23/09/2012

விரகம் விளைத்த வீரம் - கோமான் வெங்கடாச்சாரி


கம்பன் ஒரு மேதை. ஆம். மேதையிலும் சிறந்த மேதை செயற்கரிய செய்பவன்தானே மேதை. சந்தர்ப்பச் சூழ்நிலைகளை வைத்துக்கொண்டு பொருந்தாத இடங்களிலும் பொருந்துமாறு ஒர் இலக்கியப் படைப்பை உருவாக்குபவனை மேதை என்று அழைக்க நாம் தயங்கவேண்டியதே இல்லையே?

இங்கே அவ்வாறான ஒர் சந்தர்ப்பம். இராமகாதையில் யுத்த காண்டம் சூழ்ச்சியும், போரும், படையும் விரவி வரவேண்டிய பகுதி. இவ்விடத்திலும் ஒரு விந்தை புரிகின்றான் கவிச்சக்கரவர்த்தி தன் அற்புதத்திறமையால். மரணஒலிகள் எழுப்பவேண்டிய யுத்தகாண்டத்திலே. மறலிக்கு இடம் அளிக்கவேண்டிய ஓர் பகுதியிலே மன்மதனுக்கு வேலை கொடுக்கின்றான் கவிமேதை கம்பன். என்ன மன்மதனுக்கு வேலையா? எங்கே? என்ன! இதோ அதைக் காண்போம். கம்பராமாயணத்திலே யுத்தகாண்டம், ஐந்தாவதாக உள்ள படலம் இலங்கை கேள்விப்படலம் என்பது. இலங்காபுரியின் இணையில்லாச்செல்வன் வீடணன் இராமனிடம் அடைக்கலம் புகுந்துவிட்டான். இனி அடுத்ததாக இலங்கையை அடையவேண்டியதுதான். இராமனும், இலக்குவனும் தங்களது வானரப்படைகளுடன் கடற்கரையில் தங்கியிருக்கிறார்கள். போதாதற்கு வீடணன் வந்து சேர்ந்திருக்கின்றான். இலங்கையை அடையவேண்டுமென்றால் இடையே அகன்று பரந்து நிற்கும் கருங்கடல் இடையூறாக நிற்கிறது.

மாலை நேரம். இப்போதெல்லாம் இராமன் மன அமைதியை நாடி தனியே உலாவுவது வழக்கமாகிவிட்டது. அதுபோல் இப்போதும் இராமன் கடற்கரையில் நுண்ணிய வெண்ணிய மணற்பரப்பில் அமர்ந்து கருங்கடலையும் அதில் இடைவிடாது எழும்பி கரையில்வந்து மோதிச்செல்லும் வெண்ணிற அலைகளையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

பகலவன் மேற்குதிசையில் சென்று மறைகிறான். வானம் தீநிறம் கொண்டு செவ்வானமாக காட்சியளிக்கிறது. சற்றைக்கெல்லாம் அந்தச்செவ்வானம் மறைந்து எங்கும் கரிய இருள் கவ்விக்கொள்கிறது. அரக்கர்கள் மாயையைப்போல் இருளில்தான் நோயாளிகளுக்கு நோயின்மிகுதி தோன்றும். இது உலக இயற்கை. அதும்டடும்தானா? இருள் தானே இடையூறுகளுக்கெல்லாம் தோழன். சனகக்குமாரியை பிரிந்து வாடும் சக்கரவர்த்தித்திருமகனின் மனதில் ஏற்ப்பட்டுள்ள வலியை மேலும் அதிகரிக்கச் செய்ய விரும்பியவன் போல் அநங்கனும் வந்து சேர்ந்தான் அவ்விடத்திற்கு.

வானத்தில் படர்ந்த காரிருள் கடல் நீரையெல்லாம் கொள்ளைக் கொண்டு வேறொரு புதிய தடாகத்தை உண்டு பண்ணியதுபோல் பிரமிக்கத்தக்க வகையில் காட்சியளிக்கிறது. அதற்கேற்றார் வகையில் வானத்தின்கண் படர்ந்திருந்த விண்மீன்கள் அந்தப் பெரும் பொய்கைக்கண்ணே படர்ந்திருந்த மலர்களை நிராகரித்து காணப்படுகின்றன.

எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது. இருளில் மல்லிகை மலர்வது இயற்கை. இயற்கையின் நியதியின்படி அக்கடற்கரையின் அருகிலிருந்த மல்லிகை காட்டில் உள்ள மல்லிகை மொட்டுகள் நன்கு மலர்கின்றன. அவை வானத்தோடு போட்டி போடுவதுபோல் காட்சியளிக்கின்றன. வானமே உன்னிடம் இருப்பவை மனமற்ற பூக்கள் என்னிடம் இருப்பவை மனமுள்ளப் பூக்கள் நீ என்னை விட எந்தவகையில் சிறந்தவன்? என்று வானத்தை பார்த்துக் கேட்பதுபோல் மல்லிகைவனம் மனம் பரப்பி வருகின்றது. அதன் நறுமனம் இராமனின் நாசியிலும் சென்று தாக்குகிறது. அந்த இராமனோ மல்லிகையினால் அலங்கரிக்கப்பட்ட கரிய கூந்தலையுடைய சானகியின் பிரிவாற்றாமையால் துடிதுடித்துக்கொண்டிருக்கின்றான். அவனுடைய துயரத்தை மேலும் அதிகரிக்கும்படி அமைகிறது மல்லிகையின் வண்டு தீண்டா நறுமனம். அந்தச்சூழ்நிலையில் கீழ்த்திசையில் கருங்கடல், வானவளையும் வலிய வந்து தவழும் விளிம்பில் கடலிலிருந்து கிளம்புகிறது நிலா. நிலா என்றால் எப்படி - பால் சொரியும் வெண்ணிலா. கருங்கடலின் அடித்தளத்திலிருந்து கிளம்புகிறான் வெண்ணிலா. இந்தச்சமயத்தில் வெண்மதி கிளம்புவானேன். அதற்கும் ஒரு காரணம் இல்லாமல் இல்லை.
மிதிலைச்செல்வியாகிய மைதிலியைப் பார்த்து இன்புற்று இராமன் வெண்ணிலாவை ஒரு பொருட்டாக பார்த்ததில்லையாம். சீதையின் முகத்திறகு நிலவு எந்த விதத்தில் ஈடுகொடுக்கமுடியுமென்று இராமன் அகம்பாவம் கொண்டிருந்தானாம். இப்பொழுது அந்த சீதையை பிரிய நேரிட்டுவிட்டதே, இப்பொழுது என்னை அவமதிப்பாயா? என்று கேட்பதுபோல் வெண்ணிலா தன் முழுச்சோபையுடன் கடலினின்றும். கீழ்த்திசையினின்றும் கிளம்புவதுபோல் காட்சியளிக்கிறது. பழிக்குப்பழி வாங்கும் பாவனை, நிலவின்கண் தோன்றுகிறது. அதிலும் பகைவன் தாழ்ச்சியடைந்திருக்கும்போது எதிரி தன் வலிமையை அதிகம் காட்ட முற்படுவான்.

நிலவைக் கண்ட இராமனின் வருத்தம் அதிகமாகிறது. நிலவுப்பெண்ணுக்கு இராமனின் பால் இரக்கம் உண்டாகிறது. பாவம் நம்மால் இயன்ற உதவியை இராமனுக்குச் செய்வோம் என்று எண்ணினாளாம் நிலவுப்பெண். கருங்கடலை நோக்கி சீதையின் பிரிவாற்றாது ஏங்கி உட்கார்ந்திருக்கும் இராமனுக்கு உதவி செய்ய எண்ணியதே போல் தன்னுடைய குளிர்ச்சி பொருந்திய கிரணக்கரங்களின் வலையை கடலின் மேல் வீசியதைப்போல் எழுந்து நின்றது நிலா.

நிலவைக் கண்ட கடல் பொங்கி எழுவது இயல்பு. இதற்கும் ஒரு காரணத்தை கற்பிக்கிறான் இந்த இடத்தில் கவிச்சக்கரவர்த்தி. இராமன் கருநிறம் கொண்டவன் - அதாவது கருங்கடல் நிறத்தவன். இப்போது இலங்கைக்குச் செல்லும் வகையையெண்ணித் தன் கரையில் வந்தமர்ந்திருக்கும் இராமன் தன் கருநிறத்தைத் தான் ஏற்கனவே கொள்ளைக் கொண்டது போதாதென்று தன் மேல் அணைகட்டவும் திட்டமிடுகிறானே என்று மனம் கொதித்தெழுவதை போல் கரையை நோக்கி தன் அலைக்கரங்களை வீசிக்கொண்டு ஆரவாரம் செய்கிறானாம். எப்படி கவியின் கவித்திறம்?...

நுண்ணிய வென்மணற்பரப்பு, அலைமோதும் கருங்கடல், வானத்தில் விரைந்து வரும் நிலவொளி, பக்கத்திலுள்ள மல்லிகைக்காட்டில் இருந்து வீசும் நறுமணம், இத்தனையும் தாண்டிக்கொண்டு அருகேயுள்ள பொதியமலையிலிருந்து புறப்பட்டது தென்றல் என்னும் புலி. சாதாரணமாகவே வருகிறது. சீறிக்கொண்டு வருகிறது. தனது வாயைத்திறந்தபடி கோரப்பற்களைக் காட்டிக்கொண்டு இராமனை தின்றொழிக்கும் திட்டத்தோடல்லவா வருகிறது?...

இந்தத் தென்றலுக்கு இளைத்துவிடக்கூடியவன் அல்லன் இராமன் என்பது உண்மைதான். ஆனால் தென்றல் மட்டும் வந்திருந்தால் சமாளித்திருக்கலாமே. அதன்பின் இன்னொன்றும் வருகின்றதே....
இங்குதான் கம்பனின் மேதை நன்குப் புலனாகிறது. இராமனைக் கண்டு கவி இரங்குகின்றான். கவி மட்டுமா இரங்குகின்றான்., நாமும்தான் இரங்குகின்றோம். நாமாகவா இரங்குகின்றோம்., நம்மை இரங்கும்படி செய்துவிடுகின்றான் கவிச்சக்கரவர்த்தி தன்கவி புனையும் திறனால்.

இராமன் சாமானியனா? அரிய பெரிய செயல்களையெல்லாம் ஆற்றியுள்ளவன் தானே அவன். அவன் ஆற்றிய அரும்பெரும் செயல்களையெல்லாம் நினைவு கூர்கிறான் கவி. நம்மையும் நினைத்துப்பார்க்கும்படி செய்கிறான். (மறந்திருந்தாலல்லவோ நினைப்பதற்கு) வாலியைப்பற்றியும் அவனது வீரத்தைப் பற்றியும் நாம் நன்கு அறிவோம். முன்பொரு சமயம் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமுதம் அடைவதற்காக பெரும் பரப்புள்ள பாற்க்கடலை கடைந்தார்கள். அமுதம் கிடைத்தது. தேவர்கள் உண்டனர் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் தேவர்கள் அமுதம் உண்டு மகிழ்வதற்கு உறுதுணையாக அவர் பக்கம் நின்று தன் வலிய கரங்களால் பாற்க்கடலைக் கடைந்த வரலாற்றைப் பலர் அறிந்திருக்கமுடியாது. வாலி மட்டும் இல்லாமலிருந்தால் தேவர்களுக்கு அமுதம் கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம்தான். அத்தனை வலிய கரங்களை உடையவனாம் அந்த வானரத்தலைவன். அவனது கரங்களின் வலிமையை பற்றிப் பேசும்போது அவனுடைய உடல்வலிமை எத்தகையதாய் இருக்கவேண்டும் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாம். அந்த வாலியின் வலிமை கடைசியில் என்ன ஆயிற்று. இராமனின் ஒரு சரத்தினால் ஓய்ந்துவிட்டதே. அதை நினைவிற்குக் கொண்டுவரும் கவி அதோடுவிடாமல் வேறொரு நிகழ்ச்சியையும் நமக்கு நினைவூட்டுகிறான். பஞ்சவடியில், இராம இலக்குவனர்கள் சீதையோடு இருந்த சமயம் சூர்ப்பனகை அங்குவந்து சீதையைத் தூக்கிச்செல்ல முயற்சிக்கும்போது இளையவனால் அங்கஹீனம் செய்யப்பட்டு கரனிடத்தும், தூடணனிடத்திடமும் சென்று முறையிட அன்னவர்களும் தங்கள் பெரும் படையுடன் இராமனைப் பொற வந்த காலை இலக்குமனைச் சானகிக்குத் துணையாக வைத்துவிட்டு இராமன் ஒருவனாகவே தனியாகச் சென்று கரதூடணர்களையும் அவர்களது பெரும்படையையும் தொலைத்து விட்டு வெற்றி வீரனாகத் திரும்பி வந்ததையும் நமக்குக் கவணப்படுத்துகிறான் கவி.

இவைமட்டும்தானா இராமனின் ஆற்றலுக்குச் சான்றுகள். நீண்டு வானையளாவி நின்ற மராமரத் தொகையை துளைத்துக் கொண்டல்லவா இராமபாணம் சென்று வாலியின் மார்பில் இறங்கியது. மராமரத்தை துளைத்த வீரத்தை என்னவென்று கூறுவது. இந்தச் சம்பவங்களையெல்லாம் நினைவு கூர்கின்றார் கவி., பாடல் எழுகின்றது.

கரத்தாடும் பழிமாக்கடல் கடைந்துளானு
ரத்தோடும் கரனொடு முருவவோங்கிய
மரத்தொகை துளைத்தவன் மார்பில் -

பாடல் இன்னும் முடியவில்லை. அதற்குள்ளாகதான் ஒரு அதிர்ச்சியை உண்டாக்கிவிடுகிறானே கவி. வாலியைக் கொன்ற வலியக்கரங்கள், கரனைக் காலன் வசம் அனுப்பிய கவினுறு கரங்கள், மராமரம் ஏழும் துளைத்த மந்தயானையின் மதம்நிகர் மலர்க்கரங்கள் இவைகளை தாங்கிவிடும். ஆனால் இராமனின் மார்பு வலி?... எல்லாவற்றையும் நாம் ஒருங்கே உணர்ந்து அனுபவித்து வரும்போதே அந்த மார்புக்கு ஏதோ ஊறு நேர்ந்துவிட்டது என்பதைக் கூறாமல் கூறுகிறானே கவி., இராமனின் மார்புக்கு என்ன நேர்ந்தது?
ஓர் அகிலஉலகப் புகழ்ப்பெற்ற மல்யுத்த வீரனைப்பற்றிய வாழ்க்கைவரலாற்றில், மேற்படி வீரர் அமெரிக்காவில் ஆறு பேரை வென்றார், ஜெர்மனியில் பத்து வீரர்களை மண்டியிடச் செய்தார், ஜப்பானில் பத்து பயில்வான்களை பயந்து ஓடச்செய்தார் ஆனால் இந்தியாவில்,...... என்று சொல்வதானால் அந்த மாபெரும் வீரருக்கு இந்தியாவில் ஏதோ எதிர்பாராதத் தோல்வி ஏற்ப‌ட்டுவிட்டது என்றல்லவா எண்ணத் தோன்றும். அதேபோல் வாலியை வலி தொலைத்த மார்பு, கரனைக் கலங்க வைத்தமார்பு, வலிய நெடிய மராமரங்களைத் துளைத்த நீண்டுநிமிர்ந்த மார்பு இராமனுடைய மார்பு என்று கூறி, அந்த மார்பில் ..... என்று இரக்கம் தோன்றக் கூறிய கவி, மேலே என்னச் சொல்லப் போகிறானோ, அந்த மார்புக்கு என்ன ஊறு நேர்ந்துவிட்டதோ என்று யார்தான் வருந்தாமல் இருக்கமுடியும். இராமனின் மார்புக்கு என்ன நேர்ந்தது? கவியையே சொல்லச் சொல்லிக் கேட்போம்....

மார்பில் மன்மதன் சரத்தொடும் பாய்ந்தன நிலவின் தாரைவான்

என்று முடிக்கும் கவியின் சாமர்த்தியம் போற்றப்படவேண்டிய ஒன்றுதானே. தென்றலின் உதவியோடு அங்குவந்த மன்மதன் கீழ்க்கடலில் தோன்றிய நிலவின் வெள்ளிய கதிர்கள் மூலம் தன் சரங்களைப் பாய்ச்சி விட்டானாம். இராமனின் மார்பிலே, எத்தனையோ வீரச்செயல்களைப் புரிந்த வலிமை மிக்க மார்பிலே மன்மதனின் கொடியக்கணைகள் - நிலவின் கதிர்வழி சென்று தாக்கியபோது கலங்கிவிட்டானாம் இராமன். அவன்பால் அன்பு கொண்ட எவருமே இரங்கவேண்டிய ஒரு முக்கிய நிகழ்ச்சிதானே இது. இதையும் எத்துனை அழகாக எத்துனை கவிநயத்துடன் நமக்குச் சித்தரித்துக் காட்டுகிறான். இதுதான் கம்பமேதை என்பது.

பின்னர் என்ன நடக்கிறது என்பதை நோக்குவோம். இவ்வாறு தென்றலினாலும் நிலவின் குளிர்ச்சிமிக்க நிலாக்கற்றைகளின் வழித்தன் மார்பில் தைத்த அருங்கனின் மலர்க்கணைகளாலும் தாக்கப்பட்ட காரணத்தால் உடல் மெலிந்த இராமன் தன் உடலை ஓவியத்துக்கும் எழுதவொன்னாத தன் வடிவழகமைந்த உடலை நோக்குகிறான். உடல் நோக்குவான் என்று கவி கூறும் சொல்லில் எத்தனை கருத்து மிளிர்கின்றது என்பதை அறியும் போதே உடல் புல்லரிக்கிறது. இராமன் எதற்காக உடலை நோக்குகிறான் எதற்கும் ஈடுகொடுக்கும் தன் நெடிய வலிய கரங்களும் அவைகளைத் தாங்கி நிற்கும் தன் பரந்த மார்பும் காமன் கனையால் தாக்கப்பட்டு வலியிழந்து நிற்கும் காரணத்தையறிந்து கொண்டானாதலின் அத்தன்மையினால் ஏற்பட்ட மெலிவு தன்னை வருத்தத் தன் உடலை நோக்குகிறான் அவன். இந்த தன் நிலைக்குக் காரணம், தன் உயிருக்குயிரான சீதையைப் பிரிந்து நிற்பதுதானே என்று ஓர் உணர்வு அவனுள் எழுகிறது. தனக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய் தீரவேண்டுமானால் அதற்கான ஒரே மருந்து சீதைதான். அவளை அடைந்தால்தான் தன் நோய் தீரும்., அதனால் தான் தன் உயிரை நோக்கினானாம். அந்த உயிர் தான் அவனிடம் இல்லையே. இலங்கையின் நடுவில் அல்லவா இருக்கிறது. உயிரைப்பற்றிய உணர்வு வந்தவுடன் தன் உயிரான சீதையின் பிரிவு உள்ளத்தை வாட்டுகிறது. தன் உயிரினைய சீதைத்தன் உடலில் வந்து பொருந்தவேண்டுமாயின் அவன் இலங்கையை அடையவேண்டும். அது அத்தனை எளிதாக நடந்தேற கூடியதல்லவே.. நடுவில் அலைமோதி ஆர்ப்பரிக்கும் கருங்கடலல்லவா இடையூறாக நிற்கிறது. ஆகவே கடலினை நோக்குகிறான் அவன். கடலினை நோக்கும் என்று சுருங்கச்சொல்லி நம்மை விளங்க வைக்கும் அற்புதத்திறமை பெற்றவனல்லவா கம்பன். கடலினைத் தன் அகன்று விரிந்த கண்கள் கொண்டமட்டும் கூர்ந்து பார்த்த இராமனுக்கு அக்கடலினிடையே வெகுதொலைவில் காணப்படும் இலங்கைத்தீவு தென்படுகிறது.! ஆ! அங்கே அல்லவா தன் உயிர் இருக்கிறது. அந்த உயிர் தன்னைவிட்டுப் பிரிந்து தானாகவேவா அங்கு சென்று தங்கியிருக்கிறது. அல்லவே. அந்தப் பகைவனாகிய இராவணன் அல்லவா தன் உடலினின்றும் தன் உயிரைப் பிரித்து எடுத்துச்சென்று அந்தத் தீவில் சிறை வைத்திருக்கிறான். இலங்கைக் கண்ணில் பட்டதும் தன் உயிருக்குயிரான சீதையைக் கவர்ந்துச் சென்ற அந்தக் கள்வனின் நினைப்பு வந்துவிடுகிறது அவனுக்கு. இராவணனின் நினைப்பும், இலங்கைத்திடலின் காட்சியும் தன் மனதில் எழுந்தவுடன் இராமனின் உணர்ச்சி எங்கனம் பொங்கி எழுந்திருக்க வேண்டும்? உடனடியாகச் செய்யவேண்டி வினையாது? கடலினைக் கடந்துச்சென்று இலங்கையை அடைந்து, இராவணனைக் கொன்று - இவ்வாறு எண்ணும்போதே அந்த வீரனாகிய சக்கரவர்த்தித்திருமகனுக்குத் தன் வில்லின் கவணம் வருகிறது. அது அந்த வில் - இதுவரை தன்னிடம் இருந்ததைத்தன் விரகதாபத்தால் உணரமுடியாத நிலமையிலிருந்த அவனுக்கு இப்போது நினைவிற்கு வந்துவிடுகிறது. அவனுள் எழுந்த விரக தாபமே அவனுக்கு வீர உணர்ச்சியையும் எழுப்பி அவன்பால் இருந்து பணியாற்றத்துடித்துக் கொண்டிருக்கும் வில்லினையும் உணர்த்திற்று. உடனே அவன் தன் வில்லைப் பார்க்கிறான். இந்த வில்லின் ஆற்றல் என்ன? எத்தனை அரிய சாகசங்கள் இதன் மூலம் ஆற்றியிருக்கிறான். அவ்வாறிருக்க இந்த வில் என் பக்கத்திலிருக்க நான் கலங்கி வாடுவது சரியா? என்று அவனையே எண்ணச்செய்துவிட்டது அவனுள் உருவான விரபதாபம்.
இப்பொழுது முழுக்கவியையும் பார்ப்போம்.

உடலினை நோக்கு மின்னுயிரை நோக்குமால்
இடரினை நோக்குமற்றியாது நோக்கவன்
கடலினை நோக்குமக் கள்வன் வைகுறும்
திடரினை நோக்குந்தன் சிலையை நோக்குமால்

காமனின் சுடுசரங்கள் இராமனின் திண்ணிய மார்பகத்தே பாயவும்,, நிலவும், தென்றலும், கடலும் அவனுக்குத் தன் உயிருக்குயிரான சீதாப்பிராட்டியை நினைவுறுத்தி மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தவும் அதனால் ஏற்பட்ட விரக தாபத்தினால் துயருற்ற இராமன் தன் மெலிந்த உடலையும், தன் உயிர் தன்னைவிட்டுப் பிரிக்கப்பட்டு கடலின் நடுவேயுள்ள திடரின் நடுவே அந்தக் கள்வனால் சிறைவைக்கப்பட்டிருப்பதையும், அக்கள்வனூருக்குச் செல்வதற்கு எதிரிலுள்ள கருங்கடல் ஓர் பெரும் இடையூறாக நிற்பதையும் உணர்ந்த இராமன் சீதையின் மதிமுகம் தோன்றித் தன்னை அழைப்பதால் எவ்விதத்தும் இலங்கை சென்று இன்னுயிராகிய சீதையை மீட்டு அழைத்து வருவதுதான் தான் உடனடியதாகச் செய்யவேண்டிய செய்கை என்பதை நன்குணர்த்தும் தன்னிடமுள்ளதன் பாரமிகு சிலையை நோக்கினான் என்று கூறும் புலமையைப் புரிந்துகொள்ளும் திறனையாவது நாம் அடைவோமாக. விரகம் விளைத்த வீரத்தைக் கண்கூடாகக் காணச் செய்து அதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் நாம் முன்கூட்டியே உணரும்படி செய்து நம் உள்ளத்தை உணர்ச்சி வசமாக்கும் பணியில் கம்பனைப்போல் செயல்படுத்த வேறு யாரால் முடியும்...

வாழ்க கம்பமேதை !!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக