - யுவ கிருஷ்ணா


எங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர் வீட்டுத் தோட்டம் சரியாகப் பராமரிக்கப் படாமல் எப்போதும் புல்லும் பூண்டும் மண்டிக்கிடக்கும். இன்று காலை நான் அலுவலகத்துக்கு வரும்போது, அந்தத் தோட்டத்தை நடுத்தர வயதுடைய ஒருவர் கடப்பாரை, மண்வெட்டிகொண்டு, ஒழுங்குசெய்துகொண்டு இருந்ததைப் பார்த்தேன். கொஞ்சம் கூன் விழுந்த அந்த நடுத்தர வயது மனிதரை எங்கோ பார்த்ததாக நினைவு. பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவரைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் செய்தேன்.

யாரோ ஒருவர் சம்பந்தம் இல்லாமல் நின்று சிரிப்பதைப் பார்த்த அந்த நபர், 'இன்னா சார்... உங்க வூட்ல ஏதாச்சும் வேலை இருக்கா?'' என்று திக்கித் திக்கிப் பேசினார். குரலைக் கேட்டதுமே அடையாளம் கண்டுகொண்டேன். அது அமல்ராஜேதான்!

அமல்ராஜ் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பரங்கிமலை ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. ஐந்தாவதுக்குப் பிறகு, தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். பையன்களுக்கு 'ஏ செக்ஷன். பெண்களுக்கு 'பி செக்ஷன். 'ஏ செக்ஷனில் மட்டுமே 106 பேர். முதல் வரிசையில் நான் அமர்ந்து இருந்தேன். எனக்கு அருகில் கொஞ்சம் கூன் போட்ட ஒரு பையன் உட்கார்ந்து இருந்தான். அவனை அதுவரை பார்த்தது இல்லை. அவன் மடிப்பாக்கம் பஞ்சாயத்துப் பள்ளியில் இருந்து வந்திருந்தான். பார்த்ததுமே தெரிந்துகொள்ளலாம், அவனுக்கு வயதுக்கு ஏற்ற போதுமான மூளை வளர்ச்சி கிடையாது என்பதை.

சீருடை என்கிற விஷயம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதே, மாணவர்களுக்குள் வேற்றுமை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால், அதில் கூட நுண்ணிய அளவில் வேறுபாடு இருப்பதை அரசுப் பள்ளிகளில் தெரிந்துகொள்ளலாம். ஏழை மாணவர்கள் காட்டன் சட்டை போட்டு இருப்பார்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கத்துப் பையன்கள் டெரிகாட்டன் அணிந்து இருப்பார்கள். வசதியான வீட்டுப் பையன்கள் பாலியஸ்டர் அல்லது சைனா சில்க் அணிந்து இருப்பார்கள்.

அமல்ராஜ், சைனா சில்க் சட்டை அணிந்து இருந்தான். நான் வெள்ளை டெரிகாட்டன் சட்டையும் பிரவுன் நிற டவுசரும் அணிந்து இருந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, அவனுக்கு 16 வயது இருக்கும். வகுப்பில் பேன்ட் அணிந்து வந்தவன் அவன் மட்டும்தான். அவனுடைய அப்பா, அப்போது ஊரில் பெரிய ஆள். நிலம் நீச்சு, பரம்பரைச் சொத்து என்று கொஞ்சம் தாராளமாகவே இருந்தது. அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்தின் மூத்த மகன் நம்ம அமல்ராஜ்.

புதிய நோட்டையும் புத்தகங்களையும் முகர்ந்து பார்த்தபோது வந்த வாசனையும், முதல் நாள் வகுப்பு தந்த மகிழ்ச்சியும் இன்னமும் மனதில் ஓரமாக இருக்கிறது. சொர்ணாம்பிகை மிஸ்தான் கிளாஸ் டீச்சர். முதல் நாள் என்பதால், பாடம் எதுவும் எடுக்கவில்லை. டேபிளில் இருந்த நொச்சிக் குச்சிக்கும் வேலை இல்லை.

கதைக்கு இடையே சின்ன இடைச் செருகல்...

நொச்சி என்பது மரமாகவும் வளராமல், செடியாகவும் குறுகிப்போகாமல் வளரக்கூடிய ஒரு தாவரம். நொச்சிக் குச்சி வளைந்து கொடுக்கும் தன்மைகொண்ட, உறுதியான கொம்பு. எருமை மாடு ஓட்டுபவர்கள் நொச்சிக் கொம்பைப் பயன்படுத்துவதைக் கிராமங்களில் காணலாம். இந்தக் குச்சியைவைத்து நுங்கு சைக்கிள் தயாரித்தால், பலன் அமோகம். நொச்சியின் இலை நல்ல வாசனை கொண்டது. காய்ந்த நொச்சி இலைகளை நெருப்பில் எரித்தால் யாகங்களில் வருவதுபோல வெண்மையான புகை வரும். இந்தப் புகை, கொசுக்களையும் பூச்சிக்களையும் அழிக்கவல்லது.

அப்போது எல்லாம் வகுப்பறை டேபிளில் தினமும் ஒரு புதிய நொச்சிக் குச்சி தயாரித்து வைக்க வேண்டும். இதற்காக வாத்தியார்களின், டீச்சர்களின் அல்லக்கை மாணவர் யாராவது வகுப்புக்கு ஒருவர் இருப்பர். அந்த அல்லக்கை வேலையை எட்டாவது வரை நான் செய்து வந்தேன். எட்டாவதுக்குப் பிறகு, பொறுக்கிப் பசங்க பட்டியலில் நான் சேர்ந்துவிட்டதால், பத்மநாபனோ வேறு யாரோ டீச்சருக்கு அல்லக்கையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். நொச்சிக் குச்சிக்கு டிமாண்ட் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக, நுணா மரத்தின் கிளையை உடைத்து, பிரம்பு தயார் செய்துவைக்க வேண்டும். கறு நிற நுணாம்பழம் சுவையாக இருக்கும். ஆனால், வாசனை அவ்வளவு சிலாக்கியமாக இருக்காது!

ஓ.கே. கமிங் பேக் டு தி பாயின்ட்...

சொர்ணாம்பிகை டீச்சரின் வகுப்பு  முடிந்ததுமே ஒல்லித் தமிழய்யா வந்தார். ஒல்லித் தமிழய்யா ரொம்ப ஜாலியான ஆள். டைமிங் கமென்ட்கள் அடிப்பதில் கில்லாடி. கோபம் வந்துவிட்டால் மட்டும், நொச்சிக் குச்சி பிய்ந்துபோகும் அளவுக்கு விளாசிவிடுவார். குச்சியே பிய்ந்துவிடும் என்றால், அது பிய்யக் காரணமான முதுகின் கதி என்னவென்று சொல்ல வேண்டியது இல்லை.

அன்று வகுப்புக்கு வந்த ஐயா எல்லோரையும் உயிரெழுத்து, மெய் எழுத்து எழுதச் சொன்னார். உயிர் எழுத்துக்களை வரிசையாக எழுதிவிட்டேன். மெய்யெழுத்து எழுதும்போது, மட்டும் கொஞ்சம் திணறிப்போனேன். எல்லார் நோட்டுக்களையும் வரிசையாக நடந்தவாறே கவனித்து வந்த ஐயா, அமல்ராஜின் நோட்டைப் பார்த்து உலகையே வெறுத்து விட்டார். அவன் எழுதியதில் ஒன்றுகூட சத்தியமாகத் தமிழில் இல்லை. அது எந்த மொழி என்று ஐயாவால்கூடக் கண்டு பிடிக்க இயலவில்லை.

''என்னய்யா இது? அசோகர் கல் வெட்டை அப்படியே பார்க்குறது மாதிரி இருக்கே?'' என்றார்.

அமல்ராஜ் அமைதி காத்தான். அவனுக்கு லேசாகத் திக்குவாய். வேகமாகப் பேச முடியாது.

''ஏன்டா, கேட்டுக்கிட்டு இருக்கேன். உன்னால பதில்கூடச் சொல்ல முடியாதா... வாய்ல என்ன கொழுக்கட்டையா?'' என்றவாறே நொச்சிக் குச்சியை எடுத்தார். பக்கத்தில் இருந்த பையன், ''ஐயா, அவனுக்குச் சரியாப் பேச வராது'' என்றான்.

''சரி... உன்னோட பேரை நோட்டுல எழுது!'' என்றார், ஐயா கண்டிப்பான குரலில்.

அமல்ராஜ் எழுதியது மீண்டும் அசோகர் கல்வெட்டு மாதிரியே இருந்தது. அமல்ராஜால் அவன் பெயரைக்கூட எழுத முடியவில்லை என்பதுதான் சோகம்.

''நீயெல்லாம் எப்படிடா ஆறாம் கிளாஸ் வந்தே?'' என்று கோபமாகக் கேட்டவாறே நொச்சிக் குச்சியால் அடித்து விளாசிவிட்டார் ஐயா. முதுகிலும் உள்ளங்கையிலும் ஏராளமான அடிகளைப் பொறுமையாக வாங்கிய அமல்ராஜ், ஒரு சின்ன எதிர்ப்புக்கூடத் தெரிவிக்கவில்லை. சிலை மாதிரி உணர்ச்சிகளைக் காட்டாமல் மௌனமாக வந்து அமர்ந்தான். அவனது கையைப் பிடித்துப் பார்த்தேன். சிவந்து போய் ரத்தம் கட்டியிருந்தது. அமல்ராஜைப் பார்க்க ரொம்பப் பாவமாக இருந்தது.

மறு நாள் காலையில் ஹெட்மாஸ்டர் ரூம் அல்லோலகல்லோலப்பட்டது. அமல்ராஜின் அப்பா அவரது உறவினர்களோடு வந்து, மகன் அடிபட்டதற்காக நீதி கேட்டுக்கொண்டு இருந்தார். அவனால் அ, ஆ என்றுகூட எழுத முடியவில்லை என்று சொன்ன தமிழய்யாவின் நியாயம் சுத்தமாக எடுபடவில்லை. ''அதைச் சொல்லிக் கொடுக்கத்தான் உங்ககிட்டே அனுப்புறேன்!'' என்று அமல்ராஜின் அப்பா அழும்பு செய்தார். ''ஆறாம் கிளாஸ்ல எப்படிங்க அ, ஆ, இ, ஈ கத்துக் கொடுக்க முடியும்?'' என்று ஐயாவின் கேள்வியை அவர்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்தார்கள். கடைசியாக, தமிழய்யா நொந்துபோய் மன்னிப்பு கேட்டதாக நினைவு.

அன்று முதல் அமல்ராஜை எந்த வாத்தியாரும், டீச்சரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவன் பாட்டுக்கு வகுப்புக்கு வருவான். கடைசி வரிசையில் மந்தமாக உட்காருவான். ஏதோ எழுதுவான். பரீட்சைகூட அசோகர் கல்வெட்டு மொழியில்தான் எழுதுவான். எப்போதுமே எல்லா பேப்பரிலுமே மார்க் 'ஜீரோதான். ஓரிரு டீச்சர்கள் பரிதாபப்பட்டு ஐந்தோ, பத்தோ ரிவிஷன் டெஸ்டில் தந்ததும் உண்டு.

மற்ற பையன்களைப்போல விளையாட்டிலும் அமல்ராஜுக்கு ஆர்வம் இல்லை. அவனுடைய சைனா சில்க் வெள்ளைச் சட்டையில் மட்டும் ஒருநாள்கூட நான் அழுக்கைக் கண்டது இல்லை. பாட்டா செருப்புதான் அணிவான். கையில் கோல்டு கலர் வாட்ச் கட்டி இருப்பான். கழுத்தில் தடிமனான செயின். விரல்களில் மோதிரம் என்று மிருதங்க வித்வான் கெட்- அப்பில் அசத்துவான்.

தமிழய்யா அவனது எழுத்தை 'அசோகர் கல்வெட்டு என்று விமர்சித்து இருந்ததால், அவனை மற்ற மாணவர்களும் 'அசோகர் கல்வெட்டு என்றே பட்டப் பெயர் வைத்து அழைத்தோம். அமல்ராஜ் என்று அட்டெண்டென்ஸில் அழைப்பதோடு சரி. தமிழய்யா அட்டெண்டன்ஸ் எடுத்தால் அமல்ராஜ் என்று சொல்ல வேண்டிய நேரத்தில்கூட 'அசோகர் கல்வெட்டு என்றுதான் குசும்பாகச் சொல்வார். அமல்ராஜால் உடனே 'உள்ளேன் ஐயா சொல்ல முடியாது. கையை மட்டும் தூக்கிக் காட்டுவான்.

ஆறாம் வகுப்பில் 105 பேர் தேர்ச்சி பெற்றார்கள். வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே மாணவன் அசோகர் கல்வெட்டு மட்டுமே. காரணம், சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

நான் ஏழாம் வகுப்புக்குப் போன பின்பு, அசோகர் கல்வெட்டைப் பார்ப்பது குறைந்துபோனது. எப்போதாவது பார்த்தால் சினேகமாகச் சிரிப்பதோடு சரி. அவனுக்கு மூடு இருந்தால், பதிலுக்குச் சிரிப்பான். இல்லை என்றால், உர்ர் என்று போய்விடுவான்.

பள்ளிக் கட்டடம் கட்ட நிதி திரட்டிய போது அமல்ராஜின் அப்பா பெருத்த தொகை ஒன்றை அளித்தார் என்று கேள்விப்பட்டேன். வகுப்புகள் மாற மாற, அசோகர் கல்வெட்டையே சுத்தமாக மறந்துவிட்டோம். ஓரிரண்டு ஆண்டுகளில் பள்ளியைவிட்டு, அவன் நின்றுவிட்டான் என்று நினைக்கிறேன்.

ஃப்ளாஷ்பேக் ஓவர்

என்னோடு ஆறாம் வகுப்பு படித்த அதே அமல்ராஜ்தான் இன்று காலை ஐயர் வீட்டில் தோட்ட வேலை செய்துகொண்டு இருந்தவன். அழுக்கான லுங்கி அணிந்து இருந்தான். சட்டை இல்லை. வியர்வையில் உடல் நனைந்து இருந்தது. உழைப்பின் பலனால் ஆர்ம்ஸ் கொஞ்சம் வெயிட்டாக இருந்ததுபோலத் தெரிந்தாலும், கூன் போட்ட முதுகால் சுத்தமாக அவன் தோற்றத்துக்குக் கம்பீரம் இல்லை.

''நான்தான்டா குமாரு... உங்கூட ஆறாவது படிச்சேனே?''

அவனால் நினைவுபடுத்திப் பார்க்க இயலவில்லை. பொத்தாம் பொதுவாகச் சிரித்தான். அவனுக்கு வயது இப்போது 33 அல்லது 34 ஆக இருக்கலாம். ஆனால், 45 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருக்கிறான்.

''ஞாபகமில்ல!''

'பரவாயில்லை அமல். நல்லா இருக்கியா?'

'ம்ம்ம்... நல்லாத்தான் இருக்கேன். கட்டட வேலை பார்க்குறேன். வேலை இல்லாத நாள்ல இதுமாதிரி தோட்ட வேலையும் செய்வேன்.'

முன்பைவிட இப்போது திக்கு கொஞ்சம் பரவாயில்லை. தொடர்ச்சியாகப் புரியும்படி பேசுகிறான்.

வேறு எதுவும் பேசாமல், ''வர்றேன்டா!'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றேன். அவனுக்கு இப்போதாவது அவன் பெயரை எழுதத் தெரியுமா என்று கேட்க ஆவல். கேட்காமலேயே கிளம்பிவிட்டேன்.

அவன் அப்பா இருந்த இருப்புக்கு இவன் இந்த நிலைக்கு வந்திருக்க வேண்டியதே இல்லை. விசாரித்துப் பார்த்தால் ஏதோ ஒரு கதை நிச்சயம் இருக்கும். அவன் தம்பி, தங்கைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டால், அந்தக் கதையின் அவுட்லைன் கிடைத்துவிடும்.

இடுப்பிலும் கையிலும் குழந்தையோடு... கூடப் படித்த கவிதா மாதிரி பெண்களை எங்காவது ரேஷன் கடையிலோ, மருத்துவமனையிலோ காண நேர்ந்தால்... எனக்கு லேசாக மனசு கனக்கும்.

அமல்ராஜ் மாதிரி பசங்களைப் பார்க்கும்போதும், அதே கனம்!

நன்றி - விகடன்

23/09/2012

விரகம் விளைத்த வீரம் - கோமான் வெங்கடாச்சாரி


கம்பன் ஒரு மேதை. ஆம். மேதையிலும் சிறந்த மேதை செயற்கரிய செய்பவன்தானே மேதை. சந்தர்ப்பச் சூழ்நிலைகளை வைத்துக்கொண்டு பொருந்தாத இடங்களிலும் பொருந்துமாறு ஒர் இலக்கியப் படைப்பை உருவாக்குபவனை மேதை என்று அழைக்க நாம் தயங்கவேண்டியதே இல்லையே?

இங்கே அவ்வாறான ஒர் சந்தர்ப்பம். இராமகாதையில் யுத்த காண்டம் சூழ்ச்சியும், போரும், படையும் விரவி வரவேண்டிய பகுதி. இவ்விடத்திலும் ஒரு விந்தை புரிகின்றான் கவிச்சக்கரவர்த்தி தன் அற்புதத்திறமையால். மரணஒலிகள் எழுப்பவேண்டிய யுத்தகாண்டத்திலே. மறலிக்கு இடம் அளிக்கவேண்டிய ஓர் பகுதியிலே மன்மதனுக்கு வேலை கொடுக்கின்றான் கவிமேதை கம்பன். என்ன மன்மதனுக்கு வேலையா? எங்கே? என்ன! இதோ அதைக் காண்போம். கம்பராமாயணத்திலே யுத்தகாண்டம், ஐந்தாவதாக உள்ள படலம் இலங்கை கேள்விப்படலம் என்பது. இலங்காபுரியின் இணையில்லாச்செல்வன் வீடணன் இராமனிடம் அடைக்கலம் புகுந்துவிட்டான். இனி அடுத்ததாக இலங்கையை அடையவேண்டியதுதான். இராமனும், இலக்குவனும் தங்களது வானரப்படைகளுடன் கடற்கரையில் தங்கியிருக்கிறார்கள். போதாதற்கு வீடணன் வந்து சேர்ந்திருக்கின்றான். இலங்கையை அடையவேண்டுமென்றால் இடையே அகன்று பரந்து நிற்கும் கருங்கடல் இடையூறாக நிற்கிறது.

மாலை நேரம். இப்போதெல்லாம் இராமன் மன அமைதியை நாடி தனியே உலாவுவது வழக்கமாகிவிட்டது. அதுபோல் இப்போதும் இராமன் கடற்கரையில் நுண்ணிய வெண்ணிய மணற்பரப்பில் அமர்ந்து கருங்கடலையும் அதில் இடைவிடாது எழும்பி கரையில்வந்து மோதிச்செல்லும் வெண்ணிற அலைகளையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

பகலவன் மேற்குதிசையில் சென்று மறைகிறான். வானம் தீநிறம் கொண்டு செவ்வானமாக காட்சியளிக்கிறது. சற்றைக்கெல்லாம் அந்தச்செவ்வானம் மறைந்து எங்கும் கரிய இருள் கவ்விக்கொள்கிறது. அரக்கர்கள் மாயையைப்போல் இருளில்தான் நோயாளிகளுக்கு நோயின்மிகுதி தோன்றும். இது உலக இயற்கை. அதும்டடும்தானா? இருள் தானே இடையூறுகளுக்கெல்லாம் தோழன். சனகக்குமாரியை பிரிந்து வாடும் சக்கரவர்த்தித்திருமகனின் மனதில் ஏற்ப்பட்டுள்ள வலியை மேலும் அதிகரிக்கச் செய்ய விரும்பியவன் போல் அநங்கனும் வந்து சேர்ந்தான் அவ்விடத்திற்கு.

வானத்தில் படர்ந்த காரிருள் கடல் நீரையெல்லாம் கொள்ளைக் கொண்டு வேறொரு புதிய தடாகத்தை உண்டு பண்ணியதுபோல் பிரமிக்கத்தக்க வகையில் காட்சியளிக்கிறது. அதற்கேற்றார் வகையில் வானத்தின்கண் படர்ந்திருந்த விண்மீன்கள் அந்தப் பெரும் பொய்கைக்கண்ணே படர்ந்திருந்த மலர்களை நிராகரித்து காணப்படுகின்றன.

எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது. இருளில் மல்லிகை மலர்வது இயற்கை. இயற்கையின் நியதியின்படி அக்கடற்கரையின் அருகிலிருந்த மல்லிகை காட்டில் உள்ள மல்லிகை மொட்டுகள் நன்கு மலர்கின்றன. அவை வானத்தோடு போட்டி போடுவதுபோல் காட்சியளிக்கின்றன. வானமே உன்னிடம் இருப்பவை மனமற்ற பூக்கள் என்னிடம் இருப்பவை மனமுள்ளப் பூக்கள் நீ என்னை விட எந்தவகையில் சிறந்தவன்? என்று வானத்தை பார்த்துக் கேட்பதுபோல் மல்லிகைவனம் மனம் பரப்பி வருகின்றது. அதன் நறுமனம் இராமனின் நாசியிலும் சென்று தாக்குகிறது. அந்த இராமனோ மல்லிகையினால் அலங்கரிக்கப்பட்ட கரிய கூந்தலையுடைய சானகியின் பிரிவாற்றாமையால் துடிதுடித்துக்கொண்டிருக்கின்றான். அவனுடைய துயரத்தை மேலும் அதிகரிக்கும்படி அமைகிறது மல்லிகையின் வண்டு தீண்டா நறுமனம். அந்தச்சூழ்நிலையில் கீழ்த்திசையில் கருங்கடல், வானவளையும் வலிய வந்து தவழும் விளிம்பில் கடலிலிருந்து கிளம்புகிறது நிலா. நிலா என்றால் எப்படி - பால் சொரியும் வெண்ணிலா. கருங்கடலின் அடித்தளத்திலிருந்து கிளம்புகிறான் வெண்ணிலா. இந்தச்சமயத்தில் வெண்மதி கிளம்புவானேன். அதற்கும் ஒரு காரணம் இல்லாமல் இல்லை.
மிதிலைச்செல்வியாகிய மைதிலியைப் பார்த்து இன்புற்று இராமன் வெண்ணிலாவை ஒரு பொருட்டாக பார்த்ததில்லையாம். சீதையின் முகத்திறகு நிலவு எந்த விதத்தில் ஈடுகொடுக்கமுடியுமென்று இராமன் அகம்பாவம் கொண்டிருந்தானாம். இப்பொழுது அந்த சீதையை பிரிய நேரிட்டுவிட்டதே, இப்பொழுது என்னை அவமதிப்பாயா? என்று கேட்பதுபோல் வெண்ணிலா தன் முழுச்சோபையுடன் கடலினின்றும். கீழ்த்திசையினின்றும் கிளம்புவதுபோல் காட்சியளிக்கிறது. பழிக்குப்பழி வாங்கும் பாவனை, நிலவின்கண் தோன்றுகிறது. அதிலும் பகைவன் தாழ்ச்சியடைந்திருக்கும்போது எதிரி தன் வலிமையை அதிகம் காட்ட முற்படுவான்.

நிலவைக் கண்ட இராமனின் வருத்தம் அதிகமாகிறது. நிலவுப்பெண்ணுக்கு இராமனின் பால் இரக்கம் உண்டாகிறது. பாவம் நம்மால் இயன்ற உதவியை இராமனுக்குச் செய்வோம் என்று எண்ணினாளாம் நிலவுப்பெண். கருங்கடலை நோக்கி சீதையின் பிரிவாற்றாது ஏங்கி உட்கார்ந்திருக்கும் இராமனுக்கு உதவி செய்ய எண்ணியதே போல் தன்னுடைய குளிர்ச்சி பொருந்திய கிரணக்கரங்களின் வலையை கடலின் மேல் வீசியதைப்போல் எழுந்து நின்றது நிலா.

நிலவைக் கண்ட கடல் பொங்கி எழுவது இயல்பு. இதற்கும் ஒரு காரணத்தை கற்பிக்கிறான் இந்த இடத்தில் கவிச்சக்கரவர்த்தி. இராமன் கருநிறம் கொண்டவன் - அதாவது கருங்கடல் நிறத்தவன். இப்போது இலங்கைக்குச் செல்லும் வகையையெண்ணித் தன் கரையில் வந்தமர்ந்திருக்கும் இராமன் தன் கருநிறத்தைத் தான் ஏற்கனவே கொள்ளைக் கொண்டது போதாதென்று தன் மேல் அணைகட்டவும் திட்டமிடுகிறானே என்று மனம் கொதித்தெழுவதை போல் கரையை நோக்கி தன் அலைக்கரங்களை வீசிக்கொண்டு ஆரவாரம் செய்கிறானாம். எப்படி கவியின் கவித்திறம்?...

நுண்ணிய வென்மணற்பரப்பு, அலைமோதும் கருங்கடல், வானத்தில் விரைந்து வரும் நிலவொளி, பக்கத்திலுள்ள மல்லிகைக்காட்டில் இருந்து வீசும் நறுமணம், இத்தனையும் தாண்டிக்கொண்டு அருகேயுள்ள பொதியமலையிலிருந்து புறப்பட்டது தென்றல் என்னும் புலி. சாதாரணமாகவே வருகிறது. சீறிக்கொண்டு வருகிறது. தனது வாயைத்திறந்தபடி கோரப்பற்களைக் காட்டிக்கொண்டு இராமனை தின்றொழிக்கும் திட்டத்தோடல்லவா வருகிறது?...

இந்தத் தென்றலுக்கு இளைத்துவிடக்கூடியவன் அல்லன் இராமன் என்பது உண்மைதான். ஆனால் தென்றல் மட்டும் வந்திருந்தால் சமாளித்திருக்கலாமே. அதன்பின் இன்னொன்றும் வருகின்றதே....
இங்குதான் கம்பனின் மேதை நன்குப் புலனாகிறது. இராமனைக் கண்டு கவி இரங்குகின்றான். கவி மட்டுமா இரங்குகின்றான்., நாமும்தான் இரங்குகின்றோம். நாமாகவா இரங்குகின்றோம்., நம்மை இரங்கும்படி செய்துவிடுகின்றான் கவிச்சக்கரவர்த்தி தன்கவி புனையும் திறனால்.

இராமன் சாமானியனா? அரிய பெரிய செயல்களையெல்லாம் ஆற்றியுள்ளவன் தானே அவன். அவன் ஆற்றிய அரும்பெரும் செயல்களையெல்லாம் நினைவு கூர்கிறான் கவி. நம்மையும் நினைத்துப்பார்க்கும்படி செய்கிறான். (மறந்திருந்தாலல்லவோ நினைப்பதற்கு) வாலியைப்பற்றியும் அவனது வீரத்தைப் பற்றியும் நாம் நன்கு அறிவோம். முன்பொரு சமயம் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமுதம் அடைவதற்காக பெரும் பரப்புள்ள பாற்க்கடலை கடைந்தார்கள். அமுதம் கிடைத்தது. தேவர்கள் உண்டனர் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் தேவர்கள் அமுதம் உண்டு மகிழ்வதற்கு உறுதுணையாக அவர் பக்கம் நின்று தன் வலிய கரங்களால் பாற்க்கடலைக் கடைந்த வரலாற்றைப் பலர் அறிந்திருக்கமுடியாது. வாலி மட்டும் இல்லாமலிருந்தால் தேவர்களுக்கு அமுதம் கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம்தான். அத்தனை வலிய கரங்களை உடையவனாம் அந்த வானரத்தலைவன். அவனது கரங்களின் வலிமையை பற்றிப் பேசும்போது அவனுடைய உடல்வலிமை எத்தகையதாய் இருக்கவேண்டும் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாம். அந்த வாலியின் வலிமை கடைசியில் என்ன ஆயிற்று. இராமனின் ஒரு சரத்தினால் ஓய்ந்துவிட்டதே. அதை நினைவிற்குக் கொண்டுவரும் கவி அதோடுவிடாமல் வேறொரு நிகழ்ச்சியையும் நமக்கு நினைவூட்டுகிறான். பஞ்சவடியில், இராம இலக்குவனர்கள் சீதையோடு இருந்த சமயம் சூர்ப்பனகை அங்குவந்து சீதையைத் தூக்கிச்செல்ல முயற்சிக்கும்போது இளையவனால் அங்கஹீனம் செய்யப்பட்டு கரனிடத்தும், தூடணனிடத்திடமும் சென்று முறையிட அன்னவர்களும் தங்கள் பெரும் படையுடன் இராமனைப் பொற வந்த காலை இலக்குமனைச் சானகிக்குத் துணையாக வைத்துவிட்டு இராமன் ஒருவனாகவே தனியாகச் சென்று கரதூடணர்களையும் அவர்களது பெரும்படையையும் தொலைத்து விட்டு வெற்றி வீரனாகத் திரும்பி வந்ததையும் நமக்குக் கவணப்படுத்துகிறான் கவி.

இவைமட்டும்தானா இராமனின் ஆற்றலுக்குச் சான்றுகள். நீண்டு வானையளாவி நின்ற மராமரத் தொகையை துளைத்துக் கொண்டல்லவா இராமபாணம் சென்று வாலியின் மார்பில் இறங்கியது. மராமரத்தை துளைத்த வீரத்தை என்னவென்று கூறுவது. இந்தச் சம்பவங்களையெல்லாம் நினைவு கூர்கின்றார் கவி., பாடல் எழுகின்றது.

கரத்தாடும் பழிமாக்கடல் கடைந்துளானு
ரத்தோடும் கரனொடு முருவவோங்கிய
மரத்தொகை துளைத்தவன் மார்பில் -

பாடல் இன்னும் முடியவில்லை. அதற்குள்ளாகதான் ஒரு அதிர்ச்சியை உண்டாக்கிவிடுகிறானே கவி. வாலியைக் கொன்ற வலியக்கரங்கள், கரனைக் காலன் வசம் அனுப்பிய கவினுறு கரங்கள், மராமரம் ஏழும் துளைத்த மந்தயானையின் மதம்நிகர் மலர்க்கரங்கள் இவைகளை தாங்கிவிடும். ஆனால் இராமனின் மார்பு வலி?... எல்லாவற்றையும் நாம் ஒருங்கே உணர்ந்து அனுபவித்து வரும்போதே அந்த மார்புக்கு ஏதோ ஊறு நேர்ந்துவிட்டது என்பதைக் கூறாமல் கூறுகிறானே கவி., இராமனின் மார்புக்கு என்ன நேர்ந்தது?
ஓர் அகிலஉலகப் புகழ்ப்பெற்ற மல்யுத்த வீரனைப்பற்றிய வாழ்க்கைவரலாற்றில், மேற்படி வீரர் அமெரிக்காவில் ஆறு பேரை வென்றார், ஜெர்மனியில் பத்து வீரர்களை மண்டியிடச் செய்தார், ஜப்பானில் பத்து பயில்வான்களை பயந்து ஓடச்செய்தார் ஆனால் இந்தியாவில்,...... என்று சொல்வதானால் அந்த மாபெரும் வீரருக்கு இந்தியாவில் ஏதோ எதிர்பாராதத் தோல்வி ஏற்ப‌ட்டுவிட்டது என்றல்லவா எண்ணத் தோன்றும். அதேபோல் வாலியை வலி தொலைத்த மார்பு, கரனைக் கலங்க வைத்தமார்பு, வலிய நெடிய மராமரங்களைத் துளைத்த நீண்டுநிமிர்ந்த மார்பு இராமனுடைய மார்பு என்று கூறி, அந்த மார்பில் ..... என்று இரக்கம் தோன்றக் கூறிய கவி, மேலே என்னச் சொல்லப் போகிறானோ, அந்த மார்புக்கு என்ன ஊறு நேர்ந்துவிட்டதோ என்று யார்தான் வருந்தாமல் இருக்கமுடியும். இராமனின் மார்புக்கு என்ன நேர்ந்தது? கவியையே சொல்லச் சொல்லிக் கேட்போம்....

மார்பில் மன்மதன் சரத்தொடும் பாய்ந்தன நிலவின் தாரைவான்

என்று முடிக்கும் கவியின் சாமர்த்தியம் போற்றப்படவேண்டிய ஒன்றுதானே. தென்றலின் உதவியோடு அங்குவந்த மன்மதன் கீழ்க்கடலில் தோன்றிய நிலவின் வெள்ளிய கதிர்கள் மூலம் தன் சரங்களைப் பாய்ச்சி விட்டானாம். இராமனின் மார்பிலே, எத்தனையோ வீரச்செயல்களைப் புரிந்த வலிமை மிக்க மார்பிலே மன்மதனின் கொடியக்கணைகள் - நிலவின் கதிர்வழி சென்று தாக்கியபோது கலங்கிவிட்டானாம் இராமன். அவன்பால் அன்பு கொண்ட எவருமே இரங்கவேண்டிய ஒரு முக்கிய நிகழ்ச்சிதானே இது. இதையும் எத்துனை அழகாக எத்துனை கவிநயத்துடன் நமக்குச் சித்தரித்துக் காட்டுகிறான். இதுதான் கம்பமேதை என்பது.

பின்னர் என்ன நடக்கிறது என்பதை நோக்குவோம். இவ்வாறு தென்றலினாலும் நிலவின் குளிர்ச்சிமிக்க நிலாக்கற்றைகளின் வழித்தன் மார்பில் தைத்த அருங்கனின் மலர்க்கணைகளாலும் தாக்கப்பட்ட காரணத்தால் உடல் மெலிந்த இராமன் தன் உடலை ஓவியத்துக்கும் எழுதவொன்னாத தன் வடிவழகமைந்த உடலை நோக்குகிறான். உடல் நோக்குவான் என்று கவி கூறும் சொல்லில் எத்தனை கருத்து மிளிர்கின்றது என்பதை அறியும் போதே உடல் புல்லரிக்கிறது. இராமன் எதற்காக உடலை நோக்குகிறான் எதற்கும் ஈடுகொடுக்கும் தன் நெடிய வலிய கரங்களும் அவைகளைத் தாங்கி நிற்கும் தன் பரந்த மார்பும் காமன் கனையால் தாக்கப்பட்டு வலியிழந்து நிற்கும் காரணத்தையறிந்து கொண்டானாதலின் அத்தன்மையினால் ஏற்பட்ட மெலிவு தன்னை வருத்தத் தன் உடலை நோக்குகிறான் அவன். இந்த தன் நிலைக்குக் காரணம், தன் உயிருக்குயிரான சீதையைப் பிரிந்து நிற்பதுதானே என்று ஓர் உணர்வு அவனுள் எழுகிறது. தனக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய் தீரவேண்டுமானால் அதற்கான ஒரே மருந்து சீதைதான். அவளை அடைந்தால்தான் தன் நோய் தீரும்., அதனால் தான் தன் உயிரை நோக்கினானாம். அந்த உயிர் தான் அவனிடம் இல்லையே. இலங்கையின் நடுவில் அல்லவா இருக்கிறது. உயிரைப்பற்றிய உணர்வு வந்தவுடன் தன் உயிரான சீதையின் பிரிவு உள்ளத்தை வாட்டுகிறது. தன் உயிரினைய சீதைத்தன் உடலில் வந்து பொருந்தவேண்டுமாயின் அவன் இலங்கையை அடையவேண்டும். அது அத்தனை எளிதாக நடந்தேற கூடியதல்லவே.. நடுவில் அலைமோதி ஆர்ப்பரிக்கும் கருங்கடலல்லவா இடையூறாக நிற்கிறது. ஆகவே கடலினை நோக்குகிறான் அவன். கடலினை நோக்கும் என்று சுருங்கச்சொல்லி நம்மை விளங்க வைக்கும் அற்புதத்திறமை பெற்றவனல்லவா கம்பன். கடலினைத் தன் அகன்று விரிந்த கண்கள் கொண்டமட்டும் கூர்ந்து பார்த்த இராமனுக்கு அக்கடலினிடையே வெகுதொலைவில் காணப்படும் இலங்கைத்தீவு தென்படுகிறது.! ஆ! அங்கே அல்லவா தன் உயிர் இருக்கிறது. அந்த உயிர் தன்னைவிட்டுப் பிரிந்து தானாகவேவா அங்கு சென்று தங்கியிருக்கிறது. அல்லவே. அந்தப் பகைவனாகிய இராவணன் அல்லவா தன் உடலினின்றும் தன் உயிரைப் பிரித்து எடுத்துச்சென்று அந்தத் தீவில் சிறை வைத்திருக்கிறான். இலங்கைக் கண்ணில் பட்டதும் தன் உயிருக்குயிரான சீதையைக் கவர்ந்துச் சென்ற அந்தக் கள்வனின் நினைப்பு வந்துவிடுகிறது அவனுக்கு. இராவணனின் நினைப்பும், இலங்கைத்திடலின் காட்சியும் தன் மனதில் எழுந்தவுடன் இராமனின் உணர்ச்சி எங்கனம் பொங்கி எழுந்திருக்க வேண்டும்? உடனடியாகச் செய்யவேண்டி வினையாது? கடலினைக் கடந்துச்சென்று இலங்கையை அடைந்து, இராவணனைக் கொன்று - இவ்வாறு எண்ணும்போதே அந்த வீரனாகிய சக்கரவர்த்தித்திருமகனுக்குத் தன் வில்லின் கவணம் வருகிறது. அது அந்த வில் - இதுவரை தன்னிடம் இருந்ததைத்தன் விரகதாபத்தால் உணரமுடியாத நிலமையிலிருந்த அவனுக்கு இப்போது நினைவிற்கு வந்துவிடுகிறது. அவனுள் எழுந்த விரக தாபமே அவனுக்கு வீர உணர்ச்சியையும் எழுப்பி அவன்பால் இருந்து பணியாற்றத்துடித்துக் கொண்டிருக்கும் வில்லினையும் உணர்த்திற்று. உடனே அவன் தன் வில்லைப் பார்க்கிறான். இந்த வில்லின் ஆற்றல் என்ன? எத்தனை அரிய சாகசங்கள் இதன் மூலம் ஆற்றியிருக்கிறான். அவ்வாறிருக்க இந்த வில் என் பக்கத்திலிருக்க நான் கலங்கி வாடுவது சரியா? என்று அவனையே எண்ணச்செய்துவிட்டது அவனுள் உருவான விரபதாபம்.
இப்பொழுது முழுக்கவியையும் பார்ப்போம்.

உடலினை நோக்கு மின்னுயிரை நோக்குமால்
இடரினை நோக்குமற்றியாது நோக்கவன்
கடலினை நோக்குமக் கள்வன் வைகுறும்
திடரினை நோக்குந்தன் சிலையை நோக்குமால்

காமனின் சுடுசரங்கள் இராமனின் திண்ணிய மார்பகத்தே பாயவும்,, நிலவும், தென்றலும், கடலும் அவனுக்குத் தன் உயிருக்குயிரான சீதாப்பிராட்டியை நினைவுறுத்தி மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தவும் அதனால் ஏற்பட்ட விரக தாபத்தினால் துயருற்ற இராமன் தன் மெலிந்த உடலையும், தன் உயிர் தன்னைவிட்டுப் பிரிக்கப்பட்டு கடலின் நடுவேயுள்ள திடரின் நடுவே அந்தக் கள்வனால் சிறைவைக்கப்பட்டிருப்பதையும், அக்கள்வனூருக்குச் செல்வதற்கு எதிரிலுள்ள கருங்கடல் ஓர் பெரும் இடையூறாக நிற்பதையும் உணர்ந்த இராமன் சீதையின் மதிமுகம் தோன்றித் தன்னை அழைப்பதால் எவ்விதத்தும் இலங்கை சென்று இன்னுயிராகிய சீதையை மீட்டு அழைத்து வருவதுதான் தான் உடனடியதாகச் செய்யவேண்டிய செய்கை என்பதை நன்குணர்த்தும் தன்னிடமுள்ளதன் பாரமிகு சிலையை நோக்கினான் என்று கூறும் புலமையைப் புரிந்துகொள்ளும் திறனையாவது நாம் அடைவோமாக. விரகம் விளைத்த வீரத்தைக் கண்கூடாகக் காணச் செய்து அதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் நாம் முன்கூட்டியே உணரும்படி செய்து நம் உள்ளத்தை உணர்ச்சி வசமாக்கும் பணியில் கம்பனைப்போல் செயல்படுத்த வேறு யாரால் முடியும்...

வாழ்க கம்பமேதை !!!! 

20/09/2012

ஓலைப்பட்டாசு - சுஜாதா


அந்த தீபாவளி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப் பற்றி சொல்வதற்குள் தேவைப்பட்ட அளவுக்கு மட்டும் சுயபுராணம். என் பெயர் எதற்கு? நான். அவ்வளவுதான். மற்றவர் பெயர்கள் முக்கியம். அது சந்தானம் ஐயங்கார், பெருந்தேவி, சின்னா இவர்களின் பெயர்கள் இந்த கதைக்கு என்னிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதற்கு முக்கியம்.

பார்த்தீர்களா ஆரம்பித்த விஷயத்தை விட்டு அலைகிறேனே. காரணம் – என் வயசு இன்றைக்கு எழுபது. பார்த்த மரணங்கள் ஆறு. இரண்டு மனைவிகள். ஒரு தேசிய விருது. ஒரு நாள் ஜெயில். ஒரு ப்ராஸ்டேட் ஆபரேஷன். கராஜில் நெருக்கமாக மூன்று கார்கள். உறவினரின் துரோகங்கள். தென் ஆப்பிரிக்கா டர்பனில் இரண்டு வருஷம் இவ்வாறு அதிகம் சேதப்படாமல் எழுபதை அடைந்து விட்ட ஒருவன் இறந்துபோனால் ஹிந்துவில் எட்டாம் பக்கத்தில் நான்கு வரிகளில் எழுபது வருஷமும் அடங்கி போகும்.

சொல்ல வந்தது, அந்த ஒரு தீபாவளி பற்றி. சீரங்கத்தில் என் பன்னிரண்டாவது வயதில் என் பாட்டியின் கண்காணிப்பில் வாழ்ந்தேன். அதனால் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு. அந்த தீபாவளிக்கு பட்டாசு வாங்க மொத்தம் ஐந்து ரூபாய்தான் தந்தாள். இப்போது என் வீட்டில ஐந்து ரூபாய் தாளை, தரையில் விழுந்தால் வேலைக்காரர்கள் கூட பொறுக்கமாட்டார்கள். அப்போது குறைவான பொருளாதாரத்தில் ஐந்து ரூபாயில் அதிகப்படியாக சந்தோஷம் கிடைக்க கொள்ளிடக் கரையருகில் ஓலைப்பட்டாசு சல்லிசாக விற்பார்கள்.

பனையோலையில் சின்னதாக வெடிமருந்தை வைத்து முடிச்சுப் போட்டு மிகச் சின்னதாக திரியுடன், பனையோலை வாலுடன் பிரமாதமாக வெடிக்கும். ஆனால், ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். பற்ற வைப்பதற்குள்ளே வெடித்து கையை உதறவேண்டி வரும். மேலும் ஒரு வாரம் வெயிலில் காயப்போட்டே ஆகவேண்டும். பாட்டி கொடுக்கும் காசில் ஓலைப்பட்டாசு பாதப் பணத்துக்கு வாங்கிக்கொண்டு, மிச்சத்தில் கொல்லன் பட்டறைக்கு போய் ஒரு வேட்டுக் குழாயும் கந்தகப் பொடியும் வாங்கிக் கொண்டேன்.

இது ஒரு மாதிரி மினி வேட்டுக்குழாய். நீண்ட கம்பியின் இறுதியில் ஒரு குழலும் போல்ட்டும் இருக்கும். குழலில் மஞ்சளான கந்கத்தை கெட்டித்து அதனுள் போல்ட்டை செருகி சுவரில் மடேர் என்று ஒரு அறை அறைந்தால் கேட்கும் வெடிச் சத்தம், நம் காதில் விண்ண்ண்ண் என்று அலறும். வெடியை விட திண்ணையில் சுதேசமித்திரன் படித்து கொண்டிருக்கும் தாத்தாக்களின் பின்பக்கம் மெள்ள நழுவி, ஒரு டமால் அடித்துவிட்டு, கோரதமுட்டியை நோக்கி ஓடுவதில் உள்ள உற்சாகம்தான் மிக சுத்தமானது.

அந்த தீபாவளி ஓலைப் பட்டாசு காயப் போட மாடிக்கு சென்ற போது, பக்கத்து வீட்டு “எடுத்துக்கட்டியின் மேல் செருப்பு வைத்திருந்தது. அதில் ஏறினேன். பின்னால் யாரோ கஷ்டப்பட்டு முனகுவது போல் சத்தம் கேட்டது. உதவி தேவையோ என்று நான் சுவர் எகிறி குதித்து அந்தப் பக்கம் போய் பார்த்தபோது சந்தானமையங்கார் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, சின்னவை பல இடங்களில் தடவிக் கொடுத்து சிகிச்சை மாதிரி என்னவோ செய்து கொண்டிருந்தார். சந்தானமையங்கார் அடுத்த வீட்டுக்காரர்.

எங்களையெல்லாம் ஓட ஓட விரட்டுபவர். கிரிக்கெட் பால் உள்ளே போனால் திருப்பி தரமாட்டார். கண்டபடி திட்டுவார். அவர் வீட்டு சுந்தர் எங்களுடன் விளையாட வரமாட்டான். அவர்கள் எந்த விதத்திலோ பணக்காரர்களாம். கொலுவுக்கு சில்க் ஜமக்காளங்கள் போட்டு, பெட்ரோமாக்ஸ் வைப்பார்கள். சின்னா அவர் வீட்டு சமையல்காரி. ரவிக்கை முந்தானையில் அவள் சேகரித்து இருந்த கொய்யாக் காய்கள் சிதறிக் கிடந்தன. தரை எல்லாம் வியர்வையால் ஈரமாக இருந்தது.

சந்தானயைங்காரின் செருப்புதான் ‘எடுத்துக்கட்டியில் மேல் வைத்திருந்தது. “என்ன மாமா பண்றீங்க “என்று கேட்டபோது அவர் திடுக்கிட்டு “இவளுக்கு உடம்பு சரியா இல்லை. மூச்சு வாங்கறதுன்னா அதனால, தசமூலாரிஷ்டம் கொடுத்து சரி பண்றேன். போடா போடா நீ எங்க இங்க வந்து தொலைச்சே ஓடிப் போ என்றார்.

பட்டாசு காயப் போட வந்தேன். மாமியை கூப்பிடட்டுமா என்றேன்.

மாமி பெட்டவாத்தலை போயிருக்கா. சுவரேறி குதிச்செல்லாம் வரக்கூடாது. போலீஸ்காரன் புடிச்சுப்பான் என்றார்.

இதையெல்லாம் கேட்காதது போல், சின்னா ஒரு மாதிரி மயக்கத்தில் கண் மூடிக்கொண்டு சற்றே நெற்றியை சுருக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

நான் வீரராகவனிடம் சொன்னேன். வீரராகவன் எங்கள் கிரிக்கெட் காப்டன். “பாவம்டா அவ. மேல்மூச்சு வாங்கிண்டிருந்தது. சந்தான மாமா தடவிக் கொடுத்தார். இல்லைன்னா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா என்றேன்.

அவன் அதைக் கேட்டு கைகொட்டி கண்ணீர் வரச் சிரித்தான். “நீ கொக்கோகப் படம் எதும் பார்த்ததே இல்லையா? மார்கழி மாதம் உற்சவத்தில் விக்குமே?

இல்லை…”

அவன் “வா என்று உள்ளே சென்று பரண் மேல் கத்யத்ரயம் திவ்யபிரபந்தசாரம் போன்ற புத்தகங்களின் நடுவே செருகியிருந்த பழுப்பான புத்தகத்தை எடுத்து பிரித்துக் காட்டினான்.

ஆமாண்டா, இப்படித்தாண்டா சந்தான மாமாவும் சின்னாவும் இருந்தா…”

அவன் ஒரு வக்கீல் போல பல கேள்விகள் கேட்டு இது தெரிந்ததா?, அது புரிந்ததா? என்றெல்லாம் கேட்டு, அவவப்போது குபீர் குபீரென்று சிரித்து, “அடிச்சடா லக்கி ப்ரைஸ் என்று சொன்னது எனக்கு விளங்கவில்லை. அவ்வப்போது என் நண்பர்கள் என்னை மரியாதையுடன் பார்த்தார்கள். மீண்டும் மீண்டும் அந்த காட்சியை விவரிக்க சொல்லியே வதைத்தார்கள்.

எனக்கு எல்லாம் புரியறது. ஆனா எதுக்குடா தலைல முண்டாசு? என்றான் பாச்சு.

அதாண்டா ட்ரிக்கு. அதை கட்டிண்டா அடையாளம் தெரியாதாம். வேற யாரோனு நினைச்சுண்டுருவோமாம் என்று வீரு விளக்கியது புரிந்தும் புரியாமலும் இருந்ததை அவன் என்னை ஒரு மாதிரி பார்த்து, “நீ ஒண்ணு பண்ணு. அவர்கிட்ட போய் ‘மாமா மொட்டை மாடில ஓலைப்பட்டாசு காயப்போட போயிருந்த போது உங்களையும் சின்னாவையும் பார்த்துட்டேனே. மாமி பெட்டவாத்தலைலேர்ந்து வந்தாச்சான்னு அவாள்லாம் சீட்டாடிண்டிருப்பா அங்க போய்க் கேட்டு பாரு…”

ஐயோ போடா தோலை உரிச்சுருவார்…”

அதான் இல்லை. பாரேன் நடக்கிறதை. எதுக்கும் ஓடத் தயாராவே இரு. ஓரமா நின்னு கேட்டுட்டு வந்துரு. நடக்கிறதைப் பாரேன்.

அவர்கள் மிகவும் கட்டாயப்படுத்த நான் மெள்ள தைரியம் பெற்று பக்கத்து வீட்டு திண்ணைக்கு நழுவி ஓரத்தில் உட்கார்ந்தேன். வெள்ளி செம்பில் காபியும், பத்தமடை பாயுமாக “ஆஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள். புகையிலையை துப்பிவிட்டு வாய் கொப்பளிக்க வரும்போது என்னை பார்த்து சந்தானமையங்கர் திடுக்கிட்டு “என்னடா? என்றார்.

மாமா, மாடில ஓலைப் பட்டாசு பெருந்தேவி மாமி வந்தாச்சா பெட்டவாத்தலைலருந்து? இவ்வாறு ஆரம்பித்தவுடன் “வாடா என்று என்னை அப்படியே அலாக்காகத் தூக்கி உள்ளே செலுத்தி, என் வாயில் கல்கண்டு, அரிசி பப்ரமுட்டு, லேக்கா உருண்டை என்று இனிப்பான வஸ்துக்களை திணித்துவிட்டு “என்ன பார்த்தே, சொல்லு…”

நீங்க சின்னாவுக்கு சிகிச்சை எதும் பண்ணலை என்றேன்.

பின்ன என்னவாம் அது?

வீரு சொல்றான் கொக்கோகமாம் அது…”

மாமிகிட்ட சொல்லாதே, சொல்லாம இருந்தா உனக்கு என்ன வேணும் சொல்லு? சொல்லுடா கண்ணு…”

நான் யோசித்து “எனக்கு சிங்க மார்க் பட்டாசு ஒரு சரம், ஒத்தை வெடி ஒரு டஜன், ரெட்டை வெடி ஒரு டஜன், கேப்பு துப்பாக்கி, குதிரைவால், தரைச்சக்கரம், ஊசிப்பட்டாசு, ராக்கெட், ஏரோப்ளேன், விஷ்ணு சக்கரம், லட்சுமி வெடி அப்புறம் பத்த வெக்க மட்டிப்பால் வத்தி என்று என் சக்திக்கேற்ப ஒரு பட்டியல் சொல்லிப் பார்த்தேன்.

அவர் எழுந்து அலமாரிக்குச் சென்று ஒரு காகிதத்தில் எழுதி “இதைக் கொண்டு போய் டி.பி.ஜி. கடையில கொடு. உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோ. ஆனால மாடில என்ன பார்த்தே?

ஓலைப் பட்டாசு காயப் போடறப்ப உங்களையும் சின்னாவையும்.

ஏய் யாரும் கேட்டா அங்க ஏதும் பார்க்கலைன்னு சொல்லணும் அப்பத்தான் பட்டாசு.

சரி மாமா என்றேன்.

சரி மாமா என்று என் தலையில் நெத்தினார்.

அந்த தீபாவளிக்கு நானும் வீரராகவனும் ஆசை தீர பட்டாசு வெடித்ததும் அல்லாமல், கார்த்திகைக்கும் நிறைய பாக்கி வைத்தோம். பாட்டி “ஏதுரா இத்தனை பட்டாசு? என்றதற்கு “நாங்கள்லாம் சேர்ந்து சந்தா கட்டி வாங்கினோம் பாட்டி என்று புளுகினேன்.

அடுத்த தினங்களில் நான எப்போது சந்தானமையங்காரை பார்த்தாலும் “இங்க வாடா என்று உள்ளே பரிவுடன் அழைத்து “சர்க்கரைப் பொங்கல் சாப்பிடறியா? வறுத்த பாதாம் பருப்பு வேணுமா? அரவணை வேணுமா? என்று தின்னக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

சில நாட்களில் தைரியம் பெற்று, “மாமா தெற்கு வாசல்ல புதுசா ஒரு பம்பரம் வந்திருக்கு. கோல் எடுத்தா கைல அப்படியே பூனைக்குட்டி மாதிரி தூங்கறது மாமா என்றால்

உடனே போய் ரெண்டு பம்பரமா வாங்கிக்கோ. தலையாரில குத்து பட்டா மாத்து பம்பரம் வேணுமோ இல்லையோ? என்பார். அப்புறம் மேலும் தைரியம் பெற்று நிஜ கிரிக்கெட் பந்து, ஸ்டம்ப் எல்லாம் கேட்டுக் கூடக் கொடுத்துவிட்டார்.

பெருந்தேவி மாமி “என்ன இப்படி இந்தப் பிள்ளைக்குச் செல்லம் கொடுக்கறீங்க? என்று கேட்டதற்கு “பையன் நன்னா படிக்கறான். அதுக்கு ஒத்தாசை பண்ணலாம்னு என்றார் என்னைப் பார்த்து கண் சிமிட்டி.

இவ்வாறு இனிதாகக் கழிந்து கொண்டிருந்த தினங்கள் அதிகம் நீடிக்கவில்லை. வீரு “ஒரு பார்க்கர் பேனா கேட்டுப் பார் என்று சொல்ல சந்தானமையங்கார் வீட்டுக்குள் சுதந்திரமாக நான் நுழைய மரவேலைப்பாடுகள் நிறைந்த கறுப்பு மேசை கண்ணாடியில் தெரிய விறுவிறுப்பாக தன்னை விசிறிக்கொண்டு சந்தானமையங்கார் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, பக்கத்தில் அவர் மனைவி பெருந்தேவி கோபத்துடன் அழுதுகொண்டிருக்க, அருகே ஓரத்தில் சின்னா வாயை முந்தானையால் பொத்தி அவளும் அழுது கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் மாமி “வாடா இந்த பிராமணன் செய்த அநியாயத்தை பார்த்தாயோ மொட்டை மாடில சின்னாவை கூட்டி வெச்சுண்டு…”

 ஏய் நீ போடா…”

ஏண்டி அந்த பிராமணன்தான் துப்புக்கெட்டு போய் உன் கையை புடிச்சான்னா உன் புத்தி எங்கடி போச்சு? இடுப்பொடிஞ்ச சக்களத்தி, நீ நல்ல பாம்புக்குட்டி, சக்கை திங்க வந்தவளே அதன் பின் “உனக்கு குளிர் காய்ச்சல் வர உனக்கு பாடை கட்ட என்று பலமாக திட்டியதில் சின்னா, “கிணற்றில் விழப் போகிறேன் என்று புறப்பட எனக்கு அழுகை வந்து விட “பாருங்கோ. இந்த பிள்ளை கூட வருத்தப்படறது. உங்களுக்கு வெக்கமா இல்லை ஓசிச் சிறுக்கி.

நான் அழுதது அதற்காக இல்லை. சந்தானமையங்காரிடம் என் ப்ளாக்மெயில் இப்படி திடீரென்று மதிப்பிழந்து போய் விட்டதே என்றுதான்!

அடுத்த தீபாவளிக்கு பழையபடி ஐந்து ரூபாய்க்கு ஓலைப்பட்டாசு, வேட்டுக் குழாய்தான்.

அந்த தீபாவளியை மறக்க முடியாது தான். அந்த வயசிலேயே எனக்கு கொஞ்சம் அவசரப்பட்டுக் கிடைத்த சில சில ஞானங்களால் அறியாச் சிறுவன் அறிந்த சிறுவனாகிவிட்டேன். அது என் பிற்கால வாழ்க்கையை எவ்வளவு தூரம் மாற்றிவிட்டது! என் பிழைப்பே இந்த மாதிரி மற்றவர் பற்றி தகவல் அவதூறு சேகரித்து விலை பேசுவதாகி, அதைப் பயன்படுத்திக் கொண்டு பணம் சேர்ப்பதாகி விட்டது.

எத்தனையோ பேரை என் நளின மூர்க்கங்களில் பயமுறுத்தி நிறையவே காசு சேர்த்து விட்டேன். இப்போது தீபாவளிக்கு என் இரண்டு மனைவியருக்கும் எட்டாயிரம் ரூபாயில் புடவை எடுக்கிறேன். என் பிள்ளைகள் தொடர்ந்து அறுபது நிமிஷம் வெடிக்கும் ஆயிரம் ரூபாய் சரமெல்லாம் வெடிக்கிறார்கள்.

நான் பண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டு, என் நாய்களுடன் பேசுகிறேன். “சீஸர், ரீட்டா அந்த தீபாவளியன்று சந்தானமையங்காரை மாடியில் பார்த்திராவிட்டால், நான் எங்காவது பி.காம். படித்து விட்டு ரயில்வே கிளார்க்காக நிம்மதியாக இருந்திருப்பேனே!

ஆம்! என் முதல் பொய், முதல் பெண் தரிசனம், முதல் பணம் பிடுங்கும் வழி எல்லாமே அந்த தீபாவளியில்தான் துவங்கி திருத்த முடியாமல் விகாரப்படுத்தப்பட்டேன்.

காரணம் – ஓலைப் பட்டாசு!