30/09/2012

அசோகர் கல்வெட்டு - யுவ கிருஷ்ணா


எங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர் வீட்டுத் தோட்டம் சரியாகப் பராமரிக்கப் படாமல் எப்போதும் புல்லும் பூண்டும் மண்டிக்கிடக்கும். இன்று காலை நான் அலுவலகத்துக்கு வரும்போது, அந்தத் தோட்டத்தை நடுத்தர வயதுடைய ஒருவர் கடப்பாரை, மண்வெட்டிகொண்டு, ஒழுங்குசெய்துகொண்டு இருந்ததைப் பார்த்தேன். கொஞ்சம் கூன் விழுந்த அந்த நடுத்தர வயது மனிதரை எங்கோ பார்த்ததாக நினைவு. பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவரைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் செய்தேன்.

யாரோ ஒருவர் சம்பந்தம் இல்லாமல் நின்று சிரிப்பதைப் பார்த்த அந்த நபர், 'இன்னா சார்... உங்க வூட்ல ஏதாச்சும் வேலை இருக்கா?'' என்று திக்கித் திக்கிப் பேசினார். குரலைக் கேட்டதுமே அடையாளம் கண்டுகொண்டேன். அது அமல்ராஜேதான்!

அமல்ராஜ் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பரங்கிமலை ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. ஐந்தாவதுக்குப் பிறகு, தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். பையன்களுக்கு 'ஏ செக்ஷன். பெண்களுக்கு 'பி செக்ஷன். 'ஏ செக்ஷனில் மட்டுமே 106 பேர். முதல் வரிசையில் நான் அமர்ந்து இருந்தேன். எனக்கு அருகில் கொஞ்சம் கூன் போட்ட ஒரு பையன் உட்கார்ந்து இருந்தான். அவனை அதுவரை பார்த்தது இல்லை. அவன் மடிப்பாக்கம் பஞ்சாயத்துப் பள்ளியில் இருந்து வந்திருந்தான். பார்த்ததுமே தெரிந்துகொள்ளலாம், அவனுக்கு வயதுக்கு ஏற்ற போதுமான மூளை வளர்ச்சி கிடையாது என்பதை.

சீருடை என்கிற விஷயம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதே, மாணவர்களுக்குள் வேற்றுமை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால், அதில் கூட நுண்ணிய அளவில் வேறுபாடு இருப்பதை அரசுப் பள்ளிகளில் தெரிந்துகொள்ளலாம். ஏழை மாணவர்கள் காட்டன் சட்டை போட்டு இருப்பார்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கத்துப் பையன்கள் டெரிகாட்டன் அணிந்து இருப்பார்கள். வசதியான வீட்டுப் பையன்கள் பாலியஸ்டர் அல்லது சைனா சில்க் அணிந்து இருப்பார்கள்.

அமல்ராஜ், சைனா சில்க் சட்டை அணிந்து இருந்தான். நான் வெள்ளை டெரிகாட்டன் சட்டையும் பிரவுன் நிற டவுசரும் அணிந்து இருந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, அவனுக்கு 16 வயது இருக்கும். வகுப்பில் பேன்ட் அணிந்து வந்தவன் அவன் மட்டும்தான். அவனுடைய அப்பா, அப்போது ஊரில் பெரிய ஆள். நிலம் நீச்சு, பரம்பரைச் சொத்து என்று கொஞ்சம் தாராளமாகவே இருந்தது. அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்தின் மூத்த மகன் நம்ம அமல்ராஜ்.

புதிய நோட்டையும் புத்தகங்களையும் முகர்ந்து பார்த்தபோது வந்த வாசனையும், முதல் நாள் வகுப்பு தந்த மகிழ்ச்சியும் இன்னமும் மனதில் ஓரமாக இருக்கிறது. சொர்ணாம்பிகை மிஸ்தான் கிளாஸ் டீச்சர். முதல் நாள் என்பதால், பாடம் எதுவும் எடுக்கவில்லை. டேபிளில் இருந்த நொச்சிக் குச்சிக்கும் வேலை இல்லை.

கதைக்கு இடையே சின்ன இடைச் செருகல்...

நொச்சி என்பது மரமாகவும் வளராமல், செடியாகவும் குறுகிப்போகாமல் வளரக்கூடிய ஒரு தாவரம். நொச்சிக் குச்சி வளைந்து கொடுக்கும் தன்மைகொண்ட, உறுதியான கொம்பு. எருமை மாடு ஓட்டுபவர்கள் நொச்சிக் கொம்பைப் பயன்படுத்துவதைக் கிராமங்களில் காணலாம். இந்தக் குச்சியைவைத்து நுங்கு சைக்கிள் தயாரித்தால், பலன் அமோகம். நொச்சியின் இலை நல்ல வாசனை கொண்டது. காய்ந்த நொச்சி இலைகளை நெருப்பில் எரித்தால் யாகங்களில் வருவதுபோல வெண்மையான புகை வரும். இந்தப் புகை, கொசுக்களையும் பூச்சிக்களையும் அழிக்கவல்லது.

அப்போது எல்லாம் வகுப்பறை டேபிளில் தினமும் ஒரு புதிய நொச்சிக் குச்சி தயாரித்து வைக்க வேண்டும். இதற்காக வாத்தியார்களின், டீச்சர்களின் அல்லக்கை மாணவர் யாராவது வகுப்புக்கு ஒருவர் இருப்பர். அந்த அல்லக்கை வேலையை எட்டாவது வரை நான் செய்து வந்தேன். எட்டாவதுக்குப் பிறகு, பொறுக்கிப் பசங்க பட்டியலில் நான் சேர்ந்துவிட்டதால், பத்மநாபனோ வேறு யாரோ டீச்சருக்கு அல்லக்கையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். நொச்சிக் குச்சிக்கு டிமாண்ட் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக, நுணா மரத்தின் கிளையை உடைத்து, பிரம்பு தயார் செய்துவைக்க வேண்டும். கறு நிற நுணாம்பழம் சுவையாக இருக்கும். ஆனால், வாசனை அவ்வளவு சிலாக்கியமாக இருக்காது!

ஓ.கே. கமிங் பேக் டு தி பாயின்ட்...

சொர்ணாம்பிகை டீச்சரின் வகுப்பு  முடிந்ததுமே ஒல்லித் தமிழய்யா வந்தார். ஒல்லித் தமிழய்யா ரொம்ப ஜாலியான ஆள். டைமிங் கமென்ட்கள் அடிப்பதில் கில்லாடி. கோபம் வந்துவிட்டால் மட்டும், நொச்சிக் குச்சி பிய்ந்துபோகும் அளவுக்கு விளாசிவிடுவார். குச்சியே பிய்ந்துவிடும் என்றால், அது பிய்யக் காரணமான முதுகின் கதி என்னவென்று சொல்ல வேண்டியது இல்லை.

அன்று வகுப்புக்கு வந்த ஐயா எல்லோரையும் உயிரெழுத்து, மெய் எழுத்து எழுதச் சொன்னார். உயிர் எழுத்துக்களை வரிசையாக எழுதிவிட்டேன். மெய்யெழுத்து எழுதும்போது, மட்டும் கொஞ்சம் திணறிப்போனேன். எல்லார் நோட்டுக்களையும் வரிசையாக நடந்தவாறே கவனித்து வந்த ஐயா, அமல்ராஜின் நோட்டைப் பார்த்து உலகையே வெறுத்து விட்டார். அவன் எழுதியதில் ஒன்றுகூட சத்தியமாகத் தமிழில் இல்லை. அது எந்த மொழி என்று ஐயாவால்கூடக் கண்டு பிடிக்க இயலவில்லை.

''என்னய்யா இது? அசோகர் கல் வெட்டை அப்படியே பார்க்குறது மாதிரி இருக்கே?'' என்றார்.

அமல்ராஜ் அமைதி காத்தான். அவனுக்கு லேசாகத் திக்குவாய். வேகமாகப் பேச முடியாது.

''ஏன்டா, கேட்டுக்கிட்டு இருக்கேன். உன்னால பதில்கூடச் சொல்ல முடியாதா... வாய்ல என்ன கொழுக்கட்டையா?'' என்றவாறே நொச்சிக் குச்சியை எடுத்தார். பக்கத்தில் இருந்த பையன், ''ஐயா, அவனுக்குச் சரியாப் பேச வராது'' என்றான்.

''சரி... உன்னோட பேரை நோட்டுல எழுது!'' என்றார், ஐயா கண்டிப்பான குரலில்.

அமல்ராஜ் எழுதியது மீண்டும் அசோகர் கல்வெட்டு மாதிரியே இருந்தது. அமல்ராஜால் அவன் பெயரைக்கூட எழுத முடியவில்லை என்பதுதான் சோகம்.

''நீயெல்லாம் எப்படிடா ஆறாம் கிளாஸ் வந்தே?'' என்று கோபமாகக் கேட்டவாறே நொச்சிக் குச்சியால் அடித்து விளாசிவிட்டார் ஐயா. முதுகிலும் உள்ளங்கையிலும் ஏராளமான அடிகளைப் பொறுமையாக வாங்கிய அமல்ராஜ், ஒரு சின்ன எதிர்ப்புக்கூடத் தெரிவிக்கவில்லை. சிலை மாதிரி உணர்ச்சிகளைக் காட்டாமல் மௌனமாக வந்து அமர்ந்தான். அவனது கையைப் பிடித்துப் பார்த்தேன். சிவந்து போய் ரத்தம் கட்டியிருந்தது. அமல்ராஜைப் பார்க்க ரொம்பப் பாவமாக இருந்தது.

மறு நாள் காலையில் ஹெட்மாஸ்டர் ரூம் அல்லோலகல்லோலப்பட்டது. அமல்ராஜின் அப்பா அவரது உறவினர்களோடு வந்து, மகன் அடிபட்டதற்காக நீதி கேட்டுக்கொண்டு இருந்தார். அவனால் அ, ஆ என்றுகூட எழுத முடியவில்லை என்று சொன்ன தமிழய்யாவின் நியாயம் சுத்தமாக எடுபடவில்லை. ''அதைச் சொல்லிக் கொடுக்கத்தான் உங்ககிட்டே அனுப்புறேன்!'' என்று அமல்ராஜின் அப்பா அழும்பு செய்தார். ''ஆறாம் கிளாஸ்ல எப்படிங்க அ, ஆ, இ, ஈ கத்துக் கொடுக்க முடியும்?'' என்று ஐயாவின் கேள்வியை அவர்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்தார்கள். கடைசியாக, தமிழய்யா நொந்துபோய் மன்னிப்பு கேட்டதாக நினைவு.

அன்று முதல் அமல்ராஜை எந்த வாத்தியாரும், டீச்சரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவன் பாட்டுக்கு வகுப்புக்கு வருவான். கடைசி வரிசையில் மந்தமாக உட்காருவான். ஏதோ எழுதுவான். பரீட்சைகூட அசோகர் கல்வெட்டு மொழியில்தான் எழுதுவான். எப்போதுமே எல்லா பேப்பரிலுமே மார்க் 'ஜீரோதான். ஓரிரு டீச்சர்கள் பரிதாபப்பட்டு ஐந்தோ, பத்தோ ரிவிஷன் டெஸ்டில் தந்ததும் உண்டு.

மற்ற பையன்களைப்போல விளையாட்டிலும் அமல்ராஜுக்கு ஆர்வம் இல்லை. அவனுடைய சைனா சில்க் வெள்ளைச் சட்டையில் மட்டும் ஒருநாள்கூட நான் அழுக்கைக் கண்டது இல்லை. பாட்டா செருப்புதான் அணிவான். கையில் கோல்டு கலர் வாட்ச் கட்டி இருப்பான். கழுத்தில் தடிமனான செயின். விரல்களில் மோதிரம் என்று மிருதங்க வித்வான் கெட்- அப்பில் அசத்துவான்.

தமிழய்யா அவனது எழுத்தை 'அசோகர் கல்வெட்டு என்று விமர்சித்து இருந்ததால், அவனை மற்ற மாணவர்களும் 'அசோகர் கல்வெட்டு என்றே பட்டப் பெயர் வைத்து அழைத்தோம். அமல்ராஜ் என்று அட்டெண்டென்ஸில் அழைப்பதோடு சரி. தமிழய்யா அட்டெண்டன்ஸ் எடுத்தால் அமல்ராஜ் என்று சொல்ல வேண்டிய நேரத்தில்கூட 'அசோகர் கல்வெட்டு என்றுதான் குசும்பாகச் சொல்வார். அமல்ராஜால் உடனே 'உள்ளேன் ஐயா சொல்ல முடியாது. கையை மட்டும் தூக்கிக் காட்டுவான்.

ஆறாம் வகுப்பில் 105 பேர் தேர்ச்சி பெற்றார்கள். வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே மாணவன் அசோகர் கல்வெட்டு மட்டுமே. காரணம், சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

நான் ஏழாம் வகுப்புக்குப் போன பின்பு, அசோகர் கல்வெட்டைப் பார்ப்பது குறைந்துபோனது. எப்போதாவது பார்த்தால் சினேகமாகச் சிரிப்பதோடு சரி. அவனுக்கு மூடு இருந்தால், பதிலுக்குச் சிரிப்பான். இல்லை என்றால், உர்ர் என்று போய்விடுவான்.

பள்ளிக் கட்டடம் கட்ட நிதி திரட்டிய போது அமல்ராஜின் அப்பா பெருத்த தொகை ஒன்றை அளித்தார் என்று கேள்விப்பட்டேன். வகுப்புகள் மாற மாற, அசோகர் கல்வெட்டையே சுத்தமாக மறந்துவிட்டோம். ஓரிரண்டு ஆண்டுகளில் பள்ளியைவிட்டு, அவன் நின்றுவிட்டான் என்று நினைக்கிறேன்.

ஃப்ளாஷ்பேக் ஓவர்

என்னோடு ஆறாம் வகுப்பு படித்த அதே அமல்ராஜ்தான் இன்று காலை ஐயர் வீட்டில் தோட்ட வேலை செய்துகொண்டு இருந்தவன். அழுக்கான லுங்கி அணிந்து இருந்தான். சட்டை இல்லை. வியர்வையில் உடல் நனைந்து இருந்தது. உழைப்பின் பலனால் ஆர்ம்ஸ் கொஞ்சம் வெயிட்டாக இருந்ததுபோலத் தெரிந்தாலும், கூன் போட்ட முதுகால் சுத்தமாக அவன் தோற்றத்துக்குக் கம்பீரம் இல்லை.

''நான்தான்டா குமாரு... உங்கூட ஆறாவது படிச்சேனே?''

அவனால் நினைவுபடுத்திப் பார்க்க இயலவில்லை. பொத்தாம் பொதுவாகச் சிரித்தான். அவனுக்கு வயது இப்போது 33 அல்லது 34 ஆக இருக்கலாம். ஆனால், 45 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருக்கிறான்.

''ஞாபகமில்ல!''

'பரவாயில்லை அமல். நல்லா இருக்கியா?'

'ம்ம்ம்... நல்லாத்தான் இருக்கேன். கட்டட வேலை பார்க்குறேன். வேலை இல்லாத நாள்ல இதுமாதிரி தோட்ட வேலையும் செய்வேன்.'

முன்பைவிட இப்போது திக்கு கொஞ்சம் பரவாயில்லை. தொடர்ச்சியாகப் புரியும்படி பேசுகிறான்.

வேறு எதுவும் பேசாமல், ''வர்றேன்டா!'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றேன். அவனுக்கு இப்போதாவது அவன் பெயரை எழுதத் தெரியுமா என்று கேட்க ஆவல். கேட்காமலேயே கிளம்பிவிட்டேன்.

அவன் அப்பா இருந்த இருப்புக்கு இவன் இந்த நிலைக்கு வந்திருக்க வேண்டியதே இல்லை. விசாரித்துப் பார்த்தால் ஏதோ ஒரு கதை நிச்சயம் இருக்கும். அவன் தம்பி, தங்கைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டால், அந்தக் கதையின் அவுட்லைன் கிடைத்துவிடும்.

இடுப்பிலும் கையிலும் குழந்தையோடு... கூடப் படித்த கவிதா மாதிரி பெண்களை எங்காவது ரேஷன் கடையிலோ, மருத்துவமனையிலோ காண நேர்ந்தால்... எனக்கு லேசாக மனசு கனக்கும்.

அமல்ராஜ் மாதிரி பசங்களைப் பார்க்கும்போதும், அதே கனம்!

நன்றி - விகடன்

1 கருத்து:

  1. இது கற்பனை சிறு கதையா என சந்தேகமாக இருக்கிறது. அவ்வளவு அருமையாக வடிக்கப்பட்டு இருக்கிறது.

    கதையின் க்டைசியில் :

    //''நான்தான்டா குமாரு... உங்கூட ஆறாவது படிச்சேனே?''

    ''ஞாபகமில்ல!''

    "அசோகர் க்ல்வெட்டு ! ? ...

    "தமிழய்யா : ? ..."

    'பரவாயில்லை அமல். நல்லா இருக்கியா?'

    இப்படி வரும் என இயற்கையாக எதிர் பார்த்து ஏமாந்து போனேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு